தவசிப் பாறை
சதுரகிரிக்கும் மேலே சுமார் இரண்டு மணி நேரம் நடந்தால் இந்தப் பாறையை அடையலாம். இந்தப் பாதை சற்று கடினமானது. சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் கோயிலில் இருந்து பார்த்தால், இந்தத் தவசிப் பாறை சின்னதாகத் தெரியும். அதுபோல் தவசிப் பாறையில் இருந்து பார்த்தால் இந்த இரண்டு கோயில்கள் இருக்கும் பகுதிகள் புள்ளியாகத் தெரியும். தவசியில் இருந்து கீழே இறங்கினால், அந்தப் பாதை சுந்தர மகாலிங்கம் கோயிலில் முடியும்!
தவசிப் பாறைக்குச் சற்றுக் கீழே ஒரு பாறை இருக்கிறது. ‘ஏ.ஸி.பாறை’ என்கிறார்கள். அபாயமான இறக்கத்தில் இறங்கினால் ஏ.ஸி.பாறை! இங்கே அமர்வதும் வெகு அபாயம். சில தப்படிகள் எட்டிப் பார்த்தால் அதல பாதாளம். இங்கே அமர்ந்தால் ஏ.ஸி–யைப் போல் சில்லென்ற குளிர் காற்று நம்மைத் தாக்குகிறது. அதனால் இந்தப் பெயர் வந்ததாம்.
தவசிப் பாறைக்கு மேலே ஒரு பாயின்ட் உள்ளது. இங்கே ஏறி நிற்க முடியும். இதுவும் அபாயமானதுதான். இங்கே சதுர வடிவில் ஒன்பது பெரிய பாறைகள் காணப்–படுகின்றன. இதை நவகிரகக் கற்கள் என்கிறார்கள்.
தவசி குகையில் சித்தர்கள் இன்றைக்கும் சூட்சுமமாக வந்து போகிறார்களாம். தவழ்ந்துதான் இந்தக் குகையின் உள்ளே போக முடியும். பத்தடி தூரத்துக்கு தவழ்ந்து போனால், அடுத்த ஐந்தடி தூரத்துக்கு உட்கார்ந்த நிலையில் செல்ல வேண்டும். இதைத் தாண்டினால், நின்ற நிலையில் கொஞ்சம் நடக்கலாம். பத்துப் பேர் உட்காரும் அளவுக்கு உள்ளே வசதியான இடம் இருக்கிறது. உள்ளே கரடிகள் வந்து போனாலும், பக்தர்கள் ரிஸ்க் எடுத்து, உள்ளே போய் திரும்புவது ஆபத்தான ஒன்றுதான்!
இரட்டை லிங்கம்
சதுரகிரி மலையின் அற்புதங்களையும், சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சந்நிதிகளையும் தரிசிக்க அடிவாரமான தாணிப்பாறையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவு மலைப் பாதையில் நடந்து செல்லும்போது, வழியில் எந்தவிதமான கடைகளும் இருக்காது. வழிநெடுகத் தண்ணீர் கிடைப்பதற்கான வாய்ப்பும் குறைவு. எனவே, மலை மேல் செல்பவர்கள் உணவு, தண்ணீர், நொறுக்குத் தீனி உட்பட அனைத்தையும் சேகரித்துக் கொண்டு தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்ல வேண்டும். கூலித் தொகை பேசிக்கொண்டு நமது லக்கேஜுகளை நம்பிக்கையான சுமைகாரர்கள் மற்றும் மலைவாசிகளிடம் கொடுத்து விட்டால், அவர்கள் மேலே கொண்டு வந்து சேர்ப்பார்கள்.
தாணிப்பாறை அடிவாரத்தில் கருப்பண்ணசாமி, பேச்சியம்மன், ராஜயோக காளியம்மன், ஆசீர்வாத விநாயகர், நாகர்கள் முதலான தெய்வங்கள் அருள் பாலிக்கின்றனர். இவர்களை வழிபட்ட பின் யாத்திரையைத் தொடங்க வேண்டும்.
இனி, மலை ஏறும்போது நாம் கடந்து வரும் முக்கியமான பகுதிகள் சிலவற்றைப் பார்ப்போம்.
