25. “ரொம்ப ஸந்தோஷம்!”
மங்களாரத்திச் சுற்றிக் காரியத்தைப் பூர்த்தி செய்யும் போது ரொம்ப ஸந்தோஷமாயின்றி வேறெப்படியிருக்கும், ஸ்வாமீ? ஊரார் கதையெல்லாம் சொன்னேனே, சொந்தக் கதையில் நீ இடியைத் தாங்கி, குடியைத் தாங்கி எந்த நிமிஷமும் சொந்த நாயகனாய்க் காத்தருள்வதை நினைக்க ரொம்…ப ஸந்தோஷமாகயில்லாமல் இருக்க முடியுமா?35
361979 ஜூனில் இந்நூலை எழுதி முடித்தபின் சொந்த அனுபவங்கள் மேலும் நல்ல மகசூல் கண்டிருக்கிறது.
இதை நான் எழுதுகிறேனே, இதிலேயே ஸஹாயம் நிமிஷத்துக்கு நிமிஷம் செய்கிறாய். இதற்கு ஆதாரமான நூல், கட்டுரை ஏதேனும் வேண்டுமென எண்ணுகிறேனா, உடனே ஒரு வை, பா, ஸுவின் வழி அதை வையம் பாலிக்கும் ஸுதர்மனான நீ கிட்டச் செய்திருக்கிறாய்; எங்கோ உள்ள பேராசிரியர் ராஜராம் அவர்களை உச்சி வெய்யிலில் உந்தித் தள்ளி ஒரு அந்நிய தேசப் பதிப்பைக் கொண்டு வந்து கொடுக்கச் செய்கிறாய்!
தாயே, இதோ இந்தப் பேனாவை வெண்ணெயாக ஓட்டுவது உன் வெண்ணெய் இதயம். சென்ற வாரம் வரை இது செய்த சண்டித்தனம் கொஞ்சமில்லை. இந்தப் பேனா தான் என்றில்லை; எந்தப் பேனாவும் இப்படியேதான் என்னிடம் ஒழுங்காகக் குடித்தனம் செய்ததில்லை. இம்மாதிரியே இருபதாண்டுகளாக நானும் ‘உழுது‘ வருகிறேன். “எத்தனையோ அருள்கள் செய்யும் ஸ்வாமி எனக்குப் பேனா ராசியை மட்டும் தரவில்லை” என்று போன வாரம்தான் ஓரிரவு கடையைக் கட்டும்போது குறைப்பட்டுக் கொண்டேன். மறுநாள் காலை அவ்வளவாக வழுவழுப்புப் போதாத காகிதத்தில் பேனாவை பயந்து கொண்டே நாட்டினால் அது மழமழவென்று ஓடுகிறது! இந்த க்ஷணம் வரை ஓர் உதறு உதறாமல் எழுதி வருகிறேன்!
நான் குறித்துக் கொண்ட விஷயங்களில் இதை எழுதினால் ஸ்வாமி உகப்பாரா, மாட்டாரா என்று நினைத்தால் சரியாக அந்தப் பக்கத்திலேயே உன் விபூதிப் பொட்டலம் எங்கிருந்தோ வந்து வீற்றிருக்கிறது. திரு உளச் சம்மதமே எனத் தெளிந்து எழுதுகிறேன்.
இந்நூல் விஷயமாக நீ செய்த இன்னோர் அருளைச் சொல்ல வேண்டும்.37 அச்சு வேலை முடிந்த கடைசி நிமிஷத்தில் (1981 நவம்பரில்) இதற்கான அட்டைப் படம் கிட்டச் செய்திருக்கிறாய். அது உன் ஊஞ்சலுற்சவச் சித்ரமாயிருப்பதுதான் எத்தனை பொருத்தம்? லீலா நாடக ஸாயி (லாலி ராஸ விலோலி) என்று உன் உய்யாலோத் ஸவத்துக்கெனவே என்னை முன்பு பாடலியற்ற வைத்த நீ, இப்போது அதே தலைப்பில் நூல் வரும் போதும் அந்த உன் ஜூலாக் கோலமே முன்னட்டையில் திகழத் திருவுளம் பற்றியிருக்கிறாய். இத்தனை லீலை வண்ணங்களும் உன் சாந்த வெண்மையில் பிறந்தவைதான் எனக் காட்ட வெள்ளையங்கி பூண்டு விளங்குகிறாய்!
38முதலிரு பதிப்புக்களின் அட்டைப்படம் குறிப்பிடப்படுகிறது.
