சத்ய சாய் பாபா – 3

3. “அம்புலி பாபா வா, வா!”

குரு பூர்ணிமையில் நனைந்து வருகிறோம்.

பூர்ணசந்திரனின் வெள்ளிப் பொழிவில் முழுகியவாறு, ‘வெள்ளிப் பெயர் கொண்ட வெள்ளையர் ஸில்வர் கடற்கரையில் உலவிக் கொண்டிருந்தார், மனையாளோடு.

நம் ஊர்க் கடற்கரை அல்ல. ஹவாய் தேசத்தில் பஸிஃபிக் பீச்சில் உலவுகிறார்கள் வெஞ்சுராவைச் சேர்ந்த இத் தம்பதி.

அண்மையில் முடித்து வந்த இந்தியப் பயணம் பற்றியும் அதன் நடுநாயகமான ஸ்வாமி ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா குறித்தும் பேசியபடி நடக்கும் ஸில்வர் அகஸ்மாத்தாக ஆகாயத்தே தெரியும் சந்திரனைப் பார்க்கிறார்.

குளுகுளுவென்று, குறுகுறுவென்று ஏதோ ஒன்று பாய்கிறது அவருக்குள்ளே!

அது நிலவு அல்ல.

பின்ன என்ன?

நிலவுலகுக்கெல்லாம் நலம் பாலிக்கும் புட்ட பர்த்தீசன் பூர்ண மதியத்துக்குள்ளிருந்து பொல்லெனப் பொலிந்து, ஜில்லெனக் குளிர்ந்து ஸில்வரை நோக்குகிறார்!

நிலவைக் கண்டவர் நிலைக் குத்திட்டார்.

சற்றுத் தெளிந்தவுடன் மனைவியிடம் சொன்னார். “ஹனி! பாபா தரிசனம் தருகிறார்! என்னால் நனவுதானா என்று நம்ப முடியவில்லை.”

எங்கே, எங்கே?” என்றாள் ஹனி. சந்திரனைச் சுட்டிக் காட்டினார் ஸில்வர்.

ஹனி பார்த்தாள்.

அவளுக்கும்ஹனியாக தரிசனம் தந்தார் தேமதுரத்தேவன்.

மை காட்!” என்று பிரமித்தாள் ஹனி.

அன்றோடு விடவில்லை இந்த விந்தையானஹனிமூன்!’ அன்றாடக் காட்சி ஆயிற்று அந்த அதிருஷ்டத் தம்பதிக்கு.

தினந்தினமும் சந்திரனில் சந்தனமாகத் தெரிவார் ஸாயி பகவான்.

மதியம் தேய்வதையும் வளர்வதையும் ஒட்டி அவர் வடிவமும் வளரும், தேயும். கூத்துதான், லீலா நாடகந்தான்! வளர்ச்சியும் தேய்வும் இல்லாதவர் என்றே மறைகளால் போற்றப்படுபவர் இவர்தான்!

சில நாட்களில் காலை உதய காலத்தில் பூர்ண சந்திரன் அடி வானத்தில் தெரியும். அப்போது நேருக்கு நேர் தமது தெய்விக மாண்புடன் ஸ்வாமி அதனுள் விளங்குவது அத் தம்பதியருக்கு ஓர் அலாதி தரிசனமாக இருக்கும்.

நாளாவட்டத்தில் அற்புதமே ஸஹஜமாகி விட்டது. பரபரப்பில்லாமல் இவர்கள் பனிமதியத்துக்குள் இனியரைத் தரிசனம் செய்வார்கள். உடன் யாரேனும் பாபா பக்தர் இருந்தால் அவருக்கும் சந்திரனில் தெரியும் ஸுந்தரனைப் பற்றிப் பரபரப்பில்லாமலே சொல்வார்கள். “என்ன, என்ன, எங்கே, எங்கே?” என்று அவர்கள் வியந்து கேட்டால், இப்படி வியக்க என்ன இருக்கிறது என்று இவர்கள் ஆச்சரியப்படுவார்களாம். அத்தனை ஸஹஜமாகி விட்டது!

இவர்கள் கூறியபின் மற்ற பக்தர்களும் வெள்ளி மதியில் தெள்ளத் தெளிய ஐயனின் திரு உருவைக் கண்டு உவகையுறுவார்கள்.

