சத்ய சாய் – 3

7. “கொண்டு வா புட்டபர்த்தி!”

மேலே கண்ட லீலையில் லண்டன் இளைஞருக்கு ஸத்ய ஸாயி பாபா என்ற ஒருவரைத் தெரியவே தெரியாது. ஸத்ய ஸாயி பாபாவாகவோ, அல்லது ஸத்யாகவாகவோ கூட அவரது மஹிமை அறிந்து வேண்டுபவர் அன்று மிகமிகக் குறைவாகவே இருந்தனர். ஆந்திரகர்நாடக தமிழகத்தின் சில பகுதிகளுக்கப்பால் அவர் புகழை மானுடர் அறிந்திராத 1942-க்கு முற்பட்ட காலம்.

அப்போது, புட்டபர்த்தியிலிருந்து எண்ணூறு மைல்களுக்கப்பாலிருந்த ஒருவர் மட்டும் அவரது மஹிமையை அறிந்திருந்தாரெனில் அப்படிப்பட்டவரும் அதிசயமானவராகத்தானே இருக்க வேண்டும்? ஆம், வடக்கத்திய மாநில மானுடரெவரும் ஸ்வாமியை அறிந்திராத அந்நாளில், ராஜஸ்தானத்திலிருந்துகொண்டு அவரை அறிந்திருந்த மேற்படியார் மானுடரேயல்ல. அவர் ஒருமாஜிமானுடர்! முன்னாள் மானுடராயிருந்து, இன்றுஆவியென்று கௌரவமாகவும், ‘பேய்என்று அச்சம் த்வனிக்கும்படியாகவும் கூறப்பட்ட ஒருவர்!

அப்பேய் ஒரு மார்வாரிப் பெண்மணியைப் பிடித்தாட்டி அவளது உயிரை உறிஞ்சிக்கொண்டிருந்தது. அப்புறம் அதற்குத் தான் அவளை விடவேண்டுமென்றும், தானும் பேயுருவிலிருந்து விடுபடவேண்டுமென்றும் அறிவு வந்தது. இவ்விரு விடுதலைகளையும் அளிக்கவல்ல வல்லபம் பதினைந்து வயதுப் புட்டபர்த்திப் பிள்ளையிடம் இருப்பதையும் அதன் அதீந்திரிய நிலையில் அதனால் அறிய முடிந்துவிட்டது.

அதீந்திரிய சக்தியிருந்தாலும் அபமிருத்யுவாய் மரித்த ஒரு ஜீவனின் அல்ப உயிரே அதுவாதலால், எதையும் தெளிவுறச் சொல்லவராத பேய்த்தனமும் அதற்கு இருக்கவே செய்தது. ஆகையால் அப்பெண்மணி மூலம் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவிக்கும்போது, தெளிவாக, ‘என்னைப் புட்டபர்த்தி என்ற ஆந்திர கிராமத்திலுள்ள பால ஸாயியிடம் அழைத்துப் போங்கள்என்று சொல்லாமல், “கொண்டு வா புட்டபர்த்தி! அப்போதான் போவேன்என்றே சொல்லிற்று!

புட்டபர்த்தி லாஓ! புட்டபர்த்தி லாஓ!” என்று மார்வாரி மாது ஓயாமல் சொன்னது உறவினருக்கும் ஊராருக்கும் பொருளாகவில்லை. ‘அது என்ன புட்டபர்த்தி? பலிப்பொருளான ஜீவ ஜந்துவா, ஆளா, அல்லது மணியா, மந்திரமா, ஒளஷதமா, தெய்வ விக்ரஹமா?”

இப்படி அவர்களைப் பல நாட்கள் குழப்பிய பின்தான் பேய் அவள் மூலம் புரியும்படி விவரம் தெரிவித்தது.

