சதுரகிரி 04 – ஸ்ரீ சுந்தரமஹாலிங்கம்

ஸ்ரீசுந்தர மகாலிங்கம்

துரகிரி மலைமேல், முதலில் ஸ்ரீசுந்தர மகாலிங்கத்தை தரிசிப்போம். மணிகளின் இசையோடு சங்கொலியும் சேர்ந்து ஒலிக்கும்போது கிட்டும் தரிசனம் அலாதியானது. அந்த பக்தி உணர்வின் நிறைவை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது; அப்போது நம்முள் பரவும் தெய்வீகத் தன்மையை விவரிப்பதும் சிரமம். அதை அனுபவிப்பது மட்டுமே சாத்தியம். நகர நாகரிகத்தின் சாயல், புகை, இரைச்சல், நெருக்கடி ஆகியவை இல்லாமல் இப்படிப்பட்ட ஏகாந்தமான சூழ்நிலையில் இறைவனை உளமார தரிசிக்கும்போது, அந்தப் பகுதியின் சாந்நித்தியத்தை நம்மால் கிரகிக்க முடிகிறது. அதன் மூலம் நம்மால் புதிய உற்சாகம் பெற முடிகிறது!

இயற்கையும் இறைவனும் தந்த கொடையான சதுரகிரியில், இந்த அமைதியும், ஆச்சரியங்களும் என்றென்றும் நிலைத்திருப்பதற்கு எல்லாம் வல்ல அந்த மகாலிங்கத்தின் பூரண அருளே காரணம்.

சற்று இடப் புறம் சாய்ந்து, தலையில் வெட்டுப்பட்டு நமக்கு தரிசனம் தரும் இந்த ஸ்ரீசுந்தர மகாலிங்கம், சுயம்பு வடிவம். பாணத்தின் உயரம் சுமார் ஒன்றரை அடி. உச்சந்தலையில் ஒரு வெட்டு (பாணப் பகுதியில் அனுபவிப்பது மட்டுமே சாத்தியம். நகர நாகரிகத்தின் சாயல், புகை, இரைச்சல், நெருக்கடி ஆகியவை இல்லாமல் இப்படிப்பட்ட ஏகாந்தமான சூழ்நிலையில் இறைவனை உளமார தரிசிக்கும்போது, அந்தப் பகுதியின் சாந்நித்தியத்தை நம்மால் கிரகிக்க முடிகிறது. அதன் மூலம் நம்மால் புதிய உற்சாகம் பெற முடிகிறது!

இயற்கையும் இறைவனும் தந்த கொடையான சதுரகிரியில், இந்த அமைதியும், ஆச்சரியங்களும் என்றென்றும் நிலைத்திருப்பதற்கு எல்லாம் வல்ல அந்த மகாலிங்கத்தின் பூரண அருளே காரணம்.

சற்று இடப் புறம் சாய்ந்து, தலையில் வெட்டுப்பட்டு நமக்கு தரிசனம் தரும் இந்த ஸ்ரீசுந்தர மகாலிங்கம், சுயம்பு வடிவம். பாணத்தின் உயரம் சுமார் ஒன்றரை அடி. உச்சந்தலையில் ஒரு வெட்டு (பாணப் பகுதியில் ஒரு பிளவு தெரிகிறது). நெற்றிப் பட்டையுடன், சந்தனம் துலங்கும் மேனி, நாகாபரணப் பின்னணியுடன் மலர்களின் வாசனையும் சாம்பிராணிப் புகையும் சேர்ந்து சந்நிதியே மணக்கிறது. அந்தச் சூழ்நிலையே மனத்தை நிறைக்கிறது. சாதாரணமாக, மற்ற ஆலயங்களில் காணப்படும் கருவறை, அர்த்த மண்டபம் ஆகிவை இரண்டும் சேர்ந்த அமைப்பு இங்கு காணப்படுகிறது. அதற்குள் ஸ்ரீசுந்தர மகாலிங்கம் லிங்க சொரூபமாக அருள் மழை பொழிகிறார்.

இவருக்கு முன்புறம்ஷீட்போடப்பட்ட மகா மண்டபம். அதற்கு முன்னால்ஷீட்வேயப்பட்ட மற்றொரு முன் மண்டபம். உண்டியல்கள்; உபயதாரர்களின் கல்வெட்டுகள். திருவிழா நாட்களில் பக்தர்கள் வரிசையாக வந்து தரிசனம் பெறுவதற்காகப் போடப்பட்ட கம்பித் தடுப்புகள். மலை மேல் இருந்தாலும், நகரத்தில் சகல வசதிகளுடன் உள்ள வளமான ஓர் ஆலயத்தையே இந்த சந்நிதி நினைவூட்டுகிறது. இதற்கான கட்டுமானப் பொருட்களைத் தலையிலும் முதுகிலும் சுமந்து வந்து, சுந்தர மகாலிங்கத்தின் சந்நிதி அமைக்க உதவிய அந்த உழைப்பாளிகளை நினைத்தால், இப்போதும் நெஞ்சாரப் பாராட்டத் தோன்றுகிறது.

கண்களை மூடி, ஆனந்தத்தைத் தேடி, அருள்வழி நாடிஸ்ரீசுந்தர மகாலிங்கத் திருமேனியின் முன்பாகச் சில நிமிடங்கள் சப்பணமிட்டு அமர்ந்தால், தேடியது கிடைக்கிறது; நாடியது நம்மிடம் வருகிறது. அமாவாசை, பௌர்ணமி அல்லாத நாட்களில் ஆள் அரவம் இல்லாத இந்த சந்நிதியின் முன்னால், பிரார்த்தித்து நிற்கும் நிமிடங்கள் சந்தோஷத் தருணங்களே! ஆனால், அப்படிப்பட்ட தினங்களில் மலை ஏறுபவர்கள், தகுந்த நபர்களின் துணையுடன் செல்ல வேண்டும். முடிந்த அளவுக்குக் கூட்டமாகச் செல்வது நல்லது. ஸ்ரீசுந்தர மகாலிங்கத்தை தரிசிக்கும் முன், இந்த ஈசன் இங்கு உருவான கதையைப் பார்ப்போம்.

