மந்தாகினியைத் தொட்டுத் தொட்டுக் கொஞ்சி, குளிர்ச்சியைக் குறைத்துக் கொண்டிருந்தார் அவர்.
“என்ன கண்ணா சொல்றே? தலையில் தெளித்துக் கொண்டு விட்டால் போதாதா?”
“போதாது! கேதாரத்திற்கு வந்து விட்டு, மந்தாகினியில் ஸ்நானம் செய்யாமல் திரும்புவதா? இதில் ஸ்நானம் செய்ய கிட்டும் புண்ணியத்தை எத்தனையோ அசுவமேத யாகங்கள் செய்த புண்ணியத்திற்கு ஈடாகச் சொல்லியிருக்கிரார்கள். பிராணன் போவதாயிருந்தால் இப்படியே போகட்டுமே. நேரே சுவர்க்கத்திற்குப் போய் விடலாம்” என்று கூறியபடியே சட்டென்று அந்த நீரில் இறங்கி, அமிழ்ந்து ஸ்நானம் செய்து எழுந்தும் விட்டார், நெஞ்சுரம் மிக்க நண்பர்.
எனக்குத் தைரியம் பிறந்தது. அங்கிருந்த இரும்புக் கம்பியைப் பிடித்துக் கொண்டு, அவசர அவசரமாக ஒரு முழுக்குப் போட்டு விட்டு ஓடி வந்து விட்டேன். அதற்குப் பிறகு மற்ற நண்பரும், ஜவான் ஸலீந்தர் சிங்குக்கும் கூட தெம்பு பிறந்து விட்டது. ஒரு நொடியில் எப்படியோ ஒரு முழுக்குப் போட்டு விட்டுத் திரும்பி விட்டார்கள். எங்கள் இமயப் பயணத்தில் செய்த ஸ்நானங்களிலேயே மந்தாகினி ஸ்நானத்தை மட்டும் நாங்கள் என்றென்றும் மறக்க முடியாது.
உடலையும் உள்ளத்தையும் பரிசுத்தம் ஆக்கிக் கொண்டு நாங்கள் கேதாரநாதரின் தரிசனத்திற்குப் புறப்பட்டுச் சென்றோம். செல்லும் வழியில் ராதாகிருஷ்ண கனேச வாஜபேயி என்ற பண்டாவைச் சந்தித்தோம். கணேச வாஜபேயிக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. தமிழ்நாட்டிலிருந்து யார் வந்தாலும் தம்மைத்தான் தேடி வருவார்கள் என்று பெருமையுடன் கூறிக் கொண்டார்.அ வருக்கு தமிழ் லேசாக்ப புரிகிறது. சுமாராகவும் பேசுகிறார். சற்று முயன்றால் நாம் புரிந்து கொண்டு விடலாம்.
அவருடைய முன்ணோர்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்றும், தமக்குப் பூர்வீகம் “சிதாம்பரம்” என்றும் கூறினார் வாஜபேயி. சிதம்பரம் வாஜபேயர் வம்சத்தைச் சேர்ந்தவர் என்று நாங்கள் புரிந்து கொண்டோம்.
இவ்வாறு வடநாட்டிலிருந்து தென்னாட்டிற்கும், தென்னாட்டிலிருந்து வட நாட்டிற்கும் அக்கால மக்கள் குடியேறி, அவர்களுடைய சந்ததியினர் காலதேச வர்த்தமானத்தால் உருமாறிப் போயிருப்பதைக் காண்கிறோம். சூழ்நிலை, மொழி, கலாசார வெறுபாடுகளால் நடையுடை பாவனைகள் மாறியிருந்தாலும், எத்தனை தலைமுறைகளினிடைவெளியிருந்தாலும், மனிதன் பூர்வீகத்தை நினைவு கூர்ந்து பூரிக்கிறான். அப்படியிருக்கும் போது, மனித குலத்திற்கே பொதுவான பூர்வீகத்தை, மூலப் பொருளை, பரப்பிரும்மத்தை, சச்சிதானந்த சொரூபத்தை நினைத்து நாம் அனைவரும் எத்தனைப் பெருமையில் திளைத்து, பேரானந்தத்தில் மிதக்க வேண்டும்?
