30.5.98 இன்று எங்கள் குழுவைச் சேர்ந்த சிலருக்கு உடல் நலம் சரியில்லை. எனவே அவர்களால் மானசரோவருக்குச் சென்று நீராட முடியவில்லை. மற்றவர்கள் நீராடினார்கள்.
நாங்கள் தங்கிய விருந்தினர் விடுதிக்கு மிகவும் அருகில் மானசரோவர் கரையில் ஒரு புத்தர் கோயில் இருக்கிறது. அதன் அருகில் பூஜை, ஹோமம் முதலியன செய்வதற்கு ஏற்ற வகையில் ஒரு பெரிய மேடை இருக்கிறது. அங்கு பகல் ஒரு மணிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணருக்குப் பூஜையும், ஹோமமும் செய்தோம்.
ஹோமத்தின்போது அன்னை காளி, கைலாசபதி, காசி விசுவநாதர், சிவ பார்வதி பித்தளை சிலை, சிறிய மூன்று விநாயகர் சிலைகள், வெள்ளி வேல், இரண்டு சிவலிங்கங்களுடன் ஸ்ரீ ராமகிருஷ்ணர், ஸ்ரீ சாரதா தேவியார் மற்றும் சுவாமி விவேகானந்தர் படங்கள் வைத்திருந்தோம். உலர்ந்த பழங்கள், கற்கண்டு, வெள்ளியால் செய்த 108 வில்வதளங்கள், விபூதி, குங்குமம், வேஷ்டி, புடவை, ரவிக்கை துணி, வளையல்கள் ஆகியவற்றை இறைவனுக்கும், இறவிக்கும் அர்ப்பித்தோம். சிவபெருமானுக்குப் பிட்டு நைவேத்தியம் செய்வது சிறப்பு என்பதால், அன்றைய தினம் ஹோ௳த்தின் போது அரிசி மாவால் பிட்டு தயார் செய்து நைவேத்தியம் செய்தோம். அந்த ஹோமத்தின் முடிவில் “த்ரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்….” என்ற ம்ருத்யுஞ்சய மந்திரத்தை அனைவரும் சொல்ல, பூர்ணாஹுதியுடன் ஓமம் திவ்யமாக நிறைவு பெற்றது. ஹோமத்தில் எஞ்சிய புனிதத் சாம்பல் முழுவதையும் பிரசாதமாகச் சேகரித்துக் கொண்டேன்.
நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலிருந்த புத்தர் கோயிலில், சுமார் நான்கடி உயரம் கொண்ட மூன்று புத்தர் சிலைகள் இருந்தன. அந்தச் சிலைகளைப் பற்றி விசாரித்த போது, அங்கிருந்த பௌத்தத் துறவி ஒருவர், “இங்குள்ள மூன்று புத்தர் சிலைகளில் முதல் புத்தர் சிலை, இந்த உலகில் வாழ்ந்த சித்தார்த்த புத்தரைக் குறிப்பிடுகிறது. இரண்டாவது புத்தர் சிலை, சூட்சும உலகில் வாழும் புத்தரைக் குறிப்பிடுகிறது. மூன்றாவது புத்தர் சிலை, இனி எதிர்காலத்தில் வர இருக்கும் புத்தரைக் குறிப்பிடுகிறது” என்று விளக்கம் கூறினார். இந்த புத்தர் கோயிலில் பகவான் புத்தரின் பாதச் சுவடுகளை வழிபாட்டிற்கு வைத்திருக்கிறார்கள்.
அந்தக் கோயிலில் பல நிறங்களில் புத்தரின் அழகிய திருவுருவங்களைக் கொண்ட திரைச் சீலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. அங்கு தொண்கிக் கொண்டிருந்த திரைச் சீலைகள் சிலவற்ரில் காளி போன்ற உக்கிர மூர்த்திகளின் வடிவங்களும், கோயிலுக்கு நுழையும் இடத்தில் இரண்டு பக்கங்களிலும் உள்ள சுவர்களில் பௌத்த பெண் தெய்வங்களின் உருவங்களும் வரையப்பட்டிருந்தன. கோயிலுக்கு பௌத்த மத நூல்கள், பாலி, சமஸ்கிருதம், திபெத் ஆகிய மொழிகளில் சிறு சிறு அலமாரிகளில் வைக்கப்பட்டிருந்தன.
