நாங்கள் சென்ற மலைச்சரிவுகளில் சில மிக ஆபத்தானவை. ஒற்றையடிப்பாதை போன்ற மலையின் ஏற்றத்தில் சில இடங்களில் நாங்கள் செல்ல வேண்டியிருந்தது. மாலை சுமார் 3.30 மணி ஆகியிருந்த சமயத்தில் ஒற்றையடிப்பாதை உள்ள அந்தப் பாதையும் சரியாக இல்லாமல், சுமார் 50 அடி தூரத்தை நாங்கள் கடக்க வேண்டியிருந்தது. அந்த இடத்திற்கு வழிகாட்டி என்னைத் தாங்கி பிடித்தபடி தன்னுடைய பாதுகாப்பில் அழைத்துச் சென்றார்.
அந்த இடத்திற்கு முதலில் வந்து சேர்ந்த எங்கள் குழுவைச் சேர்ந்த ஒருவர் மற்றவர்களைப் பார்த்து, “இந்த இடம் மிகவும் ஆபத்தானது. இங்கே வராதீர்கள்! இங்கே வராதீர்கள்!! இங்கே வராதீர்கள்!!! திரும்பிப் போய் விடுங்கள் என்று சத்தம் போட்டு அலறினார். அந்தச் சமயத்தில் ஏற்கனவே நாங்கள் ஆறு மணி நேரம் நடந்து வந்திருந்தோம். இன்னும் அரை மணி நேரத்தில் அஷ்டபத் போய்ச் சேர்ந்து விடுவோம் என்ற நிலை இருந்தது. சுமார் ஆறு மணி நேரம் நடந்து வந்து விட்டு இன்னும் அரை மணி நேரத்தில் அஷ்டபத்தைப் பார்க்காமல் திரும்பிச் செல்வதா? என்ற கேள்வி எங்கள் குழுவைச் சேர்ந்த ஒவ்வொருவர் உள்ளத்திலும் எழுந்தது. மேலும் அந்த வழியிலேயே திரும்பிச் சென்றாலும் தார்ச்சன் விடுதியைச் சென்று அடைவதற்கு இரவு 12 மணி ஆகி விடும். பகலிலேயே அந்த வழியில் வருவதற்கு நாங்கள் எங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு படாத பாடுபட்டு வந்திருக்கிறோம். இந்த நிலையில் கையில் டார்ச் கூட இல்லாமல், இருட்டில் முன்பின் பழக்கமில்லாத வழி தெரியாத இடத்தில், மலைச்சரிவுகளில் ஏறி இறங்க வேண்டிய நிலை எங்கள் எல்லோரையும் அச்சுறுத்தியது.
இந்த நிலையில் நான் வழிகாட்டியிடம், “நீங்கள் சென்று ஒவ்வொருவரையும் பாதுகாப்பாக இங்கு அழைத்துக் கொண்டு வந்து விடுங்கள் அவ்விதம் இங்கு எல்லோரும் பாதுகாப்பாக வந்த சேர்ந்த பிறகு மேற்கொண்டு நாம் பயணத்தைத் தொடரலாம்” என்று கூறினேன். அதன்படியே வழிகாட்டி, மலைச்சரிவில் மேலே ஏறிச் சென்று, எங்கள் குழுவைச் சேர்ந்த ஒவ்வொருவரையும் தன் பாதுகாப்பில் நான் இருந்த இடத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தார்.
அன்றைய தினம் அப்படி எங்கள் வழிகாட்டி அந்த உதவியைச் செய்யாமல் இருந்திருந்தால், நான்கு அல்லது ஐந்து பேர் மலைச்சரிவில் உருண்டு விழுந்து இறந்து கூடப் போயிருப்பார்கள். எங்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் சிலர் ஆபத்து நிறைந்த ஆபத்து நிறைந்த அந்த இடத்தைக் கடந்து சென்ற போது நான், “இவர்களைக் காப்பாற்றி அருள் புரியுங்கள்” என்று ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்த படியே கண்களை அப்படியே மூடிக் கொண்டேன். அன்று அனைவரும் உயிர் தப்பியது பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருவருளாலேயே நிகழ்ந்தது.
