சதுரகிரி 06 – சட்டைநாதர் குகை

சட்டைநாதர் குகை

ஞ்சபாண்டவர்களுக்கும் இந்த சதுரகிரிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. என்ன சம்பவம் அது?

ஒரு முறை சட்டை முனிவர், தன் ஐந்து சீடர்களுடன் சதுரகிரி வனத்தினூடாகப் பயணம் செய்தார். அப்போது சந்தன மகாலிங்கத்தை அவரும் தரிசித்ததோடு, தன் சீடர்களுக்கும் தரிசனம் செய்து வைத்தார். அதன் பிறகு அவர் தன் சீடர்களை அருகிலிருந்த மற்றொரு வனத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு குறிப்பிட்ட ஒரு மரத்தில் இருந்த ஒரே ஒரு பழம் மட்டும், அந்தப் பகுதி முழுக்க மிகுந்த மணம் பரப்பியது. அவருடன் வந்த சீடன் ஒருவனுக்கு உடனே அந்தப் பழத்தை உண்ணும் ஆசை ஏற்பட்டது. அதனால் சட்டென்று அதைப் பறிக்க முற்பட்டான். உடனே, சட்டை முனிவர் அவனைத் தடுத்தார்.

‘‘கூடாது சீடாஅந்தப் பழத்தைப் பறித்து உண்ணும் ஆசை எவருக்குமே ஏற்படக் கூடாது. அது சந்தன மகாலிங்கத்தின் அருளாசியால் உண்டான பிரத்தியேகமான பழம். இந்த வனத்தில் வசிக்கும் கௌமார முனிவர் ஒரு வருட காலம் தவம் இருந்து, பின்னர் இந்தப் பழத்தைப் புசிப்பது வழக்கம். இது அவருக்கு மட்டுமே உரித்தானது. எனவே, இதை உண்ண முற்பட்டு நீங்கள் மட்டுமல்ல; வேறெவரும்கூட அவரது கடும் சாபத்துக்கு உள்ளாக வேண்டாம்!’’ என்ற சட்டை முனிவர், அது தொடர்பான கதை ஒன்றைக் கூறினார். ‘‘ஒரு முறை இந்த வனத்துக்கு வந்த பஞ்சபாண்டவர்கள், இந்த பழத்தைப் பறித்து உண்ண முற்பட்டு, கடைசியில் பெரும் துன்பத்துக்கு உள்ளான ஒரு கதை உண்டு!’’ என்று நிறுத்தினார்.

சீடர்கள், ‘‘அந்தக் கதையைச் சொல்லுங்களேன்…’’ என்று ஆவலுடன் கேட்டார்கள்.

சட்டை முனிவர் அந்தக் கதையைச் சொல்லத் தொடங்கினார்: ‘‘துரியோதனனிடம் சூதாட்டத்தில் தருமர் தோல்வியடைந்ததால், தங்களது நாட்டை இழந்ததுடன் பஞ்ச பாண்டவர்கள், மனைவி பாஞ்சாலியுடன் பன்னிரண்டு வருட காலம் வனவாசம் போக நேர்ந்தது. அந்தக் காலகட்டத்தில் வனவாசத்தின் ஒரு பகுதியாக அவர்கள் இங்கும் வர நேர்ந்தது. அப்போது ஒரு நாள் இந்த வனத்தில் பாஞ்சாலி உலவிக் கொண்டிருந்தபோது அழகான சோலை ஒன்றைக் கண்டாள். அதையொட்டிய பகுதியில் முனிவர்கள் பலர் அங்கே தவம் புரிந்து கொண்டிருந்தனர். சோலையைச் சுற்றி வந்த பாஞ்சாலி, ஓரிடத்தில் உயர்ந்து வளர்ந்திருந்த நெல்லி மரத்தில் ஒரே ஒரு கனி மட்டும் கண்ணைக் கவரும் வண்ணம் பழுத்துத் தொங்குவதைப் பார்த்ததுடன் அதிலிருந்து அபூர்வமான மணம் எழுவதையும் உணர்ந்தாள். உடனே அந்த அபூர்வக் கனியை உண்ண வேண்டும் என்ற ஆவல் அவளுக்குத் தோன்றியது. எனவே, அவள் தனது ஆசையை, அருகிலிருந்த அர்ஜுனனிடம் தெரிவித்தாள்.