நாம் அடிவாரம் தாண்டியதும், சுமார் அரை மணி நேரத்தில் வரும் இடம் – குதிரையூத்து! முன் காலத்தில் ராஜாக்கள், ஜமீன்தார்கள் போன்றவர்கள் வழிபாட்டுக்கு வரும்போது அவர்களது குதிரைகளை இங்கேதான் நிறுத்துவார்களாம். இதற்கு மேல் குதிரையில் செல்ல முடியாது. எனவே, இங்கு கட்டி வைப்பார்கள். இங்கே ஓர் ஊற்று உள்ளது. அதன் பெயர்தான் ‘குதிரையூத்து.’
இதையடுத்துள்ளது மாங்கனி ஊத்து, வழுக்குப் பாறை (தண்ணீர் பாயும் காலத்தில் இந்தப் பாறைகள் எல்லாம் வழுக்குமாம்). அதற்கு அடுத்தது அத்தியூத்து (அத்தி மரங்கள் நிறைந்த இடம் என்றும், அத்ரி மகரிஷி தவம் இருந்த பகுதி என்றும் சொல்கிறார்கள்). அதன் பின்னர் வருவது கோணத்தலவாசல் (இங்கு பாதை கோணலாக அப்படியும் இப்படியும் திரும்புவதால் இந்தப் பெயராம்). அடுத்த பகுதி காராம்பசுத் தடம் (இது சுந்தர மகாலிங்கம் தல புராணத்தோடு சம்பந்தப்பட்ட இடம்). பின்னர் வருவது, கோரகுண்டா பகுதி.
இந்த கோரகுண்டா, விஸ்தாரமான ஒரு பகுதி. போகரின் சிஷ்யரான கோரக்கர் இங்குள்ள குகையில்தான் தவமிருந்தார். மழைக் காலத்தில் அர்ஜுனா நதி இங்கே ஆர்ப்பாட்டமாகச் செல்லும். அப்போது தண்ணீர் இங்கு சுழித்துச் செல்லும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அப்படிப்பட்ட நாட்களில் இந்தப் பகுதியைக் கடக்க நேரிடும் பக்தர்கள், இங்கே சற்றுத் தங்கி, இளைப்பாறுவார்கள். அப்போது தாங்கள் கொண்டு வரும் உணவுப் பண்டங்களை இங்கே ஆற அமர உட்கார்ந்து சாப்பிடுவார்கள்.
பழநியில் பிரதிஷ்டை செய்வதற்காக போகரின் உத்தரவுப்படி தண்டாயுதபாணி ஸ்வாமியின் விக்கிரகத்தை கோரக்கர் இங்குதான் வடிமைத்தாராம். அந்தச் சந்தர்ப்பத்தில் இங்கு எப்போதும் தண்ணீர் இருக்க வேண்டும் என்று நினைத்தாராம். அதற்காக ஓரிடத்தில் தன் கைகளையே அணை போல் கட்டித் தண்ணீரைச் சேமித்து வைத்தாராம். கோரக்கரது இரண்டு கைகள் தண்ணீரை மறித்து வைத்திருப்பது போன்ற தோற்றத்தை இப்போதும் நாம் பார்க்கலாம். இதற்கு, ‘கோரக்கர் ஊற்று’ என்று பெயர்.
கோரகுண்டாவில் ஒரு குகை இருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் இருக்கிறது. தண்ணீர் நிறைய ஓடும் காலத்தில் இந்தக் குகைக்குள் செல்வது சிரமம். அதையும் மீறி இளைஞர்கள் சிலர் துணிச்சலாக ஏறி உள்ளே சென்று வருகிறார்கள். சித்தர்கள் மருத்துவ நோக்கத்துக்காகப் பயன்படுத்தும் கஞ்சாவை இங்குதான் பக்குவமாகப் பதப்படுத்துவார்களாம். அதை ஊர்ஜிதப்படுத்துவது போல அகலமான பாறை ஒன்று பக்கத்திலேயே இருக்கிறது.
