கைலாஸ்-மானசரோவர் – 09

எங்கள் ஜீப்புகள் இரவு 8.30 மணிக்கு மானசரோவர் கரையிலுள்ள ஹோரே என்ற இடத்தைச் சென்றடைந்தன. இந்த இடம் மானசரோவர் கரையிலுள்ள ஒரு முக்கிய இடமாகும்.

ஹோரே முகாமில் எங்கள் அறைகளில் சாமான்களை வைத்து விட்டு, வெளியே வந்து கைலாசபதியையும், மூன்றாம் பிறையையும் தரிசித்தோம். நாங்கள் தங்கிய இடம் கயிலைநாதனைத் தரிசிக்கக் கூடிய இடத்தில் அமைந்திருந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. இங்கிருந்து கயிலாயம் சுமார் 30 கி.மீ. தூரம் இருக்கும்.

“விடியற்காலையில் இரண்டறை மணி முதல் 6.30 மணிக்குள் தேவர்கள் மானசரோவரில் வந்து நீராடுகிறார்கள். அவர்கள் நீராடுவது நம் ஸ்தூல கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் அந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் மானசரோவரைத் தரிசிப்பது விசேஷம்” என்பது நம்பிக்கை. எனவே 28.5.98 அன்று விடியற்காலையில் கயிலாயத்தைத் தரிசிக்கலாம் என்ற எண்ணத்துடன் அறையை விட்டு வெளியே வந்தேன். வெளியில் எந்த இடத்தில் நின்று பார்த்தால் கயிலையை நன்றாகத் தரிசிக்க முடியுமோ, அங்கு சென்று கைலாசபதியை தரிசித்தபடியே நின்றேன். நான் அங்கு சென்றபோது எங்கள் குழுவைச் சேர்ந்த ஒருவர் ஏற்கனவே அங்கு இருந்தார்.

அப்போது கயிலை மலையின் உச்சியில் விளக்கு அணைந்து அணைந்து எரிவது போன்று மினுக் மினுக்கென்று ஓர் ஒளி தெரிந்து கொண்டிருந்தது. அந்தக் காட்சி திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நினைவுபடுத்தியது. அப்போது மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சி பாடலிலுள்ள, “அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள் போய் அகன்றது உதயம்” என்ற வரி என் நினைவுக்கு வந்தது. எனவே திருக்கயிலாயத்தைத் தரிசித்தபடியே திருப்பள்ளியெழுச்சி பாடல் முழுவதையும் சொல்லி முடித்தோம். நாங்கள் பாடிக் கொண்டிருக்கும் போது கயிலை மீது கொஞ்சம் கொஞ்சமாக சூறியனின் கதிர்கள் விழ ஆரம்பித்தன. விடியற்காலையில் கைலாஸ் தரிசனமும், திருப்பள்ளியெழுச்சி பாடும் பாக்கியமும் கயிலைநாதனின் பெருங்கருணையால் எங்களுக்குக் கிடைத்தன.

மானசரோவரில் நீராடிய போது, அதன் கடுமையான குளிர்ச்சி பனிக்கட்டிக்குள் நாங்கள் நுழைந்து செல்வது போல் இருந்தது. வாழ்க்கையில் அப்படிப்பட்ட குளிர்ச்சியான நீரில் அதுவ் அரையில் நாங்கள் குளித்ததே இல்லை. காதில் பஞ்சை அடைத்துக் கொண்டுதான் நான் நீராடினேன்.

