22. ஓர் இனிய துணுக்கு; அல்ல, பானம்!
ஒரு சமயம் என் பொருளாதாரம் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. வழக்கத்துக்கு விரோதமாக, எதெதில் சிக்கனம் பிடிக்கலாமென்ற யோசனை பிறந்தது. அக்காலத்தில் அதிகாலை, பால் வருமுன் பவுடர் பாலில் நானே தேத் தண்ணீர் போட்டுக் கொண்டிருந்தேன். அதில் சர்க்கரைக்குப் பதில் வெல்லம் போட்டுக்கொண்டு சிக்கனத்தை இனிப்பாகத் தொடங்க உத்தேசித்தேன்.
இங்கு ஒரு விஷயம் சொல்ல வேண்டும். 1974-ல் நான் ‘கல்கி’யை விட்டிருந்த சமயத்தில்தான் குடும்ப ரேஷன் அலுவலர்கள் வருமானம் முதலியவற்றின் புள்ளி விவரம் கேட்டிருந்தார்கள். ‘இனி புத்தக ராயல்டி வருவாய் மட்டுந்தானே வரும்? என்ன பிரமாதமாய் வந்துவிடப் போகிறது?’ என்றெண்ணி ‘லோ–இன்கம் க்ரூப்’பிலே என்னைச் சேர்த்துக் கொண்டேன். அதனால் ஒரு கிலோவோ, ஒன்றரை கிலோவோதான் கன்ட்ரோல் விலைச் சர்க்கரை கிடைத்தது. அப்போது ஓபன் மார்க்கெட்டில் சர்க்கரை விலை எக்கச்சக்கமாயிருந்தது. எனக்கோ இனிப்பு கொஞ்சம் கூடுதலாகவே வேண்டும். இதனால்தான் முதல் ‘எகானமி மெஷ’ராகத் தேநீரில் சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்க்க நினைத்தது.
இப்படி முதல்நாள் இனாகுரேட் செய்து, ஸாயிக்கு வெல்லத் தேநீரை அர்ப்பணித்தேன். எப்போதுமே அந்த விடியற்கால முதல் நிவேதனத்தில் பர்த்தியாரின்றி ஷீர்டியார்தான் மனக்கண் முன் நிற்பார். வடக்கத்திக்கார ஃபக்கீர் அல்லவா? அதனால் “சாய், சாய்” என்று ஆனந்த மாக ஷீர்டி ஸாய் பானம் பண்ணுவதாகவே உள்ளம் காட்சி காணும். ஸாயிக்கு சாய்ஸ் சாயாக விசேஷ ப்ளான்டேஷன் டீ அளிப்பேன். இன்று வெல்லத்தைப் போடுகிறோமே என்று தோன்றிற்று.
இம்மாதிரி ஸமயங்களில் நாம் செய்வதற்கு நம் மனம் பல நியாயங்கள் கற்பிப்பது இயல்பாச்சே! அப்படியே இப்போது, டீக்கு வெல்லந்தான் சர்க்கரையைவிடவும் ருசியாயிருக்குமென்று யாரோ சொன்னதை நினைத்தேன். அதற்கும் மேலாக ஸ்வாமியே சர்க்கரையைவிட வெல்லமே நல்லதென்றும், சர்க்கரை கான்ஸருக்குக்கூட காரணமாகிறதென்றும் சொன்னதையும் நினைத்து, எனவே சர்க்கரை போடுவதுதான் அநியாயம் என்கிற அளவுக்கு என்னைத் திருப்தி செய்து கொண்டேன்.
மன இடறலில்லாமல் ஸாயித் தாத்தாவுக்கு வெல்ல டீ நிவேதித்து வாயில் விட்டுக் கொண்டேன்.
ஆனால் அது உள்ளே இறங்கினால்தானே? தொண்டைக்குக் கீழே உணவுக் குழாயில் கார்க் போட்டாற் போல் அடைத்துக்கொண்டு நின்றது! மார்பை அடைக்கிறாற்போலிருந்தது.
