பாலத்தின் மறு கரையில் காட்மாண்டிலிருந்து ஈகோ ட்ரக் அனுப்பிய ஒரு பஸ் எங்கள் குழுவினரை அழைத்துச் செல்வதர்காக வந்து காத்திருந்தது. அதில் எங்கள் லக்கேஜ்களுடன் சென்று நாங்கள் ஏறிக் கொண்டோம்.
அப்போது சீன நேரப்படி பகல் இரண்டு மணி ஆகியிருந்தது. அடுத்து எங்கள் கைக்கடிகாரங்களில் இரண்டு மணி நேரம் பின்னே திருப்பி வைத்துக் கொண்டோம். அதன்படி பகல் 12 மணிக்கு தாத்தோபாணி என்ற நேபாள கிராமத்திலிருந்து எங்கள் பஸ் கிளம்பியது. பஸ் டிரைவர் மிகவும் மெதுவாக வண்டியை செலுத்தினார். நேற்று வரையில் எங்களுக்கு அதிக வேகமான ஜீப் பிரயாணம் இருந்தது. இன்றைக்கோ மிகவும் மெதுவான மினி பஸ் பிரயாணம்.
மாலை நான்கு மணிக்கு துவிகல் என்ற ஊரை அடைந்தோம். அங்கு துவிகல் ரிசார்ட் என்ற நவீன வசதிகள் கொண்ட ஒரு ஹோட்டலில் நாங்கள் தங்குவதற்கு ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் தங்கிய துவிகல் ஹோட்டல் காட்மாண்டிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் இமய மலையின் எழில் சூழ்ந்த பகுதியில் ஒரு மலையின் உச்சியில் கட்டப்பட்டுள்ளது. இது எழில் கொஞ்சும் மிகவும் அழகான இடம். அங்கிருந்து பார்த்தபோது உயர்ந்து வானத்தைத் தொடும் மலைச்சிகரங்கள், இமயமலையின் தொடர்கள் கண்களுக்கு விருந்தளித்தன.
அந்த ஹோட்டலில் சுமார் 20 நாட்களுக்குப் பிறகு நான் நன்றாக சோப்பு போட்டுக் குளித்தேன்.
15.6.98 காலையில் அறையிலிருந்த ஆளுயரக் கண்ணாடி ஜன்னலைத் திறந்தபோது, தூரத்தில் பனி மூடிய மலைகள் தெரிந்தன. பகல் 11.30 மணிக்கு, முதல் நாள் எங்களை அழைத்து வந்த பஸ்ஸில் துவிகல்லிலிருந்து புறப்பட்டு .15 மணிக்கு காட்மாண்டிலிலுள்ள கார்டன் ஹோட்டலைச் சென்றடைந்தோம்.
அன்று மாலை எங்கள் குழுவினரில் சிலர் காட்மாண்டிலுள்ள சூப்பர் மாக்கெட்டிற்குச்ச் என்று, தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கி வந்தார்கள்.
இன்ரு 16.6.98. காலை எங்கள் குழுவைச் செர்ந்த சிலர் பசுபதிநாத் கோயிலுக்குச் சென்று பாக்மதி நதிக்கரையில் முடி எடுத்தார்கள்.
ஒரு வேனில் கார்டன் ஹோட்டலிலிருந்து பகல் 11 மணிக்குப் பாட்டன் என்ற இடத்திற்குப் புறப்பட்டோம். காட்மாண்டிற்கும், பாட்டனுக்கும் இடியயிலிலுள்ள தூரம் சுமார் 10 கி.மீ. இருக்கும். பாட்டனிலுள்ள காசி விசுவநாதர், கிருஷ்ணர், கும்பேசுவரர், பீமன் ஆகியவர்களுக்குரிய கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்தோம்.
முன்னொரு காலத்தில் இன்றைய காட்மாண்ட் நகரத்தை மூன்று பிரிவாகப் பிரித்து அரசர்கள் ஆட்சி செய்து வந்தார்களாம். அவை முறையே . காட்மா1ண்ட், 2. பாட்டன், 3. லலித்பூர் ஆகியவை ஆகும். காட்மாண்டை ஆண்ட அரசர்களும், பாட்டனை ஆண்ட அரசர்களும் அடிக்கடி ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டார்கள். பாட்டன் நகரம் மல்லர்கள் என்ற அரசர்களால் ஆளப்பட்டு வந்தது. காட்மாண்ட் அரசர் காட்மாண்டில் ஏதாவது ஒரு கோயில் கட்டினால், அதைப் பார்த்து பாட்டன் அரசர் பாட்டனில் அது போன்ற ஒரு கோயில் கட்டுவாராம். இப்படி இரண்டு அரசர்களும் போட்டி போட்டுக் கொண்டு இந்த இரண்டு இடங்களிலும் கோயில்கள் கட்டியிருக்கிறார்கள்.
