சேலத்து அன்பரின் சிலிர்ப்பான பயணம்!
சேலத்தைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் அவர். வயது சுமார் எழுபது இருக்கலாம். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர். அவ்வப்போது பழைமை யான திருத்தலங்களுக்குச் சென்று இறை இன்பத்தில் மூழ்கி விடுவார். சதுரகிரி பற்றிய சுவாரஸ்யமான செய்திகளைக் கேள்விப்பட்ட சேலத்து அன்பர், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அங்கே சென்று மகாலிங்கத்தைத் தரிசிக்க வேண்டும் என்று விரும்பினார். அவர் விரும்பிய வேளை பார்த்து, அடுத்த சில நாட்களில் மகா சிவராத்திரியும் வந்தது. ‘சாதாரண நாளில் சிவனை வணங்குவதை விட, மகா சிவராத்திரி தினத்தில் வணங்கினால் பெரும் பேறு’ என மகிழ்ந்து, பயணத்தைத் தொடங்கினார். தனக்கு உதவியாக, நகைக்கடையில் பணி புரியும் இளைஞன் ஒருவனை உடன் அழைத்துக் கொண்டார்.
உதவியாக வந்த இளைஞரும், இதற்கு முன் சதுரகிரிக்குச் சென்றதில்லை. என்றாலும், தன் முதலாளியின் அன்பு வேண்டுகோளுக்கிணங்கி, புறப்பட்டு வந்து விட்டார்.
சேலத்தில் இருந்து புறப்பட்ட இவர்களுக்கு, சதுரகிரிக்குச் செல்ல வருசநாட்டுப் பாதையை யாரோ ஒருவர் தவறுதலாக முன்மொழிந்து விட்டார். சுலபமான தாணிப்பாறை வழியே அவர்களைப் பயணிக்க இறைவன் அனுமதிக்கவில்லை போலும்!
வருச நாட்டு அடிவாரப் பாதையில் சேலத்து அன்பரும் அவரது உதவியாளரும் மதிய வாக்கில் தங்களது யாத்திரையைத் தொடங்கியபோதே, அங்கிருந்த உள்ளூர்வாசிகள் சற்று மிரண்டனர். ‘மலைக்குச் செல்வதற்குத் தாணிப்பாறையை விட்டு விட்டு இங்கே வந்திருக்கிறார்கள்? இது யானைகள் நிறைந்த அபாயமான பகுதி ஆயிற்றே? கரடுமுரடான மலைப் பாதையில் நெடுந்தொலைவு பயணித்து இவர்களால் எப்படி மாலைப் பொழுதுக்குள் மேலே ஏற முடியும்?’ என்று தவித்தனர். இருந்தாலும், நல்ல எண்ணத்தில் தங்களது கருத்துகளை சேலத்து அன்பரிடம் சொன்னார்கள். ‘‘ஐயா… இந்தப் பாதை மிகுந்த ஆபத்தானது. ஆடி அமாவாசை போன்ற விசேஷ காலங்களில் மட்டும்தான் – அதுவும் விஷயம் தெரிந்த உள்ளூர்க்காரர்கள் இந்தப் பாதையில் பயணிப்பார்கள். நீங்களோ வெளியூர்க்காரர் போல் தெரிகிறது. பேசாமல் இங்கிருந்து தாணிப்பாறைக்குப் பேருந்து மூலம் பயணித்து, அங்கிருந்து யாத்திரையைத் தொடங்குங்கள். அதுதான் உங்கள் இருவருக்கும் நல்லது’’ என்று ஆரம்பித்து, மலைப் பாதையில் இருக்கும் சங்கடங்கள் பற்றி விரிவாக விவரித்தனர்.
சேலத்து அன்பர் நெளிந்தார். அவர் ஏதோ ஒரு முடிவுடன் இங்கே புறப்பட்டு வந்து விட்டார். இனியும், தன் பயணத் திட்டத்தில் மாறுதல்கள் செய்வதற்கு அவரது மனம் ஒப்பவில்லை. எனவே, தன்னிடம் அனுசரணையாக வந்து, கருத்து சொன்ன உள்ளூர்க்காரர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, ‘‘ஐயா… ஏதோ புறப்பட்டு இங்கே வந்தாகி விட்டது. என்னுடன் வந்திருக்கும் இவரின் உதவியுடன் நான் பயணப்பட்டு விடுகிறேன். நீங்கள் சொன்ன பாதையில் பயணித்தால் இன்றைக்கு மகா சிவராத்திரி தரிசனம் என்னால் செய்ய முடியாமல் போய் விடும். இந்தப் பாதையிலேயே பயணத்தைத் தொடங்குகிறேன்’’ என்று பாங்காகச் சொல்லிவிட்டு, இருவரும் நடையைக் கட்டினர்.
