கங்கனானிக்குப் பிறகு பாகீரதி புது அழகுடன் பூத்துக் குலுங்குகிறாள். நாங்கள் உயரே போகப் போக அவள் வடிவும் விரிவும் அமைதியும் பெறுகிறது. அகண்டக் ஆவேரியைத் தரிசிக்கும் ஆனந்த அனுபவத்தைப் பெறுகிறோம். தேவப்பிரயாகையில் கர்ஜித்துச் சுழன்று சுழன்று ஓடும் பாகீரதிக்கும், இங்கு மௌனமாக ஓடும் பாகீரதிக்கும் எத்தனை வேறுபாடுகள்! முட்டி, மோதி “ஓ”வென்ற பேரிரைச்சலுட்ன முழங்கினாளே அந்தப் பாகீரதிக்கும், இவளுக்குமிடையே எத்தனை வேற்றுமை? அடையாளமே தெரியவில்லையே!
திடீரென்று ஒரு திருப்பம். வேகமாகப்போய்க் கொண்டிருந்த எங்கள் கார் சட்டென்று நின்றது. “என்ன?” என்று கேட்டேன் நான். “அதோ பாருங்கள்” என்று காட்டினார் புஷ்க்கர். எட்டிப் பார்த்தேன். ஒரு மலையிலிருந்து சிறு சிறு கூழாங் கற்கள் உருண்டோடி வந்து கொண்டிருந்தன. யாரோ மேலேயிருந்து அவற்றை உருட்டி விடுவது போல் அவை ஒரே சீராக விழுந்து கொண்டிருந்தன.. இறங்கிச் சென்று, அருகில் நின்று அந்த அழகானக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
“உங்களுக்கு என்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா? காரில் வந்து ஏறிக் கொள்ளுங்கள். மலை சரியப் போகிறது என்பதற்கு இது அறிகுறி. பெரிய பெரிய பாறைகளாக தலையில் வந்து விழும். ஓடி வாருங்கள்” என்று கூறி, புஷ்க்கர் எங்களை அழைத்துச் சென்று விட்டார். உண்மைதான். அங்கு போய் நின்றது அசட்டு தைரியம் மட்டுமல்ல, மிகவும் பொறுப்பற்ற செயலும் கூட என்று சற்றைக்கெல்லாம் தெரிந்து விட்டது. எங்கள் கார் அங்கிருந்து சற்று நகர்ந்த உடனேயே அம்மலையிலிருந்து மண்ணும் பாறையும் சரிந்து “தடால்” என்ற சத்தத்துடன் கீழே விழுந்தது.
மணி ஆறு, ஆறரை ஆகிவிட்டது. “கோபாங்” காம்ப் போய்ச் சேருவதாற்கு இன்னும் பத்து பன்னிரண்டு மைல்கள் சென்றாக வேண்டும். வளைந்து வளைந்து சென்றாக வேண்டும். அப்பாதை குறுகலாகிக் கொண்டு போவதாலும்,இருட்டு நேரமானதாலும், நாங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தோம்.
இருளில் இயற்கையின் கோலம் சட்டென்று மாறிவிட்டிருந்தது. பச்சைப் பசெலென்றிருந்த மலைகள் கரும் பாறைகளாக “ஹோ”வென்று நின்றிருந்தன. பிறைச் சந்திரன் இமய உச்சியின் விளிம்பின் மீது மின்னிக் கொண்டிருந்தது. அக்காட்சி அந்த சந்திரசூடனையே நினைவுபடுத்தியது. சலசலத்துக் கொண்டிருந்த பாகீரதியைத் தவிர, அங்கு வேறு சப்தமே இல்லை.தொலைவில் வெள்ளிப் பனிமலையின் சிகரம் பளபளத்துக் கொண்டிருந்தது. லேசாகக் குளிரவும் தொடங்கி விட்டிருந்தது. எங்கள் ஸ்வெட்டர், மஃப்ளர், ஷால் எல்லாம் பக்குள்ளிருந்து வேகமாக வெளிவந்தன.
