குப்தகாசியில் கேதார்நாத் பண்டாக்கள் வசிக்கிறார்கள். இது மந்தாகினிக்கு வலப்புறம் இருக்கிறது. மந்தாகினிக்கு இடப்புறம், நேர் எதிரே உக்கிமடம் என்ற ஊர் இருக்கிறது. தீபாவளியை அடுத்து, ஆறு மாதங்கள் கேதார்நாத் ஆலயம் மூடப்பட்ட பிறகு, கேதாரநாதருக்கு உக்கி மடத்தில்தான் பூஜை நடைபெறுகிறது.
குப்தகாசியிலிருந்து சோன்பிரயாகைக்குச் செல்லும் வரை ஒரே மலையேற்றம்தான். பாதையும் குறுகலாக இருக்கிறது. பத்ரிநாத் செல்லும் போது, பீப்பல்கோட்டிலும், ஜோஷிமடத்திலும் “கேட் சிஸ்டம்” இருப்பது போல் இங்கும் இருக்கிறது. அதற்காக எங்களைக் காக்க வைத்து விட்டு சரியாக ஒரு மணிக்கு டாக்சியைப் போக விட்டார்கள்.
வழியில் நிறைய “சட்டி”கள் வருகின்றன. அக்கிராமங்களிலெல்லாம் புராண சம்பந்தப்பட்ட பல கோயில்கள் இருக்கின்றனவென்றும், பல சிற்ப அற்புதங்களைக் காணலாம் என்று கூறினார்கள். அவற்றைப் பற்றியெல்லாம் கேள்விப்பட்டோமே தவிர இறங்கிச் சென்று பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் இன்னும் என் மனத்தை விட்டு நீங்கவில்லை. ஒரு பயணத்திட்டம் வகுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டால், நம் இஷ்டத்திற்கு அதை மாற்றிக் கொள்ல முடியாமல் போய் விடுகிறது. சாவகாசமாக நடந்து சென்றால் ஒவ்வோர் இடமாகப் பார்த்து ஆனந்தப்படலாம்.
குப்தகாசியை விட்டால், “நளாசட்டி” என்ற நளன் சட்டி வருகிறது. நள மகாராஜன் வழிபட்ட லலிதாம்பிகை அங்கு எழுந்தருளியிருக்கிறாள். அருகில் உள்ல மலையின் மீது நளமகாதேவர் கோயில் கொண்டிருக்கிறார்.
முன்பெல்லாம் பாத யாத்திரையாக வருபவர்கள், கேதார்நாத்திலிருந்து திரும்பும்பொது நளாசட்டி வரையில் வந்து, உக்கிமட், கோபேசுவரர், சமோலி, பீப்பல்கோட்டி வழியாகப் பத்ரிநாத் செல்வார்களாம். தற்போது அங்கு மோட்டார் பாதை போட்டிருக்கிறார்கள். ஆனால் அப்பாதை ஆபத்தானதாக இருப்பதால், டாக்சிக்காரர்கள் அவ்வழியாகப் போவதாற்கு விரும்புவதில்லை.
நளாசட்டிக்கு ஒரு மைலில் மகாதேவி கோயில் இருக்கிறது. அதையடுத்து, நாராயணகோட்டி. பாதையிலிருந்து பார்த்தபோது சோலைகளுக்கு நடுவே, நான்கைந்து கோபுரங்கள் தெரிந்தன. சிவன், லட்சுமி, நாராயணன், சத்தியநாராயணன், பிரஹதீசுவரன் முதலியவர்கள் கோயில் கொண்டிருக்கிறார்கள்.
அங்கிருந்து மூன்று மைல்கள் சென்றால் மெய்கண்டா அல்லது மைகண்டாசட்டி வருகிறது. அங்கு மகிஷாசுரமர்த்தனிக்கு ஒரு கோயில் இருக்கிறது. மகிஷாசுரன் ஆண்டுவந்த “மஹிஷ கண்ட்” பர்வதமும் இருக்கிறது.