கரடு முரடான பாதை… சுலபத்தில் நடக்கவே முடியாத அளவுக்குப் பாதையில் மரத்தின் கிளைகள் ஊடுருவி இருந்தன. திடீர் ஏற்றங்கள்; இறக்கங்கள். இத்தனை அசவுகரியங்களையும் தாண்டி, மனதை மகாலிங்கத்திடம் கொடுத்து விட்டு, ‘நமசிவாய’ என்னும் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டு பயணித்தார் நகைக்கடை அதிபர்.
‘எப்படியும் இன்று இரவு மகா சிவராத்திரி புண்ணிய காலத்தில் மலைக்கு மேல் குடிகொண்டிருக்கும் சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கத்தைத் தரிசித்து இன்னருள் பெற வேண்டும்’ என்று மனதுக்குள் சங்கல்பம் எடுத்து, நிதானமாக நடந்து கொண்டிருந்தார் நகைக் கடை அதிபரான பெரியவர்.
பகல் பொழுது என்பதால் அப்போது சிரமம் அவர்களுக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. பெரியவர் சிரமப்படும் சிற்சில இடங்களில், அவருக்குத் துணையாக வந்த உதவியாளர் மெள்ள கைகொடுத்து, பத்திரமாகக் கூட்டிக் கொண்டு போனார்.
இன்னொரு விஷயத்தை இங்கே அவசியம் சொல்ல வேண்டும்… பெரியவருக்குத் தள்ளாமை மட்டுமல்ல… சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் பாதிப்பும் சில காலமாகவே இருந்தது. இதையும் மீறித்தான், திடமான மனதுடன் அவர் புறப்பட்டு வந்திருக்கிறார். அவரே புறப்பட்டு வந்திருக்கிறார் என்பதை விட, அந்த மகாலிங்கமே அவருக்கு அழைப்பு விடுத்துத் தன் சந்நிதிக்குக் கூப்பிட்டிருக்கிறார் என்பதே நிஜம்!
கொஞ்சம் தொலைவு இவர்கள் கடந்து சென்றதும், துடிப்பான ஏழு இளைஞர்கள் அதே பாதையில் இவர்களுக்குப் பின்னால் பயணித்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் நடையையும் வேகத்தையும் பார்த்தால், இந்தப் பாதைக்கு ஏற்கெனவே பழக்கப்பட்ட உள்ளூர்க்காரர்கள் போல் தெரிந்தது.
தங்களுக்கு முன்னால் ஒரு பெரியவரும் இன்னொரு ஆசாமியும் நடந்து செல்வதை வியப்புடன் பார்த்தனர் ஏழு இளைஞர்களும். ‘ஆடி அமாவாசை போன்ற விசேஷ காலம் தவிர மற்ற நாட்களில் விஷயம் தெரிந்த எந்த ஒரு பக்தரும் இந்தப் பாதையைப் பயன்படுத்த மாட்டார்கள்’ என்பது அந்த ஏழு இளைஞர்களுக்கும் தெரிந்த சங்கதிதான். இருந்தாலும், மனம் தளராமல் நடை போட்டுச் செல்லும் அவர்களைப் பார்த்து சற்று ஆச்சரியப்பட்டார்கள்.
பெரியவரைக் கடந்து செல்லும்போது சற்றே நிதானித்து நின்று அவரிடம் பேச்சுக் கொடுத்தார்கள். ஏழு பேரில் ஒருவர், ‘‘ஐயா… உங்களைப் பார்த்தால் சதுரகிரிக்கே புதிது போல் தெரிகிறீர்களே?’’ என்றார்.
அதற்குப் பெரியவர், ‘‘ஆமாம்ப்பா… சதுரகிரிக்கு இதுதான் என் முதல் யாத்திரை’’ என்றார்.
பிறகு அதே இளைஞர், ‘‘முதன் முதலாக சதுரகிரிக்கு வரும் நீங்கள் இந்தப் பாதை வழியாக ஏன் ஏறுகிறீர்கள்? இங்கு யானைகளும் கரடிகளும் அதிகம். உங்களைப் போன்ற வயதான அன்பர்களுக்கு வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறைதான் சரியானது. அதன் வழியாக நீங்கள் ஏறினால், பாதுகாப்பும் இருக்கும்; அதிக சிரமமும் இருக்காது…’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்டார் பெரியவர்.
‘‘ஆமாம்ப்பா. நீ சொல்றது வாஸ்தவம் தான். யாரோ எனக்குத் தெரிந்த ஒருத்தர் இந்தப் பாதையைப் பத்திச் சொல்லிட்டார். அதனால் இதில் ஏறத் தொடங்கிட்டேன். எனக்கு இந்த மலையைப் பற்றிச் சொன்ன நபர் ஒருவேளை ஆடி அமாவாசையின்போது இந்த வழியே மலை ஏறி இருக்கிறார் போலிருக்கிறது. அதை நான் சரியா புரிஞ்சுக்காம ஏதோ ஒரு தைரியத்துல புறப்பட்டுட்டேன். சரி… இனிமே நடக்கப் போறதை அந்த மகாலிங்கமே பார்த்துக்கட்டும்னு விட்டுட்டேன்’’ என்றார் பெரியவர்.
