நாங்கள், சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்கள் இருபது பேர் சேர்ந்து, காட்மாண்டு வழியாக கயிலை யாத்திரை செல்ல விரும்பினோம். அதன்படி 1998 மே மாதம் 14-ந் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு 1998 ஜூன் 24-ந் தேதி சென்னை திரும்பினோம். சென்னை – காசி – கைலாஸ் – காசி – சென்னை வழியாக 40 நாட்கள் கொண்டதாக எங்களுடைய இந்தக் கைலாஸ் – மானசரோவர் யாத்திரை அமைந்தது.
இந்த யாத்திரை பற்றிய சில செய்திகளை இப்போது நாம் காணலாம்.
14-5-98 வியாழன்
எங்கள் யாத்திரை திட்டத்திற்கு ஏற்ப, வசதியான நாட்களில் வாரணாசி ரயில் அமையாததால், சென்னை – பாட்னா எக்ஸ்பிரசில் எங்கள் குழு இந்த தீர்த்த யாத்திரையைத் துவ்ககியது. கயிலாயத்தில் மட்டும் என்றல்ல, யாத்திரையின் 40 நாட்கலையும் ஆன்மீக சாதனை நாட்களாகவெ கழிக்க வேண்டும் என்று புறப்படுவதற்கு முன்பே நாங்கள் முடிவு செய்து கொண்டோம். எனவே ரயில் சென்ற இரண்டு நாட்களும் கூட காலையில் பிரார்த்தனைகள், மாலையில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடங்களில் பாடப்படும் ஆரத்திப் பாடல்கள், அதைத் தொடர்ந்து சைவத் திருமுறைகளிலிருந்து சில பதிகங்கள், திருநாவுக்கரசர் இயற்றியகயிலை கயிலைப் போற்றி திருத்தாண்டகம், நாமாவளிகள் போன்றவற்றைப் பாடினோம். அநேகமாக, அனைத்து நாட்களிலும் பாடல்களுக்குப் பிறகு எனது ஆன்மீகச் சொற்பொழிவும் இடம் பெற்றது.
வாராணசி (16-5-98 சனி, 17-5-98 ஞாயிறு)
நாங்கள் முதலில் சென்றது வாராணசி என்றும் காசி என்றும் அழைக்கப்படும் புனிதத் தலமாகும். சென்னை – பட்னா எக்ஸ்பிரஸ் மொகல்சராய் வரையில்தான் செல்லும். அங்கிருந்து வாராணசி வரை உள்ள 18 கி.மீ. தூரத்தை பஸ்ஸில் கடந்தோம்.
வாராணசியை நெருங்கும் போது எங்கல் பஸ் கங்கையாற்றின் மீதுள்ள பாலத்தின் மீது சென்றது. பஸ்ஸில் இருந்தபடியே கங்கையையும், வாராணசியையும் தரிசித்து வணங்கினோம். எங்கள் குழுவிலிருந்த துறவியர் வாராணசி ராமகிருஷ்ண மிஷன் சேவசிரமத்திலும், அன்பர்களும், தாய்மார்களும் குமாரசுவாமி மடத்திலும், நிர்மலா சிவானந்த ஆசிரமத்திலும் தங்கினோம். வாராணசியில் நாங்கள் ஐந்து நாட்கள் இருந்தோம். அங்கே தரிசிக்க வேண்டிய முக்கிய இடங்களை எல்லாம் தரிசித்தோம்.