கயிலயங்கிரி அன்று விசேஷப் பொலிவுடன் இருந்தது. நஞ்சுண்ட நாயகனும் அவன் நாயகியான பார்வதிதேவியாரும் அலங்காரம் செய்யப்பட்ட தங்களது ஆசனத்தில் அமர்ந்திருந்தனர். இசையமுதால் மகேஸ்வரனைத் திளைக்க வைக்க விரும்பிய தேவர்களும் கந்தர்வர்களும், அருமையான கானங்கள் பொழிந்து தங்களது புலமையை வெளிப்படுத்தினார். ஆடல், பாடலுடன் பல்வேறுபட்ட மங்கல வாத்தியங்களின் இசை என கயிலயங்கிரியே மொத்தத்தில் கோலாகலமாக இருந்தது.

அந்தக் கட்டத்தில் இமாலய அதிபதியை, இசையின்பத்தில் ஆழ்த்தியவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் யாழ்வல்ல தேவர். வீணை இசைப்பதில் வல்லவரான இவர், சுருதிலயம் பிறழாமல், சாம கானம் இசைத்து இறைவனைத் தன்னிலை மறக்கச் செய்தார். அந்த வேளையில்தான், தேவமாது வடிவில் யாழ்வல்ல தேவருக்கு சோதனை ஒன்று வந்தது. அவரது இசை கேட்டு இன்புற்ற எண்ணற்றவர்களுள் இந்த தேவமாதும் ஒருவர்.

யாழ்வல்ல தேவரின் வீணா கானத்தில் தன்னை இழந்த அந்த தேவமாது, அதனால் எழுந்த பரவசத்தால் காதல் ரசம் சொட்டும் விழிகளுடன் அவரைப் பார்த்தாள். மாது ஒருத்தி காதல் மயக்கத்துடன் தன்னைக் கவனிப்பதை யாழ்வல்ல தேவரும் உணர்ந்தார். எனவே, அவள் பக்கம் தன் பார்வையைப் பதித்த யாழ்வல்ல தேவரும், பார்த்த மாத்திரத்தில் அவளிடம் தன்னை இழந்தார். அத்துடன் அவர் கயிலயங்கிரியையும் சுற்றுச்சூழலையும் மறந்தார். இறைவனும், இறைவியும் அருகிலிருக்கும் வேளையில், தான் என்ன செய்கிறோம் என்பதறியாமல், அந்த தேவமாதின் அழகை ரசித்த வேளையில்சட்டென்று இதைக் கவனித்த இறைவன் வெகுண்டார்.

‘‘பக்திக்கு உரிய கயிலயங்கிரிக்கு வந்தும் சிற்றின்ப உணர்வுக்கு அடிமையானதால் நீங்கள் இங்கு வாழும் தகுதியை இழந்து விட்டீர்கள். எனவே, உங்களது இந்தத் தவறுக்குப் பிராயச்சித்தமாக இந்தக் கணமே இருவரும் பூலோகத்தை அடைந்து, உங்களது விருப்பப்படி சிற்றின்ப சுகத்தை அனுபவியுங்கள். எந்தத் தவறால் நீங்கள் மனம் தடுமாறினீர்களோ, இனி அதிலேயே அழுந்தித் திளையுங்கள்!’’ என்றார் மகேஸ்வரன், அந்த இருவரிடமும்.

யாழ்வல்ல தேவரும் தேவமாதும் தங்களது தவறை உணர்ந்து, ஈசனது கோபத்துக்கு ஆளானதை அறிந்து வருந்தினர். அதனால் இருவரும் மன்னிப்புக் கோரும் குரலில் இறைவனைப் பணிந்து ஒருமித்த குரலில் கூறினர்: ‘‘சர்வேஸ்வராநேர்ந்துவிட்ட தவறுக்கு வருந்துகிறோம். எங்களது பூர்வ ஜென்ம வினையால், இப்படி ஒரு தவறு நிகழ்ந்து விட்டது. அதன் பொருட்டு தாங்கள் இட்ட சாபத்துக்குக் கட்டுப்படுகிறோம். இறைவா, ஒரு வேண்டுகோள். எங்களது தண்டனை முடிவடையும் இறுதிக் கட்டத்தில், தாங்கள் எங்களை மன்னித்து அருள் புரிய வேண்டும். அதன் பின் தொடர்ந்து தங்களின் பாதத்தில் வீழ்ந்து கிடப்பதே எங்களது லட்சியம் ஈஸ்வரா!’’ என்றனர்.

இறைவன் மனமிரங்கினார். ‘‘நீங்கள் இருவரும் பூலோகத்தில் நாற்பது ஆண்டுகள் வசித்து அந்தத் தண்டனைக் காலம் முடிந்ததும், உங்களது சாபம் அகலும். அப்போது நீங்கள் கேட்டுக் கொண்டபடியே நடக்கும்!’’ என்றார்.

அதன்படி, யாழ்வல்ல தேவரும் தேவமாதும் பூலோகத்தில் கோட்டையூர் என்ற இடத்தில் மனிதர்களாகப் பிறந்தனர். மூலிகை வனமும் அகத்தியர் பூஜித்த பெருமைக்கு உரியதுமான சதுரகிரிக்கு அருகில் உள்ள ஓர் ஊர் கோட்டையூர். பூஞ்சோலைகளும் சிற்றாறும் நிரம்பிய அழகான பிரதேசம். இயற்கை அழகு, இங்கு கொட்டிக் கிடந்தது. மக்கள், வளத்துடன் பஞ்சமில்லாமல் வாழ்ந்து வந்தனர்.

கோட்டையூரில் வசித்த தில்லைக்கோன் என்பவன், இடையர் குலத்தைச் சேர்ந்தவன். சிவ பக்தி மிகுந்தவன். அடியார்களிடம் மிகுந்த அன்பு கொண்ட அவன், ஏராளமான பசுக்களை வளர்த்து வந்தான். காமதேனுவின் வடிவாக அவற்றை நித்தமும் பூஜித்து, அவை தரும் பாலைக் கொண்டு தனது வாழ்வை நிம்மதியாக நடத்தினான். அவன் மனைவியின் பெயர் திலகமதி. இந்த இருவருக்கும் மகனாக வந்து பிறந்தார் யாழ்வல்ல தேவர். பிறக்கும்போது பச்சை நிற மேனி கொண்டிருந்ததால், இவர்பச்சைமால்என்று அழைக்கப்பட்டார்.

