நாங்கள் தங்கிய விடுதிக்கு அருகில் ஹோமம் செய்வதற்கு ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தோம். இந்த இடம் கைலாசபதியே ஹோமத்தை நேரில் பார்ப்பது போன்று அமைந்திருந்தது. ஹோமத்தின் முடிவில் கௌரி அஷ்டோத்தரத்திலுள்ள பெயர்களை “நமோ” என்பதற்கு பதிலாக “ஸ்வாஹா” என்று சொல்லி ஆஹுதி அர்ப்பனித்தோம்.
அங்கு நாங்கள் ஹோமம் செய்ய ஆரம்பித்ததிலிருந்து ஹோமம் நிறைவு பெறும் வரையில் காற்று பயங்கரமாக அடித்துக் கொண்டிருந்தது என்றாலும் ஹோமகுண்டம் காற்றினால் அதிகம் பாதிக்கப்படாமல் இருக்கும் பொருட்டு சிரமப்பட்டு பெரிய கார்டு போர்டு, தகர டிரம், பெரிய கற்கள், பெரிய பலகை போன்றவற்ரைத் தடுப்புபோல் வைத்து ஒருவாறு ஹோமத்தை இறைவன் திருவருளால் செய்து முடித்தோம்.
ஹோமம் முடிந்ததும் ஹோமத்தின்போது நைவேத்தியம் செய்யப்பட்ட பெரீச்சம்பழம், கற்கண்டு போன்றவற்ரை அங்கிருந்தவர்களுக்கு பிரசாதமாக விநியோகித்தோம். அப்போது அங்கே எங்கள் குழுவினரைத் தவிரவும் திபெத்தியர்கள் பலர் இருந்தனர். அவர்களுக்கும் தாராளமாகப் பிரசாதம் வழங்கும் வாய்ப்பு கயிலைநாதனின் கிருபையால் எங்களுக்குக் கிடைத்தது. மானசரோவர் கரையில் வாழும் இந்த திபெத்தியர்கள்தான் எவ்வளவு பாக்கியசாலிகள்! அவர்களை தேவர்கள் என்றே சொல்ல வேண்டும். ஹோமம் நடந்த இடத்தில் இருந்த திபெத்திய பெண்களுக்குப் பூஜையின் போது தேவிக்கு அர்ப்பிக்கப்பட்ட வளையல்கள், குங்குமம் மற்றும், பரிசுப் பொருட்களாக வேலைபாட்டுடன் கூடிய ஹேர் க்ளிப்ஸ், ஸ்டிக்கர் பொட்டுகள் ஆகியவற்றைக் கொடுத்தோம். வளையல்களைப் பெற்றுக் கொண்ட திபெத்திய சிறுமிகள் கைகளில் அவற்ரை அணிந்து கொண்டும், நெர்றியில் பொட்டு வைத்துக் கொண்டும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்களிடம் சென்று காட்டி சந்தோஷப்பட்டார்கள்.
தார்ச்சன்: கயிலாயத்தின் அடிவாரம்
தார்ச்சன் என்ற இடம் கயிலாயத்தின் அடிவாரம் ஆகும். ஜீப்புகள் தார்ச்சன் வரையில்தான் செல்லும். இங்கிருந்துதான் கைலாஸ் பரிக்ரமம் ஆரம்பிக்கிறது. இங்கிருந்து கயிலாயத்தைத் தெளிவாகத் தரிசிக்க முடியும். தார்ச்சன் என்ற திபெத்திய சொல்லுக்கு பிரார்த்தனை, “பிரார்த்தனை கொடி” என்று பொருள்.
சூ கொம்பாவிலிருந்து அன்று மாலை 5.30 மணிக்கு நாங்கள் தார்ச்சனுக்குப் புறப்பட்டோம். வழி முழுவதும் எங்களுக்குக் கைலாஸ் தரிசனம் கிடைத்தபடியே இருந்தது. வழியில் ஓர் இடத்தில் கைலாஸ்பதிக்கு நெற்றி, கண்கள், மூக்கு, வாய், கழுத்தில் ருத்திராட்ச மாலை போன்றவை இருப்பது போன்று தோன்றியது. இத்தகைய ஒரு காட்சியை எங்கள் ஜீப்பில் வந்த நாங்கள் அனைவரும் பார்த்தோம்.
