நாங்கள் காலை எட்டு மணிக்கு மினி வேனில் அமர்ந்து, “ஜெய், ஸ்ரீ குருமகராஜ் கி ஜெய்”, “ஜெய், ஸ்ரீ மாயி கி ஜெய்”, “ஜெய், ஸ்ரீ சுவாமிஜி மகராஜ் கி ஜெய்”, “ஜெய் ஸ்ரீ கைலாஸ்பதி கி ஜெய்”, கவாய் கனகத்திரளே போற்றி, கயிலாய மலையானே போற்றி, போற்றி, தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!, ஓம் நம பார்வதி பதயே, ஹர ஹர மகாதேவா!” ஆகிய முழக்கங்களோடு காட்மாண்டுவிலிருந்து வேனில் புறப்பட்டோம்.
வழியில் ஒன்பது மணிக்கு பனேபா என்ற சிற்றூர் வந்தது. அங்கு எங்கள் வண்டியை நிறுத்தி பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை வாங்கினோம். பின்பு துலிகல் என்ற ஊரிலுள்ள அழகான பள்ளத்தாக்கு வழியாக எங்கள் வேன் சென்றது. பச்சைக் கம்பளங்கள் விரித்தது போல் இருந்த புல்வெளிகளைப் பார்த்துக் கொண்டே சென்றோம். வழியில் பூக்களைப் பார்க்கும் இடங்களில் எங்கல் குழுவினர் சிலர் வண்டியை நிறுத்தி, சிவ பூஜைக்குத் தேவையான பூக்களை சேகரித்துக் கொண்டார்கள்.
துலிகல் தாண்டியதும் ஒரு ராமர் கோயில் வழியாக எங்கள் வேன் சென்றது. அந்தக் கோயில் விமானத்தின் மீது ஸ்ரீ ராமபிரானின் வில்லின் வடிவம் அமைக்கப்பட்டிருந்தது. வழியில் துலால் காட் என்ற இடத்தில் இந்திராவதி என்ற ஆறு ஓடிக் கொண்டிருந்தது. இந்த நதியை நாங்கள் கடந்த போது காலை மணி 10.45. மலை முகடுகளின் ஊடே பூகுந்து வண்டி செல்வது போல் இருந்தது. வழியில் “கங்கோசி”, “போட்டேகோசி” ஆகிய இரண்டு ஆறுகளின் வழியாக எங்கள் வேன் சென்றது. இந்த ஆறுகளைக் கடந்த போது எங்கள் வேன் ஒரு மலையின் இறக்கத்தின் வ்ழியாகச் சென்றது. பாலம் வழியாக நதியைக் கடந்து வேன் அடுத்த மலையில் நுழைந்தவுடன், அந்த மலையில் மேல் நோக்கி ஏற ஆரம்பித்தது.
பாஹரா பேசே என்ற இடத்தை நோக்கி எங்கள் வேன் சென்றது. வழியிலுள்ள கடைகளில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் வேலை செய்து கொண்டிருந்ததைப் பார்த்தோம்.
ஓரிரு இடங்களைத் தவிர பொதுவாக நாங்கள் சென்ற மலைப்பாதை சீராகவே இருந்தது. ஆனால் நேபாள எல்லை வரும் போது ரோடு கரடு முரடாகி விட்டது. ஆங்காங்கே ரோட்டின் இரண்டு பக்கங்களின் அருகிலும், தூரத்திலும் இருந்த மலைகளிலிருந்து அருவிகளும், நீர்வீழ்ச்சிகளும் கொட்டிக் கொண்டிருந்தன. வலப்பக்கத்தில் ஓர் ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஆற்றின் மறுகரையில் பெரிய பெரிய நீர்வீழ்ச்சிகள் பல இருப்பதைப் பார்த்தபடியே வேனில் சென்றோம். அந்த அருவிகளும், நீர்வீழ்ச்சிகளும் சிவபெருமானுக்குப் பாலாபிஷேகம் செய்வது போன்று காட்சியளித்தன. வழியில் ஓர் இடத்தில் கோயில் வெளிப் பிராகாரத் தோற்றம் தரக்கூடிய ஒரு மலை இருந்தது. அங்கு தேனீக்கள் கட்டியிருந்த பல தேன் கூடுகளைக் கண்டோம். சப்தத்துடன் ஓடும் நதி, துள்ளிக் குதித்து ஆரவாரத்துடன் ஓடும் சிறுமியைப் போல் சென்று கொண்டிருந்தது. மலையைக் குடைந்து ஓடுவது போல ஒரு நதி மலையின் ஊடே சென்றது.
