சத்ய சாய் பாபா – 9

9. நாற்பத்து நாலு

தேவித் துதிகளில் முடிமணியாக விளங்கும்ஸௌந்தர்ய லஹரிகுறித்த ஒரு நூலில் ஸமீபத்தில் வெகுவாக ஈடுபட்டிருந்தேன். இந்தத் தோத்திரத்திலேயே ஒரு ச்லோகத்தில் நூலின் தலைப்பை வைத்து, “தவ வதந ஸௌந்தர்ய லஹரீஎன்று ஆதி சங்கரர் கூறியிருக்கிறார். ‘ஸௌந்தர்ய லஹரீஎன்னும் இப்பதப் பிரயோகம் தோத்திரத்தின் நாற்பத்து நாலாவது ச்லோகத்தில் வருவதைச் சுட்டிக் காட்டும் காஞ்சி மஹான், அம்பிகையின் மந்திர ரூபமாக அமைந்த ஸ்ரீசக்ரத்தில் நாற்பத்து நான்கு முக்கோணங்களே இருப்பதைக் குறிப்பிட்டு, இந்தப் புனித எண்ணிக்கையுடன் பொருந்தவே பகவத்பாதர்கள் இதே இலக்கமுள்ள ச்லோகத்தில் துதியின் தலைப்பை அமைத்திருக்கிறார் என்று கூறியிருப்பதை எடுத்தெழுதும் போது எனக்கு இனம் தெரியா ஓர் உவகை ஊற்றெடுத்தது. அது மேலும் பெருகியது, அந்நூல் என் உத்தேசமின்றியே 44 அத்தியாயத்தில் பூர்த்தியானபோது!

ஸௌந்தர்ய லஹரி‘“ வேலை முடித்து பதிப்பாளருக்கு அனுப்பிய அன்றிரவே அதாவது 1978 ஜூன் 19ந் தேதி இரவே ஓரளவுக்கு எதிர்பாராவிதமாக, ஸ்வாமி தரிசனத்துக்காக பெங்களூர் புறப்படக் கொடுத்து வைத்திருந்தது. அம்பாள் பணி முடித்தவுடன் அவள் அழைக்கிறாள் என்று ஆனந்தமுற்றேன்.

ரயிலில் ஏறியதும் ஸ்ரீமதி ராதா விச்வநாதன் மிகுந்த உணர்ச்சியுடன் ஸ்வாமியை அம்பாளோடு இணைத்து ஒரு சேதி சொன்னார். ஐந்து வாரம் இடைவிடாது பிரதி வெள்ளியும் மாங்காடு காமாக்ஷியைத் தரிசிக்கும் முறைமையைத் தற்போது பலர் கடைப்பிடிக்கிறார்களல்லவா? ஸ்ரீமதி ராதாவும் இவ்விதம் சென்று வருகிறாராம். வருகிற வெள்ளிக்கிழமை இதற்கு பங்கம் வந்துவிடும் என்று ராதா பயப்படும்படியாக ஒன்று நேர்ந்ததாம். அதாவது ஸ்வாமி முதலில் பிறப்பித்த ஆணைப்படி ஸம்மர் கோர்ஸில் அடுத்த வியாழன் அன்னை சுபலக்ஷ்மியவர்களுடன் ராதா இசை நிகழ்த்தி, வெள்ளியும் பெங்களுரில் தங்கி, சனியன்றுதான் சென்னை திரும்பும்படி இருந்ததாம். பிறகு ஸ்வாமி இவர்கள் கச்சேரியை ஒரு தினம் முன்னுக்குத் தள்ளிவிட்டதால் வெள்ளியன்று வீடு திரும்ப வசதி ஏற்பட்டதாம். முதல் ஆக்ஞை வந்தபோது மாங்காட்டுக் காமாக்ஷியின் சுக்ரவாரத் தொடர் தரிசனம் பங்கமாகிறதே என்று ராதாவுக்கு விசன மேற்பட்டதாம்.

இதை அவர் அம்மா சுபலக்ஷ்மியவர்களிடம் தெரிவித்தவுடன், அம்மா பளிச்சென்று, “இதென்ன ராதா அசட்டுத்தனம்? எந்தக் காமாக்ஷியா இருந்தா என்ன? மாங்காட்டுலே பார்க்கிறதுக்குப் பதில் ஒயிட்ஃபீல்டிலே பார்க்கப்போறே, அவ்வளவு தானே?” என்றாராம்.

