இரண்டடிக்கு ஒரு கடப்பாறையாக எதிரும் புதிருமாக நட்டு வைத்திருக்கிறார்கள். ஒன்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, மற்றொரு கையால் மேலுள்ள கடப்பாறையைப் பிடித்துக் கொள்வதும், பிறகு முதல் பிடியைத் தளர விடுவதுமாக எப்படியோ ஏறி விட்டோம். அங்கொன்றும், இங்கொன்றுமாக இரும்புக் கம்பிகள் உடைந்து இருப்பது கண்ணில் படுகிறது.அப்போதெல்லாம் “நாம் பிடித்திருக்கும் கம்பி உடைந்து விட்டால் என்ன கதி?” என்று நினைத்த போது குலை நடுங்கியது.
“பாறையிலே கட்பபாறையைப் புதைச்சு வெச்சிருக்காங்களே….இதுக்குத்தான் ஜம்ப்பர் வேலைன்னு பெயர்” என்றார் பாப்ஜி.
“ஓகோ, இதைத்தான் பூண்டி சாமியார் ‘ஜம்ப்பர் வேலைய்யா’ என்று சொல்லியிருக்கிறார். “சாமியார் பெரிய தண்டவாளம், சின்ன தண்டவாளம் என்றாரே, அது என்ன?” என்று கேட்டேன் நான்.
“இதோ பாருங்க, இரண்டு பாறைகளை இணைச்சு தண்டவாளத்தில் பாலம் போட்டிருக்காங்க, அதுலே ரொம்ப ஜாக்கிரதையா போகணும்” என்கிறார் தர்மலிங்கம்.“அட ராமா, இன்னொரு கண்டமா?” என்று நினைத்து கிலியடைந்தோம்.
ஒவ்வொருவராக நாற்கால் பிராணியைப் போல் அதில் தவழ்ந்து சென்றோம். அது கிடு கிடு என்று ஆடுகிறது.உயிர் போய் வருகிறது.
அதோ பார் சாமியார் சொன்ன சின்ன தண்டவாளம் என்று காட்டுகிறார் பாப்ஜி.
அங்கு இரும்பாலான ஓர் ஏணி இருக்கிறது.அது ஆடுகிறதா.நழுவி விடுமா என்ற பயத்துடன் சோதித்துப் பார்த்து விட்டு அதில் ஏறிப் போகிறோம்.மீண்டும் கொஞ்ச தூரம் பாறையோடு பாறையாக ஒட்டி, உராய்ந்து கொண்டு, இரும்புக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு ஒரு மண்டபத்திற்கு வந்து சேருகிறோம்.
அது ஒரு பாழடைந்த மண்டபம்.அதில் வந்து அமர்ந்ததும் ஜில் லென்ற காற்று வீசுகிறது.சற்று இளைப்பாறலாம் என்று தோன்றுகிறது.தனாலேயே அந்த மண்டபத்தை “இளைப்பாறி மண்டபம்” என்று அழைக்கிறார்கள்.பாண்டு, அவருடைய குடும்பத்தோடு வந்து சேர்ந்தார். தமது மூன்று வயது மகனைத் தோளிலே சுமந்து கொண்டு, மலையேறி வந்ததோடு, இந்தச் சறுக்குப் பாறையிலே இரும்புக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு அவர் எப்படி ஏறி வந்தார் என்பதை எண்ணியபோது அதிசயிக்காமல் இருக்க முடியவில்லை.
இளைப்பாறி மண்டபத்தைக் கடந்து சென்றதும் ஓர் அருமையான சுனை இருக்கிறது.படிக்கட்டுகளில் இறங்கிப் போய் பாண்டு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.அதை தம்ளர் தம்ளராக தாகம் அடங்கப் பருகினோம்.ஐஸ் வாட்டர் தோற்றது.அத்தனை குளிர்ச்சி.
“நீ கேட்ட ஐஸ் வாட்டரை விடக் குளிர்ச்சியாக சித்தர்கள் கொடுத்து விட்டார்கள்” என்றேன் நான் பாப்ஜியைப் பார்த்து.
“வாங்க, இதிலே குளிச்சுப் பாருங்க. என்ன அருமையாக இருக்கு தெரியுமா?மூலிகைகள் கலந்த தண்ணீர், உடம்புக்கு நல்லது” என்று ஏற்கனவெ குளித்து விட்டிருந்த பாண்டு எங்களை அழைத்தார்.
