“காவாய் கனகத்திரளே போற்றி, கயிலைமலையானே போற்றி” என்று அப்பர் பெருமானால் பாடப்பட்டது கயிலாய மாமலை. பொன் மலையாக அவர் கண்ட காட்சியை, இன்றும் மெய்ப்பித்தபடி, பொன் வண்ணத்தை மட்டுமல்ல; இன்னும் எத்தனை எத்தனையோ வண்ணங்களைக் காட்டியபடி, ஓங்கி உயர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது கயிலை மாமலை. கயிலாய புரி, திருக்கயிலாயம், கயிலை, கைலாஸ் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்தப் பொன் மலையில், சிவபெருமான் உறைகிறார் என்று மட்டுமல்ல, சிவபெருமானே கயிலை மாமலையாகத் திகழ்கிறார் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த மலையின் அருகில் அம்பிகை மானசரோவர் என்னும் புண்ணிய ஏரியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறாள். சிவலிங்கமாக கயிலை மாமலையும், அம்பிகையின் அம்சமான ஆவுடையாராக மானசரோவர் ஏரியும் திகழ்ந்து, ஒரு மாபெரும் சுயம்பு லிங்கமாக கயிலாயம் விளங்குகிறது.
வேறு எந்தத் தீர்த்தத் தலத்திற்கும் இல்லாத பெருமை உடையது கயிலாயம் – இந்து மதம், புத்த மதம், சமண மதம், பொம்பா மதம் ஆகிய நான்கு மதங்களுக்குப் புனிதத் தலம் இது.
இந்து மதத்தினருக்கு, கயிலை வழிபாடு என்பது காலத்தைக் கடந்தது. சிவபெருமான் குறித்த கருத்து எப்போது தோன்றியதோ, அப்போதே கயிலாயம் பற்றிய கருத்தும் தோன்றிவிட்டது எனலாம். கயிலாயம் சிவபெருமானின் உறைவிடமாகக் கருதப்படுகிறது. கயிலாய தரிசனம் என்பது தெய்வ தரிசனத்திற்கு நிகரானது. இந்துக்களிலும், தமிழர்களுக்கு மிக நீண்ட காலமாகவே கைலாசபதியிடம் ஒரு தனி ஈடுபாடு உண்டு எனலாம். வடமொழியில் கைலாசபதியைப் பற்றிய ஸ்தோத்திரங்கள் மிகவும் அபூர்வம். தமிழிலோ அப்பர், சுந்தரர், சம்பந்தர் என்று பலரும் இயற்றியுள்ள துதிகள் பல இருக்கின்றன.
திபெத்தின் முக்கிய மதமாகத் திகழ்வது புத்த மதம். திபேத்திய புத்த மதம் கயிலாத்தை பிரபஞ்சத்தின் மையம் என்று குறிப்பிடுகிறது. இந்த மதத்தின் மகான்கள் பலர் கயிலை மலையின் அடிவாரத்தில் தவம் செய்து முக்தி பெற்றனர். சீன ஆக்கிரமப்பின் காரணமாக எத்தனையோ பௌத்த மடங்கள் அழிக்கப்பட்டு விட்டாலும், இன்றும் மானசரோவர் கரையிலும், கயிலைப் பகுதிகளிலும் பல பௌத்த மடங்களை நம்மால் காண முடிகிறது. திபேத்திய பௌத்த மன்னரும் மகானுமான மிலரேபா உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தது இங்குதான். இந்தியாவிலிருந்து திபெத்திற்கு புத்த மதத்தைக் கொண்டு சென்ற பத்மசம்பவர் நீண்ட காலம் இங்குதான் தவத்தில் ஈடுபட்டிருந்தார். இவ்வாறு கயிலை மலை பௌத்தர்களுக்கும் மிகப் புனிதமானது. அவர்கள் கயிலாயத்தை “காங் ரிம் போசே” என்ற பெயரிலும், மானசரோவரை “ஸோ மாபம்” என்ற பெயரிலும் அழ்ந்த பக்தியுடன் வணங்குகிறார்கள்.
ஜைன மதத்தின் தீர்த்தங்கரர்களில் ஒருவராகிய ரிஷப தேவரும் வேறு மகான்களும் கயிலையில் தான் முக்தி பெற்றனர். எனவே ஜைனர்களுக்கும் இது புனிதத் தலமாக விளங்குகிறது.
பொம்பா மதம் என்பது திபெத்தின் ஆதி மதமாகும். எப்போதும் ஆன்மீக சக்தியை வெளியிட்டுக் கொண்டிருக்கும் ஒன்பது முக ஸ்வஸ்திக் மலையாக கயிலையை அந்த மதத்தினர் காண்கின்றனர். இவர்களும் கூட்டங்கூட்டமாக வந்து கயிலையை வழிபடுவதைக் காண முடியும். இந்துக்களைப் போல் இவர்களும் கயிலையைச் சுற்றி வலம் வருகின்றனர். ஆனால் இடமாகச் சுற்றுகின்றனர். நாம் வலம் வரும்போது அவர்கள் இடம் வருகின்றனர்.
