கைலாஸ்-மானசரோவர் – 19

மீண்டும் வாராணசியில்

இன்று 19.6.98 காலையில் கார்டன் ஹோட்டலைச் சேர்ந்த புல்வெளியில், எங்கள் காலைச் சிற்றுண்டிக்கு ஈகோ டிரக்கைச் சேர்ந்த ஜோதி அதிகாரி ஏற்பாடு செய்திருந்தார்.

இன்றைய தினம் நாங்கள் காட்மாண்டிலிருந்து வாராணசிக்குப் புறப்பட இருந்தோம்.

பகல் ஒரு மணிக்கு நாங்கள் வேனில் கார்டன் ஹோட்டலிலிருந்து காட்மாண்ட் விமான நிலயத்திற்குப் புறப்பட்டோம். பிற்பகல் 2.30 மணிக்கு வாராணசிக்குப் புறப்பட வேண்டிய விமானம் அன்றைய தினம் தாமதமாக 4.30 மணிக்குத்தான் புறப்பட்டது. மாலை 5.15 மணிக்கு வாராணசி விமான நிலயம் போய்ச் செர்ந்தோம்.

எங்கள் குழுவினரிடம் – எங்கள் பிரயாணம் நாற்பது நாட்களைக் கொண்டது என்பதால் – லக்கேஜ்கள் அதிகமாக இருந்தன. மேலும் இவற்றில் மானசரோவர் தீர்த்தம் கொண்ட பிளாஸ்டிக் கேன்கள், மானசரோவர் – கைலாஸ் மூர்த்தங்கள் ஆகியவையும் நிறையவே இருந்தன. ஆதலால் வாராணசி விமான நிலையத்தில் எங்கள் லக்கேஜ்களைச் சரி பார்த்து வெளியே கொண்டு வருவதற்கு, அங்கேயே நாங்கள் சுமார் இரண்டு மணி நேரம் இருக்க வேண்டியதாயிற்று.

நாங்கள் வாராணசி ராமகிருஷ்ண மிஷன் சேவாசிரமத்திலிருந்து புறப்பட்டு காசி விசுவநாதர் கோயிலுக்குச் சென்றோம். காசி விசுவநாதர் கோயிலை நெருங்கிய போது – அப்போதுதான் டுண்டி விநாயகர் கோயிலைத் திறந்து – பண்டா டுண்டி விநாயகருக்குக் கற்பூர ஆரத்தி செய்து கொண்டிருந்தார். அங்கிருந்து காசி விசுவநாதர் கோயிலுக்குப் போய்ச் சேர்ந்த போது விடியற்காலை மனி 3.50 ஆகியிருந்தது. அங்கு சென்றதும் முதல் காரியமாக நாங்கள் எடுத்துச் சென்ற மானசரோவர் நீரைக் காசி விசுவநாதருக்கு பக்தியுடன் அபிஷேகம் செய்தோம். மானசரோவரிலிருந்து நீர் கொண்டு வந்து காசி விசுவநாதருக்கு அபிஷேகம் செய்வது என்பதே ஒரு சாதனை என்று தோன்றியது.

இன்று எங்கள் குழுவினர் சிலர் இரண்டு டாக்சிகளை ஏற்பாடு செய்து கொண்டு, திரிவேணி சங்கமத்தில் நீராடும் பொருட்டு அலகாபாத் புறப்பட்டுச் சென்றார்கள். அலகாபாத் சென்றவர்கள் தவிர எங்கள் குழுவைச் சேர்ந்த மற்றவர்கள் கங்கையில் நீராடி, காசியிலுள்ள கோயில்களைத் தரிசிப்பதற்குச் சென்றார்கள்.

நான் தசாஸ்வமெத கட்டத்திற்குச் சென்று கங்கையில் நீராடினேன். பின்னர் விசாலாட்சி கோயில், காசி விசுவநாதர் கோயில், அன்னபூரணி கோயில், டுண்டி விநாயகர் கோயில் ஆகியவற்றைத் தரிசித்த பின்பு சேவாசிரமம் திரும்பினென்.

