கைலாஸ்-மானசரோவர் – 14

கைலாஸ் பரிக்ரமம் – முதல் நாள்

கைலாஸ் பரிக்ரமம் (கிரி பிரதட்சிணம்) என்பது மூன்று நாட்கள் கொண்டது. இந்த மூன்று நாட்களில் திரபுக், டோல்மா பாஸ், ஜுதுல்புக் ஆகிய மூன்று இடங்கலையும் யாத்திரிகர்கள் நடந்து செல்ல வேண்டும். இந்த இடங்களில் ஜீப், லாரி போன்ற வண்டிகள் எதுவும் செல்வதற்கு ரோடு வசதி கிடையாது. எனவே இந்த மூன்று நாட்களுக்கு யாத்திரிகர்கள் தங்களுக்குத் தேவையான எல்லாச் சாமான்களையும் யாக் எருமைகளின் மூலமும், போர்ட்டர்கள் மூலமும்தான் எடுத்துச் செல்ல வேண்டும். இந்த ஆண்டு இப்போது எங்களுக்கு யாக்குகள் கிடைக்காததால், மூன்று நாள் பரிக்ரமாவிற்கு எங்களுக்குத் தேவையான எல்லா சாமான்களையும், சமையல் சாமான்களையும் தூக்கிச் செல்வதற்காக 15 போர்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.

7.6.98 ஞாயிற்றுக்கிழமை. இன்று நாங்கல் கைலாஸ் பரிக்ரமம் செய்ய ஆரம்பித்த முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். இந்த பரிக்ரமா பாதையில் தேவர்களின் பள்ளத்தாக்கு வரையில் ஜீப் செல்வதற்குக் கரடு முரடான பாதை இருக்கிறது. அதற்கு மேல் ஜீப் செல்வதற்குப் பாதை கிடையாது. நாங்கள் தேவர்களின் பள்ளத்தாக்கு வரையில் ஜீப்பில் சென்று, அங்கிருந்து நடந்து பரிக்ரமா செல்லத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் எங்கள் குழுவினர் சிலர் தார்ச்சனிலிருந்து தேவர்களின் பள்ளத்தாக்கு வரையில் நடந்தே வந்தார்கள்.

காலை பதினோரு மணிக்கு தேவர்களின் பள்ளத்தாக்கிற்குப் போய் சேர்ந்தோம். இந்த இடத்தில்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு எங்கள் குழுவினர் ஹோமம் செய்திருந்தார்கள். அங்கிருந்து பார்த்தால் கைலாசபதியின் கம்பீரமான காட்சி கிடைக்கிறது.

அங்கு கயிலை மலையின் ஓர் இடத்தில் மண் சரிந்து லேசாக விழுந்து கொண்டிருந்தது. அவ்விதம் மண் சரிந்து குவிந்திருக்கும் இந்த இடத்தை ஜைனர்கள் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதுகிறார்கள். அங்கு அவர்கள் சுமார் 50 அடி உயரத்திற்கு மண் சரிந்து குவிந்திருக்கும் இடத்திலிருந்து, பிரசாதம் போன்று சிறிது மண்ணை பக்தி சிரத்தையுடன் தங்கல் ஊருக்கு எடுத்துச் செல்கிறார்கள்.

இந்தத் தேவர்களின் பள்ளத்தாக்கில்தான் திபெத்தியர்கள் ஒன்றுகூடி, தங்களின் முக்கியமான மத விழாக்களைக் கொண்டாடுவது வழக்கம். நாங்கள் சென்ற போது இந்தப் பள்ளத்தாக்கில் சற்று தூரத்தில், ஆங்காங்கே வெளிநாட்டவர்கள் சிலர் கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்தனர்.