கயிலாய யாத்திரை மேற்கொள்ளும் அன்பர்கள் மானசரோவர் கரையில்தான் மூர்த்தங்கள் (சாளக்கிராமங்கள்) சேகரிப்பார்கள். இங்குள்ள ஒவ்வொரு மூர்த்தமும் சிவலிங்கமாகவும், மந்திர சக்தி வாய்ந்ததாகவும் கருதப் படுகிறது. திருப்பதி வேங்கடாசலபதி கோயில், மயிலை கபாலீசுவரர் கோயில் போன்ற எண்ணற்ற திருத்தலங்கள் உள்ளன. இவற்றின் விக்கிரகங்கள் செய்து கருவறையில் மூலவர்களாக வியத்திருக்கிறார்கள். இந்த விக்கிரகங்கள் அவற்றை விக்கிரகங்களாக வடிப்பதற்கு முன்பு சாதாரண கற்களாக இருந்தவை. பிறகு அவற்றில் விக்கிரகங்கள் செய்து மந்திர சக்தி செலுத்தப்பட்டு, வழிபாட்டிற்கு உரியவைகளாக ஆக்கப்பட்டன. ஆனால் கயிலாயம் உலகம் தோன்றிய காலத்திலிருந்து இயல்பாகவே மந்திர சக்தியுடன் இருந்து கொண்டிருக்கிறது. எனவே இதற்கு “Mystic Mountain”, மந்திர சக்தி வாய்ந்த மாமலை தெய்வீகம் வாய்ந்த மலை, பூரண ஆன்மீக சக்தி வாய்ந்த மலை என்று பெரியோர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள். மகேந்திர மாமலை என்று கயிலாயத்தை மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடுகிறார். கைலாஸ், மானசரோவர் ஆகிய் இரண்டு இடங்களிலும் உள்ள ஒவ்வொரு கல்லும் மந்திர சக்தியுடன் இருந்து கொண்டிருக்கிறது.

நாங்கள் மானசரோவரில் நீராடி கரையேறியதும் அங்கிருந்த மூர்த்தங்களைச் சேகரிக்க ஆரம்பித்தோம்.

மானசரோவர் பரிக்ரமம்

மானசரோவரை நடந்து பரிக்ரமம் செய்வதற்கு மூன்று நாட்கள் ஆகின்றன. 29.5.98 காலை பத்து மணிக்கு எங்கள் முகாமிலிருந்து நாங்கள் ஜீப்புகளில் புறப்பட்டோம். ஜீப் எங்களை மானசரோவர் கரைக்கு அழைத்துச் சென்றது. அங்கு முன்பே நாங்கள் ஏற்பாடு செய்திருந்தபடி, எங்களை அழைத்துச் செல்வதற்காகக் குதிரைகளுடன் திபெத்தியர்கள் சுமார் முப்பது பேர் காதிருந்தார்கள். நாங்கள் சென்றதும் அந்தக் குதிரைக்காரர்கள் எங்கல் குழுவினர் குதிரைகளில் ஏறுவதற்கு உதவி செய்தார்கள். நாங்கள் குதிரைகளில் அமர்ந்து, மானசரோவர் பரிக்ரமம் (பிரதட்சணம்) என்ற எங்கல் பிரயாணத்தைத் துவக்கினோம். பிரயாணம் ஆரம்பித்த இடம் பள்ளத்திலிருந்து செங்குத்தாக மேல் நோக்கிச் செல்வதாக இருந்தது.

குதிரைக்காரர்கள் எங்களுடன் நடந்து வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். இரண்டு சிறுவர்களும் இருந்தார்கள். மானசரோவர் கரையை ஒட்டியே எங்களைக் குதிரைகளில் திபெத்தியர்கள் அழைத்துச் சென்றார்கள். எனவே இந்தக் குதிரைப் பயணம் முழுவதும் மானசரோவரின் தெய்வீக அழகை எங்களால் தரிசிக்க முடிந்தது. மானசரோவர் நேரில் நிறம் நீலம், பச்சை, மஞ்சள், சில நேரங்களில் பல நிறக் கலவை என்று அடிக்கடி, நிமிடத்திற்கு நிமிடம் மாறியபடியே இருக்கிறது. இது காணக் கண்கொள்ளாத காட்சியாக இருந்தது. மானசரோவரின் நிறம் அவ்வப்போது மாறுவதற்கு அந்தந்த இடங்களிலுள்ள நீரின் ஆழம், சுற்றியுள்ள மலைகள், அவ்வப்போது அங்கு தவழும் மெகங்கள் ஆகியவையும் காரணமாகும்.