பாட்டனிலுள்ள ஒரு சிவன் கோயிலுக்குச் சென்று தரிசித்தோம். மன்னர்களின் அரச மண்டபத்தையும் பார்த்தோம். இந்த அரச மண்டபத்தின் முற்றத்தில் துர்க்கைக்கு ஒரு கோயில் இருக்கிறது. தாரா (நவராத்திரி) சமயத்தில் இந்தக் கோயிலில் சிறப்பாக பூஜை நடைபெறும் என்று கேள்விப்பட்டோம்.
நேபாளத்தில் கோயில், அரண்மனை போன்ற இடங்களின் முன்னால் தெருவில் பெரும்பாலும் ஆஞ்சநேயரின் சிலையை வைத்திருக்கிறார்கள். இங்கு ஆஞ்சநேயர் வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறார். இவர் இருக்கும் இடத்தில் தீமைகள், பொய், ஏவல், கொடுமைகள் போன்றவை நுழையாது என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. இதன் அடிப்படையிலேயே இன்றும் அனுமன் சிலைகளை நேபாளத்தில் பிரதிஷ்டை செய்கிறார்களாம். ஆஞ்சநேயரை நேபாளத்தில் தாந்திரிகக் கடவுளாகவும் வழிபடுகிறார்கள்.
மல்ல வம்சத்தை ஆண்ட வீர நரேந்திர மன்ன என்பவன் சிறப்பு வாய்ந்த மன்னன். இவனது காலத்தில் பாட்டன், காட்மாண்டை விட மிகவும் சிறப்பு பெற்று விளங்கியதால், ஒரு சமயம் காட்மாண்ட் பாட்டனின் மீது படையெடுத்தது. அப்போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பாட்டன் அரசரின் கனவில் தோன்றி, “எனக்கு பாட்டனில் ஒரு கோயில் கட்டு” என்று கூறினார். மன்ன அவ்விதமே கிருஷ்ணருக்கு ஒரு கோயில் கட்டினான். அந்த முறை நடந்த போரில் காட்மாண்டிற்கு பெரும் சேதம் ஏற்பட்டதாகவும், எங்களுக்கு வழிகாட்டியாக வந்த அத்வைத் விளக்கினார். பாட்டனில் கிருஷ்ணர் கோயில் கட்டப்பட்டதைப் பார்த்து காட்மாண்ட் மன்னன் காட்மாண்டிலும் ஒரு கிருஷ்ணர் கோயில் கட்டினானாம்.
பாட்டனுக்கு நாங்கள் சென்ற போது, அங்குள்ள கிருஷ்ணர் கோயிலைப் புதுப்பிக்கும் திருப்பனி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தக் கோயிலில் ஸ்ரீ கிருஷ்ணரைத் தரிசிக்கும் பொருட்டு சிறிய படிகளின் வழியாக மேலெ ஏறிச் சென்றோம். இங்கு மூலஸ்தானத்தில் குழலூதும் கிருஷ்ணன் கம்பீறமாக நின்று கொண்டிருக்கிறார். அதன் வெளிப்புற மாடங்களில் மகாபாரதக் காட்சிகள் சிலவற்றை வடித்திருக்கிறார்கள். அவற்றில் திரௌபதி சுயம்வரக் காட்சி பார்த்தவுடன் நன்கு புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அமைந்திருந்தது. இந்தக் கோயிலின் அமைப்பு, சென்னை, பெசன்ட் நகரிலுள்ள அஷ்டலட்சுமி கோயிலை நினைவுபடுத்தியது. மூலஸ்தானத்தின் வெளிச் சுற்றுப் பிராகாரத்தில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் கல்லில் செதுக்கி வைத்திருந்ததைப் பார்த்தோம். அவற்றில் பகவான் புத்தரின் உருவமும் இருந்தது.