தலையையும் சுற்றியது. “ஸாயிராம்” என்று ஸ்மரித்தபடி எப்படியோ முழுங்கினேன்.
வாயெல்லாம் ஒரே பச்சைக் கர்ப்பூர மணம்! ஆஹா! திருப்பதி…? திருப்பதி ப்ரஸாதமுமில்லை, ஒன்றுமில்லை! பச்சைக் கர்ப்பூர மணத்தோடேயே கலந்துள்ள துவர்ப்பு மணம்? ஓ! அப்படியிருக்குமா? டீ–வடிக் கட்டியைப் பார்த்தேன். என் அநுமானம் சரி எனப் புரிந்தது. பார்த்ததோடு நில்லாமல் வடிக்கட்டியிலிருந்த சக்கையைக் கையால் தொட்டதில் அநுமானம் ஸர்வ நிச்சயமான பிரமாணமாகவே ஆயிற்று.
அதாவது, வடிக்கப்பட்டது டீ அல்ல; வாஸனைப்பாக்காக்கும்!
தினந்தோறும், பாட்டில் தப்பாமல் டீயே எடுத்துப் போடுபவன், ‘எகானமி மெஷ’ரின் ‘க்ரான்ட் இனாகுரேஷ’னான இன்று, சரியாகப் பார்க்காமல் பாக்கை டீக்குப் பதில் போட்டிருக்கிறேன். “பவுடர் பாலும் வெல்லப் பாகும் பாக்குமிவை மூன்றும் கலந்து” ஸாயித் தாத்தனுக்கு வேறு நிவேதித்திருக்கிறேன்!
‘சரி, இன்று முஹுர்த்தம் சரியில்லை’ என்று, பசும்பால் வந்தபின் காபியாகவே அம்மா போட்டுக் கொடுக்க (சர்க்கரை போட்டுத்தான்!) குடித்து வைத்தேன்.
இது ஏதோ தற்செயலாக நடந்த தப்பிதமென்று நினைத்து மறுநாள் மீண்டும் வெல்ல டீக்கு முயல, அன்று பவுடர் பால் பொங்கிற்றோ, அல்லது டீ டிகாக்ஷன் அப்படியே கொட்டிற்றோ, எதுவோ ஒன்று நடந்து முயற்சியை முறியடித்தது!
வெல்ல முயற்சி வெல்லுமா என மூன்றாம் நாளும் தொடர்ந்து பார்த்தேன். தோல்வியிலும் “ஹாட்–ட்ரிக்”! அன்று வெல்லப் பாகைப் பாலில் விட்டதுதான் தாமதம், அது அப்படியே திப்பி திப்பியாகத் திரிந்து விட்டது!
அன்றிரவு ஸொப்பனத்தில் வந்தான் பர்த்தியப்பன். “பைத்தியம்!” என்று அருமையாக அழைத்து, “சக்கரை கிலோ ட்வென்டி ருபீஸ்தான் விக்கட்டுமே, நான் ஒனக்கு வாங்கிப் போடறேன். துட்டுக்கோஸரம் ஏன் நீ வெல்லம் போட்டுக்கணும்?” என்று கரிசனமாய் வினவி மறைந்தான்.
அன்றே நம் ஸஹோதரி விமலா வந்தாள். “வீட்டிலே சர்க்கரைச் செலவே இல்லை. அண்ணாவுக்குத் தேவைப்படுமா?” என்றாள்!
அதுதானையா காரியாம்சத்தில் பேசும் கருணைக் கரிசனம்!
வெல்ல இனாகுரேஷனைத் தடுத்த இனியர்ரேஷன் சர்க்கரையே மலிவு விலையில் கிடைக்கச் செய்துவிட்டார். ஆமாம், அம்மாதத்திலிருந்து மாதந்தோறும் விமலாவின் கணவர் பேராசிரியர் ராஜாராமன் தமது குடும்பத்தின் அன்பினிமையும் கூட்டி நாலு கிலோ ரேஷன் சர்க்கரையைத் தூக்கி வந்து கொடுக்கலானார்!