***
இகத்துக்கும் பரத்துக்கும் நீ எண்ணில செய்கிறாய் அப்பா! கர்மாவுக்காக ஆட்டிப் படைக்கும் போதே கருணா நாடகத்தை அதிகமாகக் காட்டி வருகிறாய். முதல் தேதியானால் சம்பளம் என்றில்லாதபோதே ஒரு குறைவில்லாமல் காலக்ஷேபம் நடக்கச் செய்கிற ஒன்று போதாதோ? அவ்வப்போது கொஞ்சம் இற்று விழுகிற மாதிரி விளையாட்டுப் பார்க்கிறாய். அப்புறம் நான் தாங்கிக் கொண்டாலும் உன் தயா மனம், தாயார் மனம் தாங்காமல் ஒரு பதிப்பாளரை எதிர்பாராமல் அட்வான்ஸ் ராயல்டி கொடுக்க வைக்கிறாய்.
இன்னொரு பதிப்பாளரிடம் மனோபேதம் உண்டாகாமல் நான் மௌனமாயிருக்க எண்ணினாலும் நீயே வழக்குப் போடச் சொல்லி உசுப்புகிறாய். மனமில்லாமலே அதைச் செய்கிறேன். உன் முடிவான ஒப்புதலைப் பெற அடுத்த சனி இரவு பெங்களூர் புறப்பட இருக்கிறேன். இப்படி ஸ்வாமி வழக்கு, வியாஜ்யம் என்று இழுத்து விட்டாரே!’ என்று தாயார் வியாகுலப்படுகிறாள். நானா சொல்கிறேன் என்று எனக்கே தெரியாமல், “இல்லை, கோர்ட்டுக்குப் போகாமல் ஸௌஜன்யமாக முடித்து வைத்ததற்காக ஸ்வாமிக்கு நன்றி சொல்லவே இந்தப் பயணம்; நீங்களே பாருங்கள்” என்று உறுதியாகச் சொல்கிறேன்.
அடுத்து, இன்னதொகை இன்னதினம் பதிப்பகத்திடமிருந்து வருகிறது என்று நீ ஸ்பஷ்டமாக உன்னுடைய பிரத்யேகத் ‘தந்தி‘ மூலம் தெரிவிக்கிறாய்.
அப்படியே ‘செக்‘ வருகிறது! செக்கோடு வரும் கடிதம் அதைவிடப் பெரிய நிதியமாயிருக்கிறது.
இப்படி எழுதியிருக்கிறார் பதிப்பாளர்: “எனக்குப் புதுமையான ஒரு அனுபவம் ஏற்பட்டது. இரவு ஸ்வாமி அவர்கள் என்னை எழுப்பி, ‘இரண்டு குழந்தைகளும் சண்டை போட்டுக்கொள்கிறீர்களே!’ என்று சொல்வது போலிருந்தது. திடுக்கிட்டு விழித்துக் கொண்டேன். பின்னர் உணர்ச்சி மயமான என்னால் தூங்கவே முடியவில்லை.”
‘இரண்டு குழந்தைகளும்‘ என்று நீ சொன்னது எனக்கும் பாடம் புகட்டுகிறது. ‘நம்மிடம்தான் நியாயமிருக்கிறது; அதனால் நமக்கே அவர் தாயாக அருள்வார்‘ என்று நான் நினைக்க நீயோ மாற்றுத் தரப்பையும் உன் குழந்தையாகவே கொண்டிருக்கிறாய் என அறிந்ததில், அந்தத் குழந்தையிடமும் ஸஹோதர பாவம் கொள்கிறேன்.
சனியன்று மேற்கொண்ட பெங்களூர்ப் பயணம் மெய்யாலுமே நன்றி நவிலலுக்காக ஆகிறது. ஆனாலும் பிருந்தாவனத்தில் ஞாயிறு மாலை உன்னைக் கண்டபோது நன்றி கூறவும் நான் மறந்திருக்க, நீயே கிட்டத்தில் வந்து, “Book ஸமாசாரம் எப்படி?” என்று நினைவூட்டினாய்.
என் எழுத்துப் பிழைப்பில் நீ இப்படி உதவுவது மட்டுந்தானா? எதையும் ‘பிஸினெஸ் – லைக்‘காகவே செய்கிற இக்காலத்தில், அதையும்கூடப் பொறுப்பில்லாமல் செய்கிற இந்த நாளில், என்னோடு ஸம்பந்தப்பட்ட பதிப்பாளர், பத்திரிகையாளர், அச்சுத்தாள் சோதிப்பாளர் இவர்கள் மனிதாபிமானத்தையும் கூட்டி, உடனுக்குடன் என் காரியங்களைக் கவனிக்க வைத்திருக்கிறாய். இது ஒரு வரப் பிரஸாதம்.
‘பால்யூ‘ போலப் பொறுப்புணர்ச்சியும், உன்னிடம் உள்ளார்ந்த ஈடுபாடும், என்னிடம் அந்தரங்க விச்வாஸமும் கொண்டவர்களை அனுப்பி வைத்து என் அலுவல் சுமையை எப்படிக் குறைக்கிறாயப்பா!
