ருத்ரப்பிரயாகையில், இரு நதிகள் மட்டும் சங்கமம் ஆகவில்லை. பத்ரிநாத் செல்லும் பாதையும், கேதாரிநாத் செல்லும் பாதையும் இங்குதான் சங்கமம் ஆகின்றன. இங்கிருந்து அலகநந்தா கரையின் மீது சென்றால் பத்ரிநாத்தையும், மந்தாகினியின் கரை மீது சென்றால் கேதார்நாத்தையும் அடையலாம். இவ்விடங்களுக்குப் போகிறவர்களும், பச்ஸில் பிரயாணம் செய்கிறவர்களுக்கும், இது ஒரு முக்கியமான “ஜங்ஷன்”.
எனவேதான், இங்கு எப்போது யாத்திரிகர் கூட்டம் இருந்து கொண்டேயிருக்கிறது. பஸ்கலும், டாக்சிகளும், கார்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. பஸ் ஸ்டாண்டில், ஒரு பிருமாண்ட மரத்தைச் சுற்றி ஒரு மேடையிருக்கிறது. அதில் அமர்ந்து கொண்டால், அகில இந்தியாவையும் தரிசிக்கலாம்.
ருத்ரப்பிரயாகை, நதிகளின் சங்கமம் மட்டுமல்ல, இரு பாதைகள் சேரும் சந்திப்பு மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள மாநிலங்களெல்லாம் அங்கே சங்கமமாவதைக் காணலாம்.
“இமயம் முதல் குமரி வரை” என்று பாரதத்தின் பரப்பளவைப் பற்றியும், ஒருமைப்பாட்டுணர்ச்சியைப் பற்றியும் பெருமையோடு பேசுவதன் முழுப்பொருளை, ருத்ரப்பிரயாகியயில் நன்கு உணர முடிகிறது. இரண்டு பஸ்கள் வந்து விட்டால் போதும்; தமிழும், தெலுங்கும், கன்னடமும், மலையாளமும், மராத்தியும், ஒரியாவும், குஜராத்தியும், வங்காள மொழியும், இந்தியும், இனம் புரியாத இன்னும் எத்தனையோ மொழிகளும் அங்கு கலந்து உறவாடுகின்றன. பல்வேறு மொழி பேசுபவர்களும், பல்வேறு வகையான உடையணிந்தவர்களும், மாறுபட்ட பழக்க வழக்கங்களைக் கொண்டவர்களு ம், மாறான வாழ்க்கை முரைகளைப் பின்பற்றுபவர்களும், அங்கு வந்து கூடுகிறார்கள். ஆனால், அத்தனை பேர் உள்ளங்களிலும் இனிய நீரூற்றாகப் பெருகிப் பாயும் ஏதோ ஒரு ஜீவசக்தி அவர்களை ஒருங்கிணைப்பதைக் காணமுடிகிறது. பாரதத்தை இணைக்கும் பக்திப் பெருவெள்ளத்தில், அவர்களது வேற்றுமைகளெல்லாம் மூழ்கி விடுகின்றன. தங்களுக்குள் அந்தரங்க மொழி பேசி, உள்ளங்களால் உறவாடி, பேரானந்தம் எனும் ஆன்மீகப் பெருநிதியை சேர்த்துக் கொள்கிறார்கள் அவர்கள்.
எங்கெங்கோ பிறக்கும் நம் பெருங்குடி மக்கள் தல யாத்திரை புறப்பட்டு, தீர்த்தங்களில் நீராடி, ஆண்டவனின் திருநாமம் நாவில் ஒலிக்க, ஏதோ ஓரிடத்தில் பாரதக் குடும்பமாக இணைகிறார்கள். எங்கெங்கிருந்தோ பெருகிவரும் சிறு சிறு கிளை நதிகள் ஜீவநதியில் வந்து கலப்பதே போல், கடற்கரையில் ஓடியாடித் திரிந்து, ஆரவாரமாக சண்டையிட்டும், அழுதும், மகிழ்ந்தும் விளையாடும் சிறுவர்கள், உயிரீந்த அன்னையிடம் அவ்வப்போது வந்து அவளைத் தொட்டு, கட்டித் தழுவிவிட்டு மீண்டும் ஓடுவது போல், இவர்கள் திருவிழாக்களிலும், கும்பமேளாக்களிலும், புண்ணியத்தலங்களிலும் சங்கமக் கட்டங்களிலும், பாரதத்தின் ஜீவநாடியைத் தொட்டு விட்டுச் செல்கிறார்கள். அந்தப் பயணத்தின் போது, எல்லைக் கோடுகள் தகர்க்கப்படுகின்றன. சிறுமைத்தனங்கள் சிதறடிக்கப் படுகின்றன. செயற்கையாகத் தூண்டப்படும் பகையுணர்ச்சியும், பாமரத்தனங்களும், இழி நோக்கங்களும் அன்ட்கு குழி தோண்டிப் புதைக்கப்படுகின்றன. பல்கலைக் கழக பாட புத்தகங்களால் புகட்ட முடியாத பண்புகளையும், பரந்த நோக்கங்களையும், பாரதப் பெருநாட்டின் பெருமைகளையும் இம்மாதிரியான பக்திப்பயணங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன.