பேய் பிடித்தாட்டும் அவளை எப்படி எட்டுநூறு மைல்கள் வழியெல்லாம் சமாளித்து அழைத்துப் போவது என்று வீட்டாருக்குப் புரியவில்லை. ‘பேய் வார்த்தையை நம்பிப் பரீக்ஷை பார்ப்பதற்காக அவளை அவ்வளவு தூரம் அழைத்துச் செல்ல எவ்வளவு செலவாகும்? எனவே அவளை மட்டும் அனுப்புவோம். அந்தப் பேயே அவளை அழைத்துப்போய் புட்டபர்த்தி சேர்க்குமானால் சேர்க்கட்டும். அல்லாமல் அவளுக்கு வழியில் என்ன நேர்ந்தாலும் நேரட்டும். எப்படியும் வீட்டுக்கு உதவாத பெரிய உபத்திரவமாகி விட்டவள் இப்படித்தான் போய்ச் சேரட்டும்’ – இப்படி எண்ணினர் அவளது வீட்டார்.

ஆந்திர நாட்டுப் புட்டபர்த்தியிலுள்ள பால ஸாயி என்பவர் தன்னை ஓட்ட வேண்டும் என்று இந்த அம்மாளைப் பிடித்துள்ள பேய் விரும்புகிறதுஎன்று குறிப்பு எழுதி, அவளிடமே கொடுத்து அனுப்பிவிட்டனர்.

ஆச்சர்யம்! பேய்ச்சக்திதான் வலிந்து அழைத்து வந்ததோ, ஸாயி சக்திதான் பரிந்து இழுத்துக் கொண்டதோ, மார்வாரி மாது கையிலே இறுகப் பிடித்த குறிப்புக் காகிதத்துடன் புட்டபர்த்திக்கு வந்தே விட்டாள்!

அப்புறம் அதிகம் கதை இல்லை. இரு கரத்தாலும் இறுகப் பிடித்துக் காக்கும் ஸாயி அவளுக்குப் பேயிடமிருந்து விடுதலை தந்துவிட்டார். பேயான ஜீவனுக்கும் பேய்த்தன்மையிலிருந்து விடுதலை தந்துவிட்டார்!

(மஹா புருஷர்களால் இவ்வாறு பேய் நிலையிலிருந்து விமோசனம் பெறும் ஒரு மரித்த ஜீவன், பிறகு ஸாதாரணமாக ஒரு ஜீவனுக்கு உரியதே போன்ற ஸ்வர்க்க அல்லது நரக வாழ்வோ, அல்லது நில உலகில் மறு பிறப்போ பெறலாம்; அல்லது பிறப்பிலிருந்தே விடுதலை கண்டு பரமபதம் பெறலாம்.)

8. “ஆவியே, ஆரமுதே!”

வியே ஆரமுதே!” என்று ஆழ்வார் பாடியபோது ஜீவனின் இன்னுயிரையே ஆவி என்றார். ஈசனின் கருணையைக் கிறிஸ்தவர்கள்ஹோலி கோஸ்ட்என்கின்றனர். நமக்கு ஆவியும், ஹோலி கோஸ்டுமான ஆரமுதர் ஸமீப காலத்தில் கொடூர கோஸ்ட்ஆவி ஒன்றுக்கு விமோசனம் தந்ததை ப்ரசாந்திநிலய வாஸியர் பலர் அறிவர்.

கட்டாக்கில் ஸாயி ஸமிதி முக்யஸ்தரான ஒருவருடைய பன்னிரண்டு வயதுப் பேத்தியைப் பிடித்தாட்டிற்று ஓர் ஆவி. தாத்தா அவளைப் புட்டபர்த்தி இட்டு வந்தார்.

இங்கும் ஆவி தன் கைவரிசையைக் காட்ட ஸ்வாமி எதனாலோ அனுமதித்தார். அடுத்த ஃப்ளாட்களிலுள்ளோரின் மணி பர்ஸ்கள் மாயமாய் மறைந்து, சிறுமியின் மடியில் அடைக்கலம் புகுந்தன! துணிகள் பற்றி எரிந்தன!