ஹர்சீல், தராலி என்ற ஊர்களைக் கடந்து சரியாக இரவு ஒன்பது மணிக்கெல்லாம் “கோபாங்” ஐ.டி.பி.பி. காம்ப்பிற்கு வந்து சேர்ந்தோம். சரியான காட்டுப்பகுதி. ஈரப்பசையோடு குளிர்காற்று தாக்கிக் கொண்டிருந்தது. “மினுக் மினுக்” என்று ஓரிரு ஹரிக்கேன்விளக்குகள் மட்டும் மின்னிக் கொண்டிருந்தன. அடக்கமாக அங்கு சுருண்டு படுத்துக் கொண்டிருந்த ஒரு நாய், சிலிர்த்துக் கொண்டு எழுந்து நின்றது. ஆனால், அது எங்களைப் பார்த்து குரைக்கவேயில்லை. ராணுவ உடையிலிருந்த ஜவான் ஸ்லீந்தர் சிங்கை தங்கள் ஆசாமியாக அந்த இருட்டிலும் அது அடையாளம் கண்டு கொண்டிருக்க வேண்டும்!
ஸலீந்தர் சிங் மட்டும் காரிலிருந்து இறங்கிச் சென்று யாரையோ எழுப்பி விசாரித்து, எங்களுக்காக ஏற்பாடு செய்து வைக்கப்பட்டிருந்த கூடாரத்திற்கு அழைத்துச் சென்றார்.
குளிர் தாங்க முடியாமல் போய் விடவே, மாத்லி காம்பில் கொடுத்த ஃபர்கோட்டை எடுத்து மாட்டிக் கொண்டோம். அது புஸுபுஸு வென்றிருந்ததால் ஏதோ விண்வெளி வீரர்களைப் போல் நாங்கள் தோற்றமளித்தோம். தலையையும், காதுகளையும் நன்றாக மூடிக் கொண்டு கூடாரத்திற்கு வெளியே வந்து வானத்தைப் பார்த்தோம். அம்மாதிரியான ஒரு காட்சியை நான் அது வரை கண்டதே இல்லை.
பிறைச்சந்திரன் கண்ணிலிருந்து மறைந்து விட்டிருந்தாலும், கருமலைச் சிகரங்களுக்குப் பின்னால் விளக்கு எரிவது போல் லேசாக வெளிச்சம் தெரிந்தது. நீலவானம் என்ற சொற்றொடருக்கு அன்றுதான் எனக்குப் பொருள் புரிந்தது. அம்மாதிரியான ஓர் அபூர்வ வண்ணக் கலவையை ஒப்பற்ற ஓவியனாலும் குழைத்து விட முடியாது. பஞ்சுத் திட்டுகள் போன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக மிதந்த வெண் மேகங்கள். அந்த நீள வண்ணத்தை மேலும் தெளிவுபடுத்திக் காட்டின. நட்சத்திரங்கள் லட்சக்கணக்கில் ஜொலித்துக் கொண்டிருந்தன. சென்னையில் ஒரே சமயத்தில், ஒரே இடத்தில் அத்தனை நட்சத்திரங்களைப் பார்க்கவே முடியாது. புதிய பூமியில் நின்று அந்தப் புதிய வானத்தைப் பார்த்துப் பார்த்து நாங்கள் வெகு நேரம் ரசித்துக் கொண்டிருந்தோம்.
அப்போது ஓர் ஆசாமி அங்கு வந்தார். “சார், ரொம்பக் களைப்பா வந்திருப்பீங்க. என்ன சாப்பிடறீங்க?” என்று அன்புடன் உபசரித்தார். தமிழில்தான். இமயத்தில், 6,500 அடி உயரத்தில், நம் எல்லைப்பகுதியில்,தமிழ் நாட்டிலிருந்து பல நூறு மைல்களுக்கு அப்பாலுள்ல இமயமலைக் காட்டுக்குள்ளே, நிசப்தமான இரவில் சற்றும் எதிர்பாராமல் திடீரென்ரு தாய்மொழி ஒலித்தபோது, அதன் இனிமையும், குளுமையும் பன்மடங்காகக் கேட்டேன்.