23. இன்னோர் இனிய துணுக்கு; அல்ல, இரண்டு பட்டைப் பொங்கல்!
*ஸ்ரீ கஸ்தூரியவர்களின் முழுப்பெயர் கஸ்தூரி ரங்கநாதன். என்றாலும் 69 வயசு முடியும்வரை அவர் தமக்குப் பெயர் தந்த திருவரங்கத்துப் பெரிய பெருமாளை தரிசித்ததில்லை. அவ்வாண்டு டிஸம்பர் 24-ந் தேதி அவரை பாபா பற்றி உபந்யாஸம் செய்யத் திருப்பூரில் அழைத்திருந்தார்கள். கிறிஸ்து ஜயந்தியான டிஸ. 25 தான் கஸ்தூரியின் ஜன்ம தினமும். இதுவோ எழுபதாவது பிறந்தநாள். எனவே அன்று ஸ்வாமியை விட்டுப் பிரிந்திருக்க அவர் பரியப்படவில்லை. ‘24-ந் தேதி திருப்பூரில் பேசி, 25 அன்று பர்த்தி திரும்ப இயலுமோ, இயலாதோ? எனவே திருப்பூரைச் சற்றுத் தள்ளிப்போட்டுவிட்டு, அதோடு சேர்த்து ஸ்ரீரங்கமும் சென்று வரலாமா?’ என எண்ணினார். பகவானைக் கேட்டார்.
மனிதன் ‘ப்ரபோஸ்’ செய்வதை வேறு விதத்தில் ‘டிஸ்போஸ்’ செய்வதுதானே பகவானின் தொழில்? அதற்கேற்ப பகவான், “இப்பவே திருப்பூர் போ. அப்படியே உன் பர்த்–டேக்கு ஸ்ரீரங்கமும் போ” என்றார்.
அவர் சொன்ன மாதிரியிலிருந்து, ஸ்ரீரங்கத்திலே அடியாருக்கு தர்சனம் தருவாரென்று த்வனித்தது.
இன்னொன்றும் வேடிக்கைக் குரலில் சொன்னார். “சக்கரைப் பொங்கல் ஸாப்பிடு” என்றார்.
எழுபதாம் பிறந்த நாளன்று, மிக்கப் பெயர்ப் பொருத்தமுடன் திருச்சி டாக்டர் வி.கே. ரங்கநாதனுடன் நமது கஸ்தூரி ரங்கநாதர் ஸ்ரீரங்கநாதனை தரிசித்தார்.
அமுதமாயிருந்தது அரங்கன் தர்சனம். ‘குட திசை முடி’யிலிருந்து அங்க அகமாய் ரங்கனைப் பார்த்து ‘குண திசைப் பாத’த்துக்கு வந்தார்.
“பாரில்நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி” என்று ஆழ்வார் கதறிய பாதத்தைப் பார்த்த கஸ்தூரி ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். அது கருங்கற் பாதமாக இல்லை! குழைவும் மென்மையும் கொண்டு, இள நீலம் ஓடும் வெண்ஸலவைப் பாதங்களாக இருந்தன. ஐயமில்லை, ஸத்ய ஸாயி நாதனின் திருப்பாதங்கள்தாம்!
த்வனிப் பொருளாக அவர் குறிப்பித்தபடி பிறந்த நாள் தரிசனம் அருளிவிட்டார்!
அமுதுண்டாற் போலிருந்தது, கஸ்தூரிக்கு.
ஆயினும் ஸ்வாமி சொன்னாற்போல, சர்க்கரைப் பொங்கல் ப்ரஸாதம் அளிக்கப்படவில்லை. தநுர்மாஸ ‘திருப்பட்சி’ (அதாவது, ‘திருப்பள்ளியெழுச்சி’ பிரஸாதமான) வெண் பொங்கல்கூட இன்றி, லட்டும் முறுக்கும்தான் விநியோகிக்கப்பட்டது.
