காட்மாண்டு – 18-5-1998 திங்கள் – 20-5-1998 புதன்
அடுத்து நாங்கள் நேபாள நாட்டுத் தலைநகரான காட்மாண்டு செல்ல இருந்தோம். 17-ந் தேதி காசியிலிருந்து புறப்பட்டு பைரவா என்ற இடத்திற்குச் செல்வது என்று முன்பே திட்டமிட்டிருந்தோம். இரவு உணவுக்குப் பிறகு எட்டு மணிக்கு ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட பஸ்ஸில் புறப்பட்டோம். வாராணசிக்கும் பைரவாவுக்கும் இடையே உள்ள தூரம் 320 கி.மீ ஆகும். இரவு எட்டு மணிக்கு புறப்பட்ட பஸ் மறுநாள் விடியற்காலை 4.30 மணிக்கு சோனாலி என்ற இடத்தை சென்றடைந்தது. அதுவே இந்தியாவின் எல்லையாகும். அதைத் தாண்டினால் நேபாள் வந்து விடுகிறது.
சோனாலியில் ஓர் இடத்தில் – here ends the Indian border – என்ற வாசகம் பெரிய எழுத்துக்களில் காணப்பட்டது. சோனாலியைக் கடந்து நாங்கல் நேபாள நாட்டு எல்லைக்குள் நுழைய வேண்டும். சோனாலியில் இந்திய எல்லையைக் கடந்ததும், நேபாள் ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு செக் போஸ்ட் இருக்கிறது. அங்கு இந்தியாவிலிருந்து செல்பவர்கள் தங்களிடம் பாஸ்போர்ட் வைத்திருக்கா விட்டால் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும். மெலும் இந்த செக் போஸ்டில் நம்மிடம் காமிரா போன்ற வெளிநாட்டுப் பொருட்கள்இருந்தால் அதற்கான டிக்ளரேஷன் படிவத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் இந்த வழியாக திரும்பி வரும் போது, “இவற்றை நீங்கள் வெளிநாட்டிலிருந்து வாங்கி வருகிறீர்கள்” என்று சொல்லி டூட்டி போட்டு விடுவார்கள். நாங்கள் கஸ்டம்ஸ் சம்பிரதாயங்களுக்காக சிறிது நேரம் காத்திருந்தோம்.
பின்னர் நேபாள எல்லையாகிய பேலேஹியாவுக்குள் நுழைந்தோம். பேலேஹியா என்ற இடத்தில் நேபாள எல்லை ஆரம்பிக்கிறது. அங்கு நாங்கள் தங்குவதற்கு வாரணசி வருணா டிராவல்ஸைச் சேர்ந்தவர்கள் முன்னதாகவே ஒரு விருந்தினர் விடுதியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விடுதியில் ஒரு நாளைக்கு இவ்வளவு என்றுகட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மாறாக, ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கட்டணம் என்று நிர்ணயித்திருக்கிறார்கள்.
பேலேஹியாவிலிருந்து பைரவா விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில், பகவான் புத்தர் பிறந்த இடமான 22 கி.மீ தூரத்திலுள்ள லும்பினிக்குச் செல்லும் பாதை பிரிந்து செல்கிறது. நாங்கள் பைரவா விமான நிலையத்திற்குச் சென்றோம். அங்கு காட்மாண்டு புறப்பட இருந்த நேபாள் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறி அமர்ந்தோம். அந்த விமானம் ஒரு மணி நேரப் பிராயணத்திற்குப் பிறகு பகல் 1.15 மணிக்கு காட்மாண்டு விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்தியாவிற்கும், நேபாளத்திற்கும் 15 நிமிட நேர வித்தியாசம் இருக்கிறது. அதாவது சென்னையில் காலை 8.00 மணி என்றால், காட்மாண்டுவில் காலை 8.15 மணி ஆகும்.
அங்கு விமான நிலையத்தில் எகோ ட்ரெக் நிறுவனத்தைச் சேர்ந்த ஆறு பேர் எங்களை வரவேற்பதர்கு வந்திருந்தார்கள். அவர்கள் எங்கள் எல்லோருக்கும் மாலைகள் அணிவித்து அன்புடன் மகிழ்ச்சி பொங்க கோலாகலமாக வரவேற்றார்கள்.
பின்னர் எங்கள் அனைவரையும் ஒரு வேனில் காட்மாண்டில் “தாமல்” என்ற கார்டன் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர். அது மூன்று நட்சத்திர ஹோட்டலாகும். அதில், ஓர் அறையில் இரண்டு பேர் வீதம் பத்து அறைகளில் நாங்கள் தங்கினோம்.
மாலை 5.30 மணிக்கு டீலக்ஸ் வேனில், காட்மாண்டிலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண விவெகானந்தா வேதாந்த சென்டர் இருக்கும் இடத்திற்குப் புறப்பட்டோம். இந்த இடத்தில் பக்தர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பெயரால் ஆன்மீகத் தொண்டு செய்து வருகிறார்கள். இங்குள்ள பிரார்த்தனை ஹாலில் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் முன்பு அமர்ந்து பிரார்த்தனை செய்தோம்.
