திபெத்தியர்கள் மிகவும் ஏழைகள். படிப்பில்லாதவர்கள். நவீன நாகரீகம் அறியாதவர்கள் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் இந்த திபெத்தியர்கள் டோல்மா பாஸில் உள்ள பாறையைத் தேவியாகவெ கருதி வழிபடுவதை நேரில் பார்க்கும் போது, அவர்களின் பக்தி அபாரமானது என்பதை நாம் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அதை மற்றவர்கள், எழுதியோ, சொல்லக் கேட்டோ புரிந்து கொள்ள முடியாது. அந்த எளிய உள்ளம் கொண்ட திபெத்தியர்களின் பக்தியை அங்கு நேரில் சென்று பார்ப்பவர்கள் மட்டுமே சரியாகப் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் அப்பாறையை அம்பாளின் சொரூபமாகவே பார்க்கிறார்கள், வழிபடுகிறார்கள். அதனிடம் பிரார்த்தனை முதலானவற்ரைச் செய்கிறார்கள். அந்தப் பாறையில் தலை வைத்தபடியே திபெத்தியர்கள் பிரார்த்தனை செய்வதைப் பார்த்து நாங்களும் அவ்விதமே செய்தோம்.
அந்த டோல்மாலா பாறையில் எங்கள் வழிபாடுகளை முடித்துக் கொண்டு, அந்தப் பாறையை வலம் வந்து வணங்கி விட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.
கௌரி குண்டம்
டோல்மா பாஸிலிருந்து இறங்கும் போதும் செங்குத்தாகவே அந்தப் பனி மலையில் நாங்கள் இறங்கி வந்தோம்.
வழியில் பிரசித்தி பெற்ற கௌரி குண்டம் என்ற குளம் தென்பட்டது. இந்தக் குளம்தான் உலகிலேயே கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் அமைந்துள்ள குளம். கடல் மட்டத்திலிருந்து இந்த குளம் 18,600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அந்தக் கௌரி குண்டத்தைச் சுற்றி பனி மலைகள் இருந்தன. பெரிய நகரங்களில் நான்கு சாலைகள் கூடும் இடம் போன்று ஏறத்தாழ மலைகளின் அடிவாரத்தில் இந்த கௌரி குண்டம் அமைந்திருந்தது. சிவபெருமானை கணவனாக அடையும் பொருட்டு பார்வதி தேவி இந்தக் குளத்தில் நீராடி தவம் செய்தாள், என்று கூறப்படுகிறது. இதன் நீர் எப்போதுமே பச்ச நிறமாகத்தான் இருக்கும். நாங்கள் சென்ற போதும் அது பச்சை நிறத்தில் இருந்ததைப் பார்த்தோம்.
இந்த கௌரி குண்டத்தில் தினமும் பார்வதி தேவி வந்து நீராடுவதாக ஐதீகம். பார்வதி தேவியின் நிறம் பச்சை. அவள் வந்து நீராடும் இந்த குளத்தின் நீரும் பச்சை நிறத்தில் இருக்கிறது. இந்தக் குளத்தின் மத்தியில் பார்வதி தேவி, சிவபெருமானை எப்போதும் பூஜித்துக் கொண்டிருக்கிறாள் என்பது ஐதீகம்.
நாங்கள் கௌரி குண்டம் குளத்தின் பெரும் பகுதியில் பனி உறைந்திருந்தது. அந்தப் பனியின் இடையில் ஆங்காங்கே சிறிது தண்ணீர் இருப்பதும் தெரிந்தது. எனவே, நாங்கள் கௌரி குண்டத்தை நேரில் பார்த்த போது அதன் அருகில் செல்லவோ, தீர்த்தம் எடுக்கவோ முடியாது என்பது புரிந்தது. அங்கு மலையின் இறக்கத்தில் இறங்கி கௌ குண்டத்தை அடையும் பகுதி முழுவதையுமே அப்போது பனி மூடியிருந்தது.