அம்மா என்னவோ ரொம்ப சாதாரணமா அப்படிச் சொல்லிட்டா. அதுக்கப்பறம் பாருங்கோ, ‘எந்தக் காமாக்ஷியா இருந்தா என்ன?’ன்னு அவ கேட்டது என் காதைவிட்டுப் போகவேயில்லை. விடாம, பல மணி நேரம், நான் என்னென்னவோ காரியம் பண்ணிண்டு இருக்கச் சேயும், ‘எந்தக் காமாக்ஷியா இருந்தா என்ன?’ங்கிறது ஸ்பஷ்டமா காதுலே கேட்டுண்டே இருந்தது. ஸ்வாமிதான் எல்லாத் தெய்வமும், அவர்தான் அம்பாள்னு பொதுவா ஒரு நம்பிக்கையிருந்தாக்கூட, சமயத்திலே இப்படி ஒரு வித்யாஸம் தோணினப்போ, தானேதான் காமாக்ஷின்னு அவர் நன்னா நிரூபிக்கிற மாதிரி இப்படி விடாம கேக்க வெச்சிருக்கார்என்று நெகிழ்ச்சியோடு முடித்தார் ஸ்ரீமதி ராதை.

மறுதினம் பகவான் தரிசனம் கிடைத்தது. பகவானில் பகவதியே தூக்கலாக நிற்பதாகத் தோன்றியது அன்று அவர் என்னைக் கண்டுகொள்ளாதது போல ஆட்டம் காட்டியுங்கூட!

மாலை ஸ்ரீமதி சுபலக்ஷ்மி மகளோடும், பக்க வாத்தியங்களோடும் பகவான் முன் பக்தி நனி ததும்ப இன்னிசை நல்கினார். இங்கேயும் தேவீ ஸம்பந்தம் வெகுவாகச் சேர்ந்தது. சங்கராபரணத்தில் ஸ்ரீராமனைக் குறித்தஏமி நேரமுபாடி, “தீனபந்துவநே, தேவ தேவுடநேஎன்று நிரவல் செய்வது ஸ்வாமி ஸந்நிதானத்துக்கு மிகப் பொருத்தமென்றும், அல்லது நாதோபாஸனையை ஸ்வாமி வெகுவாக எடுத்துச் சொல்வதால்ஸ்வர ராக ஸுதாபாடுவது சிறப்பாயிருக்கும் என்றும் யோசனை கூறப்பட்டது. ஆனால் அம்மா சுபலக்ஷ்மி, “எனக்கென்னவோஸரோஜதள நேத்ரிதான் பாடணும் போல இருக்குஎன்றார். அவ்விதமே கச்சேரியில் மீனாம்பிகையைக் குறித்த அந்தப் பாடலை அவர் ஸ்வாமிக்கு நிவேதிக்கும்போது, பொருளைப் புரிந்து கொள்ளக் கூடிய ரஸிக உள்ளங்களெல்லாம் பொங்கின.

வரதாயகி! நீவலே தெய்வமு லோகமுலோ கலதா? என்றும்,

கோரிவச்சின வாரி கெல்லநு கோர்கெ லொஸகே பிருதுகதா?

என்றும் ஸாயீச்வரியை நேரே வைத்துக் கொண்டு கேட்கும் உருக்கத்தை, பொருத்தத்தை என் சொல்ல?

மறுதினம் குருவாரம். முதல் நாள் முகம் கொடுக்காமல் மோடி செய்ததற்கு ஈடு செய்து முகமன் கூறி அழைத்து ஸம்மர் கோர்ஸ் முடியும் அந்தப் பரபரப்பான சூழலிலே பல நிமிஷங்கள் அதிப்பிரியமாகப் பேசி அநுக்ரஹித்தார் பகவான்.

விபூதிப் பொட்டலங்களை அள்ளி அளித்தார்.

எதனாலோ (மனத்தில் கமழ்ந்துகொண்டிருந்த அம்பாள் தொடர்பினால்தான் போலும்) எத்தனை பொட்டலம் என்று எண்ணிப் பார்க்கத் தோன்றியது. ஜாகைக்கு வந்ததும் எண்ணினேன்.

