பத்ரி கேதார் – 28

பஞ்சபத்ரியைப் போல் (விஷால் பத்ரி, யோக பத்ரி, பவிஷ்ய பத்ரி, விருது பத்ரி, ஆதி பத்ரி) மேற்கண்ட ஐந்து தலங்களும் “பஞ்ச கேதார்” என்று பெயர். இமயத்திலுள்ள இந்தப் புண்ணியத்தலங்களையெல்லாம் ஒரே பயணத்தில் தரிசிப்பவர்களும் இருக்கிறார்கள்.

கேதாரத்தில் சிவபெருமான் தங்களுக்குக் காட்சியளித்த இடத்தில் பாண்டவர்கள் அவருக்குக் கோயில் எழுப்பி வழிபட்டார்கள்.

சிவபுராணம் கூறுகிறது :

“கேதாரத்தில் பாண்டவர்கள் வழிபட்ட அதே முறையில்தான் சாட்சாத் சிவபெருமானைப் பாரத மக்கள், தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருகிறார்கள்.”

பத்ரிநாத்தில், அலகநந்தாவிலிருந்து ஆலயத்திற்கு வரும் வழியில் ஆதிகேதாரேசுவரர் சந்நிதி இருக்கிறதல்லவா? அதைப்பற்றிய ஒரு சுவாரசியமான கதையையும் அறிந்து கொள்வோம் :

ஸ்ரீமந் நாராயணன் பத்ரிகாசிரமத்தில் சிறு குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தார். அதனுடைய இனிமையான குரலைக் கேட்டு இதயத்தைப் பறிகொடுத்த பார்வதி தேவி, குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய் தன் நாதனிடத்தில் காட்டி மகிழ்ந்தாள். சிவபெருமானுக்கு இது பிடிக்கவில்லை. ஆனால் பார்வதிக்கோ குழந்தையை விட்டு விட விருப்பமில்லை. ஒருநாள் சிவபெருமானுக்கும், நாராயணனுக்கும் இடையே, “யார் அந்த பிரதேசத்தில் தங்குவது?” என்ற வாக்குவாதம் தோன்றி, பேச்சு வலுத்தது. அச்சமயம் பார்வதி தேவி குறுக்கிட்டு, “நாம் கேதாரத்திற்குச் சென்று விடுவோம். மகாபாரதத்தின் போது, அந்த இடம் புகழடையப் போகிறது” என்றாளாம். அதன்படியே, சிவபெருமான் கேதாரம் செல்வது என்றும், நாராயணன் பத்ரிகாசிரமத்தில் தங்குவது என்றும் ஒரு முடிவுக்கு வந்தார்களாம். அப்படிச் செல்வதற்கு முன் பரமேசுவரன் தமது ஓர் அம்சத்தை, அலகநந்தாவின் கரையில் விட்டு விட்டு, அங்கு வருபவர்களெல்லாம் தன்னைத் தரிசித்த பிறகெ பத்ரிநாராயணரை வழிபட வேண்டும் என்று ஆணையிட்டாராம்.

அந்த கேதார மகாப்பிரபுவை கேதாரில் நாம் வலம் வந்து கொண்டிருக்கிறோம். ஆறடிக்கு ஆறடிச் சதுரத்தில் அந்த ஜோதிர்லிங்கம் எழுந்தருளியிருக்கிறது. மூன்றடி உயரமிருக்கிறது. கீழே நாற்புறமும் வெள்ளிப்பட்டையால் வரம்பு கட்டியிருக்கிறார்கள். ஜோதிர்லிங்கத்தினிடப்பாகத்தை சக்தியாக ஆராதிக்கிறார்கள். அந்த  இடம் கணபதியின் முகம் போல் அமைந்திருக்கிறது. பின் புறத்தை மகாவிஷ்ணு, நெய்யினால் அபீஷேகம் செய்து ஆராதித்தாராம். அதனால் நம்மையும் நெய் அபிஷேகம் செய்யச் சொல்கிறார் அர்ச்சகர். அவர் லிங்காயத் வீரசைவ பரம்பரையைச் சேர்ந்தவர். அவர்தான் ஆலயத்தின் பிரதான அர்ச்சகர். கேதார்நாத், குப்தகாசி, உக்கிமட், மத்தியமேசுவரா முதலிய இடங்களிலுள்ல பண்டாக்கலெல்லாம் அவருக்குக் கீழ்தான். அவருடைய தலைமைப் பீடம் உக்கிமட்டிலுள்ளது.