பகல் 12.55 மணிக்கு தாத்தோபாணி என்ற இடத்தை அடைந்தோம். இதுவே நேபாள எல்லையில் அமைந்துள்ள கடைசி கிராமமாகும். அங்குள்ள மொத்த வீடுகளையும், கடைகளையும் சேர்த்தால் சுமார் 100 இருக்கும். இங்குள்ல நீர்வீழ்ச்சிகளுடன் சிறிய ரப்பர் குழாய்களை இணைத்து அதன் மறு முனையை வீடுகளின் முன்னாலும், சாலை ஓரத்திலும் வைத்திருக்கிறார்கள். இந்தக் குழாய்களிலிருந்து எப்போதும் தண்ணீர் கொட்டியபடியே இருக்கிறது.
தாத்தோபாணியிலிருந்து ஜாங்மூ என்ற இடம் தெரிந்தது. திபெத் பகுதியிலுள்ள முதல் நகரம் இது. இது சீட்டுக்கட்டை அடுக்கி வைத்திருப்பது போன்ற கட்டிடங்களுடன் மலையில் நடுவில் இந்தச் சிறிய நகரம் அமைந்துள்ளது. தாத்தோபாணியுடன் நேபாளத்தின் எல்லை முடிவதால் நாங்கள் அங்கிருந்து வண்டி மாற வேண்டும். தாத்தோபாணியில் முடிவிடத்திற்கு கோடரி என்று பெயர். இந்த இடத்தில் ஓர் ஆற்றின்மீதுள்ள “Friendship Bridge” என்ற பாலத்தை நாங்கள் நடந்தே கடந்து சென்றோம்.
பாலத்தின் மறுகரையில் திபெத் எல்லை ஆரம்பிக்கிறது. பாலத்தின் கீழே ஓர் ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. பாலத்தைக் கடந்ததுமே சீனக் கட்டுப்பாட்டுப் பகுதி வந்து விடுகிறது. பாலத்தின் மறுமுனையில் சீனக் கட்டுப்பாட்டு அலுவலகம் அமைந்துள்ளது. பாலத்தைக் கடந்து நாங்கள் அந்தப் பகுதிக்குச் சென்றோம்.
நேபாளத்திற்கும், சீனாவுக்கும் 2.10 மணி நேர கால வித்தியாசம் உள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் 2.30 மணி கால வித்தியாசம் உள்லது. திபெத்திலிருக்கும் ஜாங்மூ விலிருந்துதான் யாத்திரையின் முக்கிய பகுதி ஆரம்பிக்கிறது. இங்கிருந்து மானசரோவர் சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த தூரம் 4 அல்லது 5 நாட்களில் கடக்கக் கூடியதாக் ஐருக்கிறது. எங்கள் யாத்திரைக்குத் தேவையான அனைத்தையும் எகோ ட்ரெக்கினர் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஜீப்புகளில் பயணம் நடைபெறுகிறது. இந்த ஜீப்புகளின் நான்கு சக்கரங்களுக்கும் இஞ்சின் கண்ட்ரோல் உள்ளது. இந்த வண்டி கல், பாறை, மணல் ஆகியவற்றைக் கொண்ட, மிகவும் மோசமான பாதையிலும் செல்லக் கூடியது. சிற்றாறுகளையும் சுலபமாகக் கட்ககக் கூடியது. இந்த வண்டியை ஓட்டுவதற்கு மிகவும் திறமை வேண்டும்.