எழுத்து வேலையில் மட்டுமின்றி, மற்றவற்றிலும் காரியத்திறன் போதாத இந்த அபலனுக்காக எத்தனை நல்லன்பர்களை உதவிக்கு அனுப்பியிருக்கிறாய்? ஒரு airbag நான் பஸ் ஸ்டாப்புக்குத் தூக்கிச் சென்றால்கூட உனக்குப் பொறுப்பதில்லை. ஒரு பார்த்தஸாரதியை அனுப்பி, அவர் இங்கே வீட்டிலிருந்து பஸ் ஸ்டாப்புக்குத் தூக்கி வருவது மட்டுமின்றி, தாம் போகவேண்டிய இடத்துக்கு நேரே போகாமல், நான் பஸ்ஸிலிருந்து இறங்கிப் போய்ச் சேரும் இடம்வரை சுமை தூக்கி வந்துவிட்டுப் பிறகே தமது அலுவலுக்குச் செல்லுமாறு செய்கிறாய்.
பயண அஸௌகர்யத்தையும், பணச் செலவையும், உடல் நிலையையும் கருதி அநேக ஸமயங்களில் நான் புட்டபர்த்தி, ஒயிட்ஃபீல்ட் பிரயாணங்களைத் தவிர்க்கப் பார்த்து, ‘ஸ்வாமி ஸர்வ வியாபி‘ என்று ‘ஞானம்‘ கொண்டாடிக் கொண்டாலும், அவதாரனாக வந்துள்ள அரும் ஜீவனின் தர்சன, ஸ்பர்சன, ஸம்பாஷணா பாக்யங்களை எனக்குத் தந்தே தீர்வது என நீ உளம்கொண்டு ஒரு ஸதாசிவமவர்களையோ, ஹெச். ராமமூர்த்தி யவர்களையோ, டி.ஆர். ரமணியவர்களையோ தூண்டிவிட்டு, அவருடன் ஸகல ஸௌகர்யங்களுடன் நான் உன்னிடம் வர அருள்கிறாயே, அதை என் சொல்ல?
உன் கிருபையின் கதிர்களேயாக எத்தனை நன் மக்களின் இதய நேசத்தை ஈட்டி வைத்திருக்கிறாய்? “எனதல்லாத பல இல்லங்களில் எனக்காக நீ மணை போட்டு வைத்திருக்கிறாய்‘ என்று தாகூர் பாடியது மெய்யாயிருக்கிறது. ஓர் அன்பு அன்னை ஸுந்தரம்மாள் சாக்லேட் காம்ப்ளானும் கையுமாக என்னை வரவேற்றால், ஒரு பிரிய ஸஹோதரி தங்கம்மாவின் வெந்தயப் பொடியே சாக்லேட்டாக இனிக்கிறது.
பிரேம ஸமுத்ரமாம் உன் அலைகளாகவேயல்லவா மோஹனராமன், பாலசந்திரன் ஆகியோர் என் தேவைகள் உணர்ந்து ஸேவை செய்கிறார்கள்?
பெட்ரோல் விலை என்ன ‘ஹைக்‘ ஆனால் என்ன? ரமேஷ்ஜி நிர்மலா என்ற நிர்மல தம்பதியரின் கார்தான் எனக்கென்றே காத்திருக்கிறதே!
உன் பிரேம விருக்ஷத்தின் கனிகளாக எனக்குக்கிட்டியுள்ள எல்லார் பெயரையும் சொன்னால் மிக விரியும். ஆயினும் என் விஷயமென்பதற்கா வருக்கோ நான் ஸ்துதி பாடுவதாயின்றி, இன்றைய ஸ்வய நல உலகிலும் இத்தனை பேர் இத்தனை தூய அன்பினைப் பொழிவதென்பது உன் பிரபாவ விசேஷமே என்பதற்காகத்தான் சிலர் பெயரைச் சொன்னேன். பெயர் சொல்லப்பட்டவர்கள், சொல்லப்படாதவர்கள் ஆகிய யாவரையும் அடக்கிக்கொண்டு, அப்படியும் வாமனமாகவே உள்ள உனக்கு வந்தனம் செய்து நிறுத்திக்கொள்கிறேன்.