***

காயத்ரியாகப் பராசக்தியை வழிபடும் போது அத் தேவதை சூரியமண்டல மத்தியில் விளங்குகிறது. அமெரிக்கர் ஒருவருக்கு (காலிஃபோர்னியாவைச் சேர்ந்த பெண் என்று ஞாபகம்) பிரதி தினமும் உதயத்தின்போது சூரியனிலிருந்தே ஸ்வாமி இறங்கி வருவதாகத் தெரியுமாம்! கதிரவனிலிருந்து இறங்கி நேரே இவருக்கு முன்னே வந்து நிற்பாராம்.

சூரிய வம்ச ராமசந்திர மூர்த்தி என்றும் சொல்லலாம்.

பராசக்தியை லலிதாம்பிகையாக ஆராதிக்கும் போது அவளைச் சந்திர மண்டல மத்தியில் தியானம் செய்வது விசேஷம்.

ஸ்வாமி காயத்ரியாகவும், லலிதையாகவும் அந்தந்த அடியாருக்கு அருள்பவரல்லவா?

சந்திரனில் தெரிவது சந்திரவம்சக் கண்ணன் எனவும் சொல்லலாம்.

இதய ஆகாசத்தில் ஞான சூரியனாக ஆத்மா இருக்கிறது. சிரஸில் மனம் சந்திரனாக இருக்கிறது. சந்திரன் ஸ்வயம்பிரகாசனல்ல; சூரிய ஒளிதான் மதியத்தில் பிரதி பலித்து நிலவாகிறது என்பது தெரிந்த விஷயம்தானே? மனச் சந்திரனில் ஆத்ம சூரியன் பிரதிபலித்துத்தான் சக்தி விலாஸமான லீலா நாடகமனைத்தும் நடக்கிறது.

லீலை வந்து விட்டால் சந்திரன் வரவேண்டும். சூரிய குல ராமனும் லீலா மானுஷ அவதாரியே ஆனதால்தான், வெறும் ராமனாக இல்லாமல், ராமசந்திரனாக இருக்கிறான்.

ராம்சந்த், கிருஷ்ணசந்த் (கிஷன்சந்த்) இவர்களோடு ஸாயிசந்தையும் சேர்க்க வேண்டும்.

***

வ்வாறு மஹா தத்துவ விஷயமாயுள்ள மதியமே குழந்தையின் விளையாட்டுப் பண்டமும்.

அம்புலி மாமா வா, வா!” என்று குழந்தையும் உறவு சொல்லி அழைக்கும்படிச் செய்யும் எளிமையும் அன்பும் பாபாவுக்கு மட்டும் கிடையாதா, என்ன?

நாம் பாலராகி அந்த பாபாவை அம்புலியில் கூப்பிடுவது இருக்கட்டும். அவரே தாம் பாலராக இருந்த காலத்தை நினைவு கூர்ந்து சொல்லோவியமாகத் தீட்டிய சில அரிய காட்சிகளைக் காண்போம். 4. பால் ஸாயி

ப்பவே ஸ்வாமி அஞ்சு அடிதான். அப்படியானா ஏழு எட்டு வயஸில எத்துனூண்டு இருந்திருப்பேன். ‘இமாஜின்பண்ணிப் பாருங்கஎன்று ஸ்வாமி தமது பால காண்டத்தைக் கூறுகையில் கள்ளமின்றிச் சொன்னார்.

கோடை காலத்தில் நாட்டின் பல்வேறு பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஒயிட்ஃபீல்டில் ஸ்வாமி அளிக்கும் ஆதமிககலாசார பயிற்சி முகாமில் அவர்களையெல்லாம் அழைத்து வைத்துக்கொண்டு அளவளாவுவார். அப்படியொரு ஸந்தர்ப்பத்தில் தமது பாலகாண்டத்தைத் தாமே கூறினார். அதிலிருந்தும், பிறிதொரு சமயம் அமெரிக்கருடன் ஸம்பாஷிக்கும்போதும், வேறொரு பொழுதில் உள்நாட்டு அடியாருடன் உரையாடும்போதும் பகவான் கூறியவற்றிலிருந்து விஷயங்களைஸ்வாமிநூலில் வராதவற்றை இங்கே அவரது வாய் மொழியாகவே அளிக்கிறேன்:

ஏழு எட்டு வயஸுக்கு நான் புட்டபர்த்தி லோயர் எலிமென்டரி ஸ்கூலிலே பாஸ் பண்ணிட்டேன். அதுக்கப்பறம் புக்கப்பட்டணம் ஹையர் எலிமென்டரி ஸ்கூலிலே சேர்ந்தேன். புட்டபர்த்தியிலிருந்து புக்கப் பட்டணம் குறுக்கு வழியிலே இரண்டரை மைல். அந்தபீரியட்டிலே எங்கஃபாமிலிரொம்ப தரித்ர நிலையிலே இருந்துச்சு. அதனாலே இரண்டரை மைலும் நடந்தே போய்த்தான் திரும்பணும். அதுவும் சில நாளிலே இரண்டு வாட்டி போய் வரும்படி ஆயிடும். ‘இன்டர்வெல்பகல் 11-லிருந்து 2 மணிவரை விடுவாங்க. அந்தக் காலத்துலே வீட்டிலே நானும் தாத்தாவும் மட்டும் சைவமாச் சாப்பிடறதுக்கு நானேதான் சமையல் செய்வேன். சில நாளிலே காலமே எட்டுமணி ஸ்கூலுக்கு வரத்துக்குள்ளே இந்தச் சமையல் சாப்பாட்டு வேலை முடியாம, மத்தியானம் இன்டர்வெல்லிலே வேறே வீட்டுக்கு இன்னொரு வாட்டி வந்துட்டுப் போகும்படியாகும். இப்படி ஸ்வாமி அந்தச் சின்ன வயஸுலே பத்து மைல் நடந்திருக்கேன். அதோடே வீட்டு வேலை எல்லாம் வேறே.

வெளியிலே ஸ்வாமியைப் பாக்கிறவங்களுக்கு, ‘இவருக்கு வேலை கூடப் பண்ணத் தெரியுமா?’ன்னு ஆச்சரியமாயிருக்கலாம். நீங்க என்ன பாக்கிறீங்க? நான் எங்கேயாவது வந்தா ஸிம்மாஸனம் போடறாங்க; கால் வெச்சுக்கிறதுக்குஃபுட்ஸ்டூல்போடறாங்க. ஒரு கர்சீஃப் கூட நானா எடுத்துண்டு வரணுமின்னு இல்லாம, நாற்காலி கையிலே மடிச்சு வெக்கறாங்க. குடிக்கிற தீர்த்தம் டம்பிளர்லே கொண்டு வந்து டேபிள் மேலே வெச்சு மூடறாங்க. நான் டிவோட்டீஸ் கிட்டேயிருந்து வாங்கிக்கற லெட்டரைக் கலெக்ட் பண்ணிக்கிறதுக்கே ஒத்தர் ரெடியா கூட வராரு. நீங்க வெளியிலே பாக்கற ஸ்வாமி இப்படி விரலை அசக்காத நவாப் மாதிரி இருக்காரு. ஆனா, ஸ்வாமி ஜன்மிச்ச நாளாக இன்னிக்கு வரையிலே எவ்வளவு காரியம் பண்ணறேன், தெரியுமா? இப்பவும் உள்ளே பாத்தா தெரியும் சொந்தக் காரியம் ஸகலமும் ஸ்வாமியேதான் பண்ணிக்கறேன். எந்த எடுபிடி ஏவலும் எவர்கிட்டேயும் ஸ்வாமி வாங்கிக்கறதேயில்லை. இப்ப உங்களுக்குச் சொல்றேன். ஸ்வாமி பாத்ரூமைக்கூட ஸ்வாமியேதான் க்ளீன் பண்ணிக்கறேன். காலை நாலு மணியிலிருந்து ராத்திரி பத்து மணிவரை ஸ்வாமியேதான் ஏராளமான காரியங்களைப் பண்ணிக் கொள்றேன்.

நான் பொறந்த நாளா இப்படித்தான். நான் பொறந்ததிலிருந்தே எனக்கு என் தெய்விகம் நான் ஈச்வர அவதாரம் என்கிறது நல்லாத் தெரியும். தெரிஞ்சும் ரஷ்ய ரீதியில் ஆதரிசமா எப்படியிருக்கணுமோ அப்படி எந்த வேலையையும் அருவருத்துக்காம, அலுத்துக்காம நல்லா உழைச்சுக் கொண்டிருக்கேன். புக்கப்பட்டணம் ஸ்கூல் டேஸ்லேயும் இப்படித்தான்.

