பத்ரி கேதார் – 8

பத்ரிநாத்தை நெருங்க, நெருங்க, பூலோகத்தைவிட்டு, வைகுண்டத்திற்குச் செல்வது போன்ற உணர்வே ஏற்படுகிறது. சீதோஷ்ண நிலை திடீரென்று மாறி விடுவதால், நம் உடலின் சிலுப்பு, உள்ளத்தின் சிலிர்ப்புக்கு அடையாளமாக அமைந்து விடுகிறது. மலைகளும், காடுகளும், பள்ளத்தாக்குகளும், பாய்ந்து ஓடும் ணீரும், நம்மோடு தோழமைபூண்டு உறவாடுவது போல் ஓர் ஐக்கிய பாவம் ஏற்பட்டு விடுகிறது. வாழ்க்கையின் லட்சியத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற பிரமை நம்மை ஆட்கொள்கிறது.

அடேயப்பா! எத்தனை ஆண்டுகளாக “பத்ரிநாத்” என்ற பெயர் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது! அங்கு போய் வந்தவர்களெல்லாம் கதை கதையாய்ச் சொல்லி எவ்வளவு ஆவலைத் தூண்டிவிட்டிருக்கிறார்கள். காதால் கேட்பதோடுச் அரி, கட்டுரைகளைப் படிப்பதோடு சரி, படங்களைப் பார்ப்பதோடு சரி, அங்கெல்லாம் நம்மால் எப்படி போக முடியும்? என்று நான் நினைத்து ஏங்கிய நாட்கள் எத்தனையெத்தனை? அந்த பத்ரிநாத்தையா நான் நெருங்கிக் கொண்டிருக்கிறேன்? இன்னும் பத்து நிமிடங்களில் அப்புனிதத் தலத்தை நான் தரிசிக்கப் போகிறேனா? நாராயண ரிஷியும், நர ரிஷியும் நடமாடிய அந்த பத்ரிகாசிரம மண்ணை மிதிக்கப் போகிறேனா? உண்மையாகவா? என்னால் நம்ப முடியவில்லையே!

இதோ, தேவத்ர்சனிக்கு வந்துவிட்டோம். பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட போர்டு கண்னுக்குத் தெரிகிறது. அங்கிருந்து பார்த்தால் தொலைவில் பத்ரிநாத் ஊரும் ஆலயமும் தெரிகின்றன. உவகை மேலிடுகிறது. நெஞ்சம் பிரம்மானந்தத்தில் மிதக்கிறது. வைகுண்ட தரிசனம் கிடைத்து விட்டது!

“பத்ரிவிஷால் கீ ஜெய்!” பயணிகள் முழங்குகிறார்கள். நாராயணா, நாராயணா, நாராயணா! – நம் மனம் ஜபிக்கத் தொடங்குகிறது.

அண்ட சராசரங்களின் ஆத்மாவான நாராயணன். அனைவருக்கும் அடைக்கலமான நாராயணன் உறையும் பூமி அது. பிரணவ மந்திரச் சொரூபியான மூலப்பொருள், உலக மக்கள் மீது பெரும் கருணை கொண்டு அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசித்தருள, நரநாரயணனாக எழுந்தருளியிருக்கும் புண்னிய பூமி. முற்பிறவியில் செய்த நல்வினையால், இப்பிறவியில் கிட்டிய சற்குருவின் துணையால் கிடைத்தற்கரிய பேறு பெற்றிருக்கிறோம். இங்கு நின்றபடியே மீண்டும் ஒருமுறை பூலோக சொர்க்கத்தை தரிசித்துக் கொண்டு மேலே நடப்போம்.

எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதிக்கு நடந்து சென்றபோது குளிரத் தொடங்கி விட்டது.  பெட்டியிலிருந்த கம்பளி ஆடைகளையெல்லாம் முதன் முரையாக வெளியே எடுத்து ஒன்றன் மீது ஒன்றாக அணிந்து கொண்டு வெளியே புறப்பட்டோம். அப்படியும் குளிர் அடங்குவதாகக் காணோம். “ஜில்”லென்ற வாடைக் காற்று எங்களைத் தாக்கத் தொடங்கியது. மாலை ஐந்தரை மணிக்கே இருள் கவிந்து, லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது.