சேவாசிரமத்தில் இருக்கும் லவேஸ்வர் சிவன் கோயிலுக்குச் சென்று வழிபட்டேன். இந்தச் சிவலிங்க்ம ஸ்ரீராமபிரானின் பிள்ளைகளாகிய லவனும், குசனும் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் என்பது ஐதீகம். காசியின் மகிமையைப் பற்றிச் சொல்லும் காசி காண்டம் என்ற நூலும் இந்த லவேஸ்வர் சிவபெருமானைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இந்த லவேஸ்வரருக்குப் பூஜை செய்யும் பணியை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தினர் செய்து வருகிறார்கள்.

மாலை மூன்ரு மணிக்கு சிலர் காசியிலுள்ள கோயில்களைத் தரிக்கச் சென்றோம். முதலில் நாங்கள் திலபாண்டேசுவரர் என்ற சிவ்ன கோயிலுக்குச் சென்றோம். திலம் என்றால் எள். இங்குள்ள சிவலிங்கம் ஒரு நாளைக்கு எள் அளவு வளர்கிறது என்பது ஐதீகம். அதனால் இதற்குத் திலபாண்டேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. அன்னை ஸ்ரீ சாரதாதேவியார் காசி யாத்திரை செய்த போது, இந்தத் திலபாண்டேசுவரர் கோயிலுக்குச் சென்று தரிசித்திருக்கிறார்.

இங்குள்ள சந்நியாசிகள் சிலர் தென்னிந்தியாவிற்கு வரும்போது சென்னை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் வந்து தங்குவது வழக்கம். திலபாண்டேசுவரர் கோயிலுக்குச் சென்ற எங்களை அந்த மடத்தின் தலைவர் அன்புடன் வரவேற்றார். நான் கொடுத்த மானசரோவர் தீர்த்தத்தை அவரே திலபாண்டெசுவரருக்கு அபிஷேகம் செய்தார்.

இந்தத் திலபாண்டெசுவரர் கோயிலில் கேரளாவைச் சேர்ந்த சந்நியாசிகள் இருக்கிறார்கள். எனவே இந்தக் கோயிலில் சபரிமலை ஐயப்பனுக்கும் நல்ல ஒரு சந்நிதி வைத்திருக்கிறார்கள். இந்தக் கோயிலைச் சேர்ந்த ஒரு பகுதியில் தரைமட்டத்திலிருந்து படிக்கட்டுகளில் இறங்கி சற்று கீழே சென்றால் சனி பகவானுக்கு ஒரு சந்நிதி இருக்கிறது. அங்கு சென்று சனி பகவானைத் தரிசித்தோம்.

திலபாண்டேசுவரர் கோயிலுள்ள எல்லாச் சந்நிதிகளுக்கும் சென்று தரிசித்த பின்பு ஜங்கம்வாடி என்ற கட்டிடத்திற்குச் சென்றோம். இது கோயில் என்ற சிறப்புக்கு உரிய பழமை வாய்ந்த இடம் அன்று. தற்காலத்தில் கட்டப்பட்ட ஒரு கட்டிடம்தான். இது வாராணசியிலுள்ள கோதோலியா என்ற பகுதியில் அமைந்துள்ளது. ஜங்கம்வாடி என்ற இந்த இடத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். கர்நாடக மாநிலத்திலிருந்து காசி யாத்திரை செல்பவர்கள் இங்கு சென்று தங்குகிறார்கள்.