மானசரோவர் கரையில் சில பௌத்த மடாலயங்கள் இருக்கின்றன. பௌத்த மடாலயம் “கொம்பா” என்று அழைக்கப்படுகிறது. முதலில் சிரலங் கொம்பா என்ற இடத்தை அடைந்தோம்.  நாங்கள் குதிரைகளிலிருந்து இறங்கிய இடத்தில், திபெத்தியர்கல் தங்களின் வழிபாட்டின் ஓர் அங்கமாக மானசரோவர் கரையில் மணி கற்கள் எனப்படும் பெரிய பெரிய கற்களை அடுக்கி வைத்திருந்ததைப் பார்த்தோம். அவற்றில் கல்வெட்டுகள் போன்று “ஓம் மணிபத்மே ஹூம்” என்ற மந்திரம் திபெத்திய மொழியில் எழுதப்பட்டிருந்தது.

சிரலங் கொம்பாவில் லாமாக்களான புக்க பிட்சுக்கள் சிலர் இருந்தார்கள். அங்கே சுமார் ஐந்தடி உயரமுள்ள புத்தர் சிலை இருந்தது. அந்தச் சிலைக்கு இடப்புறத்தில் திபெத்தியர்கள் கோப தெய்வம் என்று கூறப்படும் ஒரு தெய்வத்தின் உருவம் வரையப்பட்டிருந்தது. அதன் தோற்றம் தமிழ்நாட்டில் கிராமங்களில் வணங்கப்படும் காளியின் உருவம் போன்று உக்கிரமாக இருந்தது. இங்கே பல இடங்களில் பல வண்ணங்களில் புத்தரின் திருவுருவங்கல் கொண்ட துணிகள் தொங்க விடப்பட்டிருந்தன.

புத்தர் சிலையின் இடப் பக்கத்தில் புறாக் கூண்டுகள் அல்லது தபால் ஆபீசில் தபால்களை பிரிக்கப் பயன்படும் சிறிய அலமாரிகள் போன்ற பல அலமாரிகள் இருந்தன. அவற்றில் பௌத்த லாமாக்கள் தங்கள் புனித நூல்களை நீளமான சுவடிகளில் எழுதி நூலால் சுற்றி வைத்திருந்தார்கள்.

இங்கு புத்த மடாலயங்களில் பெரிய நெய் விளக்கு வாங்கி, அதை புத்தர் சிலையின் முன்னால் பிரார்த்தனை செய்து ஏற்றி வைப்பது முக்கிய வழிபாடாகும். நாங்களும் நெய் விளக்குகள் வாங்கி, புத்த பகவானிடம் பிரார்த்தனை செய்து அவற்றை அவர் முன்னால் ஏற்றி வைத்ட்ஹோம். இந்த நெய் விளக்கில் இருந்த நெய் யாக் எனப்படும் காட்டெருமைகளின் பாலிலிருந்து எடுத்த நெய்யாகும். புத்தர் சிலை இருந்த இடப் பக்கத்தில் இரண்டு லாமாக்கள் தங்களுடைய புனித நூலை பாராயணம் செய்து கொண்டிருந்தார்கள்.

கன்னியாகுமரி கடற்கரையில் ஆங்காங்கெ பல நிறங்களில் மணல்கள் இருப்பது போலவே மானசரோவர் கரையில் ஆங்காங்கே தங்கம், வெல்ளி, சிவப்பு, மஞ்சள், பச்சை, கருப்பு போன்ற பல நிறங்களில், பல நிறக் கலவைகளில் மணல்கள் காணப்படுகின்ரன. அங்கிருந்த திபெத்திய மூதாட்டி ஒருவரிடம் எங்களில் சிலர் பணம் கொடுத்து மானசரோவரின் கலர் மணல்களை வாங்கினார்கள். இவற்ரை யாத்திரிகர்கள் மானசரோவரின் பிரசாதமாக எடுத்து வருவது வழக்கம்.