அரங்கத்திலிருந்து நமது பேராசிரியரும் டாக்டரும் அருகேயுள்ள ஆனைக்கா சென்றனர். அப்புநாதனைக் கண்டு அம்பாள் அகிலாண்டேச்வரி தர்சனமும் முடித்துத் திரும்ப இருந்தபோது, “ஸ்வாமின், ஸ்வாமின்!” என்று அழைத்துக்கொண்டு பின்னால் ஓடி வந்தார் அர்ச்சகர்.
இவர்களை அமர்த்தி, இலை போட்டு அதிலே பெரிய பட்டையாக வைத்தார் சர்க்கரைப் பொங்கலைத்தான்!
சிவன் கோயிலில் வழக்கமில்லாத வழக்கமாக போஜன ப்ரஸாதம்! அன்றைக்கு ஏதோ விசேஷ ஆராதனை என்று காரணம் கூறினார் அர்ச்சகர்.
ஆரா அன்பு ஸாயியன்னபூர்ணி அகிலாண்டேச்வரியாக அடியார்க்குப் படைத்த பிரஸாதம்! உள்ளம் பொங்கப் பொங்கலை உள்ளே கொண்டார் அடியார்!
***
ஸ்ரீவைஷ்ணவர்கள் ‘கோயில்’ என்றால் அது அரங்கமே. சைவர்கள் ‘கோயில்’ என்றால் அது தில்லையைத்தான் குறிக்கும். கஸ்தூரிக்குப் பொங்கியிட்டதற்குப் பதினெட்டு வருஷங்களுக்கப்புறம் இவ்வாண்டு ஸாயிப் பல்கலைக்கழகத்தின் ஊழியரான ஒரு தம்பிக்குத் தில்லையில் நமது கதாநாதர் பொங்கலிட்டிருக்கிறார்!
நெய்வேலியிலுள்ள வீட்டுக்குச் சென்று அப்படியே சிதம்பரத்தில் தர்சனம் செய்து திரும்ப ‘சான்ஸலர் ஸாயி’யிடம் ஊழியர் பெர்மிஷன் கேட்டார்.
ஸந்தோஷமாக அனுமதி வழங்கிய ஸ்வாமி, “உம், சிதம்பரத்திலே சர்க்கரைப் பொங்கல் ஸாப்பிடு” என்றார்.
அன்னதான ஸந்நிதானமல்லவா நடராஜனாலயம்? “அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்” என்றே அப்பர் சிறப்பித்த அங்கு ஸந்நிதி நிறையச் சர்க்கரைப் பொங்கல் ‘பாவாடை’ போடுவார்கள், ‘கற்கண்டுச் சர்க்கரைப் பொங்கல்’ என்றே ஒன்றையும் தீக்ஷிதர்கள் ‘ஸ்பெஷலைஸ்’ செய்திருக்கிறார்கள்.
ஆயினும் கஸ்தூரிக்கு ரங்கன் கோயிலில் நடந்ததே (அதாவது, நடக்காததே) இந்தத் தம்பிக்குக் கூத்தன் ஆலயத்தில் ‘ரிபீட்’ ஆயிற்று. ஸ்வாமி சொன்ன சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படவில்லை.
அப்புறம் தில்லையம்மன் என்றும் தில்லைக் காளி என்றும் சொல்லப்படும் தேவி கோவிலுக்குத் தம்பி சென்றார். அங்கிருந்த அன்னைப் படிமங்களில் ஒன்றிடம் விசேஷ ஈர்ப்புக் கொண்டார். ஒரு முறை தரிசித்து வெளி வந்தபின், உள்ளிருந்து எதுவோ தூண்ட மீளவும் திரும்பி நோக்கினார்.
அம்பாளும் அவரை நோக்கினாள்! ஆம், விக்ரஹக் கண்களின் அசைவை ஸந்தேஹமறக் கண்டார் அவர்! உள்ளம் பொங்கியது!
கையிலும் கனமாய் விழுந்தது பூஜகர் போட்ட சர்க்கரைப் பொங்கல்!