தொடர்ந்த பயணத்தில் அடுத்து வருவது, இரட்டை லிங்கம். மிகவும் சிறிய கோயில். ஒரு சின்ன மண்டபத்தில் இரு லிங்கங்கள். சித்தரான ராமதேவர் இந்த இரட்டை லிங்கங்களை பிரதிஷ்டை செய்தார். இதன் பின்னணியிலும் சுவாரஸ்யமான கதை ஒன்று இருக்கிறது.
கோயில் என்று சொல்லத்தக்க எந்தவோர் அமைப்பும் இந்த இரட்டை லிங்கத்துக்குக் கிடையாது. ஒரு மண்டபம் போன்ற அமைப்பில் மிகவும் சிறிய சந்நிதி. அதனுள் அருகருகே சின்னதாக இரண்டு லிங்கங்கள். ஆவுடையார் கிடையாது. அம்மிக் குழவி போன்ற பாணங்களே லிங்கங்கள். இதன் எதிரே ஓரடி இடைவெளியில் இரண்டு நந்திகள்.
சுயம்பு லிங்கங்களாகக் கருதப்படும் இந்த இரட்டை லிங்கங்களுக்கு உரிய வழிபாடுகள் மற்றும் பூஜைகளை சித்த புருஷரான ராமதேவர் ஆதி காலத்தில் செய்து வந்தார். இதற்காக சந்நிதியின் அருகே ஆசிரமம் அமைத்துத் தங்கி இருந்தார் அவர். இந்த இரட்டை லிங்கம் சந்நிதிக்கு எதிரே சற்றுத் தொலைவில் காணப்படும் உயர்ந்த மலைப் பகுதியில், ‘ராமதேவர் குகை’ இருக்கிறது. தவம் செய்வதற்கும்
நிஷ்டையில் இருப்பதற்கும் இந்த குகைக்கு வந்து செல்வாராம் ராமதேவர்.
முறையான பூசாரி என்று எவரும் இங்கு இருப்பதில்லை. அமாவாசை, பௌர்ணமி போன்ற சிறப்பு நாட்களில் பூசாரி என்கிற ஒருவர் இங்கே இருப்பார். மற்ற நாட்களில் இங்கு பக்தர்களே பூக்கள் அணிவித்து, கற்பூரம் காட்டி வழிபடுகிறார்கள். மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது. இந்த இரட்டை லிங்கங்களை தொழுதால், எண்ணியது நிறைவேறுமாம்.
சித்தர் ராமதேவர், இந்த இரட்டை லிங்கங்களை வழிபட்டார் என்றாலும், இந்த லிங்கங்கள் இங்கே இடம் பெறுவதற்குக் காரணம் யார்?
உண்மையான பக்தர்களை ஆட்கொண்டு அருள இறைவனே மனமுவந்து இங்கே குடி கொண்டான். அந்த சுவாரஸ்யமான கதை இதோ:
ஆனந்தசுந்தரன், ஆண்டாள் என்ற இறை தம்பதிக்கு அருள் புரியும்பொருட்டே இரட்டை லிங்கங்கள் இங்கே குடிகொண்டன. பக்தியில் சிறந்து விளங்கிய இந்தத் தம்பதிக்குக் காட்சி தந்து, சுயம்புவாக அமர்ந்தவை இந்த இரட்டை லிங்கங்கள். இதில் ஒரு லிங்கம் சிவ அம்சமாகவும், இன்னொரு லிங்கம் விஷ்ணு அம்சமாகவும் அந்தத் தம்பதிக்குக் காட்சி தந்தன என்றால், நம்புவதற்குச் சிரமம்தான்! அந்தக் கதையைத் தெரிந்து கொண்டால், நம்புவது சுலபம்! ‘சதுரகிரி புராணம்’ சொல்கிறது இந்தக் கதையை!