திபெத்தியர்கள் – பௌத்தராயினும் சரி, பொம்பா மதத்தினராயினும் சரி – கயிலையைச் சுற்றுவது தீவிர பக்தியின் வெளிப்பாடாக உள்ளது. கற்கள் நிறைந்த கரடுமுரடான அந்தப் பாதையில் நடந்து வலம் வருவதற்கே நாம் எவ்வளவோ சிரமப்படும் போது அவர்கள் சாஷ்டாங்க நமஸ்கார்ம செய்தபடியே சுற்றுகின்றனர். ஜபம் செய்தபடியே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து, படுத்தபடியே கைகளை நீட்டி வணங்கி, அந்த இடத்தில் ஓர் அடையாளம் செய்து கொள்கிறார்கள். பிறகு எழுந்து அந்த அடையாளம் வரை நடந்து அங்கிருந்து மீண்டும் நமஸ்கார்ம செய்கிறார்கள். இப்படியே அவர்கள் 52 கிலோமீட்டர் தூரத்தையும் கடக்கிறார்கள்.
கயிலாயத்திற்குக் காலம் முழுவதும் சிவனடியார்கள் யாத்திரை சென்றிருக்கிறார்கள். விஞ்ஞானம் பெரிதும் வளர்ச்சி அடைந்த இந்த காலத்திலும் கூட, கைலாஸ் யாத்திரை என்பது கடினமான யாத்திரையாக இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இந்த யாத்திரை கடினமாக இருந்திருக்கும். என்றாலும் கூட அங்கொருவர், இங்கொருவர் என்று கயிலாய யாத்திரை சென்ற சிவனடியார்கள் இருந்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் தோன்றிய சிவபரமான நூல்களில் முக்கியத்துவம் வாய்ந்தவை சைவத் திருமுறைகள். அவை பன்னிரெண்டு என்று சைவ சமயம் குறிப்பிடுகிறது. சைவ miத் திருமுறைகளில் கயிலாயம் பற்றிய செய்திகள் அநேக இடங்களில் இடம் பெற்றுள்ளன.
சிவத் திருமுறைகளில் ஒன்றுதான் பெரிய புராணம். பெரிய புராணத்திற்கும், மற்ற ப்ராணங்களுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. மற்ற எல்லா புராணங்களும் நைமிசாரண்யத்தில் சூத முனிவரால் சொல்லப்படுகின்றன. பெரிய புராணம் ஒன்றுதான் கயிலாலயத்தில் உபமன்யு முனிவர் சிவ கணங்களுக்குச் சொல்வதாக அமைந்துள்ளது. பெரிய புராணத்தைக் கயிலாயத்தில் ஆரம்பித்து கயிலாலத்தில் நிறைவு செய்கிறார் சேக்கிழார் பெருமான்.
சைவ அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் திருக்காளஹஸ்திக்குச் சென்றார். அங்கே அவருக்குக் கயிலாலத்தின் காட்சி கிடைத்தது. கயிலாயத்தைப் பற்றி அவர் பாடல்கள் பாடியுள்ளார். கயிலைநாதன் தமக்கு தந்த ஆன்மீக அனுபவத்தை “ஊன் வேறு உயிர் வேறு செய்தான்! நொடித்தான் மலை உத்தமனே!” என்று அவர் பாடுகிறார். நான் என்பது உடம்பல்ல, உடம்பைக் கடந்த ஒன்று என்ற அனுபவத்தை அவர் பெற்றிருக்கிறார். சிவத்தொண்டு புரிந்து உலகில் வாழ்ந்த சுந்தரரை சிவபெருமான் மீண்டும் கயிலாயத்திற்கு அழைத்துக் கொள்ள விரும்பினார். அவர் சுந்தரரைக் கயிலாலத்திற்கு அழைத்து வருமாறு வெள்ளை வாரணரை அனுப்பி வைத்தார். சுந்தரர் அதில் ஏறி, கயிலாயம் சென்றார்.
சுந்தரருடைய நெருங்கிய நண்பராக விளங்கியவர் சேரமான் பெருமாள் நாயனார். அவர் சுந்தரமூர்த்தி நாயனார் கயிலாயம் செல்வதைக் கண்டு தாமும் கயிலாயம் செல்ல விரும்பினார். உடனே அவர் தமது குதிரியயின் காதில் பஞ்சாட்சர மந்திரத்தைக் கூறி, குதிரியயின்மீதேறி வான் வழியாக க் கயிலாயம் சென்றடைந்தார். திருக்கயிலாலத்தில் தான் சேரமான் பெருமாள் நாயனார் திருக்கயிலாய ஞான உலா என்ற நூலை இயற்றி, சிவபெருமான் முன்னிலையிலேயே அரங்கேற்றினார்.
