சித்தருடன் ஒரு ‘ஜிவ்’ பயணம்
மாயஜாலப் படங்களையும் விஞ்சும் அளவுக்கு ஓர் உண்மை நிகழ்வைப் பார்த்தோம். அடுத்து, வரப் போகிற அனுபவமும் அப்படிப்பட்டதுதான்.
வள்ளலார் சுவாமிகள் பற்றி ஒரு நிகழ்வு சொல்வார்கள். ஒரு உச்சி வேளையில் – அதாவது மதியம் பன்னிரண்டு மணி வாக்கில் தன் பக்தர் ஒருவருடன் வடலூரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாராம் வள்ளலார் சுவாமிகள். திடீரென அந்த பக்தரின் மனப் போக்கை அறிந்த வள்ளலார், ‘‘என்ன… இன்னிக்கே சிதம்பரம் நடராஜர் கோயில்ல உச்சிகால தரிசனம் பண்ணணும்னு ஆசையா இருக்கா?’’ என்றாராம்.
‘‘ஆமா சாமீ… கரெக்டா சொல்லிட்டீங்க… மணி பன்னண்டு ஆகுது. இந்நேரம் நான் சிதம்பரத்துல இருந்தா, நடராஜரைத் தரிசனம் பண்ணிக்கிட்டு இருப்பேன்’’ என்றாராம்.
‘‘அவ்வளவுதானே… இதோ, நாமும் சிதம்பரம் போய் உச்சிகால தரிசனம் செய்வோம்’’ என்ற வள்ளலார், தன் ஸித்துத் திறமையால் அவரோடு அடுத்த விநாடி சிதம்பரத்தில் இருந்தார் என்றொரு சம்பவத்தைச் சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
கிட்டத்தட்ட அது போன்ற ஒரு நிகழ்வும் சதுரகிரிக்கு வாய்த்துள்ளது.
சித்த புருஷர் ஒருவர் தன் பக்தரை ஸித்து வேலை மூலம் எத்தனையோ கி.மீ.க்கு அப்பால் இருந்து கஷ்டப்பட்டு மலை ஏறாமல், ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்வது போல் கூட்டிச் சென்று காட்டி தரிசனம் செய்து வைத்திருக்கிறார்.
ஆச்சரியமாக இருக்கிறதா? இது கதை அல்ல. நிஜம்!
சதுரகிரிக்குச் செல்ல விரும்பும் பக்தர்கள், சாதாரணமாக எப்படிப் பயணப்படுவார்கள்?
மலை அடிவாரமான தாணிப்பாறை வரை பேருந்திலோ அல்லது பிற வாகனங்களிலோ பயணித்து வந்து, அங்கிருந்து நடை யாத்திரையாகப் புறப்படுவார்கள். சுமார் 10 கி.மீ. தொலைவை – மூன்றிலிருந்து நான்கு மணி நேரத்துக்குள் நடந்து சென்ற பிறகுதான் மலை உச்சியை – அதாவது சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் குடி கொண்டிருக்கும் தெய்வ சந்நிதியை அடைய முடியும். இதுதான் நடைமுறை. யதார்த்தம். இப்படித்தான் பலரும் சதுரகிரிக்குச் சென்று வருகிறார்கள்.
ஆனால், ஒரு பக்தர், தாணிப்பாறையில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ள ஓர் ஊரில் (கே.ரங்கபாளையம்) இருந்தார். அதற்கு அடுத்த விநாடியில் அவர் சதுரகிரி உச்சியில் இருந்திருக்கிறார். ஒரு சித்த புருஷர், தன் ஸித்து வேலை மூலம் இப்படி கண் மூடிக் கண் திறப்பதற்குள் அந்த பக்தரை சதுரகிரிக்கு ஆகாய மார்க்கமாகக் கூட்டிச் சென்றிருக்கிறார். சுமார் முப்பது வருடங்களுக்கு முன் நடந்த மெய் சிலிர்க்க வைக்கும் அந்த அனுபவத்தை இப்போது பார்ப்போம்.
