பத்ரி கேதார் – 17

அப்போது, தென்னாட்டைச் சேர்ந்த ஒருவர் தமது குடும்பத்துடன் அங்கு வந்தார். என்னைப் பார்த்துச் சிரித்தார். நான் பதிலுக்கு சிரித்து வைத்தேன்.

“என்னை உங்களுக்குத் தெரியாது. நான் ஆந்திராவைச் சேர்ந்தவன். நீங்கள் மும்முடிவரம் பாலயோகி ஆசிரமத்திற்கு வந்திருந்த போது நாங்களும் அங்கு வந்திருந்தோம். ஆனால், அப்போது தங்களைச் சந்தித்துப் பேச முடியவில்லை. எதிர்பாராமல் மீண்டும் கங்கோத்ரியில் உங்களைச் சந்தித்துப் பேசும் பாக்கியம் கிடைத்ததில் எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி” என்றார்.

நான் யாரோ? அவர் யாரோ? மும்முடிவரம் எங்கே? கங்கோத்ரி எங்கே? கோதாவரிக்கரை எங்கே? பாகீரதிக்கரை எங்கே? கோதாவரியும், காவிரியும், கங்கையும், யமுனையும் இப்புண்ணிய பாரதத்தை இணைத்து வைப்பது போல், முன் பின் தெரியாத மக்களையும் ஒன்று சேர்ந்து வைக்கும் புனித தீர்த்தங்கள் அன்றோ!

அப்போது கோயில் பண்டா வந்து, “கங்கா தேவிக்கு பூஜை செய்கிறீர்களா?” என்று கேட்டார்.

கங்கோத்ரியில்  கங்கைக்கு பூஜை செய்யக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே, உட்காருங்கள் என்றேன் நான்.

பாரதத்தை வாழ்விக்க அவதாரம் எடுத்துள்ள புனித கங்கைக்கு அங்கு பூஜை செய்யும் புண்ணியம் கிட்டியது.

நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்தாலும் கங்கையின் பெயரை உச்சரிப்பவர்கள் தங்கல் பாவங்களெல்லாம் நீங்கப்பெற்று வைகுண்டப் பதவியை அடைவார்கள் என்கிறது தேவி பாகவதம்.

அதஹனை புனிதமிக்க கங்கைக்கு, கங்கோத்ரி புனிதத் தலத்திலேயே நம் கையால் அர்ச்சனை செய்து, ஆரத்தி காட்டும் போது ஆனந்தத்தின் எல்லையையே தொட்டு விடுகிறோம்.

“நதிகளில் நான் கங்கையாயிருக்கிறேன்” என்கிறார் கீதாசிரியனான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்ம. வையத்தை வாழ்விக்கும் பொருட்டு வானுலகிலிருந்து வந்த புனிதத் தீர்த்தத்தை நம் முன்னோர்கள் காத்தல் கடவுளாகவே நினைத்துப் போற்றியதில் தவறென்ன இருக்க முடியும்?

கங்கையின் உற்பத்தியைக் குறித்துதான் எத்தனை எத்தனை கதைகள்! எத்தனை வளமான கற்பனை நயங்கள்!

ஸ்ரீ வைகுண்டவாசனான மகாவிஷ்ணுவின் சங்கீதத்தை ஒரு சமயம் சிவபெருமான் கேட்டுக் கொண்டிருந்த போது அப்படியே உருகிப் போய் விட்டாராம்.

அது கங்கையாய் ஓடிற்றாம். அதை பிரம்மா தமது கமண்டலத்தில் பிடித்து வைத்துக் கொண்டு விட்டாராம்.

அந்த நீரினால் அவர் நாராயணனின் திருவடிகளைக் கழுவினாராம். திருமாலின் மலரடிகளிலிருந்து பெருகிய அந்நீர் பகீரதனின் பிரார்த்தனைக்கு இணங்கி, பூலோகத்தை நோக்கிப் பாய்ந்ததாம்.

இமயத்தின் குமாரியான கங்கை சிவபெருமானை மணந்த பிறகு பிறந்தகத்தை விட்டு கைலாசம் செல்ல புறப்பட்டாளாம். அப்போது பெற்றவளால் மகளின் பிரிவைத் தாங்க முடியவில்லையாம். மகள் ஒரு நதியாக மாறி, இமாலயப் பகுதியில் பாய்ந்து ஓட வேண்டும் என்ற பிரார்த்தித்துக் கொண்டாளாம். சிவபெருமான் அவளது பிரார்த்தனைய்க்குச் செவி சாய்க்கவெ, தன் மகளை அந்தத் தாய் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறாளாம்.

