இரண்டு நாள் பயணத்தின் அலுப்பும், அசதியும் ஒரு நொடியில் பறந்து போக, பாகீரதி தாலாட்டு பாட, அன்று இரவு நாங்கள் பச்சிளங்குழந்தைகள் போல் உலகமே தெரியாமல் உறங்கினோம்.
விடியற்காலையிலேயே விழிப்பு வந்து விட்டது. எழுந்து பால்கனிக்கு வந்து நின்றேன். எங்களுக்கு முன் விழித்துக் கொண்டு விட்ட இயற்கையன்னை, எழிற்கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.
பாறைகளுக்கிடையே பாய்ந்து வரும் பாகீரதியை அரசமரத்தில் அமர்ந்திருந்த பறவையினங்கள் குதூகலப் பாட்டுப் பாடி வரவேற்றன. வழிநெடுகிலும் கருங்கல் பாறைகளில் முட்டி மோதி, உடலுறுப்புகளிலெல்லாம் ஊமைக்காயம் ஏற்பட்ட குத்துவலியைத் தாள முடியாமல், தன் குறையை அலகநந்தாவிட்ம கூறி ஒரு குரல் அழுது தீர்த்து விடுவது என்ற ஆதங்கத்துடன் உரக்க முனகிக் சத்தமிட்டுக் கொண்டு, பாகீரதி வேகமாக ஓடி வருகிறாள். பாவம்! அதே மனக்குறையுடன் நூற்றைம்பது மைல் தொலைவிலிருந்து ஓடிவரும் அலகநந்தா, பாகீரதியைச் சந்தித்ததும் “ஓ”வென்று அலறுகிறது. அந்தத் துயரப் பேரிரைச்சலின் ஒலிதான் இங்கு கேட்கிறதோ! லலது “ஓடிவரும் பாதையில் நாம் எத்தனைதான் சிரமப்பட்டாலும், தெய்வ சம்பந்தம் ஏற்பட்ட காரணத்தால் நாம் ஒருங்கிணைந்து, புனித கங்கையாப் பாய்ந்து, பாரத மக்களை உய்விக்கும் பாக்கியம் பெற்றோமே” என்ற ஆனந்த ஆரவாரமாக இருக்குமோ அந்த உரத்த குரல்!
பல ஆண்டுகளுக்கு முன்பு, ஜி.கே. பலிஜ என்பவர் பத்ரி யாத்திரை சென்று விட்டுத் திரும்பியதும் எழுதிய ஒரு புத்தகத்தில் அவர் தேவப்பிரயாகையைப் பற்றிக் கூறுவதைப் பார்ப்போம் :
“தேவப்பிரயாகை ஒரு பெரிய கிராமம். பத்ரிநாராயணன் கோயிலில் வேலை செய்யும் பிராமண சிப்பந்திகளும், பண்டாக்கள் எனப்படும் பிராமண புரோகிதர்களும் இந்தக் கிராமத்தில் வசிக்கிறார்கள். இவர்கள் இவ்விடமிருந்தே யாத்திரிகர்களை தங்கள் வசப்படுத்திக் கொண்டு அவர்களை பத்ரி வரை அழைத்துச் செல்கிறார்கள். இவ்விட்ம சத்திரங்களும் கடைகளும் உண்டு. அலகநந்தா கங்கைய்ல் இறங்கி ஸ்நானம் செய்யலாம். சங்கமத்தில் ஸ்நானம் செய்து பிண்ட்ம விடுகிறார்கள். இந்த ஊர் ஹரித்துக்வாரத்திலிருந்து 58 மைல் தூரத்திலிருக்கிறது. பிரயாணிகள் மலை மேல் பிரயாணம் செய்யும் போது, மலைக்காற்றும், ஜலமும் அவர்களுக்கு பிடிபடாவிட்டால், இவ்வூர் சேருவதற்கு முன்பெ அவர்கள் நோய்க்காளாவார்கள். முக்கியமாக வயிற்றுக் கடுப்பும், ஜுரமும் காணும். இவ்வூர் சேரும் பொழுது தேகம் சௌகரியமாய் இருந்தால் முன்னுக்கு யாத்திரை போகலாம். மலை ஏறும்பொழுது வழியில் வியாதியாகி, இவ்விடம் சேர்ந்த ஒரு வாரத்திற்குள் அவர்களுக்கு வியாதி சுகப்படாமல் பொனால் அநேக யாத்திரிகர்கள் தங்கள் ஊருக்கு இவ்விடத்திலிருந்தே திரும்பி விடுவார்கள். அப்படித் திரும்புவதே உத்தமம். தேவப்பிரயாகை தப்பி சுகமாய் முன்னேறினால் கண்டிப்பாய் பத்ரி தரிசனம் செய்து திரும்பலாம்.”