மீண்டும் எங்கள் மானசரோவர் பரிக்ரமம் தொடர்ந்தது. பகல் சுமார் 1.30 மணிக்கு நாங்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சமயத்தில், குதிரைக்காரர்கள் தங்கள் பகலுணவை சமைக்க ஆரம்பித்தார்கள். இங்கு ஓய்வு என்று மானசரோவர் கரையிலிருந்த புல்வெளியில் நாங்கள் படுத்திருந்ததைக் குறிப்பிடுகிறேன். இதை ஒரு வகையில் மானசரோவர் கரையில் எங்களுக்குக் கிடைத்த சன் பாத் என்றுதான் சொல்ல வேண்டும்.

மீண்டும் எங்கள் பயணம் தொடர்ந்தது. நான் அமர்ந்திருந்த குதிரையின் கயிற்றை ஒரு பெண் பிடித்துக் கொண்டு முன்னால் சென்றாள். அந்தப் பெண் வழி முழுவதும் “ஓம் ஓம்” என்பது போன்ற ஒலியைக் கொண்ட ஏதோ ஒரு மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே சென்றாள். அது அனேகமாக ஓம் மணிபத்மே ஹூம் என்ற மந்திரமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது.

மானசரோவர் கரையில் நாங்கள் சென்ற சில இடங்களில் பனி உறைந்து கனமான பஆறை போன்று இருந்தது. சில இடங்களில் பனி உறைந்து கெட்டியான தரை போலவே இருந்தது. அத்தகைய சுமார் இரண்டடி உயரமுள்ள பத்து, பதினைந்து பனித்தரைகளின் மீது எங்கள் குதிரைகள் சென்றன.

எங்களின் இந்தப் பயணத்தின் போது இடையில் மானசரோவரில் சென்று கலக்கும் பல சிறிய ஓடைகளும், சில சிற்றாறுகளும் குறுக்கிட்டன. ஸிரிய ஓடைகளை குதிரைகள் சுலபமாகத் தாண்டிச் சென்றன. சில சிற்றாறுகளைக் குதிரைகள் சற்ரு சிரமப்பட்டு கடக்க வேண்டியதாயிற்று. ஆறுகளைக் கடக்கும் போது எங்கள் அனைவரையும் குதிரைக்காரர்கள் குதிரைகளிலிருந்து கீழே இறக்கிவிட்டார்கள்; பின்னர் திறமையும் வலிமையும் வாய்ந்த குதிரைக்காரன் ஒருவர் ஒரு குதிரை மீது தான் ஏறிக் கொண்டு, எங்களில் ஒருவரை வேறொரு குதிரையில் ஏற்றிக் கொண்டு, அந்தக் குதிரையின் கயிற்றைப் பிடித்துக் கொண்டு ஆற்றைக் கடந்து சென்றான். இப்படி நாங்கள் ஒவ்வொருவராக ஆறுகளைக் கடந்தோம்.

அவ்விதம் ஒரு சமயம் குதிரைக்காரர் ஒருவர் ஓர் ஆற்றைக் கடந்து சென்ற போது, அவர் காலில் அனீந்திருந்த ஷூவும், சாக்ஸும் ஆற்று தண்ணீரில் நனைந்து போனதைக் கவனித்தேன். எனவே நான் அணிந்திருந்த  அமர்ந்திருந்த குதிரை ஆற்றைக் கடந்த போது, என்னுடைய ஷூவும் சாக்ஸும் தண்ணீரில் நனையாமல் இருப்பதற்காகக் குதிரையின் முதுகின் மீதே என் கால்களை வைத்துக் கொண்டேன். அதனால் என்னுடைய ஷூவும் சாக்ஸும் ஆற்று நீரில் நனையாமல் தப்பின. இந்த ஆற்றைக் கடந்த போது எங்கள் யாத்திரிகர்கள் சிலருடைய ஷூவும் சாக்ஸும் ஆற்று நீரில் நனைந்து விட்டன. அவர்கள் பிறகு அங்கு நிலவிய கடுமையான குளிரில் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