மதுரையை அடுத்து இருக்கும் டி.கல்லுப்பட்டியில் வட்டார வளர்ச்சி அலுவலராக (பி.டி.ஓ.) இருந்தவர் விஸ்வநாதன். தான் பணிபுரியும் உத்தியோகத்தோடு, பயணப்படுகிற இடங்களில் வசித்து வருகிற சித்தர்களை – முக்தி ஆன மகான்களைத் தரிசித்து அவர்களின் ஆசியைப் பெற்றுத் திரும்புவது இவரது வழக்கம். இப்படி பல மகான்களின் அறிமுகமும் வரலாறும் இவருக்கு பரிச்சயம் உண்டு. அப்படித்தான் இவர் பணிபுரிந்த இடத்தில் ஒரு முறை முனியாண்டி ஸ்வாமிகள் அறிமுகமாகி இருக்கிறார்.
முனியாண்டி ஸ்வாமிகள் ஒரு சித்த புருஷர் (இப்போது இவர் இல்லை. தனது 32 வயதில் இவர் சமாதி ஆகி விட்டார். இவரது சமாதி மதுரை திருமங்கலம் அருகே டி. குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கே.ரங்கபாளையம் என்கிற இடத்தில் இருக்கிறது). சதுரகிரியில் ஒரு குகையில் அடிக்கடி நடைபெறும் சித்தர்கள் மகாசபைக் கூட்டத்துக்குத் தான் சென்று வருவது வழக்கம் என்று தன் பக்தர்களிடம் குறிப்பிட்டிருக்கிறார் முனியாண்டி ஸ்வாமிகள். எத்தனையோ அற்புதங்களையும் ஆச்சரியங்களையும் நிகழ்த்திய சித்த புருஷர் இவர்.
சில ஆண்டுகளுக்கு முன், அதாவது சதுரகிரி அதிகம் அறியப்படாத காலகட்டத்தில் அங்கே வசித்தவர் முனியாண்டி சாமி என்பவர். பல ஸித்து வேலைகளைச் செய்தவர். ஸ்ரீசுந்தர மகாலிங்கத்துடன் நேருக்கு நேர் பேசியவர். மலைக்கு மேல் எப்போதாவது, எவராவது வந்து மகாலிங்கத்துக்குப் படையல் செய்த பின், அந்தப் பிரசாதத்தை வாங்கி உண்பதில் ஆர்வமாக இருப்பார். கையெல்லாம் மண்ணும் குப்பையுமாக இருக்கும். அந்தக் கைகளைக் கழுவாமலே, பிறர் தரும் பிரசாதத்தை தேவார்மிர்தமாக வாங்கிக்கொள்வார். அதை அப்படியே வாயில் வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து உண்பார். தற்போது இவர் இல்லை.
திருமங்கலம் – டி. கல்லுப்பட்டி சாலையில் உள்ள டி. குன்னத்தூர் கிராமத்தை ஒட்டியுள்ள குக்கிராமமான கே. ரங்கபாளையத்தில்தான் சித்த புருஷரான முனியாண்டி ஸ்வாமிகள் அவதரித்தார். நினைத்தபோதெல்லாம் சதுரகிரிக்கு வந்து இறை இன்பத்தில் இவர் மூழ்கித் திளைப்பார். ஸித்து விளையாட்டுகளில் தேர்ந்தவர். நினைத்த இடத்தை, நினைத்த மாத்திரத்தில் போய்ச்சேரும் கலை இவருக்குக் கைவந்த ஒன்று.
‘தொலைதூரப் பிரதேசங்களுக்கு இவர் அடிக்கடி ஆகாய மார்க்கமாகச் சென்று வருவார். ஆனால், மனிதர்கள் எவரும் இதைப் பார்க்கமுடியாது’ என்கிறார்கள் இவரின் பக்தர்கள்.
