கைலாஸ்-மானசரோவர் – 04

பகல் மூன்று மணிக்கு கார்டன் ஹோட்டலில் உள்ள மாநாடுகள் நடத்த பயன்படும் ஒரு ஹாலில் எங்கள் குழுவினருடன், கைலாஸ் யாத்திரையின் போது பயணம் எவ்விதம் இருக்கும் என்பது பற்றி எகோ ட்ரெக் ஜோதி அதிகாரி பேசினார். அதைத் தொடர்ந்து அவர் எங்கள் குழுவினர் கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

அன்று மாலை நாங்கள் கடை வீதிக்குச் சென்று ட்ரெக்கிங் சூட், உல்லன் தொப்பிகள், குடைகள், ஷூ, சாக்ஸ் போன்றவற்றை வாங்கினோம்.

20-5-98  அன்று காலை எட்டு மணிக்கு நாங்கள் மினி வேனில் கார்டன் ஹோட்டலிலிருந்து மீண்டும் பசுபதிநாத் கோயிலுக்குச் சென்றோம். அன்று எங்கள் குழுவின் சார்பாக சிறப்பு வழிபாடுசெய்வதற்கு முந்தின நாளே ஏற்பாடு செய்திருந்தோம். கோயிலின் பின் மண்டபத்தில் ஒரு பண்டாவின் மூலம் எங்கள் கைலாஸ் யாத்திரை நல்லவிதமாக அமைய வேண்டும் என்று சங்கல்ப பூஜை செய்தோம்.

பூஜை முடிந்ததும் அந்த மண்டபத்தை வலம் வந்தோம். அப்போது மண்டபத்தில் இருந்த கண்ணாடி பிரேம் இரண்டு படங்கள் எங்கள் கவனத்தை ஈர்த்தன. ஸ்ரீ ராமகிருஷ்ணரும், அன்னை ஸ்ரீ சாரதா தேவியும் இருந்தார்கள். அவர்களின் பின்னணியில் காளியின் உருவம் இருந்தது. மற்றொரு படத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீ சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் ஆகிய மூவரும் இருந்தார்கள். அந்தப் படங்களை நாங்கள் சிறப்பு வழிபாடு செய்த அதே மண்டபத்தில் பார்த்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அவர்கள் எங்கள் குழுவின் கைலாஸ் யாத்திரை நல்ல விதமாக அமைய வேண்டும் என்று எங்களை ஆசீர்வதிப்பதாகவே நாங்கள் எடுத்துக் கொண்டோம்.

பசுபதிநாத் கோயிலில் பண்டா பூஜையை முடித்த போது காலை 9.25 மணியாகியிருந்தது. காலை 9.15 க்கு அந்தக் கோயிலில் பூஜை செய்யும் பண்டாக்கள் கர்ப்பகிருகத்திற்கு வருகிறார்கள். அவர்கள் வந்து பசுபதிநாத்திற்கு பூஜை செய்யும் அந்த நேரத்தில் மட்டும் பசுபதிநாத் கருவறையில் நான்கு பக்கங்களிலும் உள்ள நான்கு கதவுகளையும் திறந்து வைக்கிறார்கள். மற்ற நேரங்களில் கருவறையின் ஒரு கதவு மட்டுமே திறந்திருக்கும். அந்த ஒரு கதவின் மூலமெ பசுபதிநாதரை பக்தர்கள் தரிசிக்க முடியும்.

நாங்கள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் பூஜை செய்ய வேண்டிய பண்டா வந்தார். கருவறையின் நான்கு வாயில்களிலும், நான்கு அடி உயரமுள்ள தடுப்பு மரக்கதவுகள் நான்கு இருக்கின்றன. நாங்கள் நின்றிருந்த நுழைவாயிலுக்கு வந்த பண்டா ஒருவர், நுழைவாயின் மேலே கட்டப்பட்டிருந்த கயிற்றைப் பிடித்தபடியே இடுப்பளவு உள்ள தடுப்புக் கதவைத் தாண்டி கருவறைக்குள் சென்றார்.

கோயிலைச் சுற்றிலும் பல இடங்களில் பக்தர்கள்சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து பக்திப் பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார்கள்.