இதைப்படித்த போது, அந்தக் காலத்தில் அத்தனை சிரமப்பட்டுக் கொண்டு, உயிரைப் பணயம் வைத்து யாத்திரை செய்து திரும்பியவர்களுக்குக் கிடைத்த புண்ணியம், நம்மைப் போல் சௌகரியமாக, எல்லா வசதிகளோடும் பத்ரி நாராயணன் கோயில் வரையில் காரில் சென்று வருகிறவர்களுக்குக் கிடைக்குமா என்ற சந்தேகம் என்னுள் எழுந்தது.
தேவப்பிரயாகை, 108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்விய தேசங்களில் ஒன்று என்றும், இங்கு பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார் என்றும், “கண்டம் எனும் கடிநகர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்றும் தேவப்பிரயாகையில் எங்களுக்கு கிடைத்த நண்பர் ரகுநாத் பிரசாத் கூறிக் கொண்டு வந்தார்.
நான் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன். “என்ன, வடநாட்டுக்காரன் இதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறானே என்று நினைக்கிறீர்களா? எங்கள் முன்னோர்கல் காஞ்சிபுரத்திலிருந்து இங்கு வந்து குடியேறிய வைஷ்ணவர்கள். தென்னாட்டிலிருந்து பத்ரி தரிசனத்திற்கு வரும் பயணிகளுக்குவ் அசதிகள் செய்து கொடுப்பதை எங்கள் பரம்பரைக் கடமையாகக் கொண்டிருக்கிறோம். நான் ஒரு அட்வகேட், என் தொழிலுடன் இந்தக் கடமைகளையும் கவனித்துக் கொண்டு வருகிறேன்” என்றார் பிரசாத்.
என் ஆச்சரியம் பன்மடங்காயிறறு. தென்கோடியிலிருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார், இமாலயத்திலுள்ள திவ்விய தேசங்களைத் தரிசிக்க வந்த போது, தேவப்பிரயாகையின் இயற்கை வனப்பில் மனத்தைப் பறிகொடுத்து அங்கு உறையும் புருஷோத்தமனிடம் பக்தியில் கரைந்துருகி, தீந்தமிழ்ப் பாசுரங்களாகப பாமாலை சூடியிருக்கிறார். அந்தப் பத்து பாசுரங்களை ஓதுபவர்கள், தினமும் திருமாலின் திருவடி தொழுது, அத்திருவடிக்குக் கீழே பாயும் கங்கையில் ஸ்நானம் செய்யும் பயனைப் பெறலாம் என்று பலஸ்ருதியில் கூறியிருக்கிறார்.
ஒவ்வொரு பாசுரத்திலும் முதல் இரண்டு அடிகளில் புருஷோத்தமனின் கீர்த்தியையும், பின்னிரண்டு அடிகளிலே கங்கையின் மகிமையையும் புகழ்ந்து பாடுகிறார்.