இரண்டாவது கும்பிடும் போடுகிறேன் இப்படி வியத்தகு வண்ணம் ஒரு பிரேமைப் பட்டாளத்தைத் தந்துள்ள நீயே மாற்றாக ஓரானொரு மாற்றுப் போக்குள்ளவர்களைத் தந்துள்ள போதிலும், அவர்களையும் உன் ஸங்கல்பத்தின் கருவிகளாகவே நான் காணச் செய்திருப்பதற்காக! இன்னாதன சில நடக்கும்போதுகூட, அவையும் கர்மாவைத் தீர்க்க என்றே உன் இனிய சித்தத்தால் இயக்குவிக்கப்படுவனதாம் என்று தெளிவு தந்திருப்பதற்காக!39
401979 ஜூனில் எழுதி முடித்த நூலின் இறுதி அச்சுத் தாள்களை 1981 நவம்பரில் இதோ சோதிக்கையில் மூன்றாவது கும்பிடு ஒன்றும் போட வைத்திருக்கிறாய். இங்கே ப்ரேமைப் பட்டாளமாகச் சொன்னவர்களில் சிலரையும் இன்று மாற்றார் ஆக்கியிருக்கிறாய். ஆனால் அதிசயம், இதுவும் உன் கருணை விளையாடலே என்று களித்து ரஸிக்கவும் செய்திருக்கிறாய். அதற்கே மூன்றாம் கும்பிடு. ஒரு வேளை இந்த மாற்றமும் மாறி மீண்டும் அன்புறவை ஏற்படுத்துவாயோ என்பதற்காக அட்வான்ஸாக ஒரு நாலாவது நமஸ்காரமும் செய்து விடுகிறேன்.
உன் இனிய சித்தம் நைஸான அஸ்காத் துகளாக மட்டும்தான் இருக்க வேண்டுமா என்ன? கரடு முரடாக உதட்டையும் நாக்கையும் கீறுகின்ற கற்கண்டாக அது இருப்பதும் உண்டுதான். அப்போதும் உள்ளுக்குள்ளே அதன் ருசி இனிப்பாகத்தான் இருக்கும்.
***
கற்கண்டு! ஸ்வாமிக்கும் எனக்கும் ஸ்பெஷலாக ஒரு கற்கண்டுத் தொடர்பு உண்டு. எனவே, வரவேற்பில் காட்டும் கற்கண்டை விடைகொள்ளும்போதும் வாசகருக்கு நீட்டி முடிக்கிறேன்.
அநல ஆண்டு, மாசி, வளர்பிறைப் பிரதோஷம், (3.31.977). அன்று குருவாரமும் சேர்ந்திருந்தது. அந்தி சாய்வதற்கு முந்திய முஹுர்த்தம் அதாவது, ஸரியான ப்ரதோஷ காலம். இடம்: ஒயிட்ஃபீல்ட் பிருந்தாவனம்.
அருகருகாய் அலை வீசும் அளகமும்
கருகருவென ஒளிர் குறுகுறு விழியும்
சொருகும் பார்வையும் சோபித இமையும்
மருவும் மறுவும், மலர் நாஸிகையும்
தளதள கன்னமும் தளுக்கு நகையும்
பளபள அங்கியும் பலுக்கு மொழியும்
குறும்பு அரும்பு குங்கும வாயும்
இறும்பூ தளிக்கும் சைகையும் செங்கையும்
பலபல பாவம் புலர்த்து நுண்விரலும்
சிலு சிலு நடையும் சிறுத்த பின்னழகும்
ஆக ப்ரதோஷத்திலே தோஷம் தீர்த்து ஸந்தோஷம் ஈந்து மங்கள சிவனாக உலவி வருகிறார் நம் விரிசடையர்.
“ஸ்வாமி” நூல் முதற்பிரதியைத் தட்டத்தில் ஏந்தி எழுகிறேன். நாலடிக்கு அப்பாலிருந்தே பிடரி சிலிர்த்த சிம்மமாக, ஆயினும் அன்பின் உருவாக, துள்ளிவந்து பிரதியை எடுத்துக்கொண்டு இதயமார அங்கீகரிக்கிறார். தட்டத்திலிருந்து ஆப்பிள்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு, “ஒண்ணு போறும்; ராத்ரி ஸாப்டறேன்” என்ற எதிர்பாராத அதிருஷ்ட வாசகத்தை உதிர்த்து, அப்பழத்தை உடன்வரும் பாரிஷதரிடம் போடுகிறார். திருநீறு ஸ்ருஷ்டித்துத் தருகிறார். மாலை போட அழகாகத் திருமுகத்தைக் காட்டிக்கொண்டு நிற்கிறார். ஆனாலும் சுருள் முடியில் ஹாரத்தின் ஜரிகை சிக்கிக்கொள்ளுமோ என்று நான் சற்று ‘நெர்வெஸ்‘ ஆகிவிட, “வீட்டிலே படத்துக்குப் போடு; போட்டுக்கறேன்” என்று இன்னோர் எதிர்பாரா வர மொழி நவில்கிறார். எனக்கும் உடன்வந்த தம்பி துரைஸ்வாமிக்கும் ஆசை தீரப் பாத நமஸ்காரம் தந்து நகர்கிறார். நகர்கையில் வெகு நெருக்கமே வந்து, கருணையமுதாகக் கனிந்து கொண்டு, ஒட்டுறவோடு தமது வலக்கையால் என் வலக்கையைப் பிடித்து மெல்ல அழுத்திவிட்டுப் போகிறார்.