‘‘ஐயா… இப்போதுகூட ஒன்றும் மோசம் போகவில்லை. அந்தி சாய்வதற்குள் வந்த பாதை வழியாகக் கீழே இறங்கி விடுங்கள். அங்கே போன பிறகு, தாணிப்பாறைக்குப் பயணித்துச் சென்று, அங்கிருந்து மலை ஏறுங்கள். அதுதான் உங்களுக்குப் பாதுகாப்பு’’ என்றார் இன்னொரு இளைஞர்.
இந்த இளைஞரின் கூற்றில் பெரியவருக்கு உடன்பாடு இல்லை என்பது அவரது முகத்தில் இருந்தே தெரிந்தது. ‘‘பசங்களா… ஏதோ தப்பிதமா ஏறத் தொடங்கியாச்சு. வந்த வழியே நான் திரும்பி நடந்தா, அங்கிருந்து தாணிப்பாறை போய், திரும்பவும் அந்த வழியே மலை ஏறி, இதை எல்லாம் நினைக்கறதுக்கே மலைப்பா இருக்கு. தவிர, நீங்க சொல்றபடி நடக்க ஆரம்பிச்சா, இன்றைக்கு இரவு மகாலிங்கத்தைத் தரிசிக்க முடியாது. என்னோட ஒரே ஆசை – மகா சிவராத்திரி அன்னிக்கு தரிசிக்க வேண்டும். நடக்க ஆரம்பிச்சாச்சு. இனி, என்ன நடக்க வேண்டும் என்பதை அந்த மகாலிங்கமே பார்த்துக் கொள்ளட்டும்’’ என்றார், குரலில் பிசிறு இல்லாமல்.
இவரது கருத்தைக் கேட்ட மாத்திரத்தில் ஏழு இளைஞர்களும் தங்களுக்குள் அதிர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டாலும், பெரியவரையும் அவருடன் வந்தவரையும் தங்களுடனே கூட்டிச் செல்வது என்று அந்த நேரத்தில் முடிவெடுத்தார்கள். ‘‘சரி, பெரியவரே… இந்த இடத்தில் உங்களை விட்டு விட்டுச் செல்ல எங்களுக்கு மனமில்லை. உங்களுடன் நாங்களும் துணைக்கு வருகிறோம். கொஞ்சம் விரைவாக நடந்தால் இருட்டுவதற்குள் நாம் சதுரகிரி சந்நிதிக்குச் சென்று விடலாம்’’ என்று அவர்களில் ஓர் இளைஞன் சொன்னது, பெரியவருக்குச் சற்று ஆறுதலாக இருந்தது.
அனைவரும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தனர்.
ஆனால், அது நீண்ட நேரத்துக்கு நிலைக்கவில்லை. பெரியவர் நடக்கும் நிதானமான வேகத்தில் தாங்களும் நடந்தால், இருட்டுவதற்குள் நிச்சயம் மலை உச்சிக்குப் போய் இரவு தரிசனம் செய்ய முடியாது என்பதை ஏழு இளைஞர்களும் ஒரு கட்டத்தில் உணர்ந்தனர். இதை எப்படிப் பெரியவருக்குத் தெரியப்படுத்துவது என்றும் தயங்கினர். ஒரு சந்தர்ப்பத்தில் இளைஞர்களுடைய உள்ளுணர்வைப் பெரியவரே புரிந்து கொண்டார். ‘‘ஏம்ப்பா… உங்களின் வேகத்துக்கு என்னால் ஈடு கொடுத்து நடக்க முடியவில்லை. உங்கள் திட்டப்படி யாத்திரையைத் தொடருங்கள். என்னுடன் வரும் உதவியாளருடன் நான் மெதுவாக வந்து சேருகிறேன்’’ என்று சொல்ல… இளைஞர்கள் முகம் மலர்ந்தார்கள். இருந்தாலும், அவர்களின் முகத்தில் ஒரு தவிப்புதான். ‘ஜன சந்தடியே இல்லாத இந்தப் பாதையில் எப்படி இவர்கள் இருவரும் வந்து சேருவார்கள்?’ என்று கலங்கினாலும், எல்லாம் அந்த மகாலிங்கத்தின் அருள்தான்… அவராகவே பார்த்து இவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து விடுவார் என்று தெளிந்து, பெரியவருக்கும் அவருடைய உதவியாளருக்கும் நன்றி சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினர்.
இந்த நேரத்தில் விதி வேறு விதமாகவும் விளையாடியது. அதாவது இவர்கள் அனைவரும் சேர்ந்து நடந்து கொண்டிருக்கும்போது மகாலிங்கத்தின் புராணக் கதைகளையும், அவரது மகிமைகளையும் இந்த இருவருக்கும் விவரித்தபடியே வந்தார்கள் ஏழு இளைஞர்கள். இதை எல்லாம் கேட்ட பெரியவரின் உதவியாளர் திடீரென சிந்திக்க ஆரம்பித்தான். தானும் இந்த இளைஞர்களுடனே சென்றால், இன்று இரவே மகிமைகள் வாய்ந்த அந்த மகாலிங்கத்தைத் தரிசித்து விடலாமே என்று நினைத்தான். மெள்ள பெரியவரிடம், ‘‘ஐயா… உங்க கூட எப்படி வந்தாலும் மகா சிவராத்திரி இரவுக்குள் கோயிலுக்குச் சென்று விட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அதனால்…’’ மெள்ள இழுத்தார் உதவியாளர்.