இரண்டாவது பாசுரத்தில்,
நலம் திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும்
நாரணன் பாதத் துழாயும்
கலந்து இழிபுனலால் புகர் பதி கங்கை
என்று பாகீரதி-அலகநந்தா நதிகளின் சங்கமத்தின் தத்துவத்தை கவி நயத்துடன் அனுபவிக்கிறார். சிவபெருமானின் சிரசை அலங்கரிக்கும் கொன்றை மலரும், நாராயணமூர்த்தியின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட துளசியும் அங்கு கலக்கிறதாம். அந்தப் புண்ணியத்தின் செர்க்கையால் புனிதமடைந்த பிரவாகம் எழில்மிகு கங்கையாய்ப் பாய்கிறதாம்.
கங்கையின் வேகத்தை பெரியாழ்வார் திருமொழியிலேயே கேட்போம் :
தடவரை அதிரத் தரணி விண்டு இடியத்
தலைப்பற்றி கரை மரம் சாடிக்
கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கை
அப்பப்பா…. அது என்ன வேகம்! அது என்ன யாருக்குமே அடங்காத முரட்டுப் பிடிவாதப் பிரவாகம்!
ஆதன் ஓட்டத்தைக் கண்டு பெரிய மலைகளெல்லாம் நடுங்குகின்றனவாம். பூமியே பிளந்து உள்ளே விழுகிறதாம்; கரையிலுள்ள மரங்களெல்லாம் வேரோடு பெயர்ந்து நீரில் அடித்துக் கொண்டு போகின்றனவாம்; கடலையும் குழம்பச் செய்யும் வேகத்துடன் கங்கை ஓடி வருகிறாளாம்.
மற்றொரு பாசுரத்தில், “கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை” என்று வருணித்து அக்காலத்தில் கங்கைக்கரை முழுவதும் யாக்ம வளர்த்த தவச்சீலர்கள் மண்டிக் கிடந்த மாட்சியைக் கூறுகிறார் :
ஏழுமையும் கூடி ஈண்டிய பாவம்
இறைப் பொழுது அளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமை கங்கை
என்று கூறி நாம் ஈரேழு பிறவியிலும் சேர்த்துக் கொண்ட பாவங்களை ஒரே நொடியில் அகற்றும் ஆற்றல் கொண்டது கங்கை என்று மிக உறுதியோடு நமக்கு நம்பிக்கை அளிக்கிறார்.
இத்திருக்கண்ட நகருக்கு பெரியாழ்வார் வந்த காரணத்தை கூறும் வகையில் ஒரு கதை கூறப்படுகிறது.
இங்கு ஒரு சமயம் மழையின்றி மக்கள் தவித்த போது, மன்னனின் கனவில் ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் தோன்றி, “பெரியாழ்வாரை இங்கு அழைத்து வந்தால் மழை பெய்யும்” என்று கூறவும், அதன்படியே மன்னன் பிரார்த்திக்க, ஆழ்வார் இங்குவ் அருகை தந்து பெருமாளை மங்களாசாசனம் செய்தாரம். உடனே பெரும் மழை பெய்து கங்கை கரியபுரண்டோடியதாம்.
வைகுண்டத்திலிருந்து புருஷோத்தமனுக்காக இங்கு வந்து சேர்ந்ததால் இந்த ஊர் “கண்டம்” என அழைக்கப்பட்டதாகவும், கைதொழுபவர்களின் வினைகளையெல்லாம் கண்டிப்பதாலும் இது கண்டம் ஆயிற்று என்றும் கூறப்படுகிறது.
தேவரிஷி சர்மா என்பவர் இங்கு தமிருந்து முக்தியடைந்ததால் இந்த சங்கமத்திற்கு தேவப்பிரயாகை என்ற பெயர் தோன்றியதாக ரகுநாத் பிரசாத் எனக்கு ஒரு விளக்கம் தந்தார்.
பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்த புருஷோத்தமனின் முன் நாம் இப்போது நின்று, அவரை கண்குளிரத் தரிசித்துக் கொண்டிருக்கிறோம்.
