பத்ரி கேதார் – 13

இங்கிருந்து சுமார் 10 மைல்கள். ஒரே மலையேற்றம்தான். கிட்டத்தட்ட 8,000 அடி உயரத்தில் இருந்தோம்.  இன்னும் 3,000 அடி ஏறியாக வேண்ட்ம். எங்களுக்குத் துணையாக நிறைய  பேர் வந்து கொண்டிருந்தார்கள். தடியை ஊன்றிக் கொண்டு, தலையில் மூட்டையுடன் “ஜம்னா மாய்க்கு ஜெய்”, “கங்கா மாய்க்கு ஜெய்” என்று கோஷமிட்டவாறே பல முதியவர்கள். வந்தார்கள். அப்பா! என்ன வேகம்? மலையில் நடப்பதற்கென்றே பிறந்தவர்களோ! பின்னால் வந்த சிலர் எங்களை முந்திக் கொண்டு சென்றார்கள். வயதான பெண்மணி ஒருத்தி தண்டியில் சென்றார். கிழவர் ஒருவர் தன் உடலை மூட்டையாக முடக்கிக் கொண்டு கண்டியில் அமர்ந்து சென்றார். பணக்கார அம்மாள் ஒருத்தி, “ஜம்”மென்று குதிரைச் சவாடி செய்து கொண்டு வந்தார்.

நாற்காலி போன்ற மரத்தாலான ஆசனத்திற்குப் பெயர்தான் கண்டி. இதை நான்கு பேர் சுலபமாகச் சுமந்து செல்கிறார்கள். அதையாவது ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்தக் கண்டியைத்தான் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. கூடை போன்ற ஆசனத்தைக் கூலியாள் ஒருவன் தன் முதுகில் கட்டிக் கொள்கிறான். அதில் ஒருவரோ அல்லது ஒருத்தியோ ஏறி அமர்ந்து கொள்கிறார்கள். அந்தச் சுமையை அந்தக் கூலி தூக்கிக் கொண்டு முன்னே சாய்ந்தபடி, மெள்ள மெள்ள, தள்ளாடித் தள்ளாடி மலையேறுகிறான். அது என்ன சௌகரியமான பாதையா? ஆபத்துக்கள் நிறைந்த பாதை. பாறாங்கற்கள் குத்துகின்றன; கூழாங்கற்கள் வழுக்குகின்றன. சில இடங்களில் நீர் கசிந்து ஓடுகிறது. சற்று அஜாக்கிரதையாகச் சென்றால் அதோகதிதான்! ஆபத்துக்கள் ஒருபுறம் இருக்க, மனிதச் சுமையோடு இந்தக் கூலிகள் ஏறி இறங்குவதைப் பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது.

அடுத்து நாங்கள் ஹனுமான்சட்டி என்ற இடத்தை நெருங்கினோம். அங்கு ஹனுமான் கங்காவும், யமுனையும் கலக்கிரது. பாலத்தைக் கடந்து சென்றால் ஹனுமான்சட்டி என்ற சிற்றூர் வருகிறது. பத்ரிநாத் செல்லும் வழியிலுள்ள ஹனுமான்சட்டியிலுள்ளது போல் இங்கு ஆஞ்சநேயர் கோயில் ஒன்றுமில்லை. பயணிகள் தங்குவதற்கான சில விடுதிகளே இருக்கின்றன.