அன்றிரவு அந்த புத்தர் கோயிலிலேயெ எங்கள் பிரார்த்தனைக் கூட்டத்தை வைத்துக் கொண்டோம். அப்போது அங்கு பௌத்த துறவிகள் சிலர் இருந்தார்கள். அவர்கள் நாங்கல் எங்கள் பிரார்த்தனைக் கூட்டத்தைத் துவக்கிய போது, தங்களின் இசைக்கருவிகளை மங்கள இசையாக வாசித்தனர். அவ்விதம் தங்கள் கோயிலில் புத்தரின் வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்படும் அந்த இசைக்கருவிகளை எங்களின் பிரார்த்தனைக் கூட்டத்தின் பொருட்டு புத்த பிக்குகள் வாசித்தது புத்தரே எங்களை ஆசீர்வதிப்பது போன்ற மனநிறைவை எங்களுக்குத் தந்தது. எங்கள் பிரார்த்தனைக் கூட்டம் நிறைவு பெற்ற போதும், அதன் அடையாளமாக அந்த பிரார்த்தனைக் கூட்டத்தின் ஆரம்பத்தில் வாசித்த அதே பௌத்த இசைக் கருவிகளை புத்த பிக்குகள் வாசித்தார்கள். அது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
இன்று 31.5.98 ஞாயிற்றுக்கிழமை. காலை சுமார் பத்து மணிக்கு சுகு கொம்பா முகாமிலிருந்து ஜெய்தி என்ற இடத்திற்குப் புறப்பட்டோம். வழியில் பனி சூழ்ந்த பல மலைகளைப் பார்த்தபடியே சென்றோம்.
மாந்தாதா மலை எவ்வளவு நீளமுடையது என்று ஓரளவு இந்தப் பிரயாணத்தின் போது எங்களால் தெரிந்து கொள்ள முடிந்தது. எங்கள் ஜீப் செல்லச் செல்ல மாந்தாதா மலையும் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தது.
மாந்தாதா மலை ஐந்து சிகரங்களைக் கொண்டது. இது கடல் மட்டத்திலிருந்து 25,355 அடி உயரம் உடையது. திபெத்தியர்கள் இந்த மலையை மழைக் கடவுளாகக் கருதி வழிபடுகிறார்கள். அவர்கள் இந்த மலையை “மெமோ நாம் கியால்” அதாவது வெற்ரித் திருமகன் என்ற பெயரால் அழைக்கிறார்கள்.
ராக்ஷஸ்தால் (அசுரர்கள் ஏரி)
இந்திய அரசின் மூலம் டில்லி வழியாக கைலாஸ் யாத்திரை செல்பவர்கல் செல்லும் வழியில் ராக்ஷஸ்தால் என்ற இடம் வருகிறது. ராக்ஷஸ்தால் என்ற சொல்லுக்கு அசுரர்கள் ஏரி என்பது பொருள். காட்மாண்டு வழியாகக் கைலாஸ் யாத்திரை செல்பவர்கள் செல்லும் வழியில் ராக்ஷஸ்தால் வராது. ஆனால் அவ்வளவு தூரம் போய்விட்டு ராக்ஷஸ்தால் பார்க்காமல் வரக்கூடாது என்று முன் கூட்டியே நாங்கள் திட்டமிட்டிருந்தோம். எனவே ஜெய்தி முகாமைச் சென்றடைவதற்கு முன்னால் ராக்ஷஸ்தால் நோக்கி எங்கள் ஜீப்புகள் சென்றன.
மானசரோவருக்கும் ராக்ஷஸ்தாலுக்கும் இடையில் குர்லா பாஸ் என்ற ஓர் இடம் வருகிறது. இது சிறிய சிறிய குன்றுகளைக் கொண்ட மலைத் தொடராகும். மானசரோவருக்கும், ராக்ஷஸ்தாலுக்கும் இடையிலுள்ள தூரம் மூன்று கிலோமீட்டர் முதல் எட்டு கிலோமீட்டர் ஆகும்.