சங்கு சக்கர கதாபாணியான ஸ்ரீ நாராயணமூர்த்தியின் உருவம் ஒர் சாளக்கிராம சிலை. அதன்மீது சாத்தப்பட்டுள்ள வெள்ளிக்கவசத்தில் இருக்கும் இரு கைகளில் வில்லும், அம்பும் ஏந்தி, தாசரதியாய் அவர் திருக்கோலம் பூண்டிருக்கிறார். ராவணனை வதம் செய்த பாவம் நீங்க, அங்கு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிவபெருமானைக் குறித்துத் தவமிருந்த தலமாம் அது. எனவே இது ரகுநாதனின் ஆலயமாகச் சிறப்பு பெற்றுள்ளது.
மூலமூர்த்திக்கு இருபுறமும், சிறிய உருவில் ஸ்ரீதேவி, பூதேவி எழுந்தருளியிருக்கின்றனர். கருவறையில் அன்னபூரணி தேவி குடிகொண்டிருக்கிறாள். அக்கருவரையில் ஒரு சிவலிங்கமும் காணப்படுகிறது. அது ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று அர்ச்சகர் கூறினார். இமாலயப் பகுதியில் நாராயணமூர்த்தியானாலும் சரி, சிவலிங்கமானாலும் சரி, எல்லாம் ஆதிசங்கரரே பிரதிஷ்டை செய்ததாகக் கூறுகிறார்கள்.
சுவாமி சந்நிதிக்கு நேரே, பிராகாரத்தில் கருட பகவான் காட்சி தருகிறார். பின்னால் ஆஞ்சநேயர் இருக்கிறார். மண்டபத்தில் ஒரு சுயம்பு கணபதி எழுந்தருளியிருக்கிறார்.
ஸ்ரீ சீதா லட்சுமண ஆஞ்சநேயர் சமேத ஸ்ரீராமச்சந்திரன்; உற்சவமூர்த்தியாய்த் திகழ்கிறார். இங்கு ஸ்ரீராமநவமி, வசந்த பஞ்சமி, ஜன்மாஷ்டமி, விஜயதசமி முதலிய திருநாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
ஸ்ரீரகுநாத சுவாமி ஆலயத்திலிருந்து இறங்கி வரும் வழியில் இடப்புறம் காசி விசுவேசுவரர் திருச்சந்நிதி இருக்கிறது. அங்கு நந்திகேசுவரரும் பார்வதியும் எழுந்தருளியிருக்கிறார்கள். வெளிப்புறம் கணபதி வீற்றிருக்கிறார். அங்கு சிவலிங்கங்கள் நிறைய பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன.
ஸ்ரீ சந்திரமௌலீசுவரர் பூஜையை முடித்துக் கொண்டு அன்று மாலை மூன்று மணிக்கு சுவாமிகள் தேவப்பிரயாகையை விட்டுப் புறப்பட்டார். பதினெட்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள “பகவான்” என்ற கிராமத்தில் இரவு தங்கிவிட்டு, மறுநாள் ஸ்ரீநகர் நோக்கிப் புறப்படுவதாகத் திட்டம். காஷ்மீரின் தலைநகரோடு ஒரு கணம் நம்மை குழம்ப வைக்கும் இந்த ஸ்ரீநகர் பத்ரிநாத் செல்லும் பாதையில், தேவப்பிரயாகைக்கும் ருத்ரபிரயாகைக்கும் இடையேயுள்ள ஒரு பெரிய ஊர்.
முதல் திட்டப்படி ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் வரை ஸ்ரீமடத்துடனேயே பாதயாத்திரையாகச் செல்லவேண்டும் என்று எண்ணியிருந்தோம். ஆனால் குருவருள் வேறு விதமாக அமைந்திருந்தது பின்னர்தான் புரிந்தது. தேவப்பிரயாகைக்கு முதல் இரவே வந்து சேர்ந்ததால் கிட்டிய பலனையும், வாய்ப்புகளையும் கண்டபோது, எல்லா ஊர்களுக்கும் ஒரு நாள் முன்னதாகவே செல்வதால் பல இடங்களைக் காணவும், பல அரிய செய்திகளைச் சேகரிக்கவும் முடியும் என்ற எண்ணம் வேரூன்றியது. அதன்படி எங்கள் திட்டத்தை மாற்றி அமைத்துக் கொண்டோம்.