முன்னொரு காலத்தில் கோபாலபுரம் எனும் பட்டணம் மிகுந்த செல்வ வளத்துடன் திகழ்ந்தது. அறிவில் சிறந்தோரும், செல்வத்தில் செழித்தோரும் அங்கு வசித்தனர். அறிவும் செல்வமும் இணைந்து காணப்பட்டதால், அங்கே இறை பக்தியும் மிகுந்திருந்தது. கோபாலபுரத்தில் வசித்த ஆனந்தசுந்தரன், வணிகம் செய்து வந்தான். வசதிகளும் வாய்ப்புகளும் நிறைந்த ஒரு வியாபாரியாக இருந்தான். பொருள் ஈட்டுவதுடன் அருள் ஈட்டுவதிலும் அக்கறை செலுத்தியவன் இவன். ஆகமம், வேதம், புராணம், சாஸ்திரம் உட்பட அனைத்தையும் திறம்படக் கற்று, சிவபெருமானைத் தவிர, வேறு தெய்வங்கள் இந்த உலகத்தில் இல்லை என்ற கொள்கை உடைய சிவபக்தன் அவன்!
இவன் மனைவியான ஆண்டாள், கணவரைப் போலவே சிறந்த பக்தை. இவளைப் பொறுத்தவரை விஷ்ணுதான் ஒரே தெய்வம்! பாற்கடல் வாசனான பரந்தாமனைத் தவிர, வேறு எவரையும் தெய்வம் என்று ஏற்காதவள். சிவலிங்கத்தை எங்கு கண்டாலும், சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொள்வாள். ஒரே வீட்டில், மகேசனுக்கும் மாலவனுக்கும் தனித் தனியே கணவனும் மனைவியும் நித்தமும் பூஜைகள் செய்தனர். இவர்களில் ஆன்மிகம் குறித்த விவாதங்களை ஒருவர் எழுப்ப… மற்றவர் அதற்கு பதில் தருவார். ‘சிவமே பரம்பொருள்’ என ஆனந்தசுந்தரன் அடித்துக் கூறுவார்; ‘விஷ்ணுவே பரம்பொருள்’ என ஆண்டாள் வாதிடுவாள். இந்த விவாதம் ஒரு போதும் ஓய்ந்ததில்லை.
ஒரு நாள் பூஜை முடிந்த பின், இவர்களிடையே துவங்கிய விவாதம் முற்றுப் பெறாமல் நீடித்தது. மகேசனா? மாலவனா? இருவரில் யார் உயர்ந்தவர்? எவருக்கும் விடை கிடைத்தபாடில்லை. ‘இதற்கு ஒரே வழி, தவம் புரிந்து உண்மையை அறிவதே!’ என்று இருவரும் முடிவெடுத்தனர். இருவருமே தனிமையில் தவமியற்ற எங்கு செல்வது என்று யோசித்தனர். பின்னர் தங்களது பட்டணத்துக்கு அருகில் உள்ள சதுரகிரி செல்வது என்று தீர்மானித்தனர். அதன்படி ஒரு நாள் புறப்பட்டனர். சித்த புருஷர்களும் மகா யோகிகளும் தவச் சாலைகள் அமைத்து நிஷ்டையில் திளைக்கும் சதுரகிரியை அடைந்தவர்கள், அங்கு தவத்துக்கு ஏற்ற இடம் தேடினர். அப்போது ராமதேவரது குகை அருகே உள்ள வனம் அவர்களுக்குப் பசுமையாகத் தெரிந்தது. வண்ணப் பூக்கள் வசீகரமாகப் பூத்துக் குலுங்கிய – தெள்ளிய நீரோடையுடன் கூடிய அந்த இடமே தவத்துக்கு ஏற்றது என்று முடிவு செய்து, அங்கேயே அமர்ந்து கடும் தவம் மேற்கொண்டனர்.
சிவனின் சிந்தனையில் கண்கள் செருகி இருக்க… கயிலைவாசனின் திருக்கோலத்தில் மனம் லயித்திருக்க… ‘ஓம் நமசிவாய’ எனும் திருமந்திரத்தை இடைவிடாமல் ஜபித்தான் ஆனந்தசுந்தரன். சங்கு, சக்ரதாரியான திருமாலையே நினைந்து, ‘ஓம் நமோ நாராயணா’ எனும் மந்திரத்தை ஆண்டாள் உச்சரித்தாள். சிவநாமமும் திருமால் நாமமும் அந்தப் பிரதேசம் முழுவதும் மோதி எதிரொலித்தன.