கைக்குள் கனக்கிறது, கன பரிமாண முக்கோண உருவிலுள்ள ஒரு கற்கண்டு!
இக் கற்கண்டுப் படைப்பில் வழக்கமாக அவரது ஸ்ருஷ்டிகளின்போது செய்யும் கைச் சுழற்சியோ, வேறு சைகையோ இல்லை. யாருக்கும் தெரியாமல், எனக்கே முதலில் புரியாமல், கை பற்றிய கண காலத்தில் கற்கண்டு அமெரிக்கையாக என் கைக்குள் வந்து அமர்ந்துவிட்டது! கரும்பு உள்ளந்தான் உள்ளங்கை வழியே “கனி பலித்த ஆனந்தக் கட்டி”யாக இறுகி வந்திருக்கிறது!
ஊருக்குத் திரும்பிய பின் அந்தக் கற்கண்டைப் பொடித்துச் சீனியுடன் சேர்த்து அன்பர் பலருக்குக் கொடுத்தேன்.
பிற்பாடு “கண் கண்ட தெய்வம்” என்று சங்கரா பரணத்தில் நான் ஒரு கீர்த்தனம் செய்துகொண்டிருந்த போது, அநுபல்லவியில், “கற்கண்டு பர்வதமாய் கனிந்துருகும் கவின் சரிதன்” என்ற பதங்கள் பீறிக்கொண்டு வந்தன.
சென்ற தை மாதம் (1979 பிப்ரவரி தொடக்கம்). என்னோடு அதே பிருந்தாவனத்துக்கு வந்தவர்களில் ஸாயியின் தாய்த்துவத்தால் எனக்குக் கிடைத்துள்ள சோதரியருள் ஒருத்தியான லலிதாவும் இருந்தாள். இவளைக் கடைசி மட்டும் அழவைத்து வேடிக்கை பார்ப்பது நம் ஆண்டை வழக்கம். இது தெரிந்தும் ஏனோ நான் பிடிவாதமாக இவளிடம் ஸாயித் தம்பியருள் ஒருவரான மணியின் திருமண அழைப்பிதழைக் கொடுத்து பகவானுக்கு ஸமர்ப்பிக்கச் சொன்னேன்.
லல்லி கற்கண்டுத் தட்டில் கல்யாணப் பத்திரிகையை வைத்துக்கொண்டு ஸ்வாமியை வழிமேல் விழி வைத்து எதிர்பார்த்திருந்தாள். நிறையக் காலதாமதம் செய்துவிட்டே ராஜாதிராஜர் தர்சனத்துக்கு வந்தார். லல்லியை அழவைக்கும் வழக்கப்படியே அந்தப் பக்கம் மட்டும் போகாமல் பாக்கி எல்லாவிடமும் சுற்றிவிட்டு, மையக் கொட்டகையில் பஜனை கேட்க அமர்ந்துவிட்டார். இனி லல்லி அவரைப் பிடிக்கும் வாய்ப்பில்லை. ஏனெனில் பஜன் முடிந்ததும் அவர் நேரே தம் மாளிகைக்குச் சென்றுவிடுவார். அப்போது தொண்டர்கள் அவருக்கு மட்டும் பாதைவிட்டு, இருபுறமும் கை கோத்துக் கொண்டு சுவர்போல நின்றுவிடுவார்கள். யாரும் அணுக முடியாது.
பஜன் முடித்து பகவான் எழுந்திருந்தார். ஆச்சரியம்! வழக்கம்போல் அன்று ஸேவக்குகள் கைகோத்து நிற்க வேண்டாமென்று ஜாடை காட்டிவிட்டு, நடைபாதையில் சென்றார். லலிதா இருந்த இடத்தருகேயும் சென்றார். தட்டமும் கையுமாக லல்லி ஆவலோடு எழுந்து நிற்க, ஏமாற்றுக்காரர் அவளுக்கு நாலு பேர் முந்தியே எதிர்சாரிக்குத் திரும்பி விட்டார்! போயே போச்சு வாய்ப்பு என்று அவள் அடியோடு நம்பிக்கை இழந்த சமயத்தில், எதிர்சாரியில் நாலு அடியார்களை ஒட்டி நடந்த ஸ்வாமி பாயும் புலியாக 180 டிகிரி ஒரு திரும்புத் திரும்பினார். லல்லிக்கு நே…ரே நின்றார். அவளை ஆ…ழ நோக்கினார்.