சுவாமிகள் முன்னால் சென்று விட்டார். நானும் என்னுடன இர்ந்த நண்பரும் பின்னால் பஸ்ஸில் சென்றோம். எங்களுக்கு இமாலயப்பாதையில் பஸ் பயணம் ஒரு புது அனுபவமாக இருந்தது. ஒரே நெரிசல். அவர்கள் இஷ்டத்திற்கு ஆட்களைத் திணிக்கிறார்கள். அழுக்கு ஆடைகளின் துர்நாற்றமும், மூச்சை அடைக்கும் சுருட்டுப் புகையும், பஸ்ஸின் குலுக்கலும் சேர்ந்து வயிற்றை குமட்டுகிறது.
எங்கள் பஸ் அலகநந்தாவின் கரை ஓரமாகப் போகிறது. இடப்புறமாக பாகீரதியின் கரையையொட்டிப் போனால் கங்கை உற்பத்தியாகும் கங்கோத்ரிக்கும், யமுனை உற்பத்தியாகும் யமுனோத்ரிக்கும் செல்லலாம்.
பத்ரி விஷால் கீ – ஜெய்!
கங்கா மாய் கீ – ஜெய்!
பஸ்ஸில் உள்ளவர்கள் குரல் கொடுக்கிறார்கள். கிராமத்துப் பெண்மணிகள் நாட்டுப்பாடலின் மெட்டில் கங்கையின் பெருமையைப் பாடுகிறார்கள். ஒரு அட்சரம் புரியவில்லை. ஆனால், அவர்களது பக்தி பாவ்ம என்ற மொழி நன்றாகவே புரிகிறது.
பெண்மணிகளின் பாட்டு அடங்குகிறது. அதற்காகக் காத்துக் கொண்டிருந்ததுபோல், ஒரு கிழவர் உச்சஸ்தாயியில் நீட்டி முழக்கிக் கொண்டு, உணர்ச்சியுடன் பாடத் தொடங்குகிறார். சுற்றிலும் இத்தனைபேர் அமர்ந்திருக்கிறார்களே என்று அணு அளவுகூட அவர் கூச்சப்படுவதாகத் தெரியவில்லை. அவருக்கு வெறு எதைப் பற்றியும் அக்கறையில்லை. அவருக்கு அன்னை கங்கையைத் தெரியும். அவளால்தான் வாழ்கிறோம் என்றும் அவள் புகழ் பாடுவதற்கென்றே நா படைக்கப்பட்டிருக்கிறது என்றும் நம்புகிறார். பிறந்தது முதல், பெற்றோர் அவருக்கு ஊட்டிய நம்பிக்கை அது. பாடவேண்டும் என்று நினைத்தோ, இங்கு பாடலாமா கூடாதா என்று தனக்குள் தீர்மானித்தோ, சுருதி சேர்கிறதா இல்லையா என்று கவலைப்பட்டோ பாடும் பாட்டல்ல அது. ரத்தத்தில் ஊறிய பக்தியுணர்வு, உள்ளத்தில் கிளர்ந்தெழும் கலப்படமற்ற தூய உணர்ச்சி வேகம். உயிருடன் கலந்து விட்ட பாமரப்பண்பு அனைத்தும் அவரை உந்துகின்றன. தன்வயமிழந்து, தன்மயமாகிப் பாடி, தன் ஆத்ம தாகத்தைத் தணித்துக்கொள்கிறார். அது கங்கையைப் போள் பிரவகிக்கிறது. பக்தியற்றவர்களும் அதன் குளுமையில் மூழ்கி எழுகிறார்கள்.
இமயத்தில் பஸ் ஓட்டுபவர்களின் கையில் என்ன மந்திர சக்தி இருக்கிரதோ! அந்தப் பயங்கரப் பாதையில் எத்தனை லாகவமாக ஓட்டுகிறார்கள்! தெய்வ நம்பிக்கையில் பிறக்கும் மன உறுதி அது, சந்தேகமில்லை.