பத்ரி கேதார் – 6

மாலை மூன்றரை மணிக்கு நானும், நண்பரும் முப்பத்துமூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள கர்ணப்பிரயாகை என்ற இடத்தை நோக்கி டாக்சியில் பயணமானோம்.  ருத்ரப்பிரயாகையைக் கடந்து சற்றுத் தொலைவு வந்ததும், உயரமான மலைப்பாதையிலிருந்து ஒருமுறை கோடீசுவரர் ஆலயத்தையும், குகைவாயிலையும் தரிசித்துக் கொண்டோம்.

ஹரித்துவாரத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் மார்க்கத்தில் மொத்தம் ஐந்து சங்கமங்கள் இருக்கின்றன. அலகநந்தாவுடன், பாகீரதி சங்கமமாகும் தேவப்பிரயாகையையும், மந்தாகிநி சங்கமமாகும் ருத்ரப்பிரயாகையையும் தரிசித்து அவற்றில் ஆனந்தமாக ஸ்நானம் செய்து விட்டு நாம் பயணத்தைத் தொடர்ந்து கோண்டிருக்கிறோம். அடுத்து அலகநந்தாவுடன் பிண்டர் நதி சேரும் கர்ணப்பிரயாகை, நந்தாகினி சேரும் நந்தப்பிரயாகை, கருட கங்கா என்ற தௌலி நதி சேரும் விஷ்ணுப்பிரயாகை என்ற மூன்று சங்கமங்களைத் தரிசிக்கப் போகிறோம்.

நாங்கள் கர்ணப்பிரயாகைக்கு வந்து சேரும்போது மாலை ஆறு மணியாகி விட்டது.  புஸ் ஸ்டாண்டில் எங்கள் டாக்சி வந்து நின்றதுமே குற்றால அருவியின் அருகில் நிற்பது போன்ற இரைச்சல் கேட்டது. இரும்புப் பாலத்திற்குக் கீழே நீரோட்டம் தடைப்பட்டு, சுற்றிச் சுற்றி சுழன்று கொண்டிருந்தது.

ருத்ரபிரயாகையிலிருந்து வரும் போதே வானம் இருட்டிக் கொண்டு சற்று உருமிக்கொண்டிருந்தது. ஆனால், நாங்கள் கர்ணப்பிரயாகையில் வந்து இறங்கிய பிறகே மழை பிடித்துக் கொண்டது. அது அப்படியொன்றும் கனமான மழையில்லை.

வானத்திலிருந்து ஆயிரமாயிரம் வெள்ளிக் கம்பிகள் கீழே விடப்பட்டு, மெல்லிய திரையிட்டது போல் மழை சீராகத் தூறிக் கொண்டிருக்க, இருபுறமும் மலைகள் வானுயர சுவராக எழும்பியிருந்தன. எதிரே தெரிந்த மலையில் பசுமையின் வளம் கொழித்தது.

இமாலய மலைத்தொடர் பார்ப்பதற்கு ஒரே மாதிரியில்லை. ஓரிடத்தில் ஒரே பாறாங்கல்லாக தாவரங்களற்று இருக்கிறது. மற்றோர் இடத்தில் மண் மலையாக இருக்கிறது. பிறிதோர் இடத்தில் வயல்களும், தாவரங்களும் மண்டிக் கிடக்கும் செழிப்புப் பூமியாக இருக்கிறது. சில இடங்களிலோ, மலையே கண்ணுக்குத் தெரியாமல் ஒரே அடர்ந்த காடாக தோற்றமளிக்கிறது. இமாலயப் பயணம் “போர்” அடிக்காமல் இருப்பதற்கு அவ்வப்போது மாறுபடும் இந்தத் தோற்றம்தான் முக்கிய காரணம் என்று தோன்றுகிறது. உயரே போகப் போக மலையுச்சிகள் உறைபனியாலும், பனிக்கட்டிகளாலும் வெண்போர்வையாக மூடப்பட்டு, சூரிய ஒளியில் மின்னி, பலவேறு வண்ண ஜாலங்களில் நம்முடன் கண்ணாமூச்சி விளையாடும் அழகை ரசிப்பதே பேரானந்த அனுபவமாயிருக்கும். சௌந்தரிய தேவதை குடியிருக்கும் இயற்கைப் பூங்கா, கடவுள் வாழும் கோயிலாகிறது. அங்கு தேவகானம் கேட்கிறது. தெய்வ மணம் கமழ்கிறது. பரம்பொருளின் தரிசனமும் கிடைக்கிறது.

