கைலாஸ்-மானசரோவர் – 15

8.6.98 திங்கட்கிழமை எங்கள் குழுவினர்களுள் ஐந்து பேர்களைத் தவிர, மற்றவர்கள் பதினான்கு பேரும் திரபுக்கிலிருந்து வந்த வழியே திரும்பிச் செல்வது என்று முடிவு செய்தனர். அதற்கேற்ப பரிக்ரமா செல்ல இருந்த எங்கள் ஐந்து பேருக்கும் தேவியான வழிகாட்டியையும், போர்ட்டர்களையும் சீன வழிகாட்டி ஏற்பாடு செய்தார்.

அதுபோலவே திரபுக்கிலிருந்து தார்ச்சன் முகாமிற்குத் திரும்ப இருந்த எங்கள் குழுவைச் சேர்ந்த பதினான்கு பேருக்கும், வழிகாட்டியையும், போர்ட்டர்களையும் நேபாள வழிகாட்டி ஏற்பாடு செய்தார்.

இரண்டாம் நாள் பரிக்ரமாவில் வரும் டோல்மா பாஸ் பகுதியின் காவல் தெய்வம் தாரா. இவள் காளி தேவியின் அல்லது பார்வதி தெவியின் ஒரு அம்சமாவாள். வங்காளத்தில் காளி தெவியின் ஒரு அம்சமாக தாரா வழிபடப்படுகிறாள். “தாரா” என்ற சொல்லுக்கு பிறவிக் கடலிலிருந்து கரையெற்றி முக்தி வழங்குபவள் என்பது பொருள். அதனால் டோல்மா பாஸ் பகுதி “தாரா பீடம்” என்றும் அழைக்கப்படுகிறது. திபெத்திய பௌத்தர்கள் தாரா தேவியைத் தங்கஃள் பெண் தெய்வமாக கருதுகிறார்கள்.

எங்கள் குழுவைச் சேர்ந்த ஒருவர் இதற்கு முன்பு மூன்று முறை கைலாஸ் பரிக்ரமம் செய்திருக்கிறார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் அவர் இரண்டாம் நாள் பரிக்ரமா செய்ய இருந்த எங்கள் ஐந்து பேரிடமும் அன்றிரவு பின்வருமாறு கூறினார் :

“இந்த இரண்டாம் நாள் பரிக்ரமாவின் போது – டோல்மா பாஸில் பரிக்ரமா செய்யும் போது – ஒவ்வோர் அங்குலத்தையும் கடப்பதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாகும். கைகளை வீசிக்கொண்டு உடலுக்கு எந்த விதத்திலும் சிரமம் ஏற்படாமல் நீங்கள் கவனமாக நடந்து செல்ல வேண்டும் விடியற்காலையிலேயெ புறப்பட்டுச் செல்வதால் பனிப்பாறையில் கட்கக வேண்டிய தூரம் எவ்வளவு என்று தெரியாமலேயே சுலபமாகக் கடந்து சென்று விடுவீர்கள். பகல் வெளிச்சமாக இருந்தால், கடந்து செல்ல வேண்டிய மலைகள், அவற்றின் ஏற்ற இறக்கங்கள் ஆகியவை சிலருக்கு பயத்தை ஏற்படுத்தி விடும். எனவே செல்ல வேண்டிய தூரம் பற்றித் தெரியாமல் இரவில் அந்த இடங்களை நீங்கள் கடந்து விடுவதுதான் உங்களுக்கு நல்லது. வழியில் களைப்பு தோன்றினாலும் பனியில் எங்கும் உட்காராதீர்கள். இடையில் எங்காவது பாறை தென்பட்டால் அங்கு நின்று உங்கள் கயில் உள்ள ஊன்றுகோலை ஊன்றி நன்றாகக் களைப்பு நீங்க மூச்சு விட்டு ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

