கைலாஸ்-மானசரோவர் – 20

பகல் இரண்டு மணிக்கு நானும் எங்கள் குழுவைச் சேர்ந்த ஒருவரும் ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் தசாஸ்வமேத காட் கங்கைக் கரையை அடைந்தோம். அங்கிருந்து நடந்து விசாலாட்சி கோயில் வழியாக மணிகர்ணிக கட்டம் சென்றோம். அங்கிருந்து கங்கா தீர்த்தம் என்ற குளத்தின் வழியாக சிந்தியா காட்டிற்குச் சென்றோம். இந்த் “கங்கா தீர்த்தம்” என்ற குளத்தை மகாவிஷ்ணு தமது சக்கரத்தால் உண்டாக்கினார் என்பது ஐதீகம். இந்தச் சக்கர தீர்த்தத்தில் சிவனும் பார்வதியும் நீராடியதாகவும், அப்போது சிவபெருமான் காதில் அணிந்திருந்த காதணி இந்தக் குளத்தில் விழுந்தது என்றும் கூறுவார்கள். அதனால்தான் இந்த இடத்திற்கு “மணிகர்ணிகா” என்ற பெயர் ஏற்பட்டது.

இந்தச் சக்கரத்தீர்த்ததின் அருகிலுள்ள படிகளில் மேலே ஏறிச் சென்றால், வலப்புறத்தில் ஒரு சிவன் கோயில் இருக்கிறது. அது தனிமையான இடம். அந்த சிவாலயத்தைக் கடந்ததும் நரசிம்ம சுவாமி மடம் என்ற ஒரு மடம் இருக்கிறது. இந்த மடத்தில் நரசிம்மரியப் பூஜிக்கிறார்கள். பெரும்பாலும் இங்கு மலையாளத்தைத் தாய்மொழியாக்க கொண்ட கேரள சந்நியாசிகள்தான் இருக்கிறார்கள். நரசிம்ம சுவாமி மடத்தையும் கடந்து படிக்கட்டுகளில் இன்னும் சற்று மேலேறிச் சென்றால் இடப் பக்கத்தில் “அபய சந்நியாசி ஆசிரமம்” என்ற ஒரு மடம் வரும். இந்த ஆசிரமத்தில் சந்நியாசிகள் சிலர் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர மூன்று மாதம், ஆறு மாதம், ஒரு வருடம் இந்த ஆசிரமத்தில் தங்கியிருந்து விட்டுச் செல்லும் சந்நியாசிகளும் உண்டு.

இந்த ஆசிரமத்தில் தரை மட்டத்திலிருந்து சுமார் 25 அடி ஆழமுள்ள ஒரு கிணறு இருக்கிறது. இந்தக் கிணற்றின் அடிப்பகுதியில் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்லது. இந்தச் சிவலிங்கத்தை நாம் மேலே இருந்து பார்த்தால் ஒரு கிணற்றில் சிவலிங்க்ம இருப்பது போல் தெரியும். மேலே இருந்து சிவலிங்கம் உள்ல இடத்திற்குச் செல்வதாற்குப் படிக்கட்டுகளும், மின்சார விளக்குகளும் இருக்கின்றன. இந்தச் சிவலிங்கத்திற்குத் தவாறாமல் நித்திய பூஜை நடைபெறுகிறது.

இந்தச் சிவலிங்கத்தின் அருகில் அபய சந்நியாசி ஆசிரமத்தைச் சேர்ந்த சந்நியாசிகளில் யாராவது ஒருவர் அமர்ந்து “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை ஜப்ம செய்து கொண்டிருப்பார். இப்படி ஒரு மணி நேரத்திற்கு ஒருவர் ஜபம் செய்வது என்று முறை வைத்துக் கொண்டு இந்த ஆசிரமத்தின் சந்நியாசிகள், இந்த மணிகர்ணிகேசுவரர் சிவலிங்கத்தின் முன்பு ஜபம் செய்யும் வழக்கம் முன்பு இருந்து வந்தது. நாங்கள் அங்குள்ல மணிகர்ணிகேசுவரரைச் சென்று தரிசித்தோம்.