அடுத்து நாங்கள் நேபாளத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பசுபதிநாத் சிவன் கோயிலுக்குப் புறப்பட்டோம். இந்தக் கோயில் பாக்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கோயிலுக்கு அருகில் வண்டிகள் செல்வதற்கு வசதியில்லை. கார், பஸ், வேன் ஆகியவற்றில் செல்பவர்கள் குறிப்பிட்ட ஓர் இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு, சுமார் பதினைந்து நிமிடங்கள் நடந்து சென்றுதான் கோயிலை அடைய முடியும். பாக்மதி ஆற்றின் கரையில் பல மேடைகள் போன்ற பகுதிகள் உள்ளன. அவற்றில் பிணங்கள் எரிக்கப்படுகின்றன. நாங்கள் சென்ற போதும் அங்கே சில சடலங்கள் எரிந்து கொண்டிருந்தன. இங்கு இந்த இடம் மணிகர்ணிகா காட் என்று அழைக்கப்படுகிறது.
பசுபதிநாத் சிவன் கோயில் என்றாலும் பல தனித்துவங்களைக் கொண்டது. இங்கே அம்பிகைக்கென்று தனிச் சந்நிதி கிடையாது. ஆனால் கோயிலின் உள்ளேயே தனி இடத்தில் தேவி ஸ்ரீசக்ரமாக வழிபடப்படுகிறாள். காலையில் 11.00 மணிக்கு ஒரு விசேஷ பூஜை நடைபெறுகிறது. இதில் பசுபதிநாதரின் மேல் முகத்தில் சந்தனம் பூசப்படுகிறது. அதன் மீது ஸ்ரீசக்கரம் வரையப்பட்டு, அதில் ராஜராஜேசுவரி எழுந்தருளச் செய்யப்படுகிறாள். பின்பு இருவருக்குமாக சிவசக்தி பூஜை நடைபெறுகிறது. பசுபதிநாத் கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் குஹ்யேஸ்வரி கோயில் உள்ளது. இந்த தேவியும் பசுபதிநாதரின் தேவியாகக் கருதப்படுகிறாள்.
பசுபதிநாத் கோயில் நேபாளத்தில் இருந்தாலும், இந்தியர்தான் அங்கே தலைமைப் பூஜாரியாக இருக்க வேண்டும் என்ற நியதி உள்ளது. சிருங்கேரி சங்கர மடத்தின் பரிந்துரையின் பேரில் தலைமைப் பூஜாரி நியமிக்கப்படுகிறார். இது முக்கியத்துவம் வாய்ந்தது. நாங்கள் பசுபதிநாத் கோயில் கருவறையை அடைந்த போது இரவு மணி 7.35. இங்கு பசுபதிநாதர் ஐந்து முகங்களுடன் காட்சியளிக்கிறார். அவருக்கு மேலே நாககிரீடம் வைத்திருந்தார்கள்.
பசுபதிநாத் கோயிலின் கருவறையின் எதிரில் பித்தளையால் செய்யப்பட்ட பிரும்மாண்டமான நந்தி அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. சுமார் ஏழு அடி உள்ள பீடத்தைத் தவிரவும், நந்தி உயரம் மட்டும் சுமார் பன்னிரண்டு அடி உயரம் இருக்கும். அந்தப் பெரிய நந்தியின் உருவம், தஞ்சை பிரகதீசுவரர் கோயில் நந்தியை எனக்கு நினைவுபடுத்தியது. பசுபதிநாத் கோயிலை பிரதட்சணம் செய்த போது, அங்கிருந்த பெரிய திரிசூலம் என் கவனத்தை ஈர்த்தது.
பசுபதிநாத் கோயிலில் 1008 சிவலிங்கங்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றோம். பசுபதிநாத் கோயிலில் சிறிய, பெரிய சுவாமி சந்நிதிகள் பல இருக்கின்றன. இவற்றில் முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் பைரவர் சந்நிதி அமைந்துள்ளது. இதில் சுமார் எட்டு அடி உயரவும், ஐந்து அடி அகலமும் கொண்ட பித்த்ளையால் ஆன பைரவரின் விக்கிரகம் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. இந்தக் கோயிலில் பித்தளை விக்கிரகங்கள், கல் விக்கிரகங்கள் என்று சிறியதும், பெரியதுமான ஏராளமான விக்கிரகங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமாக நமது கவனத்தை ஈர்க்கும் வகையில் பல சிவலிங்கங்கள் அமைந்துள்ளன.
இந்தக் கோயிலில், தமிழ்நாட்டிலுள்ள சிவன் கோயில்களில் இருக்கும் அம்சங்கள் அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். வட இந்தியா, நேபாள், திபெத், சீனா ஆகிய கலாசாரங்களின் ஒரு நேர்த்தியான ஒரு கலவையாக இந்த பசுபதிநாத் கோயில் விளங்குகிறது.
கோயில் பிராகாரத்திலுள்ள சிறிய மண்டபங்களில் ஆங்காங்கே சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அவற்றைத் தரிசித்தபடியே கோயிலை விட்டு வெளியே வந்தோம். வேனில் சென்று அமர்ந்ததும் நாமாவளிகளும், பக்திப் பாடல்களும் பாடினோம்.