ஒவ்வொருவராக பயந்து நடுங்கி அதில் இறங்கிக் குளித்தோம். ஆகா! இந்த ஐஸ் கிணற்றில் குளிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.நடந்து வந்த களைப்பெல்லாம் ஒரே நொடியில் பறந்து விடுகிறது.அசதியெல்லாம் மறைந்து விடுகிறது.அதைப் போல் இன்னொரு மலை கூட ஏறி விடலாம் என்ற தெம்பும் பலமும் வருகிறது.
எல்லோருக்கும் “கப கப”வென்று பசி எடுக்கவே, ஆளுக்கு ஒரு பிடி தயிர் சாதத்தை எடுத்து உருட்டி சாப்பிட்டோம்.
“இதுதான் கோட்டை மைதானம்” என்று இடப்புறத்தில் உள்ள இடத்தைச் சுட்டிக் காட்டினார் தர்மலிங்கம்.அங்கு இடிந்த கோட்டைச் சுவர்கள் காணப்படுகின்றன.அதை ராணிக்கோட்டை என்று கூறினார்கள்.அதன் வரலாற்று பின்னணி ஒருவருக்கும் தெரியவில்லை.
அங்கிருந்து பார்த்தால் இயற்கைக் காட்சி, கண்ணைக் கவரும் வண்ண ஓவியமாக முன்னால் விரிகிறது.ஜவ்வாது மலைத் தொடர்ச்ச, தொலைவில் கோட்டைச் சுவர்போல் சுற்றி வருவது தெரிந்தது.
கோட்டை மைதானத்தை விட்டு இறங்கி மீண்டும் மேலே ஏறிப் போனோம்.அங்கு பாதை தப்பிப் போய் நாங்கல் இரண்டு பார்ட்டியாக பிடிந்து விட்டோம்.தர்மலிங்க்ம முன்னே செல்ல, சுந்தரம், நான், பழநிமூவரும் வேறு வழியில் சென்று விட்டோம்.அது மிகவும் ஆபத்தான சரிவுப் பாதை.கால் இடறி விழுந்தால் எலும்பு கூட கிடைக்காது.சிறிது தூரம் சென்ற பிறகுதான் அது வழியேயில்லை என்று தெரிந்தது.திரும்புவதற்குக் கூட இட்மைல்லை.பாறையோடு ஒட்டிக் கொண்டு பின்புறமாகவே நடந்து வந்து சேர்ந்தோம்.
“என்ன தர்மலிங்கம், அவங்களை எங்கே அழைச்சுகிட்டுப் போயிட்டே?” என்று கேட்டு தாத்தா சிரித்தார்.
“எமன் வாய்க்கு அழைச்சிட்டுப் போனார்.எப்படியோ தப்பி வந்துட்டோம்” என்றேன் நான்.
கரடு முரடான பாறைகளில் ஏறி இறங்கினோம்.
“இதுதான் அண்ணாமலையார் பாதம்.கும்பிடுங்க” என்றார் பாண்டு.அங்கும் ஒரு திரிசூலம் இருக்கிறது.கற்பூரத்தைக் கொளுத்தினார் தொப்புளான்.அங்கு அந்த பாதங்கள் இருப்பதாற்கான காரணத்தை அறிய முடியாமலேயே அவற்றைக் கண்களில் ஒற்றிக் கொண்டு, மலைச்சிகரத்தை நோக்கி நடந்தோம்.
சுமார் இருபது அடி தூரம் இரும்பு வேலியைப் பிடித்துக் கொண்டு மலைச் சரிவுப் பாதையில் நடந்தோம்.இடப்புறம் திரும்பி மூவாயிரம் அடிப் பள்ளத்தாக்கை பார்க்கும் போது வயிற்றை என்னமோ செய்கிறது.
வலப்புறம் திரும்பியதும் இரு பாறைகளுக்கிடையே ஒரு பிளவு இருக்கிறது.அதில் ஒருவர் மட்டுமே செல்ல முடியும்.அதில் செதுக்கப்பட்டுள்ள சிறு படிக்கட்டுகளில் ஜாக்கிரதையாகக் கால் ஊன்றி, மெள்ள மேலே ஏறிப் போய் மலைச் சிகரத்தை அடைந்தோம்.கோயில் கோபுரம் தரிசனமாயிற்று.கைலாயத்திற்கே வந்து விட்ட உணர்வைப் பெற்றோம்.