அதன் பிறகு சற்றும் தாமதிக்காமல் பாஞ்சாலியின் வேண்டுகோளை ஏற்று, அந்த அபூர்வ நெல்லிக் கனியைக் கொய்து, அவளிடம் கொடுத்தான் அர்ஜுனன். இதை யதேச்சையாகக் கண்ட அங்கிருந்த மற்ற முனிவர்கள் பதைபதைத்தனர். அந்த முனிவர்களில் ஒருவர் அர்ஜுனனைப் பார்த்து, ‘‘இந்த நெல்லிமரம், தெய்வ சங்கல்பத்தால் உருவானது. இந்த கனி மித்திர மகா முனிவருக்கு மட்டுமே உரித்தானது. என்ன ஓர் அபசாரம் செய்து விட்டீர்கள்! பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இந்த மரத்தில் இப்படி ஒரு நெல்லிக் கனி பழுக்கும். மித்திர முனிவர் இந்த நெல்லி மரத்தின் அடியில் தவம் இருக்கும்போது, அந்தக் கனி தானாகவே அவர் கையில் விழும். அவர் இறைவனின் பிரசாதமாக அதை உண்பார். இப்படிப்பட்ட மகிமை வாய்ந்த ஒரு கனியை ஒரு பெண்மணி கேட்டாள் என்பதற்காகப் பறித்துக் கொடுத்து விட்டீர்களே?’’ என்றார் கோபத்துடன்.

இதைக் கேட்டு அர்ஜுனனுடன் பாஞ்சாலியும் நடுங்கினாள். பாஞ்சாலி, தன் கையில் இருந்த கனியைப் பார்த்து மிரண்டாள். வருத்தம் அடைந்தாள். இந்தத் தவறுக்குப் பரிகாரமாக என்ன செய்வது என்று தெரியாமல் கூட்டத்தைப் பார்த்து, ‘‘என் மனைவியின் கோரிக்கையால் உண்மை அறியாமல் இப்படி ஒரு அபசார காரியம் செய்து விட்டேன். விதிவசமாக வனவாசத்தில் உள்ள எங்களுக்கு இந்தச் சம்பவம் ஒரு கரும்புள்ளியாகி விடும். அது மட்டுமின்றி, மித்திர முனிவரது சாபம் வேறு வந்து சேரும். ஆகவே, நாங்கள் இந்த இக்கட்டிலிருந்து விடுபட ஏதாவது ஓர் உபாயம் கூறுங்கள்!’’ என்று விண்ணப்பிக்கும்போது தருமர் உள்ளிட்ட மற்ற சகோதரர்களும் அங்கு வந்து சேர்ந்தனர்.

இறுதியில் இந்த இக்கட்டில் இருந்து மீள்வதற்கு, அவர்கள் அனைவருமாகச் சேர்ந்து ஆபத்பாந்தவனான கண்ணபிரானை வேண்டினர். நிலைமையை உணர்ந்த ஸ்ரீகண்ணபிரான் உடனே சத்யபாமாவுடன் அங்கு எழுந்தருளினார். நடந்த விஷயத்தைச் சொல்லி, தகுந்த பரிகாரம் செய்யுமாறு அவர்கள் அனைவரும் அவரிடம் வேண்டினர்.

அதன் பின் மாயக் கண்ணனின் லீலா விநோதத்தால் அந்தக் கனி மீண்டும் மரத்தில் பழைய இடத்திலேயே ஒட்டிக் கொண்டது.

