மானசரோவரை நோக்கி :
அன்று மாலை 6.30 மணிக்கு தார்ச்சன் முகாமிலிருந்து எங்கள் ஜீப்புகள் மானசரோவர் நோக்கிப் புறப்பட்டன.
பத்து நாட்கள் கயிலாயத்தில் இறைவன் திருவடியில் இருந்து விட்டு அங்கிருந்து புறப்பட்ட போது “கயிலாயத்தை விட்டு புறப்படுகிறோமே!” என்று உள்ளம் அழுது கொண்டிருந்தது. கயிலாயத்த்ல் கயிலைநாதனைத் தரிசிப்பது அதுவே கடைசி முறை என்பதால், இனி அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை, ஜீப்பில் சென்றபடியே கழுத்தைத் திருப்பித் திருப்பி கயிலாயத்தைப் பார்த்துக் கொண்டே வந்தோம்.
வழியில் சீனர்களின் ஒரு பெரிய ராணுவ முகாம் இருப்பது தெரிந்தது. இந்த இடத்தில் சீன ராணுவத்தினர் நம் ஜீப்பை நிறுத்துவார்கள். இங்குள்ள அதிகாரியிடம் நாம் நம்முடைய பாஸ்போர்ட்டுகளைக் காட்டவேண்டியிருக்கும். இந்த யாத்திரையில் பாஸ்போர்ட்டுகளைக் காட்ட வேண்டிய இரண்டாவது இடம் இந்த ராணுவ முகாம்தான். ஆனால் அந்த ராணுவ முகாமில் எங்கள் பாஸ்போர்ட்டுகளைப் பரிசோதிக்காமலேயேஎங்கள் ஜீப்கள் மேற்கொண்டு செல்வதாற்கு அனுமதித்து விட்டார்கள். ஆனால் இந்த இரண்டு இடங்களைத் தவிரவும், எந்த இடத்தில் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ராணுவத்தினர் இந்தியாவிலிருந்து செல்லும் யாத்திரிகர்களின் பாஸ்போர்ட்டுகளைக் கேட்பதாற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் கைலாஸ் யாத்திரிகர்கள் எப்போது பாஸ்போர்ட், விசா போன்றவற்றை மிகுந்த கவனத்துடன் வைத்திருக்க வேண்டும்.
அன்றைய தினம் இரவு சுமார் 7.15 மணிக்கு மானசரோவர் கரையிலுள்ள ஹோரே என்ற இடத்தை எங்கள் ஜீப் சென்றடைந்தது. இந்த ஹோரே என்ற இடம் நாங்கள் மானசரோவரில் மே 27-ம் தேதி இரவு முதலில் வந்து தங்கிய இடமாகும். மீண்டும் இரண்டாவது முறையாக இப்போது இங்குள்ள விடுதியில் வந்து தங்கினோம்.
நாங்கள் ஹோரேவை அடைந்த நாள் பௌர்ணமி ஆகும். கயிலாயத்தின் சிறப்பை மேலும் அங்கு அதிகமாகக் காணவும், உணரவும் முடியும். பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் கயிலாயத்தைத் தரிசிப்பது மிகவும் அரிய ஒரு தெய்வீகக் காட்சியாகும். நாங்கள் ஹோரேவில் தங்கிய நாளன்று இரவு கயிலை மீதுள்ள பனியின் மீது நிலவொளி பட்டதால் கைலாஸ் மேலும் தெய்வீகப் பொலிவுடன் பிரகாசித்தது. பௌர்ணமி நாளில் கயிலையைத் தரிசிப்பது மிகவும் விசேஷம். மிகவும் பாக்கியம். கயிலைநாதனைப் பௌர்ணமி நாளில் மனம் நெகிழ, கண்ணார தரிசிப்பவர்கள் கண் பெற்ற பயனைப் பெற்றுவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.
11.6.98 காலையில் நாங்கள் புறப்பட்ட போது தக்வா மருத்துவமனைக்குச் சென்றிருந்த எங்கள் குழுவைச் சேர்ந்த நோயாளி இன்று நலமாக வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டார்.
