பத்ரி கேதார் – 22

“ஏ கங்காதேவி! சிரசின் மீது கை கூப்பியபடி, சிவபெருமானின் திருமெணி சம்பந்தப்பட்ட உன் புனிதக் கரையில் நின்று கொண்டு ஸ்ரீ மகாவிஷ்ணுவின் திருப்பாதக் கமலங்களை நினைத்துக் கொண்டு என் பிராணன் பிரிய நேர்ந்தால், அக்கணம் ஹரி-ஹரன் இருவரும் ஒருவரே என்ற அத்வைத ஞானமயமான பக்தியுணர்வு என்னுள் ஏற்படும்.”

இப்பிரபஞ்சத்தையே பிரும்ம மயமாக அறிந்துணர்ந்து எங்கு, எதை, எப்படிக் கண்டாலும், இரண்டில்லாத ஒரே வஸ்துவாகத் தரிசித்து ஆனந்தித்த ஆசாரிய சிகரமான ஸ்ரீ ஆதிசங்கரர், இமயச் சிகரத்தில் நின்று கொண்டு தம் ஒப்பற்ற அத்வைத மதத்தைப் பறை சாற்றியிருக்கிறார்.

கங்கையின் புனிதத் தன்மையை நம் ஆசாரிய மகா புருஷரே கூறக் கேட்போம் :

“கங்கையே, உன் உலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அதில் ஒரு துளியை பானம் பண்னினாலும், உன் நீரில் அமிழ்ந்து ஸ்நானம் செய்தாலும் அந்த மனிதனுக்கு இந்திரப் பதவியுமெ ளிதாகக் கிட்டிவிடும்.”

பாவிஷ்ய புராணமோ, “நடந்து கொண்டிருக்கும் போதோ, நின்று கொண்டிருக்கும் போதோ, தூக்கத்திலோ, விழிப்பிலோ, சாப்பிடும் போதோ, பேசும் போதோ எவனொருவன் கங்கையை சதா நினைத்துக் கொண்டிருக்கிறானோ அவன் சகல பாவங்களிலிருந்தும் பந்தங்களிலிருந்தும் விடுதலையடைகிறான்” என்று உறுதி அளிக்கிறது.

கவி காளிதாசன் கங்கையின் பெருமைகளைப் பற்றிக் கூறும் போது, யமனிடமிருந்து எம்மை மீட்கும் சக்தி உன் ஒரு துளி நீருக்குத்தானிருக்கிறது, என்று கூறுகிறார்.

தீராத நோயினால் பீடிக்கப்பட்டு, மரணம் நம்மைத் தழுவ வரும் இறுதி வேளையில், கடைசி மூச்சு அடங்கப் போவதற்கு அறிகுறியாக, தொண்டையில் கட்டியிருக்கும் கபம் “கர் கர்” என்று கர்ண கடூரமாகச் சப்திக்கும் நிலையிலும் ஒருவன் கங்கையை நினைத்துக் கொண்டாலே போதுமாம். அவன் நற்கதி அடைந்துவிடலாம் என்றும் காளிதாசன் கூறுகிரார். கங்கையில் ஸ்நானம் செய்யும் பாக்கியத்தைப் பெறாதவர்களும், இறுதிக் காலத்தில் “ஐயோ, கங்கா ஸ்நானம் செய்யாமல் இந்த ஜன்மா வீணாகி விட்டதே” என்று ஏங்கினாலும் போதுமாம், அந்த ஏக்கம் நம்மைப் பரிசுத்தப்படுத்தி முக்தியடையச் செய்து விடுமாம். கங்கையின் புனிதத்தை, கவிகளுக்கே உரிய நயத்தோடும், நிச்சயத்தோடும், காளிதாசன் கூறியிருக்கும் அழகுக்குத்தான் ஈடு உண்டா?

கங்கையைக் கண்ட வால்மீகி மகரிஷியின் உள்ளத்திலும் கவிதை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் வியப்பென்ன இருக்க முடியும்?