சுந்தரமூர்த்தி நாயனார் கயிலாயம் சென்றதை அறிந்து அவருடைய பரம பக்தராக விளங்கிய பெருமிழலைக் குறும்பர் நாயனாரும் கயிலாயம் செல்ல விரும்பினார். அவர் சுந்தரமூர்த்தி நாயனார் மீது பெரிதும் பக்தி கொண்டவர். அவரையே குருவாகக் கொண்டவர். பெருமிழலைக் குறும்பர் நாயனாரும் யோக சக்தியால் தம் உடலை உகுத்து கயிலாயம் சென்றார். இவையெல்லாம் பெரிய புராணத்தில் நமக்குக் கிடைக்கின்ற தகவல்கள்.
தமிழ் மூதாட்டியான ஔவையாரும், கயிலை சென்றதாகத் தனிப்பாடல் திரட்டிலிருந்து அறிகிறோம். சுந்தரரும்,, சேரமான் பெருமாளும் கயிலை சென்றதைக் கண்டாள் ஔவையார். அப்போது அவர் விநாயகருக்குப் பூஜை செய்து கொண்டிருந்தார். கயிலை செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் அவசர அவசரமாகப் பூஜையைச் செய்தார். அப்போது விநாயகப் பெருமான் அவரிடம், “அவ்வையே, பூஜையை நிதானமாகச் செய்து முடி, நான் உன்னைக் கயிலாயத்தில் கொண்டு போய் சேர்க்கிறேன்” என்று கூறினார். அதன்படியே ஔவையார் பூஜையைச் செய்தார். விநாயகர் தம் துதிக்கையால் ஔவையாரைக் கயிலாலயத்தில் கொண்டு போய் விட்டார்.
சைவ அடியார்களில் கயிலாயம் செல்ல வேண்டும் என்று முனைப்போடு இருந்தவர் அப்பர் பெருமான். பல்வேறு திருத்தலங்களைத் தரிசித்த படியே அவர் திருக்காளஹஸ்திக்குச் சென்றார். கயிலாயம் சென்று கயிலை நாதனைத் தரிசிக்க வேண்டும் என்ற உறுதி அங்கே அவருக்கு ஏற்பட்டது. அந்த உறுதியுடன் அவர் இமய மலையின் அடிவாரத்தை அடைந்தார். நடந்து நடந்து அவரது கால்கள் சோர்ந்தன. காலால் நடக்க இயலாத நிலையில் கைகளை ஊன்றி முன்னேறினார். அதுவும் முடியாத போது மார்பால் தவழ்ந்து தவழ்ந்து செல்லத் தொடங்கினார்.
அவரது உறுதியைச் சோதிக்க விரும்பிய சிவபெருமான், ஒரு முனிவர் வடிவத்தில் அவர் முன்பு வந்து, “அன்பரே! கயிலாயம் மனிதர்கள் செல்ல இயலாத இடம். தேவர்கள் கூட செல்வதற்கு அரிதான இடம். எனவே உங்கள் முயற்சி பயனற்றது. திரும்பிச் செல்லுங்கள் என்று கூறினார். அப்பர் பெருமான் அதற்கு உடன்படவில்லை. அவரது உடல் சோர்வடைந்ததே தவிர உள்ளம் தளரவில்லை. என் தலைவனான சிவபெருமானை எப்படியும் தரிசிப்பேன். இந்த உடல் மாண்டு போக்க கூடியது. மாண்டு போகிற உடல் கொண்டிருக்கிற நான் கயிலாய பதியைத் தரிசிக்காமல் திரும்ப மாட்டேன் என்று உறுதியாகக் கூறி விட்டார். அங்கு ஒருபொய்கையைத் தோற்றுவித்த சிவபெருமான், அதில் மூழ்கி எழுந்திருக்குமாறு அசரீரியாக அப்பருக்கு உத்தரவிட்டார். அதன்படியெ அப்பர் பெருமான் மூழ்கி எழுந்த போது, அவர் திருவையாற்றில் உள்ள குளத்தில் இருந்தார். மூழ்கியது இமயத்திலுள்ள இறைவன் காட்டிய பொய்கையில். எழுந்தது திருவையாற்றில் உள்ள குளத்தில்.
