நாங்கள் மேலே போய்க்கொண்டிருக்கிறோம். வலப்புறம் காணப்படும் அலகநந்தா கீழே கீழே போய்க் கொண்டிருக்கிறாள். தேவப்பிரயாகையில் அட்டகாசமாக ஆர்ப்பரித்து உறுமிய அலகநந்தா, இப்போது சாதுவாக, பரம சாதுவாக, மெள்ள ஊர்ந்து ஓர் ஓடையைப் போல் ஓடிக் கொண்டிருந்தாள். நம் எண்ணங்கள் உயர உயர, கடும் சோதனைகளேல்லாம் நமக்கு மிகச் சாதாரணமாகத் தோற்றமளிக்கவில்லையா, அது போல.
“பகவான்” என்ற இடத்தில் இறங்கி, நாங்கள் அரை மைல் நடந்து சென்று, அலகநந்தாவில் ஆனந்தமாக ஸ்நானம் செய்துவிட்டு, ஒரு ராணுவ லாரியில் ஏறி, இரவு ஸ்ரீநகர் வந்து சேர்ந்தோம்.
பெயருக்கேற்றவாரு ஸ்ரீநகர், லட்சுமிகரமாக விளங்குகிறது. இந்தப் பாதையிலுள்ல பெரிய நகரம் அது. நவீன வசதிகளோடு, ஒரு மலைவாசஸ்தலம். ஒரு வசதியுமற்ற தேவப்பிரயாகையைப் பார்த்த கண்ணுக்கு இது சொர்க்கமாக இருக்கிறது. தங்கும் விடுதிகளும், சிற்றுண்டிச் சாலைகளும் வாகன வசதிகளும் நிறைய இருக்கின்றன.
அலகநந்தாவின் இந்தப் பள்ளத்தாக்கு பார்க்க மிக ரம்மியமாக இருக்கிறது. ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீ சக்கர வடிவில் இந்த ஊரை அமைத்ததால் இதற்கு அந்தப் பெயர் ஏற்ப்பட்டதாகக் கூறுகிறார்கள்.
இங்கு அலகநந்தாவின் மத்தியிலுள்ள ஒரு திட்டில் ஒரு காளி யந்திரம் இருந்ததாகவும், அது தினமும் ஒருவரை பலி வாங்கிக் கொண்டிருந்ததாகவும்,ச் ரி ஆதிசங்கரர் இங்கு வந்த போது, ஊர் மக்கள் அவரிடம் இதைப்பற்றி முறையிட சங்கர பகவான் அந்தக் கருங்கல்லை எடுத்து தலைகீழாக நட்டு வைத்து விட்டதாகவும், அதாற்குப் பிறகு நரபலியிடும் பழக்கம் நின்று விட்டதாகவும் இங்கு ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. அந்த யந்த்ரம் நதியில் மூழ்கியிருப்பதாகவும், ஒரு சமயம் நீர் வற்றியபோது தாம் அந்தக்கல்லைப் பார்த்ததாகவும் ஒருவர் என்னிடம் கூறினார்.
இங்கு இருக்கும் கலமேசுவரர் ஆலயம் மகிமை வாய்ந்தது. ஸ்ரீமகாவிஷ்ணு இங்கு சிவபெருமானை ஆயிரம் “பிரும்ம கமலம்” என்ற புஷ்பங்களால் அர்ச்சனை செய்ய முடிவு செய்தாராம். தொள்ளாயிரத்து தொண்ணூற்றொன்பது மலர்களை அர்ச்சித்தாகிவிட்டது. கடைசி மலரைக் காணவில்லை. அவரை சோதிப்பதற்காக, சிவன் அதை எடுத்து ஒளித்து வைத்து விட்டாராம். திருமால் சற்றும் தயங்காமல் தன் கண்மலரை எடுத்துக் கடைசித் தாமரை மலராக அதை அவருக்கு அர்ச்சித்தாராம். திருவீழிமிழலைப்புராணத்தை நினைவுபடுத்துகிறது இந்த செய்தி.
