சதுரகிரி 03 – பிலாவடிக் கருப்பர்

பிலாவடிக் கருப்பர்!

துரகிரி பயணத்தின்போது தாணிப்பாறை அடிவாரத்தில் கருப்பண்ணசாமி, பேச்சியம்மன், ராஜயோக காளியம்மன், ஆசிர்வாத விநாயகர், நாகர்கள் போன்ற தெய்வத் திருமேனிகளைத் தரிசித்த பின் நடைபயணம் தொடர்கிறது. குதிரை ஊத்து, கோரக்கர் குகை, பொங்கிப் பெருகும் அருவிகளின் ஆர்ப்பரிக்கும் ஓசை, ரெட்டை லிங்கம், பிலாவடிக்கருப்பர் என்று சதுரகிரியில் அனுபவித்து மகிழ வேண்டியவையும், தரிசித்து இன்புற வேண்டியவையும் ஏராளம்.

சதுரகிரி மலையை அமாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களில் தரிசிக்கப் போனால், ‘நாம் நிஜமாகவே மலையில் உள்ள ஒரு தலத்துக்குத்தான் வந்திருக்கிறோமாஅல்லது வேறு ஏதாவது நகரப் பகுதி ஒன்றுக்கு வந்திருக்கிறோமா?’ என்ற சந்தேகம் நமக்கு ஏற்படும். காரணம் _ அத்தகைய நாட்களில் ஜன சந்தடி நிறைந்த பரபரப்பான ஒரு நகரத்துக்குள் வந்து செல்வது போல் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் இந்த மலையை மொய்க்கும். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் மதுரை, நெல்லை, தேனி, விருதுநகர் போன்ற சுற்றுப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் பலர் மலையேறி வந்து இங்கு கடை பரப்புவார்கள்.

இயற்கை வளம் நிரம்பிய சதுரகிரியில் தண்ணீருக்கும் சாப்பாட்டுக்கும் ஒரு போதும் குறையே இருக்காது. அதுவும் மேற்குறிப்பிட்ட விசேஷ நாட்களில் சதுரகிரியில் அன்னதானத்துக்குப் பஞ்சமே இருக்காது. விசேஷ தினமல்லாத சாதாரண நாளில் மலைக்கு வந்தாலும் நமது சாப்பாட்டுக்குச் சிரமம் இருக்காது.

உண்மையான பக்தியுடன் தங்களது ஊரில் இருந்து புறப்படும் எந்த ஒரு பக்தரும், ‘சதுரகிரி சென்று சுந்தர மகாலிங்கத்தையும் சந்தன மகாலிங்கத்தையும் கண் குளிர தரிசிக்க வேண்டும்என்ற தீர்மானத்துடன் மலை ஏற ஆரம்பித்தால், அவரை பத்திரமாக மலைக்கு மேல் அழைத்துக் கொள்வது சதுரகிரியில் வாழும் மகாலிங்கத்தின் பொறுப்பு. பக்தர்களுக்கு எந்தவிதச் சிரமமும் கொடுக்காமல் அவர்களைத் தனது சந்நிதிக்கு அழைத்து தரிசனம் தந்து அனுப்புவார்கள் சந்தன மகாலிங்கமும் சுந்தர மகாலிங்கமும்!

இதற்கு உதாரணமாக எத்தனையோ சம்பவங்கள் உண்டு.

பகல் வேளைகளில் மலைக்கு மேலே களைப்புடன் செல்லும் வேளையில் திடீரென்று யாரோ நம்மைக் கடந்து செல்வது போல் இருக்குமாம்.

‘‘அவர்களெல்லாரும் சித்தர்கள். அவர்களுடைய உருவத்தை நாம் கண்ணால் பார்க்க முடியாது. அது மட்டுமின்றி அவர்கள் நமக்கு எந்தவிதமான இடைஞ்சலும் செய்யமாட்டார்கள். அவர்கள் பாட்டுக்கு அவர்களது வேலையைப் பார்த்துக் கொண்டு போவார்கள்.