இவ்வாறு பஞ்சபாண்டவர்கள் மாயக் கண்ணனது உதவியால் ஒரு பெரும் சாபத்திலிருந்து மீண்டனர்!’’ என்று அந்தக் கதையைச் சொல்லி முடித்தார் சட்டைமுனிவர். சந்தன மகாலிங்கம் சந்நிதிக்கு அருகே, அவர் வசித்த குகை காணப்படுகிறது.

*****

ஸ்ரீசுந்தரலிங்கம் (சுந்தரமூர்த்தி)

துரகிரிக்குப் பிரதானமானது சுந்தர மகாலிங்கம் திருக்கோயில். தவிர இங்கு காளி, மாரி, நாகர், சப்தகன்னியர், நந்தீஸ்வரர், ஆனந்தவல்லி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் சந்நிதிகள் உண்டு. காலசந்தி 6 மணிக்கு, உச்சிகாலம் நண்பகல் 12 மணிக்கு, சாயரட்சை மாலை 4 மணிக்கு, அர்த்தஜாமம் மாலை 6 மணிக்கு (மலைக் கோயில் என்பதால் அர்த்தஜாமம் சீக்கிரமே நடந்து முடிந்துவிடும்) என தினமும் நான்கு கால பூஜை சுந்தர மகாலிங்கத்துக்கு நடைபெறுகிறது.

சுந்தர மகாலிங்கம் ஆலயத்தில் அவரது அருளாசியைப் பெறுமுன் நாம் தரிசிக்கும் முக்கியமான மற்றொரு சந்நிதி சுந்தரலிங்கம் அல்லது சுந்தரமூர்த்தியின் திருச்சந்நிதி. லிங்கத் திருமேனி. சுந்தர லிங்கம் ஸ்வாமி, எப்படி இங்கு வந்து குடிகொண்டார் என்ற கதையைப் பார்ப்போமா?

சித்தர்களில் சிறப்புப் பெற்றவரான அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது இந்த சுந்தரலிங்கத் திருமேனி. அகத்தியர் சதுரகிரியில் தங்கியிருந்தபோது, நித்தமும் அவர் வழிபடுவதற்காக இந்த லிங்கத்தை ஸ்தாபித்தார். சரி! புனிதமான இந்த சதுரகிரிக்கு அகத்தியர் வந்து சேர்ந்தது எப்படி? அதுவும் சுவாரஸ்யான ஒரு கதைதான்!

கயிலாய மலையில் இறைவனுக்கும் இறைவிக்கும் நடந்த விமரிசையான திருமணத்தை நாம் அறிவோம். நந்தி தேவர், விநாயகர், முருகன், பிரம்மா, விஷ்ணு, முப்பத்துமுக்கோடி தேவர்கள் உள்பட எண்ணற்ற ரிஷிகளும் முனிவர்களும்இந்தத் திருமணக் காட்சியைக் காண்பது பெரும் பேறு!’ என்ற ஆவலோடு கயிலாய மலைக்கு வந்து குவிந்தனர்.

தேவலோகம் மற்றும் பூவுலகில் உள்ளவர்கள் அனைவரும் அங்கே கடல் போல் திரண்டிருந்தனர். கயிலை என்பது வட முனை. இப்படி பூமியின் ஒரு பகுதியில் மட்டும் கூட்டம் பெருத்தால் என்ன ஆவது? பாரம் தாங்காமல் வடதிசை தாழ்ந்தது; தென்திசை உயர்ந்தது. ‘வட பக்கத்தில் ஏராளமானோர் இப்படி வந்து குவிந்தார்களேஅதனால் பூமியின் பாரத்தை என்னால் சமமாக நிலைநிறுத்த முடியவில்லை!’ என்று பூமாதேவி பரிதவித்தாள். அந்த நேரத்திலும் மண நாயகனான மகேஸ்வரனும் பூமாதேவியின் நிலைமையை உணர்ந்தார்.