நாட்கள் நகர்ந்தன. தம்பதியின் தவத்தைக் கண்டு உளம் மகிழ்ந்த ஈசன், இருவருக்கும் காட்சி தந்து, அவர்களிடையேயுள்ள பேதத்தைக் களைந்து, சந்தேகங்களைத் தீர்க்கத் திருவுளம் கனிந்தார். அண்ணலின் நாடகம் அரங்கேறியது.
ஒரு கட்டத்தில் தவம் செய்த அவர்களின் எதிரே, கண்களைக் கூசச் செய்யும் அளவுக்கு பிரகாசம் ஒன்று திடீரெனத் தோன்றியது. ஜோதி சொரூபமாக ரிஷப வாகனத்தில் தன் தேவியுடன் காட்சியளித்தார் கயிலைவாசன். ஆனந்தசுந்தரனுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. சந்தேகம் தீர கண்களைக் கசக்கிக் கொண்டு தீர்க்கமாகப் பார்த்தான். எந்நேரமும் அவன் துதிக்கும் ஈசன், அவன் கண் முன்னே புன்னகை தவழ அருள் பாலித்துக் கொண்டிருந்தார்.
விழுந்து வணங்கினான். மனமாரப் போற்றிப் புகழ்ந்தான். ஈசனின் ஜடாமுடியில் கங்கையையும், பிறை நிலவையும் தரிசித்தான். நெற்றியிலும் திருமேனியிலும் திருநீற்றைக் கண்டு பரவசப்பட்டான். செவிகளில் ஆபரணங்களாக அரவங்கள் அசைவதைக் கண்டு அதிசயித்தான். மான் – மழு ஆயுதங்கள்… புலித்தோலால் ஆன ஆடை… மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆனந்தசுந்தரன் திக்குமுக்காடினான். ஆனால், தவறியும் ஈஸ்வரன் இருக்கும் பக்கம் தன் பார்வையைத் திருப்பவில்லை ஆண்டாள். அவள் வேறு எங்கோ வெறித்துப் பார்த்தாள்.
‘‘அடியே ஆண்டாள்! உலக மகா சக்தியான ஆண்டவனே இங்கே எழுந்தருளி இருக்க… வேறு எந்த சக்தியை எதிர்பார்த்து நீ ஏங்குகிறாய்? பார்த்தாயா என் சர்வேஸ்வரனை… இப்போது ஒப்புக் கொள்கிறாயா, உலகம் முழுவதையும் காப்பவன், நித்தமும் நான் வணங்கும் இந்த பரமேஸ்வரன்தான் என்று! தேவியுடன் தரிசனம் தந்து நம் முன் எழுந்தருளியுள்ள இந்த இமய வாசனைப் போற்றி வணங்கு. அவன் திருவடிகளைப் பற்றிக் கொள், சிவனை தவிர, வேறு தெய்வம் இல்லை என்று இப்போதாவது உணர்ந்திருப்பாய் என்று நம்புகிறேன். உனது எண்ணத்தை மாற்றிக் கொள்!’’ என்று சிலிர்ப்பு மேலிடச் சொன்னான் ஆனந்தசுந்தரன்.
பார்வதி – பரமேஸ்வர தம்பதி புன்னகையுடன் இருவரையும் பார்த்தனர். அவர்கள் நடத்தும் நாடகம் என்ன என்று அவர்களைத் தவிர வேறெவர் அறிவார்?
ஆனந்தசுந்தரனைப் பார்த்து ஈசன் கேட்டார்: ‘‘பக்தா! எந்த லட்சிய ஸித்திக்காக நீ தவம் செய்கிறாய்? உனது கோரிக்கை என்ன? கேள்!’’
‘‘மகேஸ்வரா!…’’ என்று ஆரம்பித்து, தனக்கும் மனைவிக்கும் இடையேயுள்ள சிவ – விஷ்ணு பேதம் பற்றியும், உண்மையை அறிய இருவரும் இங்கு வந்து தவம் செய்யும் விஷயத்தையும் விளக்கிய ஆனநதசுந்தரன், ‘‘அவற்றுக்கெல்லாம் விடையாக தற்போது கிடைத்திருக்கும் தங்களின் தரிசனம் தவிர வேறு எதுவும் எனக்குத் தேவையில்லை பிரபு!’’ என்றான் உற்சாகக் குரலில்.