பல நேரங்களில்பல இடங்களில்பல வடிவங்களில் அவர்கள் நமக்குத் தட்டுப்படுவார்கள். நாய் வடிவிலோ, பன்றி வடிவிலோ, பிச்சைக்காரர்கள் வடிவிலோ கூட இருப்பார்கள். அதனால், இந்த சதுரகிரி மலைக்கு வந்துவிட்டால் எந்த மிருகத்தையும் நாம் விரட்டக் கூடாது. எந்த மனிதரையும் தொந்தரவு செய்யக் கூடாது. எப்போது சித்தர்கள் எந்த மாதிரியான வடிவில் வந்து நமக்குக் காட்சி தருவார்களோயாருக்குத் தெரியும்! எவரால் சொல்ல முடியும்? அப்படிப்பட்டவர்களிடம் இருந்து நாம் ஏன் வீணாக சாபம் பெற வேண்டும்?’’ என்று நம்மிடம் உபதேசித்தார் ஒரு துறவி.

ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசையன்று மட்டும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி வந்து சுந்தர மகாலிங்கத்தையும், சந்தன மகாலிங்கத்தையும் தரிசித்துச் சென்றார்கள்.

மொட்டை போட்டுத் தங்களது காணிக்கையை நிறைவேற்றிக் கொண்டார்கள். பக்தர்கள் எவராக இருந்தாலும் இங்கு வந்து தரிசிக்க, சபரிமலை மாதிரி ஆண்பெண் என்ற வித்தியாசம் இல்லை.

இப்பேர்ப்பட்ட இந்த சதுரகிரிக்கு மலையின் அனைத்து எல்லைகளிலும் எத்தனையோ காவல் தெய்வங்கள் உண்டு. அவர்கள்தான் புனிதமான இந்த சதுரகிரியை இன்றளவும் கண்ணும் கருத்துமாகக் காத்து வருகிறார்கள். எனினும், அவர்களில் பிலாவடி கருப்பருக்கு முக்கியத்துவம் அதிகம். அதனாலேயே அவருக்கு வழிபாடுகளும் வேண்டுதல்களும் அதிகம்.

பின்னேஎவ்வளவோ மகத்தான சித்தர்கள் புதைத்து வைத்துள்ள ஏராளமான ஞான பொக்கிஷங்களையும், தேவ ரகசியங்களையும் இன்றளவும் பத்திரமாகப் பாதுகாத்து வருபவர் அந்த பிலாவடி கருப்பர்தானே!

பணம் புரளும் வங்கிகளது பாதுகாப்புக்கு, ஆயுதம் தாங்கிய ஆஜானுபாகுவான செக்யூரிட்டிகளை ராத்திரிபகல் பாராமல் காவலுக்கு நியமிக்கிறோம். இது கலி யுகத்தின் தேவை.

இதே கலி யுகத்தில் இரும்பைத் தங்கமாக்க உதவும் மூலிகை ரகசியங்களையும், ஏராளமான தங்கப் புதையலையும் காலாகாலத்துக்கும் பத்திரமாகப் பாதுகாத்து வைப்பது என்பது சாதாரண விஷயமா என்ன? (பேராசை நிறைந்த மனதோடு இப்படித் தேடி வந்த ஒரு குழுவினர் பட்ட ரண வேதனைகள் நூலின் பிற்பகுதியில் இருக்கிறது) விலை மதிப்பில்லாத இந்த பொக்கிஷங்களைக் காக்க பலமான ஒரு செக்யூரிட்டி தேவை அல்லவா? எனவேதான், புதையல் அடங்கிய இந்த பூமியை பல நூற்றாண்டுகளாக காவல் காத்து வருகிறார் பிலாவடி கருப்பர். அவர், கற்சிலை வடிவில் இந்த சதுரகிரி மலைக்கே காவல் தெய்வமாக வீற்றிருந்து, இந்தப் பணியைத் தொய்வில்லாமல் தொடர்கிறார்.

பிரமாண்டமான தைலக் கிணறு எனப்படும் பகுதிக்குள் மேற்குறிப்பிட்ட புதையல்களும் ரகசியங்களும் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.