ஒரு சமயம் பார்வதி சிவபெருமானின் கண்களை விளையாட்டாக பொத்தப் போய், ஈரேழ் உலகங்களும் இருளில் மூழ்கியதாம். அப்போது சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறக்கவும் சூரிய சந்திரன் மீண்டும் தோன்றி உலகில் சகல ஜீவராசிகளும் உயிர் பெற்று எழுந்தன. தன் தவற்றை உணர்ந்த உமா தேவி கணவனின் கண்களைப் பொத்தியிருந்த கைகளை எடுத்தாள். பயத்தால் நடுங்கிய அவளது கை விரல்களிலிருந்து கீழே விழுந்த வியர்வைத் துளிகள் பத்து கங்கைகளாக மாறி அண்டசராசரங்களையே பிரளயத்திற்குள்ளாக்குவது போல் பயங்கரமாகச் சீறிப் பாய்ந்தன. அதைக் கண்டு பயந்த பிரம்மாவும், விஷ்ணுவும், இந்திரனும் சிவபெருமானிடம் சென்று மன்றாடினார்கள். கருணையுள்ளம் படைத்த கங்காதரன், எல்லா நதிகளையும் தம் தலைமுடியில் அடக்கிக் கொண்டு விட்டார். பின்னர், அம்மூவரும் தங்கள் உலகங்களுக்கு சிறிது நீர் தந்து அருளும்படி கோரவே, சிவபெருமான் அவ்விதமே செய்தார். வைகுண்டத்தில் விராஜ நதி என்றும், பிரம்மலோகத்தில் மானஸ தீர்த்தம் என்றும், இந்திர லோகத்தில் தேவ கங்கை என்றும் அவை பெயர் பெற்றன. பிரம்ம லோகத்திலிருந்துதான் பகீரதன் தன் தவ சக்தியால் கங்கையை பூலோகத்திற்கு கொண்டு வந்தான்.

தமது கங்காஷ்டகத்தில் பகவான் ஸ்ரீ ஆதி சங்கரர் கூறுகிறார் :

“ஏ பாகீரதீ! ஆதியில் நீ பிரம்மாவின் கமண்டலப் பாத்திரத்தில் இருந்தாய்; பின்னர் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் திருவடிகளை அபிஷேகம் செய்தாய்; சிவபெருமானின் சிரசை அலங்கரித்தாய்; இறுதியில் ஜானு மகரிஷியின் மகளாய் அவதரித்து, ஜானவி என்ற பெயரையும் பெற்றாய்….!”

பாரத நாட்டில் பிறந்த யாருக்குத்தான் பகீரதன் கங்கையைப் பூலோகத்திற்கு வரவழைத்த கதை தெரியாது. அந்நிகழ்ச்சியை அப்படியே பட்ம பிடித்துக் காட்டியுள்ள ரவிவர்மாவின் ஓவியத்தைப் பார்த்து பார்த்து அப்புராண வரலாறு நம் உள்ளத்தில் அப்படியே பதிந்து விட்டிருக்கிறதே! எல்லோறுக்கும் தன்னம்பிக்கையையும், விடா முயற்சியையும், பிறர் நலம் பேணும் பரந்த உள்லத்தையும் கற்றுத் தரும் அந்த நிகழ்ச்சி நம் ரத்தத்தோடு கலந்திருக்கிறதே…. “பகீரத பிரயத்தனம்” என்ற சொற்றொடர் தோன்றுவதற்கே காரணமாயிருந்த அந்தத் துறவி மன்னன் தவமிருந்த தலமல்லவா கங்கோத்ரி…. அங்கல்லவா நம தற்போது அமர்ந்திருக்கிறோம்…. பகீரதனால் கொண்டுவரப்பட்டதால் பாகீரதி என்ற பெயர் பெற்ற கங்கியக்கு அல்லவா இப்போது பூஜை செய்து முடித்திருக்கிறோம்.

பகீரத சிலாவைப் பார்த்து விட்டு, கோயிலுக்கு போகலாம், புறப்படுங்கள் என்றார் பண்டா.