கடல் மட்டத்திலிருந்து ஈராயிரம் அடி உயரத்தில் நாம் இப்போது நின்று கொண்டிருக்கிறோம். சுற்றிலும் வானத்தை மறைத்துக் கொண்டிருக்கும் பிரும்மாண்டமான மலைகள். வடகிழக்கிலிருந்து அலகநந்தா ஓடி வருகிறது. அசுர வேகம், பயங்கர கர்ஜனை. வடக்கிலிருந்து மந்தாகினி ஓடி வருகிறது. மந்தமாகத்தான் இருக்கிரது அதன் ஓட்டம்.
சங்கமக் கட்டத்தில் இப்போது நின்று கொண்டிருக்கிறோம். காதைத் துளைக்கும் “ஓ”வென்ற பேரிரைச்சல் கேட்கிறதா?
சாதுவாக ஓடிக் கொண்டிருக்கும் மந்தாகினியை வம்புக்கிழுப்பது போல், அலகநந்தா உக்கிரமாக வந்து உரசுகிறது. அந்த வலியைத் தாங்கமாட்டாமல், மந்தாகினியும் அலறித் துடிக்கிறது. “அழ வைத்துவிட்டேன் பார்” என்று அலகநந்தாவுக்கு ஆனந்தம் போலிருக்கிறது. இளங்கன்றாகத் துள்ளுகிறது; எம்பிக் குதிக்கிறது. சுழன்று ஆடுகிறது. அங்கே அலை பாய்கிறது, ஆவி பறக்கிறது.
அலகநந்தா நுரை கக்கிக் கொண்டு வெண்ணிறமாக ஓடுகிறது. மந்தாகினி நீலப் பச்சை வண்ணமாகத் தோற்றமளிக்கிறது. இமாலயப் பகுதியில் இயற்கை அன்னை நிர்மாணித்துள்ள பல கலைக் கூடங்களில் இந்த இடமும் ஒன்று. ஓவியர்களுக்கும், கவிஞர்களுக்கும், காவியம் படைக்கப் பிறந்தவர்களுக்கும், புகைப்படக் கலைஞர்களுக்கும் சொர்க்க பூமி இது.
எத்தனி நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அலுக்காத தோற்றம் அது. சந்தேகமில்லை. ஆனால் அதிக நேரம் கடத்த முடியாதே. நீராடிவிட்டு, மேற்கொண்டு பயணத்தைத் தொடர வேண்டுமே!
எப்படி நீராடுவது? அது நதியாகவா ஓடிக் கொண்டிருக்கிறது! கடலாக அல்லவா கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. கரைய்ல் நிற்கும் கோழைகளைப் பார்த்தல்லவா அது ஏளனமாகக் கொக்கரித்துத் கொண்டிருக்கிறது.
பல படிகளிறங்கி, ஸ்நான கட்டத்திற்குச் செல்ல வேண்டும். ஹரித்துவாரத்திலும், தேவப்பிரயாகையிலும் இருப்படு போல இங்கும் இரும்புச் சங்கிலிகள் பொருத்தப் பட்டிருக்கின்றன. அதைப் பற்றிக் கொண்டோ, இடுப்பில் சுற்றிக் கொண்டோ நீராடுவதுதான் பாதுகாப்பானது. அங்கிருந்த ஓரிருவர் எங்களை எச்சரித்தார்கள். அந்த எச்சரிக்கை உற்சாகமூட்டுவதற்குப் பதிலாக, எங்கள் அதைரியத்தை அதிகப்படுத்தியது.
சங்கமத்தின் அருகில் கோயில் கொண்டிருக்கும் ருத்ரநாதரையும், கங்காதேவியையும் பிரார்த்திக் கொண்ட்டு தைரியமாக அதில் இறங்கி விட்டோம். சங்கிலியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அவசர அவசரமாக இரண்டு முழுக்குகள் போட்டுவிட்டு கரையேறி விட்டோம்.