டி. கல்லுப்பட்டியில் தினமும் தன் பணி முடிந்ததும், இரவு ஒன்பது, பத்து மணி வாக்கில் அங்கிருந்து புறப்பட்டு கே. ரங்கபாளையத்தை அடைவார் பி.டி.ஓ–வான விஸ்வநாதன். அங்கு முனியாண்டி ஸ்வாமிகளுடன் பல மணி நேரம் பேசி விட்டு, அவர் தரும் உபதேசங்களையும் கேட்டு, அங்கேயே உறங்கி மறுநாள் காலை டி. கல்லுப்பட்டிக்குத் திரும்பி, பணிக்குச் செல்வது இவரது வழக்கம். பெரும்பாலான நாட்களில் இந்த சந்திப்பு நிச்சயம் நிகழ்ந்துவிடும். ஒருவேளை பணியின் காரணமாகவோ இல்லறம் காரணமாகவோ ஏதேனும் தாமதம் ஆகி விட்டால் மட்டும் அன்றைக்கு கே. ரங்கபாளையம் செல்ல மாட்டார் விஸ்வநாதன். டி. கல்லுப்பட்டியிலேயே தங்கி விடுவார்.
ஒரு நாள் மாலை வெகு சீக்கிரமாகவே தன் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டார் விஸ்வநாதன். எனவே, அன்றைய தினம் இரவு ஏழு மணிக்கே டி.கல்லுப்பட்டியில் இருந்து புறப்பட்டு ரங்கபாளையத்தை அடைந்து முனியாண்டி ஸ்வாமிகளைத் தரிசிக்கத் திட்டமிட்டிருந்தார் அவர். ரங்கபாளையத்துக்குப் புறப்படுவதற்கான ஆயத்தத்தில் விஸ்வநாதன் இருந்தபோது அந்த ஆச்சரியமும் நிகழ்ந்தது. முனியாண்டி ஸ்வாமிகளிடம் இருந்து விஸ்வநாதன் பணிபுரியும் இடத்துக்கு வந்த ஒரு பக்தர், ‘‘ஸ்வாமிகள் உங்களை இன்று சீக்கிரமாக வரச் சொன்னார்’’ என்றார். விஸ்வநாதனுக்கு வியப்பு. தன் மனதில் இருக்கும் எண்ணத்தை குருநாதர் எப்படி அறிந்தார்? அவரைத் தரிசிக்கலாம் என்றுதானே விரைவாகப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம்?
டி. கல்லுப்பட்டியில் இருந்து பேருந்தில் பயணித்து அதன் பின் சிறிது தொலைவு நடந்து ரங்கபாளையத்தில் ஸ்வாமிகளின் இடத்தை அடைய வேண்டும். ‘இன்றைக்கு ஏதோ அற்புதம் நிகழப் போகிறது போலிருக்கிறது’ என்கிற சந்தோஷத்துடன் அரை மணி நேரத்தில் ரங்கபாளையத்தை அடைந்தார் விஸ்வநாதன்.
ரங்கபாளையத்தை அவர் அடையும்போது மணி இரவு ஏழு. இயல்பான விசாரிப்புகள் முடிந்த பின் முனியாண்டி ஸ்வாமிகள் விஸ்வநாதனிடம் கேட்டார் – ‘‘சதுரகிரிக்கு நாம் போகலாமா?’’
விஸ்வநாதனுக்கு பிரமிப்பு. ‘சதுரகிரிக்கு இந்த வேளையில் எப்படிப் பயணிக்க முடியும்? இரவு வேளை வந்து விட்டது. இனி, இங்கிருந்து இரண்டு பேருந்தில் பயணித்து 70 கி.மீ. தொலைவில் உள்ள தாணிப்பாறையை அடைவதற்கே இரவு பதினோரு மணி நெருங்கி விடும்… அதன் பின் மலைப்பாதையில் எப்படிப் பயணித்து உச்சியை அடைவது?’ பிறகு விஸ்வநாதனின் உள்மனம் சொன்னது – ‘சித்த புருஷர்கள் கேட்டால், அதை மறுத்துப் பேசாதே. சம்மதம் தெரிவித்து விடு. அவர்களது வார்த்தைகளுக்கு எப்படிச் செயலாக்கம் கொடுப்பது என்பது அவர்களுக்குத் தெரியும்.’