அடுத்து ஃபாட்டா என்ற கிராமத்தை அடைந்தோம். இங்கெல்லாம் பாதை சரியாக அமைக்கப்படவில்லை. கரடு முரடாக் ஐருப்பதுடன் மிகக் குறுகலாகவுமிருக்கிரது. நீர் அருவிகள் பாதையின் குறுக்கே ஓடிக் கொண்டிருக்கின்றன. நல்ல அடர்த்தியான காடு. விபத்து ஏற்பட்டாலோ, இயந்திரக் கோளாறால் கார் நின்று விட்டாலோ அதோகதிதான்! நடுக்கத்துடனேயேதான் அந்தப் பகுதியைக் கடந்தோம். பதினோரு கிலோமீட்டர் சென்றதும், ராம்ப்பூர் என்ற கிராமம் வருகிறது. அங்கிருந்து ஸோன்பிரயாகை நான்கு கிலோமீட்டர்.
தற்போது நாம் ஐயாயிரத்து ஐந்நூறு அடி உயரத்திற்கு வந்து விட்டோம். ராம்ப்பூரிலிருந்து சிறிது தொலைவு சென்றால், இடப்புறம் திரியுகி நாராயணன் கோயிலுக்குப் பாதை பிரிகிறது. அது மூன்று மைல் ஏற்றம். இமாலயப் பயணத்தில் காண வேண்டிய முக்கியமான் புண்ணியத்தலங்களில் இது ஒன்று. கேதார்நாத்துக்குச் செல்லும்போது, திரியுகி நாராயணனை எப்படியாவது தரிசித்து விட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால், இங்கு வந்தபோதுதான், அந்த இடத்திற்குக் காரில் போகமுடியாது என்பதும், குதிரையின் மீதோ அலல்து நடன்தோதான் சென்று வர வேண்டும் என்பதும் தெரிந்தது. இந்தப் புறமாக ஏறி, நாராயணனைத் தரிசித்து விட்டு, மீண்டும் ஸோன்பிரயாகைக்கு அருகில் இறங்கலாம் என்றும் கூறினார்கள். ஆனால், கோமுக் சென்று விட்டுத் திரும்பியதிலிருந்து ரணமாகி விட்டிருந்த என் கால்கள் கெஞ்சியதால் நடப்பது முடியாத காரியம். குதிரையில் சென்றால் அங்கிருந்து திரும்புவதற்குள் இருட்டி விடும். மறுநாள்தான் கேதாருக்குப் புறப்பட முடியும். எனவே, திரியுகி நாராயணன் கோயிலுக்குச் செல்லும் எண்னத்தைக் கைவிட வேண்டியதாயிற்று.
மலை உச்சியில் சாகம்பரி என்ற மானசா தேவிக்கு ஒரு கோயில் இருக்கிறதாம். அங்கிருந்து சமதரையில் சற்றுத் தொலைவில் சென்றால், திரியுகி நாராயணன் கோயில் இருக்கிறது.
அந்த இடத்தில்தான் ஸ்ரீ நாராயணப் பெருமான் தமது சகோதரி பார்வதிதேவியை சிவபெருமானுக்குத் தாரை வார்த்துத் தந்தாராம். ஆலயத்தில் அந்த அக்னி குண்டத்தை இன்றும் காணலாம் என் கிறார்கள. குளிரிலும், மழையிலும், அணையாமல் அதைப் பாதுகாப்பதற்கு என்றே சில குடும்பங்கள் அங்கு இருக்கின்றனவாம். அந்தச் சாம்பலைப் பக்தர்கள் பிரசாதமாக எடுத்துச் செல்கிறார்கள். மூன்று யுகங்களாக ஸ்ரீ நாராயணன் அங்கு தங்கியிருப்பதால் அவருக்குத் திரியுகி நாராயணன் என்ர திருநாமம் எற்பட்டுள்ளது. அவருக்கு இருபுறமும் இலக்குமியும், பூதேவியும் காட்சி தருகிறார்கள்.
ஆறாயிரம் அடி உயரத்திலிருக்கும் திரியுகி நாராயணனைத் தரிசித்து விட்டு கேதார்நாத் செல்வதற்கு மொத்தம் பதினான்கு மைல்கள் ஆகின்றன. மூன்று மைல்கள் ஏறி, மூன்று மைல்கள் இறங்க வேண்டும். உள்ளத்தில் உறுதியும், உடலில் சக்தியும் இருப்பவர்கள் அவசியம் சென்று தரிசிக்க வேண்டிய திருத்தலம் அது.
