கைலாஸ்-மானசரோவர் – 06

பகல் 11.30 மணிக்கு ஓரிடத்தில் பனிப்பாறை விழுந்து வழி மறைத்து பாதையை மூடி இருந்தது. அங்கு நாங்கள் சென்ற போது புல்டோசர் மூலம் அங்கிருந்த பனியை அகற்றிக் கொண்டிருந்தார்கள். பனியை வெட்டி வழி செய்த பிறகு பனிக்கட்டிகளின் ஊடே எங்கள் ஜீப்புகள் சென்றன. மலை முகடுகள்  பல வண்ணங்களில் தெரிந்தன. பள்ளத்தாக்குகளின் அழகைப் பார்த்துக் கொண்டே சென்றோம். “எவ்வளவு தூரம் ஏறி வந்திருக்கிறோம்” என்ற மலைப்பு சில சமயங்களில் எங்களுக்கு ஏற்பட்டது. ஆங்காங்கு சிவபெருமானை நினைவுபடுத்துவது போல் பாறைகள் தென்பட்டன. அவற்ரிலிருந்து வரும் அருவிகள் சிவபெருமானின் சிரசிலிருந்து கங்கை வருவது போல் தெரிந்தது.

நாங்கள் சென்ற ஜீப்புகளை பகல் 12.50 மணிக்கு சமவெளியாக் ஐருந்த ஓர் இடத்தில் நிறுத்தினோம். அங்கு வண்டியிலிருந்து இறங்கி சிலுசிலு என்ற காற்றை அனுபவித்தோம். உடலையும், உள்லத்தையும் வருடிக் கொடுக்கும் இதமான குளிர் காற்று அங்கு அப்போது வீசியது.

இந்த இடத்தில்தான் நாங்கள் முதன்முதலில் திபெத்தியர்கள் பிரார்த்தனைக் கொடிகளைக் கட்டியிருந்ததைப் பார்த்தோம். இதைத் தொடர்ந்து எங்கள் கைலாஸ் – மானசரோவர் யாத்திரையின் போது இது போன்ற திபெத்தியர்களின் பிரார்த்தனைக் கொடிகளைப் பல இடங்கலில் பார்த்தோம். விழாக் காலங்களில் நாம் கட்டுகின்ற தோரணங்களைப் போன்று இந்தப் பிரார்தனைக் கொடிகள் காணப்படுகின்றன. நீண்ட கயிற்றில் முக்கோணம் மற்ரும் செவ்வக வடிவங்களில் இந்தக் கொடிகள் வரிசையாக உள்ளன. நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை,  பச்சை ஆகிய ஐந்து நிறங்களில் இந்தக் கொடிகள் உள்ளன. இதில் திபேத்திய மொழியில் பிரார்த்தனைகள் அச்சிடப்பட்டுள்ளன. கற்கலைக் குவித்து வைத்து அதில் இத்தகைய கொடிகள் கட்டப்பட்டிருந்த சில இடங்களையும் நாங்கள் பார்த்தோம். இந்தக் கொடிகளே அவை உள்ள இடம் வழிபாட்டுத் தலம் என்பதற்கு அடையாளமாகத் திகழ்கின்றன.

திபெத்தியர்கள் சிறியதும் பெரியதுமான கற்களைக் குவித்து செவ்வக வடிவில் அமைத்திருக்கும் மேடைகளும் வழிபாட்டுத் தலங்களாகும். கைலாஸ் – மானசரோவர் செல்லும் வழியில் இத்தகைய நூற்றுக்கணக்கான இடங்களை நாம் காணலாம். திபெத்திய பௌத்தர்கள் இந்தக் கற்குவியல்களை பௌத்த ஸ்தூபியின் அடையாளமாகப் பிரார்த்தனையுடன் அமைக்கிறார்கள். தாங்கள்

நேசிக்கின்ற யாக்குகள் இறந்து விட்டால் அவற்றின் தலையை இந்த ,மேடையில் வைத்து விடுகிறார்கள். அதனால் அவை சொர்க்கத்திற்குச் செல்லும் என்றும், பிறகு அவற்றிற்கு உயர்ந்த பிறவி கிடைக்கும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