ஸ்ரீ கமலேசுவரர் ஆலயத்தின் கருவறையில் இருப்பது சுயம்புலிங்கம். அங்கு பார்வதி தேவி, கணபதி, நந்திகேசுவரர் முதலியோரும் இருக்கிறார்கள்.
மேற்குப் பிராகாரத்தில் அன்னபூரணி தேவியின் திருச்சந்நிதி இருக்கிரது. அந்த அறையில் ஒரு ஸ்ரீசக்கரமும் காணப்படுகிறது. அதைத் தவிர மகாவித்யா, கங்கா மாதா, கௌரிசங்கர், ஸ்ரீ ராஜராஜேசுவரி உருவச் சிலைகளும் அங்கே இருக்கின்றன.
கிழக்குப் பிராகாரத்தில் ஒரு அபூர்வமான கணபதி கற்சிலையைப் பார்க்கிறோம். அது மிகவும் புராதனமானது; கால ஓட்டத்தில் கரைந்து போயிருக்கிறது.
தியானக் கோலத்திலிருக்கும் அந்தக் கணபதி, பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். நான்கு கரங்கள், மேலிரு கரங்களிலும் பாசமும், மோதகமும் இருக்கின்றன. கீழிரு கரங்களில் உருத்திராட்ச மாலையும், கமண்டலமும் இருக்கின்றன.
அந்தக் கோயிலில், மரத்தாலான பெரிய நந்தியொன்று இருக்கிறது. எண்பது ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டதாம் அதற்குப் பித்தளைக் கவசம் போட்டிருக்கிறார்கள். அந்தப் பகுதிகளில் பெரிய நந்திகளையோ, கவசம் அணிந்த நந்திகளையோ பார்ப்பத்து அபூர்வத்திலும் அபூர்வம்.
குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள் கார்த்திகை மாதத்தில் ஓர் அகல் விளக்கை ஏற்றி, அதைக் கையில் ஏந்தியபடியே மாலை ஆறு மணி முதல் மறுநாட் காலை ஆறு மணி வரையில் கருவறையின் முன்பு நின்றபடியே பிரார்த்திக் கொண்டால், அவர்களுக்கு அடுத்த ஆண்டு நிச்சயம் குழந்தை பிறக்கிறதாம். தனக்குத் தெரிந்த ஏழெட்டுப் பெண்மணிகள் இவ்வாறு விரதம் இருந்து, குழந்தைச் செல்வங்கள் பெற்றிருக்கிறார்கள் என்று எங்கள் வழிகாட்டி கூறினார்.
கமலேசுவரர் ஆலயத்திலிருந்து சற்று தொலைவு நடந்து, கேசவராய மடம் என்று அழைக்கப்படும் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம்.
முந்நூற்றைம்பது வருடங்களுக்கு முன் தெற்கிலிருந்து வந்த கேசவராயர் என்பவர் கார்வால் மகாராஜ சபையில் ஆஸ்தான வித்வானாக இருந்தாராம். அவர் கட்டிய கோயிலாம் இது. ஆனால், பழைய கோயிலிலிருந்த சுவாமியை 1894-ம் ஆண்டில் வந்த வெள்ளத்திலிருந்து காப்பாற்ற், எங்கோ எடுத்துக் கொண்டு போய் விட்டார்களாம். அச்சமயத்தில் பள்ளத்திலிருந்த ஸ்ரீ நகர் ஊரே அடித்துக் கொண்டு போய் விட்டதாம். இப்போது இருப்பது புதிய ஊர். அதை மேட்டில் கட்டியிருக்கிறார்கள்.