தேவர்களின் பள்ளத்தாக்கில் நாங்கள் சுமார் அரை மணி நேரம் இருந்தோம். தேவர்களின் பள்ளத்தாக்கு உல்ள இடத்தில் ஒரு சிறிய கட்டிடம் இருக்கிறது. இந்தக் கட்டிடத்திற்கு “யம த்வார்” என்று பெயர். அதாவது “யமனின் நுழைவாயில்” என்பது இதன் பொருள். இந்த இடத்தில் திபெத்தியர்கள் தங்களின் உடைகள், கையுறைகள், கால் உறைகள், தொப்பி, செருப்பு, பூட்ஸ் போன்றவற்றை விட்டுச் செல்கிறார்கள். இவ்விதம் செய்வதற்கு, எங்கள் ஸ்தூல உடலை இங்கேயே விட்டுவிட்டோம். இனி நாங்கள் புதிய மனிதர்களாக உயர்ந்த ஆன்மீக வாழ்க்கை வாழ்வோம் என்பது உட்பொருள். இந்த யமத்வாரில் நுழைந்து சென்று கைலாஸ் பரிக்ரமம் செய்பவர்களுக்கு யமனால் மரண பயம் ஏற்படாது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

இந்த இடத்தில் அன்றைய தினம் பரிக்ரமா செய்வதற்காக வந்த வெளிநாட்டவர்கள் சிலரையும் சந்தித்துப் பேசினோம்.

நாங்கள் இங்கிருந்து கைலாஸ் பரிக்ரமாவை ஆரம்பிப்பதற்கு முன்பு, கர்ப்பூரம் ஏற்றி எங்களுக்கு எதிரில் தரிசனம் தந்து கொண்டிருந்த கயிலைநாதனை வழிபட்டோம். “ஜெய் ஸ்ரீ குருமகராஜ் ஜீ கீ ஜெய், ஜெய் ஸ்ரீ மகா மாயி கீ ஜெய், ஜெய் ஸ்ரீ கைலாஸ் பகவான் கீ ஜெய்” என்று நாங்கள் எல்லோரும் சேர்ந்து முழக்கம் செய்து விட்டு, பின்னர் அங்கிருந்து பரிக்ரமா புறப்படுவதற்குத் தயாரானோம்.

எங்கள் வழிகாட்டி குழுவினர் ஒவ்வொருவருக்கும், பரிக்ரமாவின் போது ஊன்றி நடந்து செல்வதற்காக ஆளுக்கொரு கைத்தடி கொடுத்தார். நாங்கள் யம த்வாரின் ஒரு பக்கம் நுழைந்து, அதன் மறுபக்கம் வெளியே வந்து, முதல் நாள் பரிக்ரமாவை ஆரம்பித்ட்ஹோம். அப்போது காலை மணி 11.30.

நாங்கள் நடக்கத் துவங்கிய பத்து, பதினைந்து நிமிடங்களுக்குள் ஆற்றின் குறுக்கே சிறிய ஒரு பாலம் இருந்த இடத்தை அடைந்தோம். அதன் வழியாக ஆற்றைக் கடந்து, நதியின் இடப்புறம் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். திபெத்திய லாமாக்கள் சிலர் நதியின் வலக்கரையில் சாஷ்டாங்க நமஸ்கார முறையில் பரிக்ரமா செய்து கொண்டிருந்தார்கள். அவர்களைத் தவிர வேறு சில திபெத்தியர்களும் ஆற்றின் வலக்கரையில் கயிலாயத்தையொட்டி நடந்து பரிக்ரமா செய்து கொண்டிருந்தார்கள்.

நாங்கள் பரிக்ரமா சென்ற பாதையில் கைலாசபதியின் தரிசனம் தொடர்ந்து எங்க்ஃஅளுக்குக் கிடைத்தபடியே இருந்தது. வழி முழுவதும் கயிலை மலையில் எங்களுக்குக் கிடைத்த காட்சிகளுக்கு ஒரு கணக்கே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்போது கயிலைநாதனை நினைத்து, “கைலாசபதி! இந்த பரிக்ரமா சமயத்தில் கயிலாயத்தில் நான் காணும் இந்தக் காட்சிகளெல்லாம் என் மனதில் நன்றாகப் பதியும்படி அருள் புரியுங்கள்” என்று அடிக்கடி பிரார்த்தனை செய்தேன்.