பின்னர் மினி வேனில் ஏறி நாங்கள் குஹ்யேஸ்வரி கோயிலுக்குப் புறப்பட்டோம். இந்த தேவியின் கோயில் பசுபதிநாத் கோயிலிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இது அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.இது தேவியின் பிருஷ்ட பாகம் விழுந்த இடம் என்று அங்கிருந்த ஒருவர் கூறினார். இந்தக் கோயிலும் பாக்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

குஹ்யேஸ்வரியை வழிபட்ட பின்னர் அங்கிருந்து புத்த நீலகாந்தர் என்ற விஷ்ணு கோயிலுக்குச் சென்றோம். நாங்கள் சென்ற வேன் அந்தக் கோயிலைச் சென்றடைந்த போது “ஓம் நமோ நாராயணாய” என்று பலரும் சொல்லிக் கொண்டிருந்தது எங்கள் காதில் விழுந்தது. கோயிலை நெருங்கிய போது அந்த ஒலி அங்கு நடந்து கொண்டிருந்த கோடி அர்ச்சனையின் காரணமாக எழுந்தது என்பது புரிந்தது. கோயிலின் முன்பகுதியில் ஒரு பெரிய யாககுண்டம் காணப்பட்டது. அதைச் சுற்றி பலர் அமர்ந்து புனித அக்கினியில் ஆகுதிகள் அளித்தபடியே நாராயண மந்திரத்தைக் கோடி அர்ச்சனையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இந்தக் கோயிலில் ஒரு குளம் இருக்கிறது. இந்தக் குளத்தின் நடுவில் சுமார் இருபது அடி அகலமும், நூறு அடி நீளமும் கொண்ட மகாவிஷ்ணு பாம்பணையில் பள்ளி கொண்டிருப்பது போல் அமைத்திருக்கிறார்கள். தண்ணீரின் நடுவில் உள்ள பாம்பணையும், விஷ்ணுவின் உருவமும் மிகவும் அழகானவை.

அங்கு நாங்கள் சென்ற போது பகல் பன்னிரண்டு இருக்கும். அப்போது வெயில் கடுமையாகவும், கொடுமையாகவும் இருந்தது. தரை மிகவும் சூடாக இருந்ததால் அங்கு நாங்கள் நிற்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.  விஷ்ணுவின் திருவடியைத் தொட்டு வணங்கி விட்டு வந்தோம். கோயிலை விட்டு வெளியே வந்த போது கோடியர்ச்சனை நடந்து கொண்டிருந்ததை சிறிது நேரம் பார்த்து விட்டு, பிறகு யாககுண்டத்தை பிரதட்சிணம் செய்தோம்.

அங்கிருந்து சுயம்புநாத் என்ற புத்தர் கோயிலுக்குச் சென்றோம். இந்த புத்தர் கோயிலில் உயரமான ஒரு ஸ்தூபி இருக்கிறது. அதில் இரண்டு கண்கள் வரையப்பட்டுள்ளன. இங்கு மட்டுமல்ல, பொதுவாக எல்லா பௌத்த மடாலயங்களிலும், புத்தர் கோயில்களிலும் இரண்டு பெரிய கண்கள் வரையப்படுகின்றன. இந்த கண்கள் புத்தர்உலகைத் தமது அருட்கண்களால் பார்த்துக் கொண்டிருப்பதாக அமைகின்றன. சில இடங்களில் அந்த கண்களிலிருந்து கண்ணீர்த் துளி விழுவதற்குத் தயாராக இருப்பது போலவும் காட்டப்படுகிறது. மக்களின் துன்பத்தைக் கண்டு புத்தர் வருந்துவதை இந்தக் கண்ணீர் துளிகள் தெரிவிப்பதாக நம்பப்படுகிறது.

மினி வேனில் சென்ற நாங்கள் அந்த புத்தர் கோயில் உள்ள மலையடிவாரத்தைச் சென்றடைந்தோம். தமிழ்நாட்டிலுள்ள சில முருகன் கோயில்களில், மலையடிவாரத்திலிருந்து படிகள் ஆரம்பித்து நாம் அதன் உச்சியை அடைவது போல இந்த “சுயம்புநாத்” கோயில் அமைந்துள்ளது.இந்த இடத்திற்கு புத்தர் ஒரு சமயம் வந்ததாகக் கூறுகிறார்கள். மலையின் படிகளில் ஏற ஆரம்பித்ததும் அங்கு குளத்தின் நடுவிலுள்ள புத்தர் சிலை, சிறிய, ப்ரியே ஸ்தூபிகள் ஆகியவற்றைப் பார்த்தோம்.

இந்தக் கோயிலின் உச்சியில் உள்ள வளாகத்தில் ஸ்தூபிகள், காளி கோயில் அருங்காட்சியகம், மலை மீதிருந்து காட்மாண்டு நகரைப் பார்க்கும். வகையில் உள்ல டெலஸ்கோப் ஆகியவை இருக்கின்றன. அருங்காட்சியகம் சிறியது. அதில் பௌத்த மத தொடர்புடைய சிலைகள் போன்றவை இருந்தன. மலைப்படிகளில் ஏறிச் செல்லும் வழியில் இஸ்ல கடைகள் இருந்தன. அந்தக் கடைகளில் பெரும்பாலும் நேபாள நாட்டின் கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். இவற்றில் பெரும்பாலானவை புத்த மதத்துடன் தொடர்புடையவை. மலையின் உச்சியில் உள்ள காளி கோயிலையும், ஸ்தூபிகளையும், அருங்காட்சியகத்தையும் பார்த்து விட்டு, கார்டன் ஹோட்டலுக்குப் புறப்பட்டோம்.