இந்த ஜங்கம்வாடி என்ற இடத்தின் சிறப்பு என்னவென்றால், சிறிய சிறிய சிவலிங்கங்கள் நூற்றுக்கணக்கில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன என்பதுதான். இங்கு கட்டைவிரல் அளவு உள்ள சிவலிங்கங்கள் மட்டுமே 5000-க்கும் குறையாமல் இருக்கும் என்று நினைக்கிறேன். இவை தவிர இந்த ஜங்கம்வாடி கட்டிடத்தைச் சேர்ந்த பல இடங்களில் வெவ்வேறு அளவுகளில் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஒன்று, இரண்டு என்று இங்குள்ள சிவலிங்கங்களை எண்ண ஆரம்பித்தால், எப்படியும் இந்த ஜங்கம்வாடியில் சுமார் எட்டாயிரம் சிவலிங்கங்கள் இருக்கும் என்று தோன்றுகிறது. இந்தச் சிவலிங்கங்கள் அனைத்தும் காசிக்கு யாத்திரை சென்றவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கங்களாகும்.

ஜங்கம்வாடியின் முக்கிய கட்டிடத்திற்கு வெளியில் இருக்கும் சுமார் மூன்றாயிரம் சிவலிங்கங்களைப் பார்த்து விட்டு, அதன் முக்கிய கட்டிடத்திற்குச் சென்றோம். அந்தக் கட்டிடத்தின் வெவ்வெறு பகுதிகளில் பல்வேறு அறைகளில் இருந்த சிவலிங்கங்களைச் சென்று தரிசித்தோம்.

பின்னர், ஜங்கம்வாடியிலிருந்து ஆட்டோக்கள் ஏற்பாடு செய்துகொண்டு, கங்கைக் கரையிலிருக்கும் ஹனுமான் காட் என்ற இடத்திற்குச் சென்றோம். அங்கும், அதன் பக்கத்திலிருக்கும் கேதார் காட்டிலும் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். ஹனுமான் காட்டில் “காமகோடீஸ்வரர்” என்ற பெயரில் ஒரு சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் காஞ்சி சங்கராசாரியார் அவர்களின் அருளாணைக்கிணங்க, காஞ்சி சங்கர மடத்தின் மேற்பார்வையில் கட்டப்பட்டுள்ளது. கோயில் கோபுரம், கோயிலிலுள்ல சந்நிதிகள் ஆகியவை அனைத்துமே முழுக்க முழுக்கத் தமிழ்நாட்டு முறையில் அமைந்துள்ளன. இந்தக் கோயில் சந்நிதிகளில் உள்ள சுவாமி சிலைகளும் தமிழ்நாட்டில் செய்யப்பட்டு அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டவையாகும். அங்கு பூஜை செய்யும் குருக்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதைச் சொல்லத் தேவையில்லை.  இங்கு நாங்கள் தரிசனம் செய்தோம்.

கோயிலுக்கு வெளியில் கோயிலை அடுத்து நின்ற நிலையில் இருக்கும் மகாகவி பாரதியாரின் ஒரு சிலை நிறுவப்பட்டுள்ளது.  மகாகவி பாரதியார் காசியில் சுமார் மூன்று ஆண்டுகள் ஹனுமான் காட்டில் இந்த்க் கோயில் இருக்கும் பகுதியில்தான் வசித்தார். இங்கு ஹனுமான் காட்டில் வாழும்போதுதான் அவருக்குக் தலைப்பாகை கட்டும் வழக்கம் ஏற்பட்டது. இங்கு வாழ்ந்தபோது அவர் சமஸ்கிருதமும் கற்றார்.

அங்கிருந்து சற்று தூரம் நடந்து கேதார் காட்டிற்குச் சென்றோம். கேதார் காட் துவங்கும் இடத்தில், பகவான் ஸ்ரீ ரமகிருஷ்ணர் காசிக்குச் சென்றபோது தங்கிய ஒரு பெரிய வீடு இருக்கிறது. அந்த வீட்டின் மாடியிலுள்ள ஓர் அறையில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தங்கியிருந்தார். அவர் தங்கிய அறை இப்போது பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பூஜையறையாக இருந்து வருகிறது. அங்கு சென்று நாங்கள் அனைவரும் ஸ்ரீ ரமகிருஷ்ணரை வழிபட்டோம். இந்த வீடு இப்போது “ஸ்ரீ ராமகிருஷ்ண சரண பாதுகா” என்ற  பெயரால் அழைக்கப்படுகிறது.