நாங்கல் பரிக்ரமா சென்ற நாள் முழுவதும் நல்ல வெயில் இருந்தது. கயிலாயத்தின் மேற்குமுக தரிசனமும் எங்களுக்குக் கிடைத்தது. பரிக்ரமாவின் போது கயிலாயத்தின் சில இடங்களில் பெரிய அரண்மனைக்குள் கைலாசபதி வீற்றிருப்பது போன்ற தோற்றம் காணப்பட்டது. வேறு சில இடங்களில், கோயில்களில் ஆயிரங்கால் மண்டபங்கள் இருப்பது போன்ற காட்சிகள் தென்பட்டன. பரிக்ரமா முழுவதும் பிரம்மாண்டமான பெரிய பெரிய கோட்டைக் கொத்தளங்கள் போன்ற காட்சிகள் கயிலாயத்தில் எங்களுக்குக் கிடைத்தபடியே இருந்தன. அவை எத்தனை என்று எங்களால் சொல்ல முடியாது. எண்ணற்றவை என்று மட்டும்தான் சொல்ல முடியும்.

சுவாமி சித்பவானந்தர் தமது “திருக்கயிலாயகிரி யாத்திரை” என்ற நூலில் கயிலாயத்தின் அமைப்பைப் பற்றி பின்வருமாறு கூறியுள்ளார் :

“மனிதனால் கட்டப்பட்ட கோயில் எதுவும் கயிலாயத்தில் இல்லை. ஆனால் கோயில்களுக்கெல்லாம் மாதிரியாக கயிலாயம் இயற்கையாகவே அமைந்திருக்கிறது. சில பாகங்களில் அது வெறும் சுவராகவும், வேறு சில இடங்களில் சித்திரங்களும், உருவங்களும் அமைக்கப்பெற்றது போலும் காணப்படுகிறது. மூடப்பட்ட வாயில் போன்றவைகளும் ஆங்காங்கு தென்படுகின்றன. பிரகாரத்தின் மீது ஒரு பெரிய மேடை. அதன் சுவர் ஐந்நூறு அடி முதல் ஆயிரம் அடி வரையில் செங்குத்தாக இருப்பதால் அந்த மேடைக்கு யாரும் போக முடியாது. அந்த மேடையின் மீது நூற்றுக்கணக்கான சிறு மலைகள் கோபுரங்கள் போன்று அமைந்திருக்கின்றன. அவைகளில் சித்திர வேலைபாடுடையவை, சாதாரணமாக இருப்பவை, சதுரமாக இருப்பவை, வட்டமாக இருப்பவை, முட்டை போன்ரு இருப்பவை, முக்கோணமுடையவை, தூண் போன்றவை, ஒடுங்கிய நுனியை உடையவை, இன்னும் பல விதமான வடிவங்களை உடையவைகள் பல இருக்கின்றன. அவைகளின் நிறங்களும் பல வகைப்படும். இந்தியாவில் தென்முனையிலிருந்து இமயம் வரையில் எத்தனை விதமான கோபுரங்கள் இருக்கின்றனவோ, அத்தனைக்கும் மாதிரிகள் கயிலாயத்தில் இருக்கின்றன. இன்னும் புதிதாக ஏதாவது கட்ட வேண்டுமென்றாலும் அதாற்கும் மாதிரி அங்கே கிடைக்கும். அண்டநாயகனின் அரண்மனை போன்றது கயிலை. அதார்கு அகழி, பிராகாரம், கோட்டை, கொத்தளம், கோபுரம், கூடம், மாடம், கொலுமண்டபம், அந்தப்புரம் ஆகிய காட்சிகள் அனைத்தும் ஒருங்கெ அமைந்திருக்கின்றன.