இதற்கு என்ன செய்யலாம் என்று யோசனையில் ஆழ்ந்த அவர் இறுதியில், ‘இதற்கு உதவக் கூடியவர் அகத்திய மாமுனியே!’ என்று தெளிந்தார். உடனே குறுமுனி அகத்தியரை அழைத்தார் ஈசன். திருமண வேலைகளில் ஏதாவதொரு பொறுப்பைத் தரப் போகிறார் போலிருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் மகேசன் அருகே விரைந்து ஓடினார் அகத்தியர்.

அவரிடமும், ‘‘எம் திருமணம் இனிதே நடைபெறுவதற்கு உம்மால் ஓர் உதவி ஆக வேண்டி உள்ளது அகத்தியரே!’’ என்றார் இறைவன். ‘‘மகாதேவாதங்களது திருமணக் காட்சி கண்டு அருள் பெற விரைந்தோடி வந்த என்னால் உமக்கு ஓர் உதவியா? உத்தரவிடுங்கள்எதுவானாலும் உடன் செய்கிறேன்!’’ என்று பணிந்து நின்றார் அகத்தியர்.

‘‘சித்த புருஷரேஇந்தத் திருமணக் காட்சியைக் காண எட்டுத் திக்கில் இருந்தும் கூட்டம் திரண்டு வந்துள்ளதால், இந்த வட திசை சற்றே தாழ்ந்தள்ளது. பாரம் தாங்காமல் பூமாதேவி பரிதவிக்கிறாள். தாங்கள் உடனே தென்திசை சென்றால் உங்களது தவ வலிமையால் பூமியின் பாரம் சமம் ஆகும். எனவே, தாங்கள் உடனே தென்திசை செல்லுங்கள். தங்களால் மட்டுமே இது சாத்தியம்!’’ என்றார் சர்வேஸ்வரன்.

அகத்தியர் மனம் வருந்தினார். ‘‘இறைவாஅப்படி என்றால் தங்களது திருமணக் கோலத்தை நான் எவ்வாறு காண்பது?’’

‘‘கவலைப்படாதேநீ எங்கெல்லாம் நமது திருமணக் கோலத்தைக் காண நினைக்கிறாயோ, அங்கெல்லாம் உமையம்மையுடன் நான் திருமணக் காட்சி தந்தருள்கிறேன்!’’ என்றார் இறைவன். அங்கிருந்து புறப்பட்ட அகத்தியர் பொதிகை மலைக்கு வந்தார். அதனால் பூமி சமமானது. இறைவனின் திருமணமும் இனிதே நிறைவேறியது. மேலும் தென்திசை நோக்கி வந்த அகத்தியர் பொதிகையிலிருந்து குற்றாலம் வந்தார். வழியில் உள்ள ஆலயங்களை தரிசித்து வழிபட்டார். குற்றாலத்தின் இயற்கை அழகில் மயங்கி, சில காலம் அங்கு தங்கி இருந்தார். அப்போதுதான் சதுரகிரி பற்றி அவர் கேள்விப்பட்டார்.

மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள் நிறைந்த சதுரகிரியின் மகிமை மற்றும் அங்கு நிலவும் இறை சாந்நித்தியம் ஆகியவை குறித்து குற்றாலத்தில் வசித்த முனிவர்கள் அகத்தியரிடம் விவரித்தனர். அத்துடன் சுந்தரானந்தர், கொங்கணர் போன்ற எண்ணற்ற சித்தர்கள் சதுரகிரியில் தங்கி, காயகற்ப மூலிகைகள் தயாரித்து வருவதையும் முனிவர்கள் மூலமே அறிந்தார் அகத்தியர். எனவே, சதுரகிரி செல்லும் ஆவல் அவரிடம் அதிகரித்தது.