நாங்கள் நடந்து கொண்டேயிருந்தோம். எனக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. கண்ணனு, நண்பரும் வழியில் டீ சாப்பிட்டார்கள். எனக்கு அந்த டீ பிடிக்கவில்லை. அங்கெல்லாம் ஏதோ ஒரு காட்டு மரத்தை வெட்டி விறகுகளாகப் பிளந்து அப்படியே பச்சையாக வைத்து அடுப்பெரிக்கிறார்கள். அதிலிருந்து ஒரு விதமான எண்ணெய் கசிகிறது. அதனால் அது அணையாமல் எரிகிரது. மழையாலும், பனியாலும் வருடம் பூராவும் அவதிப்படும் மக்களுக்காக  இயற்கை படைத்துத் தந்திருக்கும் அபூர்வ விறகு அது. ஆனால் அதிலிருந்து வரும் புகையின்னாற்றம் என் நாசிக்கு ஒத்துக் கொள்ளவில்லை. அது வயிற்றைக் குமட்டியது. அதனால் எங்காவது டீக்கடிய வருகிரது என்றாலே எனக்கு “அலர்ஜி”. அதுவும் அங்குள்ள ஹைதர் காலத்து ஆடைகளும், குதிரைச் சாணமும், சிறுநீரும் வயிற்றைப் புரட்டியெடுத்தது. இந்த அலர்ஜி கங்கோத்ரி, கேதார்நாத் பயணங்கள் வரை தொடர்ந்து, என் உடல் நிலையைப் பெரும் சோதனைக்குள்ளாக்கியது.

நல்லவேளை, கண்ணன் தன் வீட்டிலிருந்து கோதுமை மாவு லாடு கொண்டு வந்திருந்தார். அது எனக்கு மிகவும் சௌகரியமாக இருந்தது. பசிக்கும்போதெல்லாம் அதைக் கொஞ்சம் வாயில் விண்டு போட்டுக்கொண்டு தண்ணீர் குடித்தால் ஒரு மாதிரியாக இருக்கும். கடைகளில் கிடைக்கும் வறட்டு ரொட்டியும், சப்ஜியும் எனக்குப் பரம விரோதிகளாகிவிட்டன. கைவசம் இருந்த கோதுமை உருண்டைகள் தீர்ந்து விட்டால் எனுணவுப் பிரச்னையை எப்படி சமாளிப்பது என்ற கவலைக் கோடுகள் கண்ணனின் முகத்தில் படரத் தொடங்கி விட்டதை நான் கவனிக்கத் தவறவில்லை. எல்லாவிதமான ஆகாரத்திற்கும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள முடியாதவர்களுக்கு இமாலயப் பயணம் ஓரளவு கடுமையாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வயிற்றுப் பசியுடௌம், உடற் களைப்புடனும் நான் சற்றுத் தட்டுத் தடுமாறி நடப்பதைக் கண்ணன் கவனித்து விடவே என் அருகிலேயே நடந்து வந்தார். வெய்யில் ஏற ஏற, “ஜான்கிசட்டி சீக்கிரம் வராதா?” என்று ஏங்கத் தொடங்கினென்.

அவர்கள் “ஜான்கி” என்று அழைத்ததால் அது அன்னை ஜானகியைக் குறிப்பதாக இருக்கும் என்று முதலில் நினைத்தேன். ஆனால், சீதாபிராட்டிக்கும் அந்த இடத்திற்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை என்று பின்னரே தெரிந்தது.

ஓர் அசுத்தமான கிராமத்தைக் கடந்துதான் ஜான்கிசட்டிக்குச் செல்ல வேண்டும். அந்தக் கிராமத்தின் பெயர் பீஃப். அங்கு பாழடைந்து போன ஓரிரண்டு தங்கும் விடுதிகள் இருந்தன. முன்காலத்தில் யமுனோத்ரிக்கு வந்தவர்கள் அங்கு ஓர் இரவு தங்கிவிட்டுச் செல்வார்கள் போலிருக்கிறது.

யமுனோத்ரிக்குச் செல்ல அங்கு கோவேறு கழுதைகளும், மட்டக் குதிரைகளும் கிடைக்கின்றன. தேவையான்வர்கள் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.  அந்த ஊரில் லட்சுமிநாராயணர் கோயில் ஒன்றிருக்கிறது.