தென்புறம் தவிர மற்ற மூன்று பக்கங்களிலும் அணி அணியாக மலைகள் இருக்கின்றன. ஆனால் அவைகள் வெறும் மலை போன்று  தென்படுவதில்லை. விசுவேசுவரன் வீற்றிருக்கும் கொலுமண்டபத்திற்கு அருகில் அவனுடைய கணங்கள், சிப்பந்திகள் முதலானவர்கள் வசிப்பதற்கான முடியிருப்புகளாக அவைகள் விளங்குகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சர்கள் முதல் சாதாரண வேலைக்காரர்கள் வரை பல படித்தரங்களில் இருக்கும் லட்சக்கணக்கான பேர்களுக்கு என்னென்ன விதமான மாளிகைகள், உப்பரிகைகள், சாதாரண வீடுகள் தேவையோ அவை அனைத்தும் அங்கு இருக்கின்றன. தேவலோகத்துக்கேற்ற ஓர் ஒப்பற்ற நகரம் போண்று அவைகள் காட்சி கொடுக்கின்றன.”

ஈவ்விதம் சுவாமி சித்பவானந்தர் கூறியது முற்றிலும் உண்மை என்பதை கைலாச பரிக்ரமா சமயத்தில் எங்களுக்குக் கிடைத்த காட்சிகள் உறுதிப் படுத்தின.

இந்த முதல் நாள் பரிக்ரமாவின் பொது வலப்பக்கம் இருந்த கயிலை மலையிலிருந்து சுமார் இருபது இடங்களில் சிறிய, பெரிய நீர்வீழ்ச்சிகள் விழுந்து கொண்டிருந்ததைப் பார்த்தோம். அந்த அருவிகளின் காட்சிகள் சிவனின் திருமுடியிலிருந்து கங்கை வந்து கொண்டிருப்பது போல் தோன்றியது. கயிலாயத்திற்கும் நாங்கள் பரிக்ரமா சென்ற பாதைக்கும் நடுவில் ஒரு சிறிய ஆறு ஓடிக் கொண்டிருந்தது. நாங்கள் சென்ற பாதையில் இடப்பக்கம் இருந்த மலைகளிலிருந்தும் கூட, ஆங்காங்கே சில இடங்களில் நீர்வீழ்ச்சிகள் விழுந்து கொண்டிருந்தன. அவை நாங்கள் சென்ற பாதைக்கும், கயிலைக்கும் நடுவில் இருந்த ஆற்றில் சென்று கலந்தபடி இருந்தன.

நாங்கள் பரிக்ரமா புறப்பட்ட போது, எங்களுக்குக் கயிலையின் மேற்குபுற தரிசனம் கிடைத்தது. அது சில கிலோ மீட்டர் தூரம் வரையில் எங்களுக்குத் தெரிந்து கொண்டிருந்தது. பகலுணவு சாப்பிடும் நேரத்தில் ஓர் இடத்தில் நாங்கள் அனைவரும் தங்கி உலர்ந்த பழங்கள், பிஸ்கெட் போன்றவற்றை உட்கொண்டோம்.

இந்தப் பரிக்ரமாவின் போது நமது சிதம்பரம் கோயிலின் மேல் விதானம் போன்று இருந்த கயிலாயத்தின் ஒரு பகுதியைப் பார்த்தோம். இதுவே இந்தப் பரிக்ரமாவில் நாங்கள் பெற்ற முதல் முக்கியத்துவம் வாய்ந்த காட்சியாகும். இந்த சிதம்பரம் கோயிலின் மேல் விதானக் காட்சி – கைலாஸ் பரிக்ரமா செய்யும் எல்லோருக்குமே கிடைக்கிறது. காரணம், வடமேற்கு திசையில் கயிலைமலையே அவ்விதம்தான் அமைந்துள்ளது.