அப்படியென்றால்….

“அதோ தெரிகிறதே, அந்த மண்டபம்தான். அங்கு பகீரதன் அமர்ந்து ஆயிரமாயிரம் ஆண்டுகள் தவமிருந்த பாறை இருக்கிறது….. வாருங்கள் பார்க்கலாம்” என்றார் பண்டா, வெகு சாதாரணமாக.

நமக்கு உள்ளத்தில் பெரு மகிழ்ச்சி பொங்குகிறது. கேட்ட கதைகளெல்லாம் கண் முன்னால் காட்சி தருகின்றன. படத்தில் பார்த்த காட்சிகளெல்லாம் உயிர் பெற்று எதிரில் உலாவுகின்றன.

சூரிய வம்சத்தில் உதித்த சகர மகாராஜன், இந்திரப் பதவியை அடைவதாற்காக, தொண்ணூற்றொன்பது அசுவமேத யாகங்கள் செய்து முடித்து விட்டான். நூறாவதுதான் பாக்கி. எனவே இந்திரனுக்கு கவலை ஏற்பட்டது. தன் பதவி பறி போகாமல் இருக்க அந்தப் பரியைப் பிடித்துக் போய் கபில முனிவரின் ஆசிரமத்தில் கட்டி வைத்து விட்டான்.

குதிரை காணாமற் போகவே, சகர சக்ரவர்த்தியின் அறுபதினாயிரம் பிள்ளைகளும் அதைத் தேடிக் கொண்டு மூலை முடுக்குகளெல்லாம் சென்றார்கள். கடைசியில் கபிலர் ஆசிரமத்தில் குதிரை கட்டப்பட்டிருப்பதைக் கண்டு, அந்த முனிவர்தான் குதிரையைப் பிடித்து வைத்திருக்க வேண்டும் என்று கருதி, அவரோடு சண்டைக்குப் போனார்கள். கோபமடைந்த ரிஷி அவர்களை சபித்து அங்கேயே எரித்துச் சாம்பலாக்கி விட்டார்.

காலம் ஓடியது. பல ஆண்டுகள் கழிந்தன. சகரனின் வம்சத்தில் பகீரதன் என்ற ஓர் அரசன் தோன்றினான் முனிவரின் சாபத்தால் சாம்பல் மலையாகிக் கிடக்கும் தம் மூதாதையரை எப்படியாவது கரையேற்ற வேண்டுமென்று உறுதி பூண்டான். மாமுனிவர்களின் ஆலோசனைப்படி, கங்கையைக் கீழே இறங்கி வரச் செய்து அவர்கள் பாவத்தைக் கழுவ எண்ணம் கொண்டான். அதற்காகக் கடும் தவமிருந்தான். கங்கை அவன் முன் தோன்றினாள். “பகீரதா, உன் தவத்திற்கு அடிமையானேன் நான்; ஆனால், நான் பெருக்கெடுத்து பயந்து வந்தால் இந்தப் பூலோகம் தாங்காது. நான் இறங்கி வரும் போது என் சக்தியை தாங்கக் கூடியவராக ஒருவரைத் தேடிக் கண்டுபிடி” என்று கூறிச் சென்று விட்டாள்.

பகீரதன் மீண்டும் தவத்தில் அமர்ந்தான். நூற்றுக் கணக்கான ஆண்டுகள் மறைந்தன. பகீரதனின் மீது சிவபெருமான் இரக்கம் கொண்டார். கங்கியயின் வேகத்தைத் தாம் தடுத்து நிறுத்துவதாக வாக்களித்தாள். அடுத்த கணம் வேங்கையென பாய்ந்து வந்தாள் கங்கை. புன்முறுவல் பூத்த கங்காதரன் அவலைத் தன் முடியில் அப்படியே தாங்கி அவள் கொட்டத்தை அடக்கி, மெள்ள பூமியில் ஓட விட்டார். வடக்கே அத்திருநாளை “கங்கா சப்தமி”யாகக் கொண்டாடுகிறார்கள். அது ஏப்ரல் கடைசி வாரம் வரும்.