காசியில் கங்கைக் கரையில் 54 கட்டங்கள் (நீராடும் துறைகள்) இருக்கின்றன. இவற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்திற்கு “மணிகர்ணிகா காட்” என்று பெயர். இங்கே தொடர்ந்து பிணங்கள் எரிக்கப்படுகின்றன. காசியில் இறப்பது முக்தியைத் தரும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. காசிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் சென்றபோது அவருக்கு இது பற்றி மணிகர்ணிகா கட்டத்தில் ஓர் அற்புதமான ஆன்மீக காட்சி கிடைத்தது. அதைப் பற்றி ஸ்ரீ ராமகிருஷ்ணர் பின்வருமாறு கூறியுள்ளார் :
“வெண்மை நிறம் கொண்ட, நல்ல ஜடா முடியோடு கூடிய ஓர் உருவம் (சிவபெருமான்) கங்கைக் கரையில் எரிந்து கொண்டிருந்த ஒவ்வொரு பிணத்திடமும் சென்று, கருணையோடு அந்த உயிரைத் தட்டி எழுப்பி, அவர்களின் காதுகளில் தாரக மந்திரத்தை ஓதியது. கருணையின் வடிவமாகிய ஜகன்மாதா, நெருப்பின் மறுபக்கம் உட்கார்ந்து கொண்டு, அந்த உயிர்களைப் பிணைத்திருக்கும் தளைகளை ஒவ்வொன்றாக நீக்கி, அந்த உயிர்களுக்கு முக்தியின் கதவைத் திறந்து கொண்டிருந்தாள். அவள் அதிர்ஷ்னசாலிகளான அந்த உயிர்களை மிகவும் வேகமாக மோட்சத்திற்குள் அனுப்பிக் கொண்டேயிருந்தாள். காலம் காலமாக ஆன்மீக சாதனையில் மூழ்கிக் கடுமையான தவம், தியானங்களில் ஈடுபட்டு ஒருவர் பெறக்கூடிய மிகவும் உயர்ந்த இந்த அத்வைத நிலையைக் காசியில் உயிர்விடுவதாலேயே சதாரணமான மக்கள் கூட அதை மிகவும் சுலபமாகச் சிவபெருமானின் எல்லையற்ற கருணையால் அடைந்து கொண்டிருந்தார்கள்.
நாங்கள் மணிகர்ணிகா காட் கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்வதற்காக கங்கை தீர்த்தம் எடுத்துக் கொண்டோம். பிறகு மணிகர்ணிகா காட்டில் சடலங்கள் இறந்து கொண்டிருந்த இடத்திற்குச் சற்று அருகில் சென்று சடலங்கள் எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்தோம். அங்கு அப்போது ஐந்து சடலங்கள் எரிந்து கொண்டிருந்தன.
பிறகு அனைவரும் விசுவநாதர் கோயிலுக்குச் சென்றோம். தென்னிந்தியாவில் இருப்பது போல் இல்லாமல், காசியில் விசுவநாதரை பக்தர்கள் தாங்களாகவே தொட்டு அபிஷேகம், ஆராதனைகள் செய்யலாம். நாங்கள் வாங்கிச் சென்ற நைவேத்தியப் பொருள்களை நாங்களே காசி விசுவநாதருக்கு அர்ப்பித்தோம்.
பிறகு எங்கள் குழுவினர் அனைவரும் அன்னபூரணி கோயிலுக்குச் சென்றோம். அன்னப்பூரணியின் சந்நிதியை நாங்கள் பலமுறை பிரதட்சணம் செய்தோம். எங்களுக்குத் தெரிந்த சுலோகங்களை உச்சரித்தோம். அங்கு கோயிலில் ஆங்காங்கு அமர்ந்து பிரார்த்தனை போன்றவற்றைச் செய்த பிறகு டுண்டி விநாயகரைச் சென்று தரிசித்தோம்.
காசி விசுவநாதர் கோயிலில் ஒவ்வொரு நாளும் இரவு 7.15 முதல் 8.30 வரை சப்தரிஷி பூஜை என்ற சிறப்பு வழிபடு நடைபெறுகிறது. அந்தப் பூஜையில் கலந்து கொள்வதற்கு நபர் ஒருவருக்கு அங்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் செலுத்ட வேண்டும். அதில் கலந்து கொள்வதற்காக மீண்டும் விசுவநாதர் கோயிலுக்குச் செல்ல ஆரம்பித்தோம். அன்று சனிக்கிழமை என்பதால் வழியில் உள்ள சனி பகவான் சந்நிதியில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. அந்தக் கூட்ட நெரிசலில் நாங்கள் சற்று சிரமப்பட்டுச் சென்றோம். சனி பகவான் சந்நிதிக்கு அருகில் உள்ள சில கடைகளில் நெய் விளக்குகள் விற்பனைக்குக் கிடைக்கும். எங்கள் குழுவினர் சிலர், நெய் விளக்கு வாங்கி, சனி பகவானுக்கு நெய் வீளக்கு ஏற்றினார்கள்.