ஹோட்டலில் எங்கள்யாத்திரை ஏஜண்ட் ஜோதி, அதிகாரியுடன் கைலாஸ் யாத்திரைக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஒரு கலந்துரையாடல் இடம் பெற்றது. கலந்துரையாடலின் முடிவில் இந்த யாத்திரையில் அதிக உயரம் காரணமாக உடல்நலம் பாதிக்க வாய்ப்புள்ளவர்களுக்காக அவசர சிகிச்சை கொடுக்கும் சேம்பர் போல விளக்கம் தரப்பட்டது.

அதிக உயரங்களில் காற்றில் ஆக்சிஜன் மற்றும் ஈர்ப்பு விசை குறைவு. இதனால் மூச்சு விடுவதும், ரத்த ஓட்டமும் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. தலைவலி, தலைசுற்றல், நினைவு தவறுதல் போன்றவை இதன் விளைவாக ஏற்படுகின்றன. இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் கட்டமாக மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. மருந்து பலனளிக்காத போது உயரம் குறைந்த பகுதிகளில் இருப்பது போன்ற ஒரு நிலைமையைச் செயற்கையாக உருவாக்குகிறார்கள். அதற்குப் பயன்படுவது இந்த காமா பேக் என்பது. இந்த சிகிச்சையும் பலனளிக்காவிட்டால் நோயாளியை கீழ்ப் பகுதிகளுக்கு எடுத்து வருவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை. அவ்விதம் கொண்டு வராவிட்டால் உயிருக்கே ஆபத்து நேரிடலாம்.

காமா பேக் செயல் முறை நிகழ்ச்சி கார்டன் ஹோட்டலைச் சேர்ந்த நீச்ச குளத்தின் அருகிலுள்ளபுல்வெளியில்  நடைபெற்றது.  எங்கள் குழுவைச் சேர்ந்த ஒருவர் காமா பேக் பொருட்டு காமா பேக்கினுள் படுத்தார். இந்த காமா பேக்குக்குள் காற்று முழுவதும் செலுத்தப்பட்ட பிறகு நான் அவரது அருகில் சென்று, “உள்ளே இருப்பது எப்படி இருக்கிறது” என்று வினவினேன். அதற்கு அவர் முழங்கால் பகுதி சிறிது வேர்த்திருக்கிறது, என்று கூறினார்.  பிறகு அவர் காமா பேக்கிலிருந்து வெளியெ வந்தார். இந்த காமா பேக்கை ஒரு முறை உபயோகிப்பதற்கு ரூ. 2,000 கட்டணம் என்ற அடிப்படையில் எங்கள் கைலாஸ் யாத்திரையில்  இந்த காமா பேக்கையும் எங்களுடன் எடுத்துச் செல்ல முடிவு செய்தோம்.

வழியில் பிகுட் ஸோ என்ற இடத்திலும், தார்ச்சனிலும் எங்கள் குழுவைச் சேர்ந்த சிலர் காமா பேக் ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டனர். ஆனால் நாங்கள் யாத்திரை முடிந்து காட்மாண்டு திரும்பிய போது, காமா பேக் பயன்படுத்தியவர்களிட்மைருந்து எகோ ட்ரெக் நிறுவனத்தின் ஜோதி அதிகாரி  தலா ரூ.2,000 பெற்றுக் கொள்ள வில்லை.

அன்று மாலை எங்கள் குழுவினர் அனைவரும் யாத்திரைக்குத் தேவையான பொருள்களை கடைகளுக்குச் சென்று வாங்கினார்கள்.

21-5-98 காலையிலெழுந்து வெந்நீரில் குளித்தேன். மீண்டும் இது போல் மூன்று வாரங்களுக்குப் பிறகுதான் – அதாவது யாத்திரை முடிந்து திரும்பி வரும் போதுதான் – சோப்புப் போட்டு நன்றாகக் குளிக்க முடியும் என்று நினைத்துக் கொண்டேன்.

கார்டன் ஹோட்டலில் காலை ஏழு மணிக்கு சிற்றுண்டி வழங்கினார்கள். பின்னர் எங்கள் லக்கேஜ்களை ஹோட்டலுக்கு வெளியே எங்களை அழைத்துச் செல்லக் காத்திருந்த மினி வேனில் ஏர்றினோம். அப்போது லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. வேனின் முன்னால், “Kailaasa Yathra 1998 – Devottees, Ramakrishna Math, Chennai – 500 004”  என்ற துணி பேனரைக் கட்டி என்னுடன் வந்தவர்கள் ஃபோட்டொ எடுத்துக் கொண்டார்கள். எங்களுடன் நேபாள சமையற்காரர்கள் நான்கு பேரும், வழிகாட்டி ஒருவரும் வந்தார்.