தார்ச்சனை நாங்கள் நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் இரண்டு, மூன்று சிற்றாறுகளை நாங்கள் கடந்து சென்றோம். அவை சிற்றாறுகள்தான் என்றாலும், அந்த ஆறுகளில் நீரின் வேகம் மிகவும் அதிகமாகவெ இருந்தது. இந்த ஆறுகள் கயிலாயத்திலிருந்து வருபவை.
நாங்கள் தார்ச்சன் விடுதிக்கு மாலை 6.30 மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். எங்கள் விடுதியின் திறந்த வெளியிலிருந்து பார்த்தாலே கைலாசபதியை நன்றாக தரிசிக்கும் வகையில் எங்களுக்கு விடுதி அமைந்திருந்தது.
எங்கள் குழுவில் ஒருவருக்கு உடல் நலம் சரியில்லை. அவர் வாந்தி எடுத்தார். அவரை தார்ச்சனிலிருந்த சீன மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். மருத்துவமனையிலிருந்த சீன டாக்டர் நோயாளியின் உடல்நலக்குறைவு பற்றிய காரணங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். பிறகு அவர் ஒரு மருந்தைக் கொடுத்து, “முதலில் இவருக்கு இந்த மருந்தைக் கொடுங்கள். இன்றிரவு நானே உங்கள் விடுதிக்கு வந்து இவருக்கு ட்ரிப்ஸ் கொடுக்கிறேன்” என்றார். அதன்படி அவர் இரவு எங்கள் முகாமிற்கு வந்து நோயாளிக்கு அரை பாட்டில் டிரிப்ஸ் கொடுத்தார். டிரிப்ஸ் கொடுத்து முடித்தவுடன் அவர், “நாளைக் காலையில் வந்து பார்க்கிறேன்” என்று கூறி விட்டுச் சென்றார். டாக்டர் சென்ற ஐந்து நிமிடத்திற்கெல்லாம் நோயாளி மீண்டும் வாந்தி எடுத்தார்.
2.6.98 செவ்வாய்க்கிழமை காலையில் எங்கள் முகாமிற்குச் சீன டாக்டர் வந்தார். அவர் மீண்டும் நோயாளிக்கு அரைபாட்டில் டிரிப்ஸ் கொடுத்தார். பிறகு அவர், “நீங்கள் நோயாளியை Low altitude”க்கு க்ட்டாயம் அழைத்துச் செல்ல வேண்டும்” என்று திட்டவட்டமாகக் கூறினார். தார்ச்சன் கடல் மட்டத்திலிருந்து 17,000 அடி உயரத்தில் இருக்கிறது. அந்த உயரம் நோயாளிக்கு ஏற்றதல்ல என்பதால், கடல் மட்டத்திலிருந்து 12,000 அடி உயரத்தில் இருக்கும் தக்கள்கோட் என்ற இடத்திலுள்ல மருத்துவமனைக்கு அவரை அனுப்ப நாங்கள் முடிவு செய்தோம். அதன் பிறகு நோயாளியுடன் எங்கள் வழிகாட்டி, வேறு ஒருவர் ஆகிய நான்கு பேரும் சீனப் போலீஸ்காரர் ஒருவரின் பாதுகாப்புடன் பகல் 12.30 மணிக்கு தக்கள்கோட்டிற்குப் புறப்பட்டனர்.
அஷ்டபத்
3.6.98 புதங்கிழமை காலையில் அஷ்டபத் என்ற இடத்திற்கு மலைகளின் மீது நீண்ட தூரம் நாங்கள் ஏறிச் செல்ல இருந்தோம். இது கைலாசபதிக்கு மிக அருகிலுள்ல இடமாகும்.
எங்கள் ஒவ்வொருவருக்கும், மலையின் மீது ஊன்றி நடந்து செல்வதற்கு வசதியாக அடிபாகத்தில் பூண் போட்ட ஒரு கைத்தடியைக் கொடுத்தார்கள். காலை 9.30 மணிக்கு நாங்கள் தார்ச்சனிலிருந்து அஷ்டபத் நோக்கிப் புறப்பட்டோம்.