தூரத்தில் ஆங்காங்கே பனிப்பாறைகள் உருண்டு விழுவதை பார்ப்பீர்கள். அந்த பனிப்பாறைகள் விழும் சத்தமும் “டமார் டமார்” என்று பெரிதாகக் கேட்கும் ஆனால் அவற்றையெல்லாம் கேட்டு பயந்து விடாதீர்கள். ஆனால், நீங்கள் பரிக்ரமா செல்லும் பாதையில் அந்தப்பனிப்பாறைகள் அருகில் விழுவதற்கு வாய்ப்பே கிடையாது. அவை தூரத்தில்தான் விழும். எனவே அவை விழுவதைப் பார்த்தோ, அவை விழும் சப்தத்தைக் கேட்டோ நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.

டோல்மா பாஸில் ஆக்ஸிஜன் குறைவு. அங்கு ஒருவேளை உங்களுக்கு சிரமம் ஏற்பட்டால் மட்டும், நீங்கள் உங்களுடன் எடுத்துச் செல்லும் ஆக்ஸிஜன் சிலிண்டரைப் பயன்படுத்துங்கள். ஆனால் கூடிய வரையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களைப் பயன்படுத்தாமல் இருப்பதார்கு முயற்சி செய்வதுதான் நல்லது. ஏனென்றால், ஆக்ஸிஜன் சிலீண்டரை பயன்படுத்தி நமக்கு மூச்சு விட்டுப் பழக்கம் கிடையாது. அதனால் அதைப் பயன்படுத்துவதும் உங்களுக்கு சிரமமாக இருக்கும். மேலும், அதை ஒரு முறை பயன்படுத்தினால், திரும்பத் திரும்ப அதையே பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் தோன்றும்.

நீங்கள் உங்களுடன் எடுத்துச் செல்லும் ஃபிளாஸ்க் வெந்நீரில் குளுகோஸ் கலந்து எடுத்துச் செல்லுங்கள். அதை அடிக்கடி டோல்மா பாஸைக் கடக்கும் போது குடிப்பது நல்லது.

பரிக்ரமா செல்ல இருந்த எங்களிடம் வழிகாட்டி, “விடியற்காலையில் இரண்டு மணிக்கே உங்கள் ஐந்து பேரையும் எழுப்பி விடுகிறேன். உடன் எடுத்துச் செல்வதற்கு ஃபிளாஸ்கில் வெந்நீர் போட்டுத் தருகிறேன்.  உங்களுக்கு ஹார்லிக்ஸ், காபி எது வேண்டுமோ அதைப் போட்டுத் தருகிறேன். எப்படியும் இந்திய நேரப்படி விடியற்காலை இரண்டு மணிக்குள் நாம் இந்த இடத்திலிருந்து புறப்பட்டு விட வேண்டும். அப்போதுதான் டோல்மா பாஸை விரைவில் நம்மால் சுலபமாக கட்கக முடியும்.

சூரியன் உதித்த பிறகு நாம் சென்றால் பனி உருக ஆரம்பித்து விடும். பனி உருக ஆரம்பித்து விட்டால் ஆங்காங்கே நாம் சறுக்கி விழ வேண்டிய நிலை ஏற்படும். மேலும், பகல் பன்னிரண்டு மணிக்கு மேல் அந்தப் பகுதிகலில் பனிப்புயல் வீச ஆரம்பித்து விடும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு இரண்டாம் நால் கைலாஸ் பரிக்ரமாவை நாம் சுலபமாகச் செய்ய வேண்டுமானால் இந்திய நேரப்படி இரண்டு மணிக்கே நீங்கள் ஐந்து பேரும் பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில் நட்கக ஆரம்பித்து விட வேண்டும் என்று விளக்கமாகக் கூறினார்.