அதே போல் தில்லைக்கோனின் தங்கையான சிங்காரமங்கை என்பவருக்கும் அவள் கணவன் செங்கமலக் கண்ணன் என்பவருக்கும் எட்டாவது அருமைக் குழந்தையாகப் பிறந்தாள் தேவமாது. இவளுக்கு முந்தைய மூத்த ஏழு பேரும் ஆண் குழந்தைகள். தங்களுக்குப் பெண் பிறந்ததும் சிங்காரமங்கையும் செங்கமலக் கண்ணனும் பூரித்தனர். பிறக்கும்போதே தேவமாதுக்கு சடை இருந்ததால், அவள்சடைமங்கைஎன அழைக்கப்பட்டாள்.

பச்சைமாலும் சடைமங்கையும் கோட்டையூரில் நல்ல சூழ்நிலையில் வளர்ந்தனர். இறைவனின் திருவுளப்படியே எல்லாமும் நடந்தன. வருடங்கள் பல கடந்தன. இறைவன் இவர்களை ஆட்கொள்ளவும், சதுரகிரியில் ஸ்ரீசுந்தர மகாலிங்கம் குடிகொள்ளவும் உகந்த வேளை வர வேண்டாமா?

அப்படியொரு வேளையும் வந்தது. அதையொட்டி இறைவனின் நாடகமும் படிப்படியாக அரங்கேறியது.

பச்சைமால் பதினாறு வயதையும், சடைமங்கை பன்னிரண்டு வயதையும் எட்டினர். இருவரது வீட்டிலும் திருமணப் பேச்சுகள் துவங்கின. பச்சைமாலின் பெற்றோரும் சடைமங்கையின் பெற்றோரும் ஒரு தினத்தில் கூடிப் பேசினர். உறவு முறையின் சந்தோஷத்தை உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டனர். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோரும் பெரியோரும் அப்போது முடிவு செய்தனர். அந்த முடிவு, பின்னர் சடங்குகளாக மாறின. இதன் விளைவாக, ஒரு சுபயோக சுபதினத்தில் சடைமங்கையின் கழுத்தில் தாலி கட்டி, அவளைத் தன் மனைவி ஆக்கிக் கொண்டான் பச்சைமால். அவர்களது இல்லறம் இனிதே துவங்கிற்று. தனது குலத்தொழில் வழக்கத்தையொட்டி, பசு மாடுகளை ஓட்டிச் சென்று, சதுரகிரி பகுதிகளில் மேய்த்தான் பச்சைமால். திருப்தியாக மேயும் பசுக்கள் தங்களது கன்றுகளுக்கும் ஊட்டி, எஜமானனான பச்சைமாலுக்கும் வஞ்சனையின்றி பாலை வழங்கின.

அவன் அதைக் கறந்து, பாத்திரங்களில் நிரப்பி, சடைமங்கையிடம் கொடுப்பான். அந்தப் பாலை வீடு வீடாகச் சென்று விற்று வருவாள் அவள். அதன் மூலம் கிடைத்த வருமானம் அவர்களுக்கு தாராளமாக இருந்தது. அதைக் கொண்டு அவர்கள் இருவரும் இனிமையாக வாழ்க்கை நடத்தினர்.

அவர்களது கொட்டிலில் பசுக்கள் பல்கிப் பெருகின. இடைவிடாமல் எப்போதும் கன்றுக்குட்டிகளின் குரல்கள் இனிமையாகக் கேட்டன. சட்டென்று நினைத்துப் பார்ப்பதற்குள் இருபது வருடங்கள் கடகடவென்று ஓடி விட்டன. அவர்களுக்குக் கயிலாயநாதன் கொடுத்த வாக்குப்படி அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறின.

சாபத்தால் பூலோகத்தில் வசிக்கும் அவர்களுக்கு சாப விமோசனம் அளிக்கத் தீர்மானித்த பரமேஸ்வரன், சித்தர் ஒருவருடைய வடிவத்தில் பூலோகத்தில் எழுந்தருளினார். ஜடா மகுடம் தரித்து, ருத்திராட்ச மாலைகளைத் திருமார்பில் தாங்கி, காவி வஸ்திரம் அணிந்து, நெற்றியிலும் திருமேனியிலும் திருநீறு துலங்ககமண்டலம் ஏந்திப் புறப்பட்டு வந்தார் ஸ்ரீகயிலாயநாதர்.

சதுரகிரியின் அடிவாரத்திலுள்ளமாவூத்துஎன்ற ஊரில் எழுந்தருளினார் இந்த மகா சித்தர். (மதுரைஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் வரும் கிருஷ்ணன்கோவிலில் இருந்து வத்திராயிருப்பு, தம்பிபட்டி வழியாகச் சென்றால், சுமார் 18 கி.மீ. தொலைவில் இருக்கிறது மாவூத்து).

துறவிகளும் ரிஷிகளும் தவம் செய்து வாழும் கிராமமான மாவூத்தில், இந்த மகா சித்தருக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. புதிய சித்தர் அங்குள்ள திருக்குளத்தில் தினமும் நீராடினார். இத்தகு பேறு பெற்ற அந்தத் திருக்குளம், மாவூத்தில் இன்றைக்கும் கண்கண்ட ஒரு சாட்சியாக விளங்குகிறது.

தற்போதும்கூட விடிந்தும் விடியாத அதிகாலை நேரத்தில், நீர் நிறைந்து தளும்பும் அந்தக் குளத்தின் நடுவில் நீர்க்குமிழிகள் பெரிய அளவில்குபுக் குபுக்கென்று தோன்றி, சற்று நேரத்தில் அடங்கி மறைவதாக, அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் தகவல் சொன்னார். இதன் பொருள், இறைவன் இன்றும் அந்தத் திருக்குளத்தில் அதிகாலை நேரத்தில் நீராடுவதாக ஐதீகமாம்!