அம்மாத் தெய்வம்தான் அமுதூட்ட வேண்டுமென்பதால் அங்கே ரங்கனின் தங்கை மூலம் பொங்கியிட்டவர் இங்கும் ஆட வல்லானை ஆட வைத்தவளையே படையல் செய்ய வைத்திருக்கிறார்!
ப்ரசாந்தி நிலயம் திரும்பி, ஸஹ ஊழியருடன் அந்தத் தம்பி ‘தர்சன்–லைனி’ல் உட்கார்ந்திருந்தார். அருகே வந்து நின்றார் ஸ்வாமி. இதுபோன்ற விஷயங்களை சிதம்பர ரஹஸ்யமாகக் காப்பதே அவர் வழக்கமாயினும், இன்றைக்கென்னவோ அவருக்குச் சிதம்பரத்திலேயே சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம் எல்லாமும் இருப்பது நினைவு வந்துவிட்டது போலும். தம்பி தில்லையம்மன் கோயிலில் பெற்ற அனுபவங்களை எல்லார் முன்புமே அம்பலப்படுத்திக் குறும்பும் சிரிப்புமாகப் பேசிப் போனார்!
24. ‘கேக்’ எப்படி ஆயினும் விலை கட்டி துணுக்கு இனியதுதான்!
அப்படிப்பட்ட கீழ்த்தர எண்ணம் எனக்கு ஏன்தான் வந்ததோ? பின்னால் தனது போதனை இனிமையை ஊட்ட அவனேதான் அப்படி எண்ண வைத்தானோ? (சாமர்த்தியமாக, பழியை அவனுக்குத் தள்ளுகிறேன்!)
எந்த ஒரு மனிதனின் சாதிப்புக்கும் ஆதாரமாக அவனது மனைவியின் தியாகம் இருக்கிறது என்பார்கள். இப்படி என் பணிகளுக்கெல்லாம் ஆதரவாக இருப்பது தம்பி மோஹனராமனின் தொண்டு. தொண்டின் இனிமை, அன்பின் இனிமை இவற்றோடு இனிப்புத் தின்பண்டங்களும் ‘அண்ணா’வுக்காகத் தவறாமல் கொண்டு வருவார். “உங்களுக்கென்றா செய்கிறோம்? மாமனார் ஆத்தில், சித்தி ஆத்தில் இன்ன விசேஷம், எனக்குத் தரும்போது உங்களுக்கும் கொடுக்கிறார்கள்” என்பார். அதுவும் நிஜமே. அக்குடும்பங்கள் இன்றுபோல் என்றுமே ‘நித்ய கல்யாணம், பச்சைத் தோரண’மாய் விளங்க வேண்டுகிறேன். (எனக்கு பக்ஷணம் கிடைக்குமென்பதற்காக மட்டும் அல்ல!)
அன்றும் ஸ்வீட்ஸ் கொண்டு வந்திருந்தார். ஆமாம், பன்மையில் ஸ்வீட்ஸ், ரவா லட்டு, ஏதோ ஹல்வா, பாதாம் கேக் யாவும். ‘பாதாம்’ என்ற பெயரில் எஸென்ஸிலின்றி, அசல் பாதாம் பருப்பே போட்டுச் செய்த கேக்.
இரண்டு கேக் இருந்தது. அப்போதே இருவரும் ஒன்றைத் தின்றோம். மீதமிருந்த ஒன்று ஏனைய பக்ஷணங்களோடு சமையலறை ஷெல்ஃபுக்குச் சென்றது.
இரவு சீனு வந்தான். எனக்கு ஸ்வாமி தந்துள்ள அநேக ஸோதரரில், குழந்தைகளில் அதிப்ரியமானவன் அவன்தான். (கால் ஸெஞ்சுரியைக் கடந்து, ‘அவர்’ எனப்படுவதற்குத் தகுதி பெற்றிருந்தாலும், ஒருமையிலேயே அருமை தெரிவதால் ‘அவன்’ என்றே சொல்கிறேன்.) அவனுக்குக் கொடுக்காமல் நல்ல தின்பண்டம் எதைத் தின்றாலும் எனக்குச் சாப்பிட்ட மாதிரியிராது!
