ஸ்ரீ நாராயணப் பெருமான், சிறு குழந்தையாக அங்கு தவம் இருக்க வந்த பொது, அங்கிருந்த சிவபெருமான் கேதார்நாத்துக்குச் சென்றதாகவும், செல்லுமுன் தம்முடைய ஓர் அம்சத்தைப் பத்ரியிலே விட்டுவிட்டு, “என்னைத் தரிசித்த பிறகுதான் பக்தர்கள் தங்களைத் தரிசிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டதாகவும் ஒரு கதை இருந்து வருகிறது. அதனாலேயே ஸ்ரீ ஆதி கேதாரேசுவரர் சந்நிதியில் சிராவண மாதத்தில் ஆலயக் கமிட்டியினர் விசேஷ பூஜைகளும் ஹோமங்களும் செய்து வருகின்றனராம்.
இதைப் படித்ததிலிருந்து இமாலயத்தில் மற்றொரு யாத்திரை செய்ய வேண்டும் என்றும், அதைச் சாத்திர முறைப்படி முடித்து வரவேண்டும் என்றும் என்னுள் பேரவா எழத் தொடங்கியது. என் மனத்தில் எண்ணகளைத் தூண்டி, திட்டங்களைத் தீட்டித் தந்து, செயல்படுத்த அருளாசியும் வழங்கி என்னை இயக்கிவரும் மாபெரும் சக்தியின் துணையோடு 1974-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி “சதுர் தாம்” யாத்திரை புறப்பட்டேன். டெல்லியில் நண்பர் தயாராக இருக்க வேண்டும் என்பதும், காசியில் இருக்கும் ஸ்ரீ மடம் கண்ணன், ரிஷிகேசம் ஆந்திரா ஆசிரமத்தில் காத்திருக்க வேண்டும் என்பதும் முன்னதாக முடிவாயிற்று. இந்த இரண்டாவது யாத்திரையின் பொதுதான் வியாச குகையைப் படம் பிடித்தோம்.
புதுடில்லியில் நாங்கள் சந்தித்த ரானுவ அதிகாரி எங்கள் வருகையைப் பற்றி ரிஷிகேஷ், மாத்லி, கோபாங், ஜோஷிமட் முதலிய இடங்களிலுள்ள ரானுவ முகாம்களுக்கு முன்னறிவிப்புக் கொடுத்து, எங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தரும்படி அங்குள்ல தலைமை அதிகாரிகளுக்குத் தாக்கீது அனுப்பியிருந்தார். அந்த சிக்னலின் நகலுடன் நானும் நண்பரும் ரிஷிகேசத்துக்குப் புறப்பட்டோம்.
புறப்படுமுன் டாக்டர் ஸ்ரீதர் ராவ் என் பயணத்திற்கான ஒரு திட்டத்தை வகுத்துத் தந்திருந்தார். அதன்படி ரிஷிகேசத்திலிருந்து, நரேந்திர நகர் வழியாக மலைக்குள் பர்கோட் என்ற இடத்திற்கு, இரவு அங்கு தங்கி விட்டு மறுநாள் நாங்கள் யமுனோத்ரிக்குப் புறப்பட வேண்டும்.
ஆந்திர ஆசிரமத்தில் கண்ணனைச் சந்தித்த பிறகு எங்கள் திட்டப்படி உடனேயே யமுனைநதி உற்ப்பத்தியாகும் யமுனோத்ரிக்குப் புறப்படுவதாற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினோம். ரிஷிகேசத்திலிருந்து யமுனோத்ரி சுமார் 135 மைல் பயணம். 125 மைல் வரை பஸ்ஸிலோ காரிலோ செல்லலாம். பத்து மைல் நடந்துதான் ஆக வேண்டும். அதிலும் கடைசி நான்கு ஐந்து மைல மிகவும் கடினமான, செங்குத்தான ஏற்றம்.