அந்தச் சிறிய பாறையில் ஒரு சிறிய கோயிலைக் கட்டியிருக்கிறார்கள்.உள்ளே சென்றால், குகையைப் போல் ஒரே கும்மிருட்டு.விளக்கேற்றி மிகவும் சிரமப்பட்டு, அங்குள்ள தெய்வச் சிலைகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
முதலில் விநாயகரும், வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகனும் இருக்கிறார்கள்.அவர்களுக்குப் பின்புறம் கருவறையில் வீரபத்திரமும், துர்கையும் எழுந்தருளியிருக்கிறார்கள்.
அடுத்த மண்டபத்தில் ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமியின் கருவறை இருக்கிறது.அதற்கடுத்த மண்டபத்தில் ஸ்ரீ பிரமராம்பிகையின் சந்நிதி இருக்கிறது.வெளியே இருபுறமும் த்வார பாலிகைகள் காவல் புரிகிறார்கள்.வெளித் தாழ்வாரத்தில் தர்ம பத்தினியோடு கூடிய மகரிஷி ஒருவரின் உருவச்சிலை இருக்கிறது.எல்லாம் அற்புதமான சிற்ப எழிலோடு தெய்வக் களை மிளிரும் தோற்றங்கள்.
எல்லாவற்றையும் மிகப் பிரயாசைப்பட்டுப் படம் பிடித்துக் கொண்டு வந்த சுந்தரம், “அடுத்தபடி என்ன?” என்று கேட்டார்.
“முதலில் சாப்பிடுவோம்.பிறகு யோசிக்கலாம்” என்றார் பாப்ஜி, மூட்டையைப் பிரித்துக் கொண்டே.
சாப்பிட்டுவிட்டு சற்று இளைப்பாறினோம்.மலையுச்சியில் காற்று பயங்கரமாக வீசியது.பாறையோரமாக நடப்பதற்குக் கூட பயமாயிருந்தது.“காற்று நம்மைக் கீழே தள்ளி விடுமோ” என்ற ஓர் அச்சத்துடனேயே அங்கு நின்று சுற்று முற்றும் திரும்பிப் பார்த்தோம்.உச்சியிலிருந்து பார்க்கும் போது நீரற்ற செய்யாறு பாம்பு போல் வளைந்து செல்வது கண்களைப் பறிக்கிறது.நாங்கள் முதல் நாள் நேரில் சென்று தரிசித்த சப்த கரைகண்ட தலங்களை பர்வத மலையின் உச்சியிலிருந்து மீண்டும் ஒரு முறை கண்டு ஆனந்தித்தோம்.ஓரிரு கோயில்கள் மட்டும் கண்களுக்குப் புலப்பட்டன.
அதோ ஒரு தோப்பு தெரியுது பார், அதுதான் பூண்டி.அதோ ஒரு இலுப்பை மரம் தெரியுது பார், அதுக்குப் பக்கத்திலேதான் மாம்பாக்கம் கோயில் இருக்குது. அதோ…. இரண்டு இலுப்பை மரம் தெரியுது பார், அதுக்குக் கொஞ்சம் தள்ளியிருக்குது பார், அதுதான் கடலாடி கோயில்” என்று ஒவ்வோர் இடத்தையும் தர்மலிங்கம் அடையாளம் காட்ட நாங்கள் பார்த்துப் பார்த்து பரவசமடைந்தோம்.
“அதோ பார்த்தீங்களா? அதான் போளூர் மலை அதோ அந்தாண்டே தொலைவிலே தெரியுதே, அதுதான் திருவண்ணாமலை” என்று ஒவ்வொரு மலையாகச் சுட்டிக் காட்டினார் பாண்டு.
உச்சியிலிருந்து பார்க்கும் போது சூரிய ஒளியில் மின்னும் அருணாசல லிங்கம் உள்ளத்தில் ஞான தீபமாக மிளிர்கிறது.
“இந்தப் பக்கம் வாங்க” என்று எங்களை மேற்குப் புறம் அழைத்துக் கொண்டு போனார் தர்மலிங்கம்.அங்கிருந்து பல கிராமங்களைக் கண்டோம்.பல மலைத் தொடர்ச்சிகளைப் பார்த்தோம்.
சுற்றிலும், கொலு பொம்மைகளைப் போல் இயற்கை அன்னை வடித்துத் தந்துள்ள வனப்புமிகு வண்ணக் காட்சிகளின் எல்லையற்ற எழிலைக் கண்டு களித்துக் கொண்டிருந்தால் அலுப்பும் தோன்றுவதில்லை. பொழுது போவதும் தெரிவதில்லை.