மீண்டும் ஓய்வுக்காக மாலை ஐந்து மணிக்கு ஓர் இடத்தில் எங்கள் குதிரைகள் நிறுத்தப்பட்டன. அப்போது குளிர்காற்று ஒரு குட்டிப் புயல் காற்று என்று சொல்லத்தக்க வகையில் கடுமையாக வீசிக் கொண்டிருந்தது. அதனால் மானசரோவரில் கடலில் எழுவது போல் ஒன்றன் பின் ஒன்றாக பெரும் அலைகள் எழுந்து மோதிக் கொண்டிருந்தன.

இங்கு மானசரோவரின் மறுகரையில் நீண்ட தொலைவில் தெரிந்த கயிலாயத்தையும் தரிசித்தோம்.

அன்றைய தினம் மாலை நான்கு மணியிலிருந்தே குளிர் கடுமையாக இருந்தது. மூன்று கம்பளிக் குல்லாய்களை நான் அணிந்திருந்த பொதிலும் குளிர் காற்று என் காதைப் பலமாக வந்து தாக்கியது. எங்களில் பலரும் அநேகமாக எல்லோருமே இந்தக் குளிருக்கு பயந்தே போய்விட்டோம். கடும் குளிரின் போது தலையில் கம்பளித் தொப்பிகளை அணியும் ம்ஜுன்னர் காதுகளில் இயர் ப்ளக்கை வைத்துக் கொள்ளவோ, அல்லது பஞ்சு வைத்துக்கொள்லவோ செய்வது குளிரிலிருந்து நம்மை வெகுவாக பாதுகாக்கிறது.  எப்படியோ இறைவனின் நாமத்தை ஜபம் செய்தபடியும், பிரார்த்தனை செய்த படியும் ஒரு வழியாகக் கடுமையான குளிரில் குதிரைப் பயணம் செய்து, அன்றிரவு தங்க வேண்டிய சுகு கொம்பா என்ற இடத்தை சென்றடைந்தோம்.

சுகு கொம்பா என்ற இந்த இடம் மாந்தாதா மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அன்றைய தினம் நாங்கள் சுமார் பத்தரை மணி நெரம் பிரயாணம் செய்திருந்தோம். இந்தப் பத்தரை மணி நெரத்தில் நாங்கள் கடந்தது 32 கி.மீ தூரம் ஆகும்.

குதிரைகளிலிருந்து நாங்கள் இறங்கினோமோ இல்லையோ, குளிருக்குப் பயந்து விரைந்து ஓடிச் சென்று, அருகிலிருந்த விருந்தினர் விடுதியின் அறைகளில் நுழைந்து கொண்டோம். அந்த அறையில் சுமார் ஐந்தடி நீளம், ஐந்தடி அகலம் கொண்ட இரண்டு கண்ணாடி ஜன்னல்கள் இருந்தன. அந்த ஜன்னல்கள் திறக்க முடியாதபடி சுவற்றில் பொறுத்தப்பட்டிருந்தன. இந்தக் கண்ணாடி ஒன்றின் வழியாக மானசரோவரை சுமார் அரை மணி நேரம் பக்தியோடு தரிசித்தபடியே இருந்தோம். அவ்விதம் தரிசிப்பதற்கு ஏற்ப அப்போது சூரிய வெளிச்சமும் நன்றாக இருந்தது. இங்கு இரவு சீன நேரப்படி சுமார் பத்து மணிக்குத்தான் சூரியன் அஸ்தமிக்கிறது. அன்றிரவு பயணக் களைப்பும், கடுமையான குளிரும் சேர்ந்து எங்களால் அறையை விட்டு வெளியே வரவே முடியவில்லை.“விநாயகரும், முருகரும் அவதரித்த மாந்தாதா மலையின் அடிவாரத்தில் இரண்டு நாள் தங்கப் போகிறோம்!”என்ற எண்ணம் என் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.