பச்சைமாலிடம் வருவோம். அன்றும் வழக்கம் போல் பச்சைமாலிடம் இருந்து, நுரை ததும்பும் கறந்த பாலை வியாபாரத்துக்காக வாங்கி வந்தாள் சடைமங்கை. அவள் இந்த மாவூத்து பகுதியைக் கடக்கும்போது, யதேச்சையாக மரத்தடிப் பக்கம் பார்த்தாள். அங்கு திருமேனி பிரகாசிக்கநமது மகா சித்தர், தியானம் செய்வது போல் மௌனமாக அமர்ந்திருந்தார். இயல்பாகவே பக்தி நிறைந்த சடைமங்கைக்கு அவரை வணங்க வேண்டும் என்று தோன்றியது. எனவே, தன் கைகளில் இருந்த பால் பாத்திரங்களை பத்திரமாக கீழே இறக்கி வைத்துவிட்டு, சற்று அவரை நெருங்கி பயபக்தியுடன் வணங்கினாள்.

திருவிளையாடல் புரிபவர் அல்லவா சித்தராக வந்திருப்பவர்! அவருடைய நாடகம் திட்டமிட்டபடி, சரியான நேரத்தில் அரங்கேற வேண்டாமா? அவர் சடைமங்கையின் வணக்கத்தை ஏற்றுக் கொண்டு,

புன்னகைத்தவாறு அன்புடன் ஆசீர்வதித்தார்: ‘‘குழந்தாய்நீ நீண்ட காலம் மகிழ்ச்சியோடு வாழ்வாய். உனக்கு இனிமேல் எந்தவிதமான குறையும் இருக்காது. அம்மாநெடுந்தொலைவிலிருந்து பயணமாகி வரும் எனக்கு ஒரே தாகமும் பசியுமாக இருக்கிறது. நடக்க முடியாமல்தான் அப்படியே சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டேன். களைப்பு என்னை வாட்டுகிறது. உன்னைப் பார்த்தால் பால் வியாபாரம் செய்பவள் போல் தெரிகிறது. அந்தப் பாத்திரங்களில் பால் இருந்தால், எனக்குக் கொஞ்சம் பால் கொடுத்து உதவுவாயா?’’ என்று இளகின குரலில் கேட்டார்.

சடைமங்கைக்குப் பரிதாபம் தோன்றியது. உடனே சற்றும் தயங்காமல் பால் நிரம்பிய ஒரு பாத்திரத்தை எடுத்து அவரிடம் பவ்யமாக நீட்டினாள்.

உலகுக்கே உணவூட்டும் கயிலாயநாதன். அவளிடமிருந்து பாத்திரத்தைத் தன் கைகளில் வாங்கி, தன் தலையைச் சற்றுப் பின்புறமாகச் சாய்த்து, அதிலிருந்த மொத்தப் பாலையும் மளமளவென அருந்தினார். செந்நிற மேனியனின் அதரங்களில் நொங்கும் நுரையுமாகப் பாலின் அடையாளங்கள்.

பின்னர் பெரிதும் ஆறுதல் அடைந்தவராக, காலியான பால் பாத்திரத்தை சடைமங்கையிடம் கொடுத்தார். பிறகு, ‘‘மிக்க நன்றி பெண்ணேஉனது கருணை மிக்க உதவியால் எனது தாகமும் பசியும் அடங்கி விட்டன. நான் இன்னும் சில நாட்கள் இந்தப் பகுதியில் இருப்பேன். தினமும் என் பசியைப் போக்குவதற்கு இதே போல் உதவுவாயா?’’ என்று கேட்டார், சித்தர் வடிவ சிவனார்.

‘‘நிச்சயமாகத் தருகிறேன் ஐயா. அது என் பாக்கியம்’’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள். அதன் பிறகு தொடர்ந்து தினமும் இறையனாருக்குப் பசு பால் கொடுக்கத் தொடங்கினாள் சடைமங்கை. மட்டுமின்றி, அவருடைய அன்றாட பூஜைகளுக்கும் தன்னாலான உதவிகளையும் புரிந்து வந்தாள். இதையெல்லாம் சடைமங்கையின் குடும்பத்தினர் அறியார்!

பச்சைமால் கொடுத்து அனுப்பும் பாலில், கணிசமான அளவு தினமும் குறைவதைக் கண்டு குடும்பத்தினர் குழம்பினர். ஒரு நாள் அவர்கள் பச்சைமாலிடம் அதற்கான காரணத்தை விசாரித்தனர். அவன் அதிர்ந்தான். ‘‘என்னதுபால் அளவு குறைகிறதா? அதற்கு வாய்ப்பு இல்லையேசரிஇனிமேல் நான் பார்த்துக் கொள்கிறேன்!’’ என்றவன், சடைமங்கையைக் கண்காணிக்கத் தீர்மானித்தான்.

மறுநாள் வழக்கம்போல் சடைமங்கையிடம் பால் கொடுத்து அனுப்பிவிட்டு, அவளைப் பின்தொடர்ந்தான் பச்சைமால். அவள் எப்போதும்போல் சித்தருக்குக் கொடுத்துவிட்டு, எஞ்சிய பாலுடன் வீடு திரும்பினாள். பச்சைமால் சினம் கொண்டான். உடனே வீட்டுக்கு ஓடி வந்தவன், ‘‘சடைமங்கைசடைமங்கை’’ என்று உரத்த குரலில் அழைத்தான். சடைமங்கை, ஐயத்துடன் அவன் முன் வந்து நின்றாள். பச்சைமாலின் முகத்தில் கோபம் கொப்பளித்தது.

சடைமங்கையின் இடக் கையைப் பிடித்துத் தன் பக்கமாக விசையுடன் இழுத்தான் பச்சைமால். ‘‘தினமும் இரவு பகல் பேதமின்றி மாடு மேய்த்து, பாலைக் கறந்து, காசுக்கு விற்கச் சொன்னால், கண்ட கண்ட பரதேசிகளுக்கெல்லாம் பாலைப் பருகக் கொடுக்கிறாயேஉன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?’’ என்று ஏகத்துக்கும் திட்டியதோடு, அவளைத் தண்டிக்கவும் செய்தான்.

அந்த தண்டனையை எந்தவித மறுப்பும் இல்லாமல் ஏற்றுக் கொண்ட சடைமங்கை, மறுநாள் மகா சித்தரிடம் சென்று நடந்த சம்பவங்களைக் கூறி, கண் கலங்கினாள். சித்தர் அவளைத் தேற்றினார்.