நாங்கள் விடுதியிலிருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்றதும், மிகவும் சிறிய ஒரு கோயில் போன்ற கட்டிடம் தென்பட்டது. அதற்குள் திபெத்தியர்கள் ஸ்தூபியைக் குறிக்கும் விதத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கற்கள் இருந்தன. அதன் பக்கத்திலேயே கயிலை மலையிலிருந்து வரும் உமா நதி ஓடிக் கொண்டிருந்தது. எங்கள் விடுதிக்கு அருகிலேயே இந்த நதி ஓர் ஓடை போல் சென்று கொண்டிருந்தது. இந்த உமாநதி நீரையும் கைலாஸ் செல்லும் யாத்திரிகர்கள் சிலர் கங்கை நீரைப் போல், மானசரோவர் நீரைப் போல் புனித நீராகக் கருதி கயிலாயத்திலிருந்து தங்கள் ஊருக்கு எடுத்து வருகிறார்கள். அத்தகைய திவ்ய உமாநதியைக் கடந்ததும் அஷ்டபத் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். கைத்தடியை ஊன்றி மெல்ல மெல்ல மலையின் மீது ஏறினோம். ஓர் இடத்தில் திபெத்தியர்கள் தங்கள் மதவழிபாட்டின் ஓர் அங்கமாகப் பல வண்ணக் கொடிகள் கட்டியிருந்ததைப் பார்த்தோம். அங்கு அமர்ந்து சிறிது நேரம் நாங்கள் ஓய்வெடுத்துக் கொண்டோம்.
முதல் சுமார் ஒரு மணி நேரப் பிரயாணம் சரியாகவே இருந்தது. சுமார் இரண்டு மணி நேரம் கடந்திருந்த சமயத்தில், ஈகோ டிரக் ஓடோடி வந்து என்னிடம், நீங்கள் அனைவரும் தவறான வழியில் வந்திருக்கிறீர்கள். முகால் மணி நேரத்திற்கு முன்பே நீங்கள் வேறு வழியாக சென்றிருக்க வேண்டும். இந்த வழியாகவும் அஷ்டபத் செல்லலாம். ஆனால் இது சுற்றி வளைத்து நீண்ட தூரம் செல்லும் கடினமான பாதையாகும். முக்கால் மணி நேரத்திற்கு முன்பே நீங்கள் பாதை மாறி சரியான வழியில் சென்றிருந்தால், குறுக்கு வழியில் சீக்கிரமாக அஷ்டபத்தை அடைந்திருக்க முடியும்” என்று கூறினார். அவர் சொன்னதைக் கேட்டதும், எங்கள் குழுவினர் அனைவரும் ஒரே இடத்தில் வந்து சேரட்டும் என்று நான் ஓர் இடத்தில் காத்திருந்தேன். அங்கு அனைவரும் ஒன்று சேர்ந்த பிறகு, “இனிமேல் ஒவ்வொருவரும் தனித்தனியாக, அவரவர்களுக்குப் பிடித்த வழியில் செல்வது என்று இருக்கக் கூடாது. ஏற்கனவே மூன்று பேர் சென்ற வழியிலேயே நாமும் செல்வோம்”என்று அனைவரும் சேர்ந்து முடிவு செய்தோம்.
இந்த பயணத்தின் போது நாங்கள் அவ்வப்போது வழியில் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டோம். நாங்கள் சென்ற பாதையில் இரண்டு புத்தர் கோயில்கள் இருந்தன. மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க நாங்கள் பல மலைகளைக் கடந்து சென்றோம். இவ்விதம் நாங்கள் எத்தனை மலைகள் ஏறி இறங்கினோம் என்று எங்களுக்குத் தெரியாது.
மாலை சுமார் 3.15 மணி இருக்கும்போது எங்களுக்குக் கயிலாயத்தின் மேற்பகுதியின் முதல் தரிசனம் கிடைத்தது. ஆதலால் நான் வழிகாட்டியிடம், “இப்போதே மணி 3.15 ஆகி விட்டது. எங்கள் குழுவினரைத் தார்ச்சன் விடுதிக்குத் திரும்பவும் அழைத்துச் சென்று சேர்ப்பதற்கு இரவு எவ்வளவு நேரம் ஆகுமோ தெரியவில்லை. பலலிலெயே மிகவும் சிரமப்பட்டு தான் இந்த மலைகளில் ஏறி வந்திருக்கிறோம். திரும்பும் போது இரவாகி விடும்” என்று எங்களுக்கு முன்பே நீங்கள் யாரும் சொல்லாததால் எங்கள் குழுவினர் யாரும் கையில் டார்ச் கொண்டு வரவில்லை. பகலிலேயே ஆங்காங்கு வரும் கால்வாய் நீரில் பூட்ஸ் நனையாமல் இருப்பதற்கு நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருந்தது. வழுக்கல் நிறைந்த பாதைகளில் இது வரையில் எப்படியோ தட்டுத்தடுமாறி வந்திருக்கிறோம். மலையின் ஏற்றம் எங்கள் எல்லோருக்குமே மூச்சுத் திணறலை ஏற்படுத்தியிருக்கிறது. திரும்பும்போது எப்படிப் போகப் போகிறோம் என்று நினைத்தால் இப்போதே எங்களுக்கு மிகவும் அச்சமாக இருக்கிறது. ஆதலால் கயிலாயத்தின் இந்தத் தரிசனமே எங்களுக்குப் போதும். இனி நாம் இங்கிருந்து திரும்பிப் போய் விடலாம், என்று கூறினேன்.