சதுரகிரி மலையின் அடிவாரத்தில் உள்ள தாணிப்பாறை என்ற பகுதியே சதுரகிரி யாத்திரையின் துவக்கப் பகுதி. கிட்டத்தட்ட பயணத்தின் இறுதிக் கட்டமாக நாம் வந்து சேர்வது இந்த பிலாவடிக் கருப்பர் குடி கொண்டுள்ள ரம்மியமான பிரதேசத்துக்குத்தான். இந்த சந்நிதிக்கு அருகில்தான் சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மாகலிங்கம் ஸ்வாமி ஆலயங்கள்! பிலாவடிக் கருப்பர் ஆலயத்தில் இருந்து சற்றுத் தொலைவு நடைபயணத்துக்குப் பின் பாதை இரண்டாகச் செல்கிறது. அதில் வலப் பக்கம் சென்றால், சுந்தர மகாலிங்கம்; இடப் பக்கமாகச் சென்றால் சந்தன மகாலிங்கம்.

குறிப்பிட்ட மூலிகைகளின் சாறு கலந்து எந்த ஓர் உலோகத்தையும் தங்கமாக மாற்றும் ரசவாத வித்தையில் சிறந்த மேதையாக விளங்கியவர் காலாங்கிநாதர் எனும் சித்தர். இவர் உருவாக்கிய பிரம்ம தீர்த்தம், பிலாவடிக் கருப்பர் சந்நிதிக்கு முன்பாகப் பாய்கிறது. குறிப்பாக மழைக் காலத்தில் இந்த பிரம்ம தீர்த்தத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடுமாம். இந்தப் புண்ணிய தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து பிலாவடி கருப்பரை மனமார வணங்கினால், எத்தகைய பாவமும் அகன்று, புண்ணியம் சேரும் என்று புராணம் சொல்கிறது.

பிலாவடி கருப்பர் சந்நிதிக்குள் பழைய கருப்பர் இருக்கிறார்; புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கம்பீரமான கருப்பரும் இருக்கிறார். மலைக்கு மேலே செல்லும்போதும் கீழே இறங்கும்போதும் இவரிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்பது ஐதீகம். ஒரு கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து இவரை மனமார வழிபட்டால் போதும்; கருப்பரின் அருளாசி நமக்குக் கிடைத்துவிடும்.

இங்கு பெரிய பலா மரம் ஒன்றில் ஒரே ஒரு காய் மட்டும் சந்நிதியின் உட்புறமாக கருப்பரின் அருகே காய்த்துத் தொங்குகிறது. ‘‘கருப்பருக்குப் பக்கத்தில் எப்போதும் சுமாரான அளவில் பலாக் காய் ஒன்று காய்த்துத் தொங்கிக் கொண்டிருக்கும். இது முற்றி விழுந்து விட்டால் அடுத்து அதே இடத்தில் உடனே இன்னாரு காய் காய்க்கும். இந்த அதிசயம் இங்கு பல வருடங்களாகத் தொடர்ந்து நடக்கிறது!’’ என்றார் கருப்பருக்கு பூஜை செய்யும் பூசாரி ஒருவர்.

பிலாவடிக் கருப்பர் சந்நிதிக்கு அருகே பொக்கிஷங்களும் சித்த ரகசியங்களும் புதைந்திருக்கும் தைலக் கிணறு உருவான கதை மிகவும் சுவாரஸ்யமானது. ‘ஆகா! இப்பேர்ப்பட்ட அந்தத் தைலக் கிணற்றை நாம் உடனே சென்று பார்க்க வேண்டும்என்று நீங்கள் ஆசைப்பட்டால் அது நடக்காது. காரணம், இந்தக் தைலக் கிணறு அமைந்திருப்பது மிகவும் மர்மமான ஒரு பகுதியில். நம்மைப் போன்ற சாதாரணமான மனிதர்கள் எவருடைய பார்வைக்கும் அந்தப் பிரதேசம் சுலபத்தில் தட்டுப்படாதாம்.

இந்தத் தைலக் கிணறு இங்கு எப்படி வந்தது?

அதற்குள் தேவ ரகசியங்கள் எப்படி புதையுண்டன?

சுவாரஸ்யமான அந்தக் கதையைப் பார்ப்போமா?