அலகநந்தாவின் கரையோரத்தில் “சங்கர மடம்” ஒன்று இருப்பதாகக் கேள்விய்7உற்று, அதைக் காணச் சென்றோம். ஸ்ரீ ஆதிசங்கரரோடு சம்பந்தப்பட்ட ஸ்ரீநகரில் இருக்கும் சங்கர மடத்தில் அபூர்வ விஷயங்கள் கிடைக்கலாம் என்று நம்பிக்கையோடு சென்றேன். அங்கு சென்ற பிறகு, ஸ்ரீ ஆதிசங்கரருக்கும் அந்த சங்கர மடத்திற்கும் சம்பந்தமே இல்லை என்பது தெரிந்தது.
முந்நூறு வருடங்களுக்கு முன் “சங்கரத் தனுவால்” என்பவரால் கட்டப்பட்ட ஒரு சிறு கோயில் அது. அங்கு சங்கரநாராயணனின் சிலை இருந்ததாம். தற்போது ஒன்றுமில்லை.
சற்று மேடான இடத்தில் அமைந்திருக்கும் அந்த பர்ணசாலைக்கு எதிரே நிற்கும்போது, புராணகாலத்து மகரிஷி ஒருவரின் ஆசிரமத்தில் நிற்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அரச மரங்களும், ஆலமரங்களும் குடையாய் விரிந்திருக்க, அவற்றில் அமர்ந்திருக்கும் எண்ணற்ற பறவைகள் கொஞ்சுமொழி பேசுகின்றன. “கிளி கொஞ்சுகிறது” என்பதன் பொருளை அன்றுதான் புரிந்து கொள்ளமுடிந்தது. உள்ளம் குதூகலத்தில் துள்ளி, இன்பக் களிப்பில் ஊஞ்சலாக ஆடுகிறது. அருகில் ஓடும் அலகநந்தாவிலிருந்து வீசும் காற்று தாலாட்டுப் பாடுகிறது. மனம் உறக்கத்திலாழ்ந்து, நம்மை தியான நிலைக்கு இட்டுச் செல்கிறது. விவகார உலகமே மறந்து, அப்ராக்ருத அனுபவத்தோடு ஐக்கியமாகி விடுகிறோம். கண நேரம்தான். ஆயுட்காலம் முழுவதும் அங்கு அமர்ந்திருக்க ஆசைதான். இப்பிறவியில் அப்படியொரு வாய்ப்பு எங்கே கிட்டப்போகிறது?
அடுத்து, ஸ்ரீ ஆதிசங்கரர் காளியந்திரத்தை தலைகீழாக வைத்து, நரபலியை நிறுத்திய பாறையைத் தொலைவிலிருந்து தரிசித்தோம்.
அலகந ந்தா கரை மேலேயே நடந்தோம். மப்பும், மந்தாரமுமாக இருந்தது. பேய்க்காற்று வீசிக்கொண்டிருந்தது. வழியில் இருந்த லட்சுமிநாராயணர் கோயிலுக்குள் சென்று தரிசித்தோம். மிகப் பழமையான கோயில்.
சற்று கிழக்கே நடந்து, கம்சமர்த்தனி ஆலயத்திற்கு வந்து சேர்ந்தோம். அது பெரிய கட்டடம் இல்லை. சிறு குடிசை போன்று இருந்தது. ஸ்ரீ கிருஷ்ண பகவானின் மாயாசக்தியாக, அக்னி ஜ்வாலையாகக் கீழிறங்கி, அங்கு நித்திய வாசம் செய்கிறாளாம்.
அக்கோயிலில் சிலையொன்றும் இல்லை. ஒரு குண்டம்- ஒரு பள்ளம் – இருக்கிறது. அதற்குத்தான் பூஜையெல்லாம். ஆனால், பூசாரி கண்களைக் கட்டிக் கொண்டுதான் பூஜை செய்கிறாராம். கண்ணைத் திறந்து கொண்டு பூஜை செய்தாலோ, அல்லது அந்த குண்டத்திற்குள் எட்டிப் பார்த்தாலோ, கண் அவிந்து போய் விடுமாம். “என்ன ஆகிறது பார்ப்போமே” என்று திமிரோடு பார்த்த ஓரிருவர் தங்கள் பார்வையை இழந்திருக்கிறார்களாம்.