‘‘என்ன யோசிக்கிறாய்? இந்த இரவில் பேருந்தில் எப்படிப் பயணித்து தாணிப்பாறையை அடைந்து மலை ஏறப் போகிறோம் என்றுதானே?’’ – ஒரு புன்னகையுடன் கேட்டார் முனியாண்டி ஸ்வாமிகள்.
மெள்ளவும் முடியாமல் முடியாமல், விழுங்கவும் முடியாமல், ‘‘ஆமா சாமீ… அதைத்தான் யோசிச்சேன்’’ என்றார் தவிப்போடு.
‘‘அது என் வேலை. சரி, அங்கே நாம் போய்ச் சேர்ந்ததும் ஆகாரத்துக்கு ரவை உப்புமா செய்வதற்குத் தேவையான ஒரு சில பொருட்களை உன்னுடன் எடுத்துக் கொள்’’ என்றார் ஸ்வாமிகள்.
விஸ்வநாதனும் எதுவும் விளக்கம் கேட்காமல், ஸ்வாமிகள் சொன்னபடியே சேகரித்துக் கொண்டு அடுத்த பத்து நிமிடத்தில், ‘‘சதுரகிரிக்கு வர நான் தயார் சாமீ’’ என்றார், அவர் அருகே அமர்ந்தபடி.
‘‘நான் சொல்வதைக் கேள். கண்களை மூடிக் கொண்டு என் தோளைத் தொட்டுக் கொள்’’ என்றார் முனியாண்டி ஸ்வாமிகள்.
என்ன செய்யப் போகிறாரோ என்ற நினைப்பில், விஸ்வநாதனும் அப்படியே செய்தார். ஸ்வாமிகளின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு விஸ்வநாதன், மூடிய தன் கண்களைத் திறக்கவில்லை. ஒரு சில விநாடிகள்தான் கடந்திருக்கும். குருநாதரின் குரல் அவரது செவியில் சன்னமாகக் கேட்டது.
‘‘இப்போது உன் கண்களைத் திறந்து பார்.’’
ஏதோ ஒரு வித மயக்கத்தில் இருப்பது போல் இருந்த விஸ்வநாதன் தன் விழிகளைத் திறந்ததும், திக்பிரமை ஆகி விட்டார். பேந்த பேந்த சுற்றும்முற்றும் பார்த்தார். அவரால் துளியும் நம்ப முடியவில்லை. ஸ்வாமிகள் பலவிதமான ஸித்துக்களைப் புரிபவர் என்று விஸ்வநாதனுக்குத் தெரிந்தாலும், இந்த விளையாட்டை மட்டும் நம்ப முடியவில்லை.
விஸ்வநாதன் அப்போது இருந்தது சதுரகிரியின் மலை உச்சியில். ‘ஒரு சில நொடிகளுக்கு முன் கிராமத்தில் பல ஜனங்களுக்கு மத்தியில் இருந்த நான் எப்படி இந்த அடர்ந்த காட்டை அடைந்தேன்? மாபெரும் மரங்களும், பறவைகளின் ஒலியும் என்னை அச்சுறுத்துகின்றனவே? இந்த திடீர் பிரவேசம் எப்படி நிகழ்ந்தது?’ குழம்பினார் விஸ்வநாதன்.
ரங்கபாளையத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டரில் இவர்கள் கிளம்பி இருந்தாலும், இந்த வேகத்தில் சதுரகிரி உச்சிக்கு வந்திருக்க முடியாது. எப்படி நிகழ்ந்தது இந்த அற்புதம்?