முன்னொரு காலத்தில் வாலைபுரம் எனப்படும் வளமான கிராமம் ஒன்றில் வாமதேவன் என்ற வியாபாரி வசித்து வந்தான். கடவுள் மீது தீவிர பக்தி கொண்டவன். ‘பலரும் வந்து வணங்கிச் செல்லும் வகையில் எனது கிராமத்தில் ஒரு சிவாலயம் இல்லையே?’ என்ற ஏக்கம் வாமதேவனுக்கு நீண்ட நாளாகவே இருந்து வந்தது. அவனுடைய ஏக்கத்தைப் போக்கவும் ஆண்டவன் திருவுள்ளம் கொண்டார். ஒரு நல்ல வேளை வந்தது.

ஒரு கட்டத்தில் வியாபாரத்தின் மூலம், அது வரை தான் சேர்த்து வைத்த பொருளைக் கொண்டு தனது கிராமத்திலேயே ஒரு சிவன் கோயிலைக் கட்டுவது என்று முடிவு செய்தான் வாமதேவன். அதற்காக உரியவர்களைக் கலந்தாலோசித்து, அவர்களுடைய ஆலோசனைப்படி தேர்ந்த ஸ்தபதிகளை வரவழைத்தான். இவ்வாறு சுப தினம் ஒன்றில் கோயில் கட்டும் பணி ஆரம்பமானது. கோயிலுக்கான வேலைகள் அவன் திட்டமிட்டபடியே விரைவாக முன்னேறுவது கண்டு மகிழ்ந்தான் வாமதேவன்.

அது வரை விரைவாக நடந்த வேலைகள் ஒரு கட்டத்தில் அப்படியே நின்று விட்டன. காரணம், வாமதேவனிடம் இருந்த பொருள் மொத்தமும் செலவழிந்து போனதுதான். மேற்கொண்டு கோயில் வேலைகளைத் தொடர வேண்டுமானால், மேலும் ஏராளமான பணம் தேவை என்று உணர்ந்து கொண்டான்.

கோயில் வேலையை முடிப்பதற்குத் தேவைப்படும் பணத்துக்கு மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் வாமதேவன் மிகவும் கவலை அடைந்தான்; குழம்பினான். இறுதியில் அண்டை அயலில் உள்ள மன்னர்கள் சிலரிடம் போய், தான் கட்டும் கோயில் பணிகளைத் தொடர்ந்து நடத்துவதற்குப் பொருளுதவி செய்யுமாறு கேட்டான். ‘தனி மனிதன் ஒருவனை நம்பிப் பொருள் உதவி செய்வதா?’ என்று வாமதேவனது நாணயத்தின் மேல் சந்தேகப்பட்ட மன்னர்கள் அவனுக்கு உதவாமல் திருப்பி அனுப்பி விட்டனர். கவலையுடன் அவன் சாலையில் நடந்து வந்தபோது அவனுக்கு முன்பாக எதிர்ப்பட்டார் துறவி ஒருவர். பக்தி மணம் கமழும் அந்தத் துறவியின¢ தேஜஸைக் கண்டு மெய்சிலிர்த்தான் வாமதேவன். சட்டென்று அவர் பாதம் பணிந்து நமஸ்கரித்து எழுந்தான். அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. ‘எனது கவலையை இவரிடம் சொன்னால் தேவலை…’ என்று தீர்மானித்து, தனது நிலைமையை அவரிடம் விலாவாரியாகச் சொன்னான்.

‘‘கவலைப்படாதே வாமதேவா! கோயில் கட்டுவது என்பது நல்ல செயல்தான். இது மன்னர்களும், மகத்தான வசதி படைத்தவர்களும் மட்டுமே செய்யக்கூடிய புனிதமான ஒரு பணி. எனினும் தனியொரு மனிதனாக நீ இவ்வளவு ஆர்வத்துடன் செயல்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கோயில் பணியை முடிப்பதற்காக இப்போது ஊராரிடம் கையேந்துகிறாய். உனது எண்ணம் நிறைவேற வேண்டும் என்று நானும் மனமார விரும்புகிறேன். ஆத்மார்த்தமான பக்தியுடன் நீ கட்டி வரும் கோயில் பணி செவ்வனே முடிவுற எனக்குத் தெரிந்து ஒரே ஒரு வழிதான் உண்டு’’ என்று புருவங்களை உயர்த்திச் சொன்ன அந்தத் துறவி, தன் பேச்சைப் பாதியில் நிறுத்தினார்.