கற்கள் சிதறிக் கிடப்பதை எந்த திபெத்தியன் பார்த்தாலும் உடனெ அவற்றை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கத் தொடங்கிவிடுகிறான். பெரிய கற்களைக் கீழே வைத்து படிப்படியாக சிறிய கர்களை மேலே வைக்கிறான். அரை அடி அல்லது ஓர் அடி உயரத்தில் இவை கூம்பு வடிவத்தில் வழியெங்கும் உள்ளன. இதற்கு திபெத்தியர்கள் அளிக்கும் விளக்கம் மிகவும் பொருள் பொதிந்தது. இந்தக் கூம்புகள் அவற்றை அமைப்பவனின் பிரதிநிதிகள். தங்கள் பிரதிநிதியாக, அந்தக் கூம்புகள் எப்போதும் கயிலையை வழிபட்டுக் கொண்டிருப்பதாகவும், அந்தப் பலன் தங்களை அடையும் என்றும் திபெத்தியர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

நாங்கள் இருந்த இடத்திலிருந்து இமயமலையைச் சேர்ந்த கோமளாங்க மலைத் தொடரின் அழகிய காட்சிகள் கண்களுக்கு விருந்தளித்து எங்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. எங்கள் ஜீப் டிரைவர், “கோமளாங்க” மலைத்தொடர் திபெத்தின் மிகவும் அழகிய பகுதிகளில் ஒன்று என்ற முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்றார். திபெத்திலுள்ள இமயமலைப்பகுதி பிரமிப்பை ஏற்படுத்துவதாகும். இந்தியப் பகுதியில் நாம் பார்க்கும் மலைகளைவிட இவை மிகவும் உயரமானவை. வானை முட்டுவது போல் ஓங்கி உயர்ந்து நிற்கும் இந்த மலைகள் பார்க்கின்ற யாரையும் ஒரு கணம் ஸ்தம்பித்து நிற்கச் செய்பவை.

பகல் ஒரு மணிக்குப் புழுதிக் காற்று பலமாக வீசியது. அதனால் எங்கள் குழுவைச் சேர்ந்த நாங்கள் அனைவரும் டஸ்ட் மாஸ்க் அணிந்து கொண்டோம். காற்றில் ஆக்சிஜன் குறைந்த அந்த இடங்களில் டஸ்ட் மாஸ்க் அணிவது மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தக் கூடியது. இருப்பினும் அதை அணிந்து கொள்வது நல்லது.

இரண்டு மணிக்கு நியாலம் போய்ச் சேர்ந்தோம். இந்த  இடம் கடல் மட்டத்திலிருந்து 12,010 அடி உயரத்தில் இருக்கிறது. இங்குதான் முதன்முறையாக நாம் கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் இருப்பதைப் புரிந்து கொள்கிறோம். சிறிது தூரம் நடந்தாலும் அதிகமாக மூச்சு வாங்குகிறது. விரைவில் களைத்தும் விடுகிறோம்.

அங்கு நாங்கள் ஜீப்பை விட்டு இறங்கிய போது காற்று பலத்த சப்தத்துடன் வீசியது. இந்த எங்கள் பிரயாணத்தில் அவ்வளவு காற்றைச் சந்தித்தது அதுவே முதல் தடவையாகும். இங்கு நாங்கள் நியாலம் ஹோட்டலில் தங்கினோம்.

நியாலம் – சாகா (23.5.98 – 25.5.98) – 230 கி.மீ.

இன்று சனிக்கிழமையாகும். பிரதோஷமும் சேர்ந்த நன்னாளாகும். விடியற்காலையில் சந்திரனின் அற்புதமான பிறைக்காட்சி மலை முகடுகளின் வழியாகத் தெரிந்தது. நனகள் தங்கியிருந்த விடுதியின் வெளியே வந்து மானசரோவர் செல்லும் பாதை இருந்த திசையில் சிறிது தூரம் நடந்து சென்றோம். அப்போது ஒரு பனி மலை கண்ணாடி மலை அல்லது ஸ்படிக மலை போன்று தென்பட்டது.

காலை சுமார் பத்து மணிக்கு நியாலத்திலிருந்து எங்கள் பயணம் துவங்கியது. காலை 11.30 மணிக்கு நாங்கள் சென்ற ஜீப் மலைப்பாதையை விட்டு சமதளத்தில் ஓட ஆரம்பித்தது. அப்போது எங்கள் வழிகாட்டி, “நாம் இப்போது கடல் மட்டத்திலிருந்து சுமார் 12,600 அடி உயரத்தில் இருக்கிறோம்” என்று கூறினார். வழியில் “ரேக்ளா” வண்டி போல் குதிரை இழுக்கும் இரண்டு வண்டிகளைப் பார்த்தோம். இவை இரண்டு பேர் அமர்ந்து செல்லக் கூடியவை. ஜீப் சென்ற பாதையின் இரு பக்கங்களிலும் வானத்தைத் தொடுவதுபோல் வெள்ளிப் பனி மூடிய சிகரங்கள் தென்பட்டபடியே இருந்தன. ஆங்காங்கே திபெத்தியர்கள் நாடோடிகள் போல் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள். வறுமையில் வாடும் அவர்களின் நிலை எங்கள் மனதைச் சஞ்சலப்படுத்தியது.