சரியாக நாற்பத்து நான்கு பொட்டலங்கள்!

ஸ்ரீ சக்ரத்தில் எத்தனை கோணங்களோ, ‘ஸௌந்தர்ய லஹரியில் எத்தனாவது ச்லோகத்தில் தலைப்புப் பெயர் வருகிறதோ, அதே புனித இலக்கம்!

சட்டென்று, எனக்கு நாற்பத்து நான்காவது வயது நடப்பதும் நினைவு வந்தது.

அன்று மாலை ஒயிட்ஃபீல்ட் சென்றோம். ஸ்வாமியின் சொற்பெருக்கைக் கேட்டோம்.

பகவான் தரிசனம் முடித்து விடுதிக்குச் சென்று விட்டார்.

நாங்களும் புறப்பட வேண்டிய சமயம்,

சில ஆண்டுகளாகக் கண்டிராத நண்பர் ஸ்ரீ சிந்தாமணி என்னை நோக்கி விரைந்து வந்தார்பகவானுடைய பரமாநுக்ரஹம் ஒன்று சொல்லணும்என்று ஆரம்பித்தார். நண்பருக்கு தீக்ஷிதரின் தேவீ நவாவரண கிருதிகளில் ஒரு மோஹமாம். எப்போது பார்த்தாலும் பாடிக் கொண்டிருப்பாராம். ‘ஸ்ரீ சக்ரத்தின் ஒன்பது சுற்றுக்களில் அம்பாள் கொள்ளும் கோலங்களைப் பற்றிய பாடல்களே இவை. ஸமீபத்தில் வேறோர் அடியார் வீட்டில் தகதகக்கும் ஸ்ரீ சக்ரமொன்று ஸ்வாமியின் அற்புத ஸ்ருஷ்டியாக உற்பவித்ததாம். அவர்கள் கனவில் ஸ்வாமி தோன்றி, ‘இந்த ஸ்ரீசக்ரத்தைக் கொண்டு போய் சிந்தாமணிக்குக் கொடுங்கள்என்று உத்தரவிட்டாராம். அவர்களும் அவ்வாறே கொண்டு வந்து கொடுத்தார்களாம்.

ராஜரராஜேச்வரிக்குசிந்தாமணி க்ருஹாந்தஸ்தாஎன்று பெயர் இருப்பதற்கேற்ப, ஸ்ரீசக்ர ரூபத்தில் ஸ்ரீ சிந்தாமணியின் கிருஹத்துக்கு வந்து சேர்ந்து விட்டாள்!

இவர். வீட்டுக்கு வந்தபின் அந்த ஸ்ரீயந்த்ரத்தின் சின்னஞ்சிறிய மைய முக்கோணத்தில் அடங்குவதாக ஓர் அழகிய காமாக்ஷி உருவமும் அதற்குள் தோன்றியிருக்கிறதாம்!

இவ்விவரங்களைக் கேட்டு மகிழ்ந்து அம்பிகைத் தொடர்போடேயே ஒயிட்ஃபீல்டிலிருந்து புறப்பட்டேன். எப்படியெல்லாம் சுற்றிச் சுற்றி வளைத்து வளைத்து வந்திருக்கிறது அத் தொடர்பு! ஸௌந்தர்ய லஹரி நாற்பத்து நாலாவது ச்லோகம் ஸ்ரீ சக்ரம் தொகுப்பு நூல் 44 அத்யாயத்திலேயே முடிந்தது அம்பிகை குறித்த எழுத்துப் பணி முடிந்த அன்றே ஒயிட்ஃபீல்ட் புறப்பாடுஎந்தக் காமாக்ஷியாய் இருந்தாலென்ன?’ ‘ஸரோஜதளநேத்ரிசரியாக நாற்பத்து நாலு விபூதிப் பொட்டலம் நாற்பத்து நான்கு முக்கோணமான ஸ்ரீ சக்ர உத்பவம் அதிலே ஸாயி காமாக்ஷி உத்பவம்!15

16எல்லாவற்றிலும் அதிசயம், இந்தலீலா நாடக ஸாயியை நான் முடித்துவைக்கும் இன்றையதினம் 2971979; இதன் இலக்கங்களின் கூட்டுத் தொகையும் 44தான்!