இன்று மானசரோவரில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு காட்மாண்டு நோக்கிப் புறப்படத் திட்டமிட்டிருந்தோம். அதன்படி காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு தீர்த்தம் எடுப்பதாற்கு வேண்டிய பிளாஸ்டிக் வாட்டர் கேன்களுடன் எங்கள் குழுவைச் சேர்ந்த சிலர் மானசரோவருக்குச் சென்றார்கள். அவர்கள் மானசரோவரில் தண்ணீர் ஐஸ் போன்று இருந்ததால், அதிலிருந்து தண்ணீர் எடுப்பதார்கு மிகவும் சிரமப்பட்டுப் போனார்கள். எங்கள் வழிகாட்டி பல முறை மானசரோவர் சென்றவர். அதனால் மானசரோவரின் குளிர் அவருக்கு மிகவும் பழகிப் போயிருந்தது. அவர்தான் எங்கள் குழுவினருக்காக மானசரோவரில் இறங்கித் தண்ணீர் எடுத்தார். ஆனால் அவராலேயே மானசரோவரின் ஐஸ் போன்ற குளிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. அதனால் அவரது கால்கள் மானசரோவருக்குள் இறங்கியதுமே நடனமாட ஆரம்பித்து விட்டன என்றே சொல்ல வேண்டும். அவர் மிகவும் சிரமப்பட்டு எங்கள் குழுவினரிடமிருந்து சில காலி வாட்டர் கேன்களைப் பெற்று, அவற்றில் மானசரோவர் தீர்த்தம் நிரப்பிக் கொடுத்தார்.
எங்கள் குழுவினர் அனைவரும் மானசரோவர் கரைக்குச் சென்றோம். அங்கு மானசரோவர் நீரை எங்கள் தலையில் தெளித்துக் கொண்டோம். அப்போது மானசரோவரின் நீர் பனிக்கட்டியைத் தொடுவது போன்று அவ்வளவு குளிர்ச்சியாக இருந்தது.
நாங்கள் மானசரோவர் கரைக்குச் சென்ற போது கயிலாயத்தைப் பார்க்க முடியாதபடி பனிமூட்டம் இருந்தது. ஆனால் நாங்கள் அங்கு சென்ற அரை மணி நேரத்தில் பனிமூட்டம் விலகி கயிலாயத்தின் தரிசனம் எங்களுக்கு நன்றாகக் கிடைத்தது. வாழ்க்கையில் இனி மீண்டும் கயிலாயத்தையும், மானசரோவரையும் நேரில் பார்க்க முடியாது என்பதால் கயிலாயத்தையும், மானசரோவரையும் நாங்கள் ஒருவித ஏக்கத்துடன் பார்த்தோம். அதைத் தவிர அங்கு வேறு என்ன செய்ய முடியும்? மானசரோவர் கரையில் இருந்தபடியே கயிலாயத்தை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினோம். பிறகு மானசரோவர் கரையில் அமர்ந்து அனைவரும் பிரார்த்தனை செய்தோம்.
மானசரோவர் அலைகள், பந்து போன்ற ஒருவித புல் கற்றைகள் சிலவற்றைக் கரையில் கொண்டு வந்து ஒதுக்கின. அவற்றையும், சிறிது மானசரோவர் மணலையும் மானசரோவரின் பிரசாதமாக எங்களில் சிலர் எடுத்து வைத்துக் கொண்டோம்.
அனைத்தும் முடிந்த பிறகு நாங்கள் எங்கள் ஜீப்புகளில் புறப்பட்டோம். ஓர் இடத்தில் எங்கள் ஜீப்பின் டயர்கள் மண்ணில் சிக்கிக் கொண்டன. அந்தத் டயர்களை டிரைவர் எவ்வளவு முயற்சி செய்தும் வெளியே எடுக்க முடியவில்லை. நாங்கள் கீழே இறங்கிக் கூட ஜீப்பைத் தள்ளிப் பார்த்தோம். என்றாலும் பயனில்லை. அங்கிருந்து மானசரோவர் சுமார் 150 மீட்டர் தூரத்தில்தான் இருந்தது. ஆதலால், இப்படி இங்கு தாமதமாவதும் நல்லதுதான். அதனால் இங்கிருந்தே மானசரோவரையும், கயிலாயத்தையும் இன்னும் சிறிது நேரம் தரிசிக்கலாம் என்று தோன்றியது.
