விடுதிக்கு திரும்பிய போது எங்களுக்கு நல்ல பசி. ஐந்து நிமிடத்திற்கெல்லாம் வெள்ளாடை உடுத்தியிருந்த ஒரு சாது சாப்பிட வரும்படி எங்களை அன்புடன் அழைத்தார்.
நாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து சற்றுத் தொலைவில் “தண்டி சுவாமி க்ஷேத்ர” என்ற போர்டுடன் ஓர் ஆசிரமம் இருந்தது. “ஈசுவர மட் காசி முமுக்ஷுபவன் (வாராணசி)” என்று அருகில் மற்றொரு போர்டும் காணப்பட்டது. அங்கிருக்கும் ஆங்கிலம் பேசும் ஒரு சாதுதான் எங்களைத் தேடி வந்து சாப்பாட்டிற்கு அழைத்தார்.
அது பெயருக்குத்தான் ஆசிரமம். அது அறிவிக்கப்படாத ஒரு சிறு ஓட்டல் என்றே சொல்ல வேண்டும். மாடியில் அறைகள் இருக்கின்றன. கீழே சாப்பாடும் டீயும் கிடைக்கிறது. ஆனால், உள்ளே நுழையும் போது ரேட் பேசுவது கிடையாது. எல்லாம் இனாம் என்பது போல் ஒரு பிரமையைத் தோற்றுவிக்கிறார்கள். ஆனால், வெளியே வரும்பொது நன்கொடியயாக ஏதாவது கொடுத்து விட்டுத்தான் வர வேண்டும். வாங்கிக் கொள்வதில் தயக்கமோ, கூச்சமோ கிடையாது. நாம் பணத்தைக் குறைத்துக் கொடுத்து விட்டால், அங்குள்ளவர்கள் “ஒரு மாதிரி” அதை நமக்குத் தெரியப்படுத்தி விடுவார்கள்!
ஏப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும்! அந்த உயரத்தில், அந்தக் குளிரிலும் பனியிலும் எங்கிருந்தோ சாமான்களைச் சேகரித்துக் கொண்டு வந்து, வருபவர்களுக்கு வயிறார, வாய்க்கு ருசியாக ஏதோ செய்து போடுகிறார்களே, அந்தச் சேவையைப் பாராட்டித்தானே ஆக வெண்டும்?
தண்டி சுவாமி ஆசிரமத்தை ஒட்டினாற்போள் ஐந்தாறு குடில்கள் இருந்தன. அவற்றில் ஒன்றில் சுந்தரானந்தா இருப்பதாக அறிந்து, அங்கு சென்றோம்.
கேரளத்தில் பிறந்து, வடக்கே சென்று ஒரு சாதுவாகி, பல ஆண்டுகள் இமாலயத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் பயணம் சென்று, புனித இடங்களில் எல்லாம் தங்கி, ஆத்மசாந்தியைத் தேடியவர் தபோவன்ஜி மகராஜ். தமது பயண அனுபவங்கலை மிக விரிவாக அவர் எழுதி வைத்திருக்கிறார்.
அவருக்குச் சேவை புரியும் பேறு பெற்றவர் சுந்தரானந்தாவும் ஒருவர்.இருபத்தைந்து ஆண்டுகளாக கங்கோத்ரியில் வசித்து வரும் இவர், ஒரு கைதேர்ந்த புகைப்படக்காரர். மலையேறும் கலையில் வ்லலவர்.
அவர் தற்போது இருக்கும் குடிலில்தான், தமது குரு தபோவன்ஜி மகராஜ் வசித்து வந்ததாகக் கூறினார். நாங்கள் அமர்ந்திருந்த தாழ்வாரத்தில் அம்மகானின் பெரிய பொட்டோ ஒன்று காட்சியளித்தது.
சுந்தரானந்தா நெல்லூரைச் சேர்ந்தவர். ஆனால், அவருக்குத் தெலுங்கு அனேகமாக மறந்து போய்விட்டது.தமிழும் தட்டுத் தடுமாறித்தான் பேசுகிறார்.