அதில் இறங்கிக் கால் வைத்தால், வழுக்கிக் கொண்டே போய் கௌரி குண்டத்தில்தான் விழ நேரிடும். கௌரி குண்டத்தைப் பார்த்தபடியே நாங்கள் டோல்மா பாஸிலிருந்து கீழே இறங்கி வர ஆரம்பித்தோம்.
கௌரி குண்டத்தின் இடப்பக்கத்தில் தூரத்தில் ஹயக்ரீவ மலை அமைந்துள்ளது.
டோல்மா பாஸைக் கடந்த பிறகும்கூட பனி மூடிய பாறைகளின் மீது நாங்கள் சுமார் 4 கி.மீ தூரம் நடக்க வெண்டியிருந்தது.
எனக்கு சற்று முன்னால் திபெத்தியர்கள் சிலர் ஒரு சிறு குழுவாகப் பரிக்ரமம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர், தன் கையிலிருந்த ஊன்றுகோலை தவறுதலாக பனிப்பாறையில் ஓர் இடத்தில் ஊன்றிய போது தடுக்கி பனிப்பாறையில் விழுந்து விட்டார். உள்ளூர்வாசியான திபெத்தியர் ஒருவரே கால் தடுக்கி இப்படி தவறி விழுந்தது, அவருக்குப் பின்னால் சுமார் 10 அடி தூரத்தில் வந்து கொண்டிருந்த என் பார்வையில் பட்டது. அதனால் நான் மேலும் எச்சரிக்கையாக பனி மீது நடக்க ஆரம்பித்தேன்.
இவ்விதம் நாங்கள் மலை இறக்கத்தைக்க் கடந்து ஒரு வழியாக சமவெளிக்கு வந்து சேர்ந்தோம். பகல் ஒரு மணிக்கு நாங்கள் பரிக்ரமா பாதையிலுள்ள ஓர் ஆற்றின் கரையில் பகலுணவுக்காகத் தங்கினோம்.
அப்போது திரபுக் முகாமிலிருந்து பரிக்ரமா முழுவதும் எங்களோடு வந்து கொண்டிருந்த கறுப்பு நாயும் எங்களோடு இருந்தது. அங்கு நாங்கள் சுமார் 45 நிமிடங்கள் இருந்தோம். அங்கிருந்து நாங்கள் பரிக்ரமாவைத் தொடர ஆரம்பித்த போது, அது வரையில் என்னுடன் வந்து கொண்டிருந்த கறுப்பு நாய் அங்கிருந்து எங்கோ எங்கலை விட்டுப் பிரிந்து சென்று விட்டது.
பகலுணவுக்குப் பிறகு பரிக்ரமாவைத் தொடங்கினோம். எங்கள் பரிக்ரமா பாதை ஓர் ஆற்றின் கரையை ஒட்டியே சென்று கொண்டிருந்தது.
வழியில் சுமார் பத்து பதினைந்து இடங்களில் நீர் ஓடிக் கொண்டிருந்தது. பெரிய கால்வாய்கள் குறுக்கிட்டன. என்னால் தாண்ட இயலாத கால்வாய்களை நான் கடப்பதற்கு உதவியாக என்னுடன் வந்த போர்ட்டர் பெரிய கற்களைக் கொண்டு வந்து போட்டார். அதனால் கால்வாய் நீரில் என் கால்கள் நனையாமல் அந்தக் கால்வாய்களை நான் கடந்து சென்றேன்.
சமவெளியாக இருந்த ஓர் இடத்தில் சில யாக்குகள் மேய்ந்து கொண்டிருந்தன. அதை எங்கள் வழிகாட்டி கவனித்தார். அவர் யாக் உரிமையாளர்களிடம் கலந்து பேசி, மேற்கொண்டு எங்கள் வழிகாட்டி மற்றும் எங்களில் சிலர் பயணம் செய்வதார்கு யாக் எருமைகள் ஏற்பாடு செய்தார்.