கைலாஸ் பரிக்ரமா – இரண்டாம் நாள்

9.6.98 செவ்வாய்க்கிழமை, மறுநாள் பொர்ணமி என்பதால், இன்றிரவே நிலா வெளிச்சம் நன்றாக இருந்து கொண்டிருந்தது. இங்கு விடியற்காலையில் இந்திய நேரப்படி இரண்டு மணிக்கு பரிக்ரமா செல்ல இருந்த எங்கள் ஐந்து பேரையும் வழிகாட்டி வந்து படுக்கையிலிருந்து எழுப்பி விட்டார். விடியற்காலை 2.15 மணிக்கு அறையை விட்டு வெளியே வந்த போது, நீண்ட தூரத்தில் பரிக்ரமா பாதையில் சிலர் வரிசையாக டார்ச் அடித்தபடி சென்று கொண்டிருந்தார்கள்.

பரிக்ரமா செல்ல இருந்த நாங்கள் ஐந்து பேரும் ஆளுக்கொரு தோள்பை எடுத்துக் கொண்டோம். அதில் அன்றைய பரிக்ரமாவின் போது உணவுக்கு வேண்டிய லர்ந்த பழங்கள் போன்றவவைகள், மழை வந்தால் அணிந்து கொள்வதற்கு வேண்டிய ரெயின் கோட், ஃபிளாஸ்கில் கலந்த வெந்நீர், பிஸ்கெட், மாங்காய் வற்றல், வெள்லைப் பூண்டு, கர்ப்பூரம், பூஜைப்பொருட்கள் போன்றவற்றை எடுத்து வைத்துக் கொண்டோம்.

நாங்கள் திரபுக் முகாமிலிருந்து புறப்படுவதாற்கு முன்பு எங்களுடன் வந்த எங்கள் திபெத்திய உதவியாளர்களிடம் எங்கள் தோள்பைகளை கொடுத்து விட்டோம். இரவு 2.30 மணிக்குப் புறப்பட்டோம். அப்போது, எங்கள் குழுவைச் செர்ந்த மற்றவர்கள் அனைவரும், “ஜெய் ஸ்ரீ குருமகராஜ் கீ ஜெய், ஜெய் ஸ்ரீ மகாமாயி கீ ஜெய், ஜெய் ஸ்ரீ சுவாமிஜி மகராஜ் கீ ஜெய், ஜெய் ஸ்ரீ கைலாஸ்நாத் பகவான் கீ ஜெய்” என்று முழக்கமிட்டு எங்களை வழியனுப்பி வைத்தார்கள்.

எங்களுடன் இரண்டு வழிகாட்டிகளும் வந்தார்கள். திரபுக் முகாமிலிருந்து எங்களுடன் ஒரு கருப்பு நாயும் உடன் வந்தது.  பௌர்ணமிக்கு முதல் நாள் இரவு என்பதால், நிலவு வெளிச்சத்தில் டார்ச் லைட் உதவியும்கூட இல்லாமல் நாங்கள் பரிக்ரமா பாதையில் செல்ல ஆரம்பித்தோம். அப்போது கடுமையான குளிர் இருந்தது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

பொழுது புலரும் சமயத்தில் நாங்கள் “சிவ ஸ்தல்” என்ற இடத்தை அடைந்தோம். அந்த இடத்தை திபெத்தியர்கள், “மயானம்” என்று கருதுகிறார்கள். அங்கு சடலங்களைத் தகனம் செய்வதோ, புதைப்பதோ கிடையாது. இந்த இடத்தில் பரிக்ரமா செல்லும் திபெத்தியர்கள் தங்கள் ஆடைகள், தொப்பிகள், செருப்புகள், பூட்ஸ் போன்றவார்ரில் எதையாவது விட்டுச் செல்கிறார்கள். அது மட்டுமின்றி, அங்கு அவர்கள் தங்களின் ஒரு பிடி தலைமுடியையும், தங்கள் உடலைக் கத்தியால் கீறி ஒரு சில ரத்தத் துளிகளையும் விட்டுச் செல்கிறார்கள். இவ்விதம் செய்வதால் தங்களுக்கும், அந்த இடத்திற்கும் ஒரு சூட்சுமமான ஆன்மீக உறவு ஏற்படும்; அதனால் மரணத்திற்குப் பிறகு தங்கள் ஆத்மா பரம்பொருளுடன் ஐக்கியமடையும் என்று திபெத்தியர்கள் நம்புகிறார்கள்.