சுவாமிக்கு நாமே அபிஷேகம் செய்யலாம். அர்ச்சனை செய்யலாம், தீப, தூப, நைவேத்தியங்களோடு ஆராதனையும் செய்யலாம். நமது பிராணனாக இருக்கும் நாதனை அணைத்து தழுவி, ஆனந்தப்படலாம்.

பாரதத்தின் ஒளி விளக்காக, ஓர் அகண்ட ஜோதி கருவறையில் எந்நேரமும் எரிந்து கொண்டிருக்கிறது.

யமுனோத்ரிக்கும், கங்கோத்ரிக்கும் முதலில் செல்பவர்கள், அங்கிருந்து நீரைக் கொண்டு வந்து, கேதார பிரபுவுக்கு அபிஷேகம் செய்விக்க வேண்டுமாம். அந்தப் புன்னியத்திற்கு ஈடு இணையே கிடையாதாம். நாங்கள் யமுனோத்ரியிலிருந்தும், கங்கோத்ரியிலிருந்தும் நீர் கொண்டு வந்திருந்தோம். ஆனால் பாத்திரம், ஸோன்பிரயாகியயில் நின்று கொண்டிருந்த எங்கள் டாக்சியிலேயே பத்திரமாக இருந்தது! அவை மட்டுமா? கோமுகத்திலிருந்து எடுத்து வந்திருந்த தீர்த்தமும் இருந்தது. என்ன செய்வது? அதற்கெல்லாம் கொடுப்பினை இருக்க வேண்டுமே?

அசப்பில் அந்த வடிவம் ஸ்ரீ யந்த்ர மேருவைப் போலவும் தோற்றமளிக்கிறது. சிவசக்தி சொரூபமாகக் காட்சி தரும் அப்பேரொளியிடம் பாரதத்தின் தர்மப் பயிர் செழிக்கவும் மனித குலம் தழைக்கவும் மனமாரப் பிரார்த்தித்துக் கொண்டோம்.

காலை நேரத்தில் கேதாரநாதனை சுயம்பு வடிவத்தில் திருமேனி தரிசனமாகக் கண்டு களிக்கலாம். காலை எட்டு மணி முதல் மதியம் வரை நாம் கேதாரீசுவரருக்கு அர்ச்சனை ஆராதனைகள் செய்யலாம். பின்னர் மாலை ஐந்து முதல் ஆறு மணி வரை “போகம்” என்ற நைவேத்திய படைப்பும், அதை ஒட்டிய வழிபாடும் நடைபெறுகிறது. பின்னர், இரவு எட்டு மணி வரையில் சிருங்கார தரிசனம், அதாவது அலங்காரம் செய்து அழகு பார்க்கிறார்கள். இறுதியாக ஆரத்தி தரிசனம்.

ஆலயத்திற்கு எதிரேயுள்ள கடைவீதியில் “உதக் குண்டம்” என்ற ஒரு சிறு சுனை இருக்கிறது. அது வற்றாமல் இருக்கிறது. ஆலய வழிபாடு முடிந்து, அங்கு வந்து, அந்தத் தீர்த்தத்தை வாங்கிப் பருகினால்தான், தரிசனத்தின் பலன் பூரணமாகின்றது என்றும், அதுதான் முக்கியமான பிரசாதமாகக் கருதப்படுகிறது என்றும் பண்டா கூறினார்.

மகாபாரதத்தின் கதாநாயகர்களான பாண்டவர்களின் வரலாற்றோடு இணைக்கப்பட்டுள்ள கேதாரத் திருத்தலம், புண்ணிய பாரதத்தை ஒருங்கிணைத்த ஒப்பில்ல குருமூர்த்தியான ஸ்ரீ ஆதிசங்கராசாரியாரின் வாழ்க்கையோடும் பிணைக்கப்பட்டுள்ளது. அவர் கெதாரத்திற்கு எத்தனை முறை வந்தார். எத்தனை நாட்கள் தங்கினார் என்ற விவரங்களுக்கு ஆதாரங்கள் கிடைக்காவிட்டாலும், துவாதச லிங்களில் ஒன்றான கேதாரீசுவரரைப் பற்றி இயற்றியுள்ல சுலோகம் நமக்குக் கிடைத்துள்லது. இதர பதினோரு சுயம்புலிங்கத் தலங்களுக்கும் சென்று வழிபட்டு தோத்திரங்கள் இயற்றியது போலவே, கேதாரநாதரையும் வழிபட்டு ஆராதிக்கிறார்.