அதற்குப் பெரியவர், ‘‘சொல்லுப்பா… மகாலிங்கம் உன்னையும் முன்கூட்டியே அழைக்கிறார் போலிருக்கிறது. நீயும் வேண்டுமானால், அவர்களுடன் செல். நான் பின்னாலேயே வருகிறேன்’’ என்று ஏதோ ஒரு நம்பிக்கையில் சொல்ல… உதவியாளர் முகம் மலர்ந்தார்.
பிறகு, ‘‘நடந்து வருவதே உங்களுக்குச் சிரமமாக இருக்கும் நிலையில் உங்களின் பையை என்னிடம் கொடுத்து விடுங்கள். அதை நானே எடுத்துச் சென்று விடுகிறேன். நீங்கள் நிம்மதியாக நடந்து வாருங்கள்’’ என்றான். பெரியவருக்கு இதுவும் ஒரு விதத்தில் நல்லதாகப் பட்டது. எனவே, சற்றும் யோசிக்காமல், தான் வைத்திருந்த பையை கொடுத்தார். அவ்வளவுதான்! சிட்டெனப் பறந்து போனார் உதவியாளர்.
பெரியவர் மட்டும் மெதுவாக நடை போட்டுக் கொண்டிருந்தார். ஆதவனும் மெள்ள ஓய்வெடுக்கச் சென்று கொண்டிருந்தான். மலையில் இருள் பரவத் தொடங்கியது. ஒரு கட்டத்துக்கு மேல் அவருக்குப் பாதை எதுவும் புலப்படவில்லை. ‘சரி… தன்னிடம் இருக்கும் டார்ச் லைட்டை எடுக்கலாம்’ என்று பையைத் தேடியவருக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது – அதை உதவியாளரிடம் கொடுத்து அனுப்பி விட்டோமே என்று! அந்தப் பைக்குள்தான் போர்வை மற்றும் உணவுக்காக அவர் எடுத்து வந்திருந்த பிஸ்கட் போன்ற அயிட்டங்களும் இருந்தன.
அடர்ந்த காடு. டார்ச் லைட் இல்லை; குளிரைச் சமாளிக்க போர்வை இல்லை; உணவும் இல்லை… ஏன், குடிக்கத் தண்ணீரும் கூட இல்லை.
கறுப்பு மையைப் பூசிக் கொண்டது போல் இருந்த அந்தக் கும்மிருட்டில் தனக்கு முன்னால் இருப்பது எதுவும் பெரியவருக்குப் புரியவில்லை. ‘கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும்’ என்பார்களே… அதை அனுபவபூர்வமாக உணர்ந்தார்.
மெள்ளப் பசி எடுத்தது. தாகம் மேலோங்கியது. குளிர் வேறு அவர் உடலை விறைப்பாக்கியது.
யானைகள் மற்றும் கரடிகள் உலாவுகின்ற பிரதேசம் அது என்பது அவருக்கு அப்போது தெரியாது.
காட்டில் வசித்து வரும் அநேக மிருகங்கள் இரவு நேரக் கொண்டாட்டமாக எழுப்பி மகிழும் விநோத ஒலிகள் வேறு, இவரை ரொம்பவும் கலவரப்படவே செய்தது. இதற்கு மேல் தன்னால் ஓரடி கூட எடுத்து வைக்க முடியாது என்பதை உணர்ந்தார். எங்கேயாவது உட்கார்ந்து ஓய்வெடுக்கலாம் என்று தீர்மானித்தார்.
‘‘மகாலிங்கமே… இந்த இரவில் என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை. என்னைக் கூட்டி வந்தது நீதான். பத்திரமாக உன் சந்நிதிக்கு என்னை நீதான் அழைத்துப் போக வேண்டும். சிவராத்திரி தரிசனத்துக்காக வந்த என்னை இங்கேயே தங்க வைக்கப் போகிறாயா? புலிக்காகப் பயந்து மரத்தின் மேல் அமர்ந்த வேடனின் கதை போல் ஆகிவிட்டதே என் நிலையும். எல்லாமே உன் செயல்’’ என்று வாய் விட்டு அவனை நினைத்து தியானித்தார். பிறகு, படுப்பதற்குத் தோதான ஒரு பாறையில் அமர்ந்தார்.