பகல் 12.30 மணிக்கு நியாலம் பாஸ் என்ற இடத்தை அடைந்தோம். அங்குள்ள ஒரு பனிமலையின் சிகரம் விநாயகர் உட்கார்ந்திருப்பது போலவும், மற்றொரு பனிமலை சிவபெருமான் பிறையுடன் வீற்றிருப்பது போலவும் தெரிந்தது. அதைத் தொடர்ந்து வழியில் ஒரு பனி சிகரம் சிம்மவாகினி போன்று தென்பட்டது. ஓர் இடத்தில் பனிச்சிகரம் பாம்பணையில் படுத்திருக்கும் மகாவிஷ்ணுவை நினைவு படுத்தியது. ஒரு மலை, நீண்ட நெடிய உருவம் கொண்ட சிவபெருமான் படுத்திருப்பது போன்று தோற்றமளித்தது. இன்னொரு மலை தேவர்கள், கின்னரர்கள் நின்றுகொண்டு வாத்தியங்கள் இசைப்பது போன்ற தோற்றத்துடன் இருந்தது. மற்றொரு மலை புத்தர் படுத்திருப்பது போன்ற காட்சியத் தந்தது. ஓர் இடத்தில் ஒரு பனி மலையைத் தொட்டுக் கொண்டிருந்த மேகங்கள் புஷ்பக விமானம் செல்வதைப் போன்று தோற்றமளித்தது.

நீண்ட தூரம் பிரயாணம் செய்து, மாலை சுமார் ஆறு மணிக்கு ஓர் ஆற்றின் கரையிலிருந்த ஒரு திறந்த வெளியைத் தேர்ந்தெடுத்தோம்.  அங்கு கூடாரங்கள் போட்டுத் தங்கினோம். இந்த இடத்தின் பெயர் பிகுட்ஸோ. இந்த இடத்தில் ஓய்வு விடுதி எதுவும் இல்லை என்பதால்தான் இவ்விதம் நாங்கள் கூடாரங்கள் அமைத்து தங்க வேண்டியதாயிற்று.

எகோ ட்ரெக்கைச் சேர்ந்தவர்கள் எங்கள் குழுவினருக்காக இரண்டு பேர் தங்கக் கூடிய சிறிய கூடாரங்கள் அடித்தனர். அந்தக் கூடாரங்களில் எங்கள் குழுவினர் இரண்டு இரண்டு பேராகத் தங்கினோம். இந்தக் கூடாரங்கள் மிகவும் சிறியவை. இரண்டு பேர் படுத்துக் கொள்ள மட்டுமே அவற்றில் இடமிருக்கும். ஒருவர் நிமிர்ந்து நிற்க முடியாத அளவிற்கு உயரமும் குறைவாக இருந்தது.

அன்று நாங்கள் தங்கிய இடம் கடல் மட்டத்திலிருந்து 15,700 அடி உயரத்தில் இருந்தது.அன்றிரவுதான் எங்கள் வாழ்க்கையிலேயே நாங்கல் முதல் முறையாக மிகவும் அதிகமான குளிரை அனுபவித்தோம். இவ்வளவு குளிருக்குப் பழக்கம் இல்லாத நாங்கள் அந்தக் கடும் குளிரில் திக்கு முக்காடிப் போய்விட்டோம். குளிர் மட்டுமல்ல. அதிகமான உயரம் காரணமாக மூச்சு விடுவதில் வரும் சிரமங்களையும் அங்குதான் உணர்ந்தோம். எங்கள் குழுவைச் சேர்ந்த நான்கு பேர் இரண்டொரு முறை வாந்தியெடுத்தனர். அதன் காரணமாக அவர்கள் சோர்வுடன் இருந்தனர். இந்த உயரத்தில் ஆக்ஸிஜன் குறைவு. எனவே அங்கு சிறிது தூரம் நடந்து சென்றால் கூட எங்களுக்கு மூச்சுத் திணறியது. மீண்டும் எங்களை ஆசுவாசப் படுத்திக்கொள்ள சில நிமிடங்கள் நாங்கள் ஓய்வெடுக்க வேண்டியிருந்தது. எங்களில் மூவர் ஆல்டிட்யூட் சிக்னஸ் காரணமாக காமா பேக் எடுத்துக் கொண்டார்கள்.