எங்கள் பயணம் தொடர்ந்த போது ஓர் இடத்தில் கயிலைமலையின் வடமேற்கு தரிசனமும், வடக்கு தரிசனமும் ஒன்றாகக் கிடைத்தடு. மாலை நெருங்கியபோது ஆற்றில் ஆங்காங்கே பனிப் பாறைகள் தெரிய ஆரம்பித்தன. அன்றிரவு, சுமார் 7.50 மணிக்கு நாங்கள் அனைவரும் திரபுக் என்ற இடத்திலுள்ள முகாமிற்குப் போய்ச் சேர்ந்தோம். புக் என்ற திபெத்திய சொல்லுக்கு குகை என்று பொருள்.

கைலாஸ் – மானசரோவர் யாத்திரை செல்பவர்கள் தங்கும் விடுதிகளில் மின்சார விளக்கு வசதி அறவே கிடையாது. ஆதலால் நாங்கள் சென்னையிலிருந்து எங்களுடன் portable generator எடுத்துச் சென்றிருந்தோம். அதனால் நாங்கள் தங்கிய எல்லா முகாம்களிலும் ஜெனரேட்டர் மூலம் மின்சார விளக்கிற்கு ஏற்பாடு செய்து கொண்டோம். எனவே மானசரோவரிலும், கயிலாயத்தின் ஒரு பகுதியான தார்ச்சனிலும் இரவில் எங்களுக்கு மின்விளக்கு பிரச்சினை இல்லாமல் இருந்தது. அதிக பளுவைச் சுமந்து செல்ல இயலாது என்பதால், எங்களோடு ஜெனரேட்டரை எடுத்துச் செல்லாமல் தார்ச்சனிலேயே விட்டுச் சென்றோம். எனவே அன்றிரவு நாங்கள் தங்கிய திரபுக் முகாமில் எங்களுக்கு மின்விளக்கு இல்லை. ம்வ்ழுகுவர்த்களை ஏற்றி வைத்தும் டார்ச் உபயோகித்தும், அன்றைய இரவைச் சிறிது சிரமத்துடன் கழித்தோம். திரபுக் முகாமில் நாங்கள் மின்விளக்கு இல்லாமல் இருந்தது; மற்ற கைலாஸ் யாத்திரிகர்கள் மின்விளக்கு எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பதை ஒருவாறு எங்களுக்கு உணர்த்தியது.

திரபுக் முகாமில் 7- தேதி இரவு தங்கிவிட்டு, மறுநாள் 8-ம் தேதி காலையில் இரண்டாம் நாள் பரிக்ரமாவைத் தொடர்வது என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். ஆனால் 7-ம் தேதி முதல் நாள் பரிக்ரமாவின் போது நடந்து வந்தது, எங்கள் குழுவினர் அனைவரையும் மிகவும் களைப்படையச் செய்திருந்தது. அதனால், மறுநாள் 8-ம் தேதி திரபுக் முகாமிலேயே தங்கி ஓய்வெடுத்துக் கொள்வது என்று நாங்கள் அங்கு சென்ற இரவே முடிவு செய்தோம். மறுநாள் டோல்மா பாஸ் என்ற இடத்தில் நாங்கல் செய்ய இருந்த ஹோமம் முதலானவற்றை, திரபுக்கில் மறுநாள் காலையில் கைலாசபதியின் லிங்க தரிசனத்திற்கு எதிரில் செய்வது என்றும் முடிவாயிற்று.

திரபுக் கடல் மட்டத்திலிருந்து 19,000 அடி உயரத்தில் இருக்கிறது. திரபுக்கில் நாங்கள் தங்கிய விடுதி, கயிலாலத்தை நேராக, நன்றாக தரிசிக்கும் வகையில் கயிலாயத்தின் எதிரிலேயே அமைந்திருந்தது. திரபுக்கில் யாத்திரிகர்கள் தங்குவதார்கு இந்த ஒரே ஒரு விடுதிதான் இருக்கிறது. ஆதலால் இதற்கு முன்பு காய்லாஸ் சென்றவர்கள் எல்லோரும் இந்த விடுதியில்தான் தங்கியிருக்கிறார்கள். இந்த விடுதியில் அதிகபட்சம் இருபது பேர்தான் தங்க முடியும்.