அங்கிருந்து நாங்கள் வீரேசுவரர் சிவன் கோயிலுக்குச் சென்றோம். நாங்கள் சென்ற போது அந்தக் கோயிலில் ஒருவர் கூட இல்லாமல் பூரண அமைதி நிலவியது. அங்கு நாங்கள் எடுத்துச் சென்றிருந்த கங்கை ணீரை வீரேசுவரர் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தோம்.

ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்களுக்கு காசியிலுள்ள இந்த வீரேசுவரர் சிவலிங்கம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் தனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தரின் தாய், இந்தக் காசி வீரேசுவரர் சிவலிங்கத்திற்கு தமது பிரார்த்தனைகளைச் செலுத்தி வந்தார். இந்தச் சிவபெருமானின் அருளால் பிறந்தவர்தான் சுவாமி விவேகானந்தர். எனவேதான் சுவாமி விவேகானந்தர் குழந்தையாக இருந்த போது அவருக்கு அவருடைய பெற்றோர்கள் “வீரேஸ்வர்” என்றுதான் பெயர் வைத்தார்கள். காசியிலுள்ள இந்த வீரேசுவரரின் அம்சமாகப் பிறந்தவர்தான் சுவாமி விவேகானந்தர். இந்தக் கோயிலுள்ள சிவலிங்கத்தில் ஒரு விசேஷம் உண்டு. இதன் ஆவுடையாரில் 28 பைரவர்களின் முகங்கள் சுற்றிலும் பொறிக்கப்பட்டுள்ளன.

அங்கிருந்து திரும்பி வரும் வழியில் சற்று தூரத்தில் வடக்கில் “சங்கட மாயி” (சங்கடங்களைத் தீர்க்கும் அம்மன்) என்ற பெயரில் பிரசித்தி பெற்ற ஒரு கோயில் இருக்கிறது. சங்கடங்களை நீக்கும் தேவி என்பதால் இந்தக் கோயிலுக்கு நிறைய பேர் செல்வது வழக்கம். அதிலும் முக்கியமாக செவ்வாய்கிழமை, சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் இங்கு கூட்டம் மிகுதியாக இருக்கும். இது போன்று காசியில் முக்கியத்துவம் வாய்ந்த கோயில்கள் என்று எடுத்துக் கொண்டாலே அது சுமார் 100 க்கும் குறையாமல் இருக்கும்.

பிறகு நாங்கள் சிந்தியா காட்டிலுள்ள கங்கைக் கரையை அடைந்தோம். அங்கிருந்து ஹனுமான் காட்டிற்குச் செல்வதற்காக ஒரு படகை ஏற்பாடு செய்து கொண்டோம். படகு தெற்குத் திசையை நோக்கி நகர ஆரம்பித்தது.

தூரத்தில் கங்கைக் கரையில் பஞ்சகங்கா  காட் தென்பட்டது. அங்கே இப்போது முஸ்லீம்களின் ஒரு மசூதி இருக்கிறது. அந்த மசூதி இருக்கும் இடத்தில் முன்பு ஒரு காலத்தில் பிந்து மாதவ் என்ற புகழ் பெற்ற விஷ்ணு கோயில் இருந்தது. அந்த விஷ்ணு கோயிலில்தான் ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் காசிக்கு வந்தபோது தங்கியிருந்தார். இப்போது அங்குள்ள மசூதியின் கட்டிடம் முடியும் இடத்தில் “திரைலங்க சுவாமி மடம்” இருக்கிறது.

திரைலங்க சுவாமி அங்கு வாழ்ந்த போது ஸ்ரீ ராமகிருஷ்ணர் காசிக்கு வந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணரும், திரைலங்க சுவாமியும் சதித்துப் பேசியது போன்ற விவரங்கள் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. திரைலங்க சுவாமி மடத்திற்கும், கால பைரவர் கோயிலுக்குமிடையில் தண்டபாணி கோயில் என்ற  ஒரு கோயில் இருக்கிறது. காசி யாத்திரை செல்பவர்கள் காசியில் தரிசிக்க வேண்டிய ஒன்பது முக்கியமான இடங்களில் தண்டபாணி கோயிலும் ஒன்று என்று ஒரு பழைய சுலோகம் கூறுகிறது.

மணிகர்ணிகா காட்டைத் தாண்டி படகு சென்று கொண்டிருந்த போது, கங்கைக் கரையின் மேலே இருந்த ஒரு கட்டிடத்திலிருந்து பலர் பஜனப் பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கும் ஒலி கேட்டது. அங்கு ராஜராஜேசுவரி மடம் இருக்கிறது.