அதைக் கேட்ட வாமதேவனின் முகம் பிரகாசம் அடைந்தது. ‘‘இறைவனுக்கான இந்த ஆலயத்தைக் கட்டி முடிக்க என் மனம் விழைகிறது. எப்பாடு பட்டாவது ஆலயப் பணியை என் ஆயுட்காலத்துக்குள் முடித்துவிட வேண்டும் என்று விரும்புகிறறேன். அதற்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். தாங்கள் சொல்லும் வழியின்படியே நடக்கிறேன்!’’ என்று கண்களில் நீரோடு சொன்னான்.

‘‘வாமதேவா! உனது பக்தியையும் ஆர்வத்தையும் பாராட்டுகிறேன். உன்னால் இந்தக் காரியத்தை நல்ல விதமாக முடிக்க முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால் நான் ஓர் உபாயம் சொல்கிறேன். நீ உடனே சதுரகிரிக்குக் கிளம்பு. அங்கு காலாங்கி முனிவர் என்ற சித்தர் இருக்கிறார். பெரும் தவசீலர். அவரைக் கண்டுபிடித்து வணங்கி, உனது நிலையைச் சொல். அதன் பிறகு நீ நினைப்பது எல்லாம் சுபமாக முடிவுறும்!’’ என்றார்.

துறவியின் வார்த்தைகளைக் கேட்ட வாமதேவன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். தனது நோக்கம் நிறைவேற வழி ஒன்று கிடைத்து விட்டது என்று பூரிப்படைந்தான். துறவியை மீண்டும் நமஸ்கரித்தான். ‘‘என்னை ஆசீர்வதியுங்கள் முனிவரே! நான் உடனே சதுரகிரி சென்று காலாங்கிநாத சித்தரைச் சந்திக்கிறேன்.’’

துறவி, விடை கொடுத்ததும் வாமதேவன், சதுரகிரியை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கினான். காடு, மலை எல்லாம் கடந்து சித்த புருஷர்கள் வாழும் உயர்ந்த மலையான சதுரகிரியை அடைந்தான். அங்கே காலாங்கி வனத்தில் ஆசிரமம் அமைத்துத் தங்கி இருந்த காலாங்கிநாதரைச் சந்தித்தான். அவரைப் பணிந்து வணங்கினான். புன்னகையுடன் ஆசீர்வதித்தார் காலாங்கிநாதர். திருமூலரின் மாணாக்கர் இந்த சித்த புருஷர்!

நெடுந்தொலைவில் இருந்து வந்த வாமதேவனிடம் ஆற அமர அனைத்தையும் விசாரித்தார் காலாங்கிநாதர். கிராமத்தில் கோயில் அமைக்கத் தொடங்கியதில் இருந்து தற்போதைய நிலை வரை எல்லாவற்றையும் விரிவாகச் சொன்னான் வாமதேவன். ‘இவனுக்கு உதவி செய்யலாம். தப்பில்லை!’ என்று தீர்மானித்த காலாங்கிநாதர் ஒரு கணம் சிந்தித்தார். ‘வந்திருக்கும் இவன் நிஜமாகவே நல்லவன்தானா? ஆலயத் திருப்பணி என்று சொல்லி பணம் வாங்கி, சிலர் தங்களது சுய தேவைகளுக்குப் பயன்படுத்தும் இந்தக் காலத்தில் (அந்தக் காலத்திலேயே காலாங்கிநாதர் யோசித்திருக்கிறார் என்றால், யோசித்துப் பாருங்கள்!) இவனுக்கும் நாம் உதவ நினைப்பது சரியா? இவன் ஒருவேளை தவறான ஆசாமியாக இருந்தால்?’ என்று திடீரென சிந்திக்க ஆரம்பித்தார் காலாங்கிநாதர்.