நாங்கள் மானசரோவரையும், ராகஸ்தாலையும் ஒரே சமயத்தில் பார்ப்பதற்கு வசதியாக இரண்டு ஏரிகளுக்கும் நடுவில் எங்கள் ஜீப்புகளை நிறுத்தினோம். அங்கிருந்து மானசரோவரை இந்தப் பக்கமும், அந்தப் பக்கம் ராக்ஷஸ்தாலையும் பார்த்தோம். ராக்ஷஸ்தால் அலைகளே ய்ல்லாமல் அமைதியாக இருந்தது. ராக்ஷஸ்தால் ஏரியின் சுற்றளவு சுமார் 125 கி.மீ. ஆகும். ராக்ஷஸ்தாலிலிருந்து வடக்கு திசையில் சுமார் 40 கி.மீ. தூரத்தில் கயிலாயம் இருக்கிறது. இந்த ஏரி மானசரோவருக்கு மேற்கில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. காற்றில்லாத நாட்களில் இந்த ஏரியில் கயிலாயத்தின் பிரதிபிம்பத்தை மிக நன்றாக பார்க்க முடியும் என்று கேள்விப்பட்டேன்.
ராக்ஷஸ்தால் ஏரிக்கரையில் எங்கள் ஜீப் சென்று கொண்டிருந்த போதே எங்களுக்குக் கைலாஸ் தரிசனம் நன்றாகக் கிடைத்தது. அங்கு சிவபெருமான் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, கைலாஸ் மானசரோவர் தரிசனம் நன்றாக ஆயிற்றா? என்று எங்களைக் கேட்பது போல் கயிலாயத்தின் காட்சி தெரிந்தது.
குர்லா பாஸ் அருகில் ராக்ஷஸ்தாலின் முடிவிடம் அல்லது ஆரம்பிக்கும் இடம் இருக்கிறது. நாங்கள் அங்கு சென்றபோது அந்தப் பகுதியைச் சேர்ந்த ராக்ஷஸ்தால் நீரின் பெரும்பகுதி பனி காரணமாக உறைந்து போயிருந்தது. இவ்விதம் ராக்ஷஸ்தாலின் முக்கால் பாகம் பனியால் உறைந்திருந்ததைப் பார்த்தோம்.
ராக்ஷஸ்தாலின் நடுவில் மிகவும் நெருக்கமாக மூன்று தீவுகள் போன்ற திட்டுகள் அமைந்துள்ளன. அவற்றைத் தூரத்திலிருந்து பார்த்தபோது நான் ஒரு தீவு என்றே நினைத்தேன். ராகஸ்தால் நடுவில் தீவு போல் அமைந்திருக்கும் இந்த இடத்தில் ராவணன் தவம் செய்ததாக ஐதீகம். எனவே இந்த இடம் ராவணன் திட்டு என்று அழைக்கப்படுகிறது. ராக்ஷஸ்தாலுக்கு ராவணன் ஏரி என்றும் ஒரு பெயர் உண்டு.
ராக்ஷஸ்தாள் என்பது அசுரர்கள் தவம் செய்த இடம். அதில் மக்கல் நீராடும்வ் அழக்கமில்லை. இங்கு தங்கள் கைகளை வெட்டிப் போட்டுக் கொள்ளுத, தங்கள் உடலைப் பல விதங்களிலும் வருத்திக் கொல்ளுதல் போன்ற கொடிய தவங்களை அசுரர்கள் செய்திருக்கிறார்கள். மாமிசம் தின்னும் அசுரர்கள் இன்னும் இந்த ஏரியின் அடியில் இருக்கிறார்கள். எனவே பயபக்தியோடு ஒரு முறை பார்த்து விட்டு உடனடியாக அங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்று திபெத்தியர்களின் பழமையான நூல்கள் கூறுகின்றன.