இங்கு உறையும் தேவியின் மாபெரும் சக்தியை உணர்த்தும் வகையில் கோயில் பூசாரி தல புராணக் கதையொன்று கூறக் கேட்டோம் :
ஓரு காலத்தில், ஒரு சாது இங்கு நிர்வாணமாக அமர்ந்து, அக்னி வளர்த்து வழிபாடு செய்து கொண்டிருந்தார். கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் அவர் தீயில் போட்டு விடுவார். அந்தப் பயங்கரமான காட்டில் கடுங்குளிரையும், கொட்டும் மழையையும், கொளுத்தும் வெயிலையும் சற்றும் பொருட்படுத்தாது, கர்மமே கண்ணாயிருந்த இந்த சாதுவைக் கண்ட பண்டிதர் ஒருவர், மகாராஜாவிடம் சென்று இவரைப் பற்றி ஆச்சரியத்துடன் கூறவே, அரசன் விலையுயர்ந்த சால்வைகளையும், இதர பொருட்களையும் சாதுவுக்குப் பரிசாகக் கொடுத்து அனுப்பினார். அவற்றைப் பெற்றுக் கொண்ட சாது, எல்லாவற்றையும் அப்படியே அக்னியில் போட்டு விட்டார். இதைக் கேட்டதும் அரசனுக்குக் கோபம் உண்டாயிற்று. பண்டிதரை அனுப்பி தாம் அனுப்பிய பொருட்ள்களையெல்லாம் திருப்பித் தரும்படி சாதுவிடம் கேட்கச் சொன்னார். பண்டிதரும் அவ்வாறே கேட்டார். உடனே சாது, தேவியிடம் பிரார்த்தித்தார். அடுத்த கனம், அக்னியில் அந்த சாது போட்ட பொருட்களைக் கொண்டு வந்து கொடுத்து விட்டாள் தேவி. அப்போது அவள் கையை பண்டிட் பார்த்து விட்டார். உடனே அவருடைய கண் பொட்டையாய் விட்டது. அபசாரம் செய்து விட்டதாகக் கதறியழுது, சாதுவின் காலில் விழுந்து, மன்னிக்கும்படி கோரினார். எல்லாப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு, திரும்பிப் பார்க்காமல் போகும்படி சாது அவரிடம் கூறினார். பண்டிட் அவ்விதமே செய்தார். உடனே அவருக்குப் பார்வை மீண்டது.
கம்சமர்த்தனி கோயிலுக்கு வெளியே ஒரு காளி கோயில் இருக்கிறது. சிறு கல் ஒன்றுதான் நட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இன்றும் மிருக பலியிட்டு வருகிறார்கள். அலகநந்தா நதியின் அக்கரையில் “கிள்கிளேசுவரர்” ஆலயம் இருக்கிறது. அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் தந்த சிவபெருமான் உறையும் தலம் அது.
இந்த ஆலயங்களைத் தவிர, சுற்றிலும் உள்ள மலைகளின் மீதும் சிறு சிறு கோயில்கள் இருக்கின்றனவென்றும், ஆனால், அவையெல்லாம் பூஜை, நைவேத்தியங்கள் இல்லாமால், கவனிப்பாரற்று கிடக்கின்ரன என்றும் அங்கு வசித்து வரும் ஒரு கேரள அன்பர் கூறினார்.