பிறகு காசி விசுவநாதர் கோயிலுக்குச் சென்றோம். நாங்கள் சென்ற சிறிது நேரத்தில் விசுவநாதர் எழுந்தருளியிருக்கும் கருவறையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள். அதைத் தொடர்ந்து இர்வு 7.15 மணிக்கு சப்தரிஷி பூஜை ஆரம்பித்தது. நாங்கல் அந்த பூஜையைப் பார்ப்பதற்கு ஏற்கனவே அனுமதி பெற்றிருந்ததால், கருவறை உள்ளே நுழைவு வாயிலில் இரண்டு பக்கங்களிலும் அமர்ந்து சப்தரிஷி பூஜையைத் தரிசித்தோம். அந்த பூஜையின் போதுஏழு பண்டாக்கள் காசி விசுவநாதரைச் சுற்றி அமர்ந்து பூஜை செய்தார்கள். அந்த நேரத்தில் சப்த ரிஷிகளும் வந்து காசி விசுவநாதரைப் பூஜை செய்வதாக ஐதீகம். இது காசி யாத்திரை செல்பவர்கள் அவசியம் காண வேண்டிய பூஜையாகும். காசி விசுவநாதர் கோயிலில் சப்தரிஷி பூஜை முடிவதர்கு இரவு 8.30 ந்மணி ஆகி விட்டது.
மறுநாள் கங்கைக் கரையிலுள்ள தசாஸ்வமேத காட் என்ற இடத்திற்குச் சென்றோம். இந்த இடத்தில் பிரம்மா பத்து அசுவமேத யாகங்களைச் செய்தாராம். அதனால் இந்த இடத்திற்கு தசாஸ்வமேத காட் என்று பெயர். அன்னை ஸ்ரீ சாரதா தேவியார் காசிக்கு வந்திருந்த போது இந்தத் துறையில் நீராடி அதன் கரையில் இருக்கும் சிவலிங்கத்திற்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்தார். நாங்களும் அந்த கங்கையில் நீராடினோம்.
ஒருநாள் சுவாமி பாஸ்கரானந்தரின் சமாதிக்குச் சென்றோம். காசியில் அந்நாளில் வாழ்ந்த ஒரு பெரும் மகான் சுவாமி பாஸ்கரானந்தர். அவரை அன்னை ஸ்ரீ சாரதா தேவியாரும், சுவாமி விவேகானந்தரும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.
பாஸ்கரானந்தர் சமாதியிலிருந்து நாங்கள் சங்கட் மோச்சன் (சங்கடங்களைத் நீக்குபவர்) என்ற அனுமான் கோயிலுக்குச் சென்றோம். இந்தக் கோயில் இப்போதுள்ள இடத்தில்தான் ஆஞ்ஜநேயர் துளசிதாசருக்குத் தரிசனம் கொடுத்தாராம். இந்த சங்கட் மோச்சன் கோயிலைச் சேர்ந்த நிர்வாகிகளின் அழைப்பின் பேரில் அனுமன் ஜயந்தி, ஸ்ரீராமநவமி சமயங்களில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சந்நியாசிகல் இந்தக் கோயிலில் ஸ்ரீ ராமநாம சங்கீர்த்தனம் செய்வது வழக்கம். நாங்கள் சங்கட் மோச்சன் அனுமானுக்கு நைவேத்தியம் செய்த இனிப்பு வகைகளை அங்கு கோயிலிலிருந்த பக்தர்களுக்கு விநியோகம் செய்தோம். பின்னர் ஆஞ்சநேயர் சந்நிதியை வலம் வந்தோம்.