சிவ ஸ்தலை திபெத்தியர்கள் ஜபம் செய்தபடியே வலம் வருகிறார்கள். நாங்கள் சென்ற போது அங்கு திபெத்தியர்கள் சிலர் அமர்ந்து தங்கள் மத நூல்களைப் படித்துக் கொண்டிருந்தார்கள்.  பின்னர் நாங்கள் அங்கிருந்து எங்கள் பரிக்ரமா பயணத்தைத் தொடர்ந்தோம். டோல்மா பாஸை அடைவதார்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கும் முன்பே, நாங்கள் பார்க்கும் இடமெங்கும் பனி மட்டுமே இருந்த பனிப் பாறைகளின் மீது நடந்து செல்ல வெண்டியிருந்தது. நாங்கள் சென்ற பனிப்பாதையில் பூமி வெடிப்பு போன்ற சில இடங்களில், பனிப்பாறைகளின் அடியில் ஆங்காங்கே சிறிய அளவிலும், பெரிய அளவிலும் தண்ணிர் வேகமாகப் பாய்ந்து சென்று கொண்டிருந்தது.

இங்கு சில பகுதிகள் நேரில் பார்ப்பதாற்கு பனிப்பாறைகள் போன்று தென்பட்டன. ஆனால் நாம் கொண்டு செல்லும் ஊன்றுகோலை ஊன்றும்போது பனி மிருதுவாக இருந்தால் ஊன்றுகோல் உள்ளே சென்று விடுகிறது. பனி கெட்டியாக இருந்தால் நம் ஊன்றுகோல் உறுதியாக நிற்கிறது. “எந்த இடத்தில் பனி மிருதுவாக இருக்கிறது, எந்த இடத்தில் பனி உறுதியாக இருக்கிறது” என்ப்தை இங்கு வசிக்கும் திபெத்தியர்களால்தான் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே இங்குள்ள திபெத்திய போர்ட்டர்களின் உதவியால் மட்டுமெ நாம் இந்தப் பனிப்பகுதிகளைக் கடந்து செல்ல முடியும். அவர்களின் உதவியில்லாமல் நாமாகச் சென்றால், கால் வைக்கக் கூடாத இடத்தில் காலை வைத்து ஆபத்தில் சிக்கிக் கொள்வதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

எங்கே பார்த்தால் பனிப்பாறைகள் சூழ்ந்திருந்த நிலையில், இடையில் எங்கேயாவது கற்பாறையைப் பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருந்தது. காரணம், அது போன்ற பாறை இருந்த இடங்களில் நின்று அல்லது அமர்ந்து அவ்வப்போது சிறிது ஓய்வெடுத்துக்கொள்ள முடியும்.

நாங்கள் டோல்மா பாஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த முக்கால்வாசி தூரத்தில் வழிகாட்டி என்னிடம் வந்து வாயத் திறக்கச் சொல்லி, நாக்கின் அடியில் சிறிய ஒரு பச்சைக் கற்பூரத் துண்டை வைத்து, “இதை அப்படியே வைத்திருங்கள்” என்று கூறினார். எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு அவர் அவ்விதம் செய்தார்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் டோல்மா பாஸைச் சுற்றிலும், சுமார் 15 கி.மீ முதல் 20 கி.மீ. தூரம் வரையில் பல மலைகள் சூழ்ந்திருந்தன. அந்த மலைப் பகுதிகளிலும் பெரும்பாலான இடங்களில் பனி மூடியிருந்தது.