“மோட்ச லட்சுமியின் ஜெயக்கொடியைப் போல் தோற்றமளிக்கிறாய்; மகா விஷ்ணுவின் திருவடித் தாமரையிலிருந்து வரும் இளம் தண்டு போல் காட்சியளிக்கிறாய். பரமேசுவரைன் சிரசை அலங்கரிக்கும் வெண்மலரான மாலதி புஷ்பம்போல் நீ பிரகாசிக்கிறாய்…”

கங்கையைக் கண்டு பரவசப்பட்ட வால்மீகியின் தீராத ஆசை என்ன தெரியுமா?

“எனக்கு பெரிய அரச பதவிகள் வேண்டாம். யானைப்படைகளை ஏவி, பகைவர்களை வென்று, அடிமை மாதர்கள் சாமரம் வீச, தங்க சிம்மாசனம் ஏறி மகிழ வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை. உன் கரையிலிலுள்ள ஒரு மரத்தில் கூடு கட்டி வாழும் ஒரு பறவையாக நான் பிறந்தால் போதும். அல்லது உன்னில் வாழும் ஓர் ஆமையாகவோ, மீனாகவோ, சர்ப்பமாகவோ, பூச்சியாகவோ, புழுவாகவோ ஜன்மம் எடுத்தாலே போதும்…..”

மகரிஷிகளும், மகான்களும், மகாத்மாக்களும், மகா கவிகளும், மாமனிதர்களும் போற்றி புகழ்ந்துள்ள கங்கை நம்முள் ஆன்மீக அலைகளை எழுப்பி, ஞான கங்கையாகப் பாய்ந்து கொண்டிருக்கிறாள். நம் ஆத்ம தாகத்தைத் தணித்துக் கொண்டிருக்கிறாள்.

கங்கா என்ற வடமொழிச் சொல்லுக்கே மோட்சத்தை விரும்புகிறவர்களால் அடையப்படுகிறவள் என்றும், மோட்சத்திற்கு அழைத்துச் செல்பவள் என்றும் இரு பொருள்கள் உண்டு. ஆண்டவனின் இருப்பிடத்தை நமக்கு நினைவு படுத்திக் கொண்டிருக்கும் கங்கை, நம்மை அவரது திருவடிகளுக்கு அழைத்துச் செல்கிறது.

அருள் வெள்ளமாய் பாயும் அன்பு கங்கை முதன் முதலாக நம் கண்னுக்குத் தெரியும் கோமுகத்திற்குச் சென்ற புண்ணிய மூட்டையைச் சுமந்து கொண்டு நாங்கள் கங்கோத்ரியை நோக்கிப் பயணமானோம்.

அந்த புண்ணிய மூட்டை கண்ணனின் கையில் பத்திரமாக இருந்தது. அந்தக் கங்கைச் செம்பை துணியில் கட்டி நீர் தளும்பால் மிக ஜாக்கிரதையாகக் கொண்டு வந்தார் அவர். கோமுகத்திலிருந்து கங்கையைக் கொண்டு வருவதே பெரும் புண்ணியமாகும். அதிலும், புனித கங்கையை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்து, அதன் பிறப்பிடத்திற்கு எங்களை பத்திரமாக அழைத்துச் சென்று, ஸ்நானம் செய்வித்து, முக்திக்கு வழி வகுத்துத் தந்த ஆசாரியப் பெருமகனான் ஸ்ரீ காஞ்சி மாமுனிவரிடம் சமர்ப்பிப்பதற்காக அந்தத் தீர்த்தத்தை சுமந்து செல்லும் போது அதன் பளு அரைப்பங்கு குறைந்து போய், புண்னியம் இரண்டு பங்கு உயர்ந்தது!

கோமுகத்திற்குச் சென்றது முதல் அங்கிருந்து திரும்பும் வரையில் நான் வேறு மனிதனாகவே இருந்தேன். சரீரம் என்ற ஒன்று இருப்பதே மறந்து, சாந்தியும், ஆனந்தமும் அனுபவித்துக் கொண்டிருந்தேன். தரிசனம் முடிந்து திரும்பியதும் நான் பழைய நிலையை அடைந்தேன்.

சென்னை திரும்பியதும், தேனம்பாக்கம் சென்று என் பயண அனுபவங்கலை, முக்கியமாக கோமுக யாத்திரையை காஞ்சி மாமுனிவரிடம் விவரமாக கூறினேன். நான் பட்ட கஷ்டங்களையெல்லாம் ஒன்று விடாமல் அவரிடம் விளக்கினேன்.