மறுநாள் காலை சரியாகப் பத்து மணிக்கெல்லாம் உமாதேவி கோயிலுக்குச் சென்றோம். சற்றுக் கீழிறங்கிச் சென்றால் “ஷிவ்ஜி” என்றும் “சங்கர பகவான்” என்றும் அழைக்கப்படும் சிவாலயம் இருக்கிறது. இரண்டு ஆலயங்களிலும் தரிசனம் செய்தோம்.

சரியாக பத்து அடித்து பத்து நிமிஷத்திற்கு நான் முந்தின நாள் ஏற்பாடு செய்திருந்தபடி பண்டா அங்கு வந்தார். அன்று என் அன்னையின் திதி.  அலகநந்தா-பிண்டர்கங்கா சங்கமத்தில் ஸ்நானம் செய்துவிட்டு, கர்ண உள்ளம் கொண்ட என் அன்னையின் நினைவுக்கு அஞ்சலி செலுத்தினேன்.

கர்ணன் தவம் செய்து, தானம் செய்த புண்ணியத் தலமாம் கர்ணப்பிரயாகை. அங்கு வெண்கோபுரத்துடன் நதிக்கரையில் அவனுக்கு ஒரு கோயிலும் இருக்கிறது. அது புதிய கோயில் என்றும், பழைய கோயில் வெள்ளத்தில் அடித்துக் கொண்டுபோய் விட்டதாகவும் டீக்கடைக்காரர் கூறினார். மலைகளால் சூழப்பட்ட கர்ணப்பிரயாகை, இயற்கை அழகு என்னும் ஊஞ்சலில் குதூகலமாக ஆடிக் கொண்டிருக்கும் ஒரு சிற்றூர். மலை மீதுள்ள பாதையில் பஸ்கள் போவதும், பாதைக்கு மேலே உள்ள கிராமங்களுக்கு மக்கள் நடந்து செல்வதும், எட்டாத உயரத்தில் எப்படியோ ஏறி மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகள், அசையா சித்திரமாகத் தோன்றுவதும், விளையாட்டுச் சிறுவர்கள் போல் எங்கிருந்தோ ஓடிவரும் மேகங்கள் மலை உச்சியைத் தழுவி முத்தமிட்டுச் செல்வதும் மிக ரம்மியமான காட்சிகள். அந்த வண்ண ஓவியக் காட்சிகளைக் கண்களில் நிர்பபி, உள்ளத்தில் பசுமையாகப் பதித்து, புளகிதம் பொங்கிப் பூரிக்க, பிரியா விடைபெற்று அங்கிருந்து புறப்பட்டோம்.

இருபத்தோரு கிலோமீட்டர் பஸ் பயணம் செய்து மாலை ஐந்து மணிக்கு நந்தப்பிரயாகை வந்து சேர்ந்தோம். இது நந்தகோபன் தவம் செய்த இடமாம். துஷ்யந்தனும், சகுந்தலையும் காதல் புரிந்து, காந்தர்வ விவாகம் செய்து கொண்ட இடம் என்றும் உள்ளூர்வாசிகள் பெருமையுடன் கூறிக் கொள்கிறார்கள். இங்கு நந்தாகினியும், அலகநந்தாவும் சங்கமம் ஆகும் இடத்திற்கு எளிதாகச் செல்ல முடியாது. இங்கு ஸ்நான கட்டம் என்று தனியாக ஒன்றும் கிடையாது. கடைவீதியிலிருந்து நூறு கஜம் நடந்து சென்று பின்னர் கீழிறங்கி, மிக ஜாக்கிரதையாகச் செல்ல வேண்டும்.

நானும் நண்பரும், அன்று மாலையே ஸ்நானம் செய்துவிடலாம் என்று தீர்மானித்து, பெரிய வீரர்கள் போல் நடந்து சென்றோம். உலர்ந்த மணற்படுகை என்று நினைத்து நான் வேகமாக நடக்கத் தொடங்கினேன். சட்டென்று முழங்கால் அளவுக்குப் புதைந்து விட்டேன். நல்லவேளை! பின்னால் வந்த நண்பர் என் கையைப் பிடித்து எப்படியோ வெளியேற்றி விட்டார். மேலே உலர்ந்து, உள்ளுக்குள்ளே ஈரமாயிருக்கும் அந்த மண் அன்று என்னை விழுங்கியிருக்கும். நல்ல காலம் தப்பித்தேன். இனி அவ்வழி போவது புத்திசாலித்தனம் அல்ல என்று முடிவு செய்து நாங்கள் வெற்றிகரமாக வாபஸ் ஆனோம்.