கலகப் பிரியரான நாரதமுனி, கானம் பயின்ற தலமாம் ருத்ரப்பிரயாகை. அவர் அந்த சங்கமத்தில் அமர்ந்து இசைப்பயிற்சி செய்தாராம். அவரது கற்பனை ஓடிய அளவுக்கு அவரால் பாட முடியவில்லை. எரிச்சலுற்று, தம் கையிலிருந்த தம்புஎராவை உடைத்து நீரில் எறிந்து விட்டார். பின்னர் சிவபெருமானைக் குறித்து தவமிருந்தார்.
அவரது கடுந்தவத்தைக் கண்டு மெச்சிய ருத்ரேசுவர் அவருக்கு கானம் கற்றுத் தந்தாராம். இலக்கண நயங்களோடு சிவபெருமானிடம் இசை பயின்ற நாரத முனிவர் இன்றும் அங்கே வீணை வாசித்துக் கொண்டிருக்கிறாராம். அலகநந்தாவும், மந்தாகினியும் இணையும் இடத்தில் முக்கோண வடிவில் ஒரு பாறை இருக்கிறது. அதை நாரதப்பாறை என் கிறார்கள. அந்தி வேளையில் கண்களை மூடி, படிக்கட்டில் அமைதியாக அமர்ந்திருந்தால், வீணாகானத்தை இன்”றும் கேட்கலாம் என் கிறார்கள.
சங்கமத்திலிருந்து மூன்று மைலில் மகாதேவ் ஆலயம் இருக்கிறது. ஒவ்வொரு சோமவாரமும் அங்கே ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக கூடுகிறார்கள்.
ருத்ரப்பிரயாகையிலிருந்து மொகன்கால் என்ற இடத்துக்குப் போகும் கரடுமுரடான பாதை அது. அந்தப் பாதையில் ஒரு மைல் சென்றதும், வலப்புறம் இறங்கினோம். ஒற்றையடிப் பாதையொன்று எங்களைக் கீழே அழைத்துச் சென்றது. அது சீராகவும் இருக்கவில்லை, நேராகவும் செல்லவில்லை. சில இடங்களில் நட்பபதற்குப் பயங்கரமாகக் கூட இருந்தது. செல்லும் வழியில் கேழ்வரகு, கம்புப் பயிர்கள் மண்டிக் கிடந்தன. துளசிச் செடிகள் காடாக வளர்ந்திருந்தன.
ஒரு மணி நேரம் நடந்து, சுமார் நானூறு அடி கீழே இறங்கியிருப்போம். கடும் வெய்யில். எங்களுக்கு மூச்சு இரைத்தது.
அம்மாடி! ஒருவழியாக அந்த இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டோம். அலகநந்தாவின் கரைக்கே வந்து விட்டோம். அதோ, அதன் இரைச்சல் கேட்கவில்லையா?
அங்கு மூன்று, நான்கு ஆலமரங்கள் சேர்ந்து, குளுமையான நிழல் தருகின்றன. இருபுறமும், வானுயர்ந்த மலைகள், ஆயிரக்கணக்கான காட்டுக் குருவிகள் எழுப்பும் “கிரீச்” ஒலி மலைமுகட்டில் மோதி எதிரொலிக்கிறது. எங்களைத் தவிர வேறு ஜன சந்தடியேயில்லை.
இந்த அமைதியான சூழ்நிலையில், ஒரு சிறு ஓட்டுக் கட்டடத்தில் கோயில் கொண்டிருக்கிறார் கோடீசுவரர் மூர்த்தி. மிகச் சிறிய சிவலிங்கம். நம் கையாலேயே அவருக்கு அபிஷேகம் செய்து அர்ச்சனையும் செய்யலாம். அங்கு கணபதி இருக்கிறார். இரண்டு நந்திகள் இருக்கின்றன.
கருவறையில் இருப்பதைத் தவிர, வெளியிலும், மரங்களின் அடியிலும் அநேக சிவலிங்கங்கள் இருக்கின்றன. சுற்றியும் உள்ள மலைகளில் கோடி லிங்கங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
கோடீசுவர் கோயிலைச் சுற்றியுள்ள மேடையில் நின்று பார்த்தால், அலகநந்தா இரு பெரிய பாறைகளுக்கிடையே நுழைந்து சிறிய வாய்க்காலாக ஓடி வரும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. அது பாறைகளில் மோதி, சுழன்று, திரும்பி, கர்ஜித்துக் கொண்டு பாய்ந்து வருவது, பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத அனுபவமாகும்.
நதியின் கரையை ஒட்டினாற்போல் ஒரு குகையிருக்கிறது. அதைப் பாண்டவர் குகை எங்கிறார்கள். வனவாசத்தின் போது, அவர்கள் இப்பகுதியில் தங்கியிருந்திருக்கலாம், யார் கண்டதூ!