நூறடி நடந்து பாலக்காட்டைச் சேர்ந்த மணி ஐயர் ஓட்டலுக்கு வந்து, சூடாக இரண்டு தோசைகள் சாப்பிட்டு, காப்பியும் குடித்தோம்.

அங்கிருந்து கோயில் ஒரு ஃபர்லாங் தொலைவு இருக்கும். வடக்கு தெற்காக ஓடும் அலகநந்தாவின் கரையோரமாக நடந்து சென்று இரும்புப் பாலத்தைக் கடந்து, மேற்குக் கரையை அடைந்தோம். அங்குதான் “தப்தகுண்டம்” என்ற விந்நீர் ஊற்றுக்குளம் இருக்கிறது. அந்த நேரத்திலும் ஓரிருவர் ஸ்நானம் செய்து கொண்டிருந்தனர். யாரோ குளத்தின் கீழே அடுப்பு மூட்டி வெந்நீர் போட்டுக் கொண்டிருப்பது போல் ஆவி பறந்து கொண்டிருந்தது.

படிகள் ஏறிச் சென்றோம். வண்ணச் சித்திர வேலைப்பாடுகள் மிகுந்த ஆலயத்தின் முன்வாசல் அற்புதமாகக் காட்சி அளித்தது. கையெடுத்துக் கும்பிட்டோம். அங்கு குழுமியிருந்த பக்தகளின் “நாராயணா நாராயணா” என்ற பரவசக்குரல் காதில் விழுந்தது. தெங்கோடி கேரளத்தில், குருவாயூரப்பன் கோயிலில் நாம் கேட்கும் அதே திருநாமத்தை வடகோடியிலும் கேட்க முடிந்தது. அதே உணர்ச்சிப் பெருக்கு; அதே பக்தி பாவம். உச்சரிப்புத்தான் மாறுபட்டிருந்தது. மாறுபாடுகள் ஆயிரம் இருந்தாலென்ன? ஆண்டவனின் திருநாமம் இதர வேற்றுமைகளைத் தகர்த்து, உள்ளங்களை ஒருங்கிணைத்து இமயம் முதல் குமரி வரை ஒரே புனிதத் தலமாக, புண்ணிய பாரதமாக விளங்கும்படி செய்திருக்கிறதே!

தரைமட்டத்திலிருந்து ஐம்பதடி உயரத்தில் ஆலயம் இருக்கிறது. படிகள் ஏறிச் செல்ல வேண்டும். அடைய முடியாத லட்சியத்தை அடைந்து விட்ட பெருமிதத்தில் வேகமாக உள்ளே செல்கிறோம். கோபுர வாயிலில் இருக்கும் பெரிய கண்டாமணியைத் தலை நிமிர்ந்து பார்த்துக் கொண்டெ செல்கிறோம்.

உள்ளே அர்ச்சனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ பஜனைப் பாடல்கள் ஒலிபெருக்கியில் மிதந்து வந்து கொண்டிருந்தன. “நாராயணா, நாராயணா, பத்ரி நாராயணா” என்ற ஒரு சுகமான சன்னமான குரல் பாட, மற்றவர்களெல்லாரும் கோரஸாக உடன் பாடிக் கொண்டிருந்தனர்.

கிழக்கு பார்த்த கோபுரவாயில். திருச்சந்நிதியும் கிழக்கேதான் நோக்கிக் கொண்டிருக்கிறது. முன் மண்டபத்தில் கருட பகவான் சுவாமியை நோக்கி எழுதருளியிருக்கிறார். துவாரபாலகர்களும் இருக்கிறார்கள்.

கோயிலை வலம் வருவோம். கிழக்கு பிராகார மதிற் சுவரிலுள்ள பிரும்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் முதலில் தரிசித்துக் கொள்கிறோம். அடுத்து ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தி இருக்கிறார். அதாற்கு அடுத்து ஸ்ரீ கணபதி.  நான்கு கரங்களுடன் தவக்கோலத்திலெ ழுந்தருளியிருக்கிறார் அவர். அவரது துதிக்கை வலப்புறமாகத் திரும்பி, இடக்கையில் இருக்கும் மோதகத்தை ருசி பார்த்துக் கொண்டிருக்கிறது.

