கைலாஸ்-மானசரோவர் – 07

அன்றிரவு கூடாரங்களில் நாங்கள் படுத்திருந்த போது, கூடாரத்திற்குள் போதிய இடம் இல்லாததால் எங்கள் லக்கேஜ்களைக் கூடாரத்தின் வெளியே வைத்திருந்தோம். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது அவற்றின் மீது பனி கனமாகப் படர்ந்திருந்தது. இரவு கடும் குளிரில் எங்களின் கை, கால்கள், வெடவெடவென்று நடுங்கின.

அன்றிரவு கடுமையான குளிர் காரணமாக ஒருவரது உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அவரது நாடித்துடிப்பு இறங்கி பல் கிட்டிக்கொண்டது. அதோடு அவர் சுயநினைவையும் இழந்து விட்டார். எனவே நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு அவரிடமிருந்து பதிலே இல்லை. அவரது உடல்நிலை கவலைக்கிடமானதைப் பார்த்து நாங்கள் எல்லோருமே மிகவும் பயந்து போய் விட்டோம். அவரது உடல்நிலை தேறவேண்டும் என்பதற்காக எங்கள் குழுவிலிருந்த ஒருவர் திருநாவுக்கரசரின் “கயிலைத் திருத்தாண்டகம்” கூறினார். மற்றொருவர் அன்னை ஸ்ரீ சாரதாதேவியாரிடம் பிரார்த்தனை செய்து பாடல்கள் பாடினார். ஒருவர் தான் கொண்டு வந்திருந்த உயிர் காக்கும் மருந்தொன்றை மூன்று முறை ஊசியின் மூலம் செலுத்தினார். அவருக்கு சிகிச்சை தரும் பொருட்டு அவரை காமா பேக்கில் வைத்து  சிகிச்சை அளித்தனர். சுமார் அரை மணி நேர சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு மெல்ல மெல்ல சுயநினைவு திரும்பியது. அதன் பிறகுதான் அவரைப் பற்றிய எங்கள் பயம் நீங்கியது. அன்று அவர் மரணத்தின் வாயிலுக்கே சென்று திரும்பினார்.

அன்றிரவு எனக்குத் தூக்கமெ வரவில்லை. கூடாரத்தின் வெளியே காற்றும் பேய்த்தனமாக வீசிக்கொண்டிருந்தது. கூடாரத்தில் படுப்பத
ற்கு நாங்கள் காட்மாண்டிலிருந்து எடுத்துச் சென்ற ஸ்லீப்பிங் கிட்டை முதன் முறையாக அன்றைய இரவுதான் நாங்கள் பயன்படுத்தினோம். ஸ்லீப்பிங் கிட் என்பது உறையோடு கூடிய மெத்தை போன்று இருக்கும். நாம் அதற்குள் நுழைந்து படுத்துக் கொள்ல வேண்டும். பழக்கம் இல்லாததால் அதற்குள் நுழைவதும், பிறகு அதிலிருந்து வெளியே வருவதும் ஆரம்பத்தில் எங்களுக்குச் சிரமமாக இருந்தது. மறுநாள் காலையில் எழுந்தவுடன் ஸ்லீப்பிங் கிட்டை அதன் கவரில் திணித்துக் கட்டிய போது எங்களுக்கு மூச்சு வாங்கியது.

இன்று காலை “பிருட்ஸோ” என்ற இடத்திலிருந்து புறப்பட வேண்டும் என்று முதல் நாள் திட்டமிட்டிருந்தோம். ஆனால் இன்று காலையில் எழுந்ததும் கூடாரத்தை விட்டு நாங்கள் வெளியே வரவே முடியாதபடி குளிர் கடுமையாக இருந்தது. எங்கள் உடல் குளிருக்குப் பழக வேண்டும் என்பதாலும், எங்களில் சிலருக்கு உடல்நிலை சரியில்லை என்பதாலும், அன்றைய தினம் அங்கிருந்து மேற்கொண்டு பயணத்தைத் தொடராமல் அதே இடத்தில் இரண்டாம் நாளும் தங்கினோம்.

நாங்கள் ஆற்றின் கரையில் தங்கியிருந்தோம். காலையிலெ எழுந்து பார்த்த போது அன்றிரவு இருந்த கடுங்குளிர் காரணமாக ஆற்றின் நீர் 75% ஐஸ் தரையாக உறைந்து போயிருந்தது. முதல் நாள் ஆற்றில் நீரைப் பார்த்து விட்டு, அதே ஆறு காலையில் எழுந்து பார்த்தால் பனியாக உறைந்து போயிருக்கும் என்று அதற்கு முன்பு நாங்கள் கேள்விப்பட்டத்தில்லை. கேள்விப்படாத அதை அங்கு நாங்கள் நேரில் கண்டோம். பிறகு வெயில் வந்த பின்பு இரவு பனியாக இருந்த ஆறு உருகி ஓட ஆரம்பித்தது.