கங்கோத்ரிக்கு வருவதாற்கு ஆகஸ்ட் மாதம்தான் சிறந்த மாதம் என்பது அவரது அபிப்ராயம். திடீர் திடீர் என்று மழை பெய்யுமாம். நினைத்தபோது பனி பெய்யுமாம். முதல்நாள் கூட அங்கு ஸ்நோ விழுந்தது என்று கூறினார் அவர். புதிதாக வருபவர்கள் உடலை வெகு ஜாக்கிரதையாகப் பாதுகாக்க வேண்டுமென்றார். கண்ணன் செருப்பில்லாமல் வந்திருப்பதைப் பார்த்து விட்டு, “சுவாமி, வெறுங்காலோடு இங்கெல்லாம் நடப்பது ரொம்பத் தப்பு, நிமோனியா வந்துவிடும்” என்று சட்டென்று கூறவே, கண்ணன் பயந்தே போய் விட்டார். சுந்தரானந்தா தம்மிடமிருந்த ஷூவை எடுத்துக் கொடுத்துப் போட்டுக் கொள்ளச் சொன்னார்.
பின்னர் கௌரி குண்டம் என்ற இடத்தைக் காட்டுவதற்காக எங்களை வெளியே அழைத்துச் சென்றார். அப்போது தொலைவில் கிழக்கிலும் மேற்கிலும் தெரிந்த பனிச் சிகரங்களைச் சுட்டிக் காட்டினார்: “அதோ தெரிகிறது பார்த்தீர்களா, அதுதான் மைனா கிராமம். இமயவானின் தர்மபத்தினி மைனாவதி. இது அந்தச் சிகரம்தான். அதோ கிழக்கில் தெரிகிறதே, அது சுதர்சன் சிகரம். பிருகுபந்த் ரேஞ்சு, அது மாத்ரி சிகரம், அது கங்காசிகரம், மந்தாகினிபீக், பகீரத சிகரம், வசிஷ்ட சிகரம்….” என்று அடுக்கிக் கொண்டே போனார். நமக்கு எல்லா சிகரமும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. அவருக்கு எல்லாப் பெயரும் தண்ணீர்பட்ட பாடாயிருக்கிறது.
பாகீரதியின் கரையையொட்டியுள்ள பாறைகளில் சில சாதுக்கள் குடில்கள் அமைத்துக் கொண்டு வசிப்பதைக் கண்டோம். அங்குள்ள குகைகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களில் ஒருவர் மௌனியாம். அவர் மண் தரையில் ஏதோ தோட்டம் போட்டிருந்தார். மண்ணை வெட்டிப் போட்டு மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருந்தவர், எங்களைக் கண்டதும் கையை அசைத்து வாழ்த்து கூறினார்.
“ஓ”வென்று இரைச்சலிட்டுக் கொண்டு ஓடும் பாகீரதியைப் பார்த்துக் கொண்டெ அதன் கரையில் நடந்து கொண்டிருந்தோம்.
“இதோ பார்த்தீர்களா, இதுதான் கௌரி குண்டம் என்பது” என்று ஓர் இடத்தைக் காட்டினார் சுந்தரானந்தா. பார்த்தோம். அடடா…. எத்தனை அற்புதமான காட்சி! பாகீரதி அந்த இடத்தில் ஐம்பது அடி உயரத்திலிருந்து பேரிரைச்சலுடன் விழுகிறாள். பாறைகளில் மோதி, நொங்கும் நுரையும் கொப்புளிக்கும்படி சீறிப் பாய்கிறாள். காது செவிடாகும்படி கர்ஜனை புரிகிறாள்.
“கங்கையின் வேகத்தையும் கோபத்தையும் கண்டு நடுங்கி, அவளைத் தன் முடியில் தாங்கிக் கொள்ளும்படி சிவபெருமானிடம் பார்வதிதேவி வேண்டிக் கொண்டாள். அதற்கிணங்க சிவனும் பாகீரதி கங்கையை தன் சிரசில் அட்ககிக் கொண்டார். அது இங்குதான் நடந்தது” என்று ஒரு புதுக் கதையைக் கூறினார் சுந்தரானந்தா.