பாறையில் அமர்வதற்கு முன் படுப்பதற்கு ஏற்றதுதானா என்று தன் விரல்களால் தடவித் தடவி ஆராய்ந்து அதன் பின் அமர்ந்தார். மணி இப்போது என்னவாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளத் தவித்தார். மணிக்கட்டில் கைக்கடிகாரம் இருக்கிறது. ஆனால், மணி என்ன என்று பார்ப்பதற்கு விளக்கொளி இல்லை… பையில் இருந்த டார்ச் லைட்டையும் அல்லவா உதவியாளர் எடுத்துச் சென்றுவிட்டார்?
இவர் இப்படியே இங்கே இருக்கட்டும். மகா சிவராத்திரி தரிசனத்துக்காக நாம் சதுரகிரிக்குப் போவோம்.
சதுரகிரியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. அமாவாசை, பௌர்ணமி மற்றும் மகா சிவராத்திரி தினங்களில் அங்கே குவியும் கூட்டம் அதிகம். கயிலைவாசனான அந்த மகாலிங்கனை அன்றைய
தினத்தில் வந்து தரிசிப்பது இந்த வையகத்தில் தாங்கள் பெற்ற பேறு என்கிற சந்தோஷம் ஒவ்வொரு பக்தர்களின் முகத்திலும் பிரதிபலித்தது. காட்டிலே நடக்கும் அந்த பூஜைகளின்போது சித்தர்களும் எழுந்தருள்வர் என்பது இன்றளவும் உண்மை. ஏதேனும் அபூர்வ காட்சிகள் கிடைக்காதா என்று பக்தர்கள் அலை பாய்ந்து கொண்டிருந்தனர்.
மணி இரவு ஒன்பது. பெரியவருக்கு முன்னால் புறப்பட்டுச் சென்ற ஏழு இளைஞர்களும் பெரியவரின் உதவியாளரும் மளமளவென ஏறி சதுரகிரியின் உச்சியை ஒருவாறு அடைந்தனர். முதலில், சந்தன மகாலிங்கத்தைத் தரிசித்துவிட்டு சுந்தர மகாலிங்கத்தைத் தரிசிப்பதற்காக சரிவான பாதையில் இறங்கி, ஓடையைக் கடந்து மேலே ஏறினர்.
இப்போதுதான் உதவியாளருக்குப் பெரியவரின் – அதாவது தன் முதலாளியின் நினைவு வந்தது. ‘ஆகா… நடுக்காட்டில் அவரை விட்டு விட்டு இப்படி வந்து விட்டேனே… மகாலிங்கத்தைத் தரிசிக்க ஏழு இளைஞர்கள் ஒரு குழுவாக வந்தார்கள். அவர்கள் பாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கும்போது நானும் ஏன் அவர்களோடு சேர்ந்து கொண்டேன்? தன்னுடைய உதவிக்காகப் பெரியவர் என்னைக் கூட்டி வந்தார். ஆனால், அவரைத் தனியாகத் தவிக்க விட்டு வந்தது தவறோ?’ என்று கலங்கினார். ‘இந்த வேளையில் அவர் எங்கு இருப்பாரோ? எப்படி இருப்பாரோ? சாப்பிடுவதற்குக் கூட அவரிடம் ஒன்றும் இல்லையே…’ என்று கண்ணீர் சிந்தினார். ‘‘செய்வதை எல்லாம் செய்துவிட்டு இப்போது கண்ணீர் சிந்தி என்ன பலன்? இந்த சிந்தனை உங்களுக்கு அப்போதே இருந்திருக்க வேண்டும்’’ என்று ஏழு இளைஞர்களும் ஒன்று சேர்ந்து உதவியாளரைக் காய்ச்சி எடுத்தனர்.
இவர்களுக்கிடையே நடைபெறும் விவாதத்தைப் பார்த்தார், ஏழூர் சாலியர் மடத்தில் (கஞ்சி மடம்) அன்னதானப் பணிகளைக் கவனித்து வரும் மேஜர் பொன்னுசாமி என்பவர். என்ன ஏதென்று உதவியாளரை மெள்ள நெருங்கி விசாரித்தார்.
சேலத்தில் இருந்து புறப்பட்டதில் துவங்கி, நடுக்காட்டில் நகைக் கடை உரிமையாளரை விட்டு விட்டு வந்தது வரை அனைத்து சம்பவங்களையும் ஒரே மூச்சில் கண்ணீருடன் சொல்லி முடித்தார் உதவியாளர். இதைக் கேட்டதும் பொன்னுசாமியும் மற்றும் அவரைச் சூழ்ந்திருந்த பலரும் அதிர்ந்தனர். ‘‘உதவிக்கென்று உங்களைக் கூட்டி வந்துள்ளார்… நீங்களே இப்படி நடந்து கொள்ளலாமா?’’ என்று ஆளாளுக்குக் கோபமாகக் கேட்டனர். அவர்களை எல்லாம் சமாதானப்படுத்திய பொன்னுசாமி, எந்த இடத்தில் பெரியவரை விட்டு விட்டு வந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அந்தப் பகுதிக்கு உண்டான சில அடையாளங்களைக் கேட்டார்.