இதற்குள் ஜீப்பையும், லாரியையும் இரும்புக் கயிற்றால் பிணைத்து, ஜீப்பையும், லாரியையும் ஒரே நேரத்தில் ஓட்டியதும், மணலில் சிக்கியிருந்த ஜீப் வெளியே வந்து விட்டது. அதோடு மானசரோவரை விட்டு நாங்கள் பிரிய வேண்டியதாயிற்று.
மானசரோவரையு,ம், மாந்தாதா மலையையும் பார்த்தபடியே ஜீப்பில் சென்றோம். வழியில் எத்தனையோ மலைகளையும், மலைத்தொடர்களையும் பார்த்தபடியே சென்றோம். இவற்றில் ஜீப் சென்ற இடப்பக்கத்திலிருந்த மலைகளில் பனி சூழ்ந்திருந்தது. வழியில் காற்றில் மணல் குவிந்து சிறிய சிறிய குன்றுகள் போல் சில இடங்கலில் காட்சி தந்தன. இவ்விதம் குவிந்த மணல் குன்றுகளின் உயரம் முப்பது, முப்பத்தைந்து அடிகள் கூட இருந்தன. வழி முழுவதும், சாலையின் இரண்டு பக்கங்களிலும் அருகிலும், தொலைவிலும், சிறியதும் பெரியதுமாக . மலைகளும், மலைத்தொடர்களும் இருந்து கொண்டே இருந்தன.
அன்றிரவு 10.30 மணிக்கு பர்யாங்க் என்ற இடத்திலுள்ள யாக் ஹோட்டலை எங்கள் ஜீப்புகள் சென்றடைந்தன. இந்த பர்யாங்க் விடுதியில் 27.5.98 அன்று நாங்கள் தங்கிய அதே அறையகளில் இப்போதும் தங்கினோம்.
பர்யாங்க் – சாகா
12.6.98 வெள்ளிக்கிழமை. இன்று காலை 10.40 மணிக்கு பர்யாங்கிலிருந்து நாங்கள் அவரவர்களுக்குரிய ஜீப்புகளில் ஏறி சாகா என்ற இடம் நோக்கிப் புறப்பட்டோம். சுமார் இரண்டு மணிக்கு டோங்பா என்ற ஊரில் பகலுணவு சாப்பிட்டோம். இந்த டோங்பா சற்று பெரிய கிராமம். ஆனால் இப்போது பாழடைந்த நிலையில் மிகவும் பரிதாபமாகக் கானப்பட்டது. சீனர்கள் இந்த இடத்தை ஆக்கிரமிப்பதற்கு முன்பு இந்த ஊர் நல்ல நிலையில் இருந்து திபெத்தியர்கள் நிறையபேர் வாழ்ந்திருந்தார்கள் என்பதற்கான பல அடையாளங்கள் அங்கிருந்தன.
“குட்டிச்சுவர்” என்பார்களே, அந்தச் சொல்லுக்கு ஏற்ப பெரும்பாலான வீடுகள் அங்கிருந்ததைப் பார்த்தோம். இந்த ஊரில் மேட்டில் ஒரு புத்தர்கோயில் இருக்கிறது. அந்தக் கோயில் ஒன்றுதான் இந்த ஊரிலுள்ள உருப்படியான ஒரே கட்டிடம் என்று சொல்ல வேண்டும். இந்த ஒரு கோயிலைத் தவிர அந்த ஊரிலுள்ள மற்ற எல்லா கட்டிடங்களுமெ அலங்கோலமாக இருந்தன.
பகலுணவிற்குப் பிறகு 80 கி.மீ வேகத்தில் பயணம் செய்து மாலை 6.30 மணிக்கு சாகாவைச் சென்றடைந்தோம். அங்கு, நாங்கள் கயிலாயம் செல்வதர்கு முன்பு 25.5.98 அன்று தங்கிய அதே விடுதியில் இப்போதும் தங்கினோம்.