கோடீசுவர் கோயிலுக்கு பின்புறம் ஒரு சாது இருந்தார். அந்தப் பாண்டவர் குகையைப் பற்றி அவரிடம் விசாரித்த போது, பாண்டவர்கள் பித்ருதோஷம் நீங்குவதற்காக கோடீசுவரைக் குறித்துத் தவம் இருந்ததாகவும், அப்போது அக்குகியயில் தங்கியிருந்ததாகவும் கூறினார்.
அந்தக் குகையைக் காணச் சென்றோம். அங்கு மிக ஜாக்கிரதையாகச் செல்ல வேண்டும். மேலிருந்து அருவி கொட்டிக் கொண்டிருக்கிறது. நனைந்து கொண்டுதான் செல்ல வேண்டும். கீழே, பாசி படிந்த பாறை நன்றாகவே வழுக்குகிறது. அலகநந்தாவில் விழாமலிருக்க, சிறு இரும்புக் கிராதி போட்டிருக்கிறார்கள். அது ஒன்றும் பெரிய பாதுகாப்பாக இல்லை. கெட்டியாகப் பிடித்துக் கொண்டால் அது ஆடுகிறது, வழுக்குகிறது! இருபது அடி தூரமானாலும் அதைக் கடப்பதார்குள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் நடக்க வேண்டும்.
அந்த குகை ஒரே இருட்டாக இருக்கிறது. பாசி படிந்து சொத சொத என்றிருக்கிறது. “என்னென்ன பூச்சி பொட்டு இருக்குமோ?” என்று பயந்து கொண்டுதான் உள்ளே செல்ல வேண்டும்.
முதலில் முன்புறமுள்ள ஒரு நந்தி மட்டும் லேசாகக் கண்ணில் படுகிறது. சுவரோ, கூரையோ தெரியாதபடி திரைச் சீலையொன்று மறைத்திருப்பது போன்ற மையிருட்டு. டார்ச்சைப் போட்டால், ஒரு சிவலிங்க்ம கண்ணுக்குத் தெரிகிறது. அதன் மீது சொட்டு சொட்டாக நீர் விழுந்து அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. வருடம் பூராவும் இப்படி நீர் சொட்டுகிறதாம். அது சிவலிங்கத்தின் மீது மட்டும்தான் விழுகிறதாம். அந்த குகையில் வெறு எங்கும் நீர் கசிவது இல்லையாம்.
கையிலிருந்த டார்ச் விளக்கின் ஒளியை சுற்றிலும் படர விட்டால், என்ன ஆச்சரியம்! அப்பாறையில் நூற்றுக்கணக்கான சின்னஞ்சிறிய சிவலிங்கங்களைக் காணலாம். அங்கு யார்ம் அவற்றைச் செதுக்கியதாகத் தோன்றவில்லை. எல்லாம் சுயமாகத் தோன்றியவை, சந்தேகமில்லை.
நம் ஆவல் பெருகியது. சற்று பொறுமையுடன் நிதானமாக ஆராய்ந்தால், ஆகா! அற்புதத்திலும் அற்புதம்! அங்கு பல உருவங்களைக் கண்டு அதிசயித்துப் போனோம். எத்தனியோ கணபதிகளைக் கண்டோம். மீன் உருவங்களைக் கண்டோம். பாம்புகளைக் கண்டோம். ஆலமரங்களையும், சிவபார்வதி தோற்றங்களையும் காணலாம்.மேகங்களிலும், பாறைகளிலும், மரப்பட்டைகளிலும் பழைய காரைச் சுவர்களிலும் சாதாரணமாக நம் கற்பனைக்கேற்ப உருவங்கள் தோன்றுவதை நாம் பார்த்திருக்கிறோம். வெவ்வேறு கோணத்திலிருந்து அவை வெவ்வேறு மாதிரித் தோற்றமளிக்கும். அது மாதிரி இருக்குமோ என்று முதலில் நினைத்தேன் ஆனால், உற்றுப் பார்க்கப் பார்க்க, அது கற்பனையோ, பிரமையோ அல்லவென்பது உறுதியாயிற்று. எல்லாம் கல்லில் தோன்றியவைதான். இன்னும் பல உருவங்கள் தோன்றியவண்ணம் இருக்கின்றன. அதிசயம், ஆனால் உண்மை! கோடீசுவரர் ஆலயத்திற்கு வருபவர்கள், இந்த குகைக்குள்ளும் வந்து தரிசித்து விட்டுப் போகிறார்களாம். எங்களுக்கு முன்னால் வந்த யாரோ ஒரு பக்தர், வெண்மலர்களைக் கொண்டு வந்து, ஒவ்வொரு மூர்த்தியின் மீதும் வைத்திருந்தார்.