தவிட்டையும் தங்கமாக மாற்றும் வல்லமை கொண்ட அந்த சித்த புருஷர், தயங்குவது வாமதேவனுக்குக் கலக்கத்தை உண்டு பண்ணியது! எனினும், அவர் மனம் இளகும் வரை அமைதி காக்க முடிவெடுத்தான் வாமதேவன். தனது கிராமத்தில் தான் தொடங்கிய சிவன் கோயில் பணியை முடிக்கஎன்றைக்கேனும் ஒரு நாள் காலாங்கிநாதர் நிச்சயம் உதவுவார்!’ என்று மனப்பூர்வமாக நம்பிய வாமதேவன் அவரது ஆசிரமத்திலேயே தங்கி, அவருக்குப் பணிவிடைகள் செய்தான்.

நாட்கள் ஓடின. தனக்குப் பணிவிடை செய்வதையே ஒரு பாக்கியமாக எண்ணி வாழும் வாமதேவனின் செயல், காலாங்கிநாதரிடம் இரக்கத்தை ஏற்படுத்தியது. ‘உதவி கேட்டு வந்தவனுக்கு இது வரை நாம் உதவவில்லை. எனினும் இவன் இங்கிருந்து செல்லவில்லையே. எனக்குப் பணிவிடை செய்வதையே சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு தங்கி விட்டானே! இப்படிப்பட்ட வைராக்கியசாலிக்கு அவன் கேட்ட உதவியைச் செய்வது அவசியம்!’ என்று முடிவெடுத்தார் காலாங்கிநாதர். அதனால் ஒரு நாள் வாமதேவனிடம், சிவன் கோயில் பணியை முடிப்பதற்கு, தான் உதவத் தீர்மானித்திருப்பதைத் தெரிவித்தார். அந்தச் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்த வாமதேவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!

சித்தரான காலாங்கிநாதர் வாமதேவனுக்குக் கட்டுக் கட்டாகப் பணமா தர முடியும்? சித்தர்கள் தங்களுக்குத் தெரிந்த ஸித்து முறைகளில் தங்கம் தயாரித்துப் பிறருக்கு உதவலாம். உலகத்தின் எந்த ஒரு பொருளின் மீதும் பற்றில்லாத அவர்கள், உலகோர் உய்வதற்காக, அதுவும் நல்ல நோக்கத்துக்காக ரசவாதம் மூலம் தங்கம் தயாரித்து எவ்வளவோ பேருக்குச் சுயநலமில்லாமல் உதவியிருக்கிறார்கள். சுயநலமிருந்தால் அவர்கள் சித்தர்களாகியிருக்க முடியுமா என்ன?

தங்கத்தைத் தயாரிப்பதா? ‘அது எப்படி!’ என மலைக்க வேண்டாம்! குறிப்பிட்ட முக்கியமான ரகசிய மூலிகைகளை அதற்குத் தேவையான பட்டியல் மற்றும் அளவுப்படி சேகரித்து, குறிப்பிட்ட பக்குவத்தில் கலந்தும் அரைத்தும் குழைத்தும் தைலம் ஒன்றைத் தயாரிப்பார்கள் சித்தர்கள். இதற்கான வழிமுறைகள் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்குச் சாத்தியமானதல்ல. இதற்கென்று உருவாக்கப்பட்டுள்ள பிரத்தியேகமான நியமங்களும் சாஸ்திர வழிமுறைகளும் மிகவும் சிக்கலானவை. இவ்வாறு வடித்தெடுக்கப்படும் தைலத்தில் இரும்பு, செம்பு போன்ற எந்த ஓர் உலோகத்தை மூழ்க வைத்து நனைத்து எடுத்துப் புடம் போட்டாலும் அது சொக்கத் தங்கமாக மாறிவிடும். இவ்வாறு சித்தர்கள் தங்கம் தயாரிக்கப் பயன்படுத்தும் மூலிகைச் செடிகள் அனைத்தும் தற்போதும் சதுரகிரி மலையில் வளர்வதாகச் சொல்கிறார்கள்.

