சதுரகிரி 12 – அழைப்பு வந்தால் ஆசியே!

அழைப்பு வந்தால் ஆசியே!

துரகிரிக்குச் சென்று வந்தாலே புண்ணியம். அங்கு நம் பாதங்கள் படுவதற்கு, பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்; சுற்றுச்சூழலால் பாதிக்கப்படாத அந்த வனத்தின் மூலிகைகளைத் தழுவி வரும் சுத்தமான காற்று நம் தேகத்தில் பட்டாலே நமது பெரும்பாலான நோய்கள் நீங்கிவிடும். சித்தர் பெருமக்கள் சூட்சும சரீரத்துடன் உலவும் சதுரகிரிக்கு நாம் செல்ல அவர்களது அழைப்பும் ஆசீர்வாதமும் நமக்குக் கிட்ட வேண்டும். அப்போதுதான் சதுரகிரிக்கு நம்மால் செல்ல முடியும். இந்த அழைப்பும் ஆசீர்வாதமும் எத்தனையோ பக்தர்களுக்குக் கிட்டியுள்ளதும் அனுபவபூர்வமான உண்மை!

இந்த மலையிலுள்ள ஒவ்வொரு வஸ்துவிலும் இறை அம்சம் நிறைந்துள்ளது. இங்கு சித்தர்கள் எந்த ரூபத்தில் நம்மை ஆட்கொள்வார்கள் என்பதை எவராலும் கணிக்க முடியாது. சதுரகிரியில் சித்தர்கள் நிகழ்த்தும் அற்புதங்கள், விவரிப்புக்கு அப்பாற்பட்டவை. பௌர்ணமி இரவுகளில் நட்சத்திர ரூபத்தில் சித்தர்கள் வானில் நடத்தும் வர்ணஜாலத்தைக் கண்டு தரிசித்தவர்கள், பெரும் பேறு பெற்றவர்கள்.

அற்புதங்களை தரிசிக்கும் வாய்ப்பை இறைவன் எவருக்கெல்லாம் விதித்துள்ளாரோ, அவர்களுக்கு இது வாய்க்கப் பெறும். இறைவனின் அருள் கடாட்சம் இருப்பவர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும். சதுரகிரி செல்லும் வாய்ப்பே இப்படிப்பட்ட அருள் கடாட்சம் உள்ளவர்களுக்கே வாய்க்கிறது. யாத்திரையின்போது சக பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் நம்மால் முடிந்த உதவிகள் செய்யலாம். நடைபயணத்தின்போது பதற்றம் கூடவே கூடாது. பொறுமை மிகவும் அவசியம்.

இந்த யாத்திரை தொடங்கும் முன், சாதாரணமாக பக்தர்கள் பலருக்கும் மலைப்பு ஏற்படுத்துகிற விஷயம் ஒன்று உண்டு. மலைப் பாதையில் சுமார் 10 கி.மீ. தூரத்தை எவ்வாறு நடந்து செல்லப் போகிறோம் என்பதுதான்! நகர வாழ்க்கையில், குளிர்சாதன அறைக்குள் சுழல் நாற்காலியில் அமர்ந்து, பணிபுரியும் சில அன்பர்களுக்கு, இந்தப் பயண தூரமும் கரடு முரடான பாதையின் தன்மையும் சலிப்பை ஏற்படுத்தலாம்.

கடவுள் தரிசனம் என்பது எளிதான காரியம் அல்ல. கஷ்டப்பட்டால்தான் கடவுளை தரிசிக்க முடியும். நம் மனமும் சிந்தனையும் தன்னிடம் அர்ப்பணமாகியுள்ளதா என்பதைச் சோதித்த பிறகே பகவான் நமக்குக் காட்சி தருவார்.

சதுரகிரி யாத்திரைக்குசரணாகதிஅவசியம். எத்தனையோ பேர்வயது முதிர்ந்தோர், இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என பலரும் சதுரகிரி சென்று, இறைவனை மனமார தரிசித்துத் திரும்புகிறார்கள். இவர்கள் எல்லோரும் அந்த மகாலிங்கத்தை முழுவதுமாக நம்பி, தங்களது யாத்திரையை தொடங்கியவர்கள்.

சதுரகிரி யாத்திரை செல்பவர்கள், ஒரு சுற்றுலா மாதிரி சதுரகிரிக்குப் போய் வந்துவிட முடியாது; போகவும் கூடாது. ஒவ்வொருவரும் இந்த யாத்திரையை ஆழ்ந்து அனுபவித்து, சுகானுபவத்தில் திளைக்க வேண்டும்.

சுமார் 66 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள இந்த சதுரகிரியை 1950-களிலேயே அரசாங்கத்துக்குக் கொடுத்து விட்டனர் சாப்டூர் ஜமீன்தார் பரம்பரையினர். எந்தவித பிரதியுபகாரமும் எதிர்பார்க்காமல், அவர்கள் கொடுத்த காரணத்தால்தான் இன்று நாம் அந்த வனத்துக்குச் சென்று மகாலிங்கத்தை வணங்கி வர முடிகிறது.

‘‘அரசாங்கத்துக்கு இந்த வனத்தை வழங்கியபோது அதில் தேக்கு, சந்தனம் உட்படப் பல மரங்கள் ஏராளமாக இருந்தன. ஜமீன் குடும்பத்தினர் நினைத்திருந்தால், அந்த மரங்களை வெட்டி எடுத்துக் கொண்டுகூட மலையை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருக்கலாம். ஆனால், இந்த வனத்தில் இருந்து ஓர் இலையைக் கூடக் கிள்ளியெடுக்காமல் அப்படியே ஒப்படைத்தார்கள். அன்று சதுரகிரியை அரசாங்கத்திடம் ஒப்படைத்த ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்தவரும் தற்போதைய ராஜாவுமான சதுரகிரி நாகய்யசாமி காமய நாயக்கர் என்கிற பெரியராஜா இன்றும் சதுரகிரியின் தீவிர பக்தர்.

உலகில் உள்ள அனைத்து மெய்யன்பர்களையும் பக்தகோடிகளையும் ஸ்ரீபிலாவடி கருப்பர், இரட்டை மகாலிங்கம், சதுரகிரி ஸ்ரீசுந்தர மகாலிங்கம், ஸ்ரீசந்தன மகாலிங்கம் ஆகிய தெய்வங்கள் ஆசீர்வதித்து அருள் புரியட்டும்.

அனைத்து வளங்களும் இறை பக்தர்களின் வாழ்வில் பெருகட்டும்.

ஸ்ரீசுந்தர மகாலிங்கத்துக்கு அரோகரா!
ஸ்ரீசந்தன மகாலிங்கத்துக்கு அரோகரா!(முற்றும்)