ஒரு ஜீப்பிற்கு நான்கு பேர் வீதம் ஐந்து ஜீப்புகளில் எங்கள் குழுவினர் இருபது பேர் சென்றோம். இந்த ஜீப்புகளை திபெத் தலைநகரான “லாசா” என்ற இடத்திலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். இந்த வண்டிகளைக் கொண்டு வந்திருந்த டிரைவர்களைத் தவிரவும், அவர்களுடன் திபெத்திய வழிகாட்டி ஒருவரும் லாசாவிலிருந்து வந்திருந்தார். அந்த வழிகாட்டிக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும். இவர் ஹிமாசலப் பிரதேசத்தில் சில ஆண்டுகள் தங்கி கல்வி பயின்றதாகக் கூறினார். திபெத்தில் நாங்கள் இருந்த அத்தனை நாட்களிலும் இவர் பல விதங்களிலும் எங்களுக்கு உதவியாக இருந்தார்.
நேபாளத்திலிருந்து வந்த சமையல்காரர்கள் சுமார் 20 நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், கேஸ், கூடாரங்களுக்குத் தேவையான பொருட்கள், ஜீப்புகளுக்கான பெட்ரோல் முதலியவற்றுடன் இரண்டு லாரிகளில் எங்களுடன் பயணம் செய்தார்கள்.
ஜாங்மு – நியாலம் 25 கி.மீ.
மாலை 4.15 மணிக்கு ஜாங்மு வந்து சேர்ந்தோம். இங்கு சீன அரசின் கஸ்டம்ஸ் அலுவலகம் இருக்கிறது.ங்கு நாங்கள் அனைவரும் “Health forms” பெறறு அவற்றைப் பூர்த்தி செய்து கொடுத்தோம். அந்த பாரத்தில் “ஏங்களுக்கு எந்த நோயும் இல்லை” என்று எங்கள் குழுவினர் ஒவ்வொருவரும் எழுதிக் கொடுத்தோம்.
பின்னர் அந்த அலுவலகத்தில் எங்கள் குழுவினர் ஒவ்வொருவருடைய பாஸ்போர்ட் சோதனை நடந்தது. கஸ்டம்ஸ் சோதனை முடிவடைந்ததும், சீனர்கள் பலர் எங்களைச் சூழ்ந்து கொண்டு “இந்தியப் பணத்திற்கு மாற்றாக சீனப் பணம் தருகிறோம்” என்றார்கள். இவர்களில் சீனப் பெண்கள் அதிகமாக இருந்தனர். இந்த சீனர்களிடம் இருந்து இந்திய ரூபாயை, சீனப் பணமானா யுவானாக மாற்றிக் கொண்டு நாங்கள் மேற்கொண்டு நடந்து சென்றோம்.
ஜாங்முவில் கஸ்டம்ச் சோதனை முடிந்ததும் நியாலம் என்ர இடத்திர்குச் செல்வது என்று எங்களது பயணத் திட்டம் இருந்தது. இந்த நிலையில், “இந்த இடத்திலிருந்து நியாலம் செல்லும் வழியில் ஒரு விபத்து ஏற்பட்டிருக்கிறது” விபத்து நேர்ந்த இடத்திலிருக்கும் வண்டிகளை அகற்றாத வரையில் நாம் மேற்கொண்டு பயணம் தொடர இயலாது” என்று எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதனால் அன்றைய தினம் நாங்கள் நியாலம் செல்லும் திட்டத்தைக் கை விட நேர்ந்தது.
ஒரு ஹோட்டலில் நாங்கள் அன்றிரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்யும்பொருட்டு அறைகள் எடுப்பதாற்காக எங்கள் குழுவைச் சேர்ந்த இருவர் சென்றார்கள். மற்ற அனைவரும் ஜீப்புகளில் அமர்ந்திருந்தோம். அப்போது திபெத்தியர்கள் பலர், அவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள், எங்கள் ஜீப்புகளைச் சூழ்ந்து கொண்டு தின்பதற்காக தின்பண்டங்கள் கேட்டார்கள். அவர்களுக்கு என்னிடம் இருந்தவற்றைத் தாராளமாகக் கொடுத்தேன். அந்த திபெத்தியர்களின் ஏழ்மை நிலை பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது.