திரபுக் விடுதியிலிருந்து பார்த்தால் கயிலாயத்தின் வடக்குமுக தரிசனம் கிடைக்கிறது. இங்கிருந்து கயிலாயத்தைத் தரிசிப்பது “லிங்க தரிசனம்” என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த இடத்தைத்தான் ராவணன் பெயர்த்தெடுக்க விரும்பினான; அவன் பெயர்த்தெடுக்க முயற்சி செய்த போது சிவபெருமான் தன் கால் பெருவிரலை ஊன்றியதால், ராவணன் மலையின் அடியில் சிக்கிக் கதறினான். பின்னர் நாரதரின் யோசனையின் பேரில், தனது ஒரு தலையைக் கிள்ளி அதையே யாழாகப் பயன்படுத்தி சாமகானம் பாடினான். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் மலையின் அடியில் சிக்கித் துன்பப்பட்டுக் கொண்டிருந்த ராவணனை அந்தத் துன்பத்திலிருந்து விடுவித்தார் என்பது புராண வரலாறு.

திரபுக் எதிரில் கயிலாயத்தின் லிங்க தரிசனம் காணப்படும் இடத்துக்கு அருகில், ராவணன் தன் தடியை ஊன்றிய இடம் என்ற பொருளில் ராவணன் தடி என்று சொல்லப்படும் ஒரு பாறையும் இருக்கிறது. தரிசனத்திற்கு முன்னால் இரண்டு மலைகள் இருக்கின்றன. இவை “துவார பாலகர் மலைகள்” என்று அழைக்கப்படுகின்றன.

நாங்கள் திரபுக் முகாமில் இன்று ஒரு நாலைக் கழித்தது உண்மையில் எங்களுக்கு ஒரு பெரும் வரப்பிரசாதமாகவே அமைந்தது. நான் தங்கியிருந்த அறையிலிருந்து வெளியே வந்து நாற்காலியில் அமர்ந்து கயிலையின் லிங்க தரிசனத்தை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கும், கயிலைநாதனின் லிங்க தரிசனத்திற்கும் இடையில் உள்ல சிறிய ஆற்றங்கரையில் ஒரு ஹோம குண்டம் அமைத்து ஹோமம் செய்தோம். காலை 11 மணிக்கு ஆரம்பித்த இந்த ஹோமம் பகல் 12.30 மனி வரையில் நடை பெற்றது. எங்கள் சக யாத்திரிகர்களைத் தவிர ஆண்களும், பெண்களுமாக சுமார் 35 திபெத்தியர்களும் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டார்கள். சக யாத்திரிகர்கள் அனைவரும் கொண்டு வந்திருந்த சுமார் மூன்று கிலோ கர்ப்பூரம் ஹோ௳ ஆஹுதியில் அர்ப்பணம் செய்யப்பட்டது. இந்த ஹோமத்தின் முடிவிலும் புனித சாம்பலை அங்கேயே விட்டு விடாமல் பிரசாதமாகச் சேகரித்துக்கொண்டோம்.

அன்று பகல் ஒரு மணிக்கு எங்கள் குழுவினர் அனைவரும் சேர்ந்து ஒரு கலந்துரையாடல் நிகழ்த்தினோம். அதில், இரண்டாம் நாள் கைலாஸ் பரிக்ரமத்தில் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும்? செல்லும் பாதை எப்படியிருக்கும்? மலையில் ஏற்ற இறக்கங்கள் பற்றி விவரம், அதாற்கு நாம் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் யாவை? என்பது பற்றி எல்லோரும் விரிவாக ஆராய்ந்தோம்.