நாங்கள் நேர்ப்பாதையில் ஸோன்பிரயாகை வந்து சேரும்போது இரண்டரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. இதற்கு “ஸோம்த்வார்” என்ற பெயரும் உண்டு. அங்கு ஸோம் என்றும், சுவர்ணகங்கா என்றும், வாசுகி என்றும் அழைக்கப்படும் நதி, மந்தாகினியுடன் சங்கமமாகிறது. ஸோம்பிரயாகை, ஸோன்பிரயாகை ஆகிவிட்டது.
நாங்கள் சென்றபோது கேதார்நாத் செல்லும் பாதையில் ஸோன்பிரயாகை வரையில்தான் பஸ்களும் இதர வாகனங்களும் சென்றன. இங்கிருந்து பதினோரு மைல்கள் நடையிலோ, போனி என்ற மட்டக் குதிரை மீதோ, கண்டியிலோ, தண்டியிலோதான் போக வேண்டியிருந்தது.
அப்போது, தமிழும், தெலுங்கும் பேசிய தென்னாட்டினர் சிலர் அங்கு நடமாடிக் கொண்டிருப்பதைக் கண்டேன். அவர்களெல்லாம் ஒரு “டூரிஸ்ட்” பஸ் ஏற்பாடு செய்து கொண்டு வந்திருந்தார்கள். கேதார் தரிசனம் முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்த அவர்களிடம் குதிரை சவாடி எப்படி இருந்தது என்று கேட்டேன். சௌகரியமாக, ஜாக்கிரதையாக அழைச்சுக்கிட்டுப் போய் வராங்க. அதெல்லாம் பயமில்லை. நீங்க தைரியமாகப் போய் வாங்க, என்று ஒருவர் கூறவெ, எனக்கு உண்மையிலேயே தைரியம் வந்து விட்டது.
அங்கிருந்து கடைவீதிக்குச் சென்று ஆளுக்கொரு குதிரையில் ஏறிக் கொண்டு, சங்கமத்தினருகிலுள்ள பாலத்தைக் கடந்து, கேதார் பாதையில் மலையேறிச் சென்றோம். மந்தாகினி நொங்கும் நுரையுமாக கொப்பளித்துக் கொண்டு பேரிரைச்சலுடன் பாய்வதைப் பார்த்தவாறே அடர்த்தியான காடுகளுக்குள் நுழைந்து நாங்கள் பயணம் செய்து கொண்டிருந்தோம். முக்கால் மைலில், தலையில்லாமல் ஒரு கணபதி சிலை இருந்தது. குதிரையிலிருந்தபடியே அதை வணங்கினோம்.
ஒரு சமயம் பார்வதி குளிக்கும்போது, கணபதியைக் காவல் போட்டிருந்தாள். அப்போது மாறுவேடத்தில் அங்கு நுழையப்பார்த்த சிவபெருமானை கணபதி தடுக்கவெ கோபம் கொண்ட சிவன், கணபதியின் தலையைக் கொய்து விட்டார். பின்னர், பார்வதி செய்தி அறிந்து, வருத்தமுற்று, கணவனிடம் வேண்ட, அவர் அவ்வழியே சென்ற யானையின் தலையைக் கொய்து கணபதிக்கு வைத்து விட்டார். அதன் பிறகே விநாயர், கஜானன் என்று அழைக்கப்பட்டார்.
இந்தக் கதையை அந்தச் சிலை நினைவுபடுத்துகிறது.