19-4-98 காலை ஒன்பது மணிக்கு ஒரு வேனில் அனைவரும் தட்சிண் காளி என்ற கோயிலுக்குப் புறப்பட்டோம். இந்த இடம் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. வேனில் செல்லும் போது வழியில் மலைகளையும், பள்ளத்தாக்குகளையும், இயற்கைக் காட்சிகளையும் பார்த்தபடியே சென்றோம். அந்தக் காட்சிகஓஉம், சீதோஷ்ண நிலையும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எனக்கு உதகமண்டலத்தை நினைவுபடுத்தியது.
நாங்கள் சென்ற வேன் ஒரு சிறிய குன்றின் மீது சென்று நின்றது. அந்த குன்றிலிருந்து சுமார் பதினைந்து நிமிடம் இறங்கிச் சென்றுதான் தட்சிண் காளியைத் தரிசிக்க முடியும். தட்சிண்காளி கோயிலின் அருகில் வேன் செல்வதற்கு வசதி இல்லை. எனவே சற்று தொலைவிலேயே எங்கள் வேனை நிறுத்தி விட்டு நாங்கள் நடந்து சென்று கோயிலுக்குச் சென்றோம்.
வழிநெடுகிலும் பல கடைகள் இருந்தன. அந்தக் கடைகளில் பூஜை சாமான்கள், சுவாமி படங்கள், நேபளத்தின் முக்கிய காட்சிகளைத் சித்தரிக்கும் படங்கள், நேபாளக் கைவினைப் பொருட்கள், நேபாள நாணயங்கள், நேபாள ஸ்டாம்புகள், பௌத்த மதம் சார்ந்த, தொன்மை வாய்ந்த பொருள்கள், பாரம்பரியம் மிக்க நேபாளிய கத்திகள் போன்றவற்றை விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.
தட்சிண் காளி கோயில் இருக்கும் இடத்தில் பூர்ணாவதி கங்கா, உத்திராவதி கங்கா ஆகிய இரண்டு ஆறுகள் செல்கின்றன. காளி கோயிலிலிருந்து சிறிது தூரத்தில், காளிக்கு பலி கொடுக்கும் பொருட்டு பக்தர்கள் வாங்கிச் செல்வதற்கான ஆடுகளும், கோழிகளும் விற்பனைக்கு இருந்தன. கோயிலில் நேபாளிகளான பண்டாக்கள் ஆடுகளையும், கோழிகளையும் பலியிட்டுக் கொண்டிருந்தார்கள்! எங்கள் கண்முன்னே ஆறு கோழிகளும், ஐந்து ஆடுகளும் பலியிடப்பட்டன.
தட்சிண் காளிக்குப் பூஜை செய்யும் பணியை இரண்டு பெண்கள் செய்கிறார்கள். இந்த தட்சிண் காளி கோயில் திறந்த வெளியில் அமைந்த ஒரு சிறிய கோயிலாகும். இங்கே காளி, ஸ்மசான காளியாக, அதாவது சுடுகாட்டில் உறைபவளாக வழிபடப்படுகிறாள். ஒரு காலத்தில் கொள்ளையர்கள் வழிபட்ட இடம் இது என்றும் கூறப்படுகிறது. இங்கே காளிக்கு இரும்பு ஆபரணங்களே அணிவிக்கப்படுகின்றன.
இந்துக்கள் அல்லாத வேறு மதத்தினர், வெளிநாட்டினர் இந்தக் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் தூரத்தில் தள்ளி நின்றுதான் பார்க்க முடியும். அவ்வாறு வெளிநாட்டவர்கள் சிலர் தள்ளி தட்சிண் காளி கோயிலைப் பார்த்தபடியே நின்றிருந்ததைப் பார்த்தோம்.
கோயிலிலிருந்து 30 மீட்டர் தூரத்தில் ஓர் இடத்தில் மக்கள் கூட்டமாகக் கூடியிருந்தார்கள். அங்கு கோயிலில் பலியிடப்பட்ட ஆடு, கோழிகளைசிறிய சிறிய துண்டுகளாக வெட்டி பிரசாதமாகக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
கோயிலுக்குள்ளும், வெளியிலும் ஆங்காங்கு புறாக்கள் அமர்ந்திருந்தன. அவற்றைப் பார்த்த போது, ஆடு, கோழி பலியிடும் கொடுமையும், சமாதானப் புறாவும் இங்கே ஒரே இடத்தில் இருக்கின்றனவே! என்ற எண்ணம் தோன்றியது.
கோயிலிலிருந்து திரும்பி வரும் போது எங்களில் சிலர் தங்களுக்குத் தேவையான வெளிநாட்டு ஸ்டாம்புகள், நேபாள நாணயங்கள், நேபாளத்தின் கை வினைப்பொருட்கள், சுவாமி படங்கள் ஆகியவற்றை விலைக்கு வாங்கினார்கள்.இவையெல்லாம் முடிந்து நாங்கள் எங்கள் வேன் இருந்த இடத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்த போது பகல் மணி 12 ஆகியிருந்தது.