ஒரு தினத்தில் தனது பயணத்தைத் தொடங்கிய அகத்தியர், காடுமலைகளைக் கடந்து சதுரகிரியை அடைந்தார். சித்தர்களின் தலைவர் போன்ற அகத்திய மாமுனிவர் சதுரகிரிக்கு வந்ததை அறிந்து மகிழ்ந்தனர் அங்குள்ள ரிஷிகளும் முனிவர்களும். சுந்தரானந்தர், யூகி முனிவர், கொங்கணர் உட்பட முனிவர்கள் பலரும் உரிய மரியாதை செய்து அகத்தியரை வரவேற்றனர்.

இதனால் மகிழ்ந்த அகத்தியர், சதுரகிரியின் மகிமைகளைக் கேட்டு, அவற்றை அனுபவித்து இன்புறவே, தான் அங்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார். மேலும், கயிலாயத்தில் இறைவனின் திருமணம் இனிதே நடைபெறுவதற்காக, ஈசன் தன்னை தென்திசைக்கு அனுப்பி வைத்ததையும் சொன்னார். அகத்தியரை தரிசித்தது, தங்கள் பேறாக அங்குள்ள முனிவர்கள் பெருமிதம் கொண்டனர்.

சதுரகிரியில் சுந்தரானந்தரின் ஆசிரமத்தில் தங்கினார் அகத்தியர். அவர், முறைப்படி பூஜை மற்றும் வழிபாடுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்தனர். அதன் பொருட்டு அங்கு, தனது வழிபாட்டுக்காக சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்தார் அகத்தியர். ஆகம சாஸ்திரங்களின்படி அந்த சிவலிங்கத்தை வேளை தவறாமல் பூஜித்தார் அகத்தியர். அவர் ஸ்தாபித்த இந்த லிங்கத் திருமேனியை சதுரகிரியில் தவம் இருந்த ரிஷிகளும் மற்றவர்களும் வழிபட்டு, போற்றிப் புகழ்ந்தனர். இந்த லிங்கமே பின்னாளில் சுந்தர லிங்கம் என்றும் சுந்தரமூர்த்தி என்றும் அழைக்கப்பட்டது.

அகத்தியர் பிரதிஷ்டை செய்த லிங்கத்துக்குசுந்தர லிங்கம்என்ற பெயர் எப்படி வந்தது? அந்த லிங்கம், அகத்தியர் பெயரால் அழைக்கப்படாதது ஏன்?

சதுரகிரியில் தினமும் சிவ பூஜையில் திளைத்திருந்த அகத்தியர் ஒரு நாள், ‘சதுரகிரியில் நெடுநாட்கள் தங்கி விட்டோமோ…’ என்று யோசித்தார். ஈசன் அருள் பாலிக்கும் அநேகத் தலங்களுக்குச் சென்று அவன் ஆசி பெற விரும்பினார் அவர். எனவே, சதுரகிரியிலிருந்து புறப்படுமுன், கயிலைவாசன் ஏற்கெனவே தனக்கு அளித்த அரிய வரத்தின்படி, அவனது திருமணக் கோலத்தைக் காண விரும்பினார். கயிலைவாசனை நெஞ்சார நினைத்துப் பிரார்த்தித்தார். ‘எந்தத் தலத்தில், எந்த நேரத்தில் எம்மை நினைத்துக் கொள்கிறாயோஅங்கு, அப்போதே உனக்குத் திருமணக் காட்சி தந்தருள்கிறேன்!’ என்பதுதானே அகத்தியருக்கு ஈசன் அளித்த வரம்?!

கயிலயங்கிரிவாசராகிய அந்தக் கருணாமூர்த்தி, அகத்தியரின் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்து சுந்தரானந்தர் ஆசிரமத்தில், மலைமகளான உமையவளுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளிக் காட்சி தந்தார். அகத்தியர் எந்தக் காட்சியைக் கயிலையில் பார்க்க முடியாமல் தென்திசை நோக்கிப் பயணம் கிளம்பினாரோ, அதே காட்சியை சதுரகிரியில் அவருக்குக் காட்டி அருளினார் இறைவன். ஈசனின் திருமணக் கோலத்தைக் கண்டதும் அகத்தியர், கண்களில் நீர் தளும்பரிஷபாரூட மூர்த்தியை வணங்கித் தொழுதார். அதே நேரம் பிரம்மன், விஷ்ணு, விநாயகர், சுப்ரமண்யர் ஆகிய தெய்வங்களும் சதுரகிரியில் எழுந்தருளினர். இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன் ஆகியோருடன் ரிஷிகளும் முனிவர்களும் அங்கு வந்து கயிலைவாசனின் திருக்கல்யாணக் கோலம் கண்டு ஆனந்தம் அடைந்தனர்.