அப்ப நாங்க ரொம்ப தரித்ர ஸ்திதியிலே இருந்தோம்னு சொன்னேனில்லை? இப்ப ஸ்வாமி வேளைக்கு ஒரு ட்ரெஸ்லே பளபளன்னு வரதைத்தான் நீங்க பாக்கறீங்க. நீங்கள்ளாமும் டெரி அதிலேயும் லோகல் டெரி, ஃபாரின் டெரின்னு எல்லாம் விதவிதமாகப் போட்டுக்கிறீங்க. ஸ்வாமி சின்ன ஸத்யாவா இருந்தப்ப அவருக்கு மொத்தமே மொரட்டுத் துணியிலே ஒரு ஜோடி டிராயர்சொக்காய்தான். அதையேதான் மாத்தி மாத்தித் தோய்ச்சுப் போட்டுப்பேன். வருஷத்துக்கு ஒரு வாட்டிதான் ஒரே ஒரு டிராயர்ஷர்ட் வாங்கித் தருவாங்க. நடுவிலே கிழிஞ்சு போனாலும் கிழிசலைத்தான் போட்டுக்கணும்.

ஸ்வாமிக்கு எப்பவும் சுத்தம் வேணும். அதனால நல்லாத் தோய்ச்சுத்தான் போட்டுப்பேன். ஆனாலும் கிழியக்கூடாதுன்னு, பக்குவமா, துணியை அடிக்காம, குமுக்கிப் பிழிஞ்சேதான் காயப்போடுவேன். அப்படியும் கிழிஞ்சு போய்க் கஷ்டப்பட்டதும் உண்டு. ‘ஏன்?’னா அது ஒரு கதை,”

ஸ்கூலிலே படிப்பு, கான்டக்ட் எல்லாத்துலேயும் ஸத்யா ஐடியல் ஸ்டூடன்ட். எல்லாப் பாடத்திலேயும் ஸத்யாதான் முதல். (அன்னி ஸப்ஜெக்ட்லோ ஸத்யாநே ஃபர்ஸ்ட் என்று வேறு ஏதோ பிள்ளையைப் புகழ்வது போல் ஸ்வாமி தம்மையே வர்ணித்துக்கொண்ட வெள்ளையை என்னென்பது?) அந்த நாளில் ஃபர்ஸ்ட் ராங்க் வர பையன்தான்மானிடர்‘. (மானுடராக வந்த ஸ்வாமிமானிடர்ஆகியும் இருக்கிறார்!) அந்த வேலையில் ப்ளாக் போர்டைத் துடைக்கிறது, க்ளாஸ் ரூமை சுத்தமா வெச்சுக்கிறது எல்லாத்தையும் ஸத்யா ஒரு குத்தம் குறை இல்லாம பண்ணுவேன். இதனாலே ஸ்கூலிலேயே ஸ்வாமி கிளாஸுக்குத் தனிரெபுடேஷன்‘.

இப்படியிருந்தும், கூடப் படிக்கிற பசங்க, வாத்தியார் இரண்டு பேர்கிட்டேயும் ஸ்வாமி அடி வாங்குவேன்! ஏன் தெரியுமா? அந்தக் கதையைச் சொல்றேன்.”

வாத்தியார் கேட்கிற கேள்விக்கெல்லாம் ஸத்யாதான் ஆன்ஸர் பண்ணுவேன். பதில் சொல்லாத மத்தவங்களையெல்லாம் பதில் சொல்ற பையன் தாடையிலே ரெண்டு கையாலேயும் அடிக்கணும். இந்த மாதிரி மத்த பசங்களை ஸ்வாமி அடிக்கணும்னு வாத்தியார் சொல்லுவாரு.”