இந்த ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலுக்கு அருகில் ஒரு பீமன் கோயில் அமைந்திருக்கிறது. அந்தக் கோயிலில் பீமனின் உருவம் வீர தோற்றத்துடன் சுமார் 10 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்த பீமன் கோயிலை முக்கியமாக இங்குள்ள வியாபாரிகள் சென்று வழிபடுகிறார்கள். தினமும் காலையில் வியாபாரிகள் தங்கள் கடைகளைத் திறப்பதற்கு முன்பு இந்தக் கோயிலுக்கு வந்து பீமனைத் தரிசனம் செய்துவிட்டு, இங்கு ஊதுபத்திகளை ஏற்றி அவற்றைத் தங்கள் கடைகளுக்கு எடுத்துச் சென்று வைத்து வியாபாரத்தை ஆரம்பிக்கிறார்கள். அப்படி செய்தால் வியாபாரம் நன்றாக நடக்கும் என்பது இங்குள்ள வியாபாரிகளின் உறுதியான நம்பிக்கை, என்று எங்கள் வழிகாட்டி கூறினார்.
இந்தக் கோயிலை வெளியிலிருந்து பார்த்த போது கோபுரத்திற்குக் கீழே தட்டு, கரண்டி போன்ற பல வீட்டு உபயோக சாமான்கள் கட்டித் தொங்கவிடப் பட்டிருந்தது தெரிந்தது. இந்தச் சாமான்களை இப்படி இங்கு கட்டித் தொங்கவிடுவதன் மூலம் தங்கள் வியாபாரம் நன்றாக நடக்கும் என்று இங்குள்ள வியாபாரிகள் நம்புகிறார்கள்.
இன்று 17.6.98 காலையில் பசுபதிநாத் கோயிலில் நாங்கள் ஹோமம் செய்வதற்கு முதல் நாளே ஏற்பாடு செய்திருந்தோம். காலை ஏழு மணிக்கு ஹோட்டல் கார்டனிலுள்ள புல்வெளியில் அமர்ந்து காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு பசுபதிநாத் கோயிலுக்குப் புறப்பட்டோம். கோயிலுக்குச் சென்றதும் பசுபதிநாதரை வழிபட்டோம்.
பசுபதிநாத் கோயிலில் 1008 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகில் ஒரு பெரிய ஹோம குண்டம் இருக்கிறது. அங்கு காலை சரியாக ஒன்பது மணிக்கு ஹோமம் செய்ய ஆரம்பித்தோம். ஹோமத்தின் முடிவில் சிவ மந்திரங்களைச் சொல்லி ஆஹுதி சமர்ப்பித்தோம். ஹோமம் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. ஹோமம் முடிந்ததும் ஹோமப் பிரசாதமான உலர்ந்த பழங்கள், கற்கண்டு போன்றவற்ரை அங்கிருந்தவர்களுக்கு விநியோகித்தோம்.
பின்னர் அனைவரும் கோயில் கருவறைக்குச் சென்று பசுபதிநாதரைத் தரிசனம் செய்தோம். 1008 சிவலிங்கங்களையும் பிரதட்சிணம் செய்தோம்; பைரவர் முதலான எல்லா சந்நிதிகளுக்கும் சென்று வழிபட்டோம்.
இந்தியாவில் பழம் பெருமை வாய்ந்த எண்ணற்ர சிவாலயங்கள் உள்ளன. தமிழ்நாட்டிலும், எத்தனியோ சைவத் திருத்தலங்கள் உள்ளன. ஆனால் இந்த பசுபதிநாத் ஒரு கோயிலைத் தவிர வேறு எந்த ஒரு சிவாலயத்திலும் ஒரே இடத்தில் 1008 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. ஆதலால் இந்தப் பசுபதிநாத் கோயில் 1008 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்ய்ப்பட்டிருக்கும் ஒரே சிவாலயம் என்ற தனிச் சிறப்பைப் பெற்றிருக்கிறது.
நாங்கள் பசுபதிநாத் கோயிலிலிருந்து வெளியே வந்ததும் எங்கள் குழுவினர் பலரும் ஸ்படிகமணி மாலை, ருத்திராட்ச மாலை, ஸ்படிகலிங்கம், சாளக்கிராமம் போன்றவற்றை வாங்கினார்கள். பின்னர் அங்கிருந்து நாங்கல் அனைவரும் வேனில் புறப்பட்டு கார்டன் ஹோட்ட்டலுக்குப் போய்ச் சேர்ந்தோம். மறுநாளும் கார்டன் ஹோட்டலிலேயே தங்கினோம்.