தென் பிராகாரத்தில், வடக்கே பார்த்து ஸ்ரீ மகாலட்சுமியின் திருச்சந்நிதியிருக்கிறது. சிறு சாளக்கிராம சுயம்பு மூர்த்தி அது. அலங்கார்ம செய்து வைத்திருப்பதைப் பார்த்தால், பெரிய சிலை போல் தோற்றம் அளிக்கிறது. நான்கு கரங்கள் இருக்கின்றன. மேல்வலக்கை அபயஹஸ்தமாக இருக்கிறது. மேல் இடக்கையில் தாமரை மலர். கீழ் வலக்கையில் ஜப மாலை இருக்கிறது. நான்காவது கரத்தைத் தொடையில் வைத்துக் கொண்டிருக்கிறாள். பக்கத்தில் ஸ்ரீதேவியும் இருக்கிறாள். அங்கு சேஷ சாளக்கிராமம் ஒன்று இருக்கிறது.

மகாலட்சுமி சந்நிதிக்கு அடுத்து, திண்ணையுடன் கூடிய ஒரு சிறு மண்டபம் இருக்கிறது. அங்கு கஜானா பெட்டியுடன் ஒரு வயதானவர் அமர்ந்து கொண்டிருக்கிறார்.  நீளமான கம்பளிக் கோட்டும், தலைப்பாகையும் அணிந்து கம்பீரமாக இருக்கும் அவரைப் பார்த்தவுடனேயே ஒரு கண்டிப்புமிக்க ஆசாமி என்பது புரிந்து விடுகிறது. அபிஷேகமோ, அர்ச்சனையோ, சகஸ்ரநாமமொ, அஷ்டோத்திரமோ, காணிக்கையோ எதுவாக இருந்தாலும் அவரிடம் பணத்தைக் கொடுத்து, ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். எத்தனை கூட்டம் வந்தாலும் பொறுமையாக பணத்தை வாங்கி, நிதானமாக எண்ணிப்பார்த்து, சாவகாசமாக ரசீது கொடுக்கும் அவரிடம் எரிச்சல் பட்டால் பலனிருக்காது; இரைச்சல் போட்டாலும் ஒன்றும் நட்ககாது. நம்மை சட்டை செய்யமாட்டார். “இருங்கோ, இருங்கோ” என்ற தமிழ் வார்த்தையை மட்டும் கற்று வைத்துக் கொண்டிருக்கிறார் மனுஷன்.

அர்த்த மண்டபத்திற்குள் நுழைகிறோம். அதுதான் ஸ்ரீஆதிசங்கரரின் கத்தி. அதாவது ஆசனம். அங்கு மார்வாடித் திண்டு போல் ஒன்று போடப்பட்டிருக்கிறது.       அ தன் மீது வெள்ளியிலான பத்ரிநாராயணரின் வெல்ளி விக்ரகம் ஒன்று வைக்கப் பட்டிருக்கிறது. முன்னால் ஸ்ரீ ஆதிசங்கரரின் சலவைக்கல் சிலை ஒன்று இருக்கிறது. சுவரில் ஸ்ரீ காஞ்சிப் பெரியவரின் வண்ணப்படம் ஒன்றும் காட்சி தருகிறது. அங்கு ஒரு மூலையில் பெரிய பெரிய செம்பு, இரும்பு பட்டயங்கல் வைக்கப்பட்டிருக்கின்றன. அதை பாண்டுகேசுவர யோகபத்ரி ஆலயத்தில் கண்டு எடுக்கப்பட்டவையாம். பாண்டு மகாராஜாவினால் அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் அவர்ரில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

அந்தப் பெரிய திண்டின் கீழே ஒரு காவி வஸ்திரம் வைக்கப்பட்டிருக்கிறது. அதை மிக ரகசியமாக எனக்குக் காட்டிய பண்டா, “இது ஆதிசங்கராசாரியரின் வஸ்திரம்” என்று கூறினார். ஸ்ரீ ஆதிசங்கராசாரியாரையே நேரில் தரிசித்த ஓர் உணர்வைப் பெற்றேன்.

