கைலாஸ்-மானசரோவர் – 08

பர்யாங் – மானசரோவர் 230 கி.மீ.

27.5.98. இன்று மூன்றாம் பிறை நாள். எங்களுக்கு இன்றைய தினம் மாலை கயிலாயத்தின் முதல் தரிசனம் கிடைக்கும் நாள். எனவே எங்கள் ஆர்வம் அளவு கடந்ததாக இருந்தது.

எங்கள் ஜீப்புகள் காலை 10.30 மணிக்குப் பர்யாங்கிலிருந்து புறப்பட்டன. வழியில் இமயமலைத் தொடர்களின் இயற்கை எழிலை மனம் குளிர மிகவும் நன்றாக அனுபவித்தோம். வலப்பக்கத்தில் இருந்த மலைகளில் பெரும்பாலும் பனி சூழ்ந்திருக்கவில்லை. ஆனால், இடப்பக்கத்தில் இருந்த மலைத்தொடர்களில் பனி சூழ்ந்திருந்தது. அங்கு அடுத்தடுத்து பெரிய பெரிய மலைகளிலும், மலைத்தொடர்களிலும் பனி முழுவதும் சூழ்ந்திருந்ததோடு, அவற்றின் உச்சியில் மேகங்களும் சூழ்ந்திருந்தன. அவற்றைப் பார்த்த போது, “இந்தப் பனிச் சிகரங்கள் ஆகாயத்தையே தொட்டுவிட்டன” என்று சொல்லத் தோன்றியது. இது போன்ற, காட்சிகளை, ஓர் இடத்தில், இரண்டு இடத்தில் அல்ல, பல இடங்களிலும், வழி நெடுகிலும் கண்டோம்.

இன்றைய தினம் எங்கள் பிரயாணம் சுமார் ஒன்பது மணி நேரம் இருந்திருக்கும். இந்த ஒன்பது மணி நேரப் பிரயாணத்தில் சில இடங்களில் வழியில் முயல்கள் ஓடித் திரிந்து கொண்டிருந்ததைப் பார்த்தோம். சில இடங்களில் பொந்துகளிலிருந்து பெருச்சாளிகள் எழுப்பிய சத்தத்தைக் கேட்க முடிந்தது. சில இடங்களில் மான்கள் கூட்டம் கூட்டமாகத் திரிந்து கொண்டிருந்ததைப் பார்த்தோம். அந்த மான்கள் எங்கள் ஜீப்புகளைக் கண்டதும் துள்ளி ஓட ஆரம்பித்தன.

அது போலவே போனி என்று சொல்லப்படும் மட்டக் குதிரைகளையும் திபெத்தியர்கள் சில இடங்களில் மேய்த்துக் கொண்டிருந்தார்கள். மூன்று, நான்கு இடங்களில் செம்மறி ஆடுகளையும் மேய்த்துக் கொண்டிருந்தார்கள்.

வழியில் எத்தனையோ சிற்றாறுகளையும், ஓடைகளையும் கடந்து எங்கள் ஜீப்புகள் சென்று கொண்டிருந்தன. இவ்விதம் நாங்கள் எத்தனை சிற்றாறுகளையும், ஓடைகளையும் கடந்தோம் என்று எங்களால் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது.

நாங்கள் வந்த வழியில் சீனர்களின் இரண்டு ரானுவப் பயிற்சி முகாம்கள் இருந்தன. இவை தவிர நான்கைந்து சிறிய கிராமனகள் இருந்தன. இந்தக் கிராமங்களில் இருந்த எல்லா வீடுகளும் மண்ணால் கட்டப்பட்ட சிறிய சிறிய வீடுகளாகும். சில பௌத்த மடாலயங்கள் சீனர்களால் இடிக்கப்பட்டிருந்தன.

அங்கிருந்த திபெத்தியர்கள் சிலர் தங்கள் கைகளில் ஜப மாலையை வைத்து ஜபம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவருக்குச் சுமார் அறுபது வயது இருக்கும். அவர் எங்களிடம், “நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?” என்று வினவினார். அதாற்கு நாங்கள், “இந்தியர்கள்” என்றோம். அதைக் கேட்டதும் அவரது முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. “ஓ, பாரத்வாசி!” என்று சொல்லியபடியே அவர் கை குலுக்கினார்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் மக்கள் நடமாட்டமே இல்லாத பகுதியில் எங்கள் ஜீப்புகள் சென்று கொண்டிருந்தன. வண்டி சென்ற பெரும்பாலான பகுதிகளில் புழுதி இருந்ததால் தூஸி வாரி வாரி அடித்தது. அந்தப் புழுதி மூக்கில் நுழைவதைத் தவிர்ப்பதற்காக நாங்கல் டஸ்ட் மாஸ்க் அணிந்து கொண்டோம்.