அகத்தியரின் சக்தி கண்டு அதிசயித்த சுந்தரானந்தர், ‘‘ஸ்வாமிஉங்களது தவ பலத்தால், நாங்கள் கயிலைக்குச் செல்லாமலேயே இறைவனின் திருமணக் காட்சியை தரிசிக்கும் பேறு பெற்றோம். இதற்காக எங்களது நன்றியை உங்களுக்கு உரித்தாக்குகிறோம்!’’ என்று குரல் தழுதழுக்கச் சொன்னார்.

ஒரு சில நாட்கள் சென்றன. ஒரு நாள் அகத்தியரிடம் வந்த சுந்தரானந்தர், ‘‘ஸ்வாமிஒரு விண்ணப்பம்…’’ என்று ஆரம்பித்தார்.

‘‘சொல்லுங்கள் சுந்தரானந்தரே…’’ என்றார் அகத்தியர்.

‘‘அனுதினமும் தாங்கள் இந்த லிங்கத்தை பூஜித்து வழிபடுவதை, பெரும் பேறாகக் கருதி தரிசித்து வந்தேன். இனி, இந்த லிங்கத் திருமேனியைத் தொடர்ந்து பூஜிக்கும் பாக்கியத்தைத் தாங்கள் எனக்குத் தந்தருள வேண்டும்!’’ என்று நெக்குருகச் சொன்னார்.

இதைக் கேட்டு புன்முறுவல் பூத்த அகத்தியர், ‘‘சுந்தரானந்தரேநல்ல நேரத்தில் இந்த விண்ணப்பத்தை என்னிடம் தெரிவித்தீர்கள். நான், எனது யாத்திரையைத் தொடர விரும்பும் தருணத்தில் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளீர்கள்எனது ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு. இந்த லிங்கத் திருமேனிக்கு இனி நீங்களே தொடர்ந்து வழிபாடுகள் நடத்துங்கள்!’’ என்றார். இதனால் பெரிதும் மகிழ்ந்த சுந்தரானந்தர், அகத்தியர் ஸ்தாபித்த லிங்கத்துக்கு பூஜை செய்யும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததற்காக இறைவனுக்கு நன்றி சொன்னார்.

அதன் பின், அகத்தியர் சதுரகிரியில் இருந்து புறப்பட்டு, பக்கத்தில் உள்ள ஒரு மலையில் நீண்ட காலம் தவம் இருந்தார். அகத்தியர் தவம் இருந்ததால், அந்த மலை அவரது பெயராலேயேகும்ப மலை’ (கும்பமுனி என்றும் அகத்தியரை அழைப்பதுண்டு) எனப்பட்டது. அகத்தியரது உபதேசப்படி சுந்தரானந்தர் தினமும் பூஜைகள் தொடர்ந்தார். இந்தக் காலகட்டத்தில்தான் அந்த லிங்கத் திருமேனிக்குசுந்தர லிங்கம்என்ற திருநாமம் ஏற்பட்டது.

சுந்தர லிங்கம், மிகவும் சக்தி வாய்ந்த கடவுள். அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாலும், தொடர்ந்து சித்த புருஷர்களாலேயே பூஜை மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டதாலும் இவருக்கு சக்தி அதிகம். இவரிடம் வைக்கும் எந்த ஒரு பிரார்த்தனையும் வீண் போவதில்லை.