உதவியாளரும் பெரியவரை விட்டு வந்த இடத்தில் இருக்கும் மரங்கள், பாறை அமைப்பு, பாதை அமைப்பு போன்றவற்றை அப்படியே சொன்னார். அதைக் கேட்டவுடன் பொன்னுசாமியும் மற்றவர்களும் ஆடித்தான் போனார்கள். ‘‘அடடா… அங்கேதான் யானை, கரடி போன்றவை கூட்டம் கூட்டமாக நள்ளிரவில் வலம் வரும். ரொம்பவும் ஆபத்தான பகுதி ஆயிற்றே’’ என்றார்.
அப்போது உதவியாளர், ‘‘சார்… நீங்க சொல்றதைப் பார்த்தா எனக்கு பயம் அதிகமாகுது. அவரை எப்படியாவது போய்க் கூட்டிட்டு வந்திடணும். அவர் வசதி மிகுந்தவர். மலைவாசிகள் சிலரை அனுப்பி ‘டோலி’ மூலம் கூட்டி வரலாம். என்ன பணம் கொடுக்கணுமோ கண்டிப்பாகக் கொடுத்துடுவார்.
நானும் இடத்தை அடையாளம் காட்டறதுக்காக வர்றேன்’’ என்றார் படபடப்பாக.
இதை அடுத்து, மலைவாசிகள் சிலரைக் கூப்பிட்டு விவரம் சொன்னார் பொன்னுசாமி. ‘கூலி கிடைக்கிறதே’ என்பதால், சில ஆசாமிகள் முன்வந்தனர். அப்போதுதான் எந்த இடம் என்பதை அவர்களுக்கு விளக்கிச் சொன்னார் பொன்னுசாமி. அவ்வளவுதான்… அந்த இடத்தைப் பற்றிக் கேட்டதும், மலைவாசிகள் பின்வாங்கினர். ‘‘சாமீ… அது ரொம்ப மோசமான இடம். இந்த நேரத்துல அங்கே போறதுங்கிறது உயிரைப் பணயம் வைக்கற மாதிரி. எங்க உயிருக்கே உத்தரவாதம் இல்லே. நாய்ங்க கூச்சல் போடும். இதைக் கேட்டுட்டு இருட்டுல மிருகங்க நம்மைத் துரத்திக் கடிச்சுக் குதற ஆரம்பிச்சுடும். ராத்திரி வேளைல மனித வாடையே அங்கே இருக்கக் கூடாது. யானைங்க தனியா வந்தாலும் சமாளிச்சிடுவோம். கூட்டமா நடமாடும் இடமாச்சே’’ என்று மலைவாசிகள் ஒவ்வொருவராகக் கலைந்தனர்.
‘இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது’ என்று தீர்மானித்த பொன்னுசாமியும் மற்றவர்களும் பெரியவரைக் காக்கும் பொறுப்பை மகாலிங்கத்திடமே விட்டனர். பொழுது விடிந்த பிறகு மலைவாசிகள் சிலரது துணையுடன் உதவியாளரே அந்த இடத்துக்குச் சென்று பெரியவரைக் கூட்டி வருவது என்று முடிவாயிற்று. மனதில் ஒரு பீதியுடனேயே அனைவரும் உறங்கினர்.
சொன்னபடி விடிகாலையில் உதவியாளர் விழித்தெழுந்தார். உதவிக்கு ஒரு சில மலைவாசிகளும் புறப்பட்டனர். பெரியவரைத் தேடி முதல் நாள் மாலை தான் வந்த வழியிலேயே இறங்க ஆரம்பித்தார் உதவியாளர். மனதுக்குள் மகாலிங்கத்தைப் பிரார்த்தனை செய்து கொண்டார். ‘அவருக்கு எந்த வித அசம்பாவிதமும் நேர்ந்திருக்கக் கூடாது’ என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.
மாலை சுமார் 4 மணி இருக்கும். ஒரு வழியாகப் பெரியவரைக் கைத்தாங்கலாகக் கூட்டிக் கொண்டு சுந்தர மகாலிங்கம் கோயில் அருகே வந்தார் உதவியாளர். முதல் முறையாக சதுரகிரியைப் பார்ப்பதால், பெரியவர் இங்கும் அங்கும் ஆவலாக மலையின் அழகை ரசித்துக் கொண்டே வந்தார். அந்த சூழல் அவரது மனதுக்கு மிகுந்த ரம்மியமாக இருந்தது.
இவரைப் பார்த்ததும்தான் அங்கே இருந்த பலருக்கும் நிம்மதி ஏற்பட்டது. அவருடைய கைகளைப் பற்றி ஆதரவுடன் விசாரிக்க ஆரம்பித்தனர். உடலுக்கு எந்த விதமான சேதாரமும் இல்லாமல் பெரியவரை அங்கு பார்த்ததால் அனைவருக்குமே வியப்பு. ஏனென்றால், முந்தின நாள் இரவு அவர் இருந்த சூழ்நிலையே வேறு. இருக்கிறாரா என்பதற்கும் எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. எனவேதான், எல்லோருக்கும் வியப்பு கலந்த அதிர்ச்சி! இந்த வேளையில் மகாலிங்கத்தின் சந்நிதி பார்த்து அவனுக்குப் பெரிய கும்பிடு போட்டார்கள்.