புன்னகைத்த ஈஸ்வரன், ஆண்டாள் பக்கம் திரும்பினார். ‘‘குழந்தாய்! இப்போது சொல். உனது கோரிக்கை என்ன? நீ எதை வேண்டி இங்கு தவம் புரிகிறாய்?’’ என்று கேட்டார்.
ஆண்டாளின் முகம் சிடுசிடுப்பாக இருந்தது. பாம்புகளை மாலையாக அணிந்த பரமேஸ்வரனைப் பார்க்கப் பிடிக்கவில்லை அவளுக்கு. ‘‘நான் உம்மைப் பார்க்க விருப்பப்படவில்லை. பரந்தாமனான ஸ்ரீமந் நாராயணனை தரிசிக்கவே இங்கு தவம் செய்தேன். அவரைத் தவிர, வேறு எந்த தெய்வத்தையும் பார்க்க விருப்பமில்லை எனக்கு!’’ என்றாள் சுரத்து இல்லாமல். பரமேஸ்வரனை காணப் பிடிக்காமல் முகத்தை வேறு பக்கம் திருப்பினாள் ஆண்டாள். ஆனந்தசுந்தரனோ, தன் இஷ்ட தெய்வத்தை தரிசித்த இன்பத்தில் ஆனந்த மயக்கம் கொண்டிருந்தான். அவன் உதடுகள் ‘நமசிவாய… நமசிவாய’ எனும் மந்திரத்தை இடைவிடாமல் உச்சரித்துக் கொண்டிருந்தன.
ஆண்டாளின் நிலை கண்டு அவள் மேல் பரிவு ஏற்பட்டது ஈஸ்வரனுக்கு! உலகத்துக்கே அப்பன் அல்லவா அவர்! வேண்டியவர் – வேண்டாதவர் என்றெல்லாம் அவருக்கு ஏது பாரபட்சம்? எனவே, அவளுக்கும் அருள் பொழிய விரும்பினார் ஆதிசிவன்.
தனக்கு முதுகு காட்டி நிற்கும் ஆண்டாளிடம் ‘‘என்னைச் சற்றுத் திரும்பிப் பாரம்மா…’’ என்றார், சர்வலோக ரட்சகன்.
இந்த லோகநாயகனின் அருள் பார்வைக்காக எத்தனையோ முனிவர்களும் ரிஷிகளும் கணக்கற்ற ஆண்டுகள் தவம் இருந்ததை அறிந்தும், கண் முன் காட்சி தந்த அந்த ஆண்டவன் மேல் ஆண்டாளுக்கு அன்பு ஏற்படவில்லை. சிவன் இருக்கும் பக்கம் தனது பார்வை சென்று விடாதபடி கவனமாக இருந்தாள்.
எனினும், தனக்கும் கணவனுக்கும் இடையில் உள்ள பக்தி பற்றி சர்வேஸ்வரனிடம் கூறினாள் ஆண்டாள். பிறகு, ‘‘என் கணவர்தான், அறியாமையின் காரணமாக ‘நமசிவாய… நமசிவாய’ என்று பிதற்றி, நித்தமும் உன்னைக் கொண்டாடி வருகிறார். ஆனால், சாட்சாத் ஸ்ரீமந் நாராயணன்தான், இந்த அகிலத்தின் சகல இயக்கங்களுக்கும் காரணம் என்பதை நான் அறிவேன். ஆகவே, அன்றாடம் நான் துதிக்கும் அந்த ஸ்ரீமந் நாராயணனின் தரிசனம் வேண்டித்தான் இங்கு தவம் இருக்கிறேன்!’’ என்றாள்.