விசேஷ தினங்களில் இந்த சுந்தர லிங்கம் சந்நிதியில் சாதுக்களும் சாமியார்களும் பெருமளவில் குவிகிறார்கள். சந்நிதிக்கு எதிரில் ஒரு மண்டபம் உண்டு. எங்கெங்கிருந்தோ வரும் சாதுக்கள், அந்த மண்டபத்தில்தான் அமர்ந்திருப்பார்கள்; தங்குவார்கள்; ஓய்வெடுப்பார்கள். ஆடி அமாவாசை போன்ற சில குறிப்பிட்ட விசேஷ நாட்களில், வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் பலரும் இங்கு பொங்கல் சமைத்தும் வேறு வகையான உணவு தயாரித்தும் சுந்தர லிங்கத்துக்குப் படைத்து வணங்குவார்கள். இன்னும் சிலர் அசைவம் சமைத்துப் படைப்பார்கள். படையல் எதுவாக இருந்தாலும், அதன் முதல் விநியோகம் இந்த சாதுக்களுக்குத்தான் போக வேண்டும். இது பல வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகிறதாம்-.

விசேஷ தினங்களில், சுந்தர லிங்கம் சந்நிதிக்கு அருகே பெரிய ஓலைப் பாய் ஒன்று விரிக்கப்பட்டிருக்கும். பக்தர்கள் தாங்கள் படைத்த அன்னத்தின் ஒரு பகுதியை சாதுக்களுக்கு சமர்ப்பிப்பதற்காக இந்த ஓலைப் பாயில் வைப்பார்கள். இப்படி பலரும் வைக்கும் அன்னமானது, மலை போல் சேர்ந்து கொண்டே இருக்கும். தவிர, பக்தர்கள் படைக்கும் சாம்பார், மோர், பொரியல் போன்றவற்றை சாதுக்களுக்குச் சமர்ப்பிப்பதற்கு, விதம் விதமான அண்டாக்களும் ஓலைப் பாயின் அருகே வைக்கப்பட்டிருக்கும். அதற்கு உண்டான பாத்திரங்களில் சம்பந்தப்பட்டதைச் சேர்ப்பார்கள் பக்தர்கள். இது போல், அசைவ உணவுகளை இடுவதற்கும் தனியே ஒரு பாத்திரம் வைக்கப்பட்டிருக்கும். எல்லாவற்றிலும் உணவு வகைகள் சேர்ந்து கொண்டே இருக்கும். கடைசியில், சாதுக்கள் அனைவரும் ஒன்று கூடி அவற்றைத் தங்களுக்குள் பங்கு போட்டுப் பிரித்துக் கொள்வார்கள்.

இத்தகைய அன்னத்தை சாதுக்களிடம் இருந்து பிச்சையாக வாங்கி பக்தர்கள் உண்பது பெரும் பேறு. சாதுக்களும் மனம் நிறைய மகிழ்ச்சியோடு பக்தர்களிடம் இருந்து பெற்றதில், ஒரு பகுதியை பக்தர்களுக்கே தருவார்கள். இதற்கென்றே பக்தர்கள் பலரும் காத்திருப்பார்கள்.சுந்தர லிங்கம் முன், வாத்தியக் கருவிகளது முழக்கத்துடன் பஜனைப் பாடல்கள் பாடி, அவனை மகிழ்விப்பது வாடிக்கையான ஒன்று. வெளியூர்களில் உள்ள பஜனைக் கோஷ்டியினர், விசேஷ காலத்தில் இந்த சந்நிதி முன் வாத்தியக் கருவிகளுடன் கூடி, பகல் நேரத்தில் பாடல்கள் பாடி மகிழ்வார்கள். அப்போது பெரும் திரளான கூட்டம் அருகில் அமர்ந்து அந்த இன்பத்தில் லயிக்கும். இந்தப் பாடல்களின் கம்பீரமான முழக்கம், சதுரகிரி முழுமையிலும் எதிரொலிக்கும்.