நாங்கள் மூவரும் நேரெ ரயில் நிலையத்திற்கருகிலுள்ள எல்லைப் பாதுகாப்பு ரானுவ முகாமிற்குச் சென்றோம். எங்கள் வருகைக்காகக் காத்திருந்த “இன்சார்ஜ்” எங்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்று, “டீ” கொடுத்து உபசரித்தார். பின்னர், “நீங்கள் ஜம்னோத்ரி போய்விட்டு, நேரே மாத்லி காம்புக்குப் போய் விடுங்கள்.அங்கு உங்களுக்குத் தேவையான ட்ரஸ்களும் படுக்கைகளும் கொடுப்பார்கள். நான் இங்கிருந்து செய்தி அனுப்பி விடுகிறேன். ஜம்னோத்ரி வரை உங்களுக்குத் துணையாக ஒரு ஜவானை அனுப்பி வியக்கிறேன். அவரை மாத்லியில் ரிலீவ் பண்னி விடுங்கள். மாத்லியில் உங்களுக்கு வேறு ஒரு ஜவானும், ஓவர்கோட், பெட்டிங் கிட், ஷூ எல்லாம் தருவார்கள். அந்த ஜவான் உங்களுடன் கங்கோத்ரி, கோமுக் வரை வருவார். பிறகு அவரை மாத்லியில் ரிலீவ் பண்ணி அந்த சாமான்களை அங்கே டெலிவர் பண்ணி விடுங்கள். பிறகு கேதார்நாத்தை முடித்துக் கொண்டு ஜோஷிமட் போங்கள். அது பெரிய காம்ப். அங்கு தேவையான உதவிகளைப் பெற்று, வெறொரு ஜவானை அழைத்துக் கொண்டு பத்ரிநாத்துக்கும், மானா கிராமத்திற்கும் போங்கள்….” என்று ஒரே மூச்சில் என் யாத்திரையை முடித்து வைத்து விட்டார் அவர்! இந்த ஏற்பாடுகளையெல்லாம் கேட்ட போது எங்களுக்கு எங்களைப் பற்றிய அபிப்பிராயமே மாறி விட்டது. ஏதோ ஒரு பெரிய இமாலயச் சிகரத்தை வெற்றி காணச் செல்பவர்கள் போல் நினைத்துக் கொண்டோம். தன் மிலிட்டரி கிட் டைச் சுமந்து கொண்டு பின்னால் வந்த ஜவானுடன் டாக்சி ஸ்டாண்டை நோக்கி நடந்த போது, எங்களுக்கு சற்றுப் பெருமையாகவே இருந்தது.
காலை பதினோரு மணிக்கு டாக்சியில் நாங்கல் நரேந்திரநகர் நோக்கிப் போய்க் கொண்டிருந்தோம். அது ரிஷிகேசத்திலிருந்து பத்தாவது மைலில் இருக்கிறது. நாங்கள் சென்ற மலைப்பாதையிலிருந்து திரும்பிப் பள்ளத்தாக்கைப் பார்த்தோம். ரிஷிகேசமும், லட்சுமணஜூலாவும், சொர்க்காசிரமும், சிவானந்தா ஆசிரமமும், ஆந்திரா ஆசிரமும் , கீதாமந்திரும் மரங்களுக்கிடையே தெரிந்தும் தெரியாமலும் கொஞ்சம் கொஞ்சமாகக் கண்களிலிருந்து மறைந்து கொண்டிருந்தன. தொலைவில் நீரோடையாகத் தெரிந்த கங்கை நதி சமவெளியை நோக்கி அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது.
நரேந்திரனகர் 3,800 அடி உயரத்திலுள்ள ஓர் அழகான ஊர். அந்தக் காலத்தில் டெஹ்ரிகர்வால் சமஸ்தானத்தின் தலைநகராயிருந்தது. தற்போது டெஹ்ரி மாவட்ட்டத்தின் ஹெட்குவாட்டர்ஸ். ஊரின் உள்ளே நுழைந்ததும் அழகிய பெரிய நந்தி ஒன்றைக்க் ஆண்கிறோம். அங்கிருந்து சற்றுத் தொலைவில் ராதாகிருஷ்ணன் கோயில் ஒன்று இருக்கிறது.