படகு மீர் காட் வழியாக சென்றது. இந்த இடத்திலிருந்து காசி விசாலாட்சி கோயில் அருகிலேயே இருக்கிறது. இந்த மீர் காட்டில் வாராகி கோயில் என்ற ஒரு கோயில் இருக்கிறது. இந்த வாராகி உக்கிர தெய்வம். இந்தக் கோயிலை விடியற்காலை நான்கு மணிக்குத் திறந்து காலை ஆறு மணிக்கு மூடிவிடுவார்கள். அதன் பிறகு மறுநாள் விடியற்காலையில்தான் திறப்பார்காள். எனவே பக்தர்கள் இந்தத் தேவியை விடியற்காலை ஆறு மணிக்குள்தான் தரிசிக்க முடியும். இந்தக் கோயிலை தரை மட்டத்திலிருந்து மூலம் சற்று கீழே இறங்கிச் சென்று, பக்தர்கள் வாராகி தேவியைத் தரிசிக்கும் வகையில் அமைத்திருக்கிறார்கள்.

நாங்கள் சென்ற படகு கங்கையில் பிரயாக் காட் வழியாகச் சென்றது. இப்போது அலகாபாத் என்று வழங்கும் ஊரின் பழைய பெயர் பிரயாகை. அலகாபாத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமம் ஆகின்றன. இந்த சங்கமம் ஆகும் இடம்தான் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது. காசியிலுள்ள இந்த பிரயாக் காட் கங்கையில் நீராடுவது, பிரயாகையில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதார்குச் சமம் என்று கருத;ப்படுகிறது. அன்னை ஸ்ரீ சாரதாதேவியார் காசியில் தங்கியிருந்த நாட்களில் இந்த பிரயாக் காட்டிலும் நீராடுவதுண்டு.

நாங்கள் அமர்ந்திருந்த படகு சிறிது நேரத்தில் “மானசரோவர் காட்” வழியாகச் சென்றது. கயிலாயத்தோடு தொடர்புடைய மானசரோவரின் பெயரை இந்த கட்டத்திற்கு வைத்திருக்கிறார்கள். இங்கு நீராடினால் மானசரோவரில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கங்கையில் நாங்கள் சென்ற படகிலிருந்து பார்த்தால் கங்கைக் கரையிலிருந்த பல்வேறு நீராடும் துறைகள், பிரம்மாண்டமான கட்டிடங்கல், அங்கும் இங்குமாக பல கோயில்கள் தெரிந்தன. காசியிலுள்ள இந்த ணீராடும் துறைகளை அழகாக அமைத்ததில் மராட்டியர்களுக்கு பெரும் பங்கு உண்டு. சொல்லப் போனால் இன்றைய வாராணசி மாநகரத்தை மராட்டியர்கள்தான் உருவாக்கினார்கள்.

இமயத்திலிருந்து, வடக்குத் திசையிலிருந்து கங்கை தெற்கு நோக்கிப் பாய்கிறது காசி என்ற இந்த ஓர் இடத்தில் மட்டும்தான் காசி தெற்கிலிருந்து வடக்குத் திசையில் செல்கிறது. அதனால் கங்கை இங்கு உத்திரவாகினி என்று அழைக்கப்படுகிறது. காசியில் உத்திரவாகினியாக் ஐருப்பதால் கங்கை விசேஷ முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அதனால் மற்ற இடங்களில் இருப்பதை விட கங்கைக்கு இந்த இடத்தில் மதிப்பு அதிகம்.

எங்கள் படகு “ஷேமேஸ்வர் காட்” வழியாகச் சென்றது. இங்கு கங்கைக் கரையில் சிரார்த்த சடங்குகள் செய்கிறார்கள். பிறகு கேதார் காட், ஹரிச்சந்திரா காட் ஆகியவற்றைக் கடந்து ஹனுமான் காட் சென்றடைந்தது. அங்கே நாங்கள் படகிலிருந்து இறங்கிக் கொண்டோம்.