‘‘சடைமங்கைபூலோகத்தில் இனி, நவசக்திகளில் நீயும் ஒருத்தியாக இருந்து, தெய்வ சாந்நித்தியத்தோடு திகழ்வாய். ‘சடாதாரிஎனும் திருநாமத்துடன் இதே மாவூத்தில் கோயில் கொள்வாய். உன்னை வந்து தொழும் பக்தர்களது குறைகளைத் தீர்த்து, அவர்களுக்கு வேண்டும் வரம் கொடு!’’ என்று ஆசீர்வதித்து, சடைமங்கையை மாவூத்தில் நிலை கொள்ளச் செய்தார்.

சடைமங்கையை காணாமல் தவித்த அவளுடைய அண்ணன்கள் ஏழு பேரும், மகா சித்தரிடம் ஓடோடி வந்தார்கள். அவளது இறைநிலையை எடுத்துச்  சொல்லி, அவதார நோக்கத்தையும் விளக்கிய சித்தர், ‘சடாதாரிஎன்ற பெயரில் தெய்வமானதையும் சொன்னார்.

பின்னர், சகோதரர்கள் ஏழு பேரையும் தெய்வத் தன்மை வாய்ந்த ஏழு ஐயனாராக்கி, திசைக்கு ஒருவராக சதுரகிரியில் நிலை கொள்ளச் செய்தார்

நடந்ததை அறிந்த பச்சைமால், அழுது புலம்பினான். மனைவி தெய்வம் ஆனதையும், அவளுடன் பிறந்த சகோதரர்கள் ஐயனாராகி, திசைக்கொருவராகக் காவல் காப்பதையும் ஊரார் மூலம் அறிந்தான். ஜனங்கள் அனைவரும் இந்த தெய்வங்களுக்குப் பொங்கலிட்டுப் படைப்பதையும், வழிபாடுகள் பிரமாதமாக நடப்பதையும் பார்த்து மனம் உருகினான். பித்துப் பிடித்தவன் போல் சில நாட்கள் அலைந்தான்.

பிறகு, பந்த பாசம் அனைத்தையும் துறந்து, தனக்குச் சொந்தமான பசுக்களை ஓட்டிக் கொண்டு, சதுரகிரி மலையில் வசிக்கத் தொடங்கினான். ‘பசிஎன்று வந்தவர்களுக்கெல்லாம் பால், தயிர், மோர் போன்றவற்றைக் கொடுத்தான். தனக்கு மோட்சத்தை அருளுமாறு கயிலயங்கிரி வாசனை நித்தமும் வேண்டி வந்தான்.

கோட்டையூர் பகுதியை ஆண்டு வந்த அரசன், மாவூத்தில் மகா சித்தர் ஒருவர் இருப்பதை அறிந்தான். ஒரு நாள், தன் பரிவாரங்களுடன் புறப்பட்ட அவன் அந்த சித்தரைச் சந்தித்து வணங்கினான். ஆசீர்வதித்த மகா சித்தர், ‘‘மன்னா! உன்னால் ஒரு காரியம் ஆக வேண்டி உள்ளது. எனக்கு இங்கே ஓர் ஆலயம் எழுப்பு!’’ என்றார்.

சித்தரின் ஆணையைச் சிரமேற்கொண்டு செயல்படுத்தினான் செங்கோல் மன்னன். திறமையான சிற்பிகளையும், ஸ்தபதிகளையும் வரவழைத்து ஆலயப் பணிகளை ஆரம்பித்தான். மாவூத்தில் மகேசன் ஆலயம், மகோன்னதமாக உருவானது. ஆலயப் பணிகள் அற்புதமாக முடிந்தன.

ஒரு நாளில் அதிகாலை வேளையில், கதிரவன் தன் கதிர்களைப் பரப்பி மாந்தர்களைத் துயில் எழுப்பிய பொழுதில், மன்னர் மற்றும் ஆன்றோர்களுக்குத் தனது சுயரூபத்தைக் காட்டி அருளிய மகா சித்தர், புதிய ஆலயத்தின் உள்ளே சந்நிதியில் புகுந்து லிங்க சொரூபமாக மாறினார்.

இது கண்டு மன்னரும் மற்றவர்களும்நமசிவாயகோஷத்தை எழுப்பி, இறைக் காட்சியைக் கண்டு இன்புற்றார்கள். அந்த லிங்கமேஉதயகிரிநாதன்என வழங்கப்பட்டு வருகிறது. மாவூத்தில் புனித குளத்தில் நீராடி, உதயகிரிநாதரையும், சடாதாரியையும் தரிசிப்பவர்கள், தங்களது பாவங்கள் தொலையப் பெற்று, புனிதம் நிரம்பியவர்களாக மாறுகிறார்கள்.

சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் எழுந்தருளும் முன்பு தோன்றியவர் இந்த உதயகிரிநாதர் என்பதால், சதுரகிரி செல்லும் அன்பர்கள் இவரையும் வணங்குவது சிறப்பு!

ஒரு நாள் பசுக்களைத் தொழுவத்துக்கு ஓட்டி வந்தபோது, அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை சித்த புருஷரான சுந்தரானந்தர் பூஜிப்பதைப் பார்த்தான் பச்சைமால். சுந்தரலிங்கத்துக்கு வஸ்திரம் தரித்து, மலர் மாலைகளை அணிவித்து, நமசிவாய மந்திரம் ஜபித்து, தூபங்களின் மணம் கமழசுந்தரானந்தர் பூஜை செய்வதைப் பார்த்து, அப்படியே சொக்கிப் போனான் பச்சைமால். இறுதியில் ஆரத்தி காட்டி, வழிபாட்டை முடித்த சுந்தரானந்தர், முகத்தைத் திருப்பினார்.

பச்சைமால் அங்கு நின்றிருந்தான். சுந்தரானந்தர் எனும் சித்த புருஷரின் பார்வை தன் மீது படிவதைக் கண்ட பச்சைமால், அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். அவர் அவனை ஆசீர்வதித்தார்.