கடைவீதியைக் கடந்து, கேதாரேசுவரரின் ஆலயத்தி நோக்கிச் சென்றபோது, அத்தகைய ஒரு பேரானந்தத்தில் நாங்கள் மிதந்து கொண்டிருந்தோம். அன்றாடப் பிழைப்பிற்காக உழன்று அல்லற்படும் உலக வாழ்வு என்ற கடைவீதியைக் கடந்து, படைத்தவனின்பாத கமலங்களைச் சென்றடைவதுதானே பிறவியின் பெரும் பயனாகிறது!
பாரத ரத்தினங்களான பாண்டவர்களால் நிர்மாணிக்கப்பட்டு, பின்னர், பாரதத்தின்மணி விளக்காக விளங்கும் ஆதிசங்கர பகவானால் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட ஆலயத்தினுள் தற்போது நுழகிந்து கொண்டிருக்கிறோம். சில படிகளே ஏறிய பின்னர் ஆலயத்தின் முன்முற்றத்தில் வந்து நிற்கிறோம். அந்தத் திறந்த வெளியில் கேதாரேசுவரர் திருச்சந்நிதியை நோக்கியபடி அழகிய நதிகேசுவரர் எழில்மிகு கம்பீரத்துடன் தாழ்வான மேடையொன்றில் அமர்ந்திருக்கிறார். அவருக்கும் அவர் பனிவிடை புரியும் நாதனுக்கும் பக்தர்கள் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கணேச வாஜபேயி எங்கள் கவனத்தை வேறு பக்கம் திருப்பினார்.
“அதோ, சுற்றிலும் உள்ள மலையின் அமைப்பைக் கவனித்தீர்களா? அடுத்தடுத்து இரு மலைகள் மேலும் கீழும் இருப்பது சிவலிங்கத்தில் உள்ல ஆவுடையார் மாதிரியே தோன்றுகிறது பாருங்கள். சுற்றிலுமுள்ள மலையை ஆவுடையாராகவும், ஆலயத்தை லிங்கமாகவும் கற்பனை செய்து பாருங்கள். இது சிவசக்தி தலம் என்பது புரியும்” என்றார். பின்னர், “அதோ பாருங்கள், பனி மலைகளிலிருந்து நான்கு அருவிகள் ஓடி வருகின்றன. அது பால் கங்கை. அது தேவ கங்கை, அது சுவர்ண கங்கை, அது சரஸ்வதி, அவை நான்கும் மந்தாகினியில் கலக்கின்ரன. இந்தத் தலத்தின் மகிமைக்கும் இயற்கையழகிற்கும் இதுவும் ஒரு காரணம்” என்று உள்ளப்பூரிப்புடன் ஒவ்வொன்றாகச் சுட்டிக் காட்டினார் அவர்.
தற்போது ஸ்ரீ கேதாரநாதரின் தரிசனத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம். முதலில் ஆலயத்தை வலம் வருவோம்.
ஒரே ஒரு பிராகாரம்தான். மதிற் சுவரில்லை. கருங்கல்தளம் போட்டிருக்கிறார்கள். சிறுகச் சிறுகத் திருப்பணிகள் நடந்து கொண்டிருப்பது தெரிகிறது.
திருச்சந்நிதி தெற்கு நோக்கியிருக்கிறது. மேற்குப் பிராகாரத்தில் ஒன்றுமில்லை. வட்ககு பிராகாரத்தில் பழைய கற்சிலைகள் காணப்படுகின்றன. அங்கு உருவமற்ற மூர்த்திகளும் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, நீலகண்ட மகாதேவருடையது என் கிறார்கள.