மலைப்பாதையில் குதிரை செங்குத்தாக ஏறும்போது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் பயணம் செய்தேன். மண் தரையில் செல்லும்போது அத்தனை பயமாக இல்லை. ஆனால் வழுக்குகின்ற பாறைகளில் குதிரை ஏறிச் செல்லும்போது, “அதன் கால் வழுக்கிவிட்டால் என்ன கதி?” என்று ஒரு கணம் திகிலடையாமல் இருக்க முடியாது. குதிரைக்காரர் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு கூடவே நடந்து வருகிறார். இருந்தாலும் நமக்கு ஒரே நடுக்கமாகத்தான் இருக்கிறது. சில இடங்களில் பாதை மிகக் குறுகலாக இருக்கிறது. குதிரையோ, பாதுகாப்பாக மலையையொட்டியே நடக்கிரது. அங்கு துருத்திக் கொண்டிருக்கும் பாறைகள் நம் மண்டையைக் குறி பார்க்கின்றன. ஒரிரு முறை “ஐயோ” என்று அலறியே விட்டேன். அப்போது, குதிரைக்காரர், மெல்ல சிரித்துவிட்டு, “பயப்படாதீர்கள், உங்களுக்கு ஒரு ஆபத்தும் இல்லாமல் கொண்டு போய்ச் சேர்க்கிறேன்” என்று அபயம் அளித்தார்.
இருக்கிற ஆபத்துகள் போதாதென்று எதிரில் ஆட்கள் வேறு வருகிறார்கள். அல்லது மற்றொரு குதிரை எதிரில் வந்து விடும். அப்போதெல்லாம் என் குதிரை உடலை வளைத்து ஒதுங்கி வழிவிட்ட பாங்கைக் கண்டு நான் அதிசயித்துப் போனேன். அது மட்டுமல்ல, தன் நான்கு கால்களையும் கற்களின் மீது மாறி மாறி மிக ஜாக்கிரதையாகவும், சாதுர்யமாகவும் பதிய வைத்து மிக லாகவமாக அது ஏறும் அழகை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். முதல் அரைமணி நேரம் திகிலுடனேயே சென்ற நான் போகப்போக பயணத்தை மிகவும் ரசிக்கத் தொடங்கி விட்டேன். என் குதிரைதான் முதலில் சென்றது. நான் கையை உயர்த்திப் பாடிக் கொண்டு வந்ததையும், எதிரில் வருபவர்களிடம் “ஜெய் கேதார்நாத் மகராஜ் ஜி கீ” என்று கூக்குரலெ ழுப்பியதையும் கண்ட என் நண்பர்கள் என்னை “லீடர் சார்” என்று அழைக்கத் தொடங்கி விட்டனர். குதிரை சவாடி எனக்கு அத்துபடியாகி விட்டது.
நாலரை மனி சுமாருக்கு மூன்று மைலில் இருக்கும் கௌரிகுண்ட் என்ற கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம். இரவு அங்கு தங்கி விட்டு, மறுநாட் காலை கேதார் பயணத்தைத் தொடரலாம் என்று கூறிய குதிரைக்காரர்கள் எங்கலை ஒரு கடை வாசலில் இறக்கிவிட்டுச் சென்று விட்டார்கள். இரவில் பயணம் செய்வது ஆபத்து. கேதார் செல்வதற்குள் நன்றாக இருட்டி விடும். எனவேதான் இந்த ஏற்பாடு.
கடைக்காரன் மாடியில் எங்களுக்கு ஓர் அறை ஒழித்து விட்டார். படுத்து தூங்க ரஜாய்களும் கொடுத்தார். இங்கு இருப்பவர்கள் தங்கள் இல்லங்களில் இம்மாதிரி அறைகளை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறார்கள்.
அறையில் சாமான்களைப் போட்டு விட்டு வெளியே புறப்பட்டோம். எங்கள் அறையிலிருந்து கீழிறங்கி வந்தது, எதிர்புறம் சுடுநீர் குண்டம் ஒன்று இருந்தது. பத்ரிநாத்திலும், ஜமுனோத்ரியிலும் இருக்கும் குண்டம் போலவே இதிலும் நீர் நன்றாகக் கொதித்தது. அங்கிருந்து இருபது அடி தொலைவில் மந்தாகினி ஜில்லென்று ஓடிக் கொண்டிருந்தது.
உடல் களைப்புத் தீரவும், குளிருக்கு இதமாகவும் அந்த வெந்நீரில் அமிழ்ந்து ஸ்நானம் செய்தோம்.
சுடுநீர் குண்டத்திலிருந்து சற்றுத் தொலைவில் கௌரி குண்டம் என்ற குளம் இருக்கிறது. அதன் நீர் மஞ்சளாக இருக்கிறது. சிவபெருமானைக் குறித்து தவமிருந்த போது பார்வதி அந்தக் குளத்தில்தான் மஞ்சள் தேய்த்துக் குளிப்பது வழக்கம் என்று அதன் கரையிலிருந்த பண்டா கூறினார். அங்கு தம்பதிகல் வந்து சங்கல்பம் செய்து கொள்கிறார்கள்.