அதன் பிறகு சுமார் 25 நிமிட பிரயாணத்திற்குப் பின் நாங்கள் அஷ்டபத் என்ற இடத்தைச் சென்றடைந்தோம். கைலாசபதியை சுமார் 80 கி.மீ. தூரத்தில் இருந்தும் கூட யாத்திரிகர்கள் தரிசிக்க முடியும். ஆனால் கைலாசபதியை மிகவும் அருகிலிருந்து, கயிலாயத்தின் அடிவாரத்திலிருந்து உச்சி வரையில் தரிசிக்கக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த இடம் அஷ்டபத் தான். இந்த இடத்தில்தான் நாம் பார்க்கும் கயிலாயத்தின் மிகவும் சிறந்த புகைப்படங்கள் எடுக்கப் படுகின்றன.
அஷ்டபத்திலிருந்து யாத்திரிகர்கள் தரிசிக்கும் கயிலாயத் தரிசனத்திற்குத் தென்முக கயிலாய தரிசனம் என்று பெயர். தெற்கு திசையை நோக்கி இருப்பதால் கயிலாயத்தின் இந்த ஃப்வடிவம் தட்சிணாமூர்த்தி கோலம், என்றும் அழைக்கப்படுகிறது. அங்கு எங்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் பலரும் கைலாசப5தியை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினோம். அனைவரும் பிரார்த்தனை செய்தோம். சிலர் சிவஸ்துதிகள் கூறினார்கள். சிலர் சைவத்திருமுறைகளிலிருந்து பதிகங்கள், சிவ புராணம் போன்றவற்றைக் கூறினார்கள்.
அங்கு கற்பூர ஆரத்தி செய்து கைலாசபதியை அனைவரும் வழிபட்டோம்.
எங்கள் குழுவைச் சேர்ந்த ஒருவர் தன் மருமகள் கொடுத்த இரண்டு பெரிய நோட்டுப் புத்தகங்களைத் தன்னுடன் எடுத்து வந்திருந்தார். அவற்றில் ஒரு நோட்டுப் புத்தகத்தில் திருவாசகம் முழுவதும் எழுதப்பட்டிருந்தது. இன்னொரு நோட்டுப்புத்தகம் முழுவதும் “ஓம் நமசிவாய” என்ற மந்திரம் எழுதப்பட்டிருந்தது. அந்த இரண்டு நோட்டுப்புத்தகங்களையும் கைலாசபதியின் முன்னால் பிரித்து வைத்து, அவற்றின் காகிதம் காற்றில் பறக்காமல் இருப்பதற்காக அவற்றின் மீது சிறிய கல்லை வைத்தார். மேலும் அவர் அங்கு, நந்தியும், சிவ சிவ என்ற எழுத்துக்களைக் கொண்ட ஒரு சிவப்பு நிற பரிவட்டத்தையும் பிரித்து வைது, அது காற்றில் பறக்காமல் இருக்கும் பொருட்டு அதன் மீது சிறிய கற்களையும் வைத்தார்.
ஜைன சமயத்தின் முதலாவது தீர்த்தங்கரரின் பெயர் ஆதிநாதர். இவருக்கு ரிஷபதேவர் என்றும் வேறு ஒரு பெயர் உண்டு. இவர் இந்த அஷ்டபத் என்ற இடத்தில்தான் ஒரு மகா சிவராத்திரி நாளில் முக்தி பெற்றவர் என்று சொல்லப்படுகிறது. எனவே ஜைனர்கள் இந்த இடத்தை ஆன்மீகச் சிறப்பு வாய்ந்த இடமாகக் கருதுகிறார்கள்.
கைலாசத்தைத் தரிசிக்கும் போது அதற்கு வலப்புறம் நந்தி பர்வதமும், இடப்புறம் மகா கால மலையும் தெரிகின்றன. மகா கால மலை சிவபெருமானின் கோட்டை என்றும் கூறப்படுகிறது. நந்தி பர்வதத்தின் முகடு காளையின் தலை போலவே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நந்தி பர்வதத்திற்கு வலப்புறம் அஷ்டபர்வத மலை உள்ளது. இதில் பல குகைகள் இருப்பதாகவும், இன்றும் முனிவர்கள் பலர் இங்கு தவம் செய்து வருவதாககவும் கூறப்படுகிறது. கேட்டதைக் கொடுக்கும் கற்பக மரம் இந்த மலையில்தான் உள்ளது என்றும், எனவே இங்கிருந்து யார் எதைப் பிரார்த்தித்தாலும் அது நிறைவேறுகிறது என்றும் கூறப்படுகிறது.