அதுதான் மெய்ஞானம். விஞ்ஞானமெல்லாம் இதற்கு முன் தூசு. ஆகாய மார்க்கத்தில் சித்த புருஷர்கள் ஓரிடத்தில் இருந்து வேறோர் இடத்துக்குப் பறந்தபடியே பயணிப்பார்கள் என்றெல்லாம் படித்திருப்பீர்கள். அஷ்டமாஸித்திகள் வாய்க்கப் பெற்ற சித்தர்களுக்கு இது சர்வசாதாரணம். அதைத்தான் கிடைத்தற்கரிய பேறாக தன் சீடனான விஸ்வநாதனுக்கும் அருளி இருக்கிறார் முனியாண்டி ஸ்வாமிகள். ரங்கபாளையத்தில் இருந்து நொடிப் பொழுதில் சதுரகிரிக்கு வந்துவிட்டோமே என்கிற குழப்பம் இன்னும் தீராமல் விஸ்வநாதன் இருப்பதைப் பார்த்து ஸ்வாமிகளே தெளிவித்தார். ‘‘விஸ்வநாதா… நாம் இப்போது சதுரகிரியில் இருக்கிறோம். அதோ, சுந்தர மகாலிங்கம்… இதோ, சந்தன மகாலிங்கம். சித்தர்கள் வாழ்ந்து வருகிற குகைகள் ஏராளம் இங்கு இருக்கின்றன. இன்றைய இரவுப் பொழுதை இங்கேயே நாம் கழிக்க இருக்கிறோம்’’ என்று முனியாண்டி ஸ்வாமிகள் சொல்லிக் கொண்டிருந்தபோது அங்கே வசித்துவரும் சடைச்சாமி என்பவர் தன் குகையில் இருந்து வெளியே வந்தார்.
சடைச்சாமியின் உணவுத் தேவைக்காக ஒவ்வொரு மாதமும் உணவுப் பொருட்கள், தீப்பெட்டி போன்ற அத்தியாவசியப் பொருட்களை இவருக்குத் தொடர்ந்து அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார் பேரையூர் ஜமீன்தார். சடைச்சாமி தங்கி இருந்த குகையின் அருகே ஒரு சுனை எப்போதும் நீரோட்டத்துடன் இருக்கும். தவிர, நெருப்புக் குண்டம் ஒன்று எந்நேரமும் எரிந்து கொண்டே இருக்கும்.
இருவரையும் வரவேற்றார் சடைச்சாமி. ஸ்வாமிகள் எப்படி இங்கே வந்திருப்பார் என்று தான் அறிந்ததாலோ என்னவோ… இவர்களது பயணம் பற்றி ஏதும் கேட்கவில்லை சடைச்சாமி. ‘‘சாமீ… ராத்திரி ஆகாரத்துக்கு ஏதேனும் பண்ணட்டுமா?’’ என்று ஸ்வாமிகளைப் பார்த்துக் கேட்டார்.
‘‘விஸ்வநாதா… நீ கொண்டு வந்திருக்கும் ரவை உள்ளிட்ட பொருட்களை அவரிடம் கொடு. ரவை உப்புமாதான் இன்றைய நமது ஆகாரம்’’ என்று சொல்ல… தன் மடியில் இருந்த பையை சடைச்சாமிடம் கொடுத்தார் விஸ்வநாதன்.
அடுத்த அரை மணி நேரத்தில் சூடான ரவை உப்புமா தயாரான நிலையில் ஓர் இலையில் வந்தது. சாப்பிட்டார்கள். ‘‘விஸ்வநாதா… நன்றாக உறங்கு’’ என்று சொன்ன முனியாண்டி ஸ்வாமிகள், மையிருட்டு கவிந்திருந்த அந்த வேளையில் வேகமாக நடந்து இருளில் பொசுக்கெனக் கலந்து விட்டார். ‘சித்த புருஷர்களுடன் உரையாடப் போகிறார் போலிருக்கிறது’ என்று நினைத்த விஸ்வநாதனைத் தூக்கம் அப்போது சூழ்ந்து கொண்டது. நன்றாகவே உறங்கிப் போனார்.
அடுத்த நாள் காலை. சதுரகிரியில் தரிசனம் எல்லாம் முடிந்த பின், இருவரும் நடந்தே கீழிறங்கினார்கள். அப்படித் திரும்பும்போது மலையில் உள்ள ஒவ்வொரு இடத்தையும் அதன் சிறப்புகளோடு விஸ்வநாதனுக்கு விளக்கியபடியே இறங்கினார் முனியாண்டி ஸ்வாமிகள்.
என்ன, திகிலாக இருக்கிறதா? இதுதான் சித்தர்களின் விளையாட்டு.இந்த சம்பவத்தோடு தொடர்பு கொண்ட விஸ்வநாதன் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.