அங்கிருந்து பார்த்தால், யமுனையின் அக்கரையில் ஒரு கிராமம் தெரிகிறது. அதன் பெயர் “கர்சாலி”. அதுதான் இந்தப் பகுதியின் கடைசிக் கிராம.ம். பத்ரிநாத் பகுதியில் மானா கிராமம் போல் கர்சாலி இந்தப் பகுதியின் கடைசிக் கிராமம். மலையைக் கடந்தால் திபெத்தின் எல்லை தொடங்குகிறது. இந்தக் கர்சாலி கிராமத்தில் யமுனோத்ரி கோயிலில் பணிபுரியும் பண்டாக்கள் குடியிருக்கிறார்களாம். அந்தக் கிராமத்தில் சிறு கோயில் ஒன்று இருப்பது நாங்கள் நின்ற இடத்திலிருந்து தெரிந்தது. விசாரித்தபோது அது யமனுடைய கோயில் என்றார்கள். யமனுக்குக் கோயிலா? ஆமாம், ஒரு புராணத்தின்படி சூரிய புத்திரியான யமுனா யமனுடைய சகோதரியாம். அதற்காக அவனுக்கு அங்கு கோயில் இருக்கிறதாம். அங்கு போய்வ் ஆலாம் என்று முதலில் நினைத்ட்ஹோம். கீழிறங்கி நதியைக் கடந்து அங்கு ஏறிச் செல்வது அத்தனை எளிதானதாகத் தோன்றவில்லை. அங்கு போய் வந்தால், அன்று மாலை யமுனோத்ரிக்குச் செல்ல முடியாது. கர்சாலி கிராமத்திற்குச் சென்று வரும் எண்ணத்தைக் கைவிட்டு, மேலே நடந்தோம்.

ஜான்கிசட்டிக்கு வந்து சேர்ந்தோம். மணி பன்னிரண்டுக்கு மேலாகி விட்டது. அங்கு சிறு கடைவீதி இருந்தது. அதில் சுமாரான ஓர் ஓட்டல் இருப்பது தென்பட்ட போது எனக்குச் சற்று தென்பு ஏற்பட்டது. கொஞ்சம் சாதமும் தயிரும் கிடைத்தால் பொதுமே!

கடைவீதிக்குச் சென்ற கண்ணனும், நண்பரும் ஓட்டலில் கிடைத்தைச் சாப்பிட்டு விட்டு, எனக்குக் கொஞ்சம் “சாவல்” மட்டும் வாங்கி வந்திருக்கிறார்கள். வேறு ஒன்றுமில்லை. சாதம்தான்! “தஹி” கிடைக்கவில்லையாம். அதாவது தயிர்! என்ன செய்வது? கையில் வைத்திருந்த ஊறுகாய்களையும், கறிவேப்பிலைப்பொடியையும் போட்டு, இரண்டு உருண்டைகள் உருட்டி வாயில் போட்டுக் கொண்டேன். அதற்குமேல் வேண்டியிருக்கவில்லை. வயிற்றைக் குமட்டியது!

“என்னப்பாது! எதையுமே சாப்பிடாவிட்டால் என்ன செய்வது? உன்னை யமுனோத்ரிக்கு அழைத்துக் கொண்டு போய் வருவது பெரிய பாடாயிருக்கும் போலிருக்கிறதே” என்று கண்ணன் அலுத்துக் கொண்டார்.

நான் “டல்”லடித்தது நண்பருக்கு கவலையளித்திருக்க வேண்டும். என்னை உற்சாகப் படுத்துவதற்காக, “சார், இங்கே ஒரு விசேஷம் இருக்கு. மார்க்கெட்டுக்குப் பக்கத்திலே ஒரு ஹாட் வாட்டர் ஸ்ப்ரிங் இருக்கு. அந்தத் தண்ணீர் ரொம்ப சுடவில்லை. அதை மார்க்கண்டேய தீர்த்தம் என்கிறார்கள. அதைப் போட்டோ பிடித்துக் கொண்டு விட்டேன்” என்றார்.

“மார்க்கண்டேய தீர்த்தமா?” என்று கேட்டேன் நான்.