வடகிழக்கில் – அதாவது ஈசானியத் திசையில், ஈசானீசுவரர் திருச்சந்நிதி இருக்கிறது. அங்குள்ள சிவலிங்கம் சிறு பாறை வடிவில் இருக்கிறது. வெளிப்புறம் கணபதியும், உமாமகேசுவரரும் எழுந்தருளியிருக்கிறார்கள். கிழக்கு பிராகாரத்தில் ஆலய நிர்வாக அலுவலக அறைகள் இருக்கின்றன. அடுத்து, முகுந்தபைரவர் என்ற ஓர் அழகான புராதனமான கற்சிலை நம் கண்னையும் கருத்தையும் கவருகிறது.
அங்கு நின்று கருவறை விமானத்தைத் தரிசித்தோம்.
“இது பாண்டவர்கள் கட்டிய விமானம்” என்றார் பண்டா.
“உண்மையாகவா” என்று கேட்டதற்கு பண்டா சிரித்தார். “கட்டினார்கள். பிறகு எத்தனையோ பேர் இதை மாற்றி அமைத்திருக்கிறார்கள்” ஏன்று விளக்கினார்.
சீரான கருங்கல் கட்டடம். சிற்ப வேலைப்பாடுகள் இல்லாமலே, கம்பீர கலையழகோடு காட்சி தருகிறது அது.
“முன் மண்டபம், பரீட்சித் மகாராஜாவின் மகன் ஜனமேஜயன் கட்டி முடித்தது” என்று பண்டா கூறினார்.
பேசிக்கொண்டே நாங்கள் மீண்டும் நந்திகேசுவரரிடமே வந்து சேர்ந்தோம். அங்கு வந்து நின்றபோது, நுழைவாயிலின் அருகில், இடப்புறம் வீற்றிருக்கும் பெரிய கணபதிமூர்த்தி எங்கள் கவனத்தைக் கவர்ந்தார்.
அதைப் பார்த்தாலே மிகப் புராதனமான சிலை என்பது எளிதில் தெரிகிறது. தெய்வ சாந்நித்யம் பரிபூரணமாக ஒளிவீசுகிறது. நான்கு திருக்கரங்கள் கொண்டுள்ல அக்கணபதி, வலக்கையில் உருத்திராட்ச மாலையை உருட்டிக் கொண்டு தவச்சீலராக அமர்ந்திருக்கிறார்.
குறுக்கிடும் தடைகளையெல்லாம் அகற்றி, நம் வாழ்வை மலரச் செய்யும் ஆனைமுகத்தோனை முதலில் தொழுது விட்டுத்தான், தந்தையைக் காணச் செல்ல வேண்டும் என்ற மரபு அங்கு இருந்து வருகிறது. கும்பிடுவது என்றால் கன்னத்தில் போட்டுக் கொண்டு, அவசர அவசரமாக தோப்புக்கரணம் போட்டுவிட்டு உள்ளெ நுழைவது அல்ல. அதனால் பயன் இல்லையாம். அங்கு அமர்ந்து, ஆற அமர, அபிஷேக, அர்ச்சனை, தூப தீபங்களோடு அவரை ஆராதனை செய்ய வேண்டுமாம்.
அவ்விதமே நாங்கள் முறையாகச் சங்கல்பம் செய்து கொண்டு, கணநாதனை ஆராதித்து விட்டு, ஈசுவரனைத் தரிசிக்கச் சென்றோம். சுற்றிலும் அமர்ந்திருக்கும் பண்டாக்கள் மிகச் சிரத்தையோடு, மந்திரங்கலை ஒன்று கூட விடாமல் கூறி, நமக்கு வழிபாடு செய்து வைக்கின்றார்கள்.