‘‘சரி பெரியவரே… நேத்து ராத்திரி என்னதான் ஆச்சு உங்களுக்கு? அந்தக் காட்டுல எப்படித் தனியா இருந்தீங்க? மிருகங்களோட தொந்தரவு இல்லியா? யானைகளும் கரடிகளும் கூட்டமாக உலவும் பகுதி ஆச்சே? சாப்பாட்டுக்கு என்ன செஞ்சீங்க?’’ என்று ஆளாளுக்குக் கேள்வி மேல் கேள்விகளாகக் கேட்டனர். பெரியவர் நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டார். பிறகு, ‘‘நீங்க இப்ப எங்கிட்ட கேட்ட அதே கேள்விகளைத்தான் நானும் எனக்குள்ளே கேட்டுக்கறேன்’’ என்றார்.
பெரியவர் என்ன சொல்ல வருகிறார் என்று எவருக்கும் புரியவில்லை.
கொஞ்ச நேரத்துக்கு அனைவரும் அமைதியாக இருந்தனர்.
அதை விட, முந்தின நாள் இரவு மிகவும் அபாயகரமான அந்தக் காட்டுக்குள் எப்படி அவர் தனிமையில் இருந்தார்? உணவு சாப்பிடவில்லையே… தண்ணீர் குடிக்கவில்லையே… குளிர் அவரை பலமாக வாட்டி இருக்குமே? ஏற்கெனவே இதய நோய் உள்ள அவர், இருட்டைக் கண்டு மனம் தடுமாறாமல் எப்படி இருந்தார்? கொடிய வன விலங்குகளின் நடமாட்டம் இவருக்கு எந்தப் பாதிப்பையும் கொடுக்கவில்லையே? இதை எல்லாம் சமாளித்துக் கொண்டு இரவுப் பொழுதை எப்படிக் கழித்தார் என்று ஏகப்பட்ட குழப்பங்களை மனதில் வைத்துக் கொண்டு அவருடைய முகத்தையே அனைவரும் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரின் முகங்களிலும் தெரிந்த குழப்பங்களுகெல்லாம் விடை சொல்லும் விதமாக பெரியவரே பேச ஆரம்பித்தார். அவர் பேசி முடிக்கும்வரை அங்கிருந்த பக்தர்கள் அனைவரும் பெரும் அமைதி காத்தனர்.
‘‘இது போன்ற ஒரு அனுபவத்தை இனி என் வாழ்நாளில் எத்தகைய சந்தர்ப்பத்திலும் நான் சந்திக்கப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரை அதை ஒரு பேரானந்தம் என்றுதான் சொல்வேன்.
ஆனாலும், பயம் என்கிற அசுரன் எனக்குள் புகுந்து வாட்டி வதைத்ததை நான் உணர்ந்தேன். ‘காரிருள்’ என்று பல கதைகளில் படித்திருக்கிறேன். ஆனால், அத்தகைய ஓர் இருளை என் கண்ணாரக் கண்டேன். நேரம் என்ன என்பதும் தெரியவில்லை. எங்கே இருக்கிறேன் என்றும் தெரியவில்லை. கருமேகக் கூட்டங்கள் சூழ்ந்திருந்ததால் வானத்தில் நட்சத்திரங்கள் தென்படவில்லை. இதனால், பொட்டு வெளிச்சம் கூட அந்தப் பிரதேசத்தில் கிடையாது.
‘இரவுப் பொழுதை இங்கேயேதான் கழிக்க வேண்டும் என்று மகாலிங்கம் தீர்மானித்துள்ளான் போலிருக்கிறது’ என்ற முடிவுக்கு வந்தேன். நான் அமர்ந்திருந்த பாறையே படுப்பதற்குத் தோதான இடம்தான். ஆனால், தூக்கம் எனக்கு வரவே இல்லை. ஒரு விதமான பயம் என்னைத் தொற்றிக் கொண்டது. ‘இறைவா… சதுரகிரி மகாலிங்கமே… உனது தரிசனம் நாளைக்குத்தான் என்பது தீர்மானிக்கப்பட்டு விட்டது. ஆனால், இதய நோய் உள்ளவனான என்னை இன்றைக்குப் பத்திரமாகப் பாதுகாத்து நாளை உன் சந்நிதிக்குக் கூட்டிச் செல். இப்போது எனக்கு ஓய்வைத் தர வேண்டியது உன் பொறுப்பு. இந்தப் பயத்தில் இருந்து எனக்கு விடுதலை கொடு’ என்று கண்களை மூடி (அந்த இருளில் கண்களை மூடினால்தான் என்ன… திறந்தாலும்தான் என்ன… இரண்டுமே ஒன்றுதானே) பிரார்த்தித்தேன்.