அங்கிருந்து ஐந்தாவது மைலில் குஞ்சாபுரி என்ற இடத்தில் மலை மீது ஒரு தேவி கோயில் இருக்கிறது. அங்கு புலி மீது அமர்ந்திருக்கும் வனதுர்க்கையை அப்பகுதி மக்கள் மிகவும் சக்தி வாய்ந்தவளாகக் கருதுகிறார்கள். ஆடு பலியிடுகிறார்கள். உற்சவமும் நடைபெறுகிறது. கீழுள்ள கிராமத்தின் பெயர் குஜினி.
நரேந்திர நகரிலிருந்து டெஹ்ரி என்ற ஊர், நாற்பத்தோரு மைல் தொலைவில் உள்ளது. இடையில் சம்ப்பா என்ற ஊர் வருகிறது. முசோரியிலிருந்து ஒரு பாதை அங்கு வந்து செருகிறது. டெஹ்ரி பள்ளத்தாக்கில் நாம் பாகீரதியைச் சந்திக்கிறோம். அதன் இடக்கரையில்தான் டெஹ்ரி ஊர் அமைந்திருக்கிறது. நாங்கள் டெஹ்ரி ஊருக்குள் நுழையாமலேயே இடப்புறம் திரும்பி விட்டோம். அங்கிருந்து தராசு (Dharasu) எற ஊருக்குச் சென்றோம்.
தராசு என்ற ஊரில் நுழைந்ததும், ஒரு செக் போஸ்டில் எங்களை மடக்கி, நாங்கள் இந்தியர்களா, வெளிநாட்டவர்களா என்று சோதனை போட்டார்கள்.
அந்த செக்போஸ்டிலிருந்து ஒரு மைல் சென்றோம். மலைப்பாதை இரண்டாகப் பிரிகிறது. நேரே சென்றால் உத்தரகாசிக்கும், அங்கேயிருந்து கங்கோத்ரிக்கும் போகலாம். இடப்புறம் திரும்பும் பாதை நம்மை ஜமுனோத்ரிக்கு அழைத்துச் செல்லும்.
நாங்கள் இடப்புறம் திரும்பி எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். நல்ல அகலமான, ஆபத்தில்லாத அருமையான கார்ப் பாதை அது. எங்கள் இடப்புறத்தில் வானுயர்ந்த மரங்கள், வலப்புறம், தாவரங்களேயற்ற வறண்ட மலைத்தொடர்ச்சிகள். ஒவ்வொரு நிமிடமும் நாங்கள் உயர்ந்து கொண்டே சென்றோம்! சட்டென்று 7,000 அடி உயரத்திற்கு வந்து விட்டதை அங்கிருந்த ஒரு போர்டு அறிவித்தபோது எங்களால் நம்பவே முடியவில்லை.
பிறகு அங்கிருந்து ஒரே இறக்கம். அந்த இருபத்தாறு மைல் பயணம், “ஜிலுஜிலு”வென்று பரமசுகமாயிருந்தது.
மாலை நான்கு மணி சுமாருக்கு பர்கோட் என்ற ஊருக்கு வந்து சேர்ந்தோம். அங்கு அரசினர் தங்கும் விடுதியிருக்கிறது. அந்த ஊர் அண்மையில் டேராடூனுடன் இணைக்கப்பட்டிருந்ததால் லாரி, ஜீப் போக்குவரத்து பெருகத் தொடங்கியிருந்தது.
நாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து யமுனையின் முதல் தரிசனம் கிடைத்தது. அது வற்றிப் போய் ஒரு வாய்க்காலாக தொலைவில் ஓடிக் கொண்டிருந்தது. மறுநாள் அது உற்பத்தியாகும் இடத்தைக் காணப் போகிறோம் என்று நினைத்தபொது சற்றுத் “திரில்”லிங்காக இருந்தது.
முன்பெல்லாம் தராசு வரையில்தான் பஸ் போகுமாம். அங்கிருந்து ஜமுனோத்ரிக்கு நடையாகத்தான் செல்ல வேண்டுமாம். பின்னர், பர்கோட் வரையில் பஸ் வந்தது. அங்கிருந்து 25 மைல்கள் நடைப்பயணம். தற்போது இன்னும் பதினைந்து மைல்கள் பஸ் போகிறது. சேனாசட்டி என்ற இடத்தில் பஸ்கள் நிறுத்தப்பட்டாலும், கார்களும் ஜீப்புகளும் மேலும் ஒன்றரை மைல் செல்ல முடியும்.