இப்பவே ஸ்வாமி அஞ்சு அடிதான். அப்படியானா ஏழுஎட்டு வயஸில எத்துனூண்டு இருந்திருப்பேன் இமாஜின்பண்ணிப் பாருங்க. மத்த பசங்களோ நல்லா வளர்ந்திருப்பாங்க. குக்கிராமமில்லே? அதனாலே விவசாயிகளும் தொழிலாளிகளும் பிள்ளைங்களை லேட்டாத்தான் ஸ்கூல்லே போடுவாங்க. அப்பறமும் பசங்க ஒரு க்ளாஸை விட்டு அடுத்ததுக்கு லேசிலே நகரமாட்டாங்க! இப்படி, வயஸிலேயும் ரூபத்திலேயும் பெரியவங்களா இருக்கற பாய்ஸை, சின்ன வயஸு ஸத்யா தன் வயஸுக்கும் குறைச்சலான growth உள்ள துக்குணியூண்டு ஸத்யா கன்னத்திலே அடிக்கணும். அவங்க மூஞ்சி ஸத்யாவுக்கு எட்டாதே! அதனாலே ஒரு ஸ்டூல் மேலே ஏறிக் கொண்டுதான் அவங்க தவடையிலே போடுவேன்.

ஐயோ, பாபம்னு ஸ்வாமிக்கு மத்த பாய்ஸ்கிட்ட பரிதாபமா இருக்கும். அடிக்கறத்துக்கு மனஸே வராது. அதனாலே வாத்தியார் கண்ணுக்கு ரொம்ப ஆக்ரோசமா அடிக்கிற மாதிரித் தோணும்படிக் கையை வேகமாக் கொண்டு வந்தாலும், பசங்க கன்னத்திலே கையைப் போடறப்போ பூவை வைக்கிற மாதிரி மெதுவாத்தான் அடிப்பேன்.”

இந்தட்ரிக்வாத்தியாருக்குப் புரியாமப் போகுமா?” ‘ஏன் பளார்னு ஓசை கேட்கலை? பாசாங்கா பண்றே?’ அப்படீன்னு கோவிச்சுண்டு, அத்தனை பேரையும் நான் அடிக்க வேண்டியதையெல்லாம் சேர்த்து வெச்சு என்னை வெளுத்துக் கட்டிடுவாரு!

(பூமியில் பிறந்து, பிஞ்சிலேயே பரிவு கட்டியதற்குக் கூலியாக நம் ஸ்வாமி அடியும் வாங்கியிருக்கிறார்! புரிந்து கொள்ளாத உலகத்தினரிடம் இன்றும் வேறு விதத்தில் அடி வாங்கிக் கொண்டேதான் இருக்கிறார்! ஒரு புறம் அடியார்; இன்னொரு புறம் அடிப்பவர்! இவர்களது வழிபாடு, அவர்களது இழிப்பேச்சு இரண்டையும் அவர் மனத்தில் வாங்கிக் கொள்ளக் காணோம்! புக்கப்பட்டணப்பள்ளி நாளிலேயே இப்படித்தான் இருந்திருக்கிறார்! மேலே கேளுங்கள்.)

க்ளாஸ் முடிஞ்ச விட்டு என்ன ஆகும் தெரியுமா? அடி வாங்கின மத்த பாய்ஸ் ஸத்யா மேலே பாய்வாங்க. நான் மெதுவாத்தான் அடிச்சிருந்தாலும்கூட, ‘இந்தப் பொடியன் ஸ்டூல் மேலே ஏறி நம்மை அடிச்சானேன்னு அவங்களுக்கெல்லாம் ஒரே ஆத்திரமாயிருக்கும். அதனாலே வாத்தியார் போனவிட்டு என்னை நல்லா அடிச்சு, சட்டை டிராயரைக் கிழிச்சிடுவாங்க.”

இருக்கிறதே ஒரு ஜோடி டிரெஸ்தான். அதை ஸ்வாமி பொத்திப் பொத்திக் காப்பாத்தினாலும், இப்படி க்ளாஸ்மேட்டுகளே க்ளாஸ்ஹேட்டாப் போய்க் கிழிச்சுடுவாங்க. கிழிசல் தெரியாமச் சேர்த்துப் போட்டுக்கிறதுக்கு ஸ்வாமிகிட்டேபின்கூட கிடையாது. அதனாலே மெல்லிசா இருக்கற முள்ளையே எடுத்துப் பின் மாதிரிக் குத்திப்பேன்.

(இங்கே, வெறும் கௌபீனவந்தரான ரமண பகவான் ஒரு காலத்தில் அக் கோவணமும் கிழிந்தபோது, அதிலிருந்த நூல் இழைகளையே எடுத்து, ஒரு முள்ளில் துளை போட்டு ஊசியாக்கித் தைத்து உடுத்திக் கொண்டது நினைவு வருகிறது.)