அது மட்டுமில்லை. அவள் நீட்டிய அழைப்பிதழ் தட்டைத் தொட்டு, அதிலிருந்து ஒரு கற்கண்டை எடுத்துக் கொள்ளவும் செய்தார்!
ஊருக்குத் திரும்பிய பின் மீதக் கற்கண்டுகளைப் பல பக்தர்களுக்கு விநியோகித்தோம்.
அதற்கடுத்தமுறை (1979 மே) நான் பிருந்தாவனம் சென்றபோது லல்லி, “ஸ்வாமியிடமிருந்து கல்கண்டுப் பிரஸாதம் வாங்கிண்டு வாங்கோ, அண்ணா” என்றாள்.
“ஆமாம், ஆமாம், உனக்குக் கல்கண்டு கொடுக்கிறதுதான் ஸ்வாமிக்கு வேலை” என்றேன் கேலியாக.
அம்முறை ஸ்வாமி பெங்களூரில் அநேக குருமார்களை ஒன்று, அவருக்கு ஸம்பந்தமில்லாதவர்களை, அல்லது அவரைக் கண்டிப்பவர்களை தரிசனம் செய்யும்படிச் செய்தது தனி விஷயம். இங்கு சொல்ல வேண்டுவது: குருவாரமான அன்று எங்கள் கோஷ்டியைப் பார்த்துப் பேசுவதாக முதல் நாள் கூறிய ஸ்வாமி ஏமாற்றிவிட்டுப் பம்பாய்க்கு பறந்து விட்டார்!
அன்று முழுவதும் பல இடங்கள் அலைந்துவிட்டு, முடிவாக இரவு ரெயில் ஏறுமுன் பெங்களூர் தியாகராஜ நகரத்தில் உள்ள ஷீர்டி பாபாவின் ஆலயத்துக்குச் சென்றேன். ஆன்மாவின் அலைப்பு அடங்க அந்த ஆலயம் ஓர் அற்புத ஆசிரயம். ஷீர்டி பகவான் வெள்ளை வெளேரென்று பெரிய சலவைக் கல் மூர்த்தியாக நம் அழுக்கு மனத்தைச் சலவை செய்து கொண்டு அமர்ந்திருக்கிறார். கோயிலெடுத்த பூஜ்ய ஸ்ரீ ஸாயிபாதானந்த ஸ்வாமிஜியின் தூய பக்தியே ஆலயமாக, அருளாளரின் மூர்த்தியாக உருவெடுத்திருக்கிறது எனலாம்.
அந்தப் பெரியாரை வணங்கினேன். அவர் அந்த ஜீவன் கொழிக்கும் சிலா விக்கிரஹத்தை கையால் தொட்டுக் கும்பிட்டுக் செல்லுமாறு மனமாரக் கூறினார்.
‘ஓஹோ! குருவார மாலையில் இங்கே ஸ்வாமி பாத நமஸ்கார பாக்யம் தருகிறாரா?’ என வியந்தேன்.
கும்பிட்டு வெளியேறுகையில் ஸ்வாமிஜியைத் தாண்டிவிட்டேன். சட்டென்று அவர் என்னை மீண்டும் அழைத்தார். கை நிறையக் கற்கண்டை அள்ளிப் போட்டார்! அதோடல்லாமல், “ஊரிலே கொண்டு போய்க் கொடுங்கள்” என்றார்!
ஸத்ய ஸாயி மூர்த்தத்தில் பிடிப்பு ஏற்படாமல் பூர்வசரீரத்திடமே அபூர்வ ஈடுபாடு கொண்ட அந்தப் பெரியாரின் மூலம் ஸ்வாமி லல்லியின் கற்கண்டு வேண்டுகோளை ஈடேற்றியது கூடுதலாகவே தித்திக்கிறது, இல்லை?
ஒரு மாதத்துக்குப் பின் ஒரு நாள் மாலை எனக்குச் சரியான பல் வலி ஆரம்பித்தது. “ஸ்வாமீ!” என்று தன்னால் பிரார்த்திக்கப் போன மனத்தை அடக்கினேன். ‘பல்வலியானால் என்ன? டாக்டரிடம் போனால் தீருகிறது. இதென்ன கான்ஸரா, ஹார்ட் அட்டாக்கா? ஸ்வாமி ஸம்மர் கோர்ஸில் எத்தனை அலுவலில் ஈடுபட்டிருப்பார்? இப்போது இந்த அற்பகாரியத்துக்காக அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது‘ என்று கட்டுப்படுத்திக் கொண்டேன்.