கோயிலில் அமர்ந்து, ஜபம், தியானம், பிரார்த்தனை செய்தோம். இந்தக் கோயிலில் அமர்ந்து துளசிதாசர் இயற்றிய ஹனுமன் சாலிசா ஸ்தோத்திர புத்தகங்கள் நிறைய வைக்கபட்டுள்ளன. அவற்றை பக்தர்கள் எடுத்து படித்து விட்டு மீண்டும் அங்கேயே வைத்து விடுகிறார்கள். இந்தக் கோயிலிலும், சுற்றிலும் நிறைய குரங்குகள் இருக்கின்றன.
அங்கிருந்து துர்க்கைக் கோயிலுக்குச் சென்றோம். காசியிலுள்ல துர்க்கை கோயில் முழுவதும் கரும் சிவப்பு வண்ணத்தில் சுன்ணாம்பு புசியிருக்கிறார்கள். அந்தக் கோயிலின் அருகில் கோயிலைச் சேர்ந்த பெரிய குளம் ஒன்று உள்ளது. இந்தக் குளத்தின் அருகில் ஒற்றையடிப்பாதையில் சுவாய் விவேகானந்தர் நடந்து சென்றபோது அவரைக் குரங்குகள் துரத்தின. அவர் ஓடத் துவங்க, குரங்குகள் தொடர்ந்து துரத்தின. அப்படி ஓடிக் கொண்டிருக்கும் போது அங்கெ வந்த துறவி ஒருவர், “குரங்குகளைக் கண்டு பயந்து ஓடாதே, அவற்றை நேரே பார்த்தபடி நில்” என்று கூறினாராம். சுவாமி விவேகானந்தரும் அப்படியே நின்று தைரியமாக அவற்றை எதிர் கொண்டார். உடனே குரங்குகள் பின் வாங்கி ஓடி விட்டன. இந்த நிகழ்ச்சியை விவேகானந்தர் பிந்நாளில் தமது ஒரு சொற்பொழிவில் நினைவுகூர்ந்து,”வாழ்க்கையை கண்டு பயந்து ஓடாதீர்கள், அவற்ரை எதிர்கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.
துர்க்கைக் கோயிலை பிரதட்சிணம் செய்து விட்டு, கால பைரவர் கோயிலுக்குச் சென்றோம். காசியில் காவல் தெய்வம் கால பைரவர். “காசியில் எம பயம் கிடையாது, ஆனால் கால பைரவரின் தண்டனை உண்டு” என்று காசியின் மகிமையைக் கூறும் “காசி காண்டம்” என்ற நூல் கூறுகிறது. கால பைரவர் அனுமதித்தால்தான் ஒருவர் காசியில் நுழையவோ, வெளியே வரவோ முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் காசிக்குச் சென்றிருந்த போது கால பைரவரின் தரிசனம் பெற்றார். அதைப் பற்றி சுவாமி பிரம்மானந்தர் பின்வ்ருமாறு கூறியுள்ளார் : “ஸ்ரீ ராமகிருஷ்ணர் காசியில் இருந்த போது தாடியுடன் கூடிய பேரொளி பொருந்திய தெய்வீக வடிவம் ஒன்று அவர் எதிரில் தோன்றியது. அந்தத் தெய்வீக வடிவம் காசியுலிலுள்ள முக்கியமான இடங்களையெல்லாம் ராமகிருஷ்ணருக்குக் காண்பித்தது. அந்தச் சமயத்தில் ராமகிருஷ்ணரின் உடலோ, நினைவின்றி விழுந்து கிடந்தது. அந்த வடிவம் கால பைரவராகும்.”
கால பைரவர் கோயிலுக்கு வெளியிலும், கோயிலுக்கு உள்ளும் சிலர் காசிக் கயிறு சொல்லப்படும் சிறியதும், பெரியதுமான கருப்பு நிறக்கயிற்றை விற்றுக் கொண்டிருந்தார்கள். காசி யாத்திரை செல்பவர்கள், இந்தக் கோயில் அருகில் விற்கும் கருப்புக் கயிற்றை வாங்கி இங்குள்ள கால பைரவருக்கு சமர்ப்பிப்பார்கள். கால பைரவரின் பிரசாதமான இந்தக் கயிற்றைக் கையில் கட்டிக் கொண்டாலோ, கழுத்தில் அணிந்து கொண்டாலோ கால பைரவர் நம்மைக் காப்பாற்றுவார் என்பது இந்துக்களின் நம்பிக்கை.. ஆனால் இப்போது இதே போன்ற கறுப்பு கயிற்றை வேறு பல கோயில்களின் பிரசாதமாகவும் கையில் அணிந்து கொள்ளும் வழக்கம் பரவி வருகிறது. எங்கள் குழுவினர் பொருட்டு கால பைரவர் கோயிலில், கால பைரவர் அஷ்டகம் கூறி பண்டா பூஜை செய்தார்.