மறுநாள் காலை நாங்கள் தங்கியிருந்த விடுதியின் காப்பாளரின் துணையோடு சென்று ஸ்நானம் செய்தோம். மண்ணில் கால் படாமல் பாறைகளின் மீதே தாவித் தாவி, சங்கமத்தின் அருகில் சென்று “ஓரு மாதிரி” ஸ்நானம் செய்து விட்டு வந்தோம். தண்ணீர் வீகமாக வந்து பாறைகளில் மோதும் அந்த இடத்தில் ஆழம் அதிகம். அசட்டுத் தைரியம் ஆபத்தில் கொண்டு போய் விட்டு விடும்.

நந்தப்பிரயாகையில் பழமையான சண்டிகாதேவியின் கோயில் ஒன்று இருக்கிறது. அம்பிகை வெள்ளிக் கவசத்துடன் காட்சி தருகிறாள். வலப்புறம் நந்தநாராயணர், லட்சுமி நாராயணர் உருவங்களும், இடப்புறம் சரஸ்வதி, சிவன், பார்வதி, கணபதி  முதலியோரின் வடிவங்களும் காணப்படுகின்றன. பிராகாரத்தில் சிவலிங்கங்கள் இருக்கின்றன. ஸ்ரீ ஆஞ்சநேயமூர்த்தியும் எழுந்தருளியிருக்கிறார். அந்தக் காட்டுப் பகுதியில்தான் நந்தகோப மகாராஜா தவம் செய்தாராம்.

அங்கு கோபால் மந்திர்  என்ற கோபாலகிருஷ்ணன் ஆலயமும் இருக்கிறது. ராஜஸ்தானைச் சேர்ந்த வைஷ்ணவ பிரம்மச்சாரி ஒருவர் ராமானுஜ சம்பிரதாயத்தில் அங்கு நித்திய பூஜைகள் செய்து வருகிறார். நியம நிஷ்டைகளைக் காத்து வரும் அவர், தன் இல்லத்தில் இரு வேளையும் கீதா, சஹஸ்ரநாம ஹோமம் செய்து வருகிறாராம்.

நந்தப்பிரயாகையில், நதிக்கரையில் வசிஷ்டேசுவர மகாதேவர் ஆலயம் ஒன்று இருந்ததாகவும், அது 1967-ம் ஆண்டில் வந்த வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய் விட்டதாகவும் கூறினார்கள்.

பத்நாத்துக்கு, ஹரித்துவாரம் வெளிவாசல், நந்தப்பிரயாகை உள்வாசல். உண்மையில் பத்ரிநாத் புனிதப் பயணம் எங்கள் ஊரிலிருந்துதான் தொடங்குகிறது என்று பெருமையுடன் கூறினார் கோவிந்த் பிரசாத் தௌடியால் என்னும் உள்ளூர் பத்திரிகையாளர்.

அன்று மதியம் “ஸோன்லா” விலிருந்து புறப்பட்டு, பதினான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சமோலி என்ற இடத்தில் இரவு காம்ப். உத்தரகண்டத்தை பௌரி கர்வால், தேரி கர்வால், உத்தர் காசி, சமோலி என்று நான்கு மாவட்டங்களாகப் பிரித்திருக்கிறார்கள். பத்ரிநாத் சமோலி மாவட்டத்தில் இருக்கிறது. சமோலி நந்தப்பிரயாகையிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது.

மாலை மூன்றரை மணிக்கு புறப்பட்டு இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டே ஸ்ரீ மடத்துடன் சேர்ந்து நடந்து கொண்டிருந்தோம். வானளாவிய நீர்வீழ்ச்சிகள் கொட்ட, சிற்றாறுகள் பாய்ந்து வர, எங்கள் குரலை மலைச்சிகரங்கள் எதிரொலிக்க, ஆனந்தமாக நடந்து கொண்டிருந்தோம்.

ஏழு மணி சுமாருக்கு ஓர் அபூர்வ காட்சியைக் கண்டோம். தொலைவில் ஓர் உயர்ந்த மலை தெரிந்தது. அது ஜகஜ் ஜோதியாய் ஜொலித்தது. வன்ண வண்ண மின்விளக்குகள் நட்சத்திரங்களாக மின்னின. மல்லிகைப்பூ சரங்கள் தோரணமாகத் தொங்குவது போல் மின் பல்புகள் பளிச்ச்ட்டன.