எழுந்து நிற்கிறோம். நுழைவாயிலில் இருபுரமும் காட்சி தரும் கம்பீரமான துவாரபாலகர்கள் நம்மைப் பார்த்து, “உள்ளே போய் ஆனந்தமாக தேவனைத் தரிசிக்கலாம்” என்று கூறுவது போல் ஒரு பிரமை தட்டுகிறது. மேலே நிமிர்ந்து பார்க்கிறோம். பைரவரின் முகம் எட்டிப் பார்க்கிறது. அதற்குக் கீழே பிந்துவாசினியின் சிதைந்த சிற்பம் ஒன்று அரைகுறையாகத் தெரிகிறது. துவாரபாலகருக்கு மேலேயுள்ல கோபாலகிருஷ்ணனின் உருவம் கண்ணில் படுகிறது.
பக்திப் பெருக்குடன் உள்ளே நுழைகிறோம்.
கருங்கல்லாலான அந்த முன் மண்டபத்தைச் சபா மண்டபம் என்றும், நவக்கிரக மண்டபம் என்றும் அழைக்கிறார்கள்.
மொத்தம் நான்கு தூண்கள் இருக்கின்றன. தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற நான்கு புருஷார்த்தங்களை அவை குறிக்கின்றனவாம். உத்தரத்தில் உள்ல வட்டங்கள் நவக்கிரகங்களைக் குறிப்பதாகக் கூறுகிறார்கள். நடுவில் அமைந்துள்ள பத்ம தளங்களின் மத்தியில் சூரிய பகவான் ஒளி வீசுகிறார்.
சுற்றிலும் உள்ள சுவர்களில் பஞ்சபாண்டவர்களின் பெரிய கற்சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. திரௌபதியும், குந்தியும், கண்ணபிரானும் கூட இருக்கிறார்கள். அர்ஜுனன் தவக்கோலத்தில் இருக்கிறான். நகுல, சகாதேவர்கள் வில்லுடன் காட்சி தருகிறார்கள். பீமன் கதையை ஏந்தியிருக்கிறான். யுதிஷ்டிரர் தர்மமே உருவாகக் காட்சி தருகிரார். அந்த இருளில் சிற்பச் சிலைகளின் எழிலை முழுமையாகக் கண்டு ரசிக்க முடியவில்லை. அவை தென்னாட்டு சிற்பங்களுக்கு மாறுபட்டதாக் ஐருக்கின்றன. அங்கு பஞ்சலோகத்திலாலான லட்சுமிநாராயணரின் விக்ரகம் ஒன்றும் இருக்கிறது.
அந்த மண்டபத்தின் மத்தியில், பித்தளையிலான சிறு நந்தி ஒன்று, கருவறையை நோக்கி அமர்ந்திருக்கிறது. அதற்குக் கீழே திருச்சந்நிதியைப் பார்த்தபடியே வீரபத்திர சுவாமியும் வீற்றிருக்கிறார்.
சபா மண்டபத்தையடுத்துள்ல சிறிய அர்த்த மண்டபத்தினுள் நுழைகிறோம். அங்கு இடப்புறம் சித்தி, புத்தி தேவியரோடு கணபதியையும், எதிரில் பார்வதி தேவியையும் தரிசித்துக் கொள்கிறோம். அம்மையின் அருகிலும் செல்லக் குழந்தை கணபதி இருக்கிறார்.
அதோ, கருவறையில் கேதாரீசுவரர் வீற்றிருக்கிறார். இப்பிறவியின் நற்பயனைப் பெறவும், மறு பிறவியைத் தவிர்க்கவும் அவரைத் தரிசனம் செய்து கொள்வோம், வாருங்கள்.
பாரத தேசத்திலுள்ள துவாதசலிங்க க்ஷேத்திரம் என்ற பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் கேதாரலிங்கமும் ஒன்றாகும். சுயம்பு மூர்த்தி, சிறு குன்று போன்ற அப்பாறை வ் அடிவில், சுவாமி அங்கு நித்தியவாசம் செய்து கொண்டிருக்கிறார்.