நாங்கள் இந்த முகாமில் தங்கியிருந்த போது, “சாகா” என்ற இடத்திலிருந்து மூன்று ஜீப்புகள் வந்தன. அவற்றின் டிரைவர்கள் இறங்கி வந்து எங்கள் டிரைவர்களோடு  சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எங்கள் டிரைவர்களிடம், “நாங்கள் எங்கள் ஜீப்புகளில் இருக்கும் ஜெர்மானியர்களைக் காட்மாண்டிலிருந்து சாகா வரையில்ல் அழைத்துச் சென்றோம். அங்கு இவர்களுக்கு, இப்போது மானசரோவரிலும், கைலாசத்திலும் கடுமையான குளிர் இருக்கிறது என்பன போன்ற விவரங்கள் தெரிய வந்துள்ளது. அதைக் கேட்டதும் இவர்கள் பயந்து தங்களின் கைலாஸ் யாத்திரையையே ரத்து செய்து விட்டார்கள். இப்போது இவர்கள் காட்மாண்டு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்கள்.

25.5.09 அன்று காலை சிற்றுண்டிக்குப் பிறகு 10.30 மணிக்குப் பிறகு பிகிட்ஸோவிலிருந்து சாகாவிற்குப் புறப்பட்டோம். ஒன்றரை மணி நேரம் பிரயாணம் செய்த பிறகு, ஸேன் போ நதிக்கரையை அடைந்தோம். இந்த நதியே, இந்தியாவிற்குள் வரும்போது பிரம்மபுத்ரா என்ற பெயர் பெறுகிறது. இந்தியாவிலுள்ள ஆறுகளைப் பொதுவாக “பெண்” என்றே கூறுவது நம் நாட்டு வழக்கம். இதற்கு மாறாக, பிரம்மபுத்திரா ஆறு ஆண் என்று கருதப்படுகிறது.

ஆனால் இவ்வளவு பெரிய ஆற்றைக் கடப்பதற்கு சீன அரசு பாலம் கட்டாமலேயே விட்டு வைத்திருக்கிறது. அதற்குக் காரணம், அங்கு திபெத்தியர்கள் வாழ்கிறார்கள்; இந்தியர்கள் யாத்திரையாக வருவார்கள் என்பதாக இருக்கக்கூடும். இந்த இடத்தில் நீராவிப் படகுகள் இல்லை. பிரம்மபுத்திரா நதியின் கரையில் ஆற்றைக் கட்பபதற்காக நாங்கள் காத்திருந்தோம். எங்களுடையது மொத்தம் ஐந்து ஜீப்புகள். இரண்டு லாரிகள்.

பகல் 12.15 மணிக்கு ஆற்றில் இரண்டு பெரிய கட்டுமரங்களை ஒன்றோடு ஒன்றாக சேர்த்து வைத்து, அதன் மீது, எங்கள் மூன்று ஜீப்புகளை ஏற்றி மறு கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள். இரண்டாவது தடவை அந்தக் கட்டுமரங்களில் மீதமுள்ள இரண்டு ஜீப்புகள், இரண்டு லாரிகளை ஏற்றி மறுகரைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள். இவற்றை செய்த இருவரில் ஒருவர் பெண். இந்தப் பகுதியிலுள்ள பெண்கள் வயிற்றுப் பிழைப்புக்காகக் கடுமையாக உழைக்கிறார்கள். உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

எங்கள் வண்டிகள் ஆற்றைக் கடந்த பத்து நிமிடங்களில் சாகா என்ற இடத்திலுள்ள விருந்தினர் விடுதிக்குப் போய்ச் சேர்ந்தோம். சாகா என்ற இடம் கடல் மட்டத்திலிருந்து 14.160 அடி உயரத்தில் இருக்கிறது.

இங்கு நாங்கள் தங்கிய விருந்தினர் விடுதியிலுள்ள அறைகள் அனைத்தும் மண்ணால் கட்டப்பட்ட்டவை. இந்த சாகா விடுதியிலும், காட்மாண்டுவிலிருந்து புறப்பட்டு நாங்கள் தங்கிய எல்லா விடுதிகளிலும், எங்கள் தேவைக்குப் போதுமான வெந்நீரைப் பெரிய பிளாஸ்குகளில் அந்தந்த விடுதியைச் சேர்ந்தவர்கள் கொண்டு வந்து வைத்து விடுகிறார்கள். இந்த விடுதிகளின் அறைகள் வசதியாக இருந்தாலும், இங்கே இயற்கைக் கடன்களைக் கழிப்பதர்கான வசதிகள் குறைவு. கதவுகள் இல்லாத கழிப்பறைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

சாகா – பர்யாங் 230 கி.மீ.

26.5.98, இன்று காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு 9.45 மணிக்கு சாகாவிலிருந்து பர்யாங் என்ற இடத்தை நோக்கிப் புறப்பட்டோம். பகல் 12.45 மணிக்கு வழியில் குமா என்ற இடத்தை அடைந்தோம்.