விசாரித்ததில் அதுதான் சமோலி என்று அறிந்தோம். சுற்றிலும் இருள் மண்டிக் கிடக்க, அந்த மலை மட்டும் பிரகாசமாகக் காட்சி அளித்தது.  ஏதோ தேவலோகத்தைக் காண்பதைப் போல ஒரு பிரமையை ஏற்படுத்தியது.

இரவு எட்டு மணிக்கு சமோலியை அடைந்தோம். மறுநாட் காளை நாலரை மணிக்கே காம்ப் புறப்பட்டு விட்டது.

பதினேழாவது கிலோமீட்டரிலுள்ள பீப்பல்கோட்டில் காலை பூஜை.

நானும் நண்பரும் சாவகாசமாக ஆறு மணிக்கு எழுந்து பின் போர்ஷனில் குடியிருக்கும் ஒருவர் தந்த வெந்நீரில் பல் விளக்கிவிட்டு (தாங்க முடியாத குளிர்), பின்னர் அவர் தந்த அருமையான டீயையும் பருகிவிட்டு, அலகநந்தாவைத் தேடிக் கொண்டு புறப்பட்டோம். ஐஸைவிட குளுமையான அந்தத் தண்ணீரில் நாங்கள் குளிப்பதை அங்கிருந்த உள்ளூர் வாசிகள் அதிசயத்துடன் பார்த்தார்கள். குளித்துவிட்டு நாங்கள் வெறும் உடம்புடன் வருவதைக் கண்டபோது, அவர்கள் திகைத்தே போய் விட்டார்கள்.

அங்கெல்லாம் யாருமே நதி ஸ்நானம் செய்வதில்லை. எட்டு நின்று, கொஞ்சம் நீர் எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு நகர்ந்து விடுகிறார்கள். “கங்கையைப் பார்ப்பதே புண்ணியம்” என்று சாஸ்திரத்தில் கூறியிருப்பதாக ஒருவர் என்னிட்ம கூறினார்!

மூன்றாவது மைலில் உள்ள கோபேசுவரர் என்ற ஊரில் ஒரு பழமையான கோயில் இருப்பதாகக் கூறி, எங்களை அங்கு அழைத்துச் செல்வதாகவும் கூறினார் அவர்.

கோபேசுவரர் சமோலி மாவட்டத்தின் ஹெட் குவார்ட்டர்ஸ். அங்குதான் கலெக்டர் அலுவலகம் இருக்கிறது என நண்பர் கூறினார். சமோலியிலிருந்து சுமார் ஆயிரம் அடி உயரத்திலிருக்கும் கோபேசுவரைத்தான் முதல் நாள் இரவு ஜகஜ்ஜோதியாய்ப் பார்த்தோம் என்பது பின்னரே தெரிந்தது. அங்கு பயணம் செய்யும் போது மிக ரம்மியமான இயற்கைக் காட்சிகளை காண் கிறோம. வளைந்து வளைந்து செல்லும் பாதையில் ஏறிச் செல்லும் போது, வளம் கொழிக்கும் பள்ளத்தாக்குகளும் மேக்ம சூழும் மலைச் சிகரங்களும் னம்மைக் கனவு உலகத்திற்கே அழைத்துச் செல்கின்றன.

பெரிய கடைவீதியில் நுழைந்து, சற்றுத் தொலைவு சென்று எங்கள் டாக்சி நின்றது. அங்கிருந்து கோபேசுவரர் ஆலயத்திற்கு நடந்துதான் செல்ல வேண்டும்.

மேகங்கள் தவழ்ந்து விளையாடும் மலைத் தொடர்களைப் பின்னணியாகக் கொண்டு கம்பீரமாக நிற்கிறது அந்தப் பழமையான ஆலயத்தின் விமான கோபுரம்.

உள்ளே சென்றோம். அமைதியான சூழ்நிலை. கருவறையிலிருந்து துல்லியமான குரலில் யாரோ சுலோகம் சொல்லிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. பயபக்தியோடு ஒருவர் அங்கு அமர்ந்து மானசீக பூஜை செய்து கொண்டிருந்தார். அவரை அதற்கு முன்பு எங்கோ பார்த்ததாகத் தோன்றியது.