‘‘ஐயாநான் பசுக்களை மேய்த்து வருபவன். செழுமையாகப் பால் தரும் ஒரு பசுவினது பாலை, இந்த சிவனாரின் அபிஷேகத்துக்கும் தங்களுக்கும் உதவும் பொருட்டு தினமும் கொண்டு வந்து தருகிறேன். இதற்குத் தாங்கள் என்னை அனுமதித்தால், அதை என் பாக்கியமாகக் கருதுகிறேன்!’’ என்ற விண்ணப்பத்துடன் அவர் திருமுகத்தை ஏக்கமாகப் பார்த்தான்.

ஒரு புன்னகையுடன் அவனது வேண்டுகோளுக்கு அனுமதி தந்தார் சுந்தரானந்தர். அதன் பிறகு சொன்னபடியே நடந்து கொண்டான் பச்சைமால். குறிப்பிட்ட ஒரு பசுவிடம் இருந்து நித்தமும் கறந்து, பச்சைமால் கொண்டு வரும் நுரை ததும்பும் பாலை, லிங்கத் திருமேனியின் அபிஷேகத்துக்கும் தனக்கும் பயன்படுத்திக் கொண்டார் சுந்தரானந்தர்.

பச்சைமாலை (முந்தைய பிறவியில் யாழ்வல்ல தேவர்) தாம் ஆட்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக உணர்ந்த இறையனார், மகா சித்தராக _ வெண்ணீறணிந்து, ருத்திராட்ச மாலைகள் தரித்து, சடாமுடியுடனும் காவி உடையுடனும் மீண்டும் சதுரகிரியில் தோன்றினார்.

சதுரகிரியில் கற்பக விருட்சத்தின் அடியில் மகா சித்தர் தனித்திருக்கும்போது, சுந்தரானந்தரும் சட்டைநாதரும் அங்கு சென்று அவரை தரிசித்தனர். மகா சித்தரிடம் ஆசி பெற்றார்கள் இருவரும். அப்போது சுந்தரானந்தர் பூஜித்து வரும் லிங்கத் திருமேனி குறித்து, ஆர்வமுடன் விசாரித்தார் மகா சித்தர். சித்து விளையாட்டுகளுக்கெல்லாம் அதிபதியான அந்த சிவபெருமானார், பச்சைமாலிடம் தனது விளையாட்டைக் காட்ட விரும்பினார்.

அந்த நேரம் பார்த்து தனது பசு மாடுகளை ஓட்டிக் கொண்டு, தொழுவத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்ததான் பச்சைமால். எதிரே சுந்தரானந்தரைப் பார்த்தவன், ‘‘இதோ சாமீதொழுவத்துக்குப் போனதும் பால் கறந்து உடனே கொண்டு வந்துடறேன்…’’ என்றபடி, மாடுகளை வேகமாக விரட்டிச் சென்றான். அங்கிருந்து மகா சித்தரின் விளையாட்டு ஆரம்பமானது. சுந்தரானந்தருக்கும் சுந்தரலிங்கத்துக்கும் பாலைத் தரும் அந்தக் குறிப்பிட்ட பசு மாட்டை மட்டும், எவரும் அறியாமல், அதே கற்பக விருட்சத்தின் அருகே மறைந்திருக்கும்படி செய்தார். பிற மாடுகள் எல்லாம் வழக்கம் போல் பச்சைமாலுக்கு முன்னால் தொழுவத்துக்கு விரைந்தன. தொழுவத்தை அடைந்த பச்சைமால், அனைத்து மாடுகளையும் அதனதன் இடத்தில் கட்டிப் போட்டான். அப்போதுதான் கவனித்தான்சுந்தரானந்தர் மற்றும் சுந்தரலிங்கத்துக்கு பால் தரும் குறிப்பிட்ட பசு மாட்டைக் காணவில்லை என்று. எங்கெங்கெல்லாமோ தேடினான். பசுவைக் காணவில்லை. தவித்தான். நேரம் விரைந்து கொண்டிருந்தது. சுந்தரலிங்கத்துக்கு பூஜை செய்யும் வேளை நெருங்குகிறது.

ஒரு வேளை, வழியில் எங்காவது தவறி இருக்குமோ?’ என்று எண்ணியவனாக, மாட்டைத் தேடிக் கொண்டு, வந்த வழியே திரும்ப நடந்தான் பச்சைமால். அவன் விழிகள் பசுவை பரபரப்புடன் தேடின. என்ன தேடியும் பயனில்லை. சலிப்புடன் நடந்து வரும்போது, ஓரிடத்தில் தன் பசு நிற்பதைக் கண்டான். அதை அழைத்துச் செல்லும் பொருட்டு அதை நெருங்கியவன், அதிர்ந்து போனான்.

இறைவனுக்குப் பால் தரும் அந்தப் பசுவின் மடியில், வாய் வைத்து பாலைப் பருகிக் கொண்டிருந்தார் மகா சித்தர். செந்நிறமான அவரது அதரம் எங்கும், பாலின் நுரை பஞ்சுப் பொதி போல் படிந்திருந்தது. பச்சைமால் பதற்றம் அடைந்தான். ‘இறைவனுக்காக நேர்ந்துவிட்ட ஒரு பசுமாட்டின் பாலை, யாரோ ஓர் ஆசாமி அருந்தி அபசாரம் செய்து விட்டானே!’ என்று, அவன் உள்ளம் குமுறியது. அதனால் எழுந்த கோபத்தால், சற்றும் யோசிக்காமல் தன் கையில் இருந்த கழியால் மகா சித்தரின் தலையில் இடைவிடாமல் ஓங்கி ஓங்கி அடித்தான்.

ஆத்திரம் தீரும்வரை மகா சித்தரைத் தனது மாடு விரட்டும் கழியால் நையப் புடைத்த பச்சைமால், அப்படியும் ஆவேசம் தணியாதவனாக முகம் சிவக்க நின்றிருந்தான். கொஞ்ச நேர இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவரை அடிப்பதற்காகப் பாய்ந்தான் பச்சைமால். அந்த நேரம் சரியாக அங்கு வந்து சேர்ந்த சுந்தரானந்தரும் சட்டைநாதரும் அந்தக் காட்சியைக் கண்டு துடிதுடித்துப் போய் விட்டார்கள். சித்தர்கள் இருவரும் சினம் கொண்டு, பச்சைமாலின் மேல் பாய முற்பட்டபோது, மகா சித்தர் புன்னகையுடன் அவர்களைத் தடுத்தார்.