“இங்குதானே சிவலிங்கம் ஒன்று இருப்பதாக கூறுகிறார்கள்?” என்று கேட்டேன் நான்.
“ஆமாம், இதனடியில் இருக்கிறதாம். பாகீரதி இங்கெ சிவனுக்கு அபிஷேகம் செய்வதாக ஐதீகம்.இந்த இடத்திற்கும் கீழே ஓடும் நீரெல்லாம் நிர்மால்யமாகி விடுகிறது. அதனால், ராமேசுவரத்தில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய விரும்புகிறவர்கள் இதற்கு மேலே இருந்துதான் கங்கை நீரை எடுத்துச் செல்ல வேண்டும். அதுதான் பவித்ரமாகக் கருதப்படுகிறது” என்று மேலும் ஒரு புதுத் தகவலைக் கூறினார் அவர்.
அருகில் மற்றோர் இடத்தைக் காட்டினார் சுந்தரானந்தா. ஒரே கிடுகிடு பாதாளம். குகிய போன்று ஒரு பெரிய துவாரத்தின் வழியே பாகீரதி அசுரவேகத்தில் பாய்ந்து கொண்டிருந்தாள். எட்டிப் பார்த்தேன். தலையைச் சுற்றியது.
நாம் நிற்குமிடத்திலிருந்து கங்கையை முழுமையாகப் பார்க்க முடியவில்லை. இங்கு வடக்கு நோக்கி ஓடி, சிறிது தூரத்திற்குப் பிறகு அவள் கண்ணிலிருந்து மறைந்து விடுகிறாள். எங்கோ தன்னை மறைத்துக் கொண்டு பின்னர் சற்றுத் தொலைவில் வெளிப்படுகிறாள்.
“இந்த இடத்தில் மனத்தைக் கொள்ளை கொள்ளும் சௌந்தர்யமும் இருக்கிறது. மனத்தைத் திகிலடையச் செய்யும் பயமும் இருக்கிறது” என்று சிரித்துக் கொண்டு கூறியபடியே, எங்களை அருகில் உள்ள ஒரு பெரிய பாறைக்கு அழைத்துச் சென்றார் சுந்தரானந்தா.
“இதோ பார்த்தீர்களா கோயில், இதோ உடுக்கை, இதோ சங்கு, இதோ ஆவுடையார்” என்று அப்பாறயிலேயே இயற்கையாக உருவாகியிருக்கும் சில வடிவங்களைக் காட்டினார்.
“இது பவித்ரமான இடம் என்பதற்கு இவையெல்லாம் சான்றாகும். முன்பெல்லாம் ராமேசுவரத்திலிருந்து வருபவர்கள் இங்கு தர்ப்பணம் செய்வதைத்தான் விசேஷமாகக் கருதுவார்கள். அவர்கள் கையோடு கொண்டுவரும் மணலை இங்குதான் பாகீரதியில் கரைப்பார்கள்” என்று கூறினார் சுந்தரானந்தா.
“இங்கே வேறென்ன விசேஷம்?” என்று கேட்டேன்.
“மேற்கே சற்று தூரம் சென்றாள், தங்கள் பாவங்களெல்லாம் தொலையப் பாண்டவர்கள் இந்தப் புண்ணிய பூமிக்கு வந்து யாக்ம செய்த இடத்தைக் காணலாம். ஆனால், இப்போது அங்கு போவது சுலபமல்ல” என்றார் சுந்தரானந்தா.
நாங்கள் குடிலுக்குத் திரும்பும் வழியில் கோமுக் பயணத்தைப் பற்றிய பேச்சை மெள்ளத் தொடங்கி துணைக்கு எங்களுடன் வரவேண்டும் என்றேன். சற்று பிகு பண்ணிக் கொண்டு விட்டு, பின்னர் மறுநாள் போகலாம் என்றார். எங்களுடன் சுந்தரானந்தாவின் நண்பரான இண்டலிஜெண்ட் அதிகாரியும் வருவதாக ஏற்பாடாயிற்று.
இந்த யாத்திரையில் எப்படியாவது கோமுகத்திற்குச் சென்று வந்து விடவேண்டும் என்ற ஒரு “வெறி” என்னைப் பற்றிக் கொண்டு விட்டது.