நாங்கள் சூடாக காப்பி மட்டும் வாங்கி அருந்தி விட்டுப் படுப்பதார்கான ஏற்பாடுகளைக் கவனித்தோம்.
அந்தக் காம்ப்பிற்குப் பின்புரம் உ.பி. போலீஸ்காரர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர். அந்த நாடோடிப் பாடல்கள் காதுக்கு இனிமையாக இருந்தன.
உறங்குவதற்காக “பெட்டிங் கிட்”டைப் பிரித்து அதனுள் புகுந்து கொண்டு “ஸிப்”பைப் போட்டுக் கொண்டோம். அதன் சுகத்தை அதனுள் படுத்தவர்கள்தான் உணர முடியும். எந்தக் குளிரும் ஒன்றும் செய்ய முடியாது, சொர்க்கம்தான்!
போலீஸ்காரர்களின் நாடோடிப் பாடல். இதயத்தில் அமைதியைக் கிழித்துக் கொண்டு எங்களுக்குத் தாலாட்டாக, தெம்மாங்குத் தேனாக ஒலித்துக் கொண்டிருந்தது. உறக்கம் ஆதரவுடன் எங்களைக் கட்டித் தழுவியது.
மறுநாட்காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து கங்கோத்ரிக்குச் செல்வதாகத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், நாங்கள் கண்விழித்தபோதே மணி ஏழாகி விட்டிருந்தது. பிசுபிசு வென்று மழைத் தூறிக் கொண்டிருந்தது. கங்கோத்ரியை அடைய இன்னும் ஒன்பது மைல்கள் சென்றாக வேண்டும். அதில் ஒரு மைல் பள்ளத்தாக்கில் இறங்கி நடந்தாக வேண்டும். வழுக்குப் பாறைகளில் நடப்பது ஆபத்து நிறைந்தது என்றும், வானம் வெளுத்த பிறகு செல்வதுதான் நல்லது என்றும் “காம்ப்”பிலிருந்த அதிகாரி அறிவுரை கூறவே வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே காத்திருந்தோம்.
சரியாக 10.30 க்கு “கோபங்” ரானுவ காம்ப்பை விட்டுப் புறப்பட்டு, பதினைந்து நிமிடங்கல் கழித்து 9,150 அடி உயரத்திலிருக்கும் “லங்க்கா” என்ற இடத்தில் எங்கள் டாக்சி போய் நின்றது. அங்கிருந்து ஒரு மைல் நடந்து அக்கரைக்குச் செல்ல வேண்டும். கூலிகளைப் பிடித்து, சாமான்களையெல்லாம் அவன் முதுகில் கட்டிவிட்டு நாங்கள் நடக்கத் தொடங்கினோம். இங்கெல்லாம் கூலிகளுக்கு ஏஜண்டுகள் இருக்கிறார்கள். சாமான்களை எடை போட்டு “இத்தனை கொடுக்க வேண்டும்” என்று கூறி விடுகிறார்கள். அநாவசியத் தகராறுகளுக்கும் வீண் வாக்குவாதங்களுக்கும் இடமே வைப்பதில்லை.
நாங்கள் நடந்து சென்றது மரங்கள் மண்டிக் கிடந்த காட்டுப்பகுதி. ஆபத்துக்கள் நிறைந்த பயங்கரமான பாதை. ஈரம் படிந்த பாறைகளில் ஏறி இறங்கி, இரு நதிகள் சங்கமம் ஆகும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.
இங்கு கங்கோத்ரியிலிருந்து கலங்கலாகப் பாய்ந்து வரும் பாகீரதியில், திபெத்திலிருந்து பளிங்குபோல் ஓடிவரும் “ஜடகங்கா” என்ற நதி கலக்கிறது. அதற்கு ஜானவி என்றும் பெயராம். தன்னை விடப் பலமுள்ளவர்களை அடித்து விட்டு, கை வலி தாங்காமல் தானே அழும் குழந்தையைப் போல், ஜடகங்கா பாறைகளைத் தாக்கி விட்டு “ஓ”வென்று ஓலமிட்டுக் கொண்டே ஓடும் போது, அப்பள்ளத்தாக்கு எதிரொலி எழுப்பி எக்காளமிடுகிறது. மண் தரையை அரித்திருப்பது போல் நதிப்பிரவாகம் அந்தப் பாறைகளை உருத்தெரியாமல் அடித்திருக்கிறது. அங்குள்ள இரு பழைய பாலங்களின் மீது நட்ககும் போது, இயற்கையன்னை படைத்துத் தந்துள்ள கனவு உலகத்தில் சஞ்சரிப்பது போல் தோன்றுகிறதே தவிர, நாம் வாழும் உலகில் பயணம் செய்வது போலவே தோன்றவில்லை.