எல்லாவற்றையும் கேட்டு விட்டு, நிதானமாக, “அப்பப்போ மூச்சு விட முடியாமல் திண்டாடினியா?” என்று கேட்டார் பெரியவர்.

கோமுகத்திற்குச் செல்லும் வழியில், ஓர் ஏற்றத்தில் சுவாசிக்க முடியாமல் நான் திணறிய போது பின்னால் வந்த ஒரு சாது, “ஓம் நமசிவாய” என்று சொல்லிக் கொண்டே நட்ககும்படி எனக்கு அறிவுரை கூறினார். நான், அவர் கூறியபடியே பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்துக் கொண்டெ சென்றேன். என் மூச்சுத் திணறல் சற்று குறைந்தது.

சுவாமிகள் கேட்டபோது அந்நிகழ்ச்சி என் நினைவுக்கு வந்தது. “ஆமாம், ரொம்ப சிரமப்பட்டேன். ஆனால் பெரியவா அனுக்கிரகத்தினால் கோமுகத்தைத் தரிசித்து விட்டு சௌக்கியமாக வந்து சேர்ந்து விட்டேன்” என்றேன்.

பெரியவர் தமக்கே உரிய நளினத்துடன் லேசாகச் சிரித்துக் கொண்டார்.

இறுதியாக விடை பெற்ற போது, “எப்படியோ, தவிச்சு, திண்டாடி  எல்லாத்தையும் பார்த்துட்டு வந்துட்டே, போயிட்டு வா” என்று கூறி அனுப்பினார்.

ஜமுனோத்ரியில் ஒரு சாது எனக்குக் கைத்தடி கொடுத்துதவினார். போஜ்வாஸாவில் ஒரு சாது ஹோமியோபதி மருந்து தந்தார். கோமுக் செல்லும் வழியில் ஒரு சாது, நமசிவாய மந்திரோபதேசம் செய்தார். நெருக்கடியான நேரங்களிலெல்லாம் முன் பின் தெரியாத சாதுக்கள் எனக்குப் பேருதவி புரிந்ததை நினைக்கும்போதெல்லாம், நான் காஞ்சிப் பெரியவரின் கருணையை நினைத்துக் கண்ணீர் பெருக்கிக் கொண்டிருக்கிறேன்.

கோமுகத்திலிருந்து திரும்பும் வழியில் எங்கள் பாதையை ஒட்டியிருந்த போஜ்பத்ர மரத்தில் சுந்தரானந்தா ஏறி, மிக லாவகமாக அதன் பட்டையை உரித்துத் தந்தார்.

கங்கோத்ரிக்குத் திரும்பி வருவதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. உடல் அசதியும், அலுப்பும் ஒருபுறம் வாட்ட, ஷூவுக்குள் விரல்களெல்லாம் ரணமாகி வலித்தன. ஒவ்வோர் அடியும் எடுத்து வைக்கும் போதும் பிராணன் போய் வந்தது. நான் உட்கார்ந்து, எழுந்து, தள்ளாடித் தடுமாறி ஆமையாக நடந்து கொண்டிருந்தேன். எனக்குத் துணையாக ஜவானை விட்டுவிட்டு, எல்லோரும் முன்னே நடந்து சென்றார்கள். கண்ணன் கண்ணுக்குத் தெரியாத தொலைவில் ஒரு ஃபர்லாங் முன்னே சென்று கொண்டிருந்தார். அவருக்கும் உடல்நிலை சரியில்லை. வழியில் வாயில் எடுத்திருக்கிறார். அது எனக்குத் தெரிந்தால் நான் அதைரியப்பட்டு விடப் போகிறேனே என்பதற்காகவும், “நீ கூட ஆடிப் போய்விட்டாயே” “ஆனைக்கும் அடி சறுக்கும்” என்று நான் கேலி பேசப் போகிறேன் என்பதற்காகவும் அவர் வேகமாகச் சென்றார் என்பது எனக்குப் பின்னால்தான் தெரிந்தது.