இமாத்ரிபார்சுவேபி தடே ரமன்த்தம்

சம்ப்பூஜ்யமானம் சததம் முனீந்த்ர

ஸுராஸுரர்யட்ச மஹோரகாத்யை

கேதாரஸம்ஞம் சிவமி சமீடே

இமய கிரியின் ஒரு பகுதியில் ஆனந்தத்துடன் எழுந்தருளி, முனிவர்களாலும், தேவர்களாலும், அசுரர்களாலும், யட்சர்களாலும், பெரிய நாகங்களாலும் பூஜிக்கப்படும் கேதாரம் என்னுமிடத்தில் உள்ல சிவபெருமானைத் துதிக்கிறேன்.

இதர துவாதசலிங்கத் திருத்தலங்கள் :

  1. ராமேசுவரம், 2. ஸ்ரீசைலம், 3. பீமசங்கரம் (மகாராஷ்டிரம்), 4. வைத்யநாதர்-பரளி (மகாராஷ்டிரம் – பீகார் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது), 5. நாகேசர்-தாருகாவனம் (மகாராஷ்டிரம்), 6. குஸ்ருநேசர்-எல்லோரா (மகாராஷ்டிரம்), 7. திரயம்பகம் (மகாராஷ்டிரம்), 8. ஓம்காரம் – நர்மதைக்கரை (மத்தியப்பிரதேசம்), 9. சோமநாதம் (குஜராத்), 10. மகாகாளேசுவரர் (உஜ்ஜைன்), 11. காசி விசுவேசுவரர்.

இறுதியாக கேதார்நாத்திலிருந்து ஸ்ரீ சங்கர பகவான் கைலாசத்திற்குச் சென்றதாகவும், அப்பிரதேசத்தில்தான் அவர் தமது பூதவுடலை விட்டுச் சென்றதாகவும் ஒரு கருத்து உண்டு.

ஸ்ரீ சங்கரர் கேதாரத்தில் ஸித்தி பெற்றுக் கைலாசம் அடைந்தார் என்பதற்கு “மாதவீயசங்கர விஜயம்” ஒன்றுதான் ஆதாரமாயிருக்கிறது. இதர பெரும்பாலான சங்கர விஜயங்கல் ஸ்ரீ ஆதிசங்கரர் காஞ்சியில் மறைந்தார் என்ற செய்தியையே உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.

ஸ்ரீ ஆதிசங்கரர் கைலாசத்திற்குச் சென்று சிவபெருமானிடமிருந்து ஐந்து ஸ்படிக லிங்கங்கங்கள் பெற்ரு மீண்டும் பூமிக்குத் திரும்பியதாகவும், ஆராதனைக்காக அவற்றை ஐந்து இடங்களில் எழுந்தருளச் செய்ததாகவும் அவரது வாழ்க்கை வரலாற்றில் குறிக்கப்பட்டு உள்ளது.

,மார்க்கண்டேய சம்ஹிதையில் ஸ்ரீ ஆதிசங்கரர் நேபாளத்தில் வரலிங்கத்தையும், கேதாரத்தில் முக்தி லிங்கத்தையும், சிதம்பரத்தில் மோட்ச லிங்கத்தையும், சிருங்கேரி சாரதா பீடத்தில் போக சந்திரமௌளீசுவரரையும் பிரதிஷ்டை செய்த வரலாறு கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஹர்ஷ கவியின் நைஷத காவியத்திலும், காஞ்சியிலுள்ல ஸ்படிக யோக லிங்கத்தைப் பற்றிய் குறிப்பு ஒன்று காணப்படுகிறது.