அதற்கு எங்கள் வழிகாட்டி, “இங்கிருந்து பார்த்தால் நமக்கு கயிலாயத்தின் மேல்பகுதி மட்டும்தான் தெரிகிறது. இந்த மலையிலிருந்து இன்னும் சிறிது தூரம் கீழே இறங்கிச் சென்று பார்த்தால் – கயிலாயத்தின் அடிப்பகுதியிலிருந்து உச்சி வரையில் – கயிலாயம் முழுவதையுமே விஸ்வரூபமாகப் பார்க்கலாம்” என்று தெரிவித்தார். என்றாலும் நான், இப்போதே நாங்கள் தார்ச்சன் விடுதியை விட்டுக் கிளம்பி சுமார் ஆறு மணி நேரம் ஆகி விட்டது. இந்த ரீதியில் சென்றால் நாம் இன்றிரவு தார்ச்சன் விடுதிக்கு எப்போது போய்ச் சேர்வது? இப்போதே குளிரடிக்க ஆரம்பித்திருக்கிறது. மாலையில் நேரம் ஆக ஆக இந்தப் பகுதியில் தாங்க முடியாத அளவிற்கு குளிர் காற்று அதிகமாக அடிக்க ஆரம்பித்து விடும் என்று பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிக் குளிரடிக்க ஆரம்பித்தால் எங்கள் நிலை என்னவாவது? இப்படிப்பட்ட வழிகளில்தான் நீங்கள் அஷ்டபதிக்குச் செல்ல வேண்டியிருக்கும், அதற்கு இவ்வளவு நேரமாகும், இத்தகைய ஆபத்துக்கள் நிறைந்த பாதை வழியாகத்தான் நீங்கள் போகவேண்டியிருக்கும் என்பதையெல்லாம் நீங்கள் ஏன் முன்பெ எங்களுக்குச் சொல்லவில்லை?
இந்தப் பிரயாணத்தின் போது எங்களில் பலரும் சோர்வின் உச்சிக்கே, களைப்பின் எல்லைக்கே சென்றிருக்கிறோம். எல்லோருமே மூக்கு, வாய் ஆகிய இரண்டின் மூலமாகவும் சிரமப்பட்டு மூச்சு விட்டுக் கொண்டு வந்திருக்கிறோம, என்று வழிகாட்டியிடம் கூறினேன்.
அதற்கு அந்த வழிகாட்டி, “தார்ச்சன் விடுதியிலிருந்து சுமார் மூன்று மணி நேரத்திற்குள், குறுக்கு வழியில் அஷ்டபதிக்குச் செல்ல முடியும். அப்படி அழைத்துச் செல்ல வேண்டும் என்றுதான் எங்களுக்கு திட்டம் இருந்தது. ஆனால் உங்கள் குழுவைச் சேர்ந்த சிலர் எங்களிடம் யோசனை கேட்காமல் தாங்களாகவே, தவறான பாதையில் முன்னதாக விரைந்து போய் விட்டார்கள். அவர்களைத் தொடர்ந்து நீங்கள் அனைவரும் கூட அவர்கள் சென்ற அதே தவறான வழியைப் பின்பற்றி வந்தீர்கள். அதுவே இப்போது ஏற்பட்டிருக்கும் துன்பங்கள் அனைத்திற்கும் மூல காரணம். போகட்டும், அஷ்டபத் பார்த்து விட்டு திரும்பும் போது, நாம் இப்போது வந்த இந்த சுற்று வழியில் சுற்றி வளைத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அஷ்டபத் தரிசனம் முடிந்த பிறகு சுலபமான வழியில் இரண்டரை மணி நேரத்திற்குள் உங்களைத் தார்ச்சன் விடுதிக்குக் கொண்டு போய் சேர்ப்பது என் பொறுப்பு” என்று கூறினார். அவ்விதம் அவர் அப்போது கூறியது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. அதன் பிறகு பயணத்தைத் தொடர்ந்தோம்.