இப்படியெல்லாம் நடந்தும், ஸ்வாமி தரிசன வரிசையில் சிறுமியைப் பார்க்கும் போதெல்லாம், “ப்ரிடென்ஷன்” (பாசாங்கு) என்றே சொல்லி வந்தார்!

அப்புறம் ஒருநாள் விமோசனத்துக்கு அவர் குறித்திருந்த வேளை வந்தது. அன்று பஜனை நடந்து கொண்டிருந்தது. ஸ்வாமி ஆதனத்தே அமர்ந்து ரஸித்துக் கொண்டிருந்தார். பக்தரிடை உட்கார்ந்திருந்த பாலகியின் உடம்பு நடுங்கி ஆட்டமாக ஆடத் தொடங்கியதுபேயாட்டமேதான்! ஓட்டம் பிடிப்பதற்கான ஆட்டம்! கிறீச்சிட்டு அலறி, மயக்கமாகி விழுந்தாள்.

மயக்கம் தெளிந்தெழுந்தபோது ஆவியிடமிருந்து விடுவிக்கப் பெற்றவளாகத் தெள்ளத் தெளிந்திருந்தாள்!

ஆரமுதர் அவளுக்கு ரௌத்ராகாரமாகத் தெரிந்தாராம்! அவர் சூலாயுதத்தால் ஆவியைப் பிளக்கக் கண்டாளாம்! அதுதான் அலறி மூர்ச்சித்திருக்கிறாள்.

9. அமுது பெருகும் சிரத்தில் ஆவிநோய் நஞ்சு!

வி சேஷ்டை என்பது மனோ பலவீனமுள்ளவர்களையே தாக்கும். இதே மனோ பலஹீனம்தான் மூளைக் கோளாறு, அபஸ்மாரம் (காக்காய் வலிப்பு) முதலிய நோய்களுக்கும் காரணம். இவை யாவற்றையுமே ஸ்வாமி குணம் செய்ததுண்டு. பிட்டிதேவ மன்னனின் மகளைப் பிடித்திருந்த பேயை ராமாநுஜர் ஓட்டினார், கொல்லி மழவனுடைய பெண்ணின் முயலக நோயை (அபஸ்மார வியாதியை) ஞானஸம்பந்தர் குணமாக்கினார், உன்மத்த ஊமையான சிங்கள இளவரசியை மாணிக்கவாசகர் சரி செய்தார் என்றிப்படிப் பெண்களைப் பொறுத்ததாகவே பூர்வகாலப் பெருந்தகையர் அருள் மருத்துவம் புரிந்தது போலவே நமது ஸ்வாமியும் தாய்க்குலத்தினருக்கே இவ்வினத்தில் விசேஷ க்ருபை புரிவதாகத் தெரிகிறது.

இது போன்ற மனநோய் நிவாரணத்தில் ஸ்வாமி முப்பது, முப்பத்தைந்தாண்டுகளுக்கு முன்கையாண்டஒரு விசித்ர சிகித்ஸை முறையை ஸ்ரீ கஸ்தூரிஅன்பு செயும் ஆண்டவன்” (“Loving God”) எனும் நூலில் கூறி, மூன்று எடுத்துக்காட்டுக்கள் தருகிறார். ‘கையாண்டஎன்றால்கையாண்டவேதான்! மேலே படியுங்கள், புரியும்!

பாகிஸ்தான் பிரிவினையானவுடன் ஸிந்த் மாநிலத்திலிருந்து ஓடிவந்த அகதியருள் ஒருவர். அவர் மூளைக் கோளாறுற்ற தமது மகளோடு பிரசாந்தி நிலயத்துக்கு வந்தார். அந்தப் பெண் காரணமின்றி அழுவாள், சிரிப்பாள், பிதற்றுவாள், ஒன்றையே திரும்பத் திரும்பச் சொல்லுவாள். ஓரிடமாய் இருக்க முடியாமல் பரக்கப் பரக்கச் சுற்றுவாள்.