நாங்கள் சென்ற ஆண்டு, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, வழக்கத்திற்கும் மாறாக, டோல்மா பாஸில் பனி மிகவும் அதிகமாக உறைந்திருக்கிறது. அங்கு தரையோ, பாறையோ இருப்பது கூட கண்ணுக்குத் தெரியவில்லை. எங்கே பார்த்தாலும் பனி உறைந்து மூடியிருக்கிறது என்று இரண்டு நாட்களுக்கு முன்பு பரிக்ரமா செய்து திரும்பியவர்கள் கூறியிருந்தார்கள். அதையேதான் இந்தப் பகுதியிலுள்ள உள்ளூர்வாசிகளான திபெத்தியர்களும் கூறுகிறார்கள். இந்தப் பரிக்ரமாவின் போது மலையில் ஏற்றத்தில் கடுமையான குளிரில், சுமார் 10 கிலோ மீட்டர் தூர்ம வரையில் முழங்கால் அளவு உள்ள பனி மீது நடந்து செல்ல வேண்டியிருக்கும், போன்ற விவரங்களை எங்கள் குழுவினருக்கு சீன மற்றும் நேபாள வழிகாட்டிகள் விளக்கிப் பேசினார்கள்.

இரண்டாம் நால் பரிக்ரமா பாதியில் வரும் டோல்மா பாஸ் என்ற இடம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 19,500 அடி உயரத்தில் இருக்கிறது. இங்கு பகல் ஒரு மணிக்கு மேல் எப்போதும் பனிப்புயல் வீசுகிறது. இரண்டாம் நாள் பரிக்ரமா செல்லும் போது எங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்ற ஒரு நிலைதான் அப்போது இருந்தது. மேலும் நாங்கள் திரபுக் முகாமில் தங்கிய முதல் நாள் இரவு குளிரும் மைனஸ் 20 டிகிராக இருந்தது. இரண்டாம் நாள் பரிக்ரமாவின் பொது, பனிப் பாறைகளின் மீது குறைந்தது பத்து கிலோ மீட்டர் தூரமாவது மலை மீது ஏறிச் செல்ல வேண்டியிருக்கும் என்று எங்கள் உரையாடலில் கலந்து கொண்ட திபெத்திய போர்ட்டர்களும் கூறினார்கள்.

இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் இருப்பதால் அங்கு ஆக்ஸிஜன் குறைவு. அதனால் மூச்சு விடுவதற்குச் சிலருக்கு அங்கு சிரமம் ஏற்படுவதும் உண்டு. சிலர் சுய நினைவு இழந்து மயக்கம் அடைவதும் உண்டு. ஒரு வேளை அங்கு மூச்சு விடுவதற்கு நமக்குச் சிரமம் ஏற்படுமானால் பயன்படுத்துவதற்காக ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் நம்மோடு நாம் எடுத்துச் செல்ல இருக்கிறோம்.

“டோல்மா பாஸைக் கட்ககும் போது சில சமயங்கலில் பூண்டு சாப்பிடுவது நல்லது என்று இங்குள்ல திபெத்திய லாமாக்கள் கூறுகிறார்கள். டோல்மாவில் நமக்கு ஆக்ஸிஜன் குறைவு என்ற உணர்வு ஏற்பட்டால், சாப்பிடுவதாற்குக் கொஞ்சம் பூண்டை நம்முடன் எடுத்துச் செல்லலாம்.  சிலர் டோல்மா பாஸ் பகுதியைக் கடக்கும் போது கைக்குட்டையில் அல்லது சிறிய பிளாஸ்டிக் டப்பாவில் கர்ப்பூரம் போட்டு எடுத்துச் செல்கிறார்கள். மூச்சு விடுவதாற்குச் சிரமம் தோன்றினால் அந்தக் கர்ப்பூறத்தை அவ்வப்போது எடுத்து முகர்ந்து கொள்வது நமக்கு உதவியாக இருக்கும்.”

இவ்விதம் பல கருத்துக்கள் எங்கள் கலந்துரையாடலின் போது கூறப்பட்டன.