பத்ரியிலிருந்த போது, தவத்தில் ஆழ்ந்திருந்த தமது குருவான கோவிந்த பகவத் பாதரரையும், பரம குருவான கௌடபாதரையும் ஸ்ரீ சங்கரர் தரிசித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர் ஒரு குகையில் ஸ்ரீ தத்தாத்ரேயரைத் தரிசித்து அங்கிருந்து அப்படியே மறைந்து விட்டதாகவும், “சித்விலாசிய சங்கர விஜயம்” பறைசாற்றுகிறது. ஸ்ரீ ஆதிசங்கரர் கேரளத்திலுள்ல திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் சுவாமியுடன் ஐக்கியமாகி விட்டதாக கேரளீய சங்கர விஜயத்தில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீ சங்கரர் காலடியில் பிறந்ததைப் பற்றிக் கருத்து வேற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அவர் மறைந்த விதமும், இடமும் பலவாறாக கூறப்படும்போது, கேதாரத்தில் “ஆதிசங்கரர் சமாதி” ஒன்று இருப்பது நம் சிந்தனையைத் தூண்டுவது இயற்கையே.

அந்த இடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, கோயிலுக்குப் பின்புறம், கையில் ஒரு பிருமாண்டமான தண்டம் வைத்திருப்பது போல் ஒரு சிலை தெரிகிறது. அது என்னவென்று அருகில் இருந்த பண்டாவிடம் கேட்டேன்.

“ஸ்ரீ ஆதி ஜகத்குரு சங்காராசாரியாரின் நினைவாக சில வருஷங்களுக்கு முன்பு துவாரகா பீடாதிபதி அவர்களின் நன்முயற்சியால் இது இங்கு ஸ்தாபிக்கப்பட்டது. இது சலவைக்கல்லால் ஆனது” என்று கூறினார் அவர்.

“வெட்டவெளியில் தனியாக ஒரு தண்டம் மாத்திரம் வைக்கப்பட்டிருப்பது என்னவோ போலிருக்கிறதே. இதற்கு ஒரு கூரை கூடப் போடாமல் வைத்து விட்டார்களே!” என்று நான் கண்னனிடம் குறைப்பட்டுக் கொண்டேன். அதைப் புரிந்து கொண்ட பண்டா, “இந்த இடத்தைப் பிரமாதமாகக் கட்ட வேண்டும் என்ற பிளான் இருக்கிறது. அதோ பாருங்கள், ஒரு மண்டபம் கட்டுவதற்கான அஸ்திவாரம் கூடப் போடப்பட்டிருக்கிறது. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை. அதற்குப் பிறகு இங்கு ஒரு வேலையும் நடைபெறவில்லை. அப்படியே நின்றுவிட்டது” என்றார் பண்டா.

அங்கிருந்து நாங்கள் இடப்புறமுள்ள ஸ்ரீ ஆதிசங்கரர் சமாதிக்கு வன்ட்ஹோம். பன்னிரண்டு ஆண்டுகள் முன்பு வரை அங்கு ஒரு சிறு மேடையும், அதன்மீது ஒரு சிகலிங்கமும்தான் இருந்தனவாம். பின்னர், பல பெரியோர்களின் நன்முயற்சியால் கொட்டகை போன்ற ஒரு சிறு கட்டடம் எழுப்பப்பட்டு, அங்கு ஸ்ரீ ஆதிசங்கரரின் சிறு சலவைக்கல் சிலை ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

சுவர்க்கத்வார கங்கா, தேன் கங்கா, மந்தாகினி ஆகிய மூன்று நதிகள் சங்கமம் ஆகும் திரிவேணி சங்கமத்தின் அருகில் அத்திருச்சந்நிதி அமைந்திருக்கிறது. 1963-ம் ஆண்டு மே மாதம், 27-ம் தேதி உத்தரப் பிரதேச கவர்னர் திரு விசுவநாத தாஸ், பீகர் கவர்னர் திரு அனந்தசயனம் ஐயங்கார் இருவரின் முன்னிலையில் ஸ்ரீ துவாரகாபீடாதிபதி அபிநவசச்சிதானந்த தீர்த்த சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக அங்குள்ள ஒரு சலவைக்கல் பலகையில் எழுதியிருப்பதை பண்டா எங்களுக்குப் படித்துக் காட்டினார். ஸ்ரீ சங்கராசாரிய கைவல்யதாம் என்று அதை அழைக்கிறார்கள்.