அஷ்டபர்வதத்திற்கு அருகில் உள்ள மலையை திபெத்தியர்கள் “புத்தரின் அரியணை” என்று போற்றுகிறார்கள்.
அஷ்டபத்தில் நாங்கள் சுமார் 40 நிமிடம் இருந்தோம். பிறகு அங்கிருந்து நாங்கள் புறப்பட்டு, உமாநதியின் கரை ஓரமாக நடந்து, குறுக்கு வழியில் இரண்டு மணி நேரத்தில் தார்ச்சன் விடுதிக்குத் திரும்பினோம்.
நந்தி பரிக்ரமம்
அஷ்டபத்திலிருந்து கயிலாயத்தை நாம் மிகத் தெளிவாகக் காண முடியும், இன்னும் நெருங்கி மிக அருகிலிருந்து காண வேண்டுமானால் கயிலை மலைக்கு அருகிலுள்ள நந்தி பர்வதத்தைச் சுற்றி வர வேண்டும். இதுவே நந்தி பரிக்ரமம் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பாதை சுமார் 32 கி.மீ தூரம் கொண்ட மிகமிகச் சிரமமான பாதை. நந்தி பர்வதம் கயிலாயத்திற்கு மிகவும் அருகிலுள்ளது. எனவே இந்த மலையைச் சுற்றி வரும் போது ஒரு குறிப்பிட்ட பகுதியில் கைலாசபதியைத் தொடுகின்ற அளவிற்கு நெருங்கிச் செல்ல முடிகிறது.
நந்தி பரிக்ரமம் செய்வதற்கு சீன ரானுவத்திடம் பணம் செலுத்தி சிறப்பு அனுமதி பெற வேண்டும். ஆனால் அந்த அனுமதி எளிதாகக் கிடைப்பதில்லை. மிகவும் ஆபத்தான பாதை என்பதாலும், பனிப்பாறைகளில் வழுக்கி விழுகின்ற அபாயம், நிலச்சரிவுகள், பனிப்பாளங்கல் விலகுதல், போன்ற காரணங்களால் சீன ரானுவத்தினர் இந்தப் பரிக்ரமத்திற்கு அனுமதி அளிக்க மறுத்து விடுகின்றனர். வயது, உடல்நிலை, வெளிநாட்டினர், தட்பவெப்ப நிலை போன்ற பல காரணங்களால் அனுமதி மறுக்கப்படுகிறது.
அஷ்டபத் செல்வது பற்றி ஏற்கனவே கண்டோம். அஷ்டபத் செல்லும் வழியிலுள்ள சிரலங் புத்த மடாலயத்தில் தங்கி, அங்கிருந்து நந்தி பரிக்ரமத்தைத் தொடங்க வேண்டும். கயிலாயத்தின் அடிவாரத்திலுள்ள தார்ச்சன் முகாமிலிருந்து சுமார் 6 மணி நேரம் நடந்தால் சிரலங் புத்த மடாலயத்தை அடையலாம். இது 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. சீனப் படையெடுப்பின் போது முற்றிலும் அழிக்கப்பட்ட இந்த மடாலயம் 1980 களில் மீண்டும் கட்டப்பட்டது.
அதிகாலையில் புறப்பட்டு விட வேண்டும். மிகவும் செங்குத்தான மலைகளின் மீது செல்ல வேண்டியுள்ளது. எனவே ஊன்றுகோல் கட்டாயம். சிறிது நேர நடைக்குப் பிறகு நந்தி பர்வதத்தின் அடிவாரத்தை அடியகிறோம். இந்த மலையைச் சுற்றி உமா நதி ஓடுகிறது. இது கயிலாயத்திலிருந்து புறப்படுகின்ற நதி ஆகும். நதியின் கரையில் மணி நேரம் நடந்த பிறகு செங்குத்தான மலை வருகிறது. மிகவும் ஆபத்தான பகுதி இது. அடிமேல் அடி வைத்து, ஊன்றுகோல் துணையுடன் போர்ட்டர்கள் உதவியுடன்தான் போக முடியும். சில இடங்களில் தவழ்ந்தும் போக வெண்டியுள்ளது. கடந்து வந்த பாதையைப் பார்க்கும் போது பாதாளமாகத் தெரிகிறது. தலை சுற்றுகிறது. வழியில் எங்கும் உட்காரவும் இடம் கிடையாது.