கைலாஸ் செல்லும் யாத்திரிகர்கள் ராக்ஷஸ்தாலில் ணீராடும் வழக்கம் கிடையாது. யாத்திரிகர்கள் பொதுவாக இந்த ஏரியைத் தூரத்திலிருந்துதான் பார்க்கிறார்கள். எவரும் அதன் அருகில் செல்வதில்லை. ராக்ஷஸ்தாலின் நீரைப் பரிசோதித்த போது ஆராய்ச்சி முடிவுகளும் இதை ஆமோதிப்பது போலவே உள்ளன. இந்தத் தண்ணீர் உப்பு நீராக இருப்பதுடன் குடிப்பதாற்கு ஏற்றதல்ல என்பது கண்டுபிடிக்கப் பட்டது. எங்கள் யாத்திரைக் குழுவில் வந்தவர்கள் அனைவருமே ராக்ஷஸ்தால் அருகில் சென்று அதைப் பார்த்தோம்.
ராகஸ்தாலில் தாமரை, அல்லி மலர்கள் போன்று பனித்துகள்கள் பனிமலர்கள் போன்று காணப்பட்டன. இது போன்ற பனிமலர்களை வாழ்க்கையில் நாங்கள் பார்த்தது இதுவே முதல் தடவையாகும். பல வகையான மலர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் மலர்கள் போன்று பல வடிவங்களில் அமைந்த பனித்துகள்களை நாம் பார்த்ததில்லை அல்லவா?
ராக்ஷஸ்தால் வழியாக எங்கள் ஜீப்புகள் ஜெய்தி என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. பகல் சுமார் இரண்டு மணிக்கு எங்கள் ஜீப்புகள் ஜெய்தி முகாமைச் சென்றடைந்தன. நாங்கள் அங்கு சென்று சேர்வதற்கு முன்பாகவே, ஈகோ ட்ரெக்கைச் சேர்ந்த சமையல்காரர்கள் அங்கு சென்று சமையல் செய்து முடித்திருந்தார்கள். ஆதலால் நாங்கல் எங்கள் அறைகளுக்குள் சென்றதுமே, அவர்கள் எங்களுக்குப் பகலுணவு வழங்கினார்கள்.
அன்று மாலை எங்கள் குழுவினர் அனைவரும் ஜெய்தியிலுள்ள மானசரொவர் கரைக்குச் சென்றோம். அங்கு எங்கள் குழுவினர் சிலர் மானசரோவரில் நீராடினார்கள். நான் மானசரோவர் கரையில் நிறைய மூர்த்தங்கள் சேகரித்தேன்.
1.6.98 திங்கட்கிழமை காலை சுமார் 9.30 மணிக்கு ஜெய்தி முகாமிலிருந்து சூ கொம்பாவிற்குப் புறப்பட்டோம். சுமார் ஒரு மணி நேரம் ஜீப்பில் பிரயாணம் செய்த பின்பு, காலை 10.30 மணிக்கு சூ கொம்பா விடுதியைச் சென்றடைந்தோம். நாங்கள் சென்று தங்கிய விடுதியில் இரண்டு பெரிய அறைகள் இருந்தன. அந்த அறையின் உட்பகுதிகள் திபெத்திய பாணியில் அமைக்கப்பட்டிருந்தன.
மானசரோவர் பரிக்ரமம் வரும்போது சுகு, ஜெய்தி ஆகிய இரண்டு இடங்களிலும் ஓர் அரிய காட்சியை நாம் காண முடியும். அதாவது, இந்த இடங்களில் கயிலாய மலையின் பிரதிபிம்பத்தை மானசரோவரில் காண முடியும் இந்த பிரதிபிம்பம் சிவமும் சக்தியும் சேர்ந்த அர்த்தனாரீசுவரர் வடிவ்ம என்ற கருத்தில் கௌரி சங்கர் என்று அழைக்கப்படுகிறது. ஜெய்தி முகாமை நெருங்கும் இடத்தில் மானசரோவர் காற்றில் அசையாமல் இருந்தால், அங்கு கயிலாயத்தின் பிரதிபிம்பம் மிகவும் நன்ராகத் தெரியும். இது ஓர் அற்புதக் காட்சியாகும்.