அங்கிருந்து கேதார்நாத் கோயிலுக்குச் சென்றோம். அன்றைய தினம் ஏகாதசி. ஆதலால் நாங்கள் சென்ற போது ராமகிருஷ்ண மிஷன் சேவாசிரமத்தில் ஸ்ரீ ராமநாம சங்கீர்த்தனம் நடந்து கொண்டிருந்தது.

அன்று காலையில் அலகாபாத் புறப்பட்டுச் சென்ற எங்கள் கைலாஸ் யாத்திரை குழுவினர் அன்றிரவு 9.30 மணிக்கு காசி ராமகிருஷ்ண மிஷன் சேவாசிரமம் திரும்பினார்கள்.

19.6.98 மாலை எட்டு மணிக்கு ஓர் ஆட்டோவை ஏற்பாடு செய்து கொண்டு நானும் மடத்திலுள்ள மற்றொரு துறவியும் கால பைரவர், சங்கட் மோச்சன் ஹனுமான், துர்கைக் கோயில் ஆகியவற்றுக்குச் சென்றோம்.

அங்கிருந்து கௌடி மாயி கோயிலுக்குச் சென்றோம். இந்தக் கௌடிமாயி கோயில், துர்கை கோயிலிலிஉர்ந்து மேற்குத் திசையில் இரண்டு மூன்று தெருக்கள் தள்ளி ஒரு குடிசைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் முன்பு எப்போதோ ஒரு காலத்தில் காசிக்குள் இருந்ததாம். அப்போது இந்தத் தேவி, காசிக்கு யாத்திரையாக வருபவர்களின் காசி புண்ணிய பலனை எடுத்துக் கொண்டு விடுவாளாம். அதனால் கோபம் கொண்ட காசி விசுவநாதர் அவளிடம், “நீ காசிக்கு யாத்திரை வருபவர்களின் புண்ணிய பலனை இப்படி அபகரிக்கக் கூடாது. ஆதலால் நீ காசியின் எல்லையில் இருக்கும் சேரியில் போய் இரு” என்று கூறினாராம். தனது பிழையை உணர்ந்த கௌடிமாயி, என்னை மன்னித்து அருள் புரியுங்கள், என்று காசி விசுவநாதரிடம் பிரார்த்தனை செய்தாள். அவளது பிரார்த்த்னைக்கிணங்கிய காசி விசுவநாதர், இனி மேல் நீ காசிக்கு வரும் பக்தர்களின் புண்ணிய பலனை அபகரிக்கக் கூடாது. காசி யாத்திரை வருபவர்கள் சேரியில் இருக்கும் உன்னைத் தங்கள் யாத்திரையின் முடிவில் வந்து தரிசிப்பார்கள். அவ்விதம் காசி யாத்திரையின் முடிவில் உன்னை வந்து தரிசித்தால்தான் அவர்களுக்குக் காசி யாத்திரையின் பலன் முழுமையாக்க கிடைக்கும் என்று அருளினாராம்.

காசி யாத்திரை செல்லும் பலருக்கு இங்கு இப்படி ஒரு கோயில் இருக்கிறது என்பது தெரியாது. ஆதலால் காசிக்கு யாத்திரை வருபவர்களில் நூற்றுக்கு ஒருவர் கூட இந்தக் கோயிலுக்குச் செல்வதில்லை.