‘‘இதெல்லாம் எமது விளையாட்டே…’’ என்றவர் உடனே அவர்களுக்குத் திருக்காட்சி தந்தார். மான், மழு, கபாலம், சூலம் தரித்துசர்ப்பங்களை ஆபரணங்களாக அணிந்துகொன்றை மாலை சூடிஉயர்ந்த ஜடா மகுடத்துடன் பிரமாண்டமாகக் காட்சி தந்தார். மகா சித்தராக வந்தவர், மகேசனாகக் காட்சி தந்ததும் பச்சைமால் தடுமாறிப் போனான்.

அவன் கண்களில் இருந்து நீர் தாரை தாரையாக வழிந்தது. கை கால்கள் படபடத்தன. ‘இவ்வளவு நாளும் பசுவின் பாலைக் கறந்து, கொண்டு வந்து தந்தது இந்த ஈஸ்வரனுக்குத்தானா!’ என்கிற சந்தோஷம் உள்ளத்தில் மேலிடஉற்சாகமாகக் கூக்குரலிட்டான். நமசிவாய நாமத்தை நெக்குருக ஜபித்தான். கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி, ஆனந்தக் கூத்தாடி, அந்த அப்பனை வணங்கினான். ‘‘ஈஸ்வராஅறியாமல் நான் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டுகிறேன்வந்திருப்பது நீ என்று தெரியாமல் கழி கொண்டு உன்னைக் காயப்படுத்தி விட்டேன்! என்னை மன்னித்து ஆட்கொள்ளுங்கள்’’ என்று மகேஸ்வரனின் கால்களில் வீழ்ந்து வணங்கினான்.

சுந்தரானந்தரும் சட்டைமுனியும் இறைவனை வணங்கி, அவரது அருளாசி பெற்றனர். இறை தரிசனம் பெற்ற பச்சைமாலைப் பெருமையாகப் பார்த்தனர். பிறகு, ஈஸ்வரனின் பார்வை, பச்சைமால் மேல் படர்ந்தது. ‘‘பச்சைமால்உனது பணியில் யாம் மிக மகிழ்ந்தோம். நித்தமும் எமது அபிஷேகத்துக்குப் பசும்பால் கொடுத்ததோடு, அடியார் சுந்தரானந்தரின் பசியைப் போக்கவும் உதவி இருக்கிறாய். உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்…’’ என்று கேட்டார் இறைவனார்.

இது நாள் வரை எதை எதிர்பார்த்து, சதுரகிரிக்கு வந்து தனது பணிகளைத் தொடர்ந்தானோ, அதை இன்று அடைந்து விட்டான் பச்சைமால். மகேஸ்வரனின் காட்சி இன்று அவனுக்குக் கிடைத்து விட்டது. இத்தனை நாட்களாக அவன் செய்து வரும் தர்மப் பணிகளுக்குத் தகுந்த பலன் கிடைத்து விட்டது.

இறைவனை இன்முகத்துடன் நோக்கினான்: ‘‘இடையனான அடியேனுக்குக் காட்சி தந்து கருணை புரிந்த வள்ளலேஉம்மை இந்த சதுரகிரியில் நான் தரிசித்ததை விட வேறு என்ன பேறு வேண்டும்? இதுவே ஆனந்தம்பரமானந்தம். இனியும் எனக்குப் பிறப்பு வேண்டாம். உன் பாதார விந்தங்களில் என்றென்றும் நான் சேவை புரியும் பாக்கியத்தைத் தாருங்கள். அதுவே நான் வேண்டும் ஒரே வரம்!’’ என்று இறைஞ்சினான்.

இறைவனார் புன்னகைத்து, பச்சைமாலை ஏற்று, தனது திருவடிகளில் ஐக்கியப்படுத்தினார். இறையுருவில் இரண்டறக் கலந்து விட்டான் பச்சைமால். (பின்னாளில் பச்சைமாலின் பெற்றோருக்கும் தனக்குப் பால் ஈந்த அந்தப் பசுவுக்கும் கூட மோட்சப் பதவி அருளினார் ஈசன்). நடந்த காட்சிகளைக் கண்டு தங்களை மறந்து சிவநாம ஜபத்தில் திளைத்திருந்த சுந்தரானந்தரையும் சட்டைமுனியையும் பரிவு நிரம்பிய பார்வை கொண்டு பார்த்தார் இறைவன். ‘‘கேளுங்கள் சித்தர்களேநீங்கள் நம்மிடம் வேண்டுவது என்ன!’’ என்று கேட்டார்.

இருவரும் அவன் பாதம் பணிந்து விட்டுச் சொன்னார்கள்: ‘‘சித்தர்களுக்கெல்லாம் தலைவராகத் திகழும் மகா சித்தரேஉம் தரிசனத்தில் எங்களுக்குப் பெரு மகிழ்ச்சிநாங்கள் இன்று இங்கு கண்ட இந்த அற்புத தரிசனத்தை, எந்நாளும் கண்டு இன்புற வேண்டும். சதுரகிரிக்கு வந்து செல்லும் பக்தர்கள் தங்களை வணங்கிச் சென்று, எல்லா வகையான வளங்களையும் பெற்றுச் சிறப்புற வாழ வேண்டும். இந்த வரத்தை எங்களுக்குத் தந்தருள வேண்டும்!’’ என்று கேட்க… ‘‘அப்படியே ஆகட்டும்!’’ என்று திருவாய் மலர்ந்த திருக்கயிலைவாசன் சட்டென்று மறைந்தார். அவர் அதுவரை நின்றிருந்த இடத்தில் லிங்கம் ஒன்று திடீரெனத் தோன்றியது கண்டு, சுந்தரானந்தரும் சட்டைமுனியும் சொல்லொணா மகிழ்ச்சி அடைந்தனர்.