ஸ்ரீ வைகுண்டபதி நர, நாராயண ரிஷிகளாக வடிவங்கள் தாங்கி, பத்ரிகா ஆசிரமத்தில் தங்கியிருந்த சமயத்தில், மண்னில் சிவலிங்கம் செய்து வைத்து, வெகு காலம்வரை ஆராதித்துக் கொண்டிருந்தார்களாம். அவர்களுடைய அத்தூய்மையான பக்தியையும், இடையறாத வழிபாட்டையும் கண்டு மெச்சிய பரமேசுவரன், அவர்கள் முன் தோன்றி வேண்டிய வரத்தைக் கேட்கும்படி கோரினாராம். அப்போது நரநாராயணர்கள், “தாங்கள் கேதாரத்தில், ஜோதி வடிவத்தில் என்றென்றும் எழுந்தருளியிருக்க வெண்டும் என்றும், மனிதகுலம் தங்களைத் தரிசித்து உய்ய வேண்டும்” என்றும் பிரார்த்தித்துக் கொண்டார்களாம். அதன்படியே கைலாசநாதனும் கேதாரத் தலத்தில் ஜோதிர்லிங்க வடிவில் தங்கி விட்டார்.
அந்த ஜோதிர்லிங்கம் தற்போது பாறை வடிவில் காட்சி தரக் காரணம் என்ன? கூர்ந்து பார்த்தால், ஓர் எருமைக்கடாவின் பின் பாகத்தைப் போல் தோன்றுகிறது அல்லவா, அதற்கும் ஒரு கதை உண்டு.
பாரதப்போர் முடிந்து, ஓய்வும் மனச்சாந்தியும் பேறுவதாற்காகப் பஞ்சபாண்டவர்கள் இப்பகுதிக்கு வந்தார்கள். அவர்களைக் கண்டதும் சிவபெருமான் எருமை வடிவம் தாங்கி ஓட ஆரம்பித்தார். அந்த மிருகத்தினிடம் தெய்வீக அம்சம் ஒளிர்வதைக் கண்ட பஞ்சபாண்டவர்கள் அதைத் துரத்திச் சென்றார்கள். சுவாமி பூமிக்குள் புகுந்து மறைந்து விடலாம் என்று எண்ணினார். ஆனால், அதற்குள் பீமசேனன் எருமையின் வாலைப் பிடித்து இழுத்து விட்டான். முன்பாகம் பூமிக்குள் மறைய, பின்பாகம் மட்டும் வெளியே தங்கிவிட்டது.
சுவாமியின் முன்பாகம் நேபாளத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
எருமை வடிவத்திலிருந்த சிவபெருமான் பூமியில் பிறந்தபோது ஐந்து பாகங்களாகப் பிரிந்ததாக புராணம் கூறுகிறது. பின்பாகம் கேதார்நாத்திலும், கைகள் துங்காநாத்திலும், முகம் ருத்ரநாத்திலும், வயிறு மத்யமெசுவரத்திலும், ஜடை கல்பேசுவரத்திலும் இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.
துங்காநாத், உக்கிமட்டுக்கும் சமோலிக்கும் இடையேயுள்ள மலை உச்சியில் உள்லது. இமயத்திலேயே மிகவும் உயரத்தில் இருக்கும் ஆலயம் இதுதான். ருத்ரநாத் மண்டல்சட்டியிலிருந்து பதினோராவது மைலில் இருக்கிறது. மத்யமேசுவரா என்று அழைக்கப்படும் இடம், உக்கிமட்டிலிருந்து பன்னிரண்டு மைல் தொலைவில் உள்லது. அதற்கு “காளிமட்”டின் வழியாகச் செல்ல வேண்டும். கல்பேஷ்வர் என்னும் இடம், பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ல ஹெலாங் சட்டியிலிருந்து ஐந்தாவது மைலில், அலகநந்தாவின் அக்கரையிலுள்ளது.