கௌரி குண்டத்திற்கு எதிரே பார்வதி கோயில் இருக்கிறது. கருவறையில் கௌரிசங்கர், லட்சுமி நாராயண மூர்த்தி, அன்னபூர்ணா தேவி, கருடபகவான், கணேசர் முதலிய மூர்த்தங்கள் இருக்கின்றன. ஒரு பெரிய சிவலிங்கமும் காணப்படுகிறது.
கௌரிகுண்ட் என்ற இடம் தேவாரத் திருமுறையில் “அநேகதங்கா வதம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தப் பெருமானின் பாசுரம் இதற்கு உண்டு. காளத்தியில் இருந்தபடியே அப்புனிதத் தலத்தை கற்பனையில் கண்டு வர்ணித்திருக்கிறார் ஞானசம்பந்தர். அங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார். அவரது சிரசைப் பாம்பு ஒன்று அலங்கரிக்கிறது. எதிர்’எ ஒரு திரிசூலம் இருக்கிறது. அதைக் கொண்டுதான்பரமசிவன் கணபதியின் தலையைக் கொய்தாராம். இந்த இடம் பார்வதி கோயிலுக்கு அருகில் இருக்கிறது.
இந்த இடத்தை நான்பார்க்கவில்லை. ஏனெனில் அங்கு சென்றபோது அப்படியொரு சந்நிதி இருப்பதே எனக்குத் தெரியாது. அங்கு யாரும் எனக்குச் சொல்லவுமில்லை. இதைப் பற்றி நான் சென்னைக்குத் திரும்பிய பீறகே படித்து அறிந்தேன்.
இனி நாம் கேதாரப் பயணத்தை தொடருவோம்.
கௌரி குண்டத்திலிருந்து கேதார்நாத் ஏழு மைல். இன்னும் சுமார் ஐயாயிரம் அடி ஏறியாக வேண்டும். காலை பதினோரு மணிக்கெல்லாம் சென்றுவிடலாம் என்று குதிரைக்காரர் கூறினார். விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, “போனி” சவாடிக்குத் தயாராகி விட்டோம்.
இந்த போனி சவாடியை என்னால் மறக்கவே ,முடியாது. காடுகள் அடர்ந்த மலை ஒரு புறமும், அதலபாதாளத்தில் ஓடும் நதி மறுபுறமுமாக குறுகிய பாதையில் சென்றபோது நான் அதுவரை அறிந்திருந்த உலகத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாத பிரதேசத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். அத்தனை அப்பட்டமான, கலப்படமெ இல்லாத இயற்கைச் சூழலில் நான் இருந்ததே இல்லை. அத்தனை ஆரோக்கியமான தூய காற்றை நான் சுவாசித்ததே இல்லை. இயற்கையின் சுய வடிவத்த்தை அத்தனை அருகில் கண்டதும் இல்லை. அவள் சில சமயம் பத்ரகாளியாக பயமுறுத்துகிறாள்; சில சமயம் காருண்யவல்லியாக உள்ளத்தைக் குளிர்விக்கிறாள்.
அடர்ந்த காடுகளிலிருந்து வண்டுகள் ரீங்காரம் செய்தன. அங்கிருந்த பச்சிலைகளின் நெடி மூக்கைத் துளைத்தது. பதுங்கியிருக்கும் வன விலங்குகள் எங்கேயிருந்தாவது திடீரென்று நம் மீது பாய்ந்து விடுமோ என்ற அச்சத்தைத் தூண்டிற்று.
எட்டிப் பார்த்தால் தலையைச் சுற்றும் பாதாளம். விழுந்தால் எலும்புகள் கிடைப்பது கூடச் சந்தேகமெ. மந்தாகினி நதி, சிறு ஓடையாகச் செல்லும் அழகிய தோற்றம். எதிர்புறத்தில் மலைகளிலிருந்து ராட்சஸ நீர்வீழ்ச்சிகள் கொட்டிக் கொண்டிருக்கும் காட்சி.