அன்று முழுவதும் மானசரோவர் கரையிலுள்ள இந்த சூ கொம்பா விடுதியில் தங்கி விட்டு மறுநால் அங்கிருந்து கயிலாயத்தின் அடிவாரமாகிய “தார்ச்சன்” என்ற இடத்திற்குச் செல்வது என்றுதான் திட்டமிட்டு அங்கு சென்றிருந்தோம். ஆனால் நாங்கள் தங்கிய அறையில் இருந்த மதுபான துர்நாற்றம் காரணமாக, இன்றைய தினமெ இங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. இந்த எண்ணத்தில் நான் இருந்த போது “அங்கு டாய்லெட் வசதி கிடையாது. டாய்லெட் செல்ல வேண்டுமானால் நீண்ட தூரம் செல்ல வெண்டும். இங்கு பெரிய பெரிய நாய்களின் நடமாட்டம் அதிகம். அதிலும் அந்த நாய்கள் இரவில் வெளியில் செல்பவர்களைக் கடித்துக் குதறிவிடும்” என்று அந்த விடுதியின் அருகில் இருப்பவர்கள் கூறினார்கள்.
எனவே இதையெல்லாம் யோசித்துப் பார்த்து நான் எங்கள் வழிகாட்டியிடம், “சகிக்க முடியாத மதுபான துர்நாற்றம் அடிக்கும் இந்த அறையில் ஒருநாள் முழுவதும் னாம் தங்குவது என்பது அறவே இயலாத காரியம். இரவில் சிறுநீர் கழிக்க வெளியே சென்றால் கூட நாய்கள் கடித்துக் குதறிவிடும் ஆபத்து இருக்கிறது. ஆதலால் இன்றைய தினம் நாம் ஹோமம் செய்து முடித்தவுடனேயே தார்ச்சன் முகாமிற்கு சென்று தங்குவதற்கு உரிய ஏற்பாடு செய்யுங்கள்” என்று வற்புறுத்திக் கூறினேன். அதனால் அவர் உடனடியாக ஒரு ஜீப்பில் தார்ச்சனுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
சூ கொம்பாவில் நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலேயே வெந்நீர் ஊர்ருகள் இருக்கின்றன. இந்த வெந்நீர் ஊற்றுகள் தனிப்பட்ட ஒருவருக்குச் சொந்தமாக இருக்கின்றன. அவர் இந்த வெந்நீர் ஊற்றைக் குழாய்களுடன் இணைத்து வைத்திருக்கிறார். அதனால் இங்கு யாத்திரிகர்கள் குழாயைத் திறந்து நீராடுவது போன்ற வசதி இருக்கிறது. இந்த வெந்நீர் ஊற்றில் குளிப்பதார்கு நபர் ஒருவருக்கு ஏழு யுவான் செலுத்த வேண்டும். அங்கு எங்கள் குழுவைச் சேர்ந்த எல்லோருமே நீராடினோம். மூன்று, நான்கு பேர் தங்கள் துணிகலையும் துவைத்தார்கள். ஆனால் இந்த வெந்நீர் ஊற்றுக் குழாயில் வரும் வெந்நீர் கந்தகம் நிறைந்தது. அதனால் அதில் அதிக நேரம் நீராடுவது உடம்புக்கு நல்லதல்ல.
கந்தகம் உள்ள இந்த வெந்நீர் ஊற்றுகல் உண்மையில் மானசரோவரின் ஒரு பகுதிதான். ஆனால் இது ஒரு சிறிய ஓடை போன்று மானசரோவருடன் இணைந்திருக்கிறது. எனவே பார்ப்பதற்கு அதுவே ஒரு தனியான சிறிய குளம் போன்று காணப்படுகிறது. அந்தக் குளத்தின் மீது “உமா, உமா” என்று கூவியபடி சில பறவைகள் பறந்து சென்று கொண்டிருந்தன.
சூ கொம்பா என்று அழைக்கப்படும் இந்த இடம் மானசரோவர் கரையிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடமாகும். காரணம், சூ கொம்பா பகுதியிலுள்ள மானசரோவரில் பகவான் புத்தரின் தாய் மாயாதேவி நீராடி, “எனக்கு நல்ல ஒரு மகன் பிறக்க வேண்டும்” என்று பிரார்த்தனை செய்தாள். அதனால் பகவான் புத்தர் மாயாதேவிக்கு மகனாகப் பிறந்தார்” என்று பௌத்த நூல்கள் குறிப்பிடுகின்றன. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சூ கொம்பா மானசரோவர் கரையில் நாங்கள் பார்வதி தேவியைக் குறித்து ஹோமம் செய்தோம்.