அந்தப் பகுதியில் நடந்து சென்ற போது, அருகிலும் தூரத்திலும் கண்ட பனி மலைகளின் காட்சிகள், “கந்தர்வ லோகம், தேவ  லோகம்” என்று சொல்லத்தக்க வகையில், ஒரு அதிசயக் காட்சியாகவே இருந்தன. டோல்மா பாஸ் என்பது ஏறத்தாழ செங்குத்தாகவே மலை மீது ஏறிச் செல்ல வேண்டிய பனி சூழ்ந்த பகுதியாகும்.

நாங்கள் டோல்மா பாச் பரிக்ரமம் சென்றபோது, ஒரு யாத்திரிகர் கூட அன்றைய தினம் யாக் மூலம் டோல்மா பாஸில் பரிக்ரமா செல்லவில்லை. நாங்கள் டோல்மா பாஸைக் கடந்து சென்று கொண்டிருந்த போது, எங்களுடன் திபெத்தியர்கள் சிலரும் சிறு சிறு குழுக்களாக பரிக்ரமா சென்று கொண்டிருந்தார்கள். அவர்களில் பெண் ஒருத்தி போதிய ஆக்ஸிஜன் இல்லாததால் சுய நினைவிழந்து விழுந்து விட்டாள். அவர்களுடன் வந்த மற்ற திபெத்தியர்கள் ஒரு கனமான போர்வையில் அந்தப் பெண்ணைப் படுக்க வைத்து, அந்தப் போர்வையுடன் அந்தப் பெண்ணை நான்கு பக்கங்களிலும் பிடித்தபடியே சுமந்து வந்தார்கள்.

இதை எனது போர்ட்டர் பார்த்தார். அவர் நாங்கள் எடுத்துச் சென்றிருந்த ஆக்ஸிஜன் சிலிண்டரை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்து, சுய நினைவு இல்லாமல் இருந்த அவள் நன்றாக மூச்சு விடுவதர்கு உதவி செய்தார்.  அதனால் அந்தப் பெண்ணுக்கு சுய நினைவு திரும்பியது. பின்னர் அவள் குணமடைந்து சிரித்தபடியே நடந்து சென்றாள்.

ஆங்கிலத்தில் டோல்மா பாஸ் என்று அழைக்கப்படும் இந்த இடம் திபெத்திய மொழ்யில் “டோல்மா லா” என்று வழங்குகிறது.

டோல்மா பாஸ் என்ற இந்தப் பகுதியில் ஒருவர் செல்லும் போது அவரது மனித சரீரம் தேவ சரீரமாக மாறுகிறது என்று கூறப்படுகிறது.  நாங்கள் டோல்மா பாஸை அடைந்த போது காலை சுமார் ஒன்பது மணி இருக்கும். இந்த டோல்மா பாஸ் பகுதியில் ஒரு பாறை இருக்கிறது.  அது சுமார் 8 அடி உயரமும், 12 அடி நீளமும், 5 அடி அகலமும் கொண்டது. இந்தப் பாறையை பரிக்ரமா செல்லும் திபெத்தியர்களும், இந்துக்களும் தேவியாகவே கருதி வழிபடுகிறார்கள். பரிக்ரமா செல்பவர்கள் அனைவரும் அந்தப் பாறையில் தலை வைத்து வணங்குகிறார்கள். அதை வலம் வந்து வழிபடுகிறார்கள். தூபம், தீபம், நைவேத்தியம் போன்றவற்றை சமர்ப்பித்து பூஜை செய்கிறார்கள்.

நாங்கள் அங்கு சென்றபோது அந்தப் பாறையின் மேலும் கீழும் சீன ரூபாய் நோட்டுகள், நேபாள ரூபாய் நோட்டுகள், இந்திய ரூபாய் நோட்டுகள், பல நாட்டு நாணயங்கள் போன்றவைகள் ஏராளமாக இறைந்து கிடந்தன. ஆனால் அவ்விதம் அங்கு தேவிக்கு சமர்ப்பிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களையோ, நாணயங்களையோ யாரும் அங்கிருந்து எடுத்துச் செல்வதாகத் தெரியவில்லை. மேலும், அந்தப் பாறையில் ஆங்காங்கே பல வண்ணங்களிலும், பல அளவுகளிலும் ஆன காகிதப் படங்களையும், ரூபாய் நோட்டுகளையும், யாக் வெண்ணெய் தடவி ஒட்டியிருந்தார்கள். அவற்றில் பலவற்றில் குதிரையின் மீது ஒருவர் அமர்ந்திருப்பது போன்ற உருவம் காணப்பட்டது.

