கைலாஸ்-மானசரோவர் – 21

இன்று 22.6.98 திங்கட்கிழமை. நாள்தோறும் காசிவிசுவநாதர் கோயிலில் விடியற்காலை 3 மணிக்கு விஸ்வரூப தரிசனம் என்ற பூஜை நடைபெறுகிறது. இந்தப் பூஜையில் கலந்து கொள்ள வேண்டுமானால் முதல் நாளே நபர் ஒருவருக்கு கட்டணம் செலுத்த வேண்டும். விடியற்காலை 3 மணிக்குள் காசி விசுவநாதர் கோயில் கதவு அருகில் இருக்க வேண்டும். நாங்கள் ராமகிருஷ்ண மிஷன் சேவாசிரமத்திலிருந்து புறப்பட்டு விடியற்காலை 2.15 மணிக்கே விசுவநாதர் கோயில் கதவருகில் சென்று அமர்ந்து கொண்டோம். சரியாக 2.30 மணிக்குக் கோயில் கதவைத் திறந்து கோயில் பண்டாக்கள் இரண்டு பேர் கோயிலுக்குள் சென்றார்கள். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் நாங்கள் கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டோம்.

கருவறையின் நுழைவாயில் கதவருகில் பண்டா கூறியதற்கேற்ப னாங்கள் அமர்ந்தோம். சிறிது நேரத்தில் காசி விசுவநாதர் முந்தைய நாள் அர்த்தஜாம பூஜையின் போது வைத்த வெள்ளிக் கட்டில், போர்வை, தலையணை, மயில் இறகு விசிறி, விசுவநாதரின் பாதுகைகள் போன்றவற்றைப் பண்டாக்கள் கருவறையிலிருந்து எடுத்துச் சென்றார்கள். அர்த்தஜாம பூஜையின் போது செய்த அலங்காரங்களையும் ஒவ்வொன்றாகக் களைந்து கொண்டிருந்தார்கள்.

தொடர்ந்து அங்கு விசுவநாதருக்குச் செய்த பூஜையில் கங்கை நீர் அபிஷேகம், பால் அபிஷேகம், சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம், வில்வம் – மலர் மாலை சார்த்துதல், நறுமண தூபம், இனிப்பு நைவேத்தியம், கற்ப்பூர ஆரத்தி போன்றவைகள் நடைபெற்றன.

இவ்விதம் கோயிலில் பண்டாக்கள் பூஜையை செய்து முடித்தார்கள்.

மறுநாள் காலையில் மணிகர்ணிகா காட் சென்று கங்கையில் நீராடினோம். இந்தத் தடவை காசி யாத்திரையின் போது காசி விசுவநாதரைத் தரிசிப்பது அதுவே கடைசி முறையாக இருக்கும் என்பதால், நிறைய பூஜைப் பொருட்களுடன் சென்று காசி விசுவநாதரை வழிபட்டோம். அன்னப்பூரணி கோயிலுக்கும், நிறைய பூஜை பொருள்களுடன் சென்று வழிபட்ட பின்பு சேவாசிரமம் திரும்பினோம்.

அன்று மாலை நாங்கள் காசியிலிருந்து விடைபெற்றோம். எங்களையும், எங்கள் லக்கேஜ்களையும் வாராணசி ரயில்வே ஸ்டேஷனுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்திருந்த பஸ்ஸில் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் சேவாசிரமத்திலிருந்து புறப்பட்ட நாங்கள் சற்று முன்னதாகவெ வாராணசி ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்ச் சேர்ந்தோம்.

அன்று 22.6.98. மாலை சுமார் அறு மணிக்கு வாராணசியிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டோம். இரண்டு நாள் ரயில் பிரயாணத்திற்குப் பிரகு 24.6.98  காலை 10.30 மணிக்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தது.

கைலாஸ் யாத்திரை என்ற மகத்தான வாய்ப்பை இந்தப் பிறவியில் அளித்த ஸ்ரீ ராமகிருஷ்ணரின் திருவருளை நினைத்து அவரை வணங்கினோம்.