அந்தப் பகுதிக்கு “பைரவன் கட்டே” என்று பெயர். அங்கு பைரவௌக்கு ஒரு சிறு கோயில் இருக்கிறது. கங்கா தேவி, சிவபெருமானின் சிரசிலிருந்து பூலோகத்தில் இறங்கும் இடத்திற்குச்ச் எல் லும் முன் நாம் பைரவ மூர்த்தியை தரிசித்துக் கொண்டு செல்லுகிறோம்.
நதிகளைக் கடந்து, மீண்டும் சமதரைக்கு வந்து ஸெரும் போது, மூச்சு முட்டுகிறது. சற்று இளைப்பாற வேண்டும் போல் தோன்றுகிறது. அங்கிருந்து ஆறரை மைல் சென்று ஆயிரம் அடி ஏறினால், கங்கோத்ரிக்குப் போய்ச் சேர்ந்து விடலாம்.
(முன்பெல்லாம் இங்கிருந்து கால் நடையாகத்தான் செல்ல வெண்டும். தற்போது பாலம் போடப்பட்டு விட்டதால் வாகனங்கள் செல்கின்றன)
பன்னிரண்டரை மணிக்கு கங்கோத்ரிக்கு வந்து சேர்ந்து விட்டோம். கோயிலிலிருந்து ஒருஃப் அர்லாங்க் தொலைவில் நம்மை இறக்கி விட்டு விடுகிறார்கள். அங்கிருந்து ர்மமியமான இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டே நடந்தது சொல்லில் அடங்கா சுகமாயிருந்தது.
வந்து இறங்கியதுமே, இது யமுனோத்ரியை விட பெரிய இடம் என்பது விளங்கி விடுகிறது. எங்களுக்கு வலப்புறம் சின்னஞ்சிறு வீடுகள் பல தென்பட்டன. அவற்றில் காவி நிறக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன. சாதுக்கள் வசிக்கும் குடில்களாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். அக்கரையில் பல கட்டடங்கல் தெரிந்தன. அங்கு பயணிகள் விடுதிகளும், சில ஆசிரமங்களும் இருப்பதாக அறிந்தோம். இரு பாலங்களைக் கடந்து அங்கு செல்ல வேண்டும்.
மப்பும் மந்தாரமுமாக இருந்த வானம், பன்னீர் தெளித்து எங்களை வரவேற்பது போல் பொன் மாரி பொழிந்து கொண்டிருந்தது. சுற்றிலுமுள்ள மலை சிகரங்களிலிருந்து பனிக் காற்று வீசிக் கொண்டிருந்தது. பேரிரைச்சலுடன் ஓடிக் கொண்டிருந்த பாகீரதியை, மலைகளின் மீது மந்தமாகத் தங்கியிருந்த மேகக்கூட்டம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.
நாங்கள் பாகீரதி மீதுள்ள பாலத்தின் மீது நடந்து கொண்டிருந்தோம். எங்கள் இடப்புறம் வெகு தொலைவிலிருந்து பாகீரதி வளைந்து வளைந்து வந்து கொண்டிருந்தாள். கேதார் சிகரத்திலிருந்து குதூகலத்துடன் கலந்து உறவாடிக் கொண்டிருந்தாள். எல்லாரும் இமயக் குமாரிகளே. இருப்பினும் ஒவ்வொரு சிகரத்தையும் ஒட்டி ஒவ்வொருத்திக்கு ஒவ்வொரு பெயர்!