அந்தப் பயணம் கஷ்டங்கள் நிறைந்தது என்று அறிந்த போது, குருவருளை நாடினேன். யாத்திரை புறப்படும் முன் வழக்கப்படி தேனம்பாக்கம் சென்ற நான், காஞ்சி முனிவரிடம் முக்கியமாக “கோமுக் தரிசனம் கிட்ட வேண்டும்!” என்று பிரார்த்தித்துக் கொண்டேன். “உனக்கு எல்லாத் தரிசனமும் கிடைக்கும், போ!” என்று கரம் உயர்த்தி அபயம் தந்து திருவாய் மலர்ந்தருளினார் குருநாதர். அவரது ஆசி கிடைத்து விட்டால் ஜகத்தையே ஜெயித்து விடலாம் என்ற நம்பிக்கையிருந்தாலும் உடன் பிறந்த அஞ்ஞானம் நம் கண்களை மறைக்கிறதே! முடியுமோ முடியாதோ? கிடைக்குமோ கிடைக்காதோ?” என்ற் சந்தேகங்கள் அவ்வப்போது தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. எதிர்ப்படும் இன்னல்களெல்லாம் நீங்கி, தடைகலையெல்லாம் கடந்து எதிர்பார்த்ததற்கு மேல் எளிதாகத் தரிசனங்கலைப் பெற்றுத் திரும்பும்போது நன்றியுணற்சியால் நம் நெஞ்சம் விம்முகிறது; கண்கள் பனிக்கின்றன.
சுந்தரானந்தாவிடம் நாங்கல் விடைபெர்ற போது மணி ஏழரையிருக்கும். நள்ளிரவு போல் இருட்டி விட்டிருந்தது. “ஜில்”லென்று ஊதல் காற்று வீசி உபத்திரவப்படுத்தியது. பாகீரதியின் “ஓ”வென்ற பேரிரைச்சல் அங்கு நிலவிய பயங்கரச் சூழ்நிலையை மிகைப்படுத்திக் காட்டியது. தீவட்டியைப் பிடித்துக் கொண்டு நடந்து கொண்டிருந்த ஓரிருவரைத் தவிர அந்த வட்டாரத்தில் வேறு ஜன சஞ்சாரமே இல்லை.
கடைவீதிகளைக் கடந்து கங்கா பாகீரதி கோயிலுக்கு வந்து சேர்ந்தோம். ஒவ்வொரு கடையாக் அமூடிக் கொண்டிருந்தார்கல். கோயில் மூடும் வரையில்தான் கங்கோத்ரி விழித்துக் கொண்டிருக்கும்.
நாங்கள் சென்றபோது பூஜையெல்லாம் முடிந்த் ஆரத்தி நடைபெற்றுக் கொண்டிருந்தது. வடநாட்டு ஆலயங்கலில் “ஆரத்திப் பாட்டு” என்பது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். அதை எல்லோரும் சேர்ந்து பாடுகிறார்கள். கேட்பதற்கு ஒரேமாதிரிதான் இருக்கிறது. அந்தந்த்க் கோயிலில் உறையும் சுவாமியின் பெயரையும் மகிமைகளையும் அங்கங்கே சேர்த்துக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். பத்து கோயில்களுக்குச் சென்றால் பதினோராவது கோயிலில் நாமும் ஆரத்திப் பாட்டில் கலந்து கொள்ளலாம்.
கருவறையில் கங்கா பாகீரதி, சிம்மாசனத்தில், மகர வாகனத்தின் மீது கம்பீரமாக வீற்றிருக்கிறாள். மேல் கரங்கலில் கமலமும் கலசமும் வைத்திருக்கிறாள். தவக்கோலத்தில் பகீரத ராஜனின்பிரதிமையும் இருக்கிறது.
பத்ரிநாத்தில் பத்ரி பஞ்சாயதனம் இருப்பது போல் கங்கோத்ரியில் கங்கா பஞ்சாயதனம் இருப்பதாக எங்களுக்கு விளக்கம் தந்த பண்டிட் கமலேஷ்குமார் கூறினார்.