பூமியில் மிடுக்குடன் ஓடிய கங்கை துடுக்குத்தனமாக ஜானு மகரிஷியின் ஆசிரமத்தில் நுழைந்து அதை அழிக்கப் பார்த்தாள். துணுக்குற்ற மகரிஷி, அவளை கையில் எடுத்து அப்படியே பருகி விட்டார். பகீரதனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. தன் முயற்சியெல்லாம் வீணானதை நினைத்து மருகினான். மீண்டும் தவமியற்றினான். பலன் கிட்டியது. ஜானு முனிவர், கங்கையைத் தன் காது வழியாக வெளியே விட்டார். அதனால் கங்கைக்கு ஜானவி என்ற பெயர் ஏற்பட்டது. அதாற்குப் பிறகு தன் ஆர்ப்பாட்டத்தை அடக்கிக் கொண்ட கங்கிய, கபிலர் ஆசிரமத்தில் பாய்ந்து அறுபதினாயிரம் சகர புத்திரர்களுக்கு நற்கதி தந்தருளினாள். இத்திருநாளை ஆனி மாதத்தில் கங்கா தாரா வாகக் கொண்டாடுகிறார்கள். அச்சமயம் ஹரித்ப்வாரில் ஆயிரக்கணக்கானவர்கள் கங்கையில் நீராடுவார்கள்.

தம் முன்னோர்களின் பொருட்டு பாகீரதியை இங்கு அழைத்து வரப் பகீரதன் தபஸ் இருந்த புனித இடத்தில் நாம் இப்போது நின்று கொண்டிருக்கிறோம்.

பாகீரதியின் கரையிலிருந்து கோயிலுக்குப் போகும் வழியில் வடப்புறம் மரத்தாலான மண்டபம் ஒன்று உள்ளது. அதனுள் ஒரு பண்டா உட்கார்ந்திருப்பார். அவருக்கெதிரில் ஒரு சிறு பள்ளம் இருக்கும். அதனுள் எட்டிப் பார்த்தால் ஒரு கருங்கல் பலகை தெரியும். “அதுதான் பகீரதன் தவத்திற்காக அமர்ந்திருந்த பாறை” என்றார் பண்டா. அதைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டோம். பின்னர் அம்மண்டபத்தை வலம் வந்து விட்டு, படிகளேறி பாகீரதி கோயிலுக்குள் சென்றோம்.

பகீரதன் தவமிருந்த பாறையின் மீதுதான் பாகீரதி கோயில் கட்டப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள். யமுனோத்ரியிலுள்ள கோயிலைக் காட்டிலும் கங்கோத்ரியிலுள்ள கோயில் பெரிது மட்டுமல்ல, நவீனமானதும் கூட. அந்தக் கோயிலை ஸ்ரீ ஆதிசங்கரர் நிர்மாணித்ததாகக் கூறுவோரும் உண்டு.

நாங்கள் சென்ற சமயம் கருவறை சாத்தப்பட்டிருந்ததால் தரிசனம் செய்ய முடியவில்லை. மாலையில் வந்தால் நன்றாகத் தரிசனம் செய்வதோடு, பூஜை, ஆரத்தி எல்லாம் பார்க்கலாம் என்று கூறினார்கள். பிராகாரத்தைச் சுற்றி வலம் வந்தோம். அப்போது கௌரிசங்கர் சந்நிதியையும் விநாயகர் சந்நிதியையும் தரிசித்துக் கொண்டோம்.ஆலயத்தின் முன்புறமுள்ள திண்ணையில் சில யாத்திரிகர்கள் கும்பலாக அமர்ந்திருக்க, பண்டா ஒருவர் மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தார். அருகில் சென்று பார்த்தேன். அவர்களெல்லாம் கங்கையிலிருந்து ஜலம் எடுத்து வந்து அதற்குப் பூஜை செய்து கொண்டிருந்தார்கள். பின்னர் அச்செம்புகளை ராமேசுவரத்திற்கு எடுத்துச் சென்று ஸ்ரீ ராமநாத சுவாமிக்கு அதனால் அபிஷேகம் செய்வார்களாம். அங்கிருந்து எடுத்து வந்திருக்கும் மணலை பாகீரதியில் கரைப்பார்களாம். தொன்று தொட்டுப் பழக்கத்தில் இருந்து வரும் இத்தகைய பயணங்கல் மக்களின் நம்பிக்கையை வளர்த்து, பாரதத்தை ஒருங்கிணைத்து நம் கலாசாரத்தைப் பேணிக் காத்து வந்திருக்கின்றன.