ஸ்ரீ ஆதிசங்கரர் கத்திக்கு எதிரெ, கருவறைச் சுவரையொட்டி ஒரு நந்தி காணப்படுகிறது. மேற்குப் பிராகாரத்தில் பிரசாதம் விற்கும் இடம் இருக்கிறது. வடமேற்கு மூலையில், இடக்கையில் சஞ்சீவி மலையுடன் ஒரு பெரிய சலவைக்கல் ஆஞ்சநேயர் நின்று கொண்டிருக்கிறார். வலப் பிராகாரத்திலுள்ள தாழ்வார மண்டபத்தில் பஜனை நடைபெற்ற்க் கொண்டிருக்கிறது. “வீணா மகராஜ்” என்பவர் ஒரு கையில் ருத்ரவீனையை மீட்டிக்கொண்டு, மற்றொரு கையால் தாளம் போட்டுக் கொண்டே, பாடிக் கொண்டிருந்தார். அங்கு அமர்ந்திருந்த சுமார் நூறு பேர் கூடவே பாடிக் கொண்டிருந்தனர். “ராமகிருஷ்ண நாராயண கோவிந்த முராரே” என்று பக்திச் சுவையுடன் அவர் மெய்யுருகப் பாடியது நம் நெஞ்சங்களைக் கரைய வைத்தது.

அடுத்து க்ஷேத்திரபாலரும், கிழக்குப் பிராகாரச் சுவரில் மேற்கே பார்த்து சூரியநாராயண மூர்த்தியும் எழுந்தருளியிருக்கிறார்கள்.

நாம் கோயிலை வலம் வந்தாகி விட்டது. சிறிய சுற்றுதான். பிராகாரமும் அதிக அகலமில்லை. திருவிழா நாட்களில் எப்படித்தான் இங்கே நெரிசலைக் கட்டுப்படுத்துகிறார்களோ!

கருவறைக்குச் செல்ல இரண்டு வழிகள் இருக்கின்றன. கிழக்குப் புறமாகவும் செல்லலாம். தென் பிராகாரத்திலுள்ள வழியாகவும் செல்லலாம். நாங்கள் இரண்டாவது வழியாகச் சென்றோம்.

அர்த்த மண்டபம் ஒரு சிறு அறை. மிகவும் சிரமப்பட்டு இருபது முப்பது பேர் அங்கு நெருக்கிக் கொண்டு நிற்கலாம். அவ்வளவுதான். வலப்புறம் ஒரு சிறு திண்ணை இருக்கிறது. அதில் இரண்டு மூன்று பண்டாக்கள் அமர்ந்து சகஸ்ரநாம பாராயணம் செய்து கொண்டிருந்தார்கள். உத்தரத்தில் பலரகப்பட்ட ஆலய மணிகள் தொங்கிக் கொண்டிருந்தன.  முன்னால் இருப்பவர்கள் அமர்ந்தால்தான் பின்னால் இருப்பவர்கள் நன்றாகத் தரிசனம் செய்ய முடியும்.

கருவறையினுள் “ராவல்” என்று அழைக்கப்படும் கேரள நம்பூதிரி பிரம்மச்சாரி பூஜை செய்து கொண்டிருந்தார். பத்ரிநாரயணருக்குப் பூஜை செய்யும் உரிமையைப் பெற்றிருப்பவர் அவர்.

பஞ்சகச்சம் கட்டி, நீளமான கறுப்புக் கோட்டு அணிந்து கொண்டிருந்தார் அவர். கிராப்புத் தலைதான். எடுப்பான நாசி. நல்ல சிவ்பபு. முகத்தில் ஒருவித வசீகரமிருந்தது.அ ர்ச்சனை செய்து கொண்டே அவ்வப்போது நம் பக்கம் திரும்புகிறார். ஓரிருவரை அடையாளம் கண்டு புன்முறுவல் புரிகிறார். சிலரை முன்னால் வந்து அமரும்படி சைகை காட்டுகிறார்.