நான்கு நாட்களுக்கு முன் ருத்ரப்பிரயாகை சங்கமத்தினருகில் இருக்கும் தேவி கோயிலில் அவர் பூஜை செய்து கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. பின்னர் விசாரித்ததில், அவர் ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தர் என்றும், பத்து நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு தல யாத்திரை செய்து வருவதாகவும் தெரிய வந்தது. எத்தனை ஆத்மார்த்தமான யாத்திரிகர்!

கருவறையில் சிறிய கோபேசுவரர் லிங்கம் இருக்கிறது. பின்னால் தவக்கோலத்தில் பார்வதி தேவி காட்சி தருகிறாள்.

இந்தக் கோயிலின் வெளிப்பிராகாரத்தில் பத்தடி உயரத்தில் ஒரு பெரிய திரிசூலம் இருக்கிரது. அது இரும்பாலானது. அதில் பாலி மொழி எழுத்துக்கள் காணப்படுகின்றன.

அங்கு உறையும் மூர்த்திக்கு பசுவேசுவரர் என்ற பெயரும் உண்டு. தனது பசுக்களில் ஒன்று பால் தராததைக் கண்டு, அதைக் கண்காணித்தான் மாடு மேய்ப்பவன்.அ டர்ந்த காடாக இருந்த இந்தப் பகுதிக்கு அது வந்ததும் அங்கிருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது தினமும் தன் மடியிலுள்ள பாலையெல்லாம் கறந்து விடுவதைக் கண்டு கோபமடைந்தான். அங்கிருந்த திரிசூலத்தை பெயர்த்து அந்தப் பசுவைத் தாக்க நினைத்தான். ஆனால் முடியவில்லை. பின்னர், சிவலிங்கத்தைப் பெயர்த்தெடுக்க முயன்றான். அப்போது சுவாமி அவன் முன் தோன்றி அவனுக்கு ஆசி வழங்கினார்.

திரிசூலத்தை அசைத்தால் அது ஆடுகிறது. அப்போது, சிவபெருமான் தம் இரு கரங்களால் பக்தர்களை வாழ்த்துவது போலத் தோன்றுகிறது.

சமயப்பற்றும், தெய்வ நம்பிக்கையும் பாரத மக்களின் ரத்தத்தில் ஊறி, இந்த மண்ணை வளப்படுத்தியிருப்பதால்தான் மிருகங்கள் வாழும் காடுகளிலும், இயற்கையின் கடும் ஆதிக்கத்திற்குட்பட்ட மலைப் பகுதிகளிலும், நம்மவர்கள் ஆலயங்களை நிர்மானித்திருக்கிறார்கள். தேவர்களும், புராணக் கதாநாயகர்களும், சித்த புருஷர்களும், தவயோகிகளும் பிரதிஷ்டை செய்த மூர்த்திகளைத் தெடித் தேடிக் கண்டுபிடித்து, கட்டடங்கள் எழுப்பி, விமானங்களும், கோபுரங்களும் அமைத்து, வழிபாட்டு முறைகளை வகுத்து, சமய உணர்வை வளர்த்து, பக்தி நெறியைப் பரப்பியிருக்கிறார்கள் நம் மூதாதையர். அவர்கள் கட்டி வைத்ததைக் கட்டிக் காக்கக்கூட சக்தியற்றவர்களாக இருப்பதை நினைக்கும் போது, நமக்கு வெட்கமும், வேதனையும் ஏற்படுவது இயற்கைதானே?

இமாலயப் பயணத்தில், சரிவர பராமரிக்கப்படாத பழமையான கோயில்களைப் பார்த்த போது, இத்தகைய மன வேதனை அடிக்கடி ஏற்பட்டது. தென்னகத்தில் பழுதடைந்த ஆலயங்களுக்குத் திருப்பணி செய்வதில் நாம் காட்டும் அக்காறையோ ஆர்வமோ அப்பகுதிகளில் காணப்படவில்லை. ஆழ்வார் பாடல் பெற்ற திவ்ய தேசங்களில் ஒன்றான தேவப்பிரயாகையில், ரகுநாதசுவாமி ஆலயம் இருந்த திக்கற்ற நிலையைக் கண்டபோது கண்களில் நீர்ப் பெருக்கெடுத்தது. அதே போல், புராணப் பெருமைகள் வாய்ந்த கோபேசுவரர் ஆலயத்தின் பிராகாரம், சிறுவர்களின் விளையாட்டு மைதானமாக இருந்ததைக் கண்டபோது மனம் வேதனையடைந்தது.