அந்த லிங்கத் திருமேனிக்கு தேவர்கள் மலர்களைப் பொழிந்தனர். வேத கோஷங்கள் முழங்கின. கீதங்கள் இசைக்கப்பட்டன. அங்கு கூடி இருந்த அனைவரும், சுயம்புவாக உருவான அந்த லிங்கத் திருமேனியை வழிபட்டு இன்புற்றனர். பச்சைமாலாக வந்த யாழ்வல்ல தேவர், மகா சித்தரை யாரோ என்று எண்ணி கழி கொண்டு தாக்கியமையால், இந்த லிங்கத் திருமேனி நமக்கு வலப்பக்கமாகச் சற்றுச் சாய்ந்துள்ளார். தடியடிபட்ட சம்பவத்தைத் தன் பக்தர்களுக்கு உணர்த்தும் வண்ணம், சுயம்பு வடிவான ஸ்ரீசுந்தர மகாலிங்கம் வலப்பக்கம் சாய்ந்து இன்றும் நமக்குக் காட்சி அருளி வருகிறார்.

தன்னை சரண் அடைந்தோருக்கு எந்தக் குறையும் கொடுப்பதில்லை ஸ்ரீசுந்தர மகாலிங்கம். சுயம்புவாக உருவான காலத்தில் இருந்து, சித்தர்கள் மட்டுமே பூஜித்து வரும் வடிவமாக இருந்தார் சுந்தர மகாலிங்கம். சித்தர்களின் இந்த வழிபாடு, பல நூற்றாண்டுகள் சிறப்பாகத் தொடர்ந்து நடைபெற்றது. நெடுங்காலத்துக்கு முன்னர் சித்தர்கள் மட்டுமே இந்த லிங்கத்தை வழிபடும் காலத்தில், பக்தர்கள் அவ்வளவாக இந்த சதுரகிரி மலைக்கு வந்ததில்லை.

அதன் பின் ஒரு காலகட்டத்தில் இறைவனின் விருப்பப்படி, பூலோக மனிதர்களே ஸ்ரீசுந்தர மகாலிங்கத்துக்கு பூஜை செய்யும் வழக்கம் ஆரம்பமானது.

சதுரகிரி மலையில் ஏறியதும், பிலாவடிக் கருப்பரின் தரிசனத்துக்குப் பிறகு சுந்தர மூர்த்தி, சுந்தர மகாலிங்கத்தை வழிபட வேண்டும். இதன் பின் சிறிது தொலைவு நடந்து சந்தன மகாலிங்கத்தை தரிசிக்க வேண்டும்.

சுந்தர மகாலிங்கம் ஆலயத்தில் தினமும் நான்கு வேளை பூஜை நடந்து வருகிறது. காலசந்தி: காலை 6 மணி, உச்சிகாலம்: நண்பகல் 12 மணி, சாயரட்சை: மாலை 4 மணி, அர்த்தஜாமம்: மாலை 6 மணி. அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம், மகா சிவராத்திரி, அன்னாபிஷேகம் உள்ளிட்ட பல தினங்கள் சுந்தர மகாலிங்கம் ஆலயத்தில் விழாக் கோலமாக இருக்கும். அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் அபிஷேகங்களும் அலங்காரமும் விமரிசையாக இருக்கும்.

ஆடி அமாவாசை நாட்களில் பலரும் அன்னதானம் செய்வார்கள். சுந்தர மகாலிங்கத்தை பிரதான தெய்வமாகவும் குலதெய்வமாகவும் கொண்டு வழிபடுபவர்கள் அப்போது சதுரகிரி வந்து மொட்டை போடுவது, காது குத்துவது என்று குடும்பத்துடன் டேரா போடுவார்கள்.

மாதாமாதம் அமாவாசை தினத்தன்று மதியம் சுமார் ஒரு மணி வாக்கில் சுந்தர மகாலிங்கத்துக்கு அபிஷேகம் துவங்கும். பௌர்ணமியில் மாலை ஆறு மணிக்கு அபிஷேகம் துவங்கும். அமாவாசை, பௌர்ணமி நாட்களில் முதலில் சுந்தரமகாலிங்கத்துக்கு அபிஷேகஆராதனைகள் நடக்கும். சுமார் 3 மணி நேரம் நடக்கும் இந்த வழிபாடு முடிந்த பிறகு, சந்தன மகாலிங்கம் கோயிலில் வழிபாடு துவங்கும். இங்கும் மூன்று மணி நேர அளவில் வழிபாடு முடிந்த பின் அடுத்து, பிலாவடி கருப்பருக்கு பூஜை செய்ய பூசாரிகள் புறப்படுவார்கள். பௌர்ணமி தினத்தில் மூன்று சந்நிதி வழிபாடுகளும் முடிய விடிந்துவிடுவதும் உண்டு.

புரட்டாசியில் ஆனந்தவல்லி அம்மனின் நோன்புத் திருவிழா மற்றும் நவராத்திரி உத்ஸவம் நடைபெறும். நவராத்திரியின்போது அலங்கரிக்கப்பட்ட ஆனந்தவல்லி அம்மன் புறப்பாடு நடைபெறும். ஒன்பது நாட்களும் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீஆனந்தவல்லி உற்சவர் விக்கிரகத்துக்கு முன் பஜனையும் சிறப்பு வழிபாடும் விமரிசையாக நடக்கும். பத்தாம் நாள் ஆனந்தவல்லி அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும் இதை அடுத்து அம்பு போடும் நிகழ்ச்சியும் நடைபெறும்.முன் காலத்தில் கோரக்கர் குகையில் வசித்து வந்த சித்தர்கள் தேன் – தினைமாவு கலந்து லிங்கம் செய்து அதை பூஜிப்பார்கள். தற்போதும் சுந்தர மகாலிங்க சிவனடியார் கூட்டத்தினர் அமாவாசை தினங்களில் (ஆடி அமாவாசை தவிர) கோரக்கர் குகையில் தினைமாவில் தேன் கலந்து லிங்கம் செய்து, அதை வழிபட்டு வருகிறார்கள். பின்னர், அந்த மாவை சுந்தர மகாலிங்கம் சந்நிதிக்கு எடுத்துவந்து பக்தர்களுக்கு விநியோகிக்கிறார்கள். ஸ்ரீகாளிமுத்து ஸ்வாமிகளின் அன்பர்கள் இதை இன்றும் செய்துவருகிறார்கள்.