அஷ்டபத்திலிருந்து பார்க்கும் போது கயிலாய மலையும், நந்தி மலையும் தனித்தனியாகத் தெரிகின்றன. ஆனால் பரிக்ரமத்தின் பொது இரண்டும் இணைந்திருப்பதைக் காண முடியும். இணைக்கின்ர இந்தப் பகுதியைக் கடப்பது மிகவும் கடினமான அனுபவம். இங்கே உள்ள குகையில் பௌத்த மதத்தினரின் 13 ஸ்தூபங்களை (தூண்) காண முடியும். இங்கிருந்து கைலாசபதியின் மெற்கு முகத்தை ஒரு மாறுபட்ட கோணத்தில் பார்க்க முடியும்.
இங்கிருந்து இறங்கும் இடம் ஆரம்பிக்கிறது. ஏறுவதைவிட இறங்குவது சிரமமாக உள்ளது. வழியும் மிகுந்த வழுக்கலாக உள்ளது. வழுக்கி விழுந்தால் உறைபனியில் விழுந்து உயிர் விடுவதைத் தவிர வெறு எந்த வழியும் இல்லை. மிகவும் நிதானமாக, ஊன்றுகோல் துணையுடன் கைலாசபதியின் கிழக்கு அடிவாரத்தை அடையலாம். கிழக்கு முக்ம முற்றிலும் உறைபனியால் மூடப்பட்டுள்ளது. மிகவும் அற்புதக் காட்சி இது. இங்கிருந்து சில மணி நேரம் நடந்தால் மீண்டும் அஷ்டபத்தை அடைய முடியும்.
தீர்த்தபுரி
தீர்த்தபுரி என்ற இடம் பஸ்மாசுரன் கதையுடன் தொடர்புடைய இடமாகும். சிவபெருமானை நோக்கி பஸ்மாசுரன் கடுந்தவம் புரிந்து, “நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாக வேண்டும்” என்று வரம் பெற்றான். திருமால் மோகினி அவதாரம் எடுத்து பஸ்மாசுரனை, அவன் தலை மீதே கை வைக்கும்படி செய்தார். அவ்விதம் செய்ததால் பஸ்மாசுரன் அங்கேயே எரிந்து சாம்பலானான். இந்த நிகழ்ச்சி நடந்த இடம் தீர்த்தபுரி என்று சொல்லப்படுகிறது.
ஆணவத்தின், அகங்காரத்தின் அடையாளமாக பஸ்மாசுரன் விளங்குகிறான். பஸ்மாசுரனின் அழிவு அகங்காரத்தின் அழிவைக் குறிக்கும். ஆன்மீக வாழ்க்கைக்கு முதல் எதிரியாக இருப்பது அகங்காரம். கைலாச யாத்திரை செல்பவர்கள் அகங்காரத்தை விட்டு விட வேண்டும் என்பதை தீர்த்தபுரி உணர்த்துகிறது. அதனால்தான், “தீர்த்தபுரிக்குச் செல்லாமல் கைலாச யாத்திரை முற்றுப் பெறாது” என்று கூறப்படுகிறது.
4.6.98 வியாழக்கிழமை காலை சுமார் பத்து மணிக்கு நாங்கல் தார்ச்சன் விடுதியிலிருந்து தீர்த்தபுரிக்கு ஜீப்புகளில் கிளம்பினோம். தார்ச்சன் முகாமிலிருந்து தீர்த்தபுரி சுமார் 70 கி.மீ தூரத்தில் இருக்கிறது. காலை சுமார் பத்து மணிக்குத் தார்ச்சனிலிருந்து புறப்பட்ட நாங்கல், சுமார் பன்னிரெண்டு மணிக்கு தீர்த்தபுரியை அடைந்தோம்.