ஸ்ரீ நகரில் நாங்கள் ஒரு டாக்சியை ஏற்பாடு செய்து கொண்டோம். பதினெட்டாவது கிலோமீட்டரில் உள்ள காளியாசோர் என்ற இடத்தில் மலைப்பாதையிலிருந்து முந்நூறு, நானூறு அடி கீழே இறங்கிச் சென்றால், அலகநந்தாவின் கரையில் வீற்றிருக்கிறாள் ஒரு தேவி. மேலே கூரையொன்றும் இல்லை. பாறையையொட்டி, ஒரு மேடையின் மீது அவள் காட்சியளிக்கிறாள். மார்பு வரையில் உள்ள உருவச்சிலைதான். முகத்தில் சான்தம் தவழ்கிறது. பக்கத்தில் வேறு உருவங்களும் காணப்படுகின்றன. அருகிலுள்ள ஒரு மண்டபத்தில் சிவலிங்கமும், திரிசூலமும் இருக்கின்றன.
அந்த தேவியை தட்சிண காளி என்கிறார்கள. அவளைப்பற்றிய கதையைக் கேட்டபோது மிகவும் “த்ரில்”லிங்காக இருந்தது.
தென்னாட்டிலிருந்து அங்கு வந்த பட் என்ற அந்தணருக்கு ஆறு பிள்ளைகள், ஒரு பெண். அவர் தம் பெண்ணை தெவியின் அம்சம் என்று அறிந்து அவளுக்கு, சகல மரியாதைகளும் அளித்து வந்தார். அவல் சாப்பிட்ட பிறகுதான் வீட்டிலுள்ள மற்றவர்களுக்குச் சாப்பாடாம். இது மூத்த பிள்ளைக்கு கோபத்தை மூட்டியது. ஒருநாள் சகோதரிக்கு முன்னதாகவே சாப்பிட்டு விட்டான். இதனால் கோபம் கொண்ட பெண் எல்லா சகோதரர்களையும் வெட்டி வீழ்த்தினாள். ஒரு சகோதரன், தன் உயிர் பிரியும் முன், தன் சகோதரியை கத்தியில் இடுப்போடு இரு துண்டாக வெட்டி விட்டான்.
இடுப்புக்கு கீழுள்ள பாகம் ருத்ர பிரயாகையிலிருந்து கேதார்நாத் செல்லும் பாதையிலிருக்கும் “காளி மடம்” என்ற இடத்தில் இருக்கிறதாம். இடுப்புக்கு மேலுள்ள பாகம் அலகநந்தாவில் அடித்துக் கொண்டு வந்து, காளியாசோரில் தங்கிவிட்டதாம்.
அன்று இரவு சுமார் ஏழரை மணிக்கு ருதரபிரயாகைக்கு வந்து சேர்ந்தோம் ருத்ரபிரயாகை, தேவப்பிரயாகையை விட பெரிய ஊர். பஸ் ஸ்டாண்டையும், கடைவீதியையும், உணவு விடுதிகளையும் பார்த்தால் ஒரு சிறிய டவுன் போன்றே இருக்கிறது. ஸ்ரீநகரைப் போன்ற நாகரீக வளர்ச்சி அடைந்திராவிட்டாலும், பத்ரிநாத் பாதையில் அது ஒரு முக்கியமான தலம் என்பது பார்த்த உடனேயே புரிந்து விடுகிறது.
தேவப்பிரயாகையில், பாகீரதியும், அலகநந்தாவும் சங்கமிக்கின்றன. ருத்ரபிரயாகையில், அலகநந்தாவும், மந்தாகினி நதியும் சங்கமமாகின்றன. அலக்நந்தா என்று அப்பகுதியினால் உச்சரிக்கப்படும் அலகநந்தா, பத்ரிநாத்திலிருந்து பாய்ந்து வருகிறது. இவ்விரு நதிகளும் ருத்ரபிரயாகையில் ஒன்று கலக்க, பின்னர், மந்தாகினி தன் பெயரை இழக்க, அலகநந்தா தேவப்பிரயாகையில் பாகீரதியுடன் சேருவதற்காக வேகமாகப் போகிறது. தேவப்பிரயாகையில் பாகீரதி, அலகநந்தா இரு நதிகளுமே தங்கள் தனிப்பெயர்களை இழந்து, கங்கையாகிவிடுகின்றன.