இதைக் கேட்ட பரமேஸ்வரன், மந்தகாசப் புன்னகையுடன் ஓரடி முன்னால் எடுத்து வைத்தார்.அடுத்த கணம் அந்த வனமே பிரகாசமானது போல் பெரிய மின்னல் ஒன்று சட்டென்று தோன்றி மறைந்தது. கண்களைக் கூசச் செய்த அந்த மின்னல் எவ்வாறு ஏற்பட்டது என்று அறிவதற்காகச் சட்டென்று பின்பக்கம் திரும்பிப் பார்த்தாள் ஆண்டாள். அங்கே அவள் கண்ட காட்சியை அவளால் நம்ப முடியவில்லை. கண்களைக் கசக்கிக் கொண்டு, புருவங்களை அகல விரித்து மீண்டும் உற்றுப் பார்த்தாள்.
பார்த்தவள் பக்தித் திளைப்பில் அப்படியே உறைந்து போனாள். அவள் கண்களுக்கு முன்பாக நவரத்தினம் பதித்த கிரீடம் தரித்து, ஒளி வீசும் மணி மாலைகளை அணிந்து, கஸ்தூரி திலகத்தை நெற்றியில் இட்டு, பீதாம்பர ஆடை உடுத்தி, சங்கு – சக்கரம் முதலான ஆயுதங்களைத் திருக்கரங்களில் ஏந்தி, மார்பிலே மணம் கமழும் துளசி மாலை துலங்க – சாட்சாத் ஸ்ரீமந் நாராயணன் புன்னகை ததும்பும் செவ்விதழோடு ஆண்டாளுக்குக் காட்சி அளித்தார்.
பிரமிப்பு அகலாமல் கண்களில் ஆனந்தம் பொங்க அவரையே பார்த்தாள் ஆண்டாள். பேச்சின்றி, கண்களில் இருந்து நீர் தாரை தாரையாக வழிய ஆண்டாள் நின்றிருந்தபோது, கருணை பொங்கும் விழிகளுடன் அவளைக் கனிவுடன் பார்த்தார் பரந்தாமன். ‘‘ஆண்டாள்…உனது தவம் கண்டு வியந்தேன். உனக்கு அருள் பாலிக்கவே நான் வந்துள்ளேன். என்ன வரம் வேண்டும் உனக்கு? தயங்காமல் கேள்!’’ என்றார் மாலவன் மலர்ச்சியுடன்.
‘‘பெருமானே! உன் தரிசனம் கிடைத்ததே எனக்கு பெரும் பாக்கியம். இந்தப் பூவுலகிலே நான் படித்த நூல்கள் அனைத்தும் உலகின் பரம்பொருள் நீதான் என்கின்றன. ஆனால், என் கணவரோ, ‘சிவமே பரம்பொருள்’ என்று புலம்புகிறார். எங்களது விவாதம் இடைவிடாமல் தொடர்ந்தது. ‘சிவ வழிபாடே சிறந்தது’ என்கிற கொள்கையில் அவர் தெளிவாக இருப்பார்; உன்னைக் குறித்த எனது வழிபாட்டு முறையில் நான் தெளிவாக இருப்பேன். எங்கள் இருவருக்கும் எப்போதும் இதே தர்க்கம்தான்.
இதில் உண்மை எதுவென்று அறியவே பன்னெடுங்காலமாக சித்தர்கள் வசிக்கும் சதுரகிரிக்கு வந்து தவத்தைத் தொடர்ந்தோம். ஆனால், இருவரும் தனித் தனியே தரிசனம் பெற்றோம். சிவ தரிசனத்தால் அவரும் சங்கு – சக்ரதாரியான உன் காட்சியில் நானும் பூரித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, ‘பரம்பொருள் பரமனா… பரந்தாமனா?’ என்ற உண்மையை எனக்குத் தாங்கள்தான் விளக்கி அருள் புரிய வேண்டும்!’’ என்றாள் ஆண்டாள்.
ஆனந்தசுந்தரனும் கண் கொட்டாமல் இந்தக் காட்சியைப் பார்த்தான். பாற்கடல்வாசனான பரந்தாமன், தம்பதி இருவரையும் தீர்க்கமாகப் பார்த்தார்.
பிறகு, ‘‘இறைபக்தியில் திளைக்கும் தம்பதியரே… உங்களது பக்திக்குக் கட்டுப்பட்டு உங்கள் முன் தனித்தனியே தரிசனம் தந்தோம். உங்கள் இருவரது சந்தேகத்தையும் போக்கவே யாம் வந்துள்ளோம். அதை இந்த உலகமும் அறியும்பொருட்டு இப்போது காட்சி தருகிறோம்!’’ என்று பரந்தாமன் சொன்ன அடுத்த விநாடி, அதே நிலையிலேயே – அதே இடத்தில் சங்கரநாராயணராகக் காட்சி தந்தார்.