அந்த அஷ்டகத்தின் சில வரிகல் வருமாறு :
தேவராஜ – சேவ்யமானபாவனாங்க்க்ரீ பங்கஜம்
வ்யால – யஜஞஸூத்ரயிந்து சேகரம் க்ருபாகரம்
நாரதாதி யோகீவ்ருந்த வந்திதம் திகம்பரம்
காசீகாபுராதீநாத – காலபைரவம் பஜே
பொருள் தேவேந்திரனால் வணங்கப்பட்ட புனிதமான திருவடித் தாமரைகளை உடையவரும், பாம்பைப் பூணூலாக அணிந்தவரும் தலையில் சந்திரனைச் சூடியவரும, நாரதர் முதலிய யோகிகீசுவரர்களால் வணங்கப் பெற்றவரும், திசைகளையே ஆடையாக உடையவரும், காசீபுரியின் அதிநாதருமான கால பைரவரைப் போற்றுகிறேன்.
பொதுவாக வட இந்தியவிலுள்ள கோயில்களில் நவக்கிரகங்களுக்குத் தனியாக சந்நிதி கிடையாது. ஆனால் காசியில் கால பைரவர் சந்நிதியைப் பிரதட்சணம் செய்யும் போது, அங்கு நவக்கிரகங்களுக்கும் திருவுருவச் சிலைகள் இருப்பதைப் பார்க்கலாம். கால பைரவர் கோயிலின் உட்ப்ராகாகாரச் சுவர்களில் பைரவரின் பல்வேறு அம்சங்களை வண்ன ஓவியங்களாக வரைந்திருக்கிறார்கள்.
கால பைரவரின் தரிசனம் முடிந்த பிறகு, நாங்கள் விசாலாட்சிக் கோயிலுக்கு சென்றோம். காசியிலுள்ள விசாலாட்சி கோயில், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் நிர்வாகத்தில் இருந்து வருகிறது. இந்தக் கோயில் தமிழ்நாட்டு முறைப்படி வடிவமைத்துக் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ல விசாலாட்சி விக்கிரகம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டு அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். எனவே, மூலவராக் ஐங்கிருக்கும் விசாலாட்சியின் விக்கிரகம், தமிழ்நாட்டிலுள்ள அம்மன் கோயில்களிலுள்ள தேவியின் விக்கிரகம் போன்றே காட்சியளிக்கிறது. அந்த விக்கிரகத்தின் பின்னால் புராதனமான ஒரு தேவி சிறிய விக்கிரகமும் இருக்கிறது. அந்தச் சிலையின் முகம் மட்டும் யாத்திரிகர்களுக்குத் தெரியும் வகையில் வைத்திருக்கிறார்கள். விசாலாட்சி சந்நிதியைச் சுற்றியுள்ள பிராகாரத்தில் சிவலிங்கங்கள், னந்தி, விநாயகர் சிலைகள் உள்ளன. கோயிலைச் சேர்ந்த பக்கத்து அறையிலுள்ள விசாலாட்சியின் உற்சவ மூர்த்தி, சிவலிங்கம், நவக்கிரகங்கள் ஆகியவற்றையும் சென்று வழிபட்டோம்.நாங்கள் காசியில் இருந்த 5 நாட்களும், பலமுறை விசுவநாதரையும், அன்னப்பூரணியையும் வழிபட்டோம். பலமுறை கங்கயில் நீராடினோம். கயிலை யாத்திரைக்கு முன்பு காசி தரிசனம் மிகவும் குறிப்பிடத்தக்கதாக் இருந்தது.