அன்றிரவும் பக்ஷணங்களை அவனுக்காக பேஸினில் எடுத்து வைத்தேன். பாதாம் கேக்கை எடுத்தவுடன் நாக்கின் சபலம் அப்போதே அதில் பாதியை என் வாய்க்கு அனுப்பிவிட்டது. மீதி பாதியையும் பேஸினில் போடாமல் கை பின்னுக்கு இழுத்தது. மனம் படு கீழ்த்தரமாக இறங்கி விட்டது. தனக்கே உரிய இயல்புப்படி அதற்கு மனம் நியாயமும் கற்பித்துக் கொண்டது: ‘மற்ற பக்ஷணங்கள்தான் இருக்கே! கேக் பாதிதானே இருக்கு?’, ‘சீனு ஆரோக்கியசாலி. இது மருந்துப் பண்டமும். டாக்டரே நம்மை பாதாம் பருப்புச் சாப்பிடச் சொல்லியிருக்காரே!’
மற்ற பக்ஷணங்களுடன் மட்டும் ஹாலுக்கு வந்து, அந்தக் குழந்தைக்குக் கொடுத்தேன்.
மறுநாள் மற்ற பக்ஷணங்களைத் தின்றுவிட்டு, முடிவாக பாதாம் சுவையும் மணமும் வாயில் நிற்கட்டுமென அந்த பாதிக் கேக்கை உள்ளே தள்ளி மெள்ள மெல்லத் தொடங்கினேன்.
பாதாம் சுவையாவது, மணமாவது? எதுவுமேயில்லை! வெறும் தவிட்டைத் தின்றால் கூட ருசியும் வாஸனையும் இருந்திருக்கும்! கல்லைக் கல்கண்டாக்குபவன் தனது கல்கண்டிதயத்தால் எனக்குப் பாடம் புகட்டுவதற்காகவே கேக்கின் மதுரம் முழுதையும் சப்பி எடுத்துக் கொண்டு, அதைச் சப்பிட்டுப் போகச் செய்திருக்கிறான்!
ஆச்சரியம்தான்! அதற்குச் சற்று முன்பே நான் தின்ற லாடு, ஹல்வாக்களின் ருசி, வாஸனைகள் கொஞ்சம் வாயில் தங்கியிருப்பது இயல்புதானே? அந்த இயற்கையையும் தகர்த்து, நாக்கை அடியோடு வழித்து விட்டாற்போல இருந்தது.
“தீராத விளையாட்டு ஸாயி” நூலில் ஒருமுறை எனக்கு ஒவ்வாத காரச் சமையலை ஸ்வாமி எனக்கேற்ற அசட்டுத் தித்திப்பாக மாற்றியிருப்பதைக் கூறினேன். (எனக்கு ஏற்பது அசடாகத்தானே இருக்கும்?) அப்போதே அதற்கு எதிர்வெட்டாக இப்படியொன்றை அவர் என் அசட்டுத்தனத்துக்காகச் செய்ததையும் கூறியிருக்க வேண்டும். ஆயினும் அன்று அதற்கு மனம் இடம் கொடுக்கவில்லை. இன்று இதை மனம் திறந்து சொல்வதே பாதாம் கேக்காக இனிக்கிறது!மேலே ‘எதிர்வெட்டு’ என்று சொல்லியிருக்கிறேனே, அது சரியில்லை. காரத்தை இனிப்பாக்குவதற்கு எதிர்வெட்டு இனிப்பைக் காரமாக, அல்லது கசப்பாக மாற்றுவதுதான். ஆயினும் தண்டனை தரும்போதுகூட பாதாம் கேக்கை அப்படி எதுவும் செய்யாமல் வெறுமே சப்பிட்டுப் போகத்தானே செய்திருக்கிறது ஸ்வாமியின் மதுர மனம்?