ஜூன் மாதம் 21-ந் தேதி வெள்ளிக்கிழமை. யமுனையின் உற்பத்தி ஸ்தானத்தைத் தரிசிக்கப் புறப்பட்டோம். பர்கோட் கடைவீதியில் இருந்த ஒரு போர்டு கண்ணில் பட்டது. அதில் “கங்கானி 6.4 கி.மீ., குத்னோர் 15 கி.மீ., சேனாசட்டி 27 கி.மீ, ஹனுமான்சட்டி 17 கி.மீ., யமுனோத்ரி 47 கி.மீ” என்று எழுதப்பட்டிருந்தது. சுமார் முப்பது கிலோ மீட்டர் வரை நாங்கள் காரில் செல்லலாம். அதற்கு மேல் நடைதான்.
அது குறுகலான, கரடு முரடான பதை. சில இடங்களில் கன மழையின் காரணமாக பாதை பழுதுபட்டிருந்தது. கூலியாட்கள் அதை சீர்படுத்திக் கொண்டிருந்தனர்.
எங்களுக்கு இடப்பக்கத்தில் யமுனை ஓடிக் கொண்டிருந்தது. அலகநந்தாவையும், பாகீரதியையும், மந்தாகினியையும் பார்த்த கண்களுக்கு இது மிகச் சாதாரண ஓட்டமாக இருந்தது. அதன் கரைப்பகுதிகளும் வறட்சியாகத்தான் காணப்பட்டன. கங்கைக் கரையில் கண்ட வளத்தை இங்கு காண முடியவில்லை. பசுஞ்சோலைகளையோ, பயிர் சாகுபடியையோ காணோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக மலை மீது சிறு கிராமங்கள் தென்பட்டன. ஆனால் மனித நடமாட்டம் அதிகம் இல்லை.
நான்கு மைல் பயணத்திற்குப் பிறகு கங்கானி என்ற கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்கு யமுனாதேவிக்கு ஒரு கோயிலும், அதையொட்டி சிறு குளமும் இருப்பதாக முன்பே படித்திருந்ததால் காரை நிறுத்தச் சொல்லி கோயில் இருக்கும் இடத்தை விசாரித்தோம். பாதையிலிருந்து நூறு அடி கீழே இறங்கிப் போக வேண்டும் என்று அருகில் நின்றிருந்த ஒரு ஆசாமி கூறவெ, இறங்கி நடந்தோம்.
அந்தச் சிறு குளமும், அதையொட்டியுள்ள கோயிலும் யமுனையின் கரையில் இருக்கின்றன. அந்தக் கோயிலில் யமுனா தேவிக்கும், கங்கா தேவிக்கும் சிலா வடிவங்கள் காணப்படுகின்றன. அந்தக் குளத்தில் பாதாள வழியாக கங்கை வந்து கலக்கிறது. பின்னர் அக்குளத்தின் நீர் யமுனையுடன் கலக்கிறதாம். ஒரு வகியயில் பார்த்தால் கங்கானியிலேயே கங்கையும், யமுனையும் சங்கமமாவதாகக் கருத வேண்டும்.
இடையிலிருக்கும் பெரிய மலைதான் கங்கையையும் யமுனையையும் பிரித்து வைத்திருக்கிறது. அது இல்லா விட்டால், அலகாபாத்தில் சங்கமம் ஆகும் இவ்விரு நதிகளும் கங்கானியிலேயே சங்கமமாகி இருக்கும். இம்மலைக்கு இருபுறமும், பத்து மைல் தொலைவில் கங்கையும், யமுனையும் ஓடிக் கொண்டிருக்கின்றன.
அடுத்து குத்னோர் என்ற சிற்றூரும் அதையடுத்து சேனாசட்டி என்ற ஊரும் வந்தது. சியானாசட்டி, என்பதுதான் சேனாசட்டி ஆகியிருக்கிறது. அங்கு இருபத்தைந்து பஸ்களுக்கு மேல் நின்று கொண்டிருந்தன. அத்தனையும் டூரிஸ்ட் பஸ்கள். எல்ளோரையும் அங்கே இறக்கிவிட்டு விடுகிறார்கள். பிறகு நடையோ, தண்டியோ, கண்டியோ, மட்டக் குதிரை சவாரியோதான். அவரவர் சௌகரியம் போல் அங்கிருந்து யமுனோத்ரி பயணத்தைத் தொடர வேண்டும்.