நாம் பத்ரிநாராயனரைப் பார்க்கிறோம். முக மண்டலம் மட்டும்தான் தரிசனமாகிறது. எத்தனை உற்று நோக்கினாலும் உருவம் தெளிவாகத் தெரியவில்லை. வைர, வைடூரிய , மாணிக்க, மரகதக் கற்களாலான மணிமகுடம் மின்னொளியில் மின்னி, கண்ணைப் பறிக்கிறது. அற்புதமான வண்ண மலர் அலங்காரம் நெஞ்சை அள்ளுகிறது. இதுவரை மானசீகமாகக் கண்டு நம் சிந்தையை பறிகொடுத்திருந்த மூர்த்தியை நேரில் தரிசித்த பெருமிதத்தில் உள்ளம் பூரிக்கிறது.

பூஜை முடிந்து தீபாராதனை நடைபெற்றது. அந்த திவ்ய மங்கள ஒளியில் அங்கிருக்கும் ஒவ்வொரு மூர்த்தியாகத் தரிசித்துக் கொள்கிறோம்.

ஸ்ரீ நாராயண மூர்த்திக்கு இடப்புறம் தவக்கோலத்திலிருக்கும் நாராயணர் சிலையும், நரன் சிலையும் இருக்கின்றன. கை கூப்பியபடி நிற்கும் கருடனின் சிறு பஞ்சலோக விக்ரகம் இருக்கிறது. மார்பளவு உள்ள நாரத மகரிஷியின் சிறு விக்ரகமும், வலப்புறம் கோடியில் குபேரனின் விக்ரகமும் இருக்கின்றன. அப்பெரிய முகத்தில் மந்தஹாஸ்ம தவழ்ந்து கோண்டிருக்கிறது. அங்கிருக்கும் உத்தவரின் விக்ரகம்தான் ஆலயத்தின் உற்சவமூர்த்தி.

இரவில் பூஜை, அர்ச்சனையெல்லாம் முடிந்த பிறகு கடையாக “கீத கோவிந்த்” நடைபெறுகிறது. பகவானின் பெருமைகளைப் பாடிக்கொண்டு, ராவல், ஒவ்வோர் அலங்காரமாகக் களைய, சயனாரத்தி ஆகிறது. அப்போது ஸ்ரீ நாராயணமூர்த்தியின் சுயம்பு சாளக்கிராமச் சிலையை நாம் நன்றாகத் தரிசனம் செய்கிறோம். இரண்டு கைகளைக் கோர்த்துக் கொண்டு, தவநிலையில் பத்மாசனத்தில் பகவான் அமர்ந்திருப்பதைக் காண்கிறோம். ராவல், சந்தனக்காப்பு அலங்காரம் செய்கிறார். அந்தக் காட்சி நம் தாபங்களைப் போக்கி நெஞ்சைக் குளிரவைக்கிறது. கண்ணுக்குப் பிரும்மானந்தக் காட்சியாக இருக்கிறது.

வாழ்க்கையில் ஒரு முறையாவது தரிசித்துவிட வேண்டிய பத்ரிநாராயணரை முதன் முறையாக நான் தரிசித்தது ஒரு சனிக்கிழமையன்றுதான். அன்று ஏகாதசி புண்ணிய தினமும் கூட. இது சிறிதும் எதிர்பாராத, திட்டமிடப்படாத ஏற்பாடு என்பதாலும். யதேச்சையாக ஏற்பட்டதென்பதாலும், இந்த அரிய வாய்ப்பைக் குறித்து பெரிதும் புளகிதம் அடையாமல் இருக்க முடியவில்லை.

அன்றிரவு பத்ரிநாத்தில் சரியான குளிர்.  இண்டு இடுக்கில்லாமல் கதவுகளை எல்லாம் அடைத்து, இருந்ததையெல்லாம் எடுத்து மேலே போர்த்திக் கொண்டும், குளிரைச் சமாளிக்க முடியாமல் திண்டாடி விட்டேன். இரவு தூக்கமே வரவில்லை. செப்டம்பரிலேயே இப்படியிருந்தால், அக்டோபர், நவம்பரில் எப்படி இருக்குமோ? நினைக்கும் போதே நடுங்குகிறது!