எனக்கு ஏற்பாடு செய்யப்பட்ட் யாக் எருமையின் மீது அமர்ந்து நான் சுமர் ஒரு மணி நேரம் பயணம் செய்தேன். முதல் அரை மணி நேரம் நன்றாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அதாற்கடுத்த அரை மணி நெர பயணம் சுகமான அனுபவமாக இல்லை. யாக் சமவெளியில் சென்ற போது அந்தப் பயணம் சுகமாகவே இருந்தது. ஆங்காங்கே மலையில் ஏற்றத்திலும், இறக்கத்திலும் தன் விருப்பம் போல் அது ஓடிய போது, அந்தப் பயணம் மிகவும் கஷ்டமாக இருந்தது. அது போன்ற சமயங்களில் யாக் உரிமையான் எழுப்பிய விசில் சத்தத்தைக் கூட யாக் பொருட்படுத்தாமல் ஓடிய போது “இந்த யாக்குகள் மனிதர்கள் யாருக்கும் கட்டுப்பட்டவை அல்ல, இவை சிவபெருமான் ஒருவருக்கு மட்டுமெ கட்டுப்பட்டவை என்று தோன்றியது.
கைலாஸ் செல்லாதவர்களும், செல்ல விரும்புபவர்களும், யாக் மீது அமர்ந்து செல்வது சுகமான அனுபவமாக இருக்கும் என்று நினைக்கக் கூடும். ஆனால் அது உண்மையல்ல. அரை மணி நேரம் யாக்கில் பிரயாணம் செய்வது, அரை மணி நெரம் நட்பபது என்று வேண்டுமானால் கைலாஸ் யாத்திரிகர்கள் தங்கள் பரிக்ரமாவை வைத்துக் கொள்ளலாமே தவிர, முழு பரிக்ரமா பயனத்தையும் யாக்கிலேயே செய்வது என்பது பெரிதும் துன்ப அனுபவமாகவே இருக்கும்.
பல சமயங்களில் நான் பயணம் செய்த யாக் பரிக்ரமாவின் போது யாத்திரிகர்கள் நடந்து செல்லும் ஒற்றையடிப் பாதையிலிருந்து விலகி தன் போக்கில் சென்றது. ஐந்தாறு இடங்களில் பனித்தரைகள் இருந்த இடங்களில் யாக் நடந்து சென்றது. அது அப்படி சென்ற போது, சில இடங்களில் யாக்கின் கால்கள் அரை அடி அல்லது முக்காள் அடி கூட பனிக்குள் சென்றன. அப்போது யாக்கிற்கு எவ்வளவு சிரமமாக இருந்திருக்கும் என்பதை என்னால் ஒருவாறு புரிந்து கொள்ள முடிந்தது. சில இடங்களில் யாக் சாதாரணமாக நடந்து சென்றது. அது போன்ற சமயங்களில் யாக் தனது உரிமையாளர்களின் விசில் சப்தத்திற்கேற்ப பொறுப்புடன் நடந்து கொண்டது. யாக்கின் சொந்தக்காரர் யாக்கின் அருகில்தான் வந்து கொண்டிருந்தார் என்றாலும் அது சில இடங்களில் தன் போக்கில் கட்டு மீறி மிகவும் வேகமாக ஓடியது. அப்படி அது ஓடும் போது வழியில் பாறைகள் தென்பட்ட போதெல்லாம் அவற்றில் என் கால் மோதிவிடாமல் இருப்பதற்காக அவ்வப்போது கால்களை மேலே தூக்கி ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.
சுமார் ஒரு மணி நேரம் யாக்கில் பயணம் செய்து “ஜுதுல்புக்” என்ற இடத்தை அடைந்தோம். இந்த இடத்திற்கு ஜாங்க்ஜிரபு என்ற ஒரு பெயரும் உண்டு. நாங்கள் அங்கு தங்கிய விடுதி மண் கட்டிடம் ஆகும். இந்த விடுதியின் உரிமையாளரும் இந்த விடுதியின் ஒரு பகுதியிலேயே குடியிருக்கிறார்.