கங்கோத்ரிக்கு வந்ததும் வராததுமாக ஷூக்களைக் கழற்றினேன். இரண்டு மூன்று விரல்களில் கொப்புளங்கள் ஏற்பட்டிருந்தன. குத்துவலி தாங்க முடியவில்லை. இரண்டு கட்டை விரல் நகங்களும் நீளம் பாய்ந்து கறுத்திருந்தன. கண்னனின் கால்களில் இரு சுண்டு விரல்களும் வீங்கிப் பழுத்திருந்தன.

நல்ல வேளையாக, மலையேறும் பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த டாக்டரின் உதவியாளர் மருந்து போடுவதாகக் கூறி எங்களை அழைத்துச் சென்றார். அவர் கேரளத்துக்காரர். “நம் பக்கத்து ஆசாமிகள்” என்ற சொந்தத்தில் எங்களை நன்றாக கவனித்துக் கொண்டார். ஊசியால் குத்தி கொப்புளங்களை உடைத்தார். பிளாஸ்திரிகள் போட்டார். இரண்டு மூன்று நாட்களுக்கு ஷூ போட வேண்டாம் என்ற யோசனையும் கூறினார். (சென்னைக்குத் திரும்பிய பிறகு எனக்கு ஏழெட்டு நகங்கள் விழுந்து புதிதாக முளைத்தன.)

நாங்கள் அன்றிரவே கங்கோத்ரியிலிருந்து புறப்பட்டு விட்டோம்.

அதாற்கு முன் சுந்தரானந்தாவுக்கு மூவரும் மாறி மாறி நன்றி கூறிவிட்டு, ஜீப்பில் ஏறி அமர்ந்தோம். கோமுகம் செல்ல ஜீப் பாதையொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறினார் டிரைவர்.

இரவு “பைரவங்காட்” பள்ளத்தாக்கில் இறங்கி, இருண்ட காட்டுப்பாதையில் நட்ககும் போதும் பயமாயிருந்தது. வழியில் மனித அரவமே இல்லை. கையில் டார்ச் இல்லாமல் போயிருந்தால் நாங்கள் நிச்சயம் வழி தவறிப் போயிருப்போம்.

பாகீரதி-ஜடகங்கா சங்கமத்தின் அருகில் பைரவன் கோயில் ஒன்று இருக்கிறது என்றும் அருகிலேயே ஒரு கந்தக நீரூற்று இருக்கிறது என்றும் பின்னரே நான் படித்தறிந்தேன். அந்த நீரில் குளித்தால் பல நோய்கள் குணமாகி விடுமாம்.

இந்தப் பகுதிக்கருகில்தான் ஜானு மகரிஷியின் ஆசிரமம் இருந்ததாம். பாகீரதி அவரது யாகத்தை அழைத்து விட்டதால் கோபம் கொண்ட ஜானு மகரிஷி, அவளை அப்படியே பானம் பண்ணி விட்டாராம். பின்னர், தம் காது வழியே அவளை வெளியே விட்டாராம். அதனால் அவளுக்கு ஜானவி என்ற பெயர் ஏற்பட்டதாம். இப்படியொரு கதையை நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? இந்தப் பகுதியில்தான் அந்த அதிசய நிகழ்ச்சி நடந்ததாம். அதற்கு ஆதாரமாக, திபெத்திலிருந்து இங்கு பாய்ந்து வரும் ஜடகங்கைக்கு ஜானவி என்ற பெயர் பொருத்தமாக அமைந்திருப்பதை சுட்டிக் காட்டுகிறார்கள்.

நாங்கள் லங்க்காவுக்கு வந்து சேர்ந்த பொது மணி ஒன்பதாகி விட்டது. அங்கிருந்து நாங்கள் கோபாங் சென்றடைந்த போது காம்ப் உறங்கி விட்டிருந்தது. ஒருவரையும் தொந்தரவு செய்ய விரும்பாததால் நாங்கள் எங்கள் கூடாரத்தினுள் நுழைந்து “கப்சிப்” என்று படுத்துக் கொண்டோம். சரியான குளிர். கிட்டுக்குள் புகுந்து கொண்டு, கடந்த இரு நாட்களாகக் கண்ட காட்சியற்புதங்கலை நினைவில் அசைபோட்டுக் கொண்டே படுத்திருந்தேன் நான். எனக்கு முன்னாலே உறங்கி விட்டிருந்த நண்பர்களின் இரட்டை நாதசுரம் போன்ற குறட்டையின் நாதம் எனக்குத் தாலாட்டுப் பாட, நானும் உறக்கத்திலாழ்ந்தேன்.