சாகா – நியாலம்
13.6.98 அன்று காலை சுமார் 8.30 மணிக்கு சாகா விடுதியிலிருந்து நியாலம் நோக்கி எங்கள் பயணம் துவங்கியது. வழியில் பிரம்மபுத்ரா நதியைக் கடந்து சென்றோம். அதைத் தொடர்ந்து, சுமார் இரண்டு மணி நேரப் பிரயாணத்திற்குப் பிறகு நாங்கல் 23.5.98, 24.5.98 ஆகிய தேதிகளில் கூடாரம் அடித்துத் தங்கிய ஆற்றங்கரை வந்தது. அதைப் பார்த்த படியே எங்கள் பிரயாணத்தைத் தொடர்ந்தோம்.
ஓர் ஆற்றின் கரையோரமாக எங்கள் வண்டிகளை நிறுத்தினோம். அங்கிருந்து சற்று தொலைவிலிருந்து ஆறு, ஏழு திபெத்திய வீடுகளிலிருந்து சிறு குழந்தையிலிருந்து பெரியவர்கள் உட்பட, நாய் வரையில் சாப்பிடுவதற்கு எங்களிடமிருந்து ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்த்து ஓடி வந்த காட்சி எங்கள் உள்ளத்தில் அழப் பதிந்து வேதனைப்படுத்தியது. இது போன்ற நிலைதான் திபெத்தில் பல இடங்கலில் நிலவுகிறது என்று நாம் ஊகித்துக் கொள்ளலாம்.
அன்று மாலை சுமார் ஐந்து மணிக்கு நியாலம் வந்து சேர்ந்தோம். இதே நியாலம் ஹோட்டலில் 25-ஆம் தேதி காட்மாண்டிலிருந்து மானசரோவருக்குச் சென்றபோது தங்கினோம். அன்று இரவு குளிர் மிகவும் கடுமையாக இருந்தது.
நியாலம் – ஜாங்மு
இன்று 14.6.98 காலை 9.30 மணிக்கு நியாலத்திலிருந்து ஜாங்மு நோக்கி எங்கள் பயணம் ஆரம்பித்தது. ஜாங்மு வரும் வழியில் ஏராளமான பசுமையான மரங்களையும், நீர்வீழ்ச்சிகளையும் பார்த்தோம். பச்சைக் கம்பளம் விரித்துப் போர்த்திய மலைகள். ஆங்காங்கெ அந்தக் கம்பளத்தைப் பிரிக்கும் எல்லைக்கோடுகள் போன்ற பல சிறிய, பெரிய நீர்வீழ்ச்சிகள். இரண்டு மலைகளுக்கிடையில் பனி உருகத் துவங்கியதால் கரிய புரண்டோடும் ஆறு என்று பல விதங்கலிலும், வழி நெடுகிலும் விந்தை புரிந்து கொண்டிருந்தது.
பகல் சுமார் 11 மணிக்கு ஜாங்மு வந்து சேர்ந்தோம். ஜாங்முவில் சீன கஸ்டம்சில் எங்கள் பாஸ்போர்ட்கள் சரி பார்க்கப்பட்ட பின்பு Friendship Bridge ஐ நோக்கிச் சென்றோம். இந்த இடத்தில் எங்கல் குழுவினர் தங்களிடமிருந்த யுவான்களை நேபாள நாட்டுப் பணமாக மாற்றிக் கொண்டார்கள்.
யாத்திரிகர்களுக்காகவே ஜாங்முவில் ஒரு கடை வீதி இருக்கிறது. அதில் பல கடைகள் சென்னையிலுள்ள பர்மா பஜார் போலவும், சூப்பர் மார்க்கெட் கடைகள் போலவும் இருந்தன. அங்கிருந்த கடைகளுக்கு எங்கள் குழுவினர் பலரும் சென்று தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கினார்கள்.
பிரண்ட்ஷிப் பாலத்தின் எங்கள் ஜீப் டிரைவர்களுக்கும், சீன வழிகாட்டிக்கும் வழியனுப்பு விழா நடந்தது. பின்னர் எங்கள் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு பாலத்தைக் கடந்து வந்தோம். இந்தப் பாலத்தின் மத்தியில் குறுக்காக ஒரு சிவப்புக் கோடு போட்டிருக்கிறார்கள். இந்தக் கோடு திபெத் – நேபாள எல்லையைக் காட்டும் அடையாளமாகும்.