சதுரகிரி 01 – ஓர்அறிமுகம்

துரகிரிஆன்மிக அன்பர்கள் பலரின் இதயத்துக்குள் இதமாக ஒலித்துக் கொண்டிருக்கும் புனித பூமியின் திருப்பெயர்.

ஆம்! சதுரகிரிஒரு புண்ணிய மலை; சித்தர்கள் ஆட்சி புரியும் சீர்மிகு மலை. ஜோதிர்மயமான அந்த இறைவனே மகாலிங்கமாக மலையில் குடி இருந்து கோலோச்சும் தவப் பிரதேசம். தேடி வரும் உண்மையான பக்தர்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் அருளை வாரி வழங்கும் ஆதி நாயகனான சிவனின் ஆட்சிப் பிரதேசம்.

நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம்இவற்றை பஞ்சபூதங்கள் என்கிறோம். ஆகம சாஸ்திரப்படி உருவ, அருவ வழிபாடுகள் எல்லாம் நடைமுறைக்கு வருவதற்கு முன் இயற்கைக் கடவுளர்களான பஞ்ச பூதங்களையே பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வணங்கி வந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

பஞ்சபூதங்கள் அனைத்துமே இறை தரிசனத்தின் மறு வடிவம். ஒவ்வொன்றிலும் இறைவன் உறைகின்றான்; ஆட்சி செலுத்துகின்றான்.

இவற்றில், புண்ணியம் வாய்ந்தவையாக மலைகள் வணங்கப்பட்டு வருகின்றன. சைவ, வைணவ பேதம் பாராமல் இறைவனின் திருவுருவங்களை எண்ணற்ற மலைகளில் தரிசித்து இன்புறுகிறோம். கயிலைமலை, ஆதிசிவனாரின் அருளாட்சி பீடம் என போற்றப்படுகிறது. யாத்திரை சென்று கயிலைவாசனை வணங்கி வந்தால் பெரும் பேறு என்று இந்துக்கள் அங்கே பயணப்படுகிறார்கள். வருடா வருடம் கயிலை யாத்திரைக்குச் செல்லும் அன்பர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

திருவண்ணாமலை, பர்வதமலை, வெள்ளியங்கிரி, பழநிமலை, திருமலை திருப்பதி என்று ஆன்மிகம் பெருக்கெடுத்து ஓடும்ஷ்ஷ் நம் பூமியில் மலைகளுக்கும் பஞ்சமில்லை; மாறாத பக்திக்கும் குறைவில்லை.

சதுரகிரிக்கு வருவோம்

சதுரகிரி யாத்திரைஎன்கிற அற்புதமான மலையைத் தரிசிக்க எனக்கு ஒரு பாக்கியம் கிடைத்தது.

ஒரு முறை, சதுரகிரியில் இருந்து வரும் துறவி ஒருவர் என்னிடம், ‘ரொம்ப நிம்மதியா மலைல இருந்தோம். இப்ப பல பேருங்க வர ஆரம்பிச்சுட்டாங்க. மலைக்கு நிறைய கூட்டம் வர்றதைப் பார்த்தா ஒரு விதத்துல சந்தோஷமா இருக்கு. ஆனா, நல்ல மனதோட இவங்க வந்துட்டு, பத்திரமா இறங்கிப் போகணுமேனு ஒரு கவலையும் இருக்குஎன்றார்.

ஒரு விதத்தில் இவர் சொன்னது உண்மைதான். ஒருவருக்கு மட்டுமே தெரிந்தால், அது ரகசியம். பலரையும் சென்றடைந்து விட்டால், அது செய்தி!

சதுரகிரியில் நீங்கள் பார்க்கின்ற எல்லா தகவல்களையும் வெளியே கொடுத்து விடக் கூடாதுசில விஷயங்கள் இங்கே தேவ ரகசியங்களாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றனஎன்று சதுரகிரிக்குப் பல ஆண்டுகளாகச் சென்று வரும் அதன் உள்ளார்ந்த பக்தர்கள் வைத்த வேண்டுகோளையும் மனதில் கொண்டே இந்தத் தொடர் எழுதப்பட்டது; தற்போதும் அதையே கடைப்பிடித்துதான் எழுதி வருகிறேன். என்னையும் மீறி ஓரிரண்டு இடங்களில் நான் ஏதேனும் தவறு செய்து விட்டால், அந்த மகாலிங்கம் என்னை மன்னித்து அருள்வார் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன்.

சதுரகிரி யாத்திரை அனுபவங்கள்என்கிற இந்தப் புது நூலில், தல வரலாறும் புராணத் தகவல்களும் ஒரு முன்னுரைக்காகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் பின் பல பக்தர்களின் அனுபவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

எங்கே இருக்கிறது சதுரகிரி?

ஸ்ரீவில்லிபுத்தூர்மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் வருகிற சிற்றூர்கிருஷ்ணன்கோவில். ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கு இங்கே அழகான ஒரு கோயில் உண்டு. கிருஷ்ணன் குடி கொண்ட இடம் என்பதால், கிருஷ்ணன்கோவில் என்பது ஊர்ப் பெயராயிற்று.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை செல்லும்போது கிருஷ்ணன்கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டு இடப் பக்கம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவு பயணித்தால் வத்திராயிருப்பு வரும். ஓரளவு பெரிய கிராமம் இது. வத்திராயிருப்பில் இருந்து தொடர்ந்து 10 கி.மீ. தொலைவு பயணித்தால் தாணிப்பாறை என்கிற கிராமம் வரும். இந்தக் கிராமம்தான் சதுரகிரியின் அடிவாரம். தாணிப்பாறை வரை வண்டிவாகனங்களில் பயணிக்கலாம். இதற்குப் பிறகு, யாத்திரை தொடங்குகிறது. அதாவது, நடைபயணம்! சுமார் 10 கி.மீ. தொலைவு மலைக்கு மேல் நடந்தால் சதுரகிரியின் உச்சியை அடையலாம்.

என்றாவது ஒரு நாள் நாம் இந்த மலையைத் தரிசிக்க மாட்டோமா?’ என்பது, இதுவரை இங்கே பயணிக்கும் பாக்கியம் கிடைக்காத பக்தர்களின் பரிதவிப்பு.

ஏழு முறை சதுரகிரிக்குச் சென்று திரும்பி விட்டேன். எட்டாவது முறையாக அந்த மகாலிங்கம் நமக்கு ஓர் அழைப்பு விட மாட்டாரா?’ என்பது மீண்டும் மீண்டும் பயணப்படத் துடிக்கும் பக்தர்களின் ஏக்கம்.மொத்தத்தில், சதுரகிரி பயணம் என்பது ஒரு ஜிலிர்ப்பான ஆன்மிக அனுபவம். அதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு மட்டுமே அதன் அருமைகளையும் பெருமைகளையும் புரிந்து கொள்ள முடியும்; திகிலை உணர முடியும்; பரவசங்களை ரசிக்க முடியும்!