“என் இடக்கால் திடீரென்று வலுவிழந்து போயிற்று.அது நான் சொன்ன பேச்சைக் கேட்காமல் எங்கெங்கோ ஊன்றியது.தள்ளாட ஆரம்பித்தேன்.தர்மலிங்கம் பார்த்தார்.மரக்கிளையை உடைத்து சீவி ஊன்றுகோலாக்கி என் கையில் தந்தார்.அதை ஊன்றிக் கொண்டே தாத்தாவைப் போல் நான் நடக்கத் தொடங்கினேன்.இந்தக் காட்சி சுந்தரத்திற்கு வேடிக்கையாயிருந்தது.சிரித்துக் கொண்டே ஒரு போட்டோ “தட்டி”க் கொண்டார்.
நடந்து கொண்டிருந்தோம்.
“தொடாதேய்யா” என்று அலறினார் சுந்தரம்.அவருடைய கால்களும் உதறத் தொடங்கின. கீழே விழுந்து விடுவாரோ என்று பயந்த பழநி அவரைப் பிடித்துக் கொண்டார்.
காமிராவுடன் ஜாக்கிரதையாக “அட்ஜஸ்ட்” செய்து நடந்து கொண்டிருந்த தன்னை யாராவது தொட்டால் “பாலன்ஸ்” தவறி விழுந்து விடுவோமோ என்ற கிலி அவருக்கு!
நடந்து கொண்டிருந்தோம்.“யோவ், தொடாதேன்னா கேட்க மாட்டியா?” என்று மீண்டும் அலறினார் சுந்தரம்.ஆனால், அவர் அருகில் ஒருவருமெ இல்லை.ஒரு மரக்கிளை அவர் மீது பட்டிருக்கிறது. அவ்வளவுதான், யாரோ தொடுவதாக நினைத்து நடுங்கியே விட்டார் அவர்!
அப்போது “பழநி ஆண்டவருக்கு அரோஹரா, அண்ணாமலையாருக்கு அரோஹரா” என்ற முழக்கம் கேட்டது.அது மலைப் பாறைகளில் மோதி எதிரொலித்தது.கீழே ஏறி வருபவர்கள் எங்களுக்காக கொடுத்த குரல் அது.
“நாங்களும் அண்ணாமலையாருக்கு அரோஹரா, என்று பதிலுக்குக் குரல் கொடுத்துக் கொண்டே திரும்பிப் பார்த்தோம்.அங்கிருந்து திருவண்ணாமலை தெரிந்தது.அத்தனை பெரிய மலை.பதினைந்து மைல் தொலைவிலிருந்து இத்தனை உயரத்திலிருந்து.ஒரு பெரிய சிவலிங்கமாக எங்களுக்குத் தரிசனம் தந்தது.காணக் கிடைக்காத அந்த மகோன்னதக் காட்சியைக் கண்டு கன்னத்தில் போட்டுக் கொண்டோம்.
“அண்ணாமலையாருக்கு அரோஹரா!” என்று அவ்வப்போது குரல் எழுப்பிக் கொண்டே பர்வத மலைப் பயணத்தைத் தொடர்ந்தோம்.இத்தனை நேரமும் கரூணையோடு மலைக்குப் பின்னால் மறைந்திருந்த சூரியன் மேலெழுந்து எங்களைக் கடுமையாகத் தாக்கத் தொடங்கினான்.களைப்பு மேலிட்டது; அசதியால் ஓய்ந்து விட்டோம்.
“உங்கள் யாருக்கும் பசி, தாகம் ஒன்றுமே இல்லையா?” என்று கேட்டார் பாப்ஜி.அதைக் கேட்டதும் சுந்தரத்திற்கு திடீரென்று தாகத்தால் தொண்டை வறண்டது.பசி வயிற்றைக் கிள்ளியது.
“எங்கே தண்ணீர் புட்டி?எங்கே டிபன் பாக்ஸ்?என்று ஒரு சத்தம் போட்டார்.எல்லோரும் பசியாறுவதற்காக அமர்ந்தோம்.
“இதோ பாருங்க, இப்போ ஏதாவது கொஞ்சமா சாப்பிடுங்க. வயிற்றுக்கு நிறையப் போட்டுட்டீங்கன்னா அப்புறம் மலை ஏற முடியாது, திணறுவீங்க” என்று தர்மலிங்கம் எங்களை எச்சரித்தார்.
“இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது?” என்று கேட்டேன் நான்.
“இதோ ஆயிட்டுது, வாங்க… அதோ அந்த உச்சிக்கு ஏறி கொஞ்சம் இறங்கி, கொஞ்சம் ஏறிட்டா சுலபமாக போயிடலாம்” என்று தர்மலிங்கம் மிகச் சாமர்த்தியமாக பதில் சொன்னார். எங்களை ஏதோ சிறு குழந்தைகள் என்று நினைத்து, நாங்கள் அதைரியம் அடைந்து விடக் கூடாதே என்பதற்காக, இதோ வந்தாச்சு, இன்னும் கொஞ்சம்தான், என்று அவர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டு நாங்கள் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டோம்.
“பாதி தூரமாவது வந்திருப்போமா?” என்று கேட்டார் பழநி.
“பாதி தூரமா, ஓ, வந்திருப்போம்” என்று கூறிவிட்டு தர்மலிங்கம் தொப்புளானைப் பார்த்தார்.தொப்புளான் தாத்தாவைப் பார்த்தார்.எவ்வளவு தூரம் வந்திருப்போம் என்று அவர்களுக்கெ “ஐடியா” இல்லை.
“இதோ ஆயிடுச்சுங்க, சீக்கிரம் சாப்பிட்டுட்டுக் கிளம்புங்க. நீங்க இப்படி நடந்தீங்கன்னா, இருட்டினப்புறம்தான் போய்ச் சேருவோம்” என்று தர்மலிங்க்ம எங்கள் நடையைக் கேலி செய்தார்.
“என்னய்யா செய்யறது?நாங்களெல்லாம் பட்டணத்து ஆசாமிங்க. நடந்து எங்கே பழக்கம்?கார்லேயும், பஸ்லேயும் ஏறியே பழக்கப்பட்டுப் போச்சு, மலை ஏர்றதுன்ன முடியுமா?”
“பின்னே என்னமோ பறங்கிமலை மாதிரி சொலபமா ஏறிடுவேன்னு சொன்னீங்களே!” என்று கேட்டுவிட்டு தர்மலிங்கம் தொப்புளானைப் பார்த்து கண் சிமிட்டினார்.
“எங்களுக்கு நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாம் போலிருந்தது!
“வழி ஒழுங்காயிருந்தால் நடந்துடுவோம்.எங்கே பார்த்தாலும் ஒரே முள்ளுச்செடி ஆள் உயரத்துக்கு கோரைப் புல். கால் எடுத்து வச்சா கல்லு வழுக்குது.உங்களுக்குப் பழக்கம்.வேகமாக நடந்துடறீங்க” என்றார் சுந்தரம் சற்று உரத்த குரலில்.
“அண்ணாமலையாருக்கு அரோஹரா.பழநி ஆண்டவருக்கு அரோஹரா”.
மலையேறி வருபவர்களின் குர்ல அருகிலேயே கேட்டது.
“யாரோ வராங்க போலிருக்கே!” என்றேன் நான்.
“ஆமா, நம்ம ஆளுங்கதான்…. டேய், பாண்டுவாடா அது?” என்று தர்மலிங்கம் கேட்டார்.
“பாண்டூ” என்று உரக்கக் குரல் கொடுத்தர் தர்மலிங்கம்.
“ஏ தர்மலிங்கம்….” என்று கீழேயிருந்து பாண்டு பதிலுக்குக் குரல் கொடுத்தார்.
“குடும்பத்தோட வரான்போலிருக்கு.பசங்க பேச்சு குரல் கேட்குதே” என்றார் தொப்புளான்.
எனக்குத் தள்ளாடியது.கால்கள் கெஞ்ச ஆரம்பித்தன.இனி ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியுமா என்ற சந்தேகம் வந்து விட்டது.உடலெல்லாம் வியர்த்துக் கொட்டியது.நாக்கு உலர்ந்தது.தொண்டை வறண்டது.நிமிர்ந்து பார்த்தேன்.மலைச்சிகரம் தெரிந்தது.“அங்கேதான் அந்தக் கோயில் இருக்கா?இன்னும் எத்தனை தூரம் போகணும்?” என்று மீண்டும் கேட்டேன்.
இதோ ஆயிட்டுது.முக்கால்வாசி தூரம் வந்துட்டோம்.இப்போ போய் தளர்ந்துட்டீங்களே.ஒரு “தம்” பிடிச்சு ஏறிடலாம் வாங்க, என்று அழைத்தார் தர்மலிங்கம்.
கொஞ்சம் த்ண்ணி குடிச்சிட்டு வந்துடறேன்…. என்று கூறி பாப்ஜியைப் பார்த்தேன்.
“அதான் இல்லை.இரண்டு புட்டிலேயும் இருந்த தண்ணி முழுதும் ஆயிடுத்து…” என்று கையை விரித்தார்.
“ஓரு வெற்றிலை இருந்தா கொடு” என்று சுந்தரத்தைக் கேட்டேன்.
“அதுவும் ஆயிடுத்து.புகையிலைதான் இருக்கு” என்றார் சுந்தரம்.
“இந்த மலையிலே சித்தர்கள் வாசம் செய்யறதாச் சொல்றாங்களே, இப்ப யாராவது ஒரு தம்ளர் ஐஸ் வாட்டர் கொண்டு வந்து கொடுத்தால் எப்படியிருக்கும்?” என்றார் பாப்ஜி.
“நூறு ரூபாய் கொடுப்பேன்” என்றார் சுந்தரம்.
“மேலே வாங்க….சுனை இருக்கு.வேணுங்கற தண்ணி குடிக்கலாம்….” என்று எங்களை உற்சாகப்படுத்தினார் தர்மலிங்கம்.
“மேலே போய் சேர்ற வரைக்கும் உயிர் இருக்குமா?தாகம் பிராணன் போகிறது” என்றேன் நான்.
“இதோ முக்கியமான இடத்துக்கு வந்துட்டோம்.எல்லோரும் பார்த்து மெதுவா ஏறணும்.கடப்பாறையைப் பிடிச்சுகிட்டு, ரொம்ப ஜாக்கிரதையா ஏறணும்.கையையெல்லாம் துடைச்சுக்கங்க….” என்றார் தர்மலிங்கம்.அது ரொம்ப செங்குத்தான ஏற்றம்.மிகவும் குறுகலான பாதை.இருபுறமும் அதலபாதாளம்.இதை எப்படி ஏறப்போகிறோம் என்று எல்லோரும் ஒரு கணம் கவலையோடு நின்றோம்.
அந்த இடத்தில் ஒரு திரிசூலம் இருக்கிறது.அதற்குக் கற்பூரம் ஏற்றி எல்லோரும் கும்பிட்டோம்.“அண்ணாமலையாருக்கு அரோஹரா” என்று முழக்கமிட்டோம்.“சுந்தரம், முதல்லே நீ ஏறிப் போய் மேலே நில்லு.அப்போதான் நாங்க ஏறி வர்ற போது நீ போட்டோ எடுக்க சௌகரியமாயிருக்கும்…” என்றார் பாப்ஜி.
சுந்தரம் மறுத்து விட்டார்.“காமிராவையும் எடுத்துகிட்டு எப்படிய்யா ஏர்றது?காமிராவைப் பிடிப்பேனா, கடப்பாறையைப் பிடிப்பேனா?அதெல்லாம் நடக்காது” என்றார்.தனியே ஏறிப் போவதற்கு அவருக்கு பயம்.முதலில் யாராவது ஏறட்டும்.அதைப் பார்த்துக்கொண்டு பின்னாலேயே ஏறலாம் என்று அவர் காத்திருந்தார்.
“சரி, அப்போ ஒண்ணு செய்.நாங்க ஏறிப் போறோம்.நீ கீழேயிருந்து போட்டொ எடுத்துட்டு கடைசியிலே வா” என்றார் பாப்ஜி.
“யோவ், அதெல்லாம் வாணாம்.இந்த ஆங்கிள்லே போட்டொ சரியா வீழாது.கீழே இறங்கும் போது எடுத்துக்கலாம்…” என்றபடி காமிராவைத் தொப்புளானிடம் கொடுத்து விட்டார் சுந்தரம்.
ஒவ்வொருவராக ஏற ஆரம்பித்தோம்.அவரவர் சௌகரியப்படி ஒவ்வொரு விதமாக ஏறினோம்.ஆனால், எல்லோரும் பயந்து கொண்டேதான் ஏறினோம்.உயிரைக் கையில் பிடித்துக் கொண்டே ஏறினோம்.வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டு ஏறினோம். கடப்பாறையின் மீதே கண்ணாக, கீழேயும், பக்கவாட்டிலும் பாராமல் மெள்ள உட்கார்ந்து ஊர்ந்து, தவழ்ந்து….
ஒரு வழியாக மேலே போய்ச் சேர்ந்து விட்டோம்.