சில வாரங்கள் அவள் இப்படி பிராந்தியிலே பிரசாந்தி நிலயத்தில் அமளி செய்தும் பிரசாந்தரோ அமைதியாகப் பார்த்துக்கொண்டு இருந்தார். பெண்ணின் தகப்பனாரிடம் மட்டும், “நீங்கள் புறப்படுவதற்குள் குணப்படுத்துகிறேன்என்று அபய வாக்குக் கூறினார்.

சில வாரம் சென்றபின் ஒருநாள் காலை. ஸிந்தியர் தங்கியிருந்த அறைக்குக் கருணாஸிந்து சென்றார். பெண்ணின் நெற்றியிலே நீறு பூசினார்.

உடனே அவர் முன்னர் அவள் தரையில் சாய்ந்தாள்.

இனி ஆண்டை அவள் நோயைக்கையாண்டவிசித்ரம்! பாபா தமது இரு உள்ளங்கைகளையும் அவளது சிரத்தின் இரு புறமும் வைத்து அழுத்தலானார். அவர் அப்படி அழுத்திக் கொண்டேயிருக்க, அப்பெண்ணின் மயிர்க்கால்களிலிருந்து கரும் பழுப்பான ஒரு திரவம் கசிந்து சொட்டத் தொடங்கியது.

திரவத்தை ஒரு தட்டில் பிடித்தார்கள்.

பாபா அவள் தலையை விடாமல் அழுத்தி, ஒரே துர்நாற்றம் வீசும் திரவத்தை முழுக்க வடித்தார்.

தட்டிலே சுமார் பத்து அவுன்ஸ் திரவம் சேர்ந்திருந்தது. ‘வடிக்கட்டியபைத்தியம்தான்!

திரவக் கசிவு அடியோடு நின்ற பிறகே இதயக் கசிவாளர் கையை எடுத்தார். துர்நாற்ற திரவத்தை வடித்த தெய்வக் கரத்தை ஸோப் போட்டுக் கழுவிக்கொண்டார்.

பெண்ணும் மூளைக் கோளாற்றுக்குக் கை கழுவி விட்டாள்! திரவம் போனதும் நோயின் உபத்திரவம், நோயாளியால் யாவருக்கும் ஏற்பட்ட உபத்திரவம் ஆகியனவும் மலையேறி விட்டன!

மூன்றாண்டுகளுக்குப் பின் பம்பாய் சென்ற பாபா, மறவாமல் அங்குள்ள ஸிந்தி அகதியரின் காலனியிலுள்ள இந்த அடியார்களது இல்லத்துக்கு விஜயம் செய்தார்.

அப்போது அப்பெண் கண்டிருந்த மலர்ச்சியைக் கண்டு கஸ்தூரி அதிசயித்தார். துருதுருவென்று வேலை செய்தபடி, வீடு முழுதும் வளைய வந்து பகவானுக்கும் பக்தர்களுக்கும் பாங்காய் உபசாரம் செய்தாள்! உணர்ச்சிப் பொங்க பஜனை பாடி, தன்னை வாழ்வித்த வேந்தனுக்கு வந்தனை செய்தாள்!

***

திநாளில் கஸ்தூரியின் ப்ரசாந்தி நிலய அண்டை வாஸியான இல்லத்தரசி முயலக நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள். இந்த முயலகனை ஸாயி நடராஜன் எப்படி அழுத்தி அடக்கிப்போட்டான்? அவனது திருக்கரங்கள் அவளது தலையின் பக்கங்களை அழுத்தி உள்ளிருந்த துர் நீரை வடித்தெடுத்ததன் மூலமேதான்!

பெங்களூர் அடியார் ஒருவரின் மகள் ஹிஸ்டீரியா நோயுற்றிருந்தாள். நோயைப் பழைய ஹிஸ்டரியாக ஆக்க, பாபா அளித்த சிகித்ஸை மிஸ்டரி என்னவெனில்நம் வாசகர்களுக்கு அது மிஸ்டரியாகவே இராது.ஆம், திரவத்தை வடித்து ‘மண்டைக் கனம்’ குறைத்துத்தான் குணப்படுத்தினார் குணாலயர்!