கங்கைக் கரையில் சற்று தூரத்தில் கோட்டை போன்ற ஒரு கட்டிடம் தென்பட்டது. இங்கு “நிரஞ்சனி அகாடா” என்ற பிரிவைச் சேர்ந்த சந்நியாசிகள் இருக்கிறார்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் குருவாகிய தோத்தாபுரி நிரஞ்சனா அகாடாவைச் சேர்ந்தவர். இதன் ஒரு கிளை ஹரித்வாரில் உள்ளது. ஹரித்வாரில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பமேளா சமயத்தில் நிரஞ்சனி அகாடாவைச் சேர்ந்த சந்நியாசிகளைப் பின்பற்றி ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சந்நியாசிகளும், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்களும் செல்வது வழக்கம். நாங்கள் நிரஞ்சனி அகாடாவிற்குச் சென்றோம். அங்கிருந்த சிவன் சந்நிதிக்குச் சென்று வழிபட்டோம்.

நிரஞ்சனி அகாடாவிலிருந்து புறப்பட்டு ஹனுமான் காட்டிலுள்ள பிரசித்தி பெற்ற ஹனுமான் கோயிலுக்குச் சென்றோம். இந்த ஹனுமான் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. அதனாலேயே இந்த கோயில் “ப்ராசீன் ஹனுமான் மந்திர்” என்று அழைக்கப்படுகிறது.

ஹனுமான் காசிக்கு வந்த போது கங்கையில் நீராடினார். அவர் கங்கியயில் நீராடிய இடம் அவரது பெயரால் இப்போது ஹனுமான் காட் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கருத்தை ஆனந்த ராமாயணம் தெரிவிக்கிறது. ப்ராசீன் ஹனுமான் கோயிலைச் சந்நியாசிகள் சிலர் இப்போது நிர்வகித்து வருகிறார்கள். ஒரு காலத்தில் காசியில் இந்த கோயில் பெரும் புகழுடன் ஏராளமான மக்களை ஈர்ப்பதாக இருந்திருக்கிறது. இப்போது காசியில் அந்த முக்கியத்துவத்தை சங்கட் மோச்சன் ஹனுமான் கோயில் பெற்றிருக்கிறது.

அங்கிருந்து மேலும் ஓரிரு கோயில்களை நாங்கள் தரிசித்து விட்டு, கங்கைக் கரையில் இருக்கும் அரிச்சந்திரா காட் என்ற இடத்திற்குச் சென்றோம். இந்த இடத்தில் ஒரு பொது மயானம் இருக்கிறது. இந்த மயானத்தில்தான் சத்தியத்திற்காகவே வாழ்ந்த அரிச்சந்திரன் வெட்டியானாகப் பணி புரிந்தார் என்பது ஐதீகம். இப்போதும் இந்த மயானத்தில் சடலங்கள் எரிக்கப்படுகின்றன. இந்த இடத்தில் “ஸ்மசானேசுவரர்” என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை மயானம் காத்த போது அரிச்சந்திரன் ஸ்தாபித்ததாக கூறுகிறார்கள்.

அரிச்சந்திரா காட் வழியாக கேதார்நாத் கோயிலுக்குச் சென்றோம். அன்று பிரதோஷம். மாலை சரியாக 5.30 மணிக்குப் பிரதோஷப் பூஜைக்கான வேலைகள் அங்கு துவங்கின. தமிழ்நாட்டில் பல்வேறு சிவ ஆலயங்களில் நடைபெறுவது போன்று காசி கேதார்நாத் கோயில் நந்திக்கும் அபிஷேக ஆராதனைகள் மிக மிக சிறப்பாக நடைபெற்றன. அங்கு பிரதோஷ பூஜை ஆரம்பித்ததிலிருந்து – தமிழ்நாட்டில் பிரதோஷ பூஜை நடைபெறும் சமயத்தில் சைவத்திருமுறைகளிலிருந்து பாடப்படும் பதிகங்களை எங்களில் ஒருவர் பாட ஆரம்பித்தார்.

அன்றைய தினம் நந்தியம்பெருமானுக்கு நடந்த அபிஷேக ஆராதனைகள் கண்கொள்ளாக் காட்சியாக, வாழ்க்கையில் என்றுமே மறக்கமுடியாதவையாக அமைந்தன. காசியில் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்வது என்றால் அது எவ்வளவு விசேஷம் என்று சொல்லத்தேவையில்லை!