அப்போது அவருக்குக் கயிலாயத்தின் காட்சி கிடைத்தது. அந்த நிலையில் அவர் எல்லாவற்றையும் சிவபெருமானாகவும், அம்பிகையாகவும், சிவனாகவும், சக்தியாகவும் கண்டார். அவ்ர் அந்த அனுபவத்தை, “மாதர் பிறைக்கண்ணியானை” என்ற பாடலில் குறிப்பிட்டிருக்கிறார். எந்தக் கயிலாயத்தைச் சென்று பார்க்க வேண்டும் என்று அப்பர் சென்றாரோ, அந்தக் கயிலாயத்தின் தரிசனம் அவருக்கு திருவையாற்றில் கிடைத்தது.
உலகின் கூரையாகக் கருதப்படுகின்ற திபெத் நாட்டில் கயிலாயம் அமைந்துள்ளது. திபெத் ஒரு சுதந்திர நாடாக இருந்த வரையில் கயிலாய யாத்திரை என்பது இவ்வளவு பணச் செலவு மிக்கதாக இருக்க வில்லை. 1959-ம் ஆண்டு சீனா திபெத்தை ஆக்கிரமித்தது. அதன் பிறகு வெளிநாட்டவர் யாரையும் கயிலாய யாத்திரைக்கு சீனா அனுமதிக்கவில்லை. 1981-ல் ஏற்பட்ட இந்தோ-சீன ஒப்பந்தத்தின்படி சீன அரசு, ஆண்டிற்கு 200 இந்தியர்களை மீண்டும் கயிலை யாத்திரைக்கு அனுமதிக்கத் தொடங்கியது. இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இப்போது இந்த யாத்திரைக்கு நபர் ஒருவருக்கு எண்பதாயிரம் ரூபாய் வரை பணம் செலவாகிறது.
திருக்கயிலாய மலையின் உயரம் சுமார் 22,000 அடி ஆகும். அருகிலுள்ள அனைத்து மலைகளையும் மிஞ்சுவது போல் கம்பீரமாக நிற்கிறது இந்த மலை. இதனைச் சுற்றி வருவதற்கான (பரிக்ரமம்) தூரம் சுமார் 52 கிலோமீட்டர். இதன் அடிவாரத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் மானசரோவர் ஏரி உள்ளது. இதன் சுற்றளவு சுமார் 100 மைல். இந்த இரண்டு. தரிசனமும் பரிக்ரமும் சேர்ந்ததே கயிலாய யாத்திரை.
இமயமலையின் ஏற்ற இறக்கங்கள், இடையில் குறுக்கிடம் ஆறுகள், நீர்வீழ்ச்சிகள், பனி சூழ்ந்த மலைகள், வழுக்கலான பாறைகள், பள்ளத்தாக்குகள், மலைச்சரிவுகள், நீண்ட நெடிய கால்நடைப் பயணம், ரத்தத்தை உறையவைக்கும் கடும் குளிர், கடுமையான வெயில், பனி மழை, ஜீப் பயணம், மட்டக்குதிரைப் பயணம், யாக் மீது பயணம், பழக்கமில்லாத உணவு, பழக்கமில்லாத இடங்கள், பழக்கமில்லாத மனிதர்கள், பழக்கமில்லாத மொழிகள் போன்றவற்றைக் கொண்டது கைலாஸ்-மானசரோவர் யாத்திரை.
காலநிலை, உணவு, உடை என்று பல வகையிலும் சிரமங்கள் நிறைந்தது திருக்கயிலாய யாத்திரை. இந்திய அரசாங்கம் கயிலாய யாத்திரையை நடத்துகிறது. இந்திய அரசின் மூலம் செல்லும் போது செலவு சற்று குறைவாக உள்ளது. தற்போது சில ஆண்டுகளாக, நேபாளத்தின் பல ஏஜண்டுகள் இந்தயாத்திரையை நடத்துகிறார்கள். நேபாளத்தின் வழியாகச் செல்வது செலவு சற்று அதிகமானது. ஆனால் இதில் சுதந்திரம் அதிகம். நமது குழுவின் எண்ணிக்கையையும், நபர்களையும் நாமே தேர்ந்தெடுக்க முடியும். செல்லும் வழியிலும் பல விஷயங்களை நாமே முடிவு செய்து கொள்ள முடியும். இந்த வாய்ப்பு இந்திய அரசு மூலம் செல்வதில் கிடையாது.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில்தான் இந்த யாத்திரையை மேற்கொள்ல முடியும். ஏப்ரல், மே மாதங்கள் கடும் குளிர் மைனஸ் 20 டிகிரி வரை நிலவும்). ஜூன், ஜூலையில் குளிர் இவ்வளவு இருக்காது. கால நிலையும் மிகவும் சாதகமாக இருக்கும். எனினும் மழை பெய்யும் அபாயம் உண்டு. மழை வரா விட்டால் ஜூன் இறுதி மிகவும் ஏற்ற காலமாகும்.