கோயிலுக்குப் பக்கத்திலேயே ஒரு கடை இருக்கிறது. அங்கு சிறிய மண் தட்டில் சோழிகள் விலைக்குக் கிடைக்கும். அதை வாங்கி, இங்குள்ல கௌடி மாயிக்கு நாம் காணிக்கையாகச் செலுத்த வேண்டும். இந்தக் கோயிலின் தனித்துவம், இங்குள்ல கௌடிமாயிக்குச் சோழிகளைச் காணிக்கை செலுத்துவதுதான். இந்த கௌடிமாயி கோயிலும், சோழி விற்கும் கடியயும் ஒருவருக்கே சொந்தமானவை. சில சமயங்களில் கடையில் சோழியை நமக்கு விற்பனை செய்பவரே, கௌடிமாயிக்குப் பூஜையும் செய்வார். சில சமயங்களில் சோழி விற்கும் கடை, கௌடிமாயி கோயில் ஆகிய இரண்டிலுமே ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்.

கௌடி என்ற இந்தி சொல்லுக்கு சோழி என்று அர்த்தம். பக்தர்கள் சோழியை காணிக்கையாகச் செலுத்தும் இந்தத் தேவியை கௌடிமாயி என்று அழைப்பதற்கு இதுதான் காரணம். நாம் சோழியை வாங்கிச் சென்று அங்கிருக்கும் பண்டாவிடம் கொடுக்க வேண்டும். அவர் நம்மிடமிருந்துச் ஓழிகளைப் பெற்று, “காசி பலம் ஹம்கோ (காசி யாத்திரை பலன் எங்களுக்கு), கௌடி பலம் தும்கோ (சோழியின் பலன் உனக்கு)” என்று மூன்று தடவை சொல்வார். அவர் சொல்வதை நாமும் மூன்று முறை திருப்பிச் சொல்ல வேண்டும்.

பின்னர் அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டு காசியின் எல்லையாகிய “அசி காட்” என்ற இடத்திற்குச் சென்றோம். அசி என்ற பெயருள்ல சிறிய ஆறு இங்கு காசியில் தெற்கிலுள்ல கங்கையில் சென்று கலக்கிறது. காசியில் வடக்கில் “வாராண” ஆறு கங்கியயில் சென்று கலக்கும் இடத்திற்கும், அசி ஆறு கங்கியயில் சென்று கலக்கும் இடத்திற்கும் இடையில் உள்ள இடமே “வாராணசி” என்று அழைக்கப்படுகிறது.

பகீரதன் செய்த தவம் காரணமாக, ஆகாய கங்கை இந்தப் பூமிக்கு வந்தாள். கங்கை இந்த உலகில் வருவதற்கும் முன்பெ காசி முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாக விளங்கியது. காசியின் மகிமையைப் பற்றிக் கேள்விப்பட்டு கங்கை, காசியைத் தரிசிப்பதற்காக இன்டு வந்ததாக ஐதீகம்.

நாங்கள் அசி காட்டிற்குச் சென்று கங்கியயில் நீராடினோம். இந்த அசி காட்டில்தான் ராமாயணம் எழுதிய துளசிதாசர் ஜல சமாதி ஆனார் என்று சொல்லப்படுகிறது.

அசி காட்டிலிருந்து கங்கைக் கரையில் ஐந்து நிமிடங்கள் நடந்து சென்றாள் துளசி காட்டை அடையலாம். துளசி காட்டிலுள்ள கங்கைக்கரை படிக்கட்டுகளின் மேலே ஏறிச் சென்றால், அது துளசிதாசர் வாழ்ந்த வீட்டிற்குக் கொண்டு போய்ச் சேர்க்கும். அந்த வீட்டில் இப்போது ஒரு சிறிய ராமர் கோயில் இருக்கிறது. அதில் துளசிதாசரின் மரப் பாதுகையும், அவர் கங்கையை கடப்பதற்குப் பயன்படுத்திய படகின் ஒரு சிறிய மரத்துண்டையும் வைத்து இப்போது வழிபட்டு வருகிறார்கள்.