சங்கரனும் (சிவனும்) நாராயணனும் இணைந்த அந்த வடிவத்தைக் கண்ணுற்ற ஆனந்தசுந்தரனும் ஆண்டாளும் திகைப்பு அகலாமல் பார்த்தனர். அப்போது சங்கரநாராயணர், ‘‘என் வடிவம் கண்டு மலைக்க வேண்டாம். சிவன் வேறு; விஷ்ணு வேறு என்பவர்கள் போதிய பக்குவம் பெறாதவர்கள். இருவரும் ஒருவரே. இந்தத் தெளிவு பெற்றவரே முழுமையான மனிதர். இதையே வேதங்களும் சொல்கின்றன. யானே சங்கரன்; யானே நாராயணர்; அதனால், யானே சங்கரநாராயணர். எம்மில் பேதம் இல்லை என்பதே உண்மை!’’ என்றார் சங்கரநாராயணர்.
அதன் பிறகே ஆனந்தசுந்தரனும் ஆண்டாளும் மனம் தெளிந்தார்கள். மீண்டும் சங்கர நாராயணனைக் கை கூப்பித் தொழுதார்கள். நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கினார்கள். பிறகு, ‘‘இது வரை ஒருவித பேத மயக்கத்தில் இருந்த எங்களை ஆட்கொண்டு உண்மையை போதித்த இறைவா… மிக்க நன்றி. இந்த நொடி வரை அறியாமையில் உழன்றதற்காக மனம் கூசுகிறோம். இப்போது மனம் தெளிவடைந்து விட்டது.
தாங்கள் எங்களுக்காக ஒரு விஷயத்தில் மனம் கனிய வேண்டும்…’’ என்றனர்.
‘‘சொல்லுங்கள்… உங்களது வேண்டுகோள் என்ன?’’ என்று கேட்டார் சங்கரநாராயணர்.
‘‘அடுத்தடுத்து எங்களுக்குக் காட்சி தந்தது போல் தாங்கள் இரட்டை மூர்த்தி வடிவில் இங்கு எழுந்தருள வேண்டும். என்றென்றும் இங்கே வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் மழை பொழிய வேண்டும்’’ என்று வேண்டினர்.
அடுத்த கணம், சங்கரநாராயணர் காட்சி தந்து கொண்டிருந்த அந்த இடத்தில் பெரும் ஒளி வெள்ளம் ஏற்பட்டது. அந்த ஒளி வெள்ளம் அடங்கிய பிறகு இரட்டை லிங்கங்கள் அங்கு காட்சி தந்தன (லிங்கங்கள் சுயம்புவாகத் தோன்றினாலும், பின்னாளில் முறையாக இதை பிரதிஷ்டை செய்து பூஜைகளைத் தொடர்ந்தவர் சித்தர் ராமதேவர்). இந்த லிங்கத் திருமேனிகளுக்கு நித்தமும் பூஜைகள் செய்து வழிபட்டு வரலாயினர் இருவரும்.
நாட்கள் ஓடின. ஒரு தினத்தில் சிவ கணங்கள் புஷ்பக விமானத்தில் வந்து, ஆனந்தசுந்தரனையும் ஆண்டாளையும் விமானத்தில் ஏற்றி சிவலோக வாழ்வுக்கு அழைத்துச் சென்றனர். சதுரகிரியில் வசித்து வந்த தவசீலரும் சித்த புருஷருமான ராமதேவர் இந்த இரட்டை லிங்கங்களை தொடர்ந்து பூஜித்து வரலானார். இதன் அருகேதான் ராமதேவர் ஆசிரமம் அமைத்து வழிபட்டு வந்தார். இந்த இரட்டை லிங்கம் சந்நிதிக்கு நேராகத் தெரியும் உயர்ந்த மலையில் ராமதேவர் குகை இருக்கிறது.