கருவறையில் மூல மூர்த்திக்கு கீழே ஸ்ரீ ஆதிசங்கரரின் சிறிய மூர்த்தி ஒன்று இருக்கிறது. முகம் அழகாக இருக்கிறது. கழுத்தில் பெரிய உருத்திராட்ச மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. சிரசில் சந்தனம் வைத்திருக்கிரார்கள். அதனடியில் அஷ்ட் தாதுக்களாலான ஸ்ரீ சக்கர்ம ஒன்று இருப்பதாகப் பிரதமா பண்டா கூறினார். பாகீரதி கோயில் மிகப் புராதனமானது என்றும், மலைச் சரிவுகளாலும், வெள்ளக் கொடுமையினாலும் சிதிலமான கோயிலைப் பகவான் ஸ்ரீ ஆதிசங்கரர் புனருத்தாரணம் செய்து வைத்தார் என்றும் அவர் கூறினார்.
அங்கு கங்கா சப்தமி, கங்கா தசரா, ஜன்மாஷ்டமி, நவராத்திரி, தீபாவளி முதலிய திருவிழாக்கள் நடைபெறுகின்றன. பத்ரி, கேதார், ஜமுனோத்ரி போன்று இந்தக் கோயிலும் மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில்தான் திறந்திருக்கும்.
அக்கோயிலின் நிர்வாகத்தை வேத சாஸ்திரம் அறிந்த பதினாறு பண்டிதர்கள் ஒரு கமிட்டியாக இயங்கி கவனித்து வருகிறார்கள். பல்வேறு சாஸ்திரங்களின் அறிவால் விளைந்த ஒளியும் ஆசார அனுட்டானங்களில் கிட்டிய பலனும் அவர்கள் முகங்களில் பிரகாசிக்கக் கண்டேன். நவீன, நாகரீகப் படையெடுப்பின் காரணமாகச் சிதைந்து போயிருப்பதாகத் தோற்றமளிக்கும் நம் கலாசாரத்தின் அழிக்க முடியாத சின்னங்களாக அவர்களைத் தரிசித்தேன். கங்கோத்ரியில், வற்றாத ஜீவநதியாக பெருகி பாரதத்தின் உயிர்னாடியாகத் திகழும் கங்கா மாதாவைக் கண்டது போலவே, நம் சமயக் கோட்பாடுகளை ஜீவனுள்ள தத்துவங்களாகக் காப்பாற்றி வரும் பரம்பரையும் அங்கு கண்டு திளைத்தேன். பாரதத்தின் ஆன்மீக கலாசாரத்தைப் பேணிக் காக்கும் பெட்டகமாக, தெய்வங்கல் குடியிருக்கும் கோட்டமாக, இமயக் கோயிலை வணங்கினேன். “ஏ இமயமே! எங்கள் சிறுமைகளைப்பொறுத்து, வறுமையைப் போக்கிப் பெருமைகளைக் காத்து, பெரிய மனிதனாக உயர்த்த ஆத்மாவாக நீ காட்சியளிக்கிறாய், எல்லைக் காவலாக நிமிர்ந்து நின்று, தொல்லைக்கெல்லாம் ஈடு கொடுத்து, எங்கள் மண்ணை மட்டுமின்றி, மானத்தையும், மாண்புமிகு மரபுகளையும், உன்னைப் போர்த்தியிருக்கும் வெண்பனி போன்ற வெள்ளை உள்ளத்தோடு காத்து வரும் கருணைத் தெய்வமே, வானோர் வாழும் பர்வதமே, நீ வளமோடு வாழ்வதனால்தானே நாங்கள் உயிரோடு வாழ முடிகிறது, சொல்லப் போனால், பண்டைய பாரதம், பரந்த இமயத்தின் மடியில்தானே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அம்மையப்பனாக, சிவசக்தி ஐக்கியமாக, ஹரி ஹர சொரூபமாக விளங்கும் நீ, இயற்கை வள்ளல் இந்த வையத்திற்கு வாரித் தந்த வரப்பிரசாதம் அல்லவா?”