அன்றிரவு நாங்கள் ஐந்து பேரும் ஒரே அறையில் தங்கினோம்.
கைலாஸ் பரிக்ரமா – மூன்றாம் நாள்
10.6.98 புதன்கிழமை. – இன்று காலையில் சுமார் ஒன்பது மணிக்கு நாங்கள் ஐந்து பேரும் மூன்றாம் நாள் பரிக்ரமா பாதையில் நடக்க ஆரம்பித்தோம். மூன்று நாள் பரிக்ரமாவிலும், நடப்பதர்கு இது சற்று சுலபமான பகுதியாகும். பொதுவாக பெரிய ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் சமதளத்திலேயே நாங்கள் நடந்து சென்றோம். பரந்த சமவெளிகளும், சிற்றாறுகளும், உயர்ந்த மலைகளும், பல வண்ணக் குன்றுகளுமாக இந்தப் பாதை கண்ணுக்கு விருந்தளித்தது.
இந்த பரிக்ரமாவின் போது பர்மியர்களின் கட்டிடக் கலையை நினைவுபடுத்தும் விதத்தில், அடுக்கடுக்காக அமைந்த கோபுரங்கள் போன்ற காட்சி கயிலைக்குச் சற்று தூரத்திலிருந்த ஒரு மலையில் தென்பட்டது. ஜுதுல்புக் விடுதியிலிருந்து சுமார் 2 கி.மீ தூரம் நடந்திருப்போம். அப்போது லேசாக பனிமழை பெய்ய ஆரம்பித்தது. அந்தப் பனிமழை சர்க்கரை தூவுவது போலும், வெள்ளைப்பூ ஆகாயத்திலிருந்து சொரிவது போலும் இருந்தது. அது எங்கள் துணிகளில் ஒட்டிக்கொண்டது. இந்தப் பனிமழை சுமார் அரை மணி நேரம் நீடித்தது.
நாங்கள் சென்ற வழியில் அடுக்கடுக்காக கோட்டைகள் போன்றும், அழகிய அமைப்புடைய அஷ மேரு வடிவங்களில் நாங்கள் கண்ட வானளாவிய பல மலைகளின் காட்சிகள் எங்களை வியக்க வைத்தன. வழியில் ஒரு செக் போஸ்ட் வந்தது. அங்கு நாங்கள் சிறிது நேரம் தங்கியிருந்தோம். காலை பதினோரு மணிக்கு செக் போஸ்ட் இருந்த இடத்திற்கு எங்கள் ஜீப் வந்தது. நாங்கள் ஜீப்பில் ஏறி தார்ச்சனுக்குப் புறப்பட்டோம். காலை 11.15 மணிக்கு நாங்கள் சென்ற ஜீப் தார்ச்சனை சென்றடைந்தது.
தார்ச்சன் முகாமிலிருந்த எங்கள் குழுவைச் சேர்ந்த அத்தனை பேரும் ஜீப் அங்கு சென்று நின்றதுமே, தங்கள் அறைகளை விட்டு வெளியே வந்து, மிகுந்த குதூகலத்துடனும், பெரிய ஆரவாரத்துடனும், மகிழ்ச்சி வெள்ளம் கரை புரள, “ஓம் நமசிவாய! ஜெய் ஸ்ரீ கைலாஸ்பதி கீ ஜெய்! ஜெய் ஸ்ரீ குருமகராஜ் கீ ஜெய்! ஜெய் ஸ்ரீ மகாமாயி கீ ஜெய்! ஜெய் ஸ்ரீ சுவாமிஜி மகராஜ் கீ ஜெய்!” என்று பெரிய முழக்கம் செய்தார்கள்.