அங்கு ஆஸ்திரேலியர் ஒருவரைச் சந்தித்தோம். அவர், தன்னுடைய பெயர் ஆலன் மிரன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் தனக்கு இந்து மதத்தின் மீதுள்ள பக்தியையும், ஈடுபாட்டையும் வெளிப்படுத்தினார். தான் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பயபக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொண்டு எங்களிடம் பயபக்தியுடன் கொடுத்தார். அந்தச் சங்கிலியில் ஒரு விநாயகர் விக்கிரகம் டாலர் போன்று கோர்த்திருந்தது. அதற்கு விபூதி, குங்குமம் பூசப்பட்டிருந்தது.

அவர், “நான் ஒரு கத்தோலிக்க கிருஸ்தவன், எனினும் விநாயகரை என் தெய்வமாக வழிபட்டு வருகிறேன். நான் அணிந்திருக்கும் விநாயர் விக்கிரகம் இந்தியாவில் சந்நியாசிகள் பலரால் ஆசீர்வதிக்கப்பட்டது. தெற்கு ஆஸ்திரேலியாவில் இருக்கும் என் வீட்டிற்கு “கைலாஸ்” என்று பெயர் வைத்திருக்கிறேன். கயிலாயத்தைப் போன்ற புனிதம் வாய்ந்த இடம் உலகில் வேறு எதுவுமே கிடையாது. நான் இப்போது கயிலைக்குப் புனித யாத்திரையாக வந்திருக்கிறேன். என்னுடைய விசிட்டிங் கார்டில் விநாயகரின் வாகனமான மூஷிகத்தை அச்சிட்டிருக்கிறேன். கயிலைப் பிரதட்சணம், மானசரோவர் பிரதட்சணம் செய்யும் போது குறைந்தது பத்து அடிகளாவது கால் நடையாகச் செல்ல வேண்டும். இந்து மதம் போன்ற பரந்த மனப்பான்மையான உயரிய கருத்துக்களைக் கொண்ட மதம் உலகில் வேறில்லை” என்று கூறினார்.

அவரைச் சந்தித்தது எங்களுக்கு ஓர் இனிய அனுபவமாக இருந்தது.

எங்கள் ஜீப் சென்ற பாதை முழுவதும் ஒரே மணல் வெளியாக இருந்தது. சுற்றிலும் பனி சூழ்ந்த மலைகள் இருந்தன. வெயில் கொளுத்தியது. கடுமையான குளிர் காற்ற்;உம் வீசியது. இவ்விதம் முரண்பட்ட வெயிலையும், குளிரையும் இங்கு நாங்கள் அனுபவித்தோம். வழியில் பல இடங்களில் மணல் வெளிகள் இருந்தன. அவற்றில் பயணம் செய்தது பாலைவனத்தில் பயணம் செய்வது போன்று இருந்தது. பாதையில் இரண்டு பக்கங்களிலும் ஆங்காங்கே மணல் மேடுகள் தென்பட்டன. இந்த மணல் மேடுகள் மனித முயற்சியின்றி அங்கு வீசும் பலமான காற்றினால் இயல்பாக ஏற்பட்டவை. இங்குள்ல சில மணல் மேடுகள் எகிப்திய பிரமிடுகள் போன்றும், அரைக் கோளங்கள் போன்றும் காணப்பட்டன.

சாகாவிற்குப் பிறகு மரங்கள் எதையும் நாம் இங்கு பார்க்க முடியாது. புல்பூண்டுகள் மட்டுமே ஏதோ கொஞ்சம் இங்கு வளர்கின்றன.

நாங்கள் வரும் வழியில் சில இடங்களில் யாக்குகளும், குதிரைகளும் இறந்து கிடந்ததைப் பார்த்தோம். இந்தப் பாலைவனம் போன்ற பகுதியில் இவாற்றிற்கு உணவு எதுவும் கிடைக்காதது இவை இறந்திருக்கலாம். அல்லது குளிரால் இவை இறந்திருக்கலாம், என்று எனக்குத் தோன்றியது.

வழியில் சீன ராணுவத்தினரின் பல லாரிகளைக் கடந்து சென்றோம். அதிகமான மணல் உள்ள இடங்களிலும், சீன ரானுவத்தினர் மணல் மீது பலகைகளைப் போட்டு அதன் மீது லாரிகளைச் செலுத்திக் கொண்டிருந்தார்கள்.

ஏழு மணி நேரம் பிரயாணம் செய்து, சீன நேரப்படி மாலை சுமார் 5.30 மணிக்கு நாங்கள் பர்யாங் என்ற இடத்தைச் சென்றடைந்தோம். அங்குள்ள யாக் ஹோட்டலில் தங்கினோம். அங்கு நாங்கள் தங்கிய விடுதி சாகாவில் நாங்கள் தங்கியதைப் போன்று மண்ணால் கட்டப்பட்டிருந்தது.

பர்யாங் என்ற இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 14,800 அடி உயரத்தில் இருக்கிறது.