ஸந்தியாவந்தனத்துக்கு முன் வழக்கம்போல் ஸ்வாமி விபூதி இட்டுக்கொள்ள எடுத்தேன். பாட்டிலில் அடியில் வெகு சிறிதே திருநீறு இருந்தது. விரல் நுனியில் சில பொடிகளே வந்தன. அதை நெற்றியில் ஒற்றிக்கொண்டு, மீதம் இருந்திருக்கக்கூடிய ஓரிரு துகளை நாக்கில் தூவிக் கொண்டேன்.
என்ன அதிசயம்! நாக்கை விபூதிப் பொடி தொட்ட மாத்திரத்தில் கற்கண்டாக உருமாறிற்று!
பல் வலியின் போது வாயில் போட்டுக் கொள்ளவே கூடாது என்று டாக்டர் கூறியிருந்த கற்கண்டைக் கொண்டே பகவான் சொஸ்தப்படுத்தத் திருவுளம் கொண்டு விட்டார் என நன்றாகப் புரிந்தது. மூளைக் கான்ஸர் உற்ற ரணதீர் தூங்கக்கூடாது என்று வைத்தியர்கள் சொல்ல, அவனை உறங்க வைத்தே குணப்படுத்தியவராயிற்றே!
‘அப்பா! உன்னை ஆயிரம் அலுவலிடை தொந்தரவு செய்யலாமாவென, ஆயிரம் பக்க “ஸ்வாமி” நூல் நீட்டி முழக்கி எழுதிய நான் நினைத்தது எத்தனை அபசாரம்? அத்தனை பேருக்குள்ளும் அந்தர்யாமியாகக் கோடிக் கோடிக் காரியங்களை அனவரதமும் நிர்வகிக்கும் நீ அதனால் எள்ளளவேனும் பாதிக்கப்படுவதுண்டா? தினையெனும் சலிப்புறுவதோ, சலனமுறுவதோ உண்டா?’
பல்வலி பெருமளவு குறைந்தது. ஞாயிறு மாலை நடக்கும் பஜனுக்குச் சென்று வந்தேன். அம்மாவிடம் கற்கண்டைப் பற்றிச் சொல்ல அவளும் அதிசயித்தாள்.
ஆனால் ஐயத்தையும் கிளப்பிவிட்டாள் விபூதிப் புட்டியிலேயே கற்கண்டு இருந்திருக்குமோ என்று. “அதில் இருப்பதே சிட்டிகை விபூதிதான். அதற்குள் கல்கண்டு இருந்திருப்பதற்கில்லை” என்றும் கூடவே சொன்னாள். விரல் நுனியிலேயே ஒட்டி வந்த அத்தனூண்டு பொடிகளில் கற்கண்டு இல்லவே இல்லை என்று தெரிந்தாலும் பொல்லா மனத்தில் சிறிது சந்தேகம் ஏற்படத்தான் செய்தது.
மறுநாள் காலை. பாட்டிலின் அடிக்கும் அடியிலிருந்து மேலும் சில விபூதிப் பொடிகளை விரலில் ஒற்றி எடுத்தேன். நிச்சயமாக அதில் கற்கண்டு இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டேன். நெற்றியில் சிறிதைத் தீற்றிக் கொண்டு ஓரிரு துகள் வாயிலிட்டுக் கொண்டேன்.
மறுபடியும் வாய்க்குள் கற்கண்டு!
அன்று ஸோம வார மௌன விரதமானதால் சொடக்குப் போட்டு அம்மாவைக் கூப்பிட்டு நாக்கை நீட்டிக் காட்டினேன். அதிசயமுற்றாள். இனி சந்தேகத்துக்கு இடமில்லை.
அதோடு விடவில்லை ஸ்வாமி. அன்று மாலையும், மறுதினம் இரண்டு போதும்கூட வேளைக்கொரு கற்கண்டாக விபூதியையே மாற்றுருவாக்கினார். ஒரே வேளையில் பிராணாபத்தான கொடு நோய்களைத் தீர்க்கிறவர், நான் அவருக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று நினைத்ததற்காகவே சாதாரணப் பல் உபாதைக்காக ஐந்து வேளை தம் கவனம் நீங்காதிருப்பதைக் காட்டினார்! அதோடு பூர்ணமாகச் சரிசெய்தார். அதுவும் தமக்கே உரிய லீலா அம்சத்தோடு மருத்துவ விதிக்கு நேர்மாறாக, பல்லுபாதைக்குச் சற்றும் உகாத கற்கண்டாலேயே தீர்த்திருக்கிறார்.
கற்கண்டோ? தேனோ? கனி ரசமோ? பாலோ? என்
சொற்(கு) அண்டா (து); ஏதென நான் சொல்லுவேன்?
என்று தாயுமானவரோடு நாமும் வியக்க வேண்டியதுதான் விகிர்தனின் வியனருளை!