ஆமாம், ஏன் அந்தப் பெயர் வந்தது என்று கேட்டேன். இங்கே மார்க்கண்டேயர் தபஸ் பண்ணியிருக்கிறாராம், என்றார் நண்பர்.

மனி ஒன்றாகி விட்டது. இனி நேரம் கடத்த முடியாது என்று பயணத்தைத் தொடருவதில் தீவிரம் காட்டத் தொடங்கினார் கண்ணன். ஜவானிடம் சாமான்களெல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கச் சொல்லிவிட்டு, யார் யார் எதை எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்தார்.

“ஏம்ப்பா, இன்னும் நாலரை மைல் தூரம் இருக்காம். போகப் போக ரொம்ப ஏற்றமாம். மூச்சு வாங்குமாம். நீ அத்தனை தூரம் நடப்பேன்னு எனக்குத் தோணலே. பேசாம நான் சொல்றதைக் கேளு. நீ குதிரைலே வந்துடு. நாங்க நடந்துடறோம்” என்றார் கண்ணன், என்னைப் பார்த்து.

நான் சற்றுத் தயங்கினேன்.

“நான் சொன்னாக் கேளு. பயம் ஒன்றுமில்லை. உனக்கு அதான் சௌகரியம். சிரமம் இல்லாமே மூணு மணிக்கெல்லாம் யமுனோத்ரி போயிட்டு, எல்லாத்தையும் பார்த்து, போட்டொ எடுத்துக் கொண்டு, ஆறு மணிக்குள்ளே கீழே இறங்கிடலாம். ராத்திரி இங்கே தங்கிவிட்டு, நாளைக் காலையிலே புறப்பட்டு, ராணாசட்டிக்குப் போய் அங்கிருந்து காரில் மத்தியானத்திற்குள்ளே உத்தரகாசி போய்ச் சேர்ந்துடலாம். யோசிக்காதே. கிளம்பு. ஒரு குதிரை கூடப் பேசி வெச்சுட்டேன். இருபத்தைந்து ரூபா வாடகை. பெஸ்ட் கிளாஸ் குதிரை. அதோ பாரு, அந்த வெள்ளைக் குதிரைதான்….. என்று சிறு குழந்தைக்கு மிட்டாய் தந்து ஆசை காட்டுவது போல் குழைந்தார் கண்ணன்.

நான் எழுந்து குதிரையை நோக்கி நடந்தேன்.  குதிரைக்காரனொரு சிறு பாறையை ஒரு சிறு பாறையை ஒட்டினாற்போல் குதிரையை நிற்கவைத்து, பாறையின் மீது என்னை  ஏறச் சொல்லி குதிரையின் முதுகைச் சுற்றிக் காலைத் தூக்கிப் போடச் சொன்னான். அவன் சொன்னபடியே செய்தேன்.

“அம்மட்….” – கத்திவிட்டேன் நான்.

திடீரென்று சுளுக்கிக் கொண்டு விட்டமாதிரி தொடையில் சுளீர் என்று ஒரு வலி. காலைச்ச் அட்டென்று எடுத்து விட்டேன்.

“எனக்குக் குதிரை வேண்டாம். நடந்தே வருகிறேன்” – கண்னனிடம் மன்றாடினேன் நான்.

“காலை அவ்வளவு தூக்காதே…..மெள்ள…..இதோ…..இப்படிப் போடு” என்று அருகில் வந்து சொல்லிக் கொடுத்தார் கண்னன்.

அதே மாதிரி காலைத் தூக்கினேன்.

“ஐயோ….அம்மாடீ…..!”

உயிர் போவது போல் எங்கோ நரம்பு ஒன்று இழுத்தது.

“சே, நான் ஏற மாட்டேன். பிராணன் போனாலும் சரி, நடந்துதான் வருவேன்” – நான் உரக்க இரைச்சல் போட்டேன்.

குதிரைக்காரன் கேலியாகச் சிரித்தார். தொலைவில் பீடி பிடித்துக் கொண்டிருந்த எங்கள் வழித்துணை ஜவான் சற்று மரியாதையுடன் புன்னகை புரிந்தான்!