சேனாசட்டியில் தங்குவதற்கு அறைகள் இருக்கின்ரன. ஆகாரத்திற்கு சிற்றுண்டிசாலை இருக்கிறது. யமுனோத்ரிக்கு செல்பவர்களும், யமுனோத்ரியிலிருந்து திரும்புபவர்களும் அங்கு கூடுவதால் அந்த இடம் எப்போதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். அசதியாக ஓய்வெடுத்துக் கொள்பவர்களும், துணிமணிகளைத் துவைத்து உலர்த்துபவர்களும், சமைத்து சாப்பிடுபவர்களும், மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு பஸ்ஸுக்கு ஓடுபவர்களுமாக சேனாசட்டி “ஜே ஜே” என்றிருக்கிறது நான் சந்தித்துப் பேசியவர்களில் பாதிக்கு மேல் மத்தியபிரதேசத்தைச் செர்ந்தவர்களாகவும், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தார்கள். முக்கால்வாசிப்பேர் படிப்பு எழுத்து அதிகமில்லாத கிராமவாசிகள். ஆண் பெண் எல்லோருமே அநேகமாக ஐம்பது வயதைக் கடந்தவர்கள்.
எத்தனையோ தொலைவிலிருந்து புறப்பட்டு, எந்தவித சௌகரியத்தையும் எதிர்பார்க்காமல், எதிர்ப்படும் தொல்லைகளையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் குடும்ப்ம குடும்பமாக, நாட்கணக்கில் இப்படிப் பயணம் செய்கிறார்களே! இவர்களை ஊக்குவிக்கும் அந்த சக்திதான் பக்தியா? இவர்கள் பெறத் துடிக்கும் பலந்தான் என்ன? அதற்குப் பெயர் முக்தியா?
ஏன் இமாலயப் பயணங்களின் பொது இத்தகைய கேள்விகள் என் நெஞ்சத்தில் எழுந்த வண்ணம் இருக்கும். சேனாசட்டியிலும் அந்தக் கேள்விகள் மீண்டும் மீண்டும் எழுந்தன.
சேனாசட்டியிலிருந்து ராணாசட்டிக்குச் சென்றபோது மலைப்பயணம் உள்ளத்தைக் கொள்ளை கோள்வதாக இருந்தது. மேலே போக்ப போக, கீழே மலைப்பாம்புபோல் வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதையும், சேனாசட்டியிலிருந்த பாலமும், அதனருகில் வரிசையாக நின்ற பஸ்களும் கொலுக் காட்சியாகத் தோற்றம் அளித்தன.
ராணாசட்டியை அடுத்துள்ள பாடியாசட்டி என்ற இடத்தில் டாக்சி ஓட்டுநர் புஷ்க்கர் சட்டென்று நிறுத்தி விட்டு, “ஸார், இனிமேல் வண்டி போகாது. நீங்கள் நடந்துதான் போக வேண்டும்” என்றார். அங்கு ஒரு டீக்கடை இருந்தது. “நீங்கள் நாளைக் காலையில் திரும்பிவ் அரும் வரையில் நான் இங்கேயே இருக்கிறேன், போய் வாருங்கள்” என்று விடை கொடுத்தார்.
“சாமான்களெல்லாம் ஜாக்கிரதையாக இருக்குமா?” என்று கேட்டேன். அந்தக் காரின் டிக்கியிலிருந்த ஒரு பெட்டியில் நிறைய பணம் இருந்தது. அந்தக் கவலைதான் எனக்கு!
“அதைப்பற்றி நீங்கள் கவலைப்படாமல் போய் வாருங்கள். இது டில்லியில்லை, உத்தரகண்ட்” என்று பெருமையுடன் கூறினார் புஷ்க்கர். அவரிடம் ஏன் அப்படிக் கேட்டோம் என்று அவமானத்தால் குன்றிப் போனேன் நான்.