இது போன்று, அங்கு தேவிக்குத் திபெத்தியர்களால் அர்ப்பிக்கப்பட்ட ஏதேதோ பொருட்கள் ஏராளமாக அங்கும் இங்கும் சிதறிக் கிடந்தன. எங்கள் குழுவின் சார்பாக அங்கு தேவிக்கு அர்ப்பிப்பதாற்காக நாங்கள் ஒரு புடவையை எடுத்துச் சென்றிருந்தோம். அதை அந்தப் பாறையைச் சுற்றி அணிவித்தோம். அந்தப் பாறையைப் பார்த்தபடியே நாங்கல் அதன் அருகில் சுமார் அரை மணி நேரம் அமர்ந்திருந்தோம். அங்கிருந்த கொடிக் கம்பங்களில் திபெத்தியர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கல் பிரார்த்தனைக் கொடிகளை, சிறியதும் பெரியதுமாக பல நிறங்களில் கட்டியிருந்தார்கள்.

அங்கு, எங்கள் குழுவைச் சேர்ந்த ஒருவர் தமிழிலும், ஆங்கிலத்திலும், நாங்கள் சென்னையிலிருந்து எடுத்துச் சென்ற “கைலாஸ் – மானசரோவர் யாத்திரை, 1998 பக்தர்கள், ராமகிருஷ்ணா மடம், சென்னை 600004, தென் இந்தியா” என்ற இரண்டு துணி பேனர்களைக் கட்டினார். மேலும் எங்கள் குழுவைச் சேர்ந்த மற்றொருவர் கொடுத்தனுப்பிய “சிவ சிவ” என்ற எழுத்துக்கள் கொண்ட பரிவட்டம், ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் வாசகர்கள் கொடுத்தனுப்பிய “ஓம் நமசிவாய” மந்திரம் எழுதப்பட்ட காகிதங்கள், ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் வாசகர்கள் கொடுத்தனுப்பிய பன்னீர் இலையில் எழுதப்பட்ட “ஓம் நமசிவாய” மந்திரங்கள் ஆகியவற்றை டோல்மா பாறையின் அருகில் அவற்றை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து பிரார்த்தித்தோம்.

அந்த நாள் 1998 பிப்ரவரி (காசி விஸ்வநாதர் அட்டைப்படம் கொண்ட சிவராத்திரி இதழ்), ஏப்ரல் (ஸ்ரீ ராமர் அட்டைப்படம் கொண்ட ஸ்ரீராமநவமி சிறப்பிதழ்) ஆகிய ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையின் இரண்டு இதழ்களை வைத்து பிரார்த்தனை செய்தது எனக்கு மிகுந்த மன நிரைவைத் தந்தது.

இந்த டோல்மா பாஸ் பகுதியிக்ல் பல வண்ணத் துணிகளில், கனமான கயிற்றால் கட்டப்பட்ட திபெத்தியர்களின் பிரார்த்தனைக் கொடிகள், தோரணங்கள் போன்று இருந்தன. அவற்றைக் காலால் யாரும் அங்கு தாண்டிச் செல்வதில்லை. அது போன்ற தோரணங்கள் வரும் இடங்களில் பனிப் பாறைகள் மீது கிடக்கும் தோரணத்தைத் தலைக்கு மேலே தூக்கி அதில் நுழைந்து பரிக்ரமா செல்பவர்கள் சென்றார்கள். நாங்களும் அவ்விதமே செய்தோம்.