அந்தப் பரம புருஷர் திருவவதாரம் செய்திரா விட்டால், இன்று பண்டைய பாரதத்தைக் காணும் பேறு நமக்குக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகத்திற்குரிய பிரச்சனையாகும். ஸ்ரீ ராமனும், ஸ்ரீ கிருஷ்னனும் தமது பொன்னடிகளாலும், திருநாமங்களாலும் பெருமப்படுத்தி, ஒருமைப்படுத்திய இப்பாரதத்தை, நம் பண்டைய நெறிக்குப் புரம்பான பல்வேறு சக்திகள் சின்னாபின்னப்படுத்தி, உருத்தெரியாமல் அழித்து விட ஆயத்தங்கள் செய்து, அதில் ஓரளவு வெற்றியும் கண்டுவிட்ட நேரத்தில், இருள் போக்க வந்த ஆதவனாகத் தோன்றியவர் ஸ்ரீ ஆதிசங்கரர். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீரம் வரையிலும், காலடியிலிருந்து கேதாரம் வரையிலும், துவாரகையிலிருந்து பூரி ஜகந்நாதம் வரையிலும் ஆன்மீக உணர்ச்சி பரவித் தழைக்கிறது என்றால், அத்வைதத் தத்துவம் நிலைத்திருக்கிறது என்றால், வேத மதம் வேரூன்றியுள்ளது என்றால், தெய்வ பக்தி செழிக்கிறது என்றால், ஆலய தரிசனங்களும், புனிதப் பயணங்களும் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வருகிறதென்றால், தீர்த்த மகிமைகளும், தலபுராணங்களும் சிறக்கிறது என்றால், புண்ணிய பாரதம் பெருமையுடன் பீடுநடை போடுகிறதென்றால், அதற்கு இக்கலியில் அடித்தளம் அமைத்துக் கொடுத்த மூல மகாபுருஷர் ஸ்ரீ ஆதிசங்கர பகவானே.

முப்பத்திரண்டு வயதிற்குள், இப்புண்ணிய பூமியை இரு முறை வலம் வந்து, புராணப் பெருமைகளையெல்லாம் நமக்கு நினைவுபடுத்தி, தெய்வங்களின் சிறப்புகளையெல்லாம் உள்ளத்தில் ஆழப்பதித்து, சாத்திரங்களைத் தொகுத்து, தோத்திரங்கள் படைத்து, வழிபாட்டு முறைகளை வகுத்து, வாழ்க்கை நெறிகளைப் புகட்டி, வான்புகழ் கொண்ட அந்த வள்ளல் பெருந்தகையை நினைக்காத நிமிடங்கல், நம் வாழ்வில் விரயமான நிமிடங்களாகும்.

இணையற்ற திருத்தொண்டினால், இமாலயக் கீர்த்தி பெற்றுள்ல அப்புனிதரின் மூர்த்தியை விட்டு அகலவே மனம் வரவில்லை.ஸ்ரீ ஆதிசங்கரரின் நினைவாலயத்திலிருந்து நேரே உதக் குண்டத்திற்கு வந்து தீர்த்தப் பிரசாதத்தைப் பெற்று பருகி விட்டு, அதனருகிலுள்ள நவ துர்க்கா, சத்தியநாராயணர், பஞ்சமுக மகாதேவர் சந்நிதிகளைத் தரிசித்த பிறகு எங்கள் கேதார்பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டோம். ஒரு மணிக்கு புறப்பட்டு மாலை ஐந்து மணிக்கு ஸோன் பிரயாகை வந்து சேர்ந்தோம். இறக்கமானதால் வேகமாகவே வந்து விட்டோம். கடைசி மூன்று மைல்கள் நானும் கண்ணனும் குதிரையை விட்டு இறங்கி நடந்தே வந்தோம். குதிரைச் சவாரி செய்து பழக்கமில்லாததால், முதுகிலும் இடுப்பிலும் தாங்க முடியாத வலியெடுத்து விட்டது. இறங்கி காலை வீசி நடந்தது பரம சௌக்கியமாக இருந்தது.