இதை அடுத்து ஏதோ ஒரு சக்தி என்னை அந்தப் பாறையில் படுக்கச் சொல்லியது. அதுவரை இறுக்கமாக இருந்த என் உடல் லேசாக மாறுவது போல் இருந்தது. சுருக்கமாகச் சொன்னால் நான் என் நிலையில் இல்லை. எனது கன்ட்ரோல் முழுவதும் வேறு யாராலோ ‘ரிமோட்’ மூலம் இயக்கப்படுவது போல் உணர்ந்தேன். பயத்திலும் கலவரத்திலும் தூக்கமே வராமல் இருந்த நான் இதை அடுத்து மெள்ளத் தூங்க வைக்கப்பட்டேன். அதுவரைதான் எனக்குத் தெரியும். அதன் பிறகு அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு என் உதவியாளரும் இன்னும் சிலரும் வந்து பாறையில் படுத்திருந்த என்னை எழுப்பியதுதான் தெரியும். இரவுப் பொழுதில் நான் அவர்களுடன் இல்லை என்பதை அப்போதுதான் பரிபூரணமாக உணர்ந்து கொண்டேன். எப்படி அந்த இரவை நான் அங்கே கழித்தேன் என்பதை இப்போது நினைத்தாலும், என் உடல் பதறுகிறது. நெஞ்சம் நடுங்குகிறது. எல்லாமே அந்த மகாலிங்கத்துக்குத்தான் வெளிச்சம். அவன்தான் நேற்றைய இரவில் என்னை இயக்கியவன்’’ என்று நீளமாகச் சொல்லி முடித்து, கண்களை மூடி, மனதுக்குள் அந்த மகாதேவனைப் பிரார்த்தித்துக் கொண்டார்.
இதைக் கேட்டதும், அங்கிருந்த மேஜர் பொன்னுசாமி மற்றும் பிற பக்தர்கள் அனைவரும் திறந்த வாய் மூடவில்லை. பெரியவரின் உடலுக்கு ஒரு சேதாரமும் இல்லாமல், அவரை அப்படியே சதுரகிரி சந்நிதியில் கொண்டு வந்து சேர்த்த மகாலிங்கத்துக்கு அனைவருமே நன்றி தெரிவித்தனர். ‘‘தன்னை முழுசாக நம்பிய எந்த ஒரு பக்தனையும் மகாலிங்கம் கைவிட மாட்டார் என்பதற்கு, இந்தப் பெரியவரை விட வேறு உதாரணமே தேவை இல்லை’’ என்று ஒரு பக்தர் கூறிக் கொண்டிருக்கும்போது, அங்கே ஓரமாக அமர்ந்திருந்த ஒரு சாது பேச ஆரம்பித்தார்:
‘‘மகாலிங்கமே பெரிய மருத்துவன் சாமீ… அவன் இவரைக் காப்பாத்தினதுல ஒண்ணும் வியப்பில்லை. நேத்து ராத்திரி பெரியவர் இருந்த நிலைக்கு அவர் தூக்கம் வராம இருந்திருக்கணும். ஆனால், இவர் தூங்காம இருந்திருந்தா என்னென்ன விளைவுகள் ஆகி இருக்கும்னு யோசிச்சுப் பாருங்க… பிளிறல் சத்தத்தோட யானைங்க கூட்டமா போவது இவருக்குத் தெரிஞ்சிருக்கும். நடுக்கிற குளிருல இவரோட உடல் உறைஞ்சு போய், ஏடாகூடமா மோசமாயிருக்கும். தவிர, கண்ணுக்குத் தெரியாத பல மிருகங்கள் எழுப்புகிற சத்தத்தைக் கேட்டாலே இவருடைய இதயத் துடிப்பு நின்னு போயிருக்கும். பசி வேறு அதிகமானதால, அவரு துடிச்சுப் போயிருப்பாரு. இது எல்லாத்தையுமே அந்த மகாலிங்கமும், அவரோட ஏவலாட்களாக இங்கே இன்னமும் இருக்கின்ற சித்தர் பெருமக்களும் விரும்பலை. இதெல்லாம் நடக்கக் கூடாதுன்னா அதுக்கு இருக்கிற ஒரே மாற்று – பெரியவரைத் தூங்க வைக்க வேண்டியதுதான்னு முடிவு பண்ணி, ஒரு தாயா இருந்து அவரைத் தூங்க வெச்சிருக்காங்க. பசியையும் பயத்தையும் மறக்கடிச்சிருக்காரு. இதுதான் சாமீ நேத்து ராத்திரி நடந்திருக்கும்’’ என்று சொல்லி முடித்த சாது, தனது காவிப் பையில் வைத்திருந்த சங்கை எடுத்து, காற்றைச் செலுத்தி, நாதம் எழுப்பி, உடல் சிலிர்க்க மகாலிங்கத்தையும் சித்தர்களையும் தொழுதார்.சாது சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும், அனைவருமே உடல் சிலிர்த்தனர். பெரியவரின் கண்களில் அவரை அறியாமல் நீர் சுரந்தது.