மறுபேச்சு பேசாமல் நான் யமுனோத்ரியை நோக்கி நட்ககத் தொடங்கினேன். மூவரும் பின்னால் வந்தனர்.

நூறு அடி நடந்திருப்பேன். எதிரில் நான் கண்ட காட்சி என் நெஞ்சை உருக்கியதோடு என் இதயத்தில் நம்பிக்கையை ஊட்டுவதாக இருந்தது.

ஒரு காலை இழந்திருந்த சாது ஒருவர் ஊன்றுகோல்களுடன், யமுனோத்ரியிலிருந்து வேகமாக திரும்பிக் கொண்டிருந்தார்.

மிகக் கடினமான பாதையில், செங்குத்தான ஏற்றத்தில் நாலரை மைல்கள் பயணம் செய்துவிட்டு வரும் உடல் ஊனமுற்ற அந்தச் சாதுவின் மன வலு எத்தகையதாக இருக்க வேண்டும்? அவரைக் கண்டதும் என் உள்ளத்திலும் சிறிது வீரம் பிறந்தது.

எங்களுக்குப் பின்னால் ஏழெட்டு யாத்திரிகர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் மிகவும் வயதானவர்கள். இரண்டு மூன்று பேர் கிழவிகள். நூறு அடிக்கு ஒரு தரம், உட்கார்ந்து இளைப்பாறி விட்டு வந்தார்கள். அவர்களுடன் அங்கங்கே நானும் சற்று உட்காரத் தொடங்கினேன்.

திருப்பதிக்குப் போகும் வழியில் உள்ள “முழங்காள் முடிச்சை”ப் பற்றி பிரமாதமாகப் பேசுகிறோமே, இங்கே முழுக்க முழுக்க முழங்கால் முடிச்சுக்கள்தான். முட்டி உடைந்து போகிறது. மூச்சு வாங்குகிறது. உண்மையில் திணறி விட்டேன். கால்கள் உதறத் ஆரம்பித்தன. ஓரடி எடுத்து வைப்பதே மிகவும் சிரமமாகி விட்டது. ஜவானும், கண்னனும் மாறி மாறிக் கைலாகு கொடுத்து என்னை நடத்திச் சென்றனர். என் நிலைமையைக் கண்டபோது எனக்கே சற்று அவமானமாக இருந்தது.

அப்போது என்னைக் கடந்து மேலே சென்று கொண்டிருந்த ஒரு சாது என்னைப் பார்த்தார், சிரித்தார்; நானும் சிரமப்பட்டு பதிலுக்குச் சிரித்தேன். தன் கையிலிருந்த தடியை என்னிடம் தந்துவிட்டு, “இதை ஊன்றிக் கொண்டு நடந்து வாருங்கள், அத்தனை சிரமம் தெரியாது” என்று கூறி கைத்தடியை கொடுத்துப் போய் விட்டார்.

தெய்வம் எப்படியெல்லாம், எங்கெல்லாம் நம் உதவிக்கு வௌகிறது! அந்த சாது யாரோ, நான் யாரோ! அவருகுஎ ழுபது வயதுக்கு மேலிருக்கும். கூனல் முதுகு, மூட்டையை வேறு சுமந்து கொண்டிருக்கிறார். என்னைவிட, அவருக்குத்தான் கைத்தடி மிகவும் தேவை. அதை எப்படி என்னிடம் கொடுத்தார்? ஏன் கொடுத்தார்?

தடியை ஊன்றிக் கொண்டு அடிமேல் அடியெடுத்து வைத்து, மாலை ஐந்து மணிக்கு யமுனோத்ரி வந்து சேர்ந்தோம். உறைபனி மூடிய மலைச்சிகரங்கள். கருமேகங்களின் பின்னணியில் பளிச்சிட்டன. “எங்களை வா வா” என்று வரவேற்றன.