பர்வதமலை – 01

திருவண்ணாமலைக்கு யாத்திரை சென்ற நாங்கள் அங்கிருந்து பல ஸ்தலங்களை தரிசித்துக் கொண்டு சென்ற போது திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள மாதிமங்கலத்திற்கும், கடலாடிக்கும் இடையில், வலப்புறத்தில் ஒரு பெரிய மலை இருப்பதைப் பார்த்தோம். . கடலாடியிலிருப்பவர்களிடம் “அது என்ன மலை?” என்று கேட்டோம்.

“அதுதாங்க பர்வத மலை; மேலே ஈசுவரன் கோயில் இருக்கு; படிக்கட்டெல்லாம் கிடையாது; காட்டுப்பாதையில் மேலே போகணும்னா நாலு அஞ்சு மணி நெரம் ஆகும்.ரொம்ப பேஜாரா இருக்கும்.”

“மலை மேலே உள்ள கோயிலில் பூஜை எல்லாம் நடககுதா?”

“வருடத்துக்கு இரண்டு தரம் குருக்கள் போய் வருவாரு; ஆனால் தினம் ராத்திரியிலே சித்தர்கள் வந்து பூஜை செய்வதாகச் சொல்லுவார்கள்.அங்கே படுத்தா மணி சத்தம் கேட்கும்; கற்பூர வாசனை வரும். காலையிலே எழுந்து பார்த்தா சாமி மேலே பூ போட்டிருக்கும்”

நண்பர் பாப்ஜி மலையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.கடைசியில், “என்ன ஆனாலும் சரி; ஒரு நாள் ஏறிப் போய் அந்தக் கோயிலிலே ஒரு ராத்திரி தங்கி பார்த்துட வேண்டியதுதான்” என்றார்.

பர்வத மலையைப் பற்றி ஓராண்டுக்கு முன்புதான் நான் முதன்முதலில் கேள்விப் பட்டிருந்தேன். நண்பர் கண்ணன் அம்மலையின் சிறப்புகளைப் பற்றி என்னிடம் கூறி விட்டு, பூண்டி சாமியார் அந்த மலையில் சிறிது காலம் தங்கியிருந்தார் என்றும், அங்கு அவருக்கு ஏற்பட்ட சில அற்புத அனுபவங்களினால் அவர் இந்நிலை அடைந்திருக்கிறார் என்றும் என்னிட்ம சொல்லியிருக்கிறார். அன்று முதல் பர்வத மலையைப் பற்றி அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.அதில் ஏறிப் பார்த்து விட வேண்டும் என்று அவ்வப்போது தீர்மானிப்பேன்.ஆனால் அங்கு செல்வதாற்கே வாய்ப்பில்லாமல் போய் விட்டது. ஸ்ரீ காஞ்சி பெரியவர் கனவில் வந்து பூண்டி சாமியாரைப் பற்றி மேலும் எழுதும்படி எனக்கு கட்டளையிட்டதைத் தொடர்ந்து என் மனத்தில் இவ்வளவு நாள் இருந்த பர்வதமலையின் அருகிலேயே வந்து நிற்பதைக் கண்டு நான் அதிசயித்துப் போனேன். கடலாடி மணியம் நாகேசுவர ஐயரைச் சந்தித்தால் எனக்கு எல்லா உதவிகளும் கிடைக்கும் என்று கூறப்பட்டது.அதனால் அவரைக் காணலாம் என்று சென்றேன்.ஆனால் அவர் அப்போது சென்னைக்குச் சென்றிருந்ததால், அவரைச் சந்திக்காமலேயே திரும்ப வேண்டியதாயிற்று.

மலை ஏறுவதைப் பற்றி உள்ளூர்வாசிகளிடம் கேட்டுப் பார்த்தேன்.“இதோ பாருங்க; இதை ஏதோ விளையாட்டா நினைக்காதீங்க; இந்த மலை ஏறுவது ரொம்ப கஷ்டம்.ஒழுங்கா படிக்கட்டுங்க கிடையாது (ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நிலைமை மாறியிருக்கலாம்!) காட்டுப்பாதையிலேதான் போயாகணும்.உச்சியிலே செங்குத்தா ஏறணும்” என்று ஒருவர் பயமுறுத்தினார்.

“இப்போ ஏற ஆரம்பித்தால் எப்போ போய்ச் சேரலாம்?” என்று கேட்டேன் நான்.

“எப்போ, இப்போவா ஏறப் போறீங்க?” என்று கேட்டு விட்டு அவர் ஏளனமாகச் சிரித்தார்.

“என்ன சிரிக்கிறீங்க?விஷயத்தைச் சொல்லுங்க” என்றார் பாப்ஜி.

“இப்போ மணி அஞ்சாவுது.இருட்டிலே ஏற முடியாது.வழியே தெரியாது.மத்தியானம் இரண்டு மணிக்கு ஏறினா சரியா இருக்கும்.ஆறு மணிக்குக் கோயிலுக்குப் போய்ச் சேரலாம்.ராத்திரி அங்கே தங்கியிருந்துட்டு காலையில் வந்து விடலாம்” என்றார் வயதான ஒருவர்.

“சும்மா கிளம்ப முடியாதுங்க; அதுக்கெல்லாம் ஏற்பாடா போகணும்.கையிலே சாப்பாடு எடுத்துக்கிட்டு போகணும்.ஒரு விளக்கு இருக்கணும்.ரெண்டு ஜமுக்காளம், தலையாணி இருக்கணும்.வழி தெரிஞ்ச உள்ளூர் ஆசாமி இரண்டு மூணு பேர் கூட வரணும்.உச்சிக்குப் போறபோது ரொம்ப ஜாக்கிரதையா கம்பிகளைப் பிடிச்சுக்கிட்டு மெள்ள ஏறணும்.கால் தவறிச்சுன்னா கீழே பள்ளத்துலே விழ வேண்டியதுதான்; எலும்பு கூட கிடைக்காது” என்று இன்னொருவர் எச்சரிக்கத் துவங்கி விட்டார்.

இவர்கள் கூறுவதையெல்லாம் கேட்ட போது அன்று மலை ஏற முடியாது என்று புரிந்து விட்டதால் மற்றொரு முறை ஏற்பாடுகளோடு வரலாம் என்று தீர்மானித்து கடலாடியை விட்டுப் புறப்பட்டோம்.

ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் பர்வத மலையில் ஏறிப் பார்த்து விட்டு வந்து விடுவது என்று முடிவு செய்து நாங்கள் புறப்பட்டுச் சென்றோம்.எல்லோரும் எங்களை ரொம்ப பயமுறுத்தி வைத்திருந்ததால், பூண்டி சாமியாரின் ஆசியைப் பெற்றுச் செல்வது என்று தீர்மானித்து பூண்டிக்குச் சென்றோம்.

சாமியாரிட்ம சென்று, “பர்வத மலையிலே ஏறிப் பார்க்கலாம் என்று வந்திருக்கோம்; போய் வரலாமா?” என்று கேட்டேன் நான்.

“நல்லது, போய் வாப்பா” என்றார் சாமியார்.

“அங்கே என்னெல்லாம் பார்க்கணும்?” என்று கேட்டேன் அடுத்தபடி.

“பச்சையம்மன் கோயில்; சிவராத்திரி விசேஷம், அன்னாபிஷேகம்.ரத சப்தமி அன்று நான் அங்கேயிருந்தேன்” என்றார் சாமியார்.

மலையின் மீது சிவன் கோயில் இருப்பதாகத்தான் சொன்னார்கள்.ஆனால் பூண்டி சாமியார் பச்சையம்மன் என் கிறார. மனத்தில் குழப்பம் ஏற்பட்டாலும் நான் குறுக்குக் கேள்வி கேட்காமல் அவர் கூறியவற்றைப் பேசாமல் கேட்டுக் கொண்டேன்.

“சாமி, அந்த மலை ஏர்றது ரொம்பக் கஷ்டம்னு எல்லாரும் சொல்றாங்களே. சௌக்கியமா போய் வர்றதுக்கு நீங்க ஆசீர்வாதம் செய்யுங்க”

“போய் வாப்பா, பெரிய தண்டவாளம், சின்ன தண்டவாளம், சின்ன கடப்பாறை.எல்லாம் ஜம்பர் வேலை” என்றார் சாமியார்.

“எனக்கு ஒன்றுமே புரியவில்லை.இருந்தாலும் வாயை மூடிக் கொண்டிருந்தேன்.

“கடலாடிக்குப் போய் மணியக்காரர் நாகேசுவர ஐயரைப் பார்த்துட்டுப் போகலாம்ணு இருக்கோம்”

“நேரம் கடந்து போச்சு….” என்றார் சாமியார்.

“ராத்திரி மலை மேலே தங்கலாம்ணு நினைச்சுக்கிட்டிருக்கோம்.அங்கே சித்தர்கள் நடமாட்டம் இருக்கும்னு சொல்றாங்களே…. அந்தக் காட்சிகள் எல்லாம் எங்களுக்குக் கிடைக்குமா?”

“போய் வாப்பா, ஆக்கமும் ஊக்கமும் இருந்தா எல்லாம் கிடைக்கும்” என்றார் சாமியார்.

பூண்டி சாமியாரிடம் விபூதிப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வழியில் சில இடங்களைப் படம் பிடித்துக் கொண்டு நாங்கள் கடலாடியை அடைந்த போது மாலை நான்கு மணியாகி விட்டது. நேரே மணியக்காரர் நாகேசுவரன் வீட்டைத் தேடிச் சென்றோம்.நாங்கள் வந்த காரியத்தைக் கூறிய போது மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கை எடுத்துக் கொண்டு உடனேயே மலையேறி, இரவு ஏழு எட்டுக்கெல்லாம் உச்சிக்குப் போய் விட வேண்டும் என்று நாங்கள் துடித்தோம்.அவரிடம் எங்கள் விருப்பத்தை வெளியிட்டோம்.

“சார், நீங்க என்னைத் தேடிக் கொண்டு கடலாடிக்கு வந்திருக்கீங்க, உங்களை மலைக்கு அனுப்பி ஜாக்கிரதையாகத் திரும்பி அழைத்துக் கொண்டு வர வேண்டியது என் பொறுப்பு.எப்படிப் போவது, எப்போ போவது என்பதையெல்லம் என்னிடம் விட்டு விடுங்கள்” என்று கண்டிப்பாகக் கூறினார் அவர்.அவர் ஒரு கறார் பேர்வழி என்பதைப் புரிந்து கொண்ட நான், “சரி, நீங்க சொல்றபடியே கேட்கிறோம்” என்றேன்.

“சாப்பிட்டு விட்டு இங்கேயே படுத்துக்கங்க. விடியற்காலை அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து குளிச்சுட்டு மலைக்குக் கிளம்பிடலாம். அதுக்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் நான் கவனித்துக் கொள்கிறேன்” என்று நாகேசுவர ஐயர் கூறவே, நாங்கள் காஞ்சி கரைகண்டேசுவரரைத் தரிசித்து விட்டு வந்து சாப்பிடுவதாகக் கூறி அவரிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டோம்.

“நேரம் கடந்து விட்டது” என்று பூண்டி சாமியார் கூறியது பலித்து விட்டது.நாங்கள் அன்று மலை ஏற முடியவில்லை.

பர்வத மலை வரை எங்களை அழைத்து வந்த ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள், தேவையான சௌகரியகளோடு எங்களை மலையேற வைப்பதற்கு அங்கு ஒரு நல்ல மனிதரையும் தந்து உதவி புரிந்த அதிசயத்தை விவரிக்க வார்த்தைகளில்லை.

அது மட்டுமல்ல, நாகேசுவர ஐயர் ஸ்ரீ காஞ்சி பெரியவர்களின் பூர்வாசிரம சகோதரரான கணபதி சாஸ்திரிகளின் மாப்பிள்ளை என்பதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன் நான்.அவரைப் போலவே அவரது துணையாரும் சிரித்து சிரித்துப் பேசினார்.உள்ளன்போடும், உயர்ந்த பண்போடும் உபசரித்தார்.

ஸ்ரீ காமகோடி சுவாமிகள் பட்டத்திற்கு வந்த 1907-ம் ஆண்டில் தாம் பிறந்ததாகவும், அதனால் தம்முடைய பாட்டனார் திரிபுரசுந்தரியென்று தமக்குப் பெயரிட்டதாகவும் கூறினார் அந்த அம்மாள்.

மறுநாள் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து பம்ப் செட்டில் குளித்து விட்டு, காபியைக் குடித்து விட்டு நாங்கள் மலையேறத் தயாராகி விட்டோம்.

எங்கள் மூட்டையைத் தூக்கி வரவும், எங்களுக்கு வழி காட்டவும் மூன்று நபர்களை ஏற்பாடு செய்திருந்தார் நாகேசுவரன்.தர்மலிங்கம், தொப்புளான், தாத்தா மூவரும் முன்னால் செல்ல, நான், பாப்ஜி, புகைப்படக்காரர், காரோட்டி நால்வரும் பின்னால் சென்றோம்.கிராமத்தின் வீதிகளைக் கடந்து மலையடிவாரத்தை நோக்கி நடந்த போது, கிராமவாசிகள் எங்களை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.சிலர் ஏளனமாகச் சிரித்தார்கள்.“இவர்களாவது, பர்வத மலையேறிவிட்டு வருவதாவது” என்ற அலட்சிய பாவம் அவர்கள் முகங்களில் நெளிந்ததைக் கண்டும் நாங்கள் அதைரியப்படவில்லை.“இது ஒரு பெரிய மலையா!இது எங்களுக்குப் பறங்கிமலைய்ப் போல் ரொம்ப சாதாரணமானதுதான்” என்று கர்வத்துடனேயே சென்றோம்.

சரியாகக் காலை ஆறு மணிக்கு மலையடிவாரத்திற்கு வந்து விட்டோம்.ஆள் உயரம் வளர்ந்திருந்த கோரைப் புற்களையும், முட்செடிகளையும் விலக்கிக் கொண்டு, காட்டுப் பாதையில் மெள்ள நடந்து கொண்டிருந்தோம். வழியெல்லாம் சிறிய கற்களும், பெரிய கற்களும் சிதறிக் கிடக்க மேட்டிலும், பள்ளத்திலும், இப்படியும் அப்படியும் கால்களை மாற்றி மாற்றி வைத்து, குதித்து, தாண்டி, திணறி, தட்டுத்தடுமாறி முன்னேறிக் கொண்டிருந்தோம்.

ஒரு மணி நேரம் நட்பபதாற்குள் அத்தனை பேர் உடம்பிலும் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.எத்தனையோ பேர் உயர்ந்த லட்சியங்களுக்காக ரத்தம் சிந்துகிறார்கள்.எங்கள் லட்சியமும் உயரத்தில் இருந்ததால் நாங்களும் ரத்தம் சிந்தினோம்.

முட்செடிகள் எங்கள் உடலில் குத்தி காயப்படுத்தி, மேல் துண்டைப் பற்றி இழுத்தன. ஆன்மீக வாழ்க்கையில் உன்னத நிலையடைய முயலுபவர்களை முன்னேற விடாமல், ஆசாபாசங்கள் பெரும் தடைகளாக இருந்து நம்மைப் பற்றியிழுப்பது போல், முட்செடிகள் எங்கள் பயணத்தைத் தடுக்கப் பார்த்தன. நாங்கள் எதற்கும் சளைக்கவில்லை.எதைக் கண்டும் அசந்து விடவில்லை.கருமமே கண்ணாக மெள்ள மெள்ள உயர்ந்து கொண்டிருந்தோம்.

சுந்தரம் சட்டென்று ஒரு பாறையின் மீது அமர்ந்தார்.“ஆகா, இங்கேயிருந்து வியூ எவ்வளவு நன்றாக இருக்கிறது” என்று இயற்கையை ரசிக்க ஆரம்பித்தார்.இயற்கையை ரசிக்கும் சாக்கில் எல்லோரும் இளைப்பாறினோம்.

மீண்டும் நடந்தோம்.நடந்து கொண்டேயிருந்தோம்.சட்டென்று நின்று மேலே பார்த்தேன் நான்.

இரண்டு மணி நேரம் நடந்திருந்தோம்.மலைச்சிகரம் அருகில் வருவதாகக் காணோம்.வழிகாட்டியை பார்த்து, “அங்கே போக இன்னும் எத்தனை நேரம் ஆகும்?” என்று கேட்டேன்.

“சார், நீங்க மேலே பார்க்கக் கூடாது.கீழே பார்த்துகிட்டே நட்ககணும்.என் காலைப் பார்த்துக்கிட்டே பேசாமல் நடங்க. உச்சியைப் பார்த்தா மலைப்பாகத்தான் இருக்கும்.மனசுலே அதைரியம் வந்துடும் என்றார் தர்மலிங்கம்.“சரி, அப்படியே செய்கிறேன்” என்று சொல்லி விட்டு, முன்னால் நடந்து சென்ற தர்மலிங்கத்தின் கால்களைப் பார்த்துக் கொண்டே சென்றேன் நான்.அதனால் என் கால்களைக் கவனிக்கத் தவறி விட்டேன்.என் இடக்கால் சற்று வழுக்கி விடவே ஒரு பள்ளத்தில் காலை விட்டு விட்டேன்.முழங்கால் முட்டிக்குக் கீழே நல்ல அடி.ரத்தம் பீறிட்டது.எல்லோரும் வந்து முதற் சிகிச்சை அளித்தார்கள்.துணியைக் கிழித்துக் கட்டினார்கள்.மேற்கொண்டு என்னால் ஏற முடியுமா, அல்லது முன் வைத்த காலைப் பின்னால் வைக்க வேண்டியதுதானா என்ற கவலைக்குறி என் நண்பர்களின் முகத்தில் படறக் கண்டேன்.“கவலைப்படாதீர்கள்.காமகோடிப் பெரியவரின் துணையும், பூண்டி சாமியாரின் ஆசியும் இருக்கிறது.நான் எப்படியாவடு ஏறி விடுவேன்” என்று அவர்களுக்கு நம்பிக்கையளித்தேன்.