சீனர்கள் 1950-களில் திபெத்தைப் பலவந்தமாக ஆக்கிரமித்துக் கொண்டார்கள். அதைத் தொடர்ந்து சீன அரசு திபெத்தியர்களின் நிலம், சொத்து ஆகியவற்றைக் கைப்பற்றிக் கொண்டு, அவர்களைக் கொத்தடிமை போலவும், ஆடு மாடுகளைப் போலவும் நடத்துகிறது என்று கேள்விப்பட்டோம். இங்குள்ள திபெத்தியர்கள் அன்பும், பரிவும் நிறைந்தவர்கள். அவர்களின் கண்களில் ஒருவித ஏக்கம் தெரிந்தது. அதற்குக் காரணம், தங்களுக்குச் சுதந்திரம் இல்லை, தலாய் லாமா திபெத் வர முடியவில்லை என்பதாகத்தான் இருக்கும்.
ஆங்கிலேயர்களிடம் நாம் சுமார் 300 ஆண்டுகள் அடிமைப்பட்டிருந்தோம். அப்போது இந்தியாவில் எத்தகைய நிலை இருந்திருக்கும் என்பதை, இந்த திபெத்தியர்களைப் பார்த்த போது ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.
ஜாங்முவில் நாங்கள் தங்கியது ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டலாகும். இதைச் சீனர்கள் நடத்தி வருகிறார்கள். இதன் பெயர் ஜாங்மு ஹோட்டல். இரவு ஏழு மணிக்கு என் அறையில் யாத்திரிகர்கள் அனைவரும் கூடிக் கூட்டுப் பிரார்த்தனை செய்தோம். அப்போது ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஆரத்தி, சிவ புராணம், கயிலைப் போற்றித் திருத்தாண்டகம் ஆகியவற்றைப் படித்தோம். அதன் பிறகு கயிலாயத்தின் சிறப்பு, இந்தக் கயிலாய யாத்திரை என்ற அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி நிறைந்த ஆன்மீகப் பயன் பெற வேண்டும் என்பதை விளக்கி ஒரு சொற்பொழிவு செய்தேன். அன்றைய தினம் நாங்கள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 7000 அடி உயரத்தில் இருந்தோம்.
மறுநாள் காலையில் ஜாங்மு ஹோட்டல் அறையில், சுவர் போன்ற பெரிய கண்ணாடி ஜன்னல் வழியாகப் பார்த்த போது, கம்பீரமான இமயத்தின் வெள்ளிப் பனி மலைகளின் தொடர் ரம்மியமாகத் தெரிந்தது. சுமார் 10 கி.மீ தூரத்தில் கண்ணுக்கெட்டிய தொலைவில் பனி மூடியிருந்தது. ஆங்காங்கே பனி மூடிய இமலயமலையின் சிகரங்கள் சிலவற்றை ஏற்கனவே உத்தரகாசியில் பார்த்திருந்தாலும், ஒரு பெரிய மலையையே கண்ணாடி போல் பனி மூடியிருந்ததை ஜாங்முவில் தான் முதல் முறையாகப் பார்த்தோம். அந்தக் கண்ணாடி மலை, “இப்படியும் ஒரு மலை இருக்க முடியுமா?” என்று அப்படியே வியப்பில் ஆழ்த்தியது.
காலை 10.45 மணிக்கு ஜாங்முவிலிருந்து நியாலம் நோக்கிப் புறப்பட்டோம். ஜாங்முவுக்கும், நியாலத்திற்கும் இடையிலுள்ல தூரம்சுமார் 25 கி.மீ ஆகும். ஜாங்முவிலிருந்து செல்லும் வழியில் மலைகளின் தரிசனம் எங்களுக்குத் தாராளமாகக் கிடைத்தது. ஆயிரக்கணக்கான கிலோ வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் பளபள என்று மலைகளில் பல அருவிகள் தென்பட்டன. ஆங்காங்கே மலைகளில் பனிமூட்டம் அதிகமாகவும், படலம் படலமாகவும், கனமாகவும் இருந்து கொண்டே இருந்தது. அப்போது நாங்கள் கடல் மட்டத்திலிருந்து 11,000 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தோம். “ஓ”வென்ற இறைச்சலுடன் ஒரு நதி ஓடிக் கொண்டிருந்தது. அந்த நதி பாறைகளில் முட்டி மோதி வர்ண ஜாலங்க்ளுடன் வந்து கொண்டிருந்தது. வைர, வைடூரியங்களை வாரி இறைத்தது போல் ஒளிமயமாக அந்த நதி விளங்கியது.