ஸாயி ஸஹோதரர்களே! இந்தக் கற்கண்டோடு விடை பெறுவோம்.
ஐயன் மஹிமைக்கு முடிவேயில்லைதான். இன்னம் எத்தனையோ கற்கண்டுக் கட்டிகள் அந்த மலையிலிருந்து திரட்டி வைத்திருக்கிறேன். மானுடமும் தெய்விகமும் சேர்ந்தும், மாறி மாறியும் அவனிடம் மிளிரும் மாண்பு பற்றி; மானுடப் பண்பறிந்து மக்களிடம் அவன் பழகும் மனம்கவர் மாயம் பற்றி; ஸத்குருவாக உபதேசிப்பது பற்றி; தீன ரக்ஷகனாக ஏழையருக்கும் எளியருக்கும் தானாகவும் தன் தாஸரைக் கொண்டும் அவன் புரியும் தொண்டு பற்றி; எப்போது, யாருக்கு, எதை, எப்படிச் செய்வது என்று கர்மாவையும் கருணையையும் இசைத்து அவன் செய்யும் விநோதங்களைப் பற்றி; பகவான் பெருமைக்குச் சமமான பாகவதப் பெருமைக்குச் சான்றாக இன்றும் உள்ள அடியார் மணிகளைப் பற்றி; மாணவ மணிகள் மலர்த்தும் ஸத்ய யுகம் பற்றி எல்லாம் இன்னம் அநேக முத்துக்களை ஸாயி ஸமுத்திரம் என்னிடம் சரித்திருக்கிறது. ஆனால் அவற்றைக் கூறப் புகுந்தால் புத்தகம் பெரிதாகிவிடும். ஐயனது அடியாரில் பலர் வாங்கிப் படிக்க முடியாதபடி விலை வைக்குமளவுக்குப் பெரிதாகிவிடும். அது அவனுக்கு ஒப்புதலல்ல. எனவே பிறகு பார்த்துக்கொள்வோம்.
கிடைத்த மட்டில் ஸந்தோஷமாக விடை கொள்வோம். அவன் அருள் கூட்டி வைக்க மீண்டும் சந்திக்கலாம், ரொம்ப ஸந்தோஷமாக!
***
ஸ்வாமி! உன் லீலா நாடகத்தில் இதை எழுதும் பரம புண்ணியத்தைத் தந்தாய். என் கைக்குட்டைக்கு அடங்காது உன் விபூதி; என் குட்டை மனத்துக்கு அடங்காது உன் லீலா விபூதி. ஏட்டுக்கு அடங்கா உன் ஏற்றத்தை ஏதோ கொஞ்சம் சோதர அடியருக்குக் கொடுக்க வைத்தாய். இதில் எழுதி முடியாத பக்தியை உன் பதத்தில் அர்ப்பணிக்கிறேன், என் பக்தி புல்லளவு; உன் கிருபை ஆலவிருக்ஷம். முன்பு இதற்கு வருந்தினேன். இன்று இதுவும் ரொம்ப ஸந்தோஷம்தான். நான் இப்படியிருந்தும் நீ அப்படியிருப்பதால்தானே உன் பெருமையைத் தெரிந்து கொள்கிறேன்? அதனால் ஸந்தோஷம்.
“போய் வருகிறேன், ஸ்வாமி!” என்று சொன்னால் ரொம்ப ஸந்தோஷம்” என்று சொல்வது உன் வழக்கம். உன் லீலைக் குறும்பு நீங்காமல், “போய்ச் சேருகிறாயே, அதனால் வந்தோஷப்படுகிறேன்” என்று அர்த்தம் த்வனிப்பது போல அந்த வார்த்தைகளைச் சொல்வாய்.
ஆனால் எங்களுக்குத் தெரியாதா? உன்னைவிட்டு நாங்கள் போகப் பார்த்தாலும் நீ எங்களை விடவேமாட்டாய், விடவே முடியாது என்று?
அதனால் உன் குறும்பினால் குத்தப்படாமல் சிரித்துக் கொண்டே விடை கொள்வோம்.
உன்னை ஈச்வரனாகப் பெற்ற எங்களுக்குச் சிரித்து ஸந்தோஷிப்பதன்றி என்ன செய்யக் கிடக்கிறது? எங்களைக் குழந்தைகளாகப் பெற்ற நீயே எப்போதும் சிரித்த முகத்தோடு வாய்க்கு வாய் “ஸந்தோஷம்”, “ரொம்ப ஸந்தோஷம்” என்னும்போது, நாங்களும் உச்சியோடு உள்ளங்கால் நிரம்பிச் சொல்கிறோம்:
“ரொம்ப ரொம்ப ரொம்ப ஸந்தோஷம்!”
முற்றும்