மறுநாட் காலை “இன்சார்ஜ்” (அங்குள்ள அதிகாரியை அப்படித்தான் அழைக்கிறார்கள்) எங்கள் கூடரத்திற்கு வந்து நலம் விசாரித்து விட்டு, அன்று காலை டில்லியிலிருந்து ஒயர்லெஸ் செய்தி வந்ததாகக் கூறினார். எங்கள் அடுத்த பயணத் திட்டத்தைப் பற்றித் தங்களுக்கு அறிவிக்கும்படி தமக்கு ஒரு தாகீது வந்திருப்பதாகவும் கூறினார். எல்லாம் சி.எஸ்.ஆரின் முயற்சியாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். நாங்கள் கேதார்நாத்திலும், ஜோஷிமட்டிலும் இருக்கப் போகும் தேதிகளை உத்தேசமாகக் கூறி, டெல்லிக்குத் தகவல் கொடுக்கும்படி அவரிடம் கேட்டுக் கொண்டேன்.

எல்லோரிடமிருந்தும் விடை பெற்றுக் கொண்டு வியாழக்கிழமை 27-ம் தேதி காலை எட்டரை மணிக்கு கோபாங்கிலிருந்து உத்தரகாசிக்குப் புறப்பட்டோம். அங்கிருந்து எங்கள் கேதார்நாத் பயணம் தொடங்கி விட்டதைத் தெரிவிப்பதற்காக “ஜெய் கேதார்” என்று புஷ்க்கர் உரக்கக் குரல் கொடுத்தார்.

நான்காவது மைலில் தராலி என்ற சிறு கிராமம் இருக்கிறது. அங்கு ஸ்ரீ கண்ட பர்வதத்திலிருந்து ஓடி வரும் தூத் கங்கா என்ற சிற்றாறு, பாகீரதியுடன் கலக்கிறது. அந்த இடத்திற்கு விசுவநாத் பூரி” என்ற பழைய பெயர் உண்டு. அங்கு மணலில் பாதி புதைந்திருந்த ஒரு சிவன் கோயிலைப் பார்த்தோம். வெளியில் யாளி ஒன்றும் யானையின் முகம் ஒன்றும் காணப்படுகின்றன. இதைப் போல் இன்னும் நூற்றுக்கணக்கான கோயில்கள் அஆற்று வெள்ளத்தில் மண்மூடிப் போய் விட்டதாகக் கூறினார்கள்.

தராலிக்கு நேர் எதிரே, நதிக்கு அந்தப் பக்கம் “முகாபா” என்ற ஊர் இருக்கிறது. கங்கோத்ரி ஆலயத்தின் பண்டாக்கள் வசிக்கும் இடம் அது. கங்கோத்ரி கோயில் ஆறு மாதம் மூடப்பட்டிருக்கும் போது அதன் அருகிலுள்ல மார்க்கண்டேயஸ்தான் என்ற ஊரில்தாங்கங்காதேவி விக்கிரகத்தைக் கொண்டு வந்து பூஜை செய்கிறார்களாம்.

தராலியிலிருந்து மானஸரோவர் ஏரிக்கும், கைலாசநாதர் மலைக்கும் ஒரு பாதைப் பிரிவதாகக் கூறி, “அதோ, அப்படிப் போக வேண்டும்” என்று ஓர் உள்ளூர்வாசி காட்டினார். அந்த வழியை ஏக்கத்தோடு பார்த்தேன். நான். அவை தற்போது திபெத்தில் இருக்கின்றன. சீனவின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள அந்த இடங்களுக்குப் போவது என்பது நினைத்துப் பார்க்கக் கூட முடியாததாகும். ஆனால், காலம் வரும், நம்பிக்கையோடு காத்திருப்போம் என்று உறுதி பூண்டேன். (தற்போது இந்தியா-சீனா ஒப்பந்தத்தின்படி இந்திய யாத்திரிகர்கள் கைலாஸம் போய் வருகிறார்கள்).