தெரிந்தும் தெரியாமலும் நாம் செய்யும் பாவங்களைக் கழுவி, நம்மைக் கடையேற்றக் காத்திருக்கும் அன்னை கங்கையை கங்கோத்ரியில் தரிசித்ததும், புல்லரித்துப் புளகிதம் மேலிட்டது. ஒன்பது மாதங்களுக்கு முன்பு தேவப்பிரயாகையில், அலகநந்தாவுடன் கலக்கும் இந்த பாகீரதியைத் தரிசித்துப் பூரித்துப் போனேன். இத்தனை விரைவில் அவளை கங்கொத்ரியில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று அப்போது நான் கனவு கூட காணவில்லை. தாய் வீட்டில் உரிமை கொண்டாடி சோம்பேறியாய் வளைய வரும் செல்லப் பெண்ணாகவும், சுதந்திரப் பறவையாகத் துள்ளிக் குதித்து, கும்மாளமிட்டுக் குதூகலிக்கும் பருவக் குமரியாகவும் பாகீரதியை இங்கு சந்திக்கிறோம்.
கேதார் கங்கையின் மீதுள்ள சிறு பாலத்தையும் கடந்து தங்கும் விடுதிக்கு வந்து சற்றைக்கெல்லாம் ஸ்நான கட்டத்தை நோக்கி நடந்தோம்.
நாங்கள் பாகீரதி பாலத்தை மீண்டும் கடந்து, ஸ்நான கட்டத்திற்கு வந்து சேர்ட்ந்தோம். தைரியமாக உடைகளையும் களைந்து விட்டோம். ஆனால், நீரைத் தொட்டுப் பார்த்த பொது நடுங்கியே விட்டோம். பத்ரிநாத்தில் அலகநந்தா இருப்பதைவிடக் குளிர்ச்சியாக இருந்தது அது. விரல்களெல்லாம் மரத்துப் போய்விட்டதால் சற்று நேரம் அவற்றில் சொரணையேயில்லை.
அப்போது கண்ணன் ஒரு யோசனை கூறினார்: “கடையிலிருந்து கடுகு எண்ணெய் வாங்கிக் கொண்டு வந்து, உடம்பு பூராவும் நன்றாகத் தேய்த்துக் கொண்டு, பிறகு நதியில் இறங்கிக் குளித்தால் அத்தனை ஜிலு ஜிலுப்புத் தெரியாது” என்று அவர் கூறியதும், எண்ணெய் வாங்கி வந்து, உடலெங்கும் நன்றாகத் தேய்த்துக் கொண்டோம்.
அந்தக் குளிரில், நாங்கல் சட்டை, வேட்டிகளைக் களைந்து, வெறும் உடம்புடன் நின்றிருந்ததே அங்கிருந்தவர்களுக்கு பெரும் வியப்பையளித்தது. நீரில் மூழ்கி எழுந்த போதோ, அவர்கள் அதிசயப்பட்டுப் போய், வைத்த கண் வாங்காமல் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கு யாருமே நீரில் மூழ்கிக் குளிக்கவில்லை. பாறையில் உட்கார்ந்து, செம்பில் நீரை எடுத்து, கை, கால், முகங்களைக் கழுவிக் கொண்டிருந்தனர். ஓரிருவர், இரண்டு மூன்று செம்பு நீரை எடுத்து, அவசர அவசரமாக மேலே விட்டுக் கொண்டு ஓடி வந்து விட்டனர்.
நாங்கல் ஏதோ ஒரு வெறியில் மூழ்கி எழுந்து விட்டோமே தவிர, கரைக்கு வந்ததும் தவித்துப் போய்விட்டோம். ஆயிர்ம தேள்கள் உடலெங்கும் கொட்டியது போல் “விறுவிறு”வென்று இழுத்து, ரத்தமே உறைந்து விட்டது போல் ஓர் உணர்வு ஏற்பட்டது. ஒரு டன் பளு ஏறியது போல் தலை கனத்தது. மூச்சு நின்று விடுவது போல், மார்பு வேகமாக அடித்துக் கொண்டது.
எங்கள் நடுக்கும் படபடப்பும் அடங்க ஐந்து நிமிடங்கள் பிடித்தன.