ரோம வேங்கை, உதிரவேங்கை, ஜோதி விருட்சம், கருநெல்லி போன்ற மூலிகைகளாலும், 32 வகையான பாஷாணச் சரக்குகளாலும், இன்னும் சில பொருட்களாலும் தைலம் ஒன்றைத் தயாரித்தார் காலாங்கிநாதர். அதில் மிகவும் சாதாரணமான உலோகத் துண்டுகளை நனைத்து, அவற்றை சொக்கத் தங்கக் கட்டிகளாக மாற்றி வாமதேவனிடம் கொடுத்தார். ‘‘இந்தத் தங்கக் கட்டிகளைப் பயன்படுத்தி, கோயில் திருப்பணிகளைச் சிறப்பாகச் செய்து முடி. இறைவனின் ஆசீர்வாதம் உனக்கு எப்போதும் உண்டு!’’ என்று ஆசி கூறி அவனை அனுப்பி வைத்தார். அங்கிருந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரிடம் விடை பெற்றுக் கிளம்பிய வாமதேவன் தனது நோக்கத்தை நல்லபடியாக நிறைவேற்றிக் கொண்டான்.

அப்படி வாமதேவனது தேவைக்குக் கொடுத்தது போக, தைலம் கொஞ்சம் காலாங்கிநாதரிடம் மீதம் இருந்தது. ‘இதை நாம் கையில் வைத்திருப்பது ஆபத்து, பேராசை கொண்ட எந்த ஒரு துஷ்டனிடமாவது இது கிடைத்து விட்டால், அவன் ஏராளமாகத் தங்கத்தை உற்பத்தி செய்வான். பின்னர் அது, விரும்பத்தகாத சில துர் சம்பவங்களுக்குக் காரணமாகிவிடும். எனவே, இதை மிகவும் பாதுகாப்பான ஓரிடத்தில் பத்திரப்படுத்தி வைப்பதுடன், இதைக் காவல் காக்கச் சரியானவர்களை நியமிக்க வேண்டும்!’ என்று தீர்மானித்தார் காலாங்கிநாதர்.

அதையொட்டி உடனே பெரிய கிணறு ஒன்றை வெட்ட ஏற்பாடு செய்தார். தன்னிடம் எஞ்சியிருந்த தைலத்தையும் வாமதேவனிடம் கொடுத்தது போக, மீதியுள்ள தங்கக் கட்டிகளையும் அதில் போட்டார். பின்பு கிணற்றை பத்திரமாக மண்ணைப் போட்டு நிரவி மூடினார். கிணற்றிலுள்ள பொருட்கள் மற்றும் சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் _ சந்தன மகாலிங்கம் சந்நிதிகளுக்குக் காவலாக இருக்கமந்திரங்கள் ஜபித்து திசைக்கு ஒரு காவல் தெய்வத்தை நியமித்தார். அப்படி நியமிக்கப்பட்ட காவல் தெய்வங்களில் ஒன்றுதான் இங்குள்ள பிலாவடிக் கருப்பர்.

சதுரகிரியின் அனைத்துத் திக்குகளிலும் இருக்கிற இந்த காவல் தெய்வங்கள்தான், மலைக்கு வரும் பக்தர்களுக்கும் காவல் தெய்வங்கள். அதனால் இங்கு வரும் பக்தர்கள் பூஜை மற்றும் வழிபாடுகளை இவர்களுக்கும் செய்கின்றனர். இந்த காவல் தெய்வங்களை மீறி, எவரும் இங்கு எந்த ஒரு துஷ்டக் காரியத்தையும் செய்ய முடியாது. மீறி எவராவது அப்படி எதையாவது செய்ய முற்பட்டால் பிலாவடிக் கருப்பர் அந்த நபரை காலி பண்ணிவிடுவார்!

அடிக்கடி சதுரகிரிக்கு வந்து போகும் ஆன்மிக அன்பர்கள் சிலர் இன்னொரு தகவலும் சொல்கிறார்கள்: ‘‘அந்நியர்களால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஆபத்து வந்தபோதுஅங்கே இருக்குற முக்கியமான நகைகளை எல்லாம் இந்தத் தைலக் கிணத்துக்குள்ளதான் கொண்டு வந்து வெச்சாங்க!’’

எது எப்படி இருந்தாலும், எத்தனையோ தலைமுறைகளைத் தாண்டியும் இந்தத் தைலக் கிணறு இன்றைக்கும் ஒரு மர்மப் பிரதேசமாகத்தான் விளங்குகிறது!