எங்கள் ஜீப்புகள் சுமார் 20 கி.மீ. வந்த பிறகு சுமார் பதினோரு மணிக்கு வழியில் ஒரு சிறிய ஆறு குறுக்கிட்டது. எங்கள் ஜீப்புகளில் இரண்டாவதாக வந்த ஜீப் ஆற்றின் நடுவில் சிக்கிக் கொண்டது. எனவே அதைத் தொடர்ந்து வந்த மற்ற மூன்று ஜீப்புகளும் ஆற்றைக் கடந்து செல்ல முடியவில்லை. ஈகோ ட்ரெக்கைச் சேர்ந்தவர்கள் இரும்புக் கயிற்றைக் கொண்டு முதலில் கரையேறிய ஜீப்பின் பின்புறத்தையும், ஆற்றில் சிக்கிக்கொண்ட ஜீப்பின் முன்புறத்தையும் இணைத்தனர். பிறகு இரண்டு வண்டிகளையும் ஒரே நேரத்தில் ஸ்டார்ட் செய்து, ஒன்றாக ஓட்டிக் கரையேற்றினார்கள். அதன் பிறகு மற்ற ஜீப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக ஆற்றைக் கடந்து மறு கரையை அடைந்தன.

வழியில் நாங்கள் பார்த்த இந்த ஆற்றுக்கும் இது போல் நீர் பாயும் பல இடங்களுக்கும் சீன அரசு பாலம் கட்டாமல் அப்படியே வைத்திருக்கிறது. இதனால் யாதிரிகர்கள் ஆங்காங்கு பெரிதும் சிரமத்திற்குள்ளாக நேரிடுகிறது.

வழியில்  ஓர் அற்றை ஒட்டி எங்கள் ஜீப்புகள் சென்றன. அப்போது அந்த ஆற்றின் பல இடங்களில், ஆற்றின் நடுவிலும், கரையோரங்களிலும் நீளமாகவும், அகலமாகவும் இருந்த பல பெரிய பனிப் பாறைகளைப் பார்த்தோம். ஆற்று நீர் உறைந்து அங்கு அத்தகைய பனிப்பாறைகளாக மாறியிருந்தன. அந்த ஆற்றில் ஆங்காங்கே சுமார் நான்கு அடி உயரத்தில் வெவ்வேறு அளவுகளில், வெவ்வ்டெரு வடி வங்களில் பனிப் பாறைகள் இருந்தன. கனமான சிறிய, பெரிய ஜமக்காளங்கள் விரித்தது போன்று சமவெளியாகவும் பனி தரையில் படிந்திருந்தது.

மாலை 4.15 மணிக்கு “மயுல்லா பாஸ்” என்ற இடத்தைக் கடந்து சென்றோம்.ஆங்காங்கு வெள்ளியை உருக்கி வார்த்தது போன்று பனி மலைகள் வெயிலில் பளபளத்தன. ஆனால் இந்த இமயமலைப் பகுதியில் ஒரே ஒரு மரம் கூட இல்லை என்பதுதன விந்தையிலும் விந்தை!

காலை சுமார் 6.45 மணிக்கு முதலில் எங்களுக்கு மாந்தாதா மலையில் தரிசனம் கிடைத்தது. மாந்தாதா என்பவர் ஸ்ரீராமபிரானின் முன்னோர்களில் ஒருவர். அவர் இந்த மலையில் இருந்து தவம் செய்தார். அதனால் இந்த மலை மாந்தாதா மலை என்று அழைக்கப்படுகிறது.

இந்த மாந்தாதா மலைக்கு மேலும் இரண்டு சிறப்புகள் உண்டு:

முதல் சிறப்பு :  இங்குள்ள ஒரு குகையில்தான் விநாயகர் அவதாரம் செய்தார்.

இரண்டாவது சிறப்பு :  இந்த மலையில்தான் திருமுருகனின் அவதாரமும் நிகழ்ந்தது.

எனவே, இந்த மாந்தாதா மலைதான் விநாயகர், முருகன் ஆகிய இருவருக்கும் அவதார ஸ்தலமாகும். இந்த மலையின் மீதுதான் முருகன் அவரதாரத்துடன் தொடர்புடைய சரவணப் பொய்கை இருக்கிறது என்று கூறப்படுகிறது.

இந்த மாந்தாதா மலை பல பெரிய மலைகளையும், பல சிறிய மலைகளையும் அடுத்தடுத்துத் தொடராகக் கொண்டிருக்கிறது. அதனால் இது அகலத்திலும், நீளத்திலும் ஒரு பெரிய மலையாகும். இதன் உயரம் 25,355 அடி. சுமார் 15 கி.மீ. நீளம் கொண்டதாக இந்த மலை இருக்கும் என்று நினைக்கிறென்.

வழியில் நாங்கள் ஒரு பெரிய ஏரியைக் கண்டோம். அதை முதலில் மானசரோவர் என்ரு தவறாக நினைத்து விட்டோம். அதன் கரையையொட்டி சுமார் இருபது நிமிடங்கள் பயணம் செய்த பிறகுதான், அது மானசரோவர் அல்ல என்ற உண்மை எங்களுக்குப் புரிந்தது.

அந்த ஏரியில் பலவகையான பறவைகள் இனிய ஓசைகளை எழுப்பியபடி பறந்து கொண்டிருந்தன. நாங்கள் சென்று கொண்டிருந்த போது ஓர் இடத்தில் ஐந்து பறவைகள் இருந்தன. அவற்றின் சிறகுகளில் ஆரஞ்சு நிறம் கீற்று கீற்றாக இருந்தது. அது அந்தப் பறவைகள் மேலே பறக்கும் போது தக தக என்று பிரகாசித்தது.

அன்றைய தினம் எங்களுக்குக் கயிலாயத்தின் முதல் தரிசனம் கிடைக்கும் என்று தெரியும். ஆனால் எப்போது எந்த நேரத்தில் கிடைக்கும் என்று திட்டவட்டமாகத் தெரியாது.

எங்கள் ஜீப் நேர்ப் பாதையில் சென்று கொண்டே இருந்தது. திடீரென்று ஒரு திருப்புமுனை வந்ததும் வண்டி திரும்பியது. திருப்புமுனையில் வண்டி திரும்பியதோ இல்லையோ, உடனே சிலர், “அதோ கைலாஸ்!” என்று பரவசத்தில் கூவினார்கள்.

அவர்கள் சுட்டிக்காட்டிய திசையில் கயிலைமலை தெரிந்தது.

எதிர்பாராமல் திடீரென்று கிடைத்த கயிலையின் தரிசனம் எங்களைத் திக்குமுக்காடச் செய்தது. எங்களுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அதனால் டிரைவர் ஜீப்பை நிறுத்தினார். எங்களைத் தொடர்ந்து வந்த மற்ற நான்கு ஜீப்புகளும் எங்கள் ஜீப் நின்றிருந்த இடத்திற்கு வந்தது, சர் சர்ரென்று நின்றன. இவை சில வினாடிகளில் நடந்தன.

உடனே வண்டியிலிருந்து இறங்கிய நாங்கள் பக்தியுடன் கைலாஸ்பதியை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினோம். கைலாசபதியின் அந்த முதல் தரிசனம் எங்கள் அனைவருக்குமெ பரவசமும், பரபரப்பும் தருவதாக இருந்தது.

அரை கிலோ கொண்ட கற்பூர கட்டியை வேக வேகமாக கயிலைநாதனின் முன்பு ஏற்றினோம். ஏற்கனவே தயாராக வைத்திருந்த உலர்ந்த பழங்கள் முதலானவற்றை எடுத்து நைவேத்தியம் செய்தோம். ஊதுபத்திகளை ஏற்றினோம். எங்கள் குழுவைச் சேர்ந்த ஒருவர் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க வேகவேகமாக “நமசிவாய வாழ்க” என்பதில் ஆரம்பித்து சிவபுராணம் முழுவதையும் கூறினார். ஒருவர் சைவத் திருமுறைகளிலிருந்து பல பதிகங்களைச் சொன்னார். ஒருவர் சமஸ்கிருத சிவஸ்துதிகள் சொன்னார். ஒருவர் மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி பாடினார்.

காலையிலிருந்து ஜீப்பில் பயணம் செய்த எங்களின் சுமார் ஒன்பது மணி நேரக் களைப்பும் கயிலாயத்தைக் கண்டதும் பறந்தே போய்விட்டது அனைவரும் பரவச நிலையில் எங்களை மறந்து சிவ சிந்தனையில் மூழ்கினோம்.

அந்த இடத்தில் திபெத்தியர்களின் பிரார்த்தனைக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. அங்கு எங்கள் குழுவைச் சேர்ந்த இருவர் சென்று “சிவ சிவ” என்ற மந்திரமும், நந்தியின் திருவுருவமும் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற பரிவட்டத்தைக் கட்டி விட்டு வந்தார்கள். அங்கு ஏற்கனவே எங்களைப் போன்ற யாத்திரிகர்கள் பல மொழிகளிலும் சிவ மன்திரங்கள் பொறிக்கப்பட்ட கொடிகளைக் கயிற்றில் வரிசையாகக் கட்டியிருந்தார்கள்.

அந்த இடத்தில் நாங்கள் சுமார் ஒரு மணி நேரம் இருந்திருப்போம். அந்த ஒரு மணி நேரமும், “சிவ லோகத்தில் இருந்தோம்” என்றே சொல்ல வேண்டும். எல்லோரும் கைலாசபதியை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய பின்னர் பூரண மனநிறைவோடு அங்கிருந்து புறப்பட்டோம்.

மானசரோவர் முதல் தரிசனம்

வழியில் மானசரோவரின் முதல் தரிசனம் எங்களுக்குக் கிடைத்தது. சுமார் 412 சதுர கி.மீ. பரப்பளவும், சுமார் 500 அடி ஆழமும் கொண்ட அழகிய ஏரி அது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 15,000 அடி உயரத்தில் இது உள்ளது. மானசரோவர் ஒரு சமுத்திரம் போன்றே காட்சி அளிக்கிறது. கடலில் அலைகள் ஒன்றன் பின் ஒன்றாக வருவதைப் போலவே, மானசரோவரிலும் ஒன்றன்பின் ஒன்றாக அலைகள் மிகுந்த வேகத்துடன் வந்து மோதிக் கொண்டிருந்தன. அதன் தண்ணீர் ஸ்படிகம் போன்று மிகவும் தெளிவாக இருக்கிறது. காற்றினால் மானசரோவரில் அலைகள் இல்லாமல் இருந்தால், மிகுந்த ஆழத்தில் நீந்துகின்ற மீன்கள் கூட துல்லியமாக நம் கண்களுக்குத் தெரியும் என்று கூறுகிறார்கள்.

வசிஷ்டர், மரீசி முதலான முனிவர்கள் ஒரு சமயம் கயிலாயத்தில் கடுந்தவம் செய்து வந்தார்கள். அவர்கள் நீராடி சிவபெருமானை வழிபடும் பொருட்டு தங்களுக்கு ஒரு நீர்னிலை வேண்டும் என்று பிரம்ம தேவரிடம் பிரார்த்தனை செய்தார்கள். முனிவர்களின் பிரார்த்தனைக்கிணங்க பிரம்ம தன் மனசிலிருந்து இந்தத் தெய்வீக ஏரியைத் தோற்றுவித்தார். மானசரோவர் நடுவில் சிவபெருமான் சொர்ணலிங்கமாக அந்த முனிவர்களுக்குக் காட்சி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பிரம்மாவின் மனசிலிருந்து தோன்றியதால் இந்த ஏரி மானசரோவர் என்று அழைக்கப்படுகிறது. மானசரோவர் உமாதேவியின் வடிவம். பார்வதி தேவியின் சொரூபம். பார்வதி தேவியே மானசரோவரின் வடிவத்தில் இருக்கிறாள் என்று இந்து மனத நூல்கள் கூறுகின்றன.உலகத்தின் அனைத்து பாகங்களிலும் உள்ள கங்கை முதலான எல்லா புண்ணிய நதிகளும் உண்மையில் மானசரோவரிலிருந்துதான் உற்பத்தியாகின்றன. மானசரோவரின் நீர்தான் பூமிக்கு அடியில் சென்று வெவ்வேறு பெயர்களில் வெவ்வெறு இடங்களில் புனித நதிகளாக வெளிப்படுகிறது. கங்கையின் பிறப்பிடமும் மானசரோவர்தான். மானசரோவரில் கங்கையும் இருக்கிறது. அது பூமிக்கடியில் சென்று கோமுகத்தில் வெளிப்பட்டு இந்தியாவின் பல பாகங்களிலும் பாய்கிறது. இவ்விதம் உலகிலுள்ள அத்தனை புனித நதிகளுக்கும் தாய் மானசரோவர் என்பதால் மானசரோவர் மகா சரோவர் ஆகும் என்று திபெத்தியர்கள் கருதுகிறார்கள்.