மலையுச்சியில் கோயிலுக்கு மேற்குப் புறத்தில் ஒரு கட்டடம் இருக்கிறது.அது என்னவென்று கேட்டேன்.
“அது ஒரு சாமியாரின் சமாதி” என்றார் தொப்புளான்.
“யார்ரா இவன்?தெரிஞ்ச சொல்லணும்.இல்லாத போனா வாயை மூடிக்கிணு இருக்கணும்.இது சமாதி இல்லீங்க” என்று தர்மலிங்கம் தொப்புளான் கூறியதை மறுத்துக் கூறினார்.
“பின்னே இது என்ன கட்டடம்?” என்று மீண்டும் கேட்டேன் நான்.
“இங்கே ஒரு சாமியார் வந்தாருங்க. அவர் யோகத்திலே இருக்கப் போறதா சொல்லி இங்கே உக்காந்தாரு.தன்னைச் சுத்தி சமாதி மாதிரி கட்டச் சொன்னார்.மூணு நாளைக்கெல்லாம் எழுந்து வெளியே போயிட்டார்” என்று தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் தர்மலிங்கம் ஒரு செய்தியைக் கூறினார்.
அதன் சுவரில் ஏதோ எழுத்துக்கள் தெரிந்தன.கூர்ந்து கவனித்தேன்.
1957 கைலாயவர்க்கம்
ராமகிரி யோகீசுவரர்
சமாதி நிலையம்
விட்டோப பரம்பை
ஹரித்துவாரம்
ஓம்
கணேசகிரி
என்று எழுதப்பட்டிருந்தது.இதைப் பற்றிய விளக்கத்தை கீழே போய் யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன்.
கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு சிறு சுனை இருக்கிறது.அந்நீர் கற்கண்டாக இனிக்கிறது.
எல்லோரும் மீண்டும் மண்டபத்திற்கு வந்தோம்.ஒருவருக்கும் பேசுவதற்குக் கூட சக்தி இல்லை.காலை நீட்டிப் படுத்து விட்டோம்.
அரை மணிக்கெல்லாம் நிசப்தமாயிருந்த அந்த இடத்தில் திடீரென்று பேச்சுக் குரல் கேட்டது.ஜன நடமாட்டம் அதிகமாயிற்று.குழந்தைகளின் அழுகுரல் கேட்டது.லேசாக கண்களைத் திறந்து பார்த்தேன்.
ஆண்களும், பெண்களும் குழந்தைகளுமாகப் பத்து பதினைந்து பேர் கோயிலுக்கு வந்திருந்தார்கள்.அவர்களெல்லாம் மூலக்காடு என்ற கிராமத்திலிருந்து பொங்கல் படைத்து சாமி கும்பிட மலையேறி வந்திருந்தவர்கள்.இங்கேயே சமைத்து சாப்பிட போகிறார்கள்.இரவு மலையில் தங்கிவிட்டு காலையில்தான் திரும்பப் போகிறார்கள்.நாங்கள் ஏறி வந்த வழியாக அவர்கள் வரவில்லை.மாதிமங்கலம் வழியாக வந்திருக்கிறார்கள்.பாப்ஜி அவர்களிடமிருந்து சேகரித்துக் கொண்டிருந்த இந்த செய்திகள் அரைத் தூக்கத்திலிருந்த என் காதில் விழுந்தன.
“சுந்தரம், நீ சாப்பாட்டிற்குக் கவலைப்பட வேண்டாம். அவங்க அரிசி பருப்பு, காயிகறி, தயிர், விறகு எல்லாம் கொண்டு வந்திருக்காங்க. வெத்தலை, புகையிலை “ஸ்டாக்” கூட இருக்கு” என்று பாபி சுந்தரத்திற்கு கீழ் ஸ்தாயியில் தைரியமளித்துக் கொண்டிருந்தார்.
“ராத்திரி நமக்கு நல்ல துணையாச்சு” என்றார் சுந்தரம்.
“ஆனா இதுலே ஒரு கஷ்டம் இருக்கு.இத்தனை ஜன சந்தடியிருந்தா சித்தர்கள் நடமாட்டம் இருக்காது.நாம் வந்த காரியம் கெட்டு விடும்” என்றார் பாப்ஜி.எனக்குக் கண்களைச் செருகியது.சுற்றிலும் கசமுச வென்று பேச்சுச் சத்தம் கேட்டதே ஒழிய ஒன்றுமே சரியாகக் காதில் விழவில்லை.மெள